1.
ஷியாம் செல்வதுரையின் நாவலான 'விசித்திரமான சிறுவன்' (Funny Boy) 1994 இல் வெளிவந்தது. ஷியாம் தமிழ்த் தந்தையிற்கும், சிங்களத் தாயிற்கும் பிறந்தவர். ஆகவே இரண்டு கலாசாரங்களின் இணக்கங்களும், பிணக்குகளும் சேர்ந்த கலவையில் வளர்ந்திருக்கக்கூடியவர். மேலும் தற்பாலினராகவும் இருப்பதால் அதன் நிமித்தம் இலங்கைச் சூழலில் வளர்ந்தவர்கள்/வாழ்பவர்கள் அனுபவித்திருக்ககூடிய எல்லாச் சிக்கல்களையும் சந்தித்தவர். அதேசமயம் கொழும்பில் வசதிபடைத்தவர்கள் வாழும் கறுவாத்தோட்டப் பகுதியைச் (Cinnamon Gardens)சேர்ந்தவர் என்பதையும் ஷியாம் மறைத்தவருமல்லர். இலங்கையில் 1983இல் தமிழருக்கெதிரான படுகொலையின் நிமித்தம் ஷியாம் தனது 19 வயதில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். இந்த நாவல் அவரின் 29ம் வயதில் கனடாவில் வெளியாகி மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
'விசித்திரமான பையன்' கதை, ஒரு சிறுவன் பதின்மத்தை அடையும் (Coming of Age) வகையைச் சேர்ந்தது. இந்நாவலில் கொழும்பிலிருக்கும் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளின் ஒருவரான அர்ஜூன் (அர்ஜீ) தனது கதையைச் சொல்கின்றார். சிறுவனாக இருக்கும் அர்ஜி ஆண்கள் அதிகம் விளையாடும் கிரிக்கெட் போன்றவற்றில் ஈடுபாடில்லாது, பெண்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவராக இருப்பதை விபரிக்கும்போதே அவர் ஒரு நம் சூழலில் ஒரு 'விசித்திரமான பையன்' என்பது தெரிந்துவிடுகின்றது. தனது மகனின் இந்த 'விசித்திரமான பழக்கவழக்கங்கள்' மாறுமென ஒரு இறுக்கமான தனியார் பாடசாலையில் தந்தையார் பின்பு அர்ஜீயைச் சேர்த்துவிடுகின்றார். அங்கே ஏனைய மாணவர்களும், பாடசாலை அதிபரும் இவர் தமிழர் என்பதால் இவரைப் பல விடயங்களுக்கு பகடைக்காய் ஆக்கினாலும், அர்ஜீ தனது பாலின் அடையாளத்தை அவரின் நண்பரான ஷெர்கானின் மூலம் தெளிவாகக் கண்டடைந்து கொள்கின்றார்.
இவ்வாறு அர்ஜீ தனக்குரிய பாலின அடையாளத்தோடும், தமிழரென்ற திணிக்கப்பட்டுவிட்ட அடையாளத்தோடும் போராடும்போது, நாட்டு நிலைமைகள் சிக்கலாகின்றன. அர்ஜீயை அவருடைய அடையாளங்களோடு புரிந்துகொள்கின்ற ஒருவராக அவரது மாமியாரான ராதா மட்டும் இருக்கின்றார். நீ உனக்கு மகிழ்ச்சி தரும் எதையும், உனது அடையாளங்களை முன்னிட்டு மறைத்து வைக்கத்தேவையில்லை என்கின்ற நம்பிக்கை வார்த்தைகளை ராதா கொடுக்க, அர்ஜீயின் நண்பரான செர்கானோ அவரது பாலினத்தை மறைக்கத்தேவையில்லை என்று உடல் சார்ந்த மர்மங்களை அவிழ்த்து வைக்கவும் உதவுகின்றார்.
அர்ஜீயின் அம்மாச்சி (பாட்டி) அவரது தந்தையாரை இனவாதத்திற்கு 50களில் பலிகொடுத்தவர் என்பதால், அவர் சிங்கள மக்கள் மீதான வெறுப்பில் இருக்கின்றார். அதன் நிமித்தமே அவரின் மகளான ராதா சிங்களப் பையனை விரும்பியபோதும், அதைத் தடுத்து நிறுத்துகின்றார். அத்துடன் கொழும்புப் பகுதியில் இனத்துவேஷம் இறுக்கமடைந்திருக்கும் சூழலில் கூட, தனது தமிழரென்ற அடையாளத்தை மிகப்பெருமையாக முன்வைக்கின்ற நெஞ்சுரமும் வாய்ந்தவர் அவர்.
அர்ஜீயின் தந்தை கொழும்பில் ஒரு ஹொட்டலைச் சொந்தமாக வைத்திருக்கின்றார். அங்கு பணிபுரிய வடக்கிலிருந்து(?) ஒரு இளைஞன் கொழும்புக்கு வருகின்றார். யாழில் இருந்தால் அங்கு முளைத்துவரும் இயக்கங்களில் ஏதேனும் ஒன்றுக்கு போய்விடுவார் என்பதால் கொழும்பில் அர்ஜீயின் குடும்பம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றது. அந்த இளைஞன் ஹொட்டலில் ஒரு நல்ல நிலையை அடையும்போது, அங்கே வேலை செய்யும் சிங்களவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். தரத்திற்கு ஏற்ப மதிப்பளிக்காத சிங்களவர்கள் என அந்த இளைஞன் திட்டும்போதும், என்ன செய்வது சிங்களவரோடு பணிந்துபோய்த்தான் வாழவேண்டுமென அர்ஜீயின் தந்தை அவனுக்கு அறிவுரை கூறுகின்றார்.
இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1979 இல் கொண்டுவரப்படும் தீவிரவாத சட்டத்தினால் (Prevention of Terrorism Act (PTA), இற்றைவரை இலங்கையில் இது இருக்கின்றது. கடந்த வருடங்களில் ராஜபக்ஷேக்கள் இதை இன்னொரு பெயரில் இறுக்கமாக மாற்ற முயற்சித்திருந்தனர்) அந்த அப்பாவி இளைஞன், எண்ணற்ற இளைஞர்களோடு சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார். இறுதியில் உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இல்லையென அந்த இளைஞனை அர்ஜீயின் தந்தை மத்திய கிழக்கிற்கு விமானத்தில் ஏற்றிவிடுகின்றார் (தீபா மேத்தாவின் திரைப்படத்தில் அந்த இளைஞன் திரும்ப யாழ்ப்பாணத்துக்கு போகின்றான். கொழும்பில் அவனோடு திரும்பும் ஒரு முதியவர், இனி எங்களுக்கு ஒரு எதிர்காலம் இல்லை, இயக்கத்தில்தான் உன்னைப் போன்ற இளைஞன் சேரவேண்டும் என்று கூறுகின்ற காட்சி வருகின்றது).
அர்ஜீ தனது பாலினத்தை, பதின்மத்தின் காதல் முகையவிழ்தல்களை ஷெர்கான் என்ற இன்னொரு பதின்மனோடு கண்டுகொள்ளும் காலத்தில், 1983 இனப்படுகொலை (இனக்கலவரம் அல்லது ஆடிக்கலவரம் என்பதற்குப் பதிலாக இனப்படுகொலை என்பது இங்கே பாவிப்பது, அந்தக் காலத்தில் தமிழர்கள் எதிர்த்தாக்குதல் எதையும் நடத்தாமலே கிட்டத்தட்ட 2000-3000 இற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலே கொல்லப்பட்டார்கள்) நிகழ்கின்றது. அதன் நிமித்தம் அர்ஜீயின் குடும்பத்தினரின் உடைமைகள் சூறையாடப்பட்டு, உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு தப்ப ஓட, அவர்களுக்கு -அன்றையகாலத்தில் பல தமிழர்க்கு அடைக்கலம் கொடுத்த- சிங்கள மக்களே இவர்களைப் பதுக்கி வைத்துக் காப்பாற்றுகின்றனர். இறுதியில் இனப்படுகொலை நடந்த சில மாதங்களில் இலங்கை என்ற தன் சொந்தநாட்டையும், ஷெர்கான் என்கின்ற காதலனையும் கைவிட்டு அர்ஜீ ரொறொண்டோவிற்கு வந்து சேர்வதோடு கதை முடிகின்றது.
2.
இந்த நாவலுக்கும், அதைத் திரைக்கதையாக மாற்றும்போது எவையெவை தவறவிடப்பட்டிருந்தன என்பதை, தீபா மேத்தா இயக்கிய 'விசித்திரமான பையனை'ப் பார்க்கும்போது இந்த இரண்டையும் வாசித்த/பார்த்தவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு சிறந்த நாவலைத் திரைப்படமாக்கும்போது, ஏற்கனவே அந்த நாவலை வாசித்துப் பிடித்தவர்களுக்கு, எப்படியோ நிறைவின்மை வரத்தான் செய்யும். நாவலை வாசிக்கும்போது நம் மனதுக்கு விரித்துப் பார்க்கும் மிகப்பரந்த வெளி இருக்கின்றது. அதையே திரைப்படமாக்கும்போது நாம் விரித்தும்/விவரித்தும் பார்த்தவை சட்டகங்களுக்குள் ஒற்றைத்தன்மையாக அடைபடும்போது சலிப்பு வருவதும் இயல்பே. ஆகவேதான் காப்ரியல் மார்க்வெஸ் இறுதிவரை தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை (One Hundred Years of Solitude) திரைப்படமாக்க அனுமதி கொடுக்காதிருந்தவர். சல்மான் ருஷ்டியோடு தீபா மேத்தா திரைக்கதையாக்கியிருந்தாலும் 'Midnight's Children' திரைப்படமானபோது அபத்தமாக ஆகியிருந்தது.
ஒரு நல்ல புதினமான 'விசித்திரமான பையனை' திரைப்படமாகக் கொண்டுவருவதற்கு இயன்றளவு தீபா மேத்தா முயன்றிருக்கின்றார். மீரா நாயர், அபர்ணா சென் போன்றவர்களின் திரைப்படங்கள் கவர்ந்த அளவுக்கு தீபா மேத்தாவின் திரைப்படங்கள் என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. தீபா மேத்தாவின் திரைப்படங்கள் கவனிக்கப்படுகின்றவைக்கு அவர் சர்ச்சைக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதாலே தவிர அவரின் நெறியாள்கையினால் அல்ல என்பதை அவரின் திரைப்படங்களை முன்வைத்தே எளிதாக அறியமுடியும்.
அவரின் அதிகம் கவனம் பெற்றதான Water, Earth போன்ற திரைப்படங்கள் நாவலாசிரியையான Bapsi Sidhwa எழுதிய நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது Midnight's Children, Funny Boy போன்றவையும் ஏற்கனவே நாவல்களாக வந்து வரவேற்பவைப் பெற்றவைதான். இந்த 'விசித்திரமான பையன்' எப்படி நாவலிலிருந்து நல்லதொரு திரைப்பட அனுபவமாக மாறியதோ, இல்லையோ என்பதை இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்க்காய் விடுவோம்.
நாவலில் இருந்து திரைப்படமாக்கும்போது சற்று 'அரசியலை'க் கலக்கவேண்டும் என்ற கட்டாயத்திலோ என்னவோ, 1983 இனப்படுகொலை நடப்பதற்கு முன் இயக்கம் (புலிகள்?) சிங்கள மக்களைப் படுகொலை செய்வது போல ஒரு காட்சி வருகின்றது. நானறிந்தவரை 1983 இன் பிந்தான் நமது இயக்கங்கள் தறிகெட்டு அப்பாவி மக்களின் பலிகேட்டு அலைந்தனவே தவிர எந்த இயக்கமும் 1983 முன் இயக்கம் சார்ந்து படுகொலை செய்யவில்லை என்றே அறிகின்றேன் (1980களில் இயக்கத்தில் இணைந்த நண்பரும் இதை உறுதியளித்திருந்தார்). அவ்வாறு 1983 வரை இப்படி சிங்கள அப்பாவிமக்கள் மீது தாக்குதல்கள் நடக்கவில்லை என்றால் இத்திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சிவருவது அரசியல் discourseஐ மாற்றுவதைப் போன்றதாகும். கண்டிக்கவேண்டிய ஒரு காட்சியும் கூட.
இப்போது இந்த் திரைப்படம் குறித்து வரும் சர்ச்சைகளுக்குள் வருவோம். அதைத் தனியாக ஒரு பதிவாக எழுதமுடியும் என்பதால் நாம் இந்தத் திரைப்படம் குறித்து உரையாடப்படும் இரண்டு முக்கிய புள்ளிகளை மட்டும் பார்ப்போம்.
(1) தமிழ்ப் பாத்திரங்களுள்ள இத்திரைப்படத்தில் எந்த தமிழ் நடிகர்களும் நடிக்கவில்லை,
(2) இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் உரைடால்களில் தமிழைக் 'கொலை' செய்து பேசுவது.
இன்று உலகமெங்கும் பாத்திரங்களுக்கேற்ப அந்த அடையாளங்களோடு நடிகர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்கின்ற குரல்கள் உறுதியாக ஒலிக்கத் தொடங்கிவிட்டன. முக்கியமாக ஒரு கறுப்பினப் பாத்திரத்துக்கு ஒரு வெள்ளையின நடிகர் இனி நடிக்கவே முடியாது மாதிரி நிலைமை வந்துவிட்டது. ஏனெனில் இன்று BIPOC (Black Indigenous People Of Color) என்கின்ற சிறுபான்மையினரை எல்லாச் சூழல்களில் அடையாளப்படுத்தவேண்டும் என்ற உரையாடல்கள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் ஒரு தமிழரரை அல்லது தமிழ் தற்பாலினரை அடையாளப்படுத்தும் பாத்திரங்களை வேறு எவரும் அவ்வ்வளவு கவனம் எடுத்து எழுதப்போவதுமில்லை. ஆகவே இவ்வாறான மிகக்குறைவான இடங்களே உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் பாத்திரங்களுக்கு அவர்களையே நடிக்கவைக்க வேண்டும். இது இன்னொருவகையில் நமது அடுத்த தலைமுறை பல்வேறு துறைகளுக்குள் நுழைவதற்குக் களங்களைத் திறந்துவிடுவதும் கூட.
ஒரு உதாரணத்துக்கு இங்கு வளார்ந்த ஒரு தமிழ்ப்பிள்ளை இங்குள்ள திரைத்துறைக்குள் புகுவதற்கு அந்தப் பிள்ளைக்கு இவ்வாறான நாவல்கள் திரைப்படமாக்கும்போதுதான் மிகப்பெரும் வாயில் திறக்கப்படுகின்றது. ஆனால் அங்கே கூட வேறொரு பிறிதொரு அடையாளத்தில் உள்ளவர் தேர்ந்தெடுக்கப்படும்போது இது அந்தச் சந்தர்ப்பம் இந்த பிள்ளைக்குத் தடுக்கப்படுகின்றது. ஆகவே இத்திரைப்படத்துக்கு இந்த விடயம் சார்ந்து (Tamil Casting - தமிழ் நடிகர்கள் அதற்குரிய பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்) எழும் எதிர்ப்புக்குரல் மிக முக்கியமானது. அது மிகச் சரியானதுங்கூட.
இந்த எதிர்ப்பு சார்ந்து ஒரு எள்ளல் கதையான 'யாழ்ப்பாணச் சாமி'யை எழுதிய ஷோபாசக்தி கூட, அவர் 'தீபன்' என்ற திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்கப்பட்டபின் தான் அவருக்கு வாயில்கள் பல திறக்கப்பட்டன. அதே 'தீபன்' திரைப்படத்தில் இலங்கை நாயகன் பாத்திரத்துக்கு ஒரு ஆங்கிலயரோ/பிரான்ஸ்காரரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் ஷோபாசக்தி ஒரு நடிகராக இன்றிருப்பதுபோல ஒருபோதும் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கவே மாட்டார். ஆனால் என்ன முரண்நகை என்றால் அவர் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டு, அதே போல மற்ற நடிகர்களும் அது சார்ந்த பாத்திரங்களுக்கு பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென எதிர்ப்புக்குரல் எழும்போது ஷோபாச்கதியே நக்கலாக ஒரு கதையை எழுதிப்போகின்றார் என்பதுதான்.
ஆனாலும் என்ன, நமக்கும் நடிப்புக்கும் வெகுதூரம் என்றாலும், எமக்கு இந்த விடயம் சார்ந்து ஒருபோதும் அனுகூலங்கள் கிடைக்கப்போவதில்லை என்றபோதும், எம்மால் கொஞ்சம் திறந்தமனதோடு சிந்திக்கமுடிகின்றது என்பதால் ஷோபாசக்தி 'தீபனில் நடித்ததற்கு சந்தோசப்பட்டது போல, மற்றவர்களுக்கும் இதன் வாயில்கள் திறக்கப்படவேண்டும் என்று குரல் கொடுப்போம் ('தீபனில் ஷோபா நடித்தது மகிழ்ச்சி என்றாலும், அந்தத் திரைப்படம் அபத்தமானது என்பதைப் பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்).
இந்த விடயத்தில் நமது அஷோக ஹந்தகம சொன்ன கருத்துக்கு இப்போது வருவோம். அவர் முட்டாள்தனமாக 'காந்தி படத்தில் பென் கிங்ஸி நடித்திருக்கின்றார். எனவே திரைப்படங்களை கலையின் அளவீடுகளினூடு மதிப்பிட வேண்டும் ("Kingsly played Gandhi, in the film Gandhi. A film should be reviewed on artistic merits." ) என்கின்றார். இது எவ்வளவு அபத்தமான பார்வை என்பதை அஷோக ஹந்தகம உணர்வாரோ தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் பென் கிங்ஸி மாதிரியான ஒரு வெள்ளையினத்தவர் காந்தி பாத்திரத்தில் நடிக்கவே முடியாது. அப்படி ஒருவர் நடித்தால் மிகப்பெரும் எதிர்ப்பு இந்தியாவில் மட்டுமில்லை, உலககெங்கும் இருந்து எழும். ஏற்கனவே ஒரு சிறுபாடலில் கறுப்பினப் பாடகியான பியான்ஸே இந்திய ராணியாக நடித்து பாடலாக்கியமைக்கே மிகப்பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்திருக்கின்றார்.
Life of Pi திரைப்படமாகியபோது இந்தியப் பாத்திரங்களுக்கு வெள்ளைக்கார நடிகர்களா (தமிழ் பேசும் பாத்திரமான பட்டேல் பாத்திரத்துக்கு ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்கின்றபோதும்) நடித்தார்களா என்ன?ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படங்களை, சமகாலத்தில் எவ்வளவோ விடயங்கள் மாறிவிட்டபின் இப்படி முட்டாள்தனமாக ஒப்பிடுவது என்பது அஷோக ஹந்தகமவின் அரசியல் பிரக்ஞை குறித்த கேள்விகளை எழுப்புகின்றது. அத்தோடு அதே பதிவில் தனது திரைப்படத்தில் தமிழ் நடிகர்களை நடிக்கவைத்தும் ரொறொண்டோவில் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். அவரின் 'இனி -அவனை' நாம் எதன்பொருட்டு எதிர்த்தோம் என்பதை என்னைப் போன்றவர்கள் 'இனி- அவன்', 'இது எனது பெளர்ணமி' (Me Mage Sandai) போன்ற அவரின் திரைப்படங்களுக்கு எழுதிய விமர்சனங்களை அவருக்கு யாரேனும் தமிழ் தெரிந்த நண்பர்கள் வாசித்துக் காட்டினால் நன்று.
இரண்டாவது சர்ச்சைக்குரிய கருத்து: தமிழ் ஒழுங்காகப் பேசப்படவில்லை/உச்சரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு. அதிலும் உண்மை இருக்கின்றது. பலர் தமிழில் பேசும்போது என்ன பேசுகின்றார்கள் என்று விளங்கவே இல்லை. ஏதோ தமிழை கூகிள் டிரான்ஸிலேட்டரில் போட்டு எடுத்தமாதிரிப் பேசுகின்றனர். இலங்கை என்ற நாட்டில் தமிழ் பேசுகின்றவர்களாக இருந்த ஒரே காரணத்துக்காய் ஒடுக்கப்பட்டு, இந்த நாவலின் உச்சப்பகுதியான 1983-படுகொலைகளும் தமிழ் என்ற அடையாளத்துக்காய் நிகழும்போது,, இந்த 'மொழிக் கொலை'யையும் எளிதில் கடந்து செல்லமுடியாது. இன்னும் இதில் அக்கறை நிச்சயம் கொடுத்திருக்கவேண்டும்.
இங்கே அம்மாச்சியாக வரும் சீமா பிஸ்வாலுக்கு சுமதி குரல் கொடுப்பது மட்டுமே நன்றாக இருக்கின்றது என்பதைத் தவிர்த்து மிகுதிப் பாத்திரங்களின் தமிழ் உச்சரிப்புக்கள் சகிக்கமுடியாதிருக்கின்றது. தமிழ் பேசும் என்னைப் போன்றவர்களே அதற்காய் subtitle யே நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது. இதே சீமா பிஸ்வாலின் அம்மாச்சி பாத்திரத்துக்கு, குரல் கொடுத்திருந்த சுமதியே நடித்திருந்தால் இரண்டுமே சிறப்பாக வந்திருக்கக்கூடும். இப்படி பொருத்தமான அடையாளங்களுடன் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கப்படாமையே இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலவீனமாகும்.
இறுதியாக எத்தகைய படைப்பாக இருப்பினும் அது தடை செய்யப்படவேண்டும் என்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் அபத்தமான கலையாக்கங்களுக்கு எதிராக நாம் உரையால்களைச் செய்யவேண்டும். அதுதான் ஜனநாயகச் சூழலில் செய்யப்படவேண்டியது, இன்றைய உரையாடல்கள் நாளை இப்படி ஒரு திரைப்படம் எடுக்கப்படும்போது இன்னும் பொறுப்புடன் இவ்வாறான விடயங்களில் அதன் நெறியாளர்களைக் கவனமெடுக்க வைக்கும்.
இத்திரைப்படம் சார்ந்து தமிழ் நடிகர்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படாமை, தமிழ் உச்சரிப்புக்களில் கவனமின்மை போன்ற இந்த இரண்டு முக்கிய காரணங்களுக்காகவும், மூன்றாவது முக்கிய காரணமான
Disregard for the Queer Tamil Identity
" Tamil life. For us, racial anti-Tamil violence is inextricably linked to homophobia in Sri Lanka and around the world. Homosexuality remains illegal in Sri Lanka and public homophobic violence includes abuses by police, military, judicial and medical officers. Tamils in the diaspora are also subject to violent homophobia. Within Tamil communities, entrenched homophobia means many of us have been disowned, shunned, and ostracized because of who we are and who we love. Mainstream groups like the Canadian Tamil Congress (CTC) do not speak for us. Outside the community, the recent serial murders of brown men in Toronto are a tragic illustration of our continued vulnerability to public racist homophobic violence." ஐயும் சேர்த்து நமது Queer Tamil Collective நண்பர்களுடன் இணைந்து எனது எதிர்ப்பையும் இங்கே பதிவு செய்துகொள்கின்றேன்.
...............................................
(Dec 05, 2020)
0 comments:
Post a Comment