2011ல் கனடாவில் இயல்விருது வழங்கும் விழா. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரையிற்கு வழங்கப்படுகின்றது. எந்த சபை மீதிருக்கின்றேன் என்ற எவ்வித அக்கறையுமில்லாது எஸ்.பொ உரையாற்றுகிறார். அறிஞர் குழாம் என அழைக்கப்படும் குழுவிற்கு அவ்வளவு பிடிக்காத ஒருவகையான பேச்சு. ஆனால் அதுதான் எஸ்.பொவின் தனித்துவம். அந்த தனித்துவமே அவரை ஓய்வு உளைச்சலின்றி தமிழ் ஊழியத்திற்காய் காலமாகும்வரை இயங்க வைத்திருக்கின்றது.
எஸ்.பொவின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளுமே' என் வாசிப்பின் திசையை மாற்றியதென அடிக்கடி நினைப்பதுண்டு. 'ஆண்மை' தொகுப்பில் பதினைந்தாவது கதையான 'மித்தி'யை அவ்வளவு எளிதாய் எவரும் கடந்துபோய்விடவும் முடியாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இளம்வயதில் மரணித்துப்போன தன் மகன் மித்ரவுடன் எஸ்.பொ நிகழ்த்தும் அந்தரங்கமான உரையாடலே அந்தக் கதை. 'ஆண்மை'யிலிருந்து எஸ்.பொவை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர் 'தீ'யும், 'சடங்கும்' வாசிக்கத் தொடங்கியபோது எஸ்.பொ இன்னும் என்னை வசீகரித்திருக்கின்றார். ஈழத்தமிழருக்குள்ளிருந்தும் இவ்வகையான புதுவகை மொழியாடலோடும், பாலியலை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மையும் வியப்பைத் தந்திருக்கின்றது.
ஈழத்தில் இருந்தபோது எப்படி முற்போக்கு இலக்கியவாதிகளோடு முரண்பட்டு தனக்குச் சரியென நினைப்பதிலும் எந்தச் சபையென்றாலும் உரத்துச் சொன்னாரோ, அதேபோன்று புலம்பெயர்ந்தபின் சர்ச்சைக்குரிய 'புத்தாயிரத்தில் (2000ல்) புலம்பெயர்ந்தோரே தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்' எனவும் கிடைத்த எல்லாத்தளங்களிலும் சொல்லவும் செய்தார். ஆனால் எவ்வாறு எஸ்.பொ ஒருகாலத்தில் முன்வைத்த 'நற்போக்கு இலக்கியம்' பின்னாளில் தன்னியல்பில் காலவதியாகிப் போனதோ, அவ்வாறே 'புலம்பெயர்ந்தோர் தலைமை தாங்குவார்' என்பதும் தன்னியல்பில் உதிர்ந்துபோனது. ஆனால் அதேசமயம் ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் பற்றி தமிழகத்தில் ஒற்றைப்படையாக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தனியாளாக நின்று சலிப்பின்றிப் பதில் கொடுத்துமிருக்கின்றார்.
எஸ்பொ நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என ஒவ்வொரு தளத்திலும் தன் சுவடுகளை ஆழமாகப் பதித்தவர். இவ்வளவிற்கப்பாலும் ஒரு பெரும் வாசிப்பாளராக இருந்தார். அதுமட்டுமின்றி 'மித்ர' பதிப்பகத்தை தன் மகன்களோடு சேர்ந்து தொடங்கி நூற்றுக்கணக்கான ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் நூற்களை வெளியிட்டுமிருக்கின்றார். எஸ்.பொ, இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து 94ல் வெளியிட்ட புலம்பெயர் படைப்புக்களின் தொகுப்பான 'பனியும் பனையும்' முக்கியமானதொரு நூல். புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஒரு குறுக்குவெட்டான பார்வையை இதை வாசிக்கும் எவரும் கண்டுணர முடியும்.
தன்னைத்தானே விமர்சிக்காத , உரசிப்பார்க்காத எந்தப் படைப்பாளியும் அவ்வளவு எளிதில் முன்னே நகர்ந்து போய்விடமுடியாதென்பதற்கிணங்க, எஸ்.பொ 'சடங்கு' நாவலில் தன்னையோ ஒரு பாத்திரமாய் -பட்டதாரி ஆசிரியராயிருந்தாலும்- குடிகாரனாயும், சாறம் அணிந்து கொண்டு ரெயினில் வருகின்ற ஒருவராகவும் சித்தரிக்கின்றார். அவரின் நாடகமான 'முறுவலில்' விசுவாமித்திரையும் மேனகையையும் பாத்திரமாய்க் கொண்டு அவர்களின் உறவை வர்ணித்துவிட்டு, மூன்றாம் குரலாய் 'சீச்சி...என்ன எல்லாம் ஓரே ஆபாசமாய்க் கிடக்குது. எஸ்.பொ. எழுதினால் இப்படித்தான்' என்றும் தன்னையே எள்ளல் செய்துகொண்டும் போகின்றார்.
இந்த இடத்தில் மிகக்குறைந்த வயதில் மறைந்தபோன மு.தளையசிங்கம் முற்போக்குவாதம், நற்போக்குவாதம் என்ற இரண்டு போக்குகளையும் நிராகரித்து அவர் மூன்றாம்போக்காய் தனது வாதத்தை 'முற்போக்கு இலக்கியம்', 'மூன்றாம் பக்கம்' என்ற நெடுங்கட்டுரைகளில் வைத்திருக்கின்றார். தனது நிலையை உறுதிப்படுத்த மு.த 'மெய்முதல்வாதத்தை' எழுதியிருக்கின்றார். அதை இன்னும் நீட்சித்து விரிவாக 'மெய்யுளாக'வும் எழுதிப் பார்த்திருக்கின்றார். அந்தவகையில் மு.தவோ ஒப்பிடும்போது எஸ்போ முன்வைத்த நற்போக்குவாதம் ஒரு எதிர்வினை என்பதற்கப்பால் எதையும் தனித்துவமாகக் கொண்டதில்லை. இன்னும் எளிதாகச் சொல்லப்போனால் 'முற்போக்குவாதம் - (சிவத்தம்பி+கைலாசபதி) = நற்போக்குவாதம்' எனத்தான் அவர் சொல்லியுமிருக்கின்றார். அதுமட்டுமின்றி முற்போக்குவாதம் நீர்த்துப்போனபோது, தான் முன்வைத்த நற்போக்குவாதத்திற்கு, அதற்குப் பிறகு ஆயுள் நீட்சிக்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை என்பதையும் எஸ்.பொவே ஒத்துக்கொண்டிருக்கின்றார்.
எஸ்.பொ அடிப்படையில் ஒரு விமர்சகரல்ல. அவர் நீண்டதூரம் பயணிக்க விரும்பியது புனைவின் வழியேதான் என்பதை அவரின் எழுத்துக்களினூடாக நாம் எளிதாக் அடையாளங்கண்டு கொள்ளமுடியும் . தவிர்க்கமுடியாத வகையில் அவர் அன்றையகாலத்தில் விமர்சகக் கோலம் பூணவேண்டியிருந்தது. ஆனால் எஸ்.பொ தனக்கு அவ்வளவு உவப்பில்லாத விமர்சனத்திற்குள் சிக்கிக்கொள்ளாது பின்னாளில் வெளியே வந்திருக்கின்றார். அதனால்தான் அவரால் பின்னாட்களில் ஆண்மையையோ நனவிடைதோய்தலையோ எழுதமுடிந்தது.
யாழ்ப்பாணச் சமூகத்தையே அவரது படைப்புக்கள் நிறைய பிரசவித்திருக்கின்றதென்றாலும், யாழ்ப்பாணத்தைத் தாண்டி வேறிடங்களில் வாழ்ந்த அனுபவம், தன்னையொரு மூன்றாம் மனிதராக இருந்து யாழ் சூழலைப் பார்க்க வைத்திருக்கின்றதென எஸ்.பொ கூறியிருக்கின்றார். ஈழத்துச் சூழலில் இன்னொரு முக்கிய படைப்பாளியான டானியலின் படைப்புக்களையோ அல்லது டானியலை சிறுபான்மைத்தமிழர்களின்(தலித்துக்களின்) முன்னோடியாகக் கொள்ளவோ எஸ்.பொவினால் அவ்வளவு எளிதாக முடிந்ததில்லை என்பதும் வியப்பைத் தரும் ஒரு விடயந்தான்.
எஸ்.பொ தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் எழுத்துலகிலேயே வாழ்ந்தவர். நிறைய எழுதியவர், வாசித்தவர். பல்வேறு தளங்களில் ஆழமாய் இயங்கியவர். எனவே அவரைப் பற்றி எழுதவும் ஆராயவும் நிறைய விடயங்கள் நமக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். கைலாசபதி, சிவத்தம்பி, தளையசிங்கம், எஸ்.பொ போன்ற ஆளுமைமிக்க மூத்த தலைமுறையின் இறுதி மரத்தையும் இப்போது இழந்துவிட்டோம் ஆனால் அவர்கள் தொடர்ந்துவரும் தலைமுறைக்கு வேருமாகி விழுதுமாகி முன்னே நின்று வழிகாட்டுவார்கள். என் ஆசான்களில் ஒருவராகிய எஸ்.பொவிற்கு எனது அஞ்சலி.
('அம்ருதா' - மார்கழி, 2014)
0 comments:
Post a Comment