கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்.பொவின் 'முறுவல்'

Saturday, April 16, 2022


எஸ்.பொன்னுத்துரை - பகுதி 08 


1.

எஸ்.பொ, பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்த புலம்பெயர்ந்தவர்களை இணைத்து தமிழ் ஊழியம் செய்யவேண்டும் என்ற பெருங்கனவோடு கனடா வந்தபோது, நான் அவரின் வெகுசிலவான ஆக்கங்களை மட்டுமே வாசித்திருந்தேன். எனினும் எஸ்.பொ என்கின்ற ஆளுமை என்னை ஈர்க்க அவரைப் பின்தொடர்ந்து அவர் பங்குபற்றிய சில கூட்டங்களுக்குத்  சென்றிருக்கின்றேன். ஒரு நிகழ்வு இங்கிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து படித்துக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களோடு நடந்ததிருந்தது.


எஸ்.பொ, இலக்கியவாதிகளை இணைத்துப் பேசிய இன்னொரு ஒருமுழுநாள் கருத்தரங்கில் முற்போக்கு அணியினரையும், முக்கியமாய் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் இழுத்துப் பேசியிருந்தார். அடுத்த நிகழ்விலும் கொஞ்சம் வம்பாய் அவர்களை இழுத்தார். எஸ்.பொ அவர்கள் இருவரையும் விட்டுவிலகி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இறுக்கத்தோடும், கோபத்தோடும் இருக்கின்றார் என எனக்குத் தோன்றியது. சிவத்தம்பியும், கைலாசபதியும் இலக்கியத்தை நமக்கு உகந்த வகையில் இலக்கியத்தைப் பார்க்கவில்லை என்பதற்காக அவர்களின் பங்களிப்புக்களை ஏன் இப்படி உதாசீனப்படுத்தவேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றியது.


மனோன்மணியம் சுந்தரனார் மாணவர்களின் நிகழ்வில், எஸ்.பொ, சிவத்தம்பியை இழுத்ததைச் சில மாணவர்கள் விரும்பவில்லை. ஒரு மாணவி கேள்வி நேரத்தில் நீங்கள் இப்படி சிவத்தம்பியை கீழிறக்கத் தேவையில்லை என்றார். எஸ்.பொவுக்கு இது சுட்டிருக்கவேண்டும். 'எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்' எனச் சற்று எள்ளலுடன் கூறினார். அந்த மாணவியோ, 'நான் சிவத்தம்பி சேரின் மாணவியாக ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன், அவர் ஓர் அற்புதமான ஆசிரியர்' என்று மறுத்துக் கதைத்தார். தொடர்ந்து அந்த நிகழ்வு கொஞ்சம் குழப்பமாகப் போனது. எனக்கு அதற்குப் பின் எஸ்.பொவின் பேச்சுக்களில் இருந்து, அறிவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது.


பிறகான காலங்களில் எஸ்.பொவை ஆழமாகவும் விரிவாகவும் வாசிக்கத் தொடங்கி என் ஆசானாகக் கொண்டபோதும் எஸ்.பொவோடு நெருக்கம் கொள்ளவேண்டும் என்று எனக்கு பிறகு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆசான்களாயிருப்பினும் அவர்களைத் தள்ளி நின்று இரசிப்பதில்தான் ஓர் அழகும், மதிப்பும் இருக்கின்றது என்பது என் அனுபவம். ஆகவேதான் எஸ்.பொ இரண்டாவது முறையாக இயல்விருது வாங்க, கிட்டத்தட்ட 10 வருடங்களின் பின் கனடா வந்தபோதும் அவரைத் தனித்துச் சந்தித்து நிறைய அளவளாவ வேண்டும் என்ற விருப்பு எனக்குள் எழுந்ததில்லை.


ஆனால் ஆசான்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்பதற்காய் 'உரிய அழைப்பிதழ்' இல்லாதே எஸ்.பொவைக் கெளரவப்படுத்திய இயல் விழாவுக்கு 'மதில் ஏறிப்பாய்ந்து' போயிருக்கின்றேன். எஸ்.பொ அந்த 'நாசூக்கான‌ கற்றோர்' அரங்கில், 'நானொரு காட்டான்' என்று தொடங்கி ஒரு சிறப்பான உரையை ஆற்றி என்னைப் போன்றவர்களுக்குப் பெருமிதத்தைத் தந்தார். அதற்குப் பிறகு இறுதியாய் அவரை நேரடியாகச் சந்தித்தது என்றால், 'காலம்' சஞ்சிகை நடத்திய நிகழ்வில். அன்று எத்தனையோ எஸ்.பொ எழுதிய நூல்கள் இருக்க, அவர் காமசூத்ராவுக்கு 'கவிதை' உரை எழுதிய நூலில் கையெழுத்து வாங்கி அவருக்கு நான் என்றுமே 'இவ்வாறான விடயங்களில்' விசுவாசமான சீடனாக இருப்பேன் எனவும் உணர்த்தியிருக்கின்றேன். 


2.


முற்போக்கு இயக்கமும், கைலாசபதி, சிவத்தம்பி போன்ற விமர்சகர்களும் தீவிரமாக இருந்த ஒருகாலத்தை இன்று நிதானமாக நாங்கள் அசைபோட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஏதோ ஒரு இயக்கமோ, இசமோ தீவிரமாகப் பரவுவதும் அவை தம்மை முன்னிறுத்துவதும் நிகழ்ந்திருப்பதை நாம் பார்க்கமுடியும். அவ்வாறே ஈழத்தில் ஒருகாலத்தை முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையிட்டிருக்கின்றனர். அது தவிர்க்கமுடியாததும் கூட. இலங்கையில் தீவிர சாதி ஒடுக்குமுறையை எதிர்த்த ஓர் இயக்கம், தன்னை கலை இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நுழைந்து பங்களிப்பது இயல்பானது. ரஷ்யாப் புரட்சியின்பின் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல, தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியின் பின் நிகழ்ந்ததுபோல, இடதுசாரிகள் முற்போக்கு இயக்கத்தைக் கட்டியமைத்து கலை இலக்கியங்களிலும் பரவியிருக்கின்றனர்.


காலத்தின் தேவையாயிருந்த முற்போக்கு இயக்கத்திலிருந்தே நமது முக்கிய முன்னோடிகள் எல்லோரும் வளர்ந்திருக்கின்றனர். பிறகான காலங்களில் சிலர் முரண்பட்டு வெளியேறினாலும் கே.டானியல், எஸ்.பொ, மு.தளையசிங்கம், டொமினிக் ஜீவா என்று, முதல் தலைமுறையின் நிறையப் பேரை அப்படிப் பட்டியலிடலாம். ஒருவகையில் ஒரு இயக்கம் தீவிரமாக இருக்கும்போது உதிரிகளாய்  பலர் வெளியேறுவதும், அவர்கள் தமது எதிர்ப்பை அந்த பேரியக்கத்தின் மீது விமர்சனமாக வைப்பதும் முரணியக்கத்தின் அடிப்படைப் பண்பாகும்.


அவ்வாறே முற்போக்கு இயக்கத்திலிருந்து மு.தளையசிங்கமும், எஸ்.பொவும், வ.அ.இராசரத்தினமும் வெளியே வந்து தமதான இலக்கியத்தை, அது சார்ந்த கோட்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். ஒருவகையில் முற்போக்கு இயக்கத்தினோடு ஏற்பட்ட முரணியக்கமுமே நல்ல இலக்கியவாதிகளை அதற்கு வெளியிலும் எமக்கு ஈழத்தில் தந்திருக்கின்றது. எனவே முற்போக்கு இயக்கத்தின் எழுச்சியை இன்று நின்று அவதானிக்கும்போது அது ஒரு நல்ல விளைவே என்று சொல்லத் தோன்றுகின்றது.


என் வாசிப்பின் வழியே நான் முன்னோடிகளாகவும், விருப்பத்திற்குரியவர்களாகவும் கொள்பவர்களான எஸ்.பொவும், மு.தளையசிங்கமும், பின்னாளில் யேசுராசாவின் 'அலைகள்' போன்ற சிற்றிதழ்கள் முன்வைத்த கலையிலக்கியக் கோட்பாடுகள் என்றாலும், எனக்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களிடமும் மதிப்பிருக்கின்றது. அவர்களின் இலக்கியம் சார்ந்த கோட்பாடுகளில், இலக்கியத்தின் நுண்ணழகியல் உள்ளிட்ட பலதைத் தவற விட்டிருந்தாலும், அவர்களின் உழைப்பு ஒருவகையில் பாராட்டத்தக்கதே.


அண்மையில் தற்செயலாக 1968இல்  இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட கைலாசபதியின் "Tamil Heroic Poetry"ஐ (தமிழ் வீரயுகக் கவிதைகள்)கொஞ்சம் தட்டிப்பார்த்தபோதே அவரின் உழைப்பின் தீவிரம் தெரிந்தது. ஏற்கின்றோமோ இல்லையோ அதற்கான ஆய்வு மதிக்கப்படவேண்டியது. அவ்வாறே சிவத்தம்பியின் இலக்கிய ஆய்வுகளில் அவ்வளவு ஈர்ப்பில்லாதுவிடினும் அவர் நமது சங்க இலக்கியங்களில் செய்த ஆய்வுகளும், அன்றைய காலத்தில் படித்தவர்களால் தீண்டப்படாத சினிமாக்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும்  நினைவில் கொள்ளப்படவேண்டியவை. இன்றையகால ராஜ் கெளதமனும், அ.மார்க்ஸும் இன்னும் பிறரும் கைலாசபதி/சிவத்தம்பியின் ஆய்வுகளின் ஈர்ப்பினாலே இவ்வாறான  ஆய்வு வாசிப்புக்களுக்குள் புகுந்ததாகச் சொல்லியிருக்கின்றனர்.


எஸ்.பொ போன்றவர்கள் ஒருவகையில் இந்த 'முற்போக்கு விடயத்தை' சற்று அதிகமாய் ஊதிப் பெருப்பித்தவர்கள் என்றே இப்போது பார்க்கும்போது தோன்றுகின்றது. எஸ்.பொவைப் போன்றோர் உதாசீனம் செய்யப்பட்டது உணமையெனினும், அவரின் முக்கிய படைப்புக்களான 'சடங்கு', 'வீ 'போன்றவை முற்போக்கு முகாமோடு தீவிரமாக முரண்பட்ட காலங்களிலேயே வந்திருக்கின்றது. கே.டானியல், தெணியான், பெனடிக்பாலன், கே.கணேஷ், பசுபதி, முருகையன் போன்ற முக்கிய பல எழுத்தாளர்கள் முற்போக்கு முகாமிலிருந்தே உருவாகியிருக்கின்றனர். ஆக முற்போக்கு இலக்கிய முகாம் நமது இலக்கியச்சூழலுக்கான இருண்டகாலம் என ஒருபோதும் சொல்லவே முடியாது.


இன்றைக்கு தமிழகத்தில் ஒருசாரார் சிவத்தம்பி/கைலாசபதி போன்றவர்களின் இலக்கிய ஆய்வுகளுக்கு எதிராக வெங்கட் சாமிநாதன் போன்றவர்களை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிற்காலத்தில் வெங்கட் சாமிந்தானுக்கு எதிராகப் பிரமிளும், எம்.ஏ.நுஃமானும் (மார்க்சின் கல்லறையிலிருந்து) தொடர்ச்சியாக எதிர்வினைகள் செய்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்று வெங்கட் சாமிநாதன் முன்மொழிந்த இலக்கியவாதிகளில் எத்தனைபேர் 'உருப்படியான' இலக்கியவாதிகளாகக் கனிந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் பார்த்தால் சிவத்தம்பி/கைலாசபதிக்கு இலக்கியவாதிகளை முன்மொழிந்ததில் நிகழ்ந்த சரிவே, வெ.சாவுக்கும் கூட நிகழ்ந்திருக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? மேலும், சிவத்தம்பி போன்றவர்கள் கூட பிற்காலத்தில் எஸ்.பொவை அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எஸ்.பொவே 'இப்போதாவது என்னை ஏற்கிறார்களே' எனச் சில இடங்களில் எழுதியிருக்கின்றார்.


ஒருவகையில் நமக்கு முற்போக்கு இயக்கமும், அதனோடு நிகழ்ந்த முரணியக்கமுமே நல்ல இலக்கியங்களை அதற்குள்ளும், அதற்கு வெளியிலே தந்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. அதேபோல முற்போக்கி இலக்கிய முகாமிலிருந்து வெளியேறிய மு.தவோ, எஸ்.பொவோ ஒருபோதும் மார்க்சியத்தை வெறுத்தார்களில்லை.  முற்போக்கு முகாமில் இருந்த சிலரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டார்களே தவிர, அந்த இயக்கத்துக்கு சமூகத்தில் இருந்த வகிபாகத்தை ஒருபோதும் மறுத்தவர்களில்லை. இன்றும் கூட முற்போக்கு இயக்கத்தின் மீதான மறுவாசிப்புக்கள் சரியாக நிகழ்த்தப்படவில்லை. எடுக்கவேண்டியதை எடுத்து உதறவேண்டியதை உதறி முற்போக்கு இலக்கியத்தை மீளவாசிப்புச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


நான் எப்போதும் வலியுறுத்துவது ஒன்றுதான். ஒரு இலக்கியப்போக்கோ இலக்கியமுகாமோ பூதாகாரமாக எழும்பி நிற்கும்போது அதைப் போலவே உதிரிகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அதேபோல அந்த இலக்கிய முகாங்களில்/முகங்களில் இருக்கும் அரிய விடயங்களை எடுத்துக்கொண்டு அடுத்த தலைமுறை முன்னே நகரவேண்டும். ஒருவகையில் நாம் மற்றமையை முற்றாக நிராகரிக்கும்போது, அடுத்ததாக நாம் ஒரு புதிய சூழலுக்குள் புகும்போது, நாம் நம்பியவையே முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும் அவலச்சூழல் நமக்கும் வரலாம். 


ஒருகாலத்தில் முற்போக்கு முகாம் தனதில்லாத மற்றமைகளை நிராகரித்ததால், நாங்களும் அவர்களை இப்போது முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. அதுபோலவே இன்று தமிழ்நாட்டின் சில இலக்கியவாதிகள் தமதல்லாத மற்றமைகளை கடுமையாக நிராகரிக்கும்போது எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாளை புதியவர்களோ புதிய இலக்கியக்கோட்ப்பாடுகளோ வந்து இவர்களை முற்றாக நிராகரித்தால் தமிழ் இலக்கியத்துக்கு அது இழப்பாக அல்லவா போகும். 


கடந்தகாலத்தில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்ட சுந்தர ராமசாமியையோ அல்லது ஜெயகாந்தனையோ இன்று எத்தனை பேர் இப்போதும் அதே ஆவலுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அன்று உதிரிகளாக இருந்து மிகக் குறைந்தளவே எழுதிய ஜி.நாகராஜனையும், ப.சிங்காரத்தையும் வாசிக்க புதிது புதிதாகப் பலர் வந்துகொண்டிருப்பதை நாங்கள் பார்க்கமுடிகின்றது. எப்போதும் காலத்தோடோ ஊரோடோ ஒத்தோட வேண்டியதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.


ஆகவேதான் தொடர்ந்து நான் பெரும் மரங்களின் நிழல்களிலிருந்து வெளியேறி உதிரிகளின் மீது என் பார்வையை அதிகம் குவிப்பவனாகவும், பெரு மரங்களை விமர்சனங்களின்றி அப்படியே ஆரத்தழுவ விருப்பம் இல்லாதவனாகவும் இருப்பதை என் வாசிப்பின் அடிப்படைப் பண்பாக வைத்திருக்கின்றேன்.


3.


எஸ்.பொவின் 'முறுவல்' ஒரு நாடகப் பிரதியாகும். இதை அவர் 70களில் எழுதி 74ல் கொழும்பில் மேடையும் ஏற்றியிருக்கின்றார். இந்தப் பிரதியில் பல்வேறு பாத்திரங்கள் குறுக்கிடுகின்றன. நிகழ்காலப் பாத்திரங்கள் பாத்திருக்க, இதிகாசப் பாத்திரங்கள் உயிர்பெற்று எழும்பத்தொடங்குகின்றன. விஸ்வாமித்திரனுக்கும், மேனகாவுக்கும் நிகழும் உரையாடல் விதந்து சொல்லக் கூடியவை. விஸ்வாமித்திரன் மேனகாவின் காதலை நிராகரிக்க இந்திரன் பூமியின் மீது சாபம் போட திரேகாதயுகம் தோன்றுகின்றது.


மழையே இல்லாதுபோய் மனிதர்கள் பட்டினியில் வாடத்தொடங்குகின்றனர். அப்போது விஸ்வாமித்திரனோடு சண்டாளன் என்ற பாத்திரம் உரையாடத் தொடங்குகின்றது. விஸ்வாமித்திரன், பசியின் கோரம் தாங்கமுடியாமல் 'தீண்டக்கப்படாதவன்' தன் குடிசையில் வைத்திருந்த இறைச்சியைச் சாப்பிடுகின்றார். இதுவரை காலமும் நீங்கள் கட்டிவைத்திருந்த உங்கள் தீண்டாமைக் கொள்கைகள் என்னவாயிற்று என்று சண்டாளன் கேட்கின்றார். நாங்கள் உயர்ந்தகுடிகள் எங்களுக்கு ஏற்றமாதிரி மனுநீதியையும், சடங்குகளையும் மாற்றக்கூடிய அதிகாரம் வாய்த்தவர்கள். இப்போது இந்த இறைச்சியை தீண்டத்தகாதவனாக உன்னிடமிருந்து களவெடுத்துச் சாப்பிடுவதும் அறமே என்கின்றார் விஸ்வாமித்திரன். 


எப்படியெல்லாம் தமக்கு வேண்டியபடி தமக்கான சாத்திரங்களை மாற்றுகின்றனர் இந்த ஆதிக்கசாதியினர் என அதிர்ந்து போய் ஒடுக்கப்பட்டவர் மெளனமாக இருக்கின்றார். இந்திரனுக்கோ விஸ்வாமித்திரனை நாய் இறைச்சியைச் சாப்பிடவைத்து அவரின் கொட்டத்தை அடக்கிவிட்டேன் என்று நிம்மதி வருகின்றது. பிறகு சமகால பாத்திரங்கள் இந்த வரலாற்று வாசிப்பைப் பற்றி ஆராய்வதுடன் நாடகப் பிரதி முடிகின்றது.


இதைப் பிறகு 2005ல் தமிழகத்திலும் தமிழச்சி தங்கபாண்டியன், சித்தன் போன்றோர் நடிக்க நாரதகான சபையிலும் மேடையேற்றியிருக்கின்றனர். 


70களில் எழுதப்பட்டதாயினும் அப்போதே இதில் எஸ்.பொவின் குறும்புத்தனங்கள் பல இருக்கின்றன. எஸ்.பொவே இந்த நாடகத்தின் இடையில் ஒரு பாத்திரமாக வருகின்றார். இந்திரன் தன் மனச்சாட்சியுடன் உரையாடுகின்ற காட்சிகள் சிலாகிக்கக் கூடியவை. விஸ்வாமித்திரன்- மேனகாவினூடாக எஸ்.பொ நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கதையை மீள்வாசித்துப் பார்க்கின்றார். எஸ்.பொவுக்கு அவரொம் கதைகளில் வாய்க்கும் அழகிய மொழி இதில் அவ்வளவு வாய்க்காவிட்டாலும் 70களில் இப்படி ஒரு பிரதியை - வழமையான அவருடைய காமத் தீற்றுக்களுடன் - மேடையேற்றியிருக்கின்றார் என்பது கவனத்திற்குரியது.


***********

0 comments: