நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனடாத் தேர்தல் - 2015

Sunday, October 18, 2015


ருகின்ற திங்கட்கிழமை (Oct 19) கனடாவிற்கான தேர்தல் நடக்க இருக்கின்றது.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது  என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) முன்னணியில் நின்று, இடையில் வலதுசாரிகளான பழமைவாதக்கட்சியினர் ஓட்டத்தில் முன்னே போக, இப்போது லிபரல் கட்சியினர் முன்னணியில் நிற்பதாய் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புக்கள் நடத்தும் நிறுவனங்கள், அவர்கள் சாம்பிள்கள் எடுக்கும் புவியியல் பின்னணி என்பவறிற்கும் ஓர் அரசியல் உண்டென்பதையும் ஒருபக்கம் நினைத்துக்கொள்வோம்.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது (வாக்களிக்காமல் விடுவதும் கூட) அவரவர் உரிமை என்பதால் எவரையும் இந்தக் கட்சியிற்குத்தான் வாக்களியுங்கள் என வற்புறுத்த முடியாது. ஆனால் யாரைத் தேர்ந்தெடுத்தால் எமக்குக் குறைந்த பாதிப்பு என்றவகையில் சிந்தித்து வாக்களியுங்கள் என வேணடுமானால் சொல்லலாம்.


மக்கு எப்போதும் தங்குவதற்கு ,வாடகை கொடுத்து இருக்கக்கூடிய இடமொன்று இருப்பதோ அல்லது  (மோட்கேஜ் கட்டியபடி சொந்தமாகிக்கொண்டிருக்கும்) ஒரு வீடு இருப்பதோ என்பது நல்ல விடயமே. நாளை ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்குவதோ அல்லது இருக்கும் வீட்டை விட சொகுசான வீட்டைத் தேடிச் செல்வதில் கூட தவறில்லை. அதை ஒருவரின் தனி விருப்பமாக எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

ஆனால் அதேசமயம் எமக்குத் தங்குவதற்கு ஒரு வீடு இருப்பது என்பதற்காய் எல்லோரும் அப்படித்தான் வாழ்கின்றார்கள் என நினைப்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இன்னமும் நிறையப்பேர் ஒரு ஒழுங்கான தங்குமிடம் இல்லாது அலைபவர்களாகவும், தமது வருமானத்தில் பெரும்பாகத்தை வீட்டு வாடகைகளுக்குக் கொடுப்பவர்களாகவும், அவர்களின் வளரும் பிள்ளைகள் வறுமைக்கோட்டிற்குக் கீழாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற பழமைவாதக் கட்சி வருமானம் குறைந்தவர்கள் வசிக்கக்கூடிய பொது வீட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தபடியே வந்திருக்கின்றது. அவ்வாறான வீடுகள் தேவையான மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்தபோதும் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யப்படாமலே இருக்கின்றது. இன்னமும் 90,000 மக்களுக்கு மேலே இந்த வீடுகளுக்கான 'காத்திருப்புப் பட்டியல்களில்' இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. அதுபோலவே வீடற்றவர்களுக்கான தங்குமிடல்களையும் பல்வேறு இடங்களில் இந்த அரசு மூடியிருக்கின்றது. ஆகவே நமக்குத் தங்க ஓரிடம் இருக்கின்றது என்பதற்காய், மற்றவர்களுக்கும் இடமிருக்கின்றதென எண்ணாது, நமக்கு சிறுவயதில் சொல்லித்தந்த ஒரு மனிதனுக்கு அவசியமான உணவு/உடை/உறையுள் என்ற அடிப்படை வசதிகளாவது சக மனிதர்களுக்கும் இருக்கின்றதா என சற்று யோசிப்பதில் தவறிருக்காதெனவே நினைக்கின்றேன். அதை வழங்கக்கூடிய, அந்த மக்கள் மீது அக்கறையுள்ள ஓர் அரசைத் தேர்ந்தெடுங்கள் எனச் சொல்ல வருகின்றேன்.

இதேபோன்று, நாம் உழைத்துக்கொண்டிருப்பவர்களாய் இருப்பின் நமது சம்பளம் எவ்வளவானாலும் இருக்கட்டும். ஆனால் அடிப்படைச் சம்பளம் (ரொறொண்டோவில்)  $11.25/hr இருக்கின்றது. அதை என்டிபி கட்சி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் கனடா முழுவதற்குமான அடிப்படைச் சம்பளமாக $15.00/hr  வரும் வருடங்களில் உயர்த்துவதாய்க் கூறுகின்றனர். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு முதலாளித்துவ நாடு. ஆகவே நமது ஆசைகளை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருப்பார்கள். கனவுகள் எட்டுந்தொலைவில்தான் இன்னுமின்னும் கடுமையாய் உழை என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறான கனவுகளைப் பின் தொடர்ந்து செல்கின்றவர்களை அவர்களின் சுயவிருப்பு என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்சினையில்லை. ஆனால் அதேசமயம் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

மேலும் புதிய குடியேற்றவாதிகளான நாமெல்லோரும் அடிப்படைச் சம்பளத்திலேயே வேலை செய்தவர்களாகவும்(செய்பவர்களாகவும்) இருந்திருக்கின்றோம். மாணவராக இருக்கும்போதே 17/18  வயதில் வேலை செய்யத்தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கும் இதே அடிப்படைச் சம்பளமே வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போதும் நிலைமை மாறவில்லை அப்படியே இருக்கின்றது. ஆகவே அடிப்படைச் சம்பளத்தைச் சற்று உயர்த்தி எல்லோருக்கும் கொடுப்பதில் நாமெதையும் இழக்கப்போவதில்லை. அவ்வாறு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தச் செய்யும் கட்சிகளுக்கு எமக்கு வாக்களிப்பு கூட நமது ஜனநாயக் கடமைகளில் ஒன்றெனச் சொல்லலாம்.ன்னொரு முக்கிய விடயம், மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்போது இருக்கும் கற்றலுக்கான செலவு. ஒவ்வொரு வருடமும் அது உயர்ந்து உயர்ந்து வானை முட்டுமளவிற்குச் செல்கின்றது. அதைவிட நாம் படிப்பதற்காய் எடுக்கும் கடனைத் திரும்பிக் கட்டத்தொடங்கும்போது கடன் தந்த அரசு, அதற்குப் பெரும் விகிதத்தில் வட்டியையும் வசூலிக்கின்றது. வாங்கிய கடனை திரும்பியளிப்பதில் எந்த மனஞ்சுணங்கலுமில்லை. ஆனால் அந்த வட்டி பிறகு குட்டிப் போட்டு வாங்கிய கடனுக்குக் கிட்டவாகக் கூட சிலவேளைகளில் வந்துவிடுகின்றது.

உண்மையில் இதன் நிமித்தமே ஒருகாலத்தில் மேற்படிப்புப் படிக்க விரும்பியபோது இன்னுமின்னும் கடனைக் கூட்டிச் செல்லவேண்டுமா என்ற சோர்வில் படிப்பதைத் தவிர்த்திருந்தேன்.  புதிய ஜனநாயக் கட்சி, படிப்பிற்காய்த் தரும் கடனுக்காய், அறவிடப்படும் வட்டியை தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்குள் இல்லாமற் செய்வோம் எனக் கூறுகின்றார்கள். அது நல்ல விடயம். லிபரலும், புதிய ஜனநாயக்கட்சியினரும் மாணவர்களுக்காய் மில்லியன்கணக்கில் புதிய மானியங்களை (Grants) உருவாக்குவதாய்ச் சொல்கின்றார்கள்.

பழமைவாதக் கட்சியினருக்கு இதுகுறித்து அவ்வளவு அக்கறையில்லை. அவர்களுக்கு கனடாவில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போல பணக்காரர்கள் என்று நினைப்பு. ஒன்றை மட்டும் அவர்கள் சொல்கின்றார்கள், இதுவரை 60 வாரப்படிப்பிற்கு அரசு  கடன் கொடுத்ததை 34 வாரப் படிப்பிற்கும் கடன் எடுக்க உதவி செய்வோம் என்கின்றார்கள். ஆக இருக்கின்ற கடனை இன்னும் எப்படி நீட்சிக்கலாம் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கின்றது.

இன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் கனடாவில் இருப்பது பூர்வீகக்குடிப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணாமற்போவது. இது குறித்து எந்தவிதமான அக்கறையையும் இப்போதிருக்கும் பழமைவாதக் கட்சி எடுக்கவில்லை. புதிய ஜனநாயக் கட்சியும், லிபரலும் தாம் ஆட்சியிற்கு வந்தால் உடனேயே ஒரு விசாரணைக்குழுவை அமைப்போம் எனச் சொல்கின்றார்கள்.  பூர்வீகக்குடிகளின் நிலத்தையே நாமெல்லோரும் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம். அவர்களின் இன்றைய நிலைமையோ மிகுந்த கவலைக்கிடமானது. கடந்தகால வெள்ளை மேலாதிக்கம் எப்படி அவர்களை திட்டமிட்டு ஒடுக்கியதென்று எளிய உண்மையை விளங்கிக்கொண்டால் இன்று அவர்கள் கேட்கும் அடிப்படை உரிமைகள், அவர்கள் வாழும் நிலஞ்சார்ந்த இடங்களை இனியேனும் ஆக்கிரமிக்காதல் என்பவற்றை விளங்கிக்கொள்ளும் ஓர் அரசு நமக்கு வேண்டியதாயிருக்கின்றது.

சூழலியல் நம் எல்லோருக்குமான பொதுவான பிரச்சினை. பழமைவாதக் கட்சியினருக்கும் சூழலியலுக்கும் எட்டாப் பொருத்தம். கனடாவிற்குள் நிலத்தினூடாக போகும்/ போகப்போகும் எல்லா பெரிய எண்ணெய்க் குழாய்களையும் கிறீன் கட்சி நிராகரிக்கின்றது. என்டிபியினரும்  பெரும்பாலும் கிறீன் கட்சியைச் சார்ந்தே நிற்கின்றனர். லிபரல் கட்சியினர் தேர்ந்தெடுத்த சில திட்டங்களை மட்டும் எதிர்க்கின்றனர். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல, நாம் மட்டும் இந்தப் பூமியில் வாழ்ந்தால் போதாது, எமக்கு அடுத்த சந்ததிகளைப் பற்றியும் கொஞ்சம் யோசிப்பதோடு மட்டுமில்லாது எல்லோருடனும் சேர்ந்து இப்பூமியை இயன்றவரை பாதுகாப்போம்.


றுதியில் எனது அரசியலை பொதுவில் முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை. எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமை கிடைத்தபோது முதன்முதலில் லிபரல் கட்சியிற்கு வாக்களித்திருக்கின்றேன். அதற்குப் பிறகு எனது வாக்கு எப்போதைக்கும் புதிய ஜனநாயக் கட்சியினருக்கே இருந்திருக்கின்றது. நான் கடந்தமுறை இருந்த தொகுதியில் ஒரு தமிழர் போட்டியிட்டபோதும் அவர் பழமைவாதக் கட்சியினராக இருந்ததால் -இப்போது கனடாத்தேர்தலில் நாகரீகமாகப் பேசப்படும் இனத்துவ வாக்கையும்- நிராகரித்திருக்கின்றேன்.

இடைக்கிடை grass roots movement ஆன  No One Is Illegal மேதின ஊர்வலங்களில் முன்வைக்கும் 'our votes on the streets'  என்பதை ஏற்றுக்கொண்டு எந்தக் கட்சியிற்கும் எனது வாக்கில்லை என நிராகரித்துமிருக்கின்றேன். சிலவேளைகளில் கட்சியின் கொள்கைகள் ஒரளவு உடன்பாடாக இருந்தாலும், நானிருந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்(கள்) சரியில்லை என்பதால் வாக்களிக்காதும் இருந்திருக்கின்றேன்.

சோகம் என்னவென்றால் நான் கனடாவிற்கு வந்ததன்பிறகு கனடா பொதுவிற்குமோ அல்லது (என்) மாகாண அளவிலோ நான் நிறையத்தடவைகள் வாக்களித்த புதிய ஜனநாயக் கட்சியினர் ஒருபோதும் வென்றதே இல்லை என்பதுதான்.

ஆனாலென்ன நம்பிக்கைதானே வாழ்க்கை. தோற்றுக்கொண்டிருப்பதில் கூட நிறையக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?

0 comments: