யுவன் ஒரு நேர்காணலில் 'நான் லக்ஷ்மண்ஜூலாவிலிருந்து
கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது லேசாகத் தூறல் போட்டது.
அந்தத் தூறலில் கங்கையின் மொத்தப் பரப்பும் சிலிர்த்துக்கொண்டதுபோல ஒரு
காட்சி கிடைத்தது. அதில் கரைந்துவிடத் தோன்றியது. மறுபடியும்
குடும்பத்துக்குள் போக வேண்டாம், இப்படியே எங்கேயாவது போய்விடலாம்
என்றிருந்தது. ஆனால், ஒரு நொடிதான். பிறகு, பிரக்ஞை நம்மைத் திருப்பி
இழுத்துக்கொண்டுவந்துவிடும். பிரக்ஞை யின் இந்தக் கட்டளைக்குக் காது
கொடுக்காதவன்தான் வேறு ஒன்றாக மாறிவிடுகிறான். இசை என்பது ஒருவர் தனக்குள்
மேற்கொள்ளும் பயணம்!' என்று கூறியிருப்பார்.
இதை இன்னும் விரித்துப்
பார்த்தால் யுவனின் நாவல்களான 'கானல் நதி'யும், 'எண்கோண மனிதனும்' வந்து
சேர்வார்கள். இரண்டுமே பதினைந்து வருடங்கள் வித்தியாசத்தில்
எழுதப்பட்டாலும், இவற்றிற்கிடையில் இணைப்புப் புள்ளிகளைத் துழாவிப்
பார்ப்பது சுவாரசியமானது. இரண்டுமே இளவயதில் உச்சத்தில் இருந்த இரண்டு
கலைஞர்களையும், அவர்கள் பெருஞ்கலைஞர்களாக மாறப்போகின்றார்கள் என்கின்றபோது
வீழ்ச்சியடைந்தவர்களாக மாறிவிடுவதையும் பார்க்கின்றோம்.

கானல்நதியில்
இந்துஸ்தானி இசையில் உச்சத்த்தில் இருக்கும் தனஞ்சய முகர்ஜியும், 'எண்கோண
மனிதனில் நாடகம்/சினிமாவில் பிரபல்யமாக இருக்கும் சோமனும் தமக்கான சரிவுகளை
தாங்களே விரும்பி ஏற்பவர்களாக இருப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்
என்பதுதான் வியப்பானது. தனஞ்சய்யிற்கு ஒரு காதல் முறிவும், கச்சேரிகளில்
பழக்கமாகும் மதுவும் அவரின் அழிவுக்கு ஒரு புறக்காரணமாக இருப்பது போல,
சோமனுக்கு அவரது பாலினம் சார்ந்து வரும் குழப்பம் ஒரு காரணமாக
இருக்கின்றது.
எப்படி ஒரு உச்சத்துக்கு கலைஞர்களாகப்
போகின்றார்களோ, அப்படியே அவர்கள் அடையும் வீழ்ச்சியையும் தம்மளவில்
ஏற்றுக்கொள்கின்றார்கள். ஏற்றுக்கொள்வது மட்டுமில்லை தம்மை பொதுவெளிகளில்
இருந்து முற்றாக இல்லாமலும் செய்கின்றார்கள்.
யுவன் மேற்குறிப்பிட்ட
நேர்காணலில் குறிப்பிட்ட -கங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
குடும்பத்தில் இருந்து காணாமல் போகும் கனவு பெருகியதைப் போல- எண்கோண
மனிதனாகிய சோமன் சட்டென்று ரெயினில் ஏறி என்றென்றைக்குமாக காணாமல்
போகின்றார். இந்தக் காணாமல் போதல் கானல் நதியில் தனஞ்சய் முகர்ஜிக்கு
தெருக்களில் எதுவுமற்று அலைகின்ற நாடோடித்தனத்துக்கு அழைத்துச்
செல்கின்றது.
சோமன் மீது அவ்வளவு விருப்புடன் அவரது (இரகசிய )
மனைவியான அலுமேலும், இன்னொருபுறத்தில் அவர் மீது பித்துப்பிடித்தலையும்
காதலியான விஜயாவும் (ராதிகா கட்கர்) இருக்கின்றபோதும் சோமன்
அவர்களிடமிருந்து தனது காணாமல் போதலைச் செய்கின்றார். அவரது பாலினம்
சார்ந்த மாற்றம் மட்டுந்தான் இந்த 'தொலைந்து போதலுக்கு' காரணமாக இருக்காது.
ஏனெனில் அவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்த அலுமேலுவுக்கு சோமனின் இந்த பாலின
மாற்றம் ஒருவகையில் புரிகிறதை வாசகர்களாகிய நாம் புரிந்து கொள்கின்றோம்.
யுவனின்
இந்த இரண்டு புனைவுகளையும் வாசிக்கும்போது வீழ்ச்சியடைந்தவர்க்கும் இந்த
உலகில் இடமிருக்கின்றது என்பதை உணர்கின்றோம். அது அவர்களாக விரும்பி
ஏற்றுக்கொண்ட பாதாளத்தில் புரண்டெழும் ஓர் இருண்ட வாழ்க்கையாக இருந்தாலும்
நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் என்னை இந்த வகை எழுத்தே உள்ளிழுத்துக் கொண்டது. ஏனெனில் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி யதார்த்தவகை எழுத்து எனக்கு அலுப்புத் தருபவை. பொங்கும் பூம்பாளம் போல நடையில் வாசகர்க்கு எந்தவகை இடத்தையும் தராது எல்லாந் தெரிந்தது மாதிரி பேசும் புனைவுகள் என்னைப் பொருத்துவரை சலிப்பானவை. அண்மைக்காலத்தில் கூட இப்படிப் பலவற்றை வாசித்திருக்கின்றேன்.
எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றேன். ஏனெனில் அந்த படைப்பாளிகள் மனம் வருந்தவோ, அவர்களின் வாசகர்களோ சண்டைக்கு வருவதற்கு இடமுண்டு என்பதால், எண்கோண மனிதனில் வரும் சம்பந்த மூர்த்தி மாமா போல இந்த இடத்தில் இருக்க விரும்புகின்றேன். சம்பந்த மூர்த்தி, கிருஷ்ணனிடம் உயர்வர்க்கத்தினரின் இரகசியக் கதைகளைச் சொல்லும்போது ஒருபோதும் அவர்கள் யாரென்றோ, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ சொல்வதில்லை. சம்பந்த மூர்த்தியின் கட்சியில் நானும் இந்த விடயத்தில் சேர்ந்துவிடுகின்றேன்.
எண்கோண மனிதனில் சோமன் அவனின் இருபத்தைந்து வயதில் உச்சத்தில் இருந்து தொலைந்து போகின்றான். அவனை சம்பந்த மூர்த்தி அடுத்த இருபது வருடங்களின் பின் தேடத்தொடங்குகின்றார். அப்படி அவர் சோமனோடு சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவதை காஸெட்டுக்களில் பதிந்து வைத்திருக்கின்றார். அதை சம்பந்த மூர்த்தி இறந்தபின், கோவிட் காலத்தில் கேட்டு கேட்டு நமக்கு ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகின்றார் கதைசொல்லியான கிருஷ்ணன்.
இதைப் போன்றுதான் கானல் நதியில், தனஞ்சய் முகர்ஜியின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் கேசவ் சிங் சொல்வதை நாம் பார்க்கின்றோம்.
இவர்கள் இருவரும் தாங்களாகவே விரும்பி தொலைந்து போனவர்கள். ஒருவர் இந்துஸ்தானி இசையிலும், இன்னொருவர் சினிமாவிலும் உச்சத்தைத் தொடப்போகின்றார்கள் என்று நினைக்கும்போது புகழ் வெளிச்சத்தில் இருந்து விலத்திப் போகின்றவர்கள்.
எனக்கு கானல் நதியை வாசிக்கும்போது மைக்கல் ஒண்டாச்சி இப்படி உச்சத்தில் இருந்து வீழ்ச்சிக்குப் போன ஜாஸ் கலைஞனைப் பற்றி எழுதிய நாவலான 'Coming Through Slaughter' ஞாபகத்துக்கு வந்தது. ஒண்டாச்சியின் நாவல் நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது. அதில் ஜாஸ் இசையில் உச்சத்தில் இருக்கும் Buddy Bolden தனது முப்பத்தொராவது வயதில் மனப் பிறழ்வுக்குள்ளாகின்றார். அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கோ (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) , திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கோ தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படுவதில்லை. அந்நாவல் போன்றே கானல் நதியில் தனது இந்துஸ்தானி இசை ஞானத்தை ஏன் அவ்வளவு எளிதில் கைவிட்டு ஒரு நாடோடியாக தனஞ்சய் முகர்ஜி அலைகின்றார் என்பதற்கு தெளிவான காரணம் கிடைப்பதில்லை. அதுபோலவே ஏன் எண்கோண மனிதனில் ஒரு சினிமாவின் சூட்டிங் முடிந்தவுடன் ரெயின் ஏறி என்றென்றைக்குமாக சோமன் என்கின்ற நடிகன் ஏன் தொலைந்து போகின்றார் என்பதற்கும் நமக்கு காரணங்கள் துல்லியமாகத் தெரிவதில்லை.
நமக்குத் தெரிவதெல்லாம், இந்த காணாமல் போன கலைஞர்களினூடு பழகிய மற்றவர்களினூடு கிடைக்கும் மனச்சித்திரங்கள் மட்டுமே. ஆகவே இவை ஒருபோதும் ஒரு முழுமையான சித்திரத்தைத் தரப்போவதில்லை. நாம் துண்டுதுண்டாக எமக்கு விரும்பியமாதிரி இந்த கலைஞர்களின் வாழ்க்கையையின் உயர்வையும் வீழ்ச்சியையும் ஓவியமாக்கிப் பார்க்கலாமே தவிர இது அந்தப் பாத்திரங்கள் சொல்லவிரும்பும் கதைகள் அல்ல என்பதும் புரிகிறது. அந்தப் புதிர்த்தன்மையை இந்த நாவல்களை வாசிக்க இன்னும் சுவாரசியமாக்கின்றன.
யுவனின் Alter Ego என ஓர் எளிமைக்காக நான் நினைக்கும் கிருஷ்ணன் என்கின்ற பாத்திரம் முதன்முதலாக சிறுகதைகளிலிருந்து விடுபட்டு எண்கோண மனிதன் என்கின்ற நாவலிற்குள்ளும் நுழைகின்றது. அது யுவனின் கதையை ஒட்டி தனது கதையைச் சொல்வது போல (பிறந்த வருடம், தகப்பனை இழந்த காலம்) இருந்தாலும் அது யுவனின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமெனில் கங்கைக் கரையைப் பார்த்து எல்லாவற்றையும் விட்டு சுதந்திரமாக ஓட விரும்பிய யுவன் இசைப்பக்கமாகப் போயிருந்தால் ஒரு தனஞ்சய் முகர்ஜியாகவோ, நடிப்புத் திசையில் போயிருந்தால் ஒரு சோமன் போலவே ஆகியிருக்கலாமென சுவாரசியத்துக்காய் நாம் யுவனைக் கற்பனை செய்து பார்க்கலாம்.
யுவனின் படைப்புக்களை யாரின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கின்றார்களோ தெரியாது. எங்கோ ஓரிடத்தில் கி.ராஜநாராயணினதும், நாஞ்சில் நாடனினதும் உரையாடல்களினால் கதைசொல்லும் வகைக்காக யுவனை அவர்களின் நீட்சியாக வைக்கலாமென வாசித்தது நினைவிலுண்டு. ஆனால் என் வாசிப்புக்களின் அடிப்படையில் அவரை நான் நகுலனின் நீட்சியில் வைத்துப் பார்க்கவே விரும்புவேன். நகுலனுக்கு என்று ஒரு காலம் இருந்தது என்றால், யுவன் சமகாலத்துக்குரிய நகுலனின் தொடர்ச்சியெனச் சொல்வேன்.
யுவனின் புனைவுகளில் கதாபாத்திரங்கள் நிறையப் பேசிக் கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அது யுவன் தனக்குள் பேசிக்கொள்ள விரும்புகின்ற விடயங்கள் போலத்தான் இருக்கின்றது. நகுலனுக்கு ஒரு நவீனன் என்றால் யுவனுக்கு ஒரு கிருஷணன். 'இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்' என்று யுவன் சொல்வதைப் போல, யுவனுக்கு எழுத்து என்பது அவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணங்களாகவே இருக்கின்றது என நினைக்கின்றேன்.
கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று உறுதியாக நம்புவதைப் போல, அதே கலை அவ்வளவு நேர்த்தியாக/முழுமையாக எல்லாம் இருக்கத் தேவையில்லை என்பதையும் நம்புகின்றவன் நான். எனவே இந்நாவல்களில் தென்படும் சில பலவீனமான பக்கங்களை, அவை வாசிப்பில் அவ்வளவு உறுத்தாதபோது ஒருபக்கமாய் ஒதுக்கி வைத்துவிடலாம்.
நானும் அகத்தேயும் புறத்தேயும் எனக்கான பயணங்களில் தொலைந்துபோய் அலைக்கழிபவன் என்பதால், என்னை யுவனின் இந்த இரண்டு நாவல்களும் வசீகரிக்கின்றன. மேலும் வீழ்ச்சியுற்றவர்களைப் பற்றி ஆதூரத்துடன் அவர்களின் கதைகளைச் சொல்ல யுவனைப் போன்ற படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்பது நமக்கு எவ்வளவு இதம் தருகின்றது.
***

0 comments:
Post a Comment