கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்.பொவின் 'நீலாவணன் நினைவுகள்'

Saturday, April 09, 2022

 (எஸ்.பொ - பகுதி 07)


'இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவன் நான்' என்ற இறுமாப்புடன் என்னை 'வித்தக விமர்ச'கனாகவோ, ஞானம் பாலிக்கும் 'ஆசானா'கவோ இலக்கிய உலகிலே நானை திணித்துக் கொண்டனல்லன். அன்றும், இன்றும், நாளையும் அந்த இனிய உலகிலே நான் பரமார்த்த ஊழியனே. 'நான் இலக்கிய உலகிலே இவற்றைச் சாதித்துவிட்டேன்' என்று எதையாவது தொட்டுக்காட்டவும் கூச்சப்படும் ஒரு முதிர்ச்சியும் என்னை வந்து சேர்ந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் நான் எழுதியவை எல்லாம், நாளை நான் எழுதப்போகும் ஓர் உன்னத இலக்கியப் படைப்பிற்கான பயிற்சியே என்று சத்தியமாக நம்புபவன் நான். எனவே, என் கருத்துக்களைச் செலவாணிப்படுத்தும் அதேவேளையில், இன்றளவும், எல்லோரிடத்திலிருந்தும், நேற்றுத்தான் பேனா தூக்கிய ஓர் இளவலின் அனுபவத்திலிருந்துங்கூட, எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவனாய் இருக்கிறேன்.


(எஸ்.பொ, 'நீலாவணன் நினைவுகள்', ப 120)


1.


நீலாவணன் கிழக்கிலங்கையில் பிறந்த முக்கியமான கவிஞர். எஸ்.பொவின் காலத்துக்குரியவர். நீலாவணன் இளவயதில் (44) காலமாகும்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரையை விரித்து பின்னர் எஸ்.பொ எழுதியதே நீலாவாணன் நினைவுகள் பற்றிய நூலாகும்.


எஸ்.பொ, 80களில் கலாமோகனின் வீட்டில் பாரிஸில் தங்கியிருந்தபோது, அங்கே அப்போது வாழ்ந்த நமது 'காலம்' செல்வத்தார் பாரிஸ் அழகிகளையும், நெப்போலியனையும் தேடிப் போகாத காலத்தில் (விரிவான விபரங்களுக்கு செல்வத்தாரின் 'எழுதி தீராக் கதை'களை வாசிக்க), எஸ்.பொவைச் சந்தித்திருக்கின்றார். பின்னர் கனடா வந்த செல்வம் 'மஹாகவி' உருத்திரமூர்த்தியின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுகின்றார். அதனைப் பாராட்டும் எஸ்.பொ, 'யாழ்ப்பாண இலக்கியப் பங்களிப்பு = ஈழத்து இலக்கிய வளம்' என்கிற பழைய தவறுகளை இயற்றாது, மட்டக்களப்பின் தற்கால எழுத்து எழுச்சிகளையும் ஆவணப்படுத்தும் வகையில் கவிஞர் நீலாவணன் பற்றியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடும்படியாகக் கேட்கின்றார். அதிலிருந்தே இந்த நூல் எழுதும் காலம் கனிந்தது என்கிறார் எஸ்.பொ. இந்த நூல் 'காலம்' வெளியீடாக 94ம் ஆண்டு வெளிவந்திருக்கின்றது.


எஸ்.பொ இந்த நூலில் நீலாவணனுடனான நினைவுகளினூடாக அந்தக்கால இலக்கியப் போக்குகளையும், இலக்கியவாதிகளையும் அசை போடுகின்றார். முக்கியமாய் 60களில் கிழக்கிலங்கையில் கலை இலக்கியம் சார்ந்து நிகழ்ந்த சம்பவங்களை நாங்கள் இந்தத் தொகுப்பினூடாக அறிகின்றோம். நீலாவணன் அந்த மண்ணின் கவிஞராக இருந்தது பற்றி, நீலாவணனின் கவிதைகளை முன்வைத்து எஸ்.பொ பேசுகின்றார். அப்படிச் செய்யும்போதும் நீங்கள் எனது வாசிப்பினூடாக நீலாவணனைப் பார்க்கத் தேவையில்லை, நீங்களே தேடி வாசித்து உங்களுக்கான பார்வைகளை உருவாக்குங்கள் என்றும் எஸ்.பொ எங்களுக்குத் தெளிவாக இங்கே சொல்கின்றார்.


எஸ்.பொ, முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறிய காலத்தை அண்டிய பகுதியில், எஸ்.பொவுக்கு நீலாவணனின் நட்பு வாய்க்கின்றது. ஒரு மேடையை முதன்முதலாக இருவரும் பகிரும்போதும் இரண்டுபேரும் ஒருவர் கருத்தை ஒருவர் மறுத்தே பேசுகின்றனர். காலப்போக்கில் அவர்களை அறியாமலே ஒரு நல்லதொரு நட்பு அவர்களுக்கிடையில் முகிழந்து விடுகின்றது. தன்னைப் போலவன்றி முற்போக்கு முகாமை விட்டு வெளியே வந்துவிடாத நீலாவணனை, கைலாசபதியோ, சிவத்தம்பியோ தமக்கான ஆஸ்தான கவிஞர்களாக முன்னிறுத்திய முருகையன், பசுபதி போலக் கூட கவனப்படுத்தவில்லை என்று எஸ்.பொ கவலைப்படுகின்றார்.


நீலாவணன், மஹாகவி உருத்திரமூர்த்தி மீது அளவற்ற பற்று வைத்திருந்தவர். மஹாகவியை எங்கும் விட்டுக் கொடுக்காதபோதும், அவர்களுக்கிடையில் தான் அறிந்த காலங்களில் அவ்வளவு நட்பு இருக்கவில்லை என்கின்றார். மஹாகவி கிழக்கில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் கூட, அவர்களுக்கிடையில் அவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடந்ததில்லை என்கின்றார். அது ஏனென்றும் தனக்குத் தெரியவில்லை என்கின்றார். அதுபோலவே எஸ்.பொவும், நீலாவணனுடன் அவரின் இறுதிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொடர்பில் இல்லாமலே இருந்திருக்கின்றார். தனிப்பட்டோ அல்லது இலக்கியஞ் சார்ந்தோ வராத ஊடலினால் இறுதிவரை பிறகு நீலாவணனோடு பேச முடியாமற் போய்விட்டது என்று கவலைப்படுகிறார். நண்பர்களாய் இருப்பவர்கள் பெரிய காரணங்கள் எதுவுமின்றி ஒருகட்டத்தில் பிரிவதும், பிறகு என்றென்றைக்குமாய்ச் சந்திக்க முடியாமல் இருப்பதும் இலக்கிய உலகில் வழமையாக நடைபெறுபவைகள்தானே.


நீலாவணன் குறித்த இந்தப் பதிவுகளில் எஸ்.பொ,  விபுலானந்தரின் ஆழ்ந்த உழைப்பும், பல்துறைத் திறமையும் எப்படி யாழ்ப்பாண வித்தகக் கும்பலால் மறைக்கப்பட்டது என்பது பற்றி எழுதுகின்றார். அதேவேளை யாழைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர்கோன் உண்மையிலே கிழக்கிலங்கையில் இலக்கியம் செழிக்க பல்வேறுவழிகளில் உதவியிருக்கின்றார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.நீலாவணனுக்கும், இலங்கையர்கோனுக்கும் இருந்த உறவைப் பற்றி எஸ்.பொ விபரிக்கும்போது நமக்கும் நெகிழ்ச்சி வருகின்றது. அவ்வாறு இலங்கையர்கோன் பற்றி வ.அ.இராசரத்தினம் நெகிழ்ச்சியாக, தனது நினைவுகளின் குறிப்புகளில் எழுதியது எனக்கு நினைவுக்கு வருகின்றது.


எஸ்.பொவுக்கு, இலங்கையர்கோனோடும் இலக்கியக் குறித்த கருத்துக்களில் சர்ச்சை வருகின்றது. இருவருக்கும் நெருக்கமான நீலாவணனுக்கு இந்த மோதலை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எஸ்.பொ அந்தக் கோபத்தில் நீலாவணன் வீட்டிலிருந்து புறப்பட்டு மட்டுநகருக்குப் போகப்போகின்றேன் என்கின்றார். நீலாவாணன் ஒருநாள் நின்றுவிட்டுச் செல்லுங்கள், இலங்கையர்கோன் தன் பக்கம் தவறிருந்தால் நிச்சயம் உங்களைச் சந்திக்க வருவார் என்கின்றார். அவ்வாறு இலங்கையர்கோன் வந்து மன்னிப்புக்கேட்டு எஸ்.பொவின் நினைவில் உயர்ந்த மனிதராக மாறுகின்றார்.


இலங்கையர்கோனின் மறைவு நீலாவணனைத் தாக்க, இலங்கையர்கோனை யாழ் வரை சென்று இறுதியாக வழியனுப்பி வைக்கின்றார். அப்படி நீலாவணனின் நிழலினூடாக வளர்ந்த எம்.ஏ.நுஃமான் பின்னர் மஹாகவி கொழும்பில் மரணமடைய யாழ்ப்பாணம் வந்து வழியனுப்பியதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். நுஃமான் என்ற மெல்லிய இளைஞனை அளவெட்டி வரை வரசெய்த இலக்கியத்தாகத்தினூடாக எஸ்.பொ, மஹாகவிக்கும் தனக்கும் இருந்த நினைவுகளை இங்கே நம்மோடு பகிர்கின்றார்.


இலங்கையர்கோன், நீலாவணனுக்கு இருந்தமாதிரி, நீலாவணன் அவ்வாறு பலரைப் பிறகு 'எழுத்தாளர் சங்கம்' என்ற அமைப்பை நடத்தி வளர்த்திருக்கின்றார். அதிலிருந்து முகிழ்ந்து வந்த முக்கியமான இருவராக நுஃமானையும், சண்முகம் சிவலிங்கத்தையும் எஸ்.பொ கவனப்படுத்துகின்றார்.


2.


நீலாவணன், பாரதியாரை விட, பாரதிதாசன் மீது நிறைந்த பற்றுடையவராகவும், பாரதிதாசனின் கவிதைகளை மனப்பாடம் செய்து பாடுகின்றவராகவும் இருந்திருக்கின்றார் என்கின்றார். எஸ்.பொவுக்கு பாரதிதாசன், திராவிட இயக்கங்களின் உணர்ச்சிக்குள் வீழ்ந்துவிட்ட கவியென்கின்ற பிம்பம் இருக்கின்றது. எனவே நீலாவணனுக்கு இருக்கும் பாரதிதாசப் பிடிப்பை எதிர்மறையாக அவ்வப்போது குறிப்பிடுகின்றார். அதேவேளை நீலாவணனுடன் அவரின் கடைசிப் பத்தாண்டுகளில் தொடர்பில்லாததால் நீலாவாணன் கூட சிலவேளைகளில் மாறியிருக்கலாம் எனவும் எஸ்.பொ இந்நூலில் குறிப்பிடுகின்றார்.


மஹாகவி, இலங்கையர்கோன் போல இந்த நூலில் சற்று விரிவாகப் பேசப்படும் இன்னொருவர் ஏ.ஜே.கனகரத்ன. எஸ்.பொ, ஏ.ஜேவுடன் யாழில் கிராண்ட் ஹொட்டலில் மதுவை சிறுசிறு மிடறுகளாக அருந்தியபடி இலக்கியம் பேசியது அற்புதமானது என்கின்றார். பிறகு எஸ்.பொவும், ஏ.ஜேவும் நீலாவணனின் வீட்டிலும் இருந்து பேசியிருக்கின்றனர். ஆனால் இதைவிட இம்மூவரும் கொட்டாஞ்சேனையில் இருந்து நீலாவணன் கவிதைகள் வாசிக்க, தாங்கள் மதுவருந்தி அதைக் கேட்டதும், கருத்துக்களைப் பகிர்ந்ததும் இன்னும் பேரின்பந்த தந்த அனுபவம் என்கின்றார் எஸ்.பொ.


ஏ.ஜே தமிழ் ஆக்கங்களை ஆங்கில ஆக்கங்களுடன் ஒப்பிட்டு நயப்பதும், கவிதைக்கு உருவகமொழி இன்றியமையாதது என நீலாவணனுக்குச் சொல்வதும், நீலாவணன் அதைப் பிறகான காலங்களில் எடுத்துக்கொள்வதுமென ஒரு கடந்தகாலத்தை நாங்களும் அவர்களுடன் இருந்து பார்க்கின்றோம். அதேபோன்று முற்போக்கு அணி தன்னை எல்லா இடங்களிலும் இருந்தும் தனிமைப்படுத்த, இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானும், நீலாவணனும், அவரின் கல்முனை நண்பர்களுமே தாங்கிப் பிடித்தார்கள் என்பதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். எம்.ஏ.ரஹ்மானின் பதிப்பகம் இல்லாதுவிட்டால் தன்னால் இவ்வளவு உத்வேகத்துடன் எழுதியிருக்க முடியாதிருந்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.


நீலாவணனின் சடுதியான இழப்பு எஸ்.பொவுக்குப் பேரிழப்பாக இருக்கின்றது. கிழக்கின் இலக்கியத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு சென்றிருக்கக் கூடியவர் இளவயதில் இல்லாமற்போய்விட்டாரே என்று கவலைப்படுகின்றார். நீலாவாணனின் முக்கிய நெடுங்கவிதையான 'வேளாண்மை'யை பிறகு நீலாவணனின் நண்பரான வ.அ.இராசரத்தினம் பதிப்பிக்கின்றார். அவ்வளவு வசதியில்லாத வ.அ.இராசரத்தினம், இதை நீலாவணனுக்காய் செய்கின்றார் என எழுதுகின்ற எஸ்.பொ அதனூடாக நமது வாசிப்புப் பழக்கத்தையும், காசு கொடுத்து நூல்களை வாங்கப் பஞ்சிப்படுத்தும் சூழலையும் கடுமையாக விமர்சிக்கின்றார். 


முக்கியமாக, 'புலம்பெயர்ந்த நாடுகளிலே கலாசாரப் பராம்பரிய வேர்கள் பட்டுப்போகாது பாதுகாக்க வேண்டிய அவலங்களுக்கு மத்தியிலே வாழ்பவர்கள் கூட,  பொருள் வசதிகள் இருந்தும், தமிழ் சினிமா உலகின் மூன்றாந்தர நடிகைகளின் குண்டி நெளிப்புக்குப் பொன்மாலை சூட்டத் தவிக்கிறார்களே ஒழிய, ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களைக் காசு கொடுத்து வாங்குவோம் என்கிற உணர்ச்சி அற்ற ஜடங்களாக வாழ்வதிலே பெரும்பாலும் திருப்திப்படும் அநியாய கோலத்தைப் பாக்கின்றோம். இத்தகைய அசட்டையும் பஞ்சிப்பாடும் நிலைத்திருக்கும் வரையிலும் ஈழத்து இலக்கியக்காரனின் படைப்புகளை நூலுருவிலே பேணும் ஆசை, ஓர் இனிய கனவாகவே கரைந்துபடும். இலவச கூப்பன் அரிசி நுகர்ந்து மகிழ்ந்த கூட்டத்தினருடைய சந்ததியினர், கலை-இலக்கிய ரஸனையை 'ஓசி'யில் பெறும் 'பொழுது போக்குப் பண்டம்' என்று கருதுதல் அவல் பேறாகும்.' என எழுதுகின்றார். 


எஸ்.பொ இந்தளவு கடுமையான கசப்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு, அன்று (94) வரை நீலாவணனின் ஆக்கங்கள் முழுவதும் நூலுருப் பெறவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


நீலாவணனின் நினைவுகள் என்கின்ற இந்த நூலினூடாக எஸ்.பொ நீலாவணனை மட்டுமில்லை இன்னும் பலரை நினைவுகூருகின்றார். அன்றையகால இலக்கிய உலகை, சர்ச்சரவுகளை, இழந்துபோன நட்புக்களை, அன்று தமிழ் X முஸ்லிம் என்ற முரண்கள் இல்லாது கலந்துபழகிய அந்நியோன்னியத்தை நமக்குக் கவனப்படுத்துகின்றார். சடங்கு, ஆண்மை, நனவிடைதோய்தல் போன்ற அரிய படைப்புக்களைத் தந்தபோதும், தன்னை இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் என்று எஸ்.பொ சொல்லிக்கொள்கின்றார். உண்மையின் உபாசகனாகவும், தமிழ் இலக்கிய ஊழியனாகவும் தன்னை என்றும் வைத்துப்பார்க்கும் எஸ்.பொ இந்த நூலினூடாக  தனது நல்லதொரு நண்பரை நினைவுகொள்வதன் மூலம், நீலாவணனை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் அறிமுகப்படுத்துகின்ற அரிய பணியைச் செய்திருக்கின்றார் என்றே கூறவேண்டும்.


**********

(2019)

0 comments: