Holguin லில் (Cuba) சைக்கிளில் சுற்றிக்கொண்டு திரிந்தபோது ஓர் உள்ளூர்க்காரரைச் சந்தித்தோம். அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகார், ரம்மிலிருந்து, விரும்பினால் எங்களுக்கு கடலுணவுடன் விருந்தும் அளிக்கத் தயாரெனச் சொன்னார். உங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்து வந்ததற்கு நன்றி, இப்போதைக்கு மலையிலுள்ள -முன்பு பூர்வீகக்குடிகள் வசித்த- குகைகளை மட்டும் பார்க்க இன்னொரு பொழுது வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.
மாலைப் பொழுதொன்றில், மலையேறிப் பார்ப்பதற்காய் இரண்டு குதிரைகளோடு அவர் தயாராக இருந்தார். என்னோடு கூடவே திரிந்த நண்பர் ஒரு ஐரோப்பாக்காரர். இந்த நாட்டுக்கு அவர் வந்ததும் இதுவே முதன்முறை. கியூபாவிற்கு சிலமுறை ஏலவே பயணித்தவன் என்ற மிதப்போடு, குதிரையிலேறி ஏற்கனவே நீர்வீழ்ச்சியிற்குப் போனவன் என்றும் என் அனுபவத்தையும் சேர்த்து உயர்வுநவிற்சியுடன் எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் ஐரோப்பாக்காரர் என்றபோதும், இதுவரையில் குதிரையில் ஏறவில்லை என்று அவர் சொன்னபோது எனக்குச் சற்று ஆச்சரியமாயிருந்தது. 'ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாக எதையாவது அறிவேண்டும், அப்போதுதான் அது நினைவில் மறவாதிருக்கும், உங்களுக்கு இம்முறை குதிரைப்பயணம்' என்று அவரிடம் சொன்னேன்.
இரண்டு குதிரைகளோடு எங்களுக்காய்க் காத்துக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒரு சைக்கிளோடு வந்திருந்தார். குதிரைகளும் மலையேற்றத்திற்கு பழகிய மாதிரி தெரியவில்லை. எங்கையோ மேய்ந்துகொண்டிருந்த குதிரைகளை இழுத்துக்கொண்டு வந்தமாதிரி இருந்தது. எங்கள் ஊர்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைப்போல, இங்கே குதிரைகள் அலைந்துகொண்டிருப்பதை எங்கும் காணலாம்.
ரிஸ்க் எடுப்பதெல்லாம், எனக்கு தேத்தண்ணியில் பணிஸைத் தோய்த்துச் சாப்பிடுவதைப் போல என்பதால் இவை எது குறித்தும் அச்சப்படாமல் குதிரையேற்றத்திற்குத் தயாரானேன். நானேறிய குதிரையோ ஒரு முரட்டுக்குதிரை. அது முன்னே போனதை விட, திரும்பிப் போன தூரந்தான் அதிகம். உள்ளூர்க்காரரோ சிறு தடி ஒன்றை முறித்துத்தந்து 'இப்படிப் பின்னால் தட்டு, குதிரை தன்பாட்டில் முன்னே போகும்' என்றார். முரண்டுபிடிக்கும் குதிரையிற்கு சற்றுப் பலமாகத் தட்டவும் பயமாயிருந்தது, அது கோபத்தில் வேகமெடுத்தால் என் நிலைதான் என்னாவது?
கரடுமுரடான சரளைக்கற்கள் பாவியிருந்த ஒழுங்கைகளில் போய்க்கொண்டிருந்தபோது, குதிரையிலேறி போர் பிடித்தவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன். எனக்கென்றால் உயிரே போகின்றமாதிரி உடலின் பின்பாகங்கள் வலித்தன. இப்படியான ஒரு பாதையில் போய் யுத்தம் செய்யவேண்டும் என எனக்கு ஒரு நிலை வந்திருந்தால், யுத்தகளத்திற்குப் போகமுன்னரே நான் உடல்வலியில் இறந்துபோயிருப்பேன் என நினைத்துக்கொண்டேன். என் எண்ணங்கள் வேகமெடுத்தாலும் எனது குதிரை செல்லவேண்டிய பாதையை விட்டு விலகி அடிக்கடி குச்சொழுங்கைகளுக்குள் போகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளூர்க்காரர் 'கா-பாயோ கா-பாயோ என்று கூறு, அது சொல்வழி கேட்கும்' என்றார். நான் மெல்லிய குரலிலிருந்து கடும்குரல் வரை கத்திப் பார்த்தேன். அது கேட்பதாய்க் காணோம்.
இந்தக் குதிரையிற்கு ஊர்முழுக்கத் தெரிந்தவர்கள் போலும். எல்லோர் வீட்டின் முன்னாலும் நின்று நின்று ஓய்வெடுத்துச் சுகம் விசாரித்துக் கொண்டிருந்தது.
எனக்கு வந்த விசருக்கு, ஒருக்காய் பின்பக்கம் இறுக்கித் தட்டி 'கா-பாயோ' என்றேன். அவ்வளவுதான். அது காற்றைப் போல ஓடத்தொடங்கியது. ஆனால் நாம் போக வேண்டிய பாதையில் அல்ல. நாலைந்து வீடுகள் பக்கம் பக்கமாய்க் கட்டப்பட்டிருந்த குச்சொழுங்கை ஒன்றிற்குள்ளால்.
வீட்டுச் சனம் எல்லாம் சிரிக்கிறதுகள். இதைவிட எனக்கு அவமானம் என்னவென்றால், நான் இந்த ஐரோப்பாக்கார நண்பருக்கு ஏற்கனவே குதிரையில் போன வீரன் எனக் கதை சொல்லியிருந்தேன். அந்த நண்பரின் முன்னும் தலைகுனிய வேண்டியிருக்கிறதே என்று. குதிரையிடம் 'கா-பாயோ' என்று அதட்டுவதை விட்டுவிட்டு, நான் மனசுக்குள் மானசீகமாய் 'என்ரை குஞ்சல்லோ, என்னை அவமானப்படுத்துகிறதென்றால் தனியே வைத்து அவமானப்படுத்து, ஆனால் இப்படி பப்ளிக்கில் வைத்து செய்யாதே' எனக் கெஞ்சினேன். அது எங்கே கேட்டால்தானே. ஏதோ தன் காதலியை யாரோ நாலைந்து வீட்டுக்கு அப்பால் சிறைவைத்தது மாதிரியும், அவரை விடுதலை செய்கின்ற பாவனையிலும் அல்லவா ஓடியது.
நான் இனி குதிரையை நம்பி எதுவும் நடவாது என்று கையில் அகப்பட்ட மரத்தைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தேன். ஆனால் குதிரை இன்னும் வேகமாய் ஓடியது. ஒன்று நான் மரத்தில் தொங்கவேண்டும். இல்லை குதிரையோடு சேர்ந்து அள்ளுப்பட்டுப் போகவேண்டும் என்ற நிலை. கடைசியாய் ஒரு வீட்டின் பின்வளவில் கட்டியிருந்த இன்னொரு குதிரையைக் கண்டுதான் ஓட்டத்தை நிறுத்தியது. சரி, காதலிக்கு 'ஹாய்' தான் கூறிவிட்டாய், திரும்பலாம்தானே என்றால் அதுதான் இல்லை. கிட்டப்போய் கொஞ்சிக்கொண்டு விட்டுவரமாட்டேன் என் முரண்டு பிடித்து நின்றது.
பிறகு ஒருமாதிரி அந்த வீட்டில் நின்ற ஒருபெண்தான் சிரித்தபடி ஸ்பானிஸில் கதைத்தபடி குதிரையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஒழுங்கையிற்குள் விட்டுவிட்டார். குதிரை இப்படிச் செய்துவிட்டதில் கோபமிருந்தாலும், சிலவேளை குதிரை இந்த அழகான பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தத்தான் இப்படி தெறிகெட்டு ஓடியிருக்கிறது என நினைத்து அதை மன்னித்தும் விட்டேன்.
ஒழுங்கையிற்கு வந்து பார்த்தால், உள்ளூர்க்காரரும், நண்பரும் சிரித்துக்கொண்டு நிற்கின்றார்கள். நான் இனி இந்தக்குதிரையோடு மலையேறப்போவதில்லை, திரும்பிப் போகப்போகின்றேன் என்று அறுதியும் உறுதியுமாய்க் கூறிவிட்டேன். நண்பர்தான், வேண்டுமெனில் குதிரையை மாற்றிக் கொஞ்சதூரம் வந்துபார், ஆகக்கஷ்டமென்றால் திரும்பிப்போய்விடுவோம் என்றார்.
நான் நண்பரிடம் நீங்கள் முதல் தடவைதான் குதிரையில் ஏறுகின்றீர்கள் என்கின்றீர்கள். ஆனால் நிதானமாய்க் குதிரையை ஓட்டமுடிகிறதே, எப்படி என்றேன். அவர் தான் நிறைய படங்களில் குதிரையேற்றத்தைப் பார்த்திருக்கின்றேன்; அதை இங்கே பிரயோகித்துப் பார்த்தேன் என்றார். நானுந்தான் நிறையக் குதிரைகளை ரீவியில் பார்த்திருக்கின்றேனே, ஏன் எதையும் கற்கவில்லை என யோசித்தேன். பிறகுதான் குதிரையைவிட குதிரையில் போகும் பெண்களைத்தான் உற்றுப் பார்த்திருக்கின்றேன் என்ற உண்மை உறைத்தது.
இப்படியே எங்களோடு மலையேறினால் அடுத்தநாள்தான் போய்ச்சேர முடியும் என்பதாலோ என்னவோ, உள்ளூர்க்காரர் இன்னொரு வயதுபோன ஐயாவையும் எங்களுடன் கூட வரச்சொன்னார். அவர் தன் குதிரையில் எங்களோடு வர, பிறகு குதிரைச்சவாரி எளிதாகப் போனது. 'கஷ்டப்பட்டு' குதிரையேற்றம் செய்த எங்களுக்கு அந்த ஐயா இளநீரும் வெட்டித்தநதார்.
இவ்வாறாக நான் மீண்டுமொரு 'வெற்றி' பெற்ற குதிரை வீரனானேன்.
0 comments:
Post a Comment