கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மிதயா கானவியின் 'கருணை நதி'

Saturday, May 08, 2021

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின், முட்கம்பி வேலிகளுக்குள் நடக்கின்ற ஒரு குறுநாவலென இதைச் சொல்லலாம். ஒரு சாதாரண தாதியாக இருந்து, ஒரு மருத்துவருக்கு நிகராக கடும் போர்க்காலத்தில் பல உயிர்களின் காப்பாற்றுகின்ற ஒருவராக சங்கவி மாறுகின்றார். அவரால் காப்பாற்றப்பட்ட ஒருவனுக்கும், சங்கவிக்கும் முகிழ்கின்ற காதலை, போரின் பின்னணியில் வைத்து மிதயா கானவி எழுதிச் செல்கின்றார். இந்தக் குறுநாவல் மித்யா முட்கம்பி முகாமிற்குள் இருந்த காலத்தில் அங்கர் பால்மா அட்டைகளில் வைத்து எழுதியது என்று குறிப்பிடுகின்றார். கூகி வான் தியாங்கோ இவ்வாறுதான் ரொய்லட் கடதாசியில், 'சிலுவையில் தொங்கும் சாத்தனை' அவர் சிறைக்குள் இருக்கும் காலத்தில் எழுதி வெளியே கடத்தியிருக்கின்றார். ஒருவகையில் இந்நாவல் மிதயாவை, போரால் வந்த பெரும் வெறுமையிலிருந்தும், துயரத்திலிருந்தும் அவரை விடுபடுவதற்கான ஒரு ஆற்றுப்படுத்தலாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

சங்கவிக்கு முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் இருந்த ஒரு காதல்/திருமண வாழ்வு, களத்திலேயே மரணிக்கின்ற கணவன், மருத்துவப் பணியில் தன்னைத் தொலைக்கின்ற ஓர்மம் என்பவை இந்நாவலில் பேசப்படுகின்றன. முக்கியமாக மருத்துவமனையில் காயம்பட்டுக் கொண்டு வரப்படுகின்றவர்கள் மட்டுமின்றி, மருத்துவ சேவை செய்கின்ற வைத்தியர்கள்/தாதிகள் இறக்கின்ற கணங்களையும் விவரிக்கின்றபோது நம் மனதைப் பிசைகின்றது. உள்ளதை உள்ளபடி உண்மைச்சம்பவங்களை எழுதினால் எம்மில் எத்தனை பேரால் வாசிக்க முடியும் என்ற காரணத்தாலேயே உண்மை மாந்தர்களின் வரலாறுகள் கதையாக உருமாறியிருக்கின்றன என மிதயா தன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். முள்ளிவாய்க்கால் அழிவு, புனர்வாழ்வு முகாம் வாழ்வு மட்டுமில்லாது, கணவனை இழந்த பெண்ணுக்கும், இளைஞனுக்கும் வருகின்ற காதலைச் சொல்வதாலும் இது ஒரு கவனிக்கத்தக்க நாவல்தான். எனினும் மு.பொன்னம்பலம் (மு.பொ) ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல இன்னும் விரிவாக பல்வேறு சம்பவங்களை எழுதியிருக்கலாமே என்கின்ற ஒரு குரலையும் நாம் இங்கு தவிர்த்துவிடமுடியாது. அதற்கு இலங்கையில் இருக்கும் சூழலில், அங்கேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் பேசமுடியாது என்று மிதயா அளித்திருக்கும் பதிலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. தே போன்ற மருத்துவ பின்னணியில் வந்த இன்னொரு நாவலாக வெற்றிச்செல்வி எழுதிய 'போராளியின் காதலி'யையும் இதனோடு சேர்த்து நினைவுக்கு வருகின்றது. இவ்விரு நாவல்களிலும் சில இடங்களில் ஒன்றையொன்று வெட்டிப் போவதை இவ்விரு நாவல்களையும் வாசித்திருப்பவர்கள் அவதானிக்கமுடியும். இன்னமும் அச்சுறுத்தல் அகலாத சூழலில், இனி வரும் காலங்களில் மிதயா எதையாவது எழுதப் போகின்றாரென்றால், மிகுந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புதிய மொழியைக் கண்டடைந்து எழுதிய இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவர் தனது கதைகளை எழுதிப் பார்க்க முயற்சிக்கலாம். எழுதுவது என்பதும், நடந்தவற்றைப் பதிவு செய்தல் என்பதுமே முக்கியமே தவிர, எந்த வடிவத்தில் அதைச் சொல்கின்றோம் என்பது குறித்து -மித்யா உள்ளிட்ட சுதந்திரமாக எழுதமுடியாச் சூழலில் அவதிப்படும் பலர்- அதிகம் யோசிக்கத் தேவையில்லை என்றே சொல்வேன். மேலும் நாவல் போன்ற வடிவங்களுக்கு, வேறு புனைபெயர்களைச் சூட்டிக்கொண்டு உருமறைப்புச் செய்தும் எழுதலாம். காலம் கனியும்போது மட்டும் நம்மை வெளிப்படுத்தலாம். 'வன்னி யுத்தம்' என்கின்ற முக்கியமான அனுபவப் பதிவுகளை நேரடிச் சாட்சியாக நின்று எழுதியவர் 'அப்பு என்ற புனைபெயரில்தான் அன்று எழுதினார் என்பதையும் இங்கே நினைவூட்டிக் கொள்கின்றேன்.
........................................

(Nov 20, 2020)

1 comments:

karikaalan.m said...

thank you for this article

5/08/2021 11:44:00 PM