சூட்டிங் பார்க்கப்போன கதை
சென்னையை நானும் இன்னொரு நண்பருமாய் பஸ்சில் சுற்றிக்கொண்டிருந்தோம்.
சென்னையில் பார்க்கவேண்டிய இடங்களென பயணிப்பவர்க்கெனக் குறிப்பிட்ட சில
கோயில்களைப் பார்ப்பதே எங்கள் நோக்கமாய் இருந்தது. நண்பர்
திருத்தணிகைக்காரர், சினிமாத் துறையில் இருப்பவர். சில வருடங்களுக்கு முன்
சினிமாத் துறையில் தீவிரமாய் இருந்து, இடையில் தங்கை/தம்பிகளின் பொருட்டு
ஊர் திரும்பி உழைத்து அவர்களைக் 'கரையேற்றி'விட்டு இப்போது மீண்டும்
சினிமாவில் முழுமூச்சில் இயங்க வந்திருப்பவர். நாங்கள் திருவல்லிக்கேணியில்
நின்றபோது எங்களுக்குப் பொதுவான இன்னொரு நண்பர் தரமணியில் சூட்டிங்கொன்று
நடக்கிறது, அங்கே வாருங்களெனச் சொன்னார்.
என்னோடு இருந்த நண்பர்
சினிமாத்துறையிலிருந்தாலும், சென்னையைக் கரைத்துக் குடித்தவரல்ல.
தரமணிக்குப் போவதற்காய் பஸ்களை மாறி மாறியேறி ஏறிப் பார்த்தோம். இப்படி
தவறாகத் திசை தொலைந்து போய்க்கொண்டிருந்ததிலும் ஒரு நன்மை விளைந்திருந்தது.
ஏதோ ஓரிடத்தில் நின்றபோது நிறையப் பொலிஸ்காரர்கள் நின்று வீதியை
ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கிய இடம்போலும். போக்குவரத்து
நிறுத்தப்பட்டு சில கார்கள் சட்டென்று விரைந்துபோக, அதில் ஒன்றில் -கண்ணாடி
கீழிறக்கப்பட்ட காரில் - பன்னீர்செல்வம் போய்க்கொண்டிருந்தார். தமிழக
முதல்வரை இப்படி எளிதாய்ப் பார்த்துவிட்டேன், இன்னும் 'மக்களின்
முதல்வரை'த்தான் பார்க்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டேன். மக்களோடு
மக்களாய் கரைந்து நிற்பதால் காணமுடியவில்லைப் போலும்.
சென்னை வந்த
புதிதில் சுவர்களை மேய்ந்துகொண்டு திரிந்தபோது இன்னொரு நண்பரிடம் இப்படி
ஜெயலலிதாவைப் பற்றி அனைத்து இடங்களிலும் பதிவு செய்து வைத்திருக்கின்றனரே,
சும்மா ஒரு முதல்வர் என்பதற்காகவேனும் பன்னீர்செல்வத்தின் பெயரையோ படத்தையோ
எங்கும் காணவில்லையே என்றேன். நண்பரோ சிரித்துக்கொண்டு அப்படி ஒருவன்
சுவரில் எழுதினான் என்றால் ஒழுங்காய் இருந்துவிடமுடியுமா? என்றார். அம்மா,
உணவகத்தையும், டாஸ்மாக்கையும் ஒழுங்காய் நடத்தி மக்களை
வாழவைத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு அவசியமில்லாக் கேள்விகள்
என்று அத்தோடு 'அரசியல்' பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்.
பஸ்சில்
இப்படி மாறி மாறி ஏறித்தொலைந்தால் அடுத்தநாள்தான் தரமணிக்குப் போய்ச்
சேரமுடியும் என்பது எங்கள் இருவருக்கும் விளங்கியதால், ரெயினெடுத்து
தரமணிக்குப் போனோம். தரமணியில் நின்று, மற்ற நண்பரை அழைத்தால், அங்கேயில்லை
இந்திராநகருக்கு அருகில் ஷூட்டிங் நடக்கிறதென்றார். இப்படியே அலைந்தால்,
இனி அப்படியே கனடாவுக்குப் பிளைட் எடுக்கவேண்டியதுதான் என்று நினைத்தேன்.
என்றாலும் தரமணியைப் பார்த்தவுடன், இந்தப் பெயரில்தானே நமது அன்ட்ரியா
படமொன்றில் நடிக்கிறார் என்பது நினைவுவர அன்ட்ரியா இந்தப் பக்கம்
படப்பிடிப்பிற்கு வருவாரா, காத்திருப்போமா என்றேன். நண்பரோ திசை தொலைத்த
குழப்பத்தில், தண்டவாளத்தில் தலையை வை என்றால் கூட செய்கின்றேன், ஆனால்
இங்கேயெல்லாம் ஆன்ட்ரியாவிற்காய்க் காத்திருக்கமுடியாதென இந்திரா நகருக்கு
இழுத்துச் சென்றுவிட்டார். அப்படி அங்கே ரெயினிலிருந்து இறங்கி
நடந்துகொண்டிருந்தபோது ரோஜா முத்தையா நூலகம் இருப்பதையும் கண்டேன்.
ஒருமாதிரியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கண்டுபிடித்து யுரேகா யுரேகா
என்று கத்தாத குறைதான். எங்களின் மற்ற நண்பர் சூட்டிங்
நடந்துகொண்டிருக்கும் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இன்னுஞ்சிலரை
அறிமுகப்படுத்தினார். தம்பி ராமையா மாலை நேர படப்பிடிப்பிற்காய்
தயாராகிக்கொண்டிருந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு இடத்தைக்
கண்டுபிடித்ததற்காய், நண்பர் production ஆட்களிடமிருந்து தேநீரும் வாங்கித்
தந்து களைப்பையும் போக்கினார்.
நாயகனுக்கும் நாயகியிற்கும் ஏதோ
ஆலமரக் காட்சி. நாயகன் கொஞ்சம் பேசி கோபித்துவிட்டுப் போவதைக்
காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பாடசாலை முடிந்துபோன மாணவர்கள்
உற்சாகமாய் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடைவெளியில்
நடிக்கும் நாயகனோடு புகைப்படங்களும் அவர்கள் எடுக்க, சூரியன் மறைவதற்குள்
காட்சிகளை எடுத்து முடிக்கவேண்டுமென பரபரப்போடு எல்லோரும்
இயங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது காலசுப்பிரமணியமும், சரவணனும் தெருவில்
நடந்துபோய்க்கொண்டிருப்பதையும் பார்த்தேன் அவர்களுக்கு வணக்கம் சொல்ல
விருப்பமிருந்தபோதும், தன்னைப் பார்க்காது உனக்கு என்ன உருப்படாத
இலக்கியப்பேச்சு என நாயகி கோபித்து விடப்போகின்றாரோ என்ற அச்சத்தில்
அமைதியாகிவிட்டேன்.
நாயகன் பெயரைச் சொன்னபோது, அவரைக்
கேள்விப்பட்டிருந்தாலும் என்ன படத்தில் நடித்திருக்கின்றாரென
மறந்துவிட்டேனென நண்பர்களிடம் கூறியபோது 'மைனா'வை நினைவுபடுத்தினர்.
நாயகியையும் எங்கேயோ பார்த்திருக்கின்றேனே யாரவர் எனக் கேட்பதற்குள்
கூட்டத்தில் நின்ற ஒரு நடமாடும் விக்கிபீடியா, இவர் பேராண்மையில் ஐந்து
நாயகிகளில் ஒருவர், பரதேசியில் இரண்டு நாயகிகளில் ஒருவர், அரவானில் இவரே
தனித்த நாயகி' என பக்கத்தில் நின்ற யாருக்கோ சொல்லி எனக்கும் கூடவே
அறிவூட்டினார். இவரைப் பார்க்க சின்னப்பிள்ளை மாதிரி இருக்கிறார், என்ன
இவருக்கு ஒரு பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்குமா என்றேன். நண்பரோ இல்லை
இருபத்தைந்தளவு இருக்கும் என்றார். அவர் பாவாடை சட்டையில் இருந்ததாலும்,
ஆலமரத்தைச் சுற்றி சூட்டிங் நடந்ததாலும் எனக்கு 'ஆத்தங்கரை மரமே' நினைவு
வந்ததாலும் மிக இளமையாகத் தோன்றியதோ தெரியாது.
நாயகனோடு எல்லோரும்
விழுந்து விழுந்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். யாரோ ஒரு பையன் ரேஸிங்
பைக் ஒன்றைக் கொண்டு வந்து நாயகனை ஓட்டச்சொல்லி பின்னால் அமர்ந்து
இமயமலையைத் தொட்டுவிட்ட குதூகலத்தோடு போய்க்கொண்டிருந்தான். ஆனால் ஒருவரும்
நாயகியின் பக்கம் நகர்வதாயில்லை. என்னதான் இருந்தாலும் தமிழனுக்கு இவ்வளவு
வெட்கம் வேலைக்கு ஆகாது என நினைத்து, நண்பரிடம் நாயகியிடம் என்னை
அறிமுகப்படுத்திவிடுங்கள் எனக் கேட்டேன்.
நண்பர் என்னை நாயகியின்
அருகில் கூட்டிச்சென்று, இவர் ....., கனடாவிலிருந்து வந்திருக்கின்றார்
என்றார். நான் கொஞ்சம் திருத்தி, கனடாவிலிருந்து உங்களைப்
பார்ப்பதற்காய்தான் இங்கே (படப்பிடிப்பிற்கு) வந்திருக்கின்றேன் என்றேன்.
பிறகு கொஞ்சநேரம் அரவானில் இப்படி நடித்திருந்தீர்கள், பரதேசியில் அப்படி
அசத்தினீர்கள் எனச் சிலாகிக்கத் தொடங்கினேன்ன். பக்கத்திலிருந்த நண்பர், அட
பரதேசியே, இப்போது அரை மணித்தியாலம் முன்னர்தானே இந்த நாயகி எந்தப்
படங்களில் நடித்ததென்றே தெரியாமல் இருந்தாய், இப்படிப் படங்காட்டுகின்றாயே
என வியந்திருப்பார். அதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் நமது
'சுயமரியாதையிற்கு' ஆகாது என்று நான் 'பொளந்து' கட்டிக்கொண்டிருந்தேன்.
அப்போது நாயகி, உங்களுக்குப் பிடித்த நாயகி யார் எனக் கேட்டார் (கவனிக்க:
நாயகி நன்கு தமிழ் பேசுபவர்). எனக்கு, இந்தக்கணத்தில் பிடித்தவர்
நீங்கள்தான் எனச் சொல்லப் பிரியப்பட்டாலும், அஸின் என்று வாய் தவறிச்
சொல்லிவிட்டேன்.
அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் என்னோடு அவ்வளவாய்
முகங்கொடுத்துப் பேசவில்லை. அவரோடு புகைப்படம் எடுக்க விரும்பினாலும், ஏன்
போய் அஸினோடு எடுக்கவேண்டியதுதானே? என அவர் சூடாய்க் கேட்டுவிடுவாரோ என்ற
பயத்தில் அதற்கும் பின்வாங்கிவிட்டேன்.
சரி, அன்பான நாயகியே, நான்
உங்களுக்காய் விழித்து இருந்து நிச்சயம் இப்படம் வெளிவரும்போது
பார்த்துவிடுகின்றேன். கோபிக்கவேண்டாம், சிரியுங்கள்; அதுவல்லவா
உங்களுக்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.
(பி.கு: இதில் எவை
நடந்தன/நடக்கவில்லை என்பதை நாயகியோடு பேசும்போதிருந்த நண்பர் மட்டுமே
அறிவார். மற்றது, இந்தப் படத்தின் இயக்குநருக்கு நன்றியும் கூறவேண்டும்.
நான் சென்னையை விட்டு பிற இடங்களுக்குப் போனபோது அவரது பிளாட்ஸிலேயே எனது
luggagesஐ வைத்திருந்தேன். இடந்தந்து உதவியமைக்காய்)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment