கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தாய் என்னும் எனது வழிகாட்டி - 02

Friday, April 29, 2022

 

4.


வியட்னாமில் அமெரிக்கா செய்யும் யுத்தத்தை நிறுத்த, மாட்டின் லூதர் கிங்கோடு தாய் கரம் சேர்ந்தவர். மாட்டின் லூதர் கிங் அன்றையகாலத்தில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காய் தாயை பரிந்துரையும் செய்திருக்கின்றார். இவ்வாறு சமாதான நடவடிக்கையில் ஒரு புத்த துறவியாக இருந்தபோதும் ஈடுபட்டதாலேயே, அன்று அமெரிக்கச் சார்புடைய தென் வியட்னாமிய அரசால் தாய், அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவது மறுக்கப்பட்டு அகதியாக்கப்பட்டார்.


தனது சொந்த நாடு திரும்ப முடியாத அவலத்தினால், அவர் பிரான்சுக்குப் போய், பிரான்சின் தென்முனையில் plum villageஐ அமைக்கின்றார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் தாண்டிய பின்னே வியட்னாம் திரும்புகின்றார். இதற்கிடையில் அன்று 'boat people' என்று அழைக்கப்பட்ட, வியட்னாம் போரின் நிமித்தம் தப்பியோடிய, வியட்னாமிய மக்களின் துயரக்கதைகளைக் கேட்கும் ஒருவராகவும், இயன்றளவு உதவிகளை வழங்கக்கூடியவராகவும் இருந்திருக்கின்றார். அவ்வாறு படகுகளில் தப்பியவர்களை அன்றைய காலங்களில்  கடற்கொள்ளையர் கொல்வதும், பாலியல் பலாத்காரங்கள் செய்வதும் கூட நிகழ்ந்திருக்கின்றன.


அவ்வாறு ஒருநாள் தாயுக்கு, இவ்வாறு படகில் தப்பிப்போன ஒரு 12 வயதுச் சிறுமியை கடற்கொள்ளையர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றனர் என்கின்ற கொடுஞ்செய்தி வருகின்றது. அந்த நிகழ்வை ஒருபோதும் மன்னிக்கமுடியாது என்கின்ற தாய், அதற்கான பழிவாங்கல், பெருங்கோபம் என்பவற்றுக்கு அப்பால இருந்து, இந்த விடயங்களை நம்மை நிதானமாகப் பார்க்கச் சொல்கின்றார். 


அதே போல், ஒருமுறை தாய் அமெரிக்க இராணுவத்துக்கான நிகழ்வைச் செய்தபோது, வியட்னாமில் பணிபுரிந்த ஒரு இராணுவத்தினன் தனது கதையைப் பகிர்கின்றார். அவர்கள் இருந்த குழுவின் மீது வியட்னாமிய போராளிகள் தாக்குதல் கொடுத்து அழிவைக் கொடுத்தபின், இவருக்கு அவர்களைப் பழிவாங்கும் வெறி மிகுகின்றது. ஒருமுறை சாப்பாட்டில் சயனைட்டை வைத்துவிட்டு போராளிகள் வந்து சாப்பிடுவார்கள் என்று ஒளிந்து நின்று காத்திருக்கின்றார். அதை அந்த வழியால் தற்செயலாகப் போகும் சிறுவர்கள் சாப்பிட்டு 5 குழந்தைகள் இறக்கின்றனர். அவர் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் ஓலமிட்டு அழுவதுவரை மறைந்திருந்து பார்க்கின்றார். 


அதன்பிறகு இந்த இராணுவத்தினன் ஒருபோதும் குழந்தைகளோடு இருக்கமுடியாத பதற்றத்தை அடைகின்றார். குழந்தைகள் ஒர் அறைக்குள் இருந்தாலே இவரால் தாங்குமுடியாது, அந்த இடத்தை விட்டு தப்பி ஓடக்கூடியவராக இருக்கின்றார். இந்த நிகழ்வைத் தாயிற்கு அவர் கூறுகின்றார். தாய், 'நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கான பழியிலிருந்து எளிதாகத் தப்பமுடியாது. ஆனால் நீங்கள் உண்மையில் அதற்காய் வருந்துவீர்களாயின், இனியான காலத்தில் என்ன செய்யமுடியுமென யோசியுங்கள். அன்று போல, இன்றும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநியாயமாய் இறந்துபோய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் தினம் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்றும் விடயங்களில் நீங்கள் கவனம் கொள்ளலாமே' எனச் சொல்கின்றார். 


இத்தனைக்கும் தாய் அன்று வியட்னாமியர்களுக்காய், அந்தப் பிள்ளைகளைப் போன்ற பலர், போரால் கொல்லப்படக்கூடாதென்று போராடியவர். ஒரு வியட்னாமியராக இருந்தும் தாய் அமெரிக்க இராணுவத்தினனை வாஞ்சையுடனேயே அணுகுகின்றார். அதுவே தாய் நமக்குக் கற்றுத்தருகின்ற முக்கிய விடயம். சமாதானம் என்பது போரை நிறுத்துவது மட்டுமில்லை, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துக் கொள்வது மட்டுமில்லை, பாதிப்புச் செய்தவர்களையும் மன்னிக்கச் செய்கின்ற மகத்தான மானுடத்தைக் கற்றுக்கொள்ளவே எங்களை வேண்டுகின்றார். 


ஆகவேதான் படகில் வந்த சிறுமியை பாலியல் வன்புணர்ந்த கடல்கொள்ளைக்காரரான நான் கூட அந்தக் கொள்ளைக்காரன் பிறந்த இடத்தில் வளர்ந்திருந்தால் அவனைப் போல ஆகியிருக்ககூடும். ஆகவே தீர்ப்புக்களை எழுத முதல் நம்மை நாமே ஆழப்பார்க்கவேண்டும் என்று ஒரு கவிதையில் சொல்கின்றார்.


இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏன் எமக்கு இவர் இப்படிச் சொல்கின்றார் என்று எரிச்சலும், ஆற்றாமையும் கூட வரலாம். ஆனால் மிக நிதானமாக, ஆழமாக உள்ளே பார்த்தால், இந்த விடயங்கள் பிறகு இன்னும் பெரும் திரளைப் பாதிக்கும் வெஞ்சினத்தின் விதைகளைக் கொண்டிருக்கையில் அது இதைவிட மேலும் பெரும் பாதிப்புக்களைத் தந்து நமது பல சந்ததிகளையே பாதிக்கலாம் என்பது புரியவரும். 5.


'எனது உண்மையான பெயரில் என்னை அழையுங்கள்'. அப்போதுதான் உங்களால் என்னை ஆழமாகப் பார்க்கமுடியும் என்கின்றார் தாய். 


நானே உகண்டாவில் பட்டினியால் வாடும் மிக மெலிந்த குழந்தை. அதே நானே, உகண்டாவில் நடக்கும் போரில் ஆயுதங்கள் விற்கும் வியாபாரியுங்கூட. நானே வியட்னாமில் இருந்து படகில் ஏறி தப்பியோடிய குழந்தை. நானே அந்தக் குழந்தையை பாலியல் வன்புணர்ந்து கடலுக்குள் வீசிய கடற்கொள்ளைக்காரனும் கூட. 


ஆகவே என்னை எனது உண்மையான பெயர்களால் அழையுங்கள். நாம் எவராகவும் எந்தப் பொழுதிலும் இருக்கக்கூடுமென எங்களை எச்சரிக்கை செய்யவும், எமது தன்னிலைகளை ஆழமாகப் பார்க்கவும் தாய் நம்மை அழைக்கின்றார்.


"I am the child in Uganda, all skin and bones,

my legs as thin as bamboo sticks.

And I am the arms merchant,

selling deadly weapons to Uganda.


I am the twelve-year-old girl,

refugee on a small boat,

who throws herself into the ocean

after being raped by a sea pirate.

And I am the pirate,

my heart not yet capable

of seeing and loving"


மேலும் தாய் வன்முறையைக் கைவிடுதல் (non-violence) என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தியவர்.


'உன்னையொருவர் கோபப்படுத்துகின்றார், காயப்படுத்துகின்றார் என்றால், அவர் உன்னை விட நிறையக் கோபத்திலும், காயத்திலும் இருக்கின்றார், அதைப் புரிந்துகொண்டு எந்த மறுவினையும் செய்யாது உன் இயல்புக்கு நீ திருப்பிப் போக முயற்சி செய், இதன் நிமித்தம் உனக்கு வரும் கோபத்தை நீ முதலில் அரவணைத்துக் கொள்' என்றுதான் தொடர்ந்து எங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தவர் தாய்.


மேலும் புத்தரின் மத்தியபாதை (middle path) எல்லாவற்றுக்கும் நல்லதென்பதால், தாய் வியட்னாமிய போரில் அமெரிக்கா பின்னணியுடைய தென்வியட்னாமிய அரசு சார்ந்தோ அல்லது அதற்கெதிராகப் போராடிய சோவிய ரஷ்யா/சீனா சார்புடைய கம்யூனிசப் போராளிகள் சார்ந்தோ ஒரு நிலை எடுக்காதுவிட்டிருந்தால் கூட அவரின் நிலைப்பாடு தவறென்று கூட சொல்லமுடியாது. அவரொரு புத்த துறவியாக இருந்தும், எந்த நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லாதபோதும், அன்று அவர் வியட்னாமிய மக்களின் பக்கமே நின்றவர்.6.


தாயை, அவரின் புத்தகங்களின் ஊடாக வாசித்தே நான் நிறையக் கற்றிருக்கின்றேன். ஏனெனில் அவரின் பேச்சைக் கேட்கும்போது என்ன இந்த மனிதர் ஒரே இயற்கையையும், ஒரு குறிப்பிட்ட விடயங்களையும் திரும்பத் திரும்ப -அதுவும் மிக எளிமையான சொற்களில்- சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணமே நீண்டகாலம் இருந்தது. ஆனால் அவரின் words/notionsஐ தாண்டி ஏதோ ஒரு கணம் அவரின் உரைகளில் சில உள்ளே ஆழந் தொட்டபோது நான் உணர்ந்த மெளனம் அரிய அனுபவமாக இருந்தது. சிலவேளைகளில் தாயையோ அல்லது தாயைப் போன்றவர்களினூடாக நீங்கள் இந்த அமைதியை உணர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.


ஒருவகையில் நமது நகுலன் சொன்னதுங்கூட,

'ஆர்ப்பரிக்கும் கடல் 

அதன் அடித்தளம்

மெளனம்; மகா மெளனம்'


தாயினூடாக நிறையக் கற்றுக்கொண்டாலும், எனக்கு அவர் இந்த வாழ்க்கையை இன்னும் நிதானமாக/மெதுவாக (slowing down) அணுகிப் பார்க்கலாம் என்று கற்றுத்தந்ததைத்தான் முக்கியமானதெனச் சொல்வேன். வேறு எந்த ஆசிரியர்களை விடவும், தாய்தான் வாழ்க்கையில் எதற்கும் அவ்வளவு அவசரப்படத்தேவையில்லை என்பதை நாம் செய்யும் சிறுவிடயங்களினூடாக கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லித்தந்தவர். நடப்பதை எப்படி விழிப்புடன் மெதுவாக நடப்பது என்பதையும், சாப்பிடும்போது எப்படி மிக ஆறுதலாகச் சாப்பிடுவது என்பது பற்றியும், பருவங்கள் மாறும்போது அதன் ஒவ்வொரு சாறையும் துளித்துளியாக இரசிக்கலாமெனவும் திசைகளை வழிகாட்டியவர்.


வெளியில் வெண்பனி மூடிய நிலப்பரப்பை இப்போது பார்க்கின்றேன். அவ்வளவு வெண்மை, அவ்வளவு சூரிய ஒளியின் பிரகாசம். 


இதோ இவ்வளவு குளிருக்குள்ளும் மெல்லச் சிறகடித்து வரும் அந்தச் சிறுபறவை, நீங்கள் அல்லவா தாய்!


********************


(முற்றும்)


நன்றி: 'அகநாழிகை' - ஏப்ரல், 2022

புகைப்படங்கள்: இணையம்

2 comments:

Ramesh Ramalingam said...

தாய் பற்றி நான் அறிந்ததும், கேட்டதும் மிகக் குறைவே. உங்கள் அறிமுகம் தாயை ஆழ்ந்து வாசிக்கத் தூண்டுகிறது. நன்றிகள் பல.

5/14/2022 09:47:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ரமேஷ்

10/27/2022 07:38:00 AM