கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சி.மோகனின் 'கமலி'

Sunday, June 27, 2021

வ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் இணையவெளியில் சந்திக்கொள்ளும் நிகழ்வில் புதிதாய் ஒரு நண்பரை இணைத்திருந்தோம். அவர் ஆபிரிக்காவில் இருந்த நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழ்ந்தவர். எனவே அவர் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர எங்களுக்கு அது மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அவர் இருந்த நிலப்பரப்பில் ஒரு இனக்குழுமத்தில் பெண்கள் முதலில் வெவ்வேறு ஆண்களுடன் இரு குழந்தைகளைப் பெற்றபின்னரே 'திருமணம்' என்ற பந்தத்தில் இணைந்துகொள்வது ஒரு பண்பாடாக இருந்தது எனச் சொன்னார். ஆகவே இவர் தனது ஒரேயொரு காதலியை மணந்து அவரோடு மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனச் சொன்னபோது எங்கள் கலாசாரம் குறித்து அங்கிருந்த பெண்களுக்கு இப்படியுமா எனப் பெரும் வியப்பாக இருந்தது என்றார்.


மனிதர்கள் உண்மையிலே polygamy இயல்புத்தன்மை உடையவர்கள், ஆனால் ஒழுக்கம்/அறம் போன்றவற்றால் monogamyஇற்குள் தங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள் என்ற உரையாடல் நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கின்றது. தமிழில் தி.ஜானகிராமனின் பெரும்பாலான நாவல்கள் மனிதர்களுக்கு இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை விசாரணை செய்கின்றதாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு கமலி என்கின்ற திருமணமான பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பால் வரும் இன்னொரு உறவைப் பின் தொடர்ந்து செல்லும் ஒரு குறுநாவலாக சி.மோகனின் 'கமலி' இருக்கின்றது.

கமலி என்கின்ற கமலாம்பிக்கை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முதுகலை படித்தவர். அதுவரை அவ்வளவு பிரபல்யம் இல்லாதிருக்கும் ஜோசியக்காரரான கமலியின் தந்தை கமலியின் வருகையோடு புதிய உயரங்களை அடைகின்றார். தனது மகள் பிறந்த அதிஷ்டமே தனது வாழ்வு செழித்தது என்று நினைக்கின்ற தந்தை, கமலிக்கு சல்லடை போட்டு ஒரு பொருத்தமான கணவனையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார். இவர்களுக்கு நந்திதா என்கின்ற குழந்தையும் இருக்கும்போது, கமலிக்கு அவரின் கணவர் ரகுவரால் அறிமுகப்படுத்தப்படும் அவரை விட 16 வயதான கண்ணனோடு ஒரு இயல்பான போக்கிலே ஓர் உறவு முகிழ்ந்துவிடுகின்றது.

திருமணம் என்ற இறுக்கமான அமைப்பில் மட்டுமில்லை, காதல் என்கின்ற 'எல்லாச் சுதந்திரமும்' இருக்கின்ற நிலையில்கூட, ஒரு கட்டத்திற்குப் பிறகு பலருக்கு அவர்களுக்கிடையில் இருக்கும் உறவென்பது அலுத்துப்போவதை நாம் பார்த்திருக்கின்றோம். இங்கே திருமணம் என்கின்ற அலுப்பான வாழ்க்கையிற்குள் சில வருடங்களுக்குள் நுழைகின்ற கமலிக்கு ரகு ஒரு திறப்பை உண்டாக்கின்றார். இந்த ஜென்மம் உன்னோடு தொலைபேசியில் பேசியபடி மட்டும், அடுத்த ஜென்மம் நாம் விரும்பியமாதிரி இணைந்து வாழலாம்' என்று சொல்கின்ற கமலிக்குப் பிறகு உடல் சார்ந்த பகிர்தல்களும் கண்ணனுடன் நிகழ்கின்றன.

ந்த நாவலை நேரடித்தன்மையில் சி.மோகன் இந்த மனிதர்களின் அன்றாடங்களுக்குள் நுழைந்து எழுதிச் செல்கின்றார். தொடக்கத்தில் சற்று கட்டுரைத்தன்மை போலத் தொய்வு ஏற்பட்டாலும், பின்னர் நாவல் சுவாரசியமான நடைக்குள் புகுந்துகொள்கின்றது. அதேபோன்று தமிழில் இதேபோன்ற வகைப்பாட்டில் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை சி.மோகன், கமலியினதும், கண்ணனினதும் ஊடாக தி.ஜானகிராமனின் நாவல்களைப் பேசவைக்கின்றார். 'அம்மா வந்தாள்', 'அடி' மட்டுமல்ல, தி.ஜாவின் முழுநாவல்களையும் வாங்கி வாசித்துப் பார்க்கின்றவராக கமலியின் பாத்திரம் இங்கே சித்தரிக்கப்படுகின்றது.

தி.ஜானகிராமனின் 'அடி' என்கின்ற அவரின் இறுதிநாவலை வாசித்த நமக்கு தி.ஜா அதுவரை எழுதிய நாவல்களிலிருந்து இதில் வேறொரு முடிவை எடுத்திருப்பது நன்கு தெரியும். 'அடி'யில் வரும் திருமணமான செல்லப்பாவிற்கு, பட்டு என்கின்ற அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு வருகின்றது. பின்னர் அதை செல்லப்பாவின் மனைவி மங்களம் கண்டுபிடிக்கின்றபோது, தனது 'குற்றத்தை' ஒப்புக்கொண்டு எல்லோரு முன்னும் பாவமன்னிப்புக் கேட்கும் ஒரு பாவியைப் போல இறுதியில் செல்லப்பா ஆகிவிடுகின்றார்.

ஆனால் சி.மோகனின் 'கமலி'யில் எந்தப் பொழுதிலும் கமலி தன் திருமணத்துக்கு அப்பாலான உறவு குறித்து மனச் சஞ்சலமோ, குற்ற உணர்வோ அடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த இன்னொரு உறவுக்காய், தனது கணவனான ரகுவையையோ, அங்கே தானொரு இராணி போல இருக்கும் சிம்மாசனத்தையோ விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லாத ஒரு பெண்மணியாகவே இருக்கின்றார். முக்கியமாய் அவரின் கணவர் ரகுவுக்கு, இப்படி ஒரு மேலதிக உறவு கமலிக்கு இருக்கிறது என்று சந்தேகம் வரும்போதெல்லாம் சாமர்த்தியமாய் அவற்றையெல்லாம் இல்லாமற் செய்து, என்றுமே தான் ரகுவின் நம்பிக்கைக்குரிய மனைவிதான் என்பதை கமலி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

இறுதியில் ஏற்படும் முடிவு கூட கமலி தன்னியல்பிலேயே ஏற்றுக்கொண்டதுதான். அது குறித்துக் கூட அவருக்கு எந்தக் குற்றவுணர்ச்சியோ தயக்கங்களோ இல்லை. ஆகவே அது அவருக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. 'அடி'யில் வரும் செல்லப்பா போல அவர் எவர் முன்னும் மண்டியிடாமலே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார். மிக ஆச்சாரமான, அம்பாள் பக்தையான கமலாம்பிகைகளுக்குக் கூட மனம் என்னும் விசித்திரம் எதையெதையோ எல்லாம் செய்ய வைக்கின்றது என்கின்ற வியப்பு எழாமல் நாம் இந்த நாவலைக் கடந்துசெல்ல முடியாது.

'கமலி'யை வாசித்துக்கொண்டிருந்தபோது தி.ஜானகிராமனின் நாவல்கள் மட்டுமில்லை, சமகாலத்தவர்களான தமிழ்நதி எழுதிய 'கானல்வரி'யும், உமா வரதராஜனின் 'மூன்றாம் சிலுவை'யும் நினைவுக்கு வந்தபடியஏ இருந்தன. அவையும் இவ்வாறான உறவுச்சிக்கல்களையும் பேசுகின்றன, ஆனால் வெவ்வேறான தளங்களில் நின்றபடி!

கமலியை சி.மோகன் எழுதிச் செல்கின்ற நடையும், விபரிப்புக்களும் அலுப்படையச் செயயாதவை. ஆனால் இதை சி.மோகனின் உன்னத நாவலாகக் கொள்ளமாட்டேன். ஒருவகையில் இது கமலி என்கின்ற பெண்ணின் வாக்குமூலமாகக் கூட வாசித்துப் பார்க்கலாம். ஆனால் கமலி போன்ற பெண்களை நம்மைப் போன்ற ஆண்களால் முற்றுமுழுதாக உணர்ந்து எழுதிடமுடியுமா என்று கேள்வியும் இதை வாசித்து முடிக்கும்போது எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
..................................

(Mar 01, 2021)

0 comments: