1.
Sudbury நகரின் காட்சிகளின் இருந்து இயற்கையை இன்னும் ஆழமாய்த் தரிசிக்க வேண்டுமென்றால், Onaping Falls இற்குப் போய்ப் பார்க்கலாம். போகும்பாதையெங்கும் காடுகள் விரிந்துகிடக்கும், அதனூடு காரோட்டிப் போகும்போது மனது தெளிந்து துல்லியமாகும்.
இது Onaping Falls என இப்போது அழைக்கப்பட்டாலும், Onumunaping என்றே பூர்வீகக்குடிகள் அழைத்திருக்கின்றனர். இதன் அர்த்தம் 'எரியும் சிவப்பு நிலம்' என்பதாகும். அருவி விழும் பாறைகளில் 'சல்லிப்பயல்களாகிய' மனிதர்கள் தங்கள் பெயர்களை எழுதி அதன் இயல்பைக் குலைத்திருந்தாலும், பாறைகள் பல 'செம்பாட்டு'நிறத்தில் இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் இந்த இடத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கின்றது. இங்கே பல காலங்களுக்கு முன் எரிகல் ஒன்று விழுந்திருக்கின்றது.
இந்த அருவியைச் சுற்றி நாம் நடந்து பார்க்கும் trailம் இருக்கின்றது. நான் முற்றுமுழுதாக அதன் முடிவுவரை நடந்து பார்க்கவில்லையெனினும், நடந்தவரைக்கும் ஏதோ காட்டிற்குள் நிற்பது போன்ற உணர்வைத் தந்திருந்தது. அத்துடன் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உரிய நடைபாதையது. நிறைய மூச்சுவாங்கித்தான் நடக்கவேண்டியிருந்தது.
இந்த ஆற்றுக்கு ஒரு விநோதமான பின்னணி இருப்பதை இங்கே போனதன் பின்னரே அறிந்துகொண்டேன். 1950களில் A.Y. Jackson இங்கே வந்து ஆற்றைப் பார்த்து ஓவியத்தை வரைந்திருக்கின்றார். இவர் கனடாவில் பிரசித்திபெற்ற குழுவான Group of Seven என்கின்ற ஓவியக்குழுவை ஆறு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியிருக்கின்றார். கனடாவின் அழகு என்பது அதன் பரந்த நிலப்பரப்புக்களில்தான் இருக்கின்றது என்று, இந்தக்குழு கனடா எங்கும் பயணித்து இந்நாட்டின் நிலவியல் காட்சிகளை வரைந்திருக்கின்றனர்.
அப்போதுதான் ஜாக்சன் இங்கே வந்திருக்கின்றார். அந்தக்காலத்தில் இப்போது நாங்கள் போவதுபோல நெடுஞ்சாலை அமைந்திருக்கவில்லை. புகையிரப் பயணம் மூலமும், மிச்சத்தை நடந்து வந்தும் இந்த ஆறு பாயும் காட்சியை வரைந்திருக்கின்றார். அதற்கு "Spring on the Onaping River” எனப் பெயரிட்டிருக்கின்றார். இந்த ஓவியத்தை ஒரு கல்லூரி வாங்கித் தமது வளாகத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றது. பின்னாளில் இந்த Group of Seven ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் பிரபல்யமானபோது, ஜாக்சனின் "Spring on the Onaping River” களவு போயிருக்கின்றது. அவ்வப்போது இந்த ஓவியம் எங்கே பதுக்கப்பட்டிருக்குமென அவ்வப்போது புதிய குழுக்கள் தேட வெளிக்கிட்டாலும், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆனபிறகும் இந்த ஓவியம் கண்டுபிடிக்காமலே இருக்கின்றது.
எனினும் ஜாக்சன் இந்த இடத்துக்கு வந்து ஓவியம் வரைந்ததை பெருமை செய்யும் இடமாக, இந்த ஆற்றை அவர் எந்த இடத்தில் இருந்து வரைந்திருந்தாரோ அந்த இடத்துக்கு இப்போது "A.Y Jackson Lookout" இடமெனப் பெயர் சூட்டி அவரை நினைவுகூர்கின்றனர்.
நீர்வீழ்ச்சி/அருவிகளைப் பார்க்கும்போது எனது யோசனைகள் 'மப்பில் மிதக்கும் மந்தி' போல வேறெங்கும் அலையாது, நிகழில் நிற்பதை அவதானித்திருக்கின்றேன். அது அருவியின் சலசலத்தோடும் சப்தத்தாலும், அவை உருவாக்கும் நீர்ச்சுழிகளாலும் எங்கும் என் சிந்தனைகள் தெறித்தோடாமலும் இருப்பதை இங்கும் பாறையில் படுத்திருந்து அருவியின் இசையையும், வானத்தின் நீலத்தையும் பார்த்துக்கொண்டிருந்தபோது உணர்ந்தேன்.
2.
Onaping அருவிலியிருந்து 200 கிலோமீற்றர்கள் பயணித்து Manitoulin Island நோக்கிச் செல்வதாக அடுத்த இலக்கு இருந்தது. Manitoulin தீவு, உலகிலேயே நன்னீர் ஏரிகளால் சூழப்பட்ட மிகப்பெரும் தீவாகும். கிட்டத்தட்ட 2500 கிலோமீற்றர்கள் பரப்பளவு உடையது. நன்னீர் ஏரிகளால் சூழப்பட்டவை.
தீவுகள், தீவுகளுக்குள் தீவுகள் (Islands within Islands) எனப் பிரசித்தம் பெற்றது மட்டுமில்லை, நன்னீர் ஏரிகளைப் போல, மிகுந்த சுத்தமான காற்றுக்கும் (சுவாத்தியத்துக்கும்) பெயர் பெற்றது. இந்தத் தீவில் இப்போது கிட்டத்தட்ட 40வீதத்துக்கு மேலே பூர்வகுடிகளே இருக்கின்றனர். சில பகுதிகள் Unceded Indian Reserve ஆக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இங்கே இயற்கை வளங்கள் அவ்வளவு கவனமாகப் பாதுகாக்கப்படுவதால், பெரிய கடைகளோ கட்டங்களோ கண்ணில்படதாததால் காரையோட்டிக்கொண்டுப் போவது அருமையான அனுபவமாக இருக்கும். அடர்த்தியான காடுகள், நீர்வீழ்ச்சிகள், சமதரைகள் என மாறும் நிலப்பரப்புகளும், சுத்தமான காற்றும், செயற்கை வெளிச்சங்களால் மாசுபடாத வானமும் நமக்கு இங்கே கொடைகளாக அருளப்பட்டிருக்கின்றன.
இந்தத் தீவின் முதல் நகரான Little Current இற்குள் நுழைவதற்கு ஒரு பாலமே உதவுகின்றது. இது கிட்டத்தட்ட 180 பாகையில் நகரக்கூடிய பாலம். கார்கள் ஓடிச் செல்வதற்கும், மறுபுறம் திரும்பி - நீரில் போகும்- படகுகளுக்கும் வழி கொடுப்பதற்குமாக இது அசையக்கூய ஒரு பாலமாகும். நூற்றாண்டாகும் இந்தப் பாலம் விரைவில் மாற்றம் பெற்றுவிடும் என்கின்றார்கள். ஆனால் இந்த நகரும் பாலத்தினூடாகப் போவது வித்தியாசமான ஓர் அனுபவம்.
Airbnb ஊடாகப் பதிவு செய்து இடம் Manitowering இல் இருந்தது. அதற்கருகிலேயே பூர்வீகக்குடிகளில் நகரான Wikwemikong இருந்தது. உணவுக்கும் அவ்வளவு இடங்கள் இருக்காது. இருந்தவையும் விரைவிலேயே மாலையில் பூட்டிவிடுகின்றன. எனவே முப்பது கிலோமீற்றர்கள் மேலும் தெற்குபோய் ஒரு உணவத்தைக் கண்டுபிடித்து, அங்கே பிரசித்தமான Yellow Perch மீனுடன் இரவுணவை முடித்தேன்.
***********
(2021 கோடை)
0 comments:
Post a Comment