1.
எனது ஆசிரியரான தாய் (Thich Nhat Hanh) மறைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவரின் நினைவுகளோடு இருந்தேன். அவர் வியட்னாம் யுத்தத்தின்போது, சொந்த நாட்டிலிருந்து 1960களில் வெளியேற்றப்பட்ட பின், பிரான்ஸின் தென்பகுதியில் 'பிளம் கிராமம்' (Plum Village) அமைத்து தனது கற்பித்தல்களைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்.
அவர் மறைந்ததிலிருந்து இறுதிக்கிரியைகள் நிகந்த ஒருவாரத்தில், அவரை இன்னும் நிதானமாக வாசிக்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. பிளம் விலேஜ்ஜின் தினசரி தியான செயற்பாடுகளையும், வியட்னாமில் நடந்துகொண்டிருந்த இறுதிக்கிரியைகளையும் பார்த்துக் கொண்டிருந்தபோது இதுவரையில்லாத ஒரு சிறுமாற்றத்தை என்னளவில் உணரமுடிந்தது. அதற்கு என் ஆசிரியருக்கு மிக்க நன்றி.
'இங்கே வருவதும் போவதும் விடுதலையினூடாக நிகழ்வது' என்று சொன்ன தாய், 'இறப்பும் பிறப்பும் ஒருபோதும் நிகழ்வதில்லை, எல்லாமே தொடர்ச்சியான ஒரு செயற்பாடு' என்று அடிக்கடி எங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தவர்.
அவரின் இறுதிக்கிரியைகள்/உடல் எரியூட்டலை நான்கு மணிநேரமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை அவரின் மாணவரான ஒருவர், தாயின் மீதான அன்பின் நிமித்தம் வியட்னாமில் ஒரு ஸ்தூபாவைக் கட்டி தாயின் இறப்பின் பின் அங்கு அவரின் சாம்பலை வைத்து வழிபடப்போவதாகக் கேட்டபோது, அவர் அப்படிக் கட்டினால் கூட நீங்கள், 'இதன் உள்ளே தாய் இல்லை' என்று எழுதி வைக்கவேண்டும் என்றவர். அதுமட்டுமில்லை அடுத்து, 'ஸ்தூபாவின் உள்ளே மட்டுமில்லை, வெளியிலும் நானில்லை' என்றவர். 'நான் எல்லா இடங்களிலும் இருப்பவன் என்றால், நான் உங்களின் விழிப்புணர்வான மூச்சிலும், நிதானமான நடையிலும் இருப்பேன்' என்று கூறியவர்.
பிறப்பும், இறப்பும் இந்த உடலினூடாகக் கடந்து போகின்றதே தவிர, ஒருவரும் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை என்று நமது notions களை மாற்றிப் பார்க்கச் சொன்னவர் தாய். ஆகவேதான் தனது சாம்பல் இந்தப் பூமி மீது தூவப்படவேண்டும் என்றவர். தன்னை அப்படித் தூவப்பட்ட சாம்பல் படிந்த பருவ மாற்றங்களினூடாக, உடைந்த மெல்லிய சிறகுடன் பறக்கும் பூச்சியினூடாக, பச்சை புழுவினூடாகப் பார்க்கச் சொன்னவர்.
2.
தாயின் மறைவு அறிந்த நள்ளிரவில் அந்த நண்பர், ‘தாயின் dismissal அறிந்தாயா’ எனத் தகவல் அனுப்பியிருந்தார். தாயை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று கனவுடன் இருந்தவர்களல்லவா நாங்கள், சாத்தியப்படாமலே போய்விட்டதென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த நண்பரோடு நெருக்கமாக இருந்த காலங்களிலே தமிழில் தாயை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சொல்லி அவர் என்னை தாயை தமிழாக்கம் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தியவர்.
தாய் கற்றுத்தந்தவைகளின் நிமித்தமும், அந்த நண்பரின் நேசம் தந்த நெகிழ்ச்சியின் காரணமாகவும், பின்னர் நான் தாயின் நூலொன்றைத் தமிழாக்கத் தொடங்கியிருந்தேன். அதைச் சில வருடங்களுக்கு முன்னர் முடித்துமிருந்தேன். நான் விரும்பிய வடிவமைப்புடனும், பிளம் விலேஜ்ஜின் உரிய அனுமதியுடனும் அந்தத் தமிழாக்கத்தை ஏதேனும் ஒரு தமிழ்ப் பதிப்பகம் கொண்டுவரவேண்டுமென்பதற்காய் இப்போதுவரை பொறுமையாய்க் காத்திருக்கின்றேன். தாய் மறைந்ததை அறிந்தபோது அவர் கற்றுத்தந்தவைகளுக்காய், அதை வெளியிட்டு சிறு நன்றியையாவது தெரிவிக்கவேண்டுமென மனது ததும்பிக் கொண்டுமிருக்கின்றது.
3.
எனது ஆசிரியரான தாய் சமாதானத்துக்காகவும், வன்முறையற்ற விடயங்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். ஒருவகையில் இது அவரை பிற ஸென் துறவிகளில் இருந்து வேறுபடுத்துகின்றது. தாய் இதை இளையவராக இருந்த காலத்திலிருந்தே செய்யத் தொடங்கியவர் என்பதுதான் கவனிக்க வேண்டியது.
தாய், வியட்னாமில் இருந்த புத்த பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோது, 14 mindfulness களை 1966 இல் வியட்னாமில் உருவாக்குகின்றார். இதை உருவாக்கும் காலத்தில் அவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு சமூகசேவைகளில் ஈடுபட்ட ஆறுபேரையே முதன்முதலாக தனது மாணவர்களாக ஏற்றுக்கொள்கின்றார். அதில் மூன்று பேர் பெண்கள், மிகுதிப் பேர் ஆண்கள்.
அப்படிச் சேர்ந்த, இப்போதும் உயிர்வாழ்கின்ற ஒரு பெண் மாணவர் அப்போது பிரான்ஸில் கற்றுக்கொண்டிருந்தவர். தாயின் அழைப்பை ஏற்று வியட்னாமுக்குத் திரும்புகின்றார். அந்த 6 மாணவர்களில், 3 பெண்களும் குடும்பவாழ்வைத் துறந்து 'பிரமச்சாரியத்து'க்குத் தம்மைத் தயாரென்றபோது, தாய் அதை ஒத்திவைக்கச் சொல்கின்றார். மற்ற ஆண்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்று தெரியாதபோது உடனே அனைவரும் பிரமாச்சரிய ஏற்றலை பிற்போடுவோம் எனக் கூறுகின்றார். ஏனெனில் அந்த ஆண்களில் அனைவருக்கும் காதலிகள் அப்போது இருந்தனர். பின்னர் அந்தப் பெண்கள் மூவரும் துறவிகளாகின்றார். அதில் ஒருவர் வியட்னாமில் போர் முடிந்து சமாதானம் வரவேண்டுமென்பதற்காய்த் தீக்குளித்து மரணித்துப் போனவர்.
தாயின் சீடர்கள் மட்டுமில்லை, தாயும் தொடர்ந்து போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட தரப்புக்களைத் தேடிச் சென்றிருக்கின்றார். இவ்வாறு உதவப்போன நண்பர்கள் பலர் இறக்க இறுதிவரை தன்னாலான உதவிகளைச் செய்துகொண்டிருந்தவர் தாய். அத்துடன் அமெரிக்கத் தரப்பால் மட்டுமில்லை, அதற்கெதிராகப் போராடிய போராளிகளாலும் இவர் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டு உயிரச்சத்துக்கு ஆளானவர். எனினும் தாய் தொடர்ந்து அன்றைய காலத்தில் வியட்னாமில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனப் போராடிக் கொண்டிருந்தவர்.
அதனால் அவர் 1966இல் சைகான் பல்கலைக்கழகத்தில், தென்வியட்னாமில் அமெரிக்கா இராணுவம் போரை நிறுத்தி -முக்கியமாய் மிலேச்சனத்தனமான குண்டுத்தாக்குதல்களை நிறுத்தி- தென்வியட்னாமின் சுயநிர்ணய உரிமையை மதிக்கவேண்டும் என்று உரையாற்றியவர். அந்த உரையை, அவர் தென்வியட்னாம் மக்களின் மனோநிலையை அவ்வளவு தெளிவாக முன்வைப்பதற்காகக் களத்திற்குச் சென்று வந்தே ஆற்றியிருக்கின்றார். எப்படி இருந்தாலும், அமெரிக்க இராணுவம் ஓர் அந்நிய இராணுவம் அதை எந்தப் பொழுதிலும் வியட்னாமிய மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியவர்.
மேலும் வியட்னாமிய போராளிகளை 600 பேரை அமெரிக்கா கொன்றோம் எனச் சொல்லப்படுகின்றபோது, கொல்லப்படுகின்ற 590 பேரும் அப்பாவி மக்களே எனவும் அந்த உரையில் குறிப்பிடுகின்றார். அவர் ஒரு வியட்னாமிய குடியானவரைச் சந்திக்கும்போது, 'நாங்கள் கம்யூனிசம் எவ்வளவோ கொடுமையாக இருந்தாலும், போராளிகளின் பக்கமே நிற்போம், ஏனென்றால் எமக்கு ஜனநாயம் என்ன என்பதை அறிவதற்கு, முதலில் நாங்கள் உயிரோடு இருப்பதே முக்கியம்' என்று சொன்னதை இந்த சமாதானத்துக்கான அழைப்பு என்கின்ற உரையில் தெளிவாக தாய் -கள நிலவரத்தை முன்வைத்து- கூறுகின்றார்.
(தொடரும்)
நன்றி: 'அகநாழிகை' - 2022
0 comments:
Post a Comment