கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சோ.தர்மனின் 'பதிமூனாவது மையவாடி'

Monday, June 21, 2021

 

சிறுவர்கள், பதின்மர்களாகி இளைஞர்களாவது பற்றி நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன. சோ.தர்மனின் 'பதிமூனாவது மையாவாடி' கருத்தமுத்து என்கின்ற சிறுவன் இளைஞனாகும் பருவத்தைப் பின்பற்றிப் போகின்றது. ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்புப் படிப்பதற்காய் கிறிஸ்தவப் பாடசாலைக்குப் போகும் கருத்தமுத்து விடுதியில் தங்குகின்றான். அங்கிருந்து அவனது வாழ்வு படிப்பு என்பதோடு அல்லாது, மனிதர்களை, புதிய சூழலை அறிவதென வெவ்வேறு திசைகளில் நீள்கிறது. விடுதியிற்கு அண்மையில் அமையும் மையவாடி அவன் வாழ்க்கையின் பெரும்பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போதிமரத்தைப் போல அமைகின்றது. அங்கு பிணங்களை எரிக்கும் அரியான் பல்வேறு விடயங்களில் மிகச் சிறந்த ஓர்  'ஆசிரியராக' அமைகின்றார்.

 

பாடசாலைக் காலத்திலே ஒரு சில பாதிரிமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் கண்டுகொண்டாலும், இந்துப் பின்னணியில் வந்த கருத்தமுத்துக்கு பாதர்மார்களின் சுரண்டல்களும், கன்னியாஸ்திரிகளின் பாலியல் வறட்சியும் கண்களுக்கு அதிகம் உறுத்துகிறது. கர்த்தரரின் பொருட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்த அவர்களின் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்படுகின்றது. கருத்தமுத்து தனக்கான காமத்தைக் கண்டுகொள்கின்ற மூன்று பெண்களும் கிறிஸ்தவப் பின்னணியில் இருப்பதும் தற்செயலாகவே அமைந்தென்றே வாசிப்பு மனம் எண்ணட்டுமாக.

 

பாதிரிமார்கள் குடும்பப் பெண்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். சாமர்த்தியமாய் குடும்பங்களைப் பிரிக்கின்றார்கள். அதிகார வேட்கையில் மக்களுக்கான சேவையைச் செய்யாது தமக்குள் அடிபடவே பொழுதுகளைப் பார்க்கின்றார்களென கருத்தமுத்துவினூடாக சோ.தர்மன் ஒரு சித்திரத்தை வாசிக்க வைக்கின்றார். அதன் உச்சபட்சமாக 2% இருக்கும் கிறிஸ்தவர்கள், நாட்டில் 40% கல்வி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களென பிரச்சாரம் போல அடிக்கடி கதாபாத்திரங்கள் அலுக்குமளவுக்கு பேசிக்கொள்கின்றார்கள்.

 

இத்தனைக்கு அப்பாலும் ஏதோ ஒருவகையில் சாதியாலோ அல்லது வசதி வாய்ப்பில்லாமலோ ஒரு இந்துவைக் கல்வி கற்பதற்கான வசதிகளைக் கொடுத்துக்கொண்டிருப்பது ஒரு கிறிஸ்தவ பாடசாலை என்பதைப் போகின்றபோக்கில் -அழுத்தமாக அதைப் பேசாது கதைக்காது- கடந்து போகின்றபோதுதான் நாவலின் 'அரசியல்' உறுத்தச் செய்கின்றது.

 

ருத்தமுத்துவினூடாகவும், அவர் சந்திக்கும் பாத்திரங்களினூடாகவும் கிறிஸ்தவ நிறுவனங்கள் விமர்சனம் செய்யப்படுவது தவறுமல்ல. நிறுவனமாக்கப்படும் எந்த மத/கல்வி அமைப்பும் பின்னர் அதிகாரத்திற்குள்ளும், பாலியல் சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்படுவது கிறிஸ்தவ மதத்தில் மட்டுமில்லை, புத்தமடலாயங்களிலும் நடைபெறுபவைதான். இந்து மதத்தில் நடைபெறுபவற்றை எல்லாம் சொல்லவேண்டியதில்லை. இந்து மதம் ஒர் முழுமையான அதிகாரத்திற்குள் (வத்திக்கான் போன்று) இல்லாதிருப்பதால் இந்தளவுக்கு ஊழல்களும் சுரண்டல்களும் நடைபெறுவதிலிருந்து ஒரளவுக்குத் தப்பியிருந்தாலும், நமது சாமியார்களின் கதைகளையும், காமகோடிகளின் அறிவுரைகளையும்  தொடர்ந்து அறிந்தபடியேதானே இருக்கின்றோம்.

 

நிறுவனப்பட்ட மதங்களான கிறிஸ்தவம் போன்றவை விமர்சனங்களிலிருந்து தப்பவேண்டியதில்லை. ஆனால் அதை அரசியல் பிரச்சாரமாக்காமல் இயல்பிலே கதையைச் சொல்லிச் சென்றிருந்தால் இந்த நாவல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் ஏஞ்சல் தனது கன்னியாஸ்திரி ஆடையைத் துறந்து சேவைக்காகவும், கருத்தமுத்துக்காகவும் திருச்சபையிலிருந்து வெளியே வருகின்றார். இவ்வாறான ஒரு சில சம்பவங்கள்தான் இந்த நாவலை ஒரளவு சாய்வின்றி வாசிக்க முடிகின்றது. இந்த நாவலில் இடதுசாரி நம்பிக்கையுள்ளவர்களாய் வரும் இளைஞர்களை ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கும் வன்முறையாளர்களாக மட்டும் சித்தரித்து பொலிஸ் ஜீப்புக்களில் ஏற்றப்படுபவர்களாக காட்டப்படுவது சற்று அச்சமூட்டுவதுங்கூட.  பாஞ்சாலைத் தொழிலாளியாக (அறிமுகத்தில்) 20 வருடங்களாக இருந்த சோ.தர்மனா இப்படியெல்லாம் எழுதுவது என்று நமக்கு வியப்பு வருகின்றது.

 

சோ.தர்மனின் 'கூகை' வாசித்தபோது நானடைந்த வியப்பு இன்னும் மறக்காமல் இருக்கின்றது. 'சூல்' கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியவுடன் என்னை உள்ளிழுக்காதுவிட்டதனால் நிறுத்திவைத்திருக்கின்றேன். 'பதிமூனாவது மையவாடி' பிரச்சாரத்தன்மைக்கு முன்னிடம் கொடுத்ததால் கலைத்தன்மையை அதன்போக்கிலே இழந்துவிடுகின்ற அபாயத்தையும் அடைகிறது.

 

ஒருவர் தன் மதத்தை எப்படி நேசிக்கின்றார் என்பது இன்னொரு மதத்தின் மீதான சகிப்புத்தன்மையில் இருக்கிறது என்று கூட ஒருவகையில் மதிப்பிட்டுக்கொள்ளலாம். இன்னொரு மதத்தை வெறுத்துக்கொண்டு, நாம் சார்ந்திருக்கும் மதங்களை எப்படியேனும் காப்பாற்றிவிடமுடியாது. அதனால் எந்த ஆன்மீக ஈடேற்றந்தான் நடந்துவிட முடியும்? ஒரு மத நம்பிக்கையாளரை விட இலக்கியவாதிக்கு நிச்சயம் விரிந்த மனதுதான் இருக்கும். இங்கே சோ..தர்மன் ஓர் இலக்கியவாதியாக அல்ல, ஒரு மத நம்பிக்கையாளராக தன்னை நிரூபிக்க முயற்சித்து தோற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகமானது. அது அவருக்குரிய அடையாளம் இல்லை என்பதை நாம் மட்டுமில்லை அவரது இலக்கிய மனமும் நன்கறியும்.

 

..............................


(Jan 29, 2021)

0 comments: