இருப்பின் இறகிழத்தலும், அபத்தத்தின் வசீகரமும்
***************
Laughable Loves
ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரேயொரு குந்தேராவின் சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் குந்தேரா செக்கில் 1958-1968இல் இருந்தபோது எழுதிய கதைகளாகும். அவர் ஒருபோதும் செக் என்று எழுதுவதில்லை, பொஹிமியா என்றேதான் தனது தாய்நாட்டைக் குறிப்பிடுகின்றார். கதைகளிலும் அப்படியே பொஹிமியா என்றே அடையாளப்படுத்தவும் செய்கின்றார்.
இந்தப் புத்தகத்திலும் ஆண்-பெண் உறவுகளே ஆழமாகப் பேசப்படுகின்றன. மனித உறவுகள் என்பது இருத்தலியத்தின் நீட்சியே என்பதை கவனப்படுத்தும் குந்தேரா அதை ஒவ்வொரு கதைகளிலும் காதலினதும்/காமத்தினூடும் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இந்தக் கதைகளில் வரும் காதல்/காமம் எல்லாமே இறுதியில் அபத்தங்களை நோக்கி நகர்வதையும் நாம் காணமுடியும்.
அவரை விசாரிக்கும் குழுவில் இருக்கும் பெண்ணாலேயே, அதற்கு முன்னர் எட்வேர்ட்டின் தமையனின் வளாக வாழ்வே இல்லாமற் செய்யப்பட்டதால், எட்வேர்டின் தமையன் இதுகுறித்து எச்சரிக்கை செய்தே எட்வேர்டை அனுப்பியிருந்தார். என்றாலும் 'விதி' எட்வேர்டின் வாழ்விலும் மீண்டும் விளையாடுகின்றது. எட்வேர்டின் தமையன், படிக்கும் காலத்தில் ஸ்டாலின் இறந்துபோனது அந்தச் செய்தி தெரியாது, நன்கு தூங்கு எழுந்து அடுத்த நாள் கம்பஸுக்குப் போனபோது - இப்போது எட்வேர்டை விசாரிக்கும் பெண்- ஒரு துயரச்சிலை போல நடுவளாகத்தில் காட்சியளித்தபடி நிற்கின்றார். எட்வேர்டின் தமையனுக்கு, ஸ்டாலினின் இறப்பின் விபரந்தெரியாது, ஆகவே அந்தத் 'துயரச்சிலையை' மூன்றுமுறை சுற்றி, எள்ளல் செய்து சிரிக்கின்றார். கம்பஸ் வளாகமோ இவர் வேண்டுமென்றே ஸ்டாலினுக்கு எதிராகக் கலகம் செய்கின்றார் என்று நினைக்கின்றது. இதன் காரணமாக அன்று எட்வேர்டின் மூத்த சகோதரர் கம்பஸில் இருந்து விலத்தப்படுகின்றார்.
இப்போது எட்வேர்டின் கடவுள் நம்பிக்கையை விசாரிப்பவரும் அதே பெண்தான். எட்வேர்ட் 'உண்மையில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அலிஸிற்காகவே இப்படி தேவாலயத்துக்குப் போகின்றேன்' என்பதை மறைத்து, தனக்குள் எங்கிருந்தோ கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று ஓர் அப்பாவித்தனமான நாடகத்தை விசாரணைக்குழுவின் முன் ஆடத்தொடங்குகின்றார். விசாரணைக் குழு அதை உண்மையென நம்பி, இவரை 'நல்மனிதனாக்கும்' முயற்சியை இப்போது நிர்வாகியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்படுகின்றது.
இவ்வாறாக அந்தச் சந்திப்புக்கள் நீண்டு அந்தப் பெண் நிர்வாகி இவரை தனது ஸ்டூடியோ அடுக்ககத்திற்கு அழைத்துப் பேச, அது உடலுறவுக்குச் செல்கின்றமாதிரியும் ஆகிவிடுகின்றது. கடவுள் நம்பிக்கையை இல்லாமல் செய்ய, எட்வேர்டை அழைக்கும் அந்தப் பெண்ணை, காமத்தின் நிமித்தம் முழந்தாழிட்டு கடவுளின் பெயரால் என்று பிரார்த்தனையும் செய்ய எட்வேர்ட் வைக்கின்றார். அதை மிக நளினமாக, மிகச் சிறந்த எள்ளலாக குந்தேரா எழுதிச் செல்கின்றார்.
ஆனால் எட்வேர்டை விட வயது முதிர்ந்த பெண் நிர்வாகியோடு உடல்சார்ந்த உறவு, அலிஸின் உறவைத்துறந்த பின்னரும் எட்வேர்ட்டுக்கு நீள்கின்றது. இப்போது எட்வேர்ட் அலிஸையும், பெண் நிர்வாகியையும் தனது வாழ்வினுள் கடந்து வந்துவிட்டார். அவருக்கு இதற்குப் பின் பல பெண்களின் உறவுகளும் வாய்த்துவிட்டன. தனித்து இருந்தால் இவற்றை நன்கு அனுபவிக்க முடியும் என்பதையும் கற்றுணர்ந்துவிட்டார். இந்தக் கதையை முடிக்கும்போதுதான் குந்தேராவின் கதையெழுதும் நுட்பம் தெரியும்.
இப்போது எட்வேர்ட் அவ்வப்போது தேவாலயத்துக்குச் செல்கின்றார். ஆனால் அதை வாசிப்பவராகிய நாங்கள் உண்மையிலே எட்வேர்ட்டுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதென்று நம்பவேண்டாம். அவருக்கு கடவுள் இல்லை என்பது நன்கு தெரியும். ஆனால் அவருக்கு கடவுள் என்ற கருத்திற்கான ஏக்கம் இருப்பதால் மட்டுமே தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றார் என்று நமக்குச் சொல்கின்றார் குந்தேரா. எப்போதும் எதையும் தொலைத்ததுபோல இருக்கும் எட்வேர்ட் ஒருநாள் தேவாலயத்தில் கப்போலாவை கனவோடு பார்த்தபோது, கடவுள் ஒருநாள் சூரியஒளியில் எட்வேர்ட்டுக்கு தரிசனம் கொடுத்தார். அப்போது மட்டும் எட்வேர்ட் நன்கு சிரித்தார். ஆகவே இந்தக் கதையை வாசிக்கும் நீங்களும் தயவுசெய்து அந்த சிரித்த முகத்து எட்வேர்ட்டை உங்கள் நினைவுகளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மிலேன் குந்தேரா இந்தக் கதையை முடிக்கிறார்.
இவ்வாறு இந்தத் தொகுப்பு முழுதும் எள்ளலும், அபத்தமானதுமான காதல் கதைகள் சொல்லப்படுகின்றன. சில கதைகளில் வயது முதிர்ந்த பெண்களோடு இளம் ஆண்களுக்கு வரும் காதல்கள், அவர்கள் அதுவரை வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைத்துப் பார்க்கும் காம நிகழ்வுகள் என பல பாத்திரங்களை குந்தேரா இங்கே நமக்குத் தருகின்றார். இந்தக் கதைகளின் பலமும் பலவீனமும் என்னவென்றால் ஆண்களே முக்கிய பாத்திரங்களாகின்றனர். பெண்கள் இரண்டாம் கதாபாத்திரங்களாகின்றனர். அத்தோடு அவர்கள் பெரிதாக தங்கள் குரல்களில் பேசுவதில்லை. பேசினாலும், அதை மிஞ்சி குந்தேராவின் ஆண் பாத்திரங்கள் எள்ளலாக எதையாவது சொல்லி தம்மை நிரூபிக்க முயல்கின்றன.
இந்தக் காரணங்களினால் இன்றைக்கு (இவை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்) குந்தேராவின் பெண் பாத்திரப்படைப்புக்கள் கேள்விக்குட்படுத்தப்படலாம். பெண் பாத்திரங்கள் பெரிதும் காதல்/காமம் சார்ந்து வருகின்றனவே தவிர, அவை ஒருபோதும் ஆணைச் சாராது தனித்து நிற்கும் உறுதியான பாத்திரங்களாய்க் காட்டப்படுவதில்லை. குந்தேராவின் பெண்கள் தனித்து வாழ்ந்தாலும், கணவனை இழந்து வாழ்ந்தாலும், ஏன் கணவனோடு சேர்ந்து வாழ்ந்தாலும் ஆணின் பார்வையினூடாகவே வாசிக்கும் நமக்கு அவர்கள் கடத்தப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே வேண்டியிருக்கின்றது. இதனால் குந்தேராவின் கதைகள் வீரியமிழக்கின்றன என்பதைச் சொல்ல வரவில்லை, ஆனால் இவற்றையும் நினைவில் வைத்தே குந்தேராவின் படைப்புக்களை நாம் வாசிக்கவேண்டுமென கவனப்படுத்த விரும்புகின்றேன்.
The festival of insignificance
எனினும் மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. 'The Festival of Insignificance'ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலான் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலான் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் 'Memories of My Melancholy Whores' எழுதியதுபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.
மிலான் குந்தேராவின் புனைவுகளில் ‘The Book of Laughter and Forgetting’, ‘The Unbearable Lightness of Being’, ‘The Joke’, 'Laughable Loves' என்பவை பிரசித்தமானவை. ஆனால் என் தனிப்பட்ட விருப்புக்களாக இவற்றோடு ‘Ignorance’, ‘Identity’ என்பவற்றைச் சேர்த்துச் சொல்வேன். ஆண்-பெண் உறவுகளின் சுவாரசியம்/அபத்தங்கள், நாடுவிட்டுப் பிரிந்த துயரங்கள், இழப்புக்களை எள்ளல்களோடு தாண்டும் இலாவகம், அரசியல் ஆக்கிரமிப்புக்களை எந்தப் பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர்மை, ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் சிக்கிக்கிடக்கும் மனித மனங்கள் என்று கலவையாக, அதேசமயம் உளவியல்/தத்துவார்த்த விடயங்களோடு தொடர்புபடுத்தி சுவாரசியமாக மிலான் குந்தேராவை விட இன்னொருவரால் சமகாலத்தில் எழுதிவிட முடியுமா எனத் தெரியவில்லை. அதேவேளை செக் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு (1989இல்) முடிந்தபின், அதுவரை இருந்த ரஷ்ய-அமெரிக்க இருதுருவ நிலை அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, மிலான் குந்தேராவை 70/80களில் தூக்கிவிட்டுக் கொண்டாடிய மேற்குலகு பின்னர் கைவிட்டதும் நிகழ்ந்திருக்கின்றது.
மேலும், குந்தேரா செக் மொழியைக் கைவிட்டு பிரெஞ்சில் எழுதத் தொடங்கியபின், அவரது படைப்புக்கள் முன்னர்போல கொண்டாடப்படும் நாவல்களாக மாறிவிடாத துயரமும் நிகழ்ந்திருக்கின்றது. இன்றைக்கு #MeToo movement எழுச்சி பெற்றுவரும் வேளையில், குந்தேராவின் பெண் பாத்திரங்கள் மீது கடும் விமர்சனங்களும் சிலரால் முன் வைக்கப்படுகின்றன. ஒருவகையில் அன்றைய 'அரசியல் சரி/நிலை'யைப் பற்றி அக்கறைப்படாது எழுதிய எல்லா எழுத்தாளர்களும் இவ்வாறான கேள்விகளை நிகழ்காலத்தில் சந்திக்கவேண்டியவராகவே இருக்கின்றனர். அந்தவகையில் குந்தேராவும் விதிவிலக்கானவர் அல்ல.
இன்று குந்தேராவின் நாவல்களில் முக்கிய தொனியாக இருந்த ரஷ்ய ஆக்கிரமிப்பு இல்லாது போனபின், அவரது நாவல்களுக்கு இன்று என்ன முக்கியத்துவம் என்ற கேள்விகளும் இருக்கின்றன. அதை ஒருகாலத்தின் வரலாறு என எடுத்துக் கொள்ளலாமே தவிர, இன்றைய தலைமுறைக்கு அந்த ஆக்கிரமிப்பு/துயரம் என்னவாக ஆகப்போகின்றது என்பதும் முக்கிய வினாவாகும். ஆனால் குந்தேரா தன் நாவல்களினூடாக இதைமட்டும் எழுதியவரல்ல. அவர் மனித இருப்புக்கள் குறித்தும், ஆண்-பெண் உறவுகள் குறித்தும், நிலைகொள்ளா மனங்களின் விசித்திரமான மாறுதல்கள் பற்றியும் ஆழ்ந்து பார்த்தவர் என்பதால் இந்த எல்லா வகையான விமர்சனங்களையும் தாண்டி மிலான் குந்தேரா இன்னும் நெடுங்காலம் மறக்கப்படாமல் இருப்பார் போலவே தோன்றுகின்றது. இருத்தலியத்தை பிரான்ஸிலிருந்து காப்ஃகா, சார்த்தர், காம்யூ போன்றோர் ஒருகாலத்தில் தமது படைப்புக்களினூடாகத் தீவிரமாக உரையாடிவர்களென எடுத்துக்கொண்டால், சமகாலத்தில் இருத்தலியத்தின் அழகையும் அபத்தத்தையும் பேசுகின்றவர்களாக நான் ஹருகி முரகாமியையும், மிலான் குந்தேராவையும் சொல்வேன்.
'ஓர் எழுத்தாளராக இருப்பது என்பது உண்மை என்னவென்று பிரசங்கம் செய்வதல்ல, எது உண்மை என்பதைத் தேடிப் பார்ப்பதாகும்' என்று கூறும் குந்தேரா, 'ஒர் இலக்கியப் படைப்பானது, மனித இருப்பின் அறியப்படாத பகுதியை வெளிக்காட்டி, வாழ்தலுக்கான ஒரு அர்த்தத்தைக் கொடுப்பதாகும்' எனவும் சொல்கின்றார்.
இந்த மனித இருப்பின் 'அறியப்படாத பகுதிகளின் ஆழங்களுக்கு' நம்மை தனது படைப்புக்களினூடாக அழைத்துச் சென்று பார்க்கவும், பதட்டப்படுத்தவும், பரவசப்படுத்தவும் செய்தவர் மிலான் குந்தேரா என்பதில் வாசகர்களாகிய நமக்கு எந்தச் சந்தேகமும் ஒருபோதும் வரப்போவதில்லை.
------------------------------------------
நன்றி: வனம்
புகைப்படங்கள்: இணையம்
0 comments:
Post a Comment