கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Searching for Sheela

Wednesday, May 26, 2021

1.

வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களுக்காய் எத்தனை பேரின் வாழ்வு தாரை வார்க்கப்பட்டிருக்கும் என்பது குறித்து அடிக்கடி யோசிப்பதுண்டு. அவர்கள் உண்மையில் அதைத் தாங்களாகத் தேர்ந்தெடுக்கின்றார்களா அல்லது சந்தர்ப்பங்கள் அவர்களை அப்படியானவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றதா என்பதும் குழப்பமானதுதான். .

ஓஷோவை அறிய வரும்போதெல்லாம் ஷீலாவின் பாத்திரத்தை மறக்கமுடியாது ஒருகாலத்தில் ஓஷோவிற்கு நெருக்கமாக இருந்த ஷீலாவைக் காலம் மறுமுனையில் வைத்துப் பார்க்கும் சோகமான சூழலும் வந்தது. ஆனால் ஷீலா ஓஷோவை விட்டுக்கொடுக்காது இப்போதும் பகவான் என்றே மரியாதையுடன் பேசுகிறார். ஓஷோவிடம் தான் போனது ஆன்மீகத்திற்கோ, பரிநிர்வாணத்திற்கோ அல்ல என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

'பகவானிடம் ஒரு intangible product இருந்தது. எனக்கு அதை marketing செய்ய நன்றாகத் தெரிந்தது. அதுதான் enlightenment என்கின்றார். இதுதான் ஷீலா. அவர் அதை வியாபாரமாக்க எல்லாவற்றோடும் சூதாடினார். இதனால் அவரது வாழ்க்கை மட்டுமில்லை அதனோடு ஓஷோவின் வாழ்க்கையும் திசைமாறியது. எந்த நிறுவனப்பட்ட மதமும்/ஆன்மீகமும் இந்தப் பாதையைத்தான் சென்றடையும் என்பதும் இயல்பானதே..

அது ஓஷோவிற்குப் பெரியளவில் நடந்தது. விசிறி சாமியார் என்கின்ற யோகி ராம்சுரத்குமாருக்கு குறைந்த அளவில் நடந்தது. ரமணருக்கு அவருக்குப் பிறகு வைதீகத்தில் அவரைப் புதைத்துக்கொள்ள அது வேறுவகையில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரளவு தப்பியவர் ஜே.கிருஸ்ணமூர்த்தி. அதுகூட அவர் நிறுவனமாதலை தனது ஆயுட்காலத்தில் உடைத்தெறிந்ததால் தப்பியவர்.

2.

உங்களை ஓஷோ நீங்கள் அவரது ஆச்சிரமத்தில் இருந்து வெளியேறியபின், ஏன் அப்படி வெறுத்தார் என இந்த ஆவணப்படத்தில் கேட்கப்படுகிறது. அதற்கு ஷீலா, இது ஒரு மனிதர் இன்னொருவரை அளவுகடந்து நேசிப்பதால் வந்த பிரிவின் நிமித்தம் வரும் வெறுப்பேதான். பிறகு பாருங்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு என்னைப்பற்றி வேறுமாதிரியாகச் சொல்கின்றார் என்கின்றார்..

இருவருக்குமிடையில் இருந்த காதல், (அல்லது ஷீலாவுக்கு மட்டுமே இருந்ததாய் இருந்தால் கூட என்ன) இணையொன்று பிரிந்தபின் கூட அழகாய் இருப்பது அபூர்வம். ஷீலா தன் நித்திய காதலரை விட்டுக்கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை. ஆகவேதான் அதே நேசத்தோடும், மதிப்போடும் இப்போதும் ஒஷோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஓஷோ அவருக்கு ஒரு காதலர்தான். அதற்கப்பால் ஓர் ஆன்மீகக் குருவோ அல்லது பரிநிர்வாணத்திற்கு அழைத்துச் செல்லும் பயணியோ அல்ல.

நமக்கு நம்மிடமிருந்து விடைபெற்ற காதலிகளை இன்னமும் மதிக்கவும், நமக்குத் தந்தவைகளுக்காய் அவர்களை வெறுக்காதிருக்கவும் முடியுமெனில் அது பேரின்பம். அதேபோல ஓஷோவை எந்தளவுக்குப் பிடிக்கிறதோ, அந்தக் கதகதப்போடு ஷீலாவை நேசிக்கமுடியாவிட்டால் கூட அவரை வெறுக்கமுடியாது. எத்தகைய சர்ச்சைக்குரியவராக இருந்தபோதுங்கூட. ஷீலா ஓஷோ கூறிய authentic ஆன ஒருவாழ்க்கையை வாழ்ந்தவர்/வாழ்ந்துகொண்டிருப்பவர்.

ஷீலா ஓரிடத்தில் சொல்வார், எனக்கான எந்த வரலாறும் எழுதப்படவில்லை. எழுதப்பட்ட எல்லாமே பகவானின் வரலாறுகள்தான் என்று. ஆனால் ஓஷோவிற்காய் எழுதப்படும் எந்த வரலாறும் ஷீலா என்ற பாத்திரம் இல்லாது ஒருபோதும் முழுமையடையப் போவதுமில்லை என்பதே உண்மை..

.............................

(Apr 24, 2021)

0 comments: