Into the Wild நூலாகவும், பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டபின் வந்த ஒரு ஆவணப்படத்தில் (Back to the Wild ), 'Chris was so close to become a great adventurer' என ஒருவர் கூறுவார். உண்மையில் கிறிஸ், அலாஸ்காவிலிருந்த அந்த ஆற்றைக் கடந்திருந்தால், -பட்டினியால் இறந்திருக்காது- தனது சாகசப் பயணத்தின் கதையை எங்களுக்கு விரிவாகக் கூறியிருப்பார். Into the wild ஐப் போல Tracks மற்றும் Wild என பயணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூற்களை வைத்து, இரண்டு திரைப்படங்கள் கடந்த வருடங்களில் வெளிவந்திருந்தன. இந்த இரண்டிலும் இருக்கும் விசேட அம்சம் என்னவென்றால், இந்த சாகசப்பயணங்கள் பெண்களால் தனித்துச் செய்யப்பட்டிருப்பது.
Tracks ஆஸ்திரேலியாப் பாலைவனங்களினூடாக இந்துசமுத்திரத்தின் கரையைத் தேடி கிட்டத்தட்ட 9 மாதங்களாய் 1977ல் ஒரு பெண்ணால் செய்யப்பட்ட 2700 கிலோமீற்றர்கள் நீண்ட சாகசப் பயணம். மூன்று ஒட்டகங்களுடனும், ஒரு நாயின் துணையுடனும் செய்யப்பட்ட பயணம் அது. ஒட்டகங்களே இல்லாத ஆஸ்திரேலியாவில் இந்தப் பெண் எப்படி ஒட்டகங்களைப் பெறுகிறார் என்பதும், எப்படி அவற்றை நீண்ட பயணங்களுக்காய் பழக்குகின்றார் என்பதும் சுவாரசியமானது.
PCT எனப்படும் Pacific Crest Trail, மெக்ஸிக்கோவினதும் கனடாவினதும் எல்லைகளைத் தொடும் அமெரிக்காவிலிருக்கும் நீண்ட ஹக்கிங் பாதை. 'Wild' என்று பெயரிடப்பட்டதிற்கிணங்க பயணம் மட்டுமல்ல, இந்தப் பெண்ணின் வாழ்வில் நடக்கும் விடயங்கள் பலவும் கூட 'wild' ஆகவே இருக்கின்றன. சிறுவயதில் வன்முறையான தகப்பனைப் பார்ப்பதிலிருந்து, பிறகு மிக நெருக்கமாயிருக்கும் தாயாரை புற்றுநோயிற்குப் பலிகொடுப்பது, அதன் தொடர்ச்சியில் அதீத போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல், எண்ணற்ற அந்நியர்களுடான உடலுறவென ஒரு தறிகெட்டலையும் வாழ்விலிருந்து சட்டென்று ஒரு மீட்சிக்காய் இந்தப் பயணத்தை இப்பெண் மேற்கொள்கின்றார்.
Into the Wild, Tracks, Wild போன்றவற்றைப் பார்க்கும்போது நாம் செய்த பயணங்களோ அல்லது நாம் செய்யவேண்டுமென கற்பனை செய்திருக்கும் பயணங்களோ ஒன்றுமேயில்லையெனப் போலத்தோன்றுகின்றது.
The festival of insignificance
இந்த நாவல் தொடங்குமிடம் மிகவும் சுவாரசியமானது. தெருவில் நடந்துபோகும் பெண்ணின் தொப்புளைப் பார்த்து அதிலிருந்து ஆராய்ச்சி தொடங்குகின்றது. பெண்ணின் மார்பை, பிருஷ்டத்தை, தொடையை, தொப்புளை இவற்றில் எதை ஒருவன் முதலில் பார்க்கப் பிரியப்படுகின்றானோ, அவனின் காமம் எப்படியென அலசி ஆராயப்படுகின்றது. பின்னர் நாவலின் இடையில் தேவதைகளுக்கு தொப்புள் இல்லையெனச் சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு தேவதையே ஏவாள் எனவும் அவளுக்கு ஒருபோதும் தொப்புளே இருந்திருக்காது என ஒரு உரையாடலில் வரும். எனெனில் அவள் எவரினதும் தொடர்ச்சியில்லை. நேரடியாக 'ஆக்குபவரினால்' உருவாக்கப்பட்டவள். ஆனால் ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லோருமே தொப்புள்(கொடி) என்ற இணைப்பின் மூலம் காலங்காலமாய் தொடர்புபட்டிருக்கின்றோம். ஆகவேதான் எம்மால் எந்த வரலாற்றின் நினைவுகளிலிருந்தும் எளிதாய்த் தப்பிவிடமுடிவதில்லை என மிலன் குந்தேரா எழுதிச் செல்வார்.
எனினும் ,மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. 'The Festival of Insignificance'ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலன் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலன் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் 'Memories of My Melancholy Whores' எழுதியபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.
The Girl in the Spider's Web
Stieg Larsson பற்றி அறியாதவர்கள் அவ்வளவு இருக்கமாட்டார்கள். 'The Girl with the Dragon Tattoo', 'The Girl Who Played with Fire','The Girl Who Kicked the Hornets' Nest' என்கின்ற மூன்று நாவல்களும் மில்லியன்கணக்கில் விற்கப்பட்டதும், சுவிடிஷில் அவை படமாக்கப்பட்டு, இறுதியில் ஹொலிவூட்காரர்களாலும் The Girl with the Dragon Tattoo' ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு அண்மையில் வெளிவந்திருந்தது.
அநேக எழுத்தாளர்கட்கு நிகழ்வதுபோல Stieg Larsson 2004ல் இறந்தபின்னே அவரின் துப்பறியும் திகிலான நாவல்கள் பிரபல்யம் பெற்றன என்பது துரதிஷ்டவசமானது. இப்போது இந்நாவல்களின் தொடர்ச்சியாக இன்னொரு எழுத்தாளரான David Lagercrantzஐ கொண்டு 'The Girl in the Spider's Web' எழுதப்பட்டு இம்மாதம் வெளிவருகின்றது. ஏற்கனவே Stieg தனது 50வது வயதில் மரணமுற்றபோது நான்காவது நாவலில் 200 பக்கங்கள்வரை எழுதியுமிருந்தார்.
புதிய புத்தகத்திற்கான முன்னோட்டமே இது. நாவலிலிருந்து 2 அத்தியாயங்களை புத்தகங்களாக்கி தந்தும் கொண்டிருந்தனர். David Lagercrantz இம்மாதம் ரொறொண்டோவிற்கு வரவுமிருக்கின்றார். நாவலின் முக்கியபாத்திரமான Lisbeth Salander போல எல்லாப் பெண்களும் தங்களை உருமாற்றியிருந்தனர். கறுப்பு நிற லெதர் ஜாக்கற், நீண்ட காலுறையுடன், காதிலும் மூக்கிலும் என கூர்மையான ஆபரணங்களையும் அணிந்துமிருந்தனர். நண்பொருவர் அவர்களுக்கருகில் போய் நின்று என்னைப் படங்காட்டச் சொன்னார். ஏற்கனவே சுவிடீஷில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படங்களைப் பார்த்து மிகத் தீவிரமான வன்முறையாய் இருக்கிறதே என இடைநடுவில் பார்ப்பதையே பயத்தில் கைவிட்டவன் நான். அதையறிந்தபின்னும் இந்தப் பெண்களின் அருகில் போக, அவர்கள் கத்தியையோ, கைத்துப்பாக்கியையோ உருவ என்னுயிரைப் பணயம் வைக்க எனக்கென்ன விசரா என்ன?
கனடா வந்த பதினேழாவது வயதில்தான் மைக்கல் ஜாக்சனின் "They Don't Care About Us" என்ற பாடலை முதன்முதலில் கேட்டிருந்தேன். அப்போது முகிழ்ந்திருந்த காதலில் என்னை நேசித்த பெண் ஒரு காஸெட் முழுக்க மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து தந்திருந்தார். அந்தக் காதல் சொற்ப காலங்களே நீண்டிருந்தாலும், மைக்கல் ஜாக்சனின் கஸெட் நீண்டகாலமாகவே என் வசமிருந்தது. திரும்பவும் அந்த ஞாபகங்களை 2Cellosன் இந்தப்பாடல் நினைவுபடுத்திவிட்டது. அந்தக் காதலை மட்டுமல்ல, இந்தப் பாடல் ஒளிப்படமாக்கப்பட்ட விதமும், கடந்துவந்துவிட்டேன் என நினைத்தாலும் கடக்கவே முடியாத போர்க்கால நினைவுகளையும் கிளறிவிட்டன.
இருண்டகாலங்களில் இசையே வெறுமையாய் மிஞ்சுகின்றது. இங்கேயும் இறுதியில் இசைக்கலைஞர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் அவர்களின் இசை ஒலித்தபடியே இருக்கின்றது. நிகழ்ந்த எதையும் மறக்காமலும், நிகழ்ந்த எல்லாவற்றின் சாட்சியங்களுமாய்...!
0 comments:
Post a Comment