கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022


1.


கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?


எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச் சாத்தியங்களையும் கொண்டு வரும். ஆகவேதான் ஸென்னில் தொடர்ந்து தொடக்கநிலை மனதை (beginner’s mind) பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கற்றுத் தேர்ந்துவிட்ட ஒரு மனதிலிருந்து புதிதாய் எதுவும் முகிழ அவ்வளவு சாத்தியமிருப்பதில்லை. இளவேனில் காலத்துக்கான துளிர்கள் மெல்ல அரும்புவது, அந்தத் ‘தொடக்கநிலை’யை நமக்குக் காட்ட விரும்பும் இயற்கையின் குதூகலம் போலும். 


இதற்கு முன் அந்த அரும்புகள் மரத்தின் எந்தப் பாகத்தில் மறைந்து இருந்தன. இனி தளிராகி, குருத்திலையாகி, கடும்பச்சை நிறமாவதற்கான பச்சையத்தை இந்தத் துளிர்கள் எதில் ஒளித்து வைத்திருக்கின்றன.


இதைத்தான் இன்னொருவகையில் ஸென் ‘நாம் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை’ என்று சொல்கின்றது. இதை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்து வாசித்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை. நாம் பிறக்கும்போது அதுவரை எங்கோ ஒரு 'சூனியத்தில்' இருந்த ஒன்று உடல் என்கின்ற வடிவத்தைப் பெறுகின்றது. பின்னர் இறப்பின்போது மீண்டும் வெறுமைக்கு அல்லது சூனியத்துக்குத் திரும்பிப் போகின்றது. 


இல்லாமையிலிருந்து இருத்தல்களும், இருத்தல்களிலிருந்து இல்லாமைகளும் ஒரு வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதால் 'எதுவும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை' என்பதை, வார்த்தைகளின் எளிய அர்த்தத்தைத்தாண்டி, ஆழமாய் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதானதும் இல்லை.


2.


வழமையாக ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவிற்கு நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பவன், ஆனால் இப்போது பாலத்துக்குக் கீழே திருத்தும் வேலை நடப்பதால், அந்தப் பாதையை இடையில் மூடிவிட்டார்கள். வேலை ஒன்றை எப்படி இழுத்து இழுத்துச் செய்வதில் நமது நகரத்தார் புகழ்மிக்கவர்கள் என்பதால் எப்படியும் இந்த கோடையில் அதைத் திறக்க மாட்டார்கள் என்பது உறுதியென அவன் நினைத்துக்கொண்டான். மேலும் புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை சொன்னது மாதிரி, ‘எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை' என்பதால் இது குறித்து எந்தப் பொல்லாப்புமில்லை. ஆனால் நமக்களிக்கப்படும் வாய்ப்புக்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சந்தர்ப்பங்கள் மாறமுன்னர் அதையதை அனுபவித்துவிடும் விழிப்பு இருத்தல் முக்கியம். அனுபவித்தவற்றை விட, தவறவிட்டவைகளின் கழிவிரக்கத்தில் கழிந்த கடந்தகாலங்களை எண்ணி அவனுக்கு மெல்லிய சிரிப்பும் வந்தது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்குந்தான் எவ்வளவு பெரிய‌இடைவெளி!


நல்லவேளையாக கடந்த கோடையில் இன்னொரு மாற்று பாதையைக் கண்டடைந்துவிட்டதால், அடைபட்ட வழி குறித்து கவலைப்படாது புதிதாய்க் கண்டுபிடித்துவிட்ட தடங்களில் அவன் நடக்கின்றான். அங்கே பெருமரங்களும், மழைநீர் சேர்ந்து சலசலத்தோடும் சிற்றாறும் இருப்பதால் அது ஓர் அருமையான வழித்தடம். ஆகவே ஒரு பாதை அடைபட்டால் எல்லாம் முடிந்துவிட்டதெனக் கவலைப்படத் தேவையில்லை. வேறொரு வழி நாம் அதுவரை கண்டுணராத‌புதிய அனுபவங்களைத் தருவதற்காக திறபடலாம். 


இது பாதைக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும்.


நடப்பதற்கான ஒரு வட்டப்பாதையை வழமைக்கு மாறாக, நடந்து முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குகின்றான். அதே பாதை, ஆனால் வேறொரு கோணத்தில் பார்வைகள் மாறுகின்றன. முன்னர் ஏறவேண்டிய மேட்டு நிலம் இப்போது சரிவான பள்ளமாக‌-தேர்ந்தெடுத்த பாதையின் நிமித்தம்- புதிய அவதாரம் கொள்கின்றது. ஆக ஒரே பாதையில் நடந்திருக்கக் கூடியவர்கள், அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் திசையின் நிமித்தம் அதன் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும்போது, ஒருவர் தான் சொல்வது/பார்த்ததுதான் உண்மையென விவாதிப்பது எவ்வளவு தூரம் சரியான பார்வையென்பது கேள்விக்குரியதே. ஆகவேதான் ஸென், நல்லது, கெட்டது என எதையும் அடையாளப்படுத்த வேண்டாமெனச் சொல்கின்றது.  எதைக் காண்கின்றோமோ அதை அப்படியே பார்க்கச் சொல்கின்றது. எந்த லேபிள்களும் எதற்கும் ஒட்டாதிருக்கத் தெரிந்தவர்கள் மேன்மக்கள். 


ஒருவர் ஞானமடையத்தான் தியானம் செய்கின்றார் என்றால், அந்தக்கணத்திலேயே நிர்வாணம் அடைவதிலிருந்து அவர் விலகிப் போய்விடுவார் என திரும்பத் திரும்ப ஸென் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. 


மரங்கள் இன்னமும் முழுமையாகப் பசுமை போர்க்கவில்லை, ஆனால் பொன்மஞ்சள் நிறத் தளிர்கள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்களே இல்லாத பொழுது இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது. இன்னொரு வகையில் நாங்கள் எமது எல்லா 'பைத்தியக்காரத்தனத்தோடும்' தனிமையில்தான் இயல்பாக இருக்க முடிகிறது. நதி ஓடும் ஒலியை, அது உருவாக்கும் குமிழ்களை, வாத்துக்கள் பறந்து நீரில் சிறகுகள் நனைப்பதை என எல்லாவற்றையும் ஆறுதலாக அவதானிக்க அவனது மனதுக்குள் ஒரு வெம்மை பரவுகிறது 


வழமையாக நடக்கத் தொடங்கும் பாதையெனில் அங்கே ஒரு பெரும் சாம்பல்கல் இருக்கும். அதில் அமர்ந்தபடி நதியை இவன் பார்ப்பான். சிலவேளை அப்படியே விழிகளை மூடியபடி அமைதியில் அமிழ முயல்வான். ஒருநாள் இந்தச் சூழலில் அவ்வளவு காணமுடியாத ஒரு பச்சைப் பாம்பு அருகில் வந்து எட்டிப் பார்த்ததைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றான். பாவம் அந்தப் பாம்புதான் என்ன செய்யும். அதன் வசிப்பிடத்துக்கு மனிதன் ஒருவன் வந்து இடையூறு செய்தால் அது விநோதமாக வேடிக்கைதானே பார்க்கச் செய்யும்.


3.


'ஓநாய் குலச்சின்னம்' நாவலில் கால்நடைகளை மேய்த்தபடி புல்வெளிகளை அழியாமல் வைத்திருக்கும் நாடோடிகளுக்கு ஓநாய்கள் தெய்வத்துக்கு நிகர்த்தவை. ஒநாய்களைத் தேவையில்லாமல் கொன்றாலோ, பழிவாங்கினாலோ அவர்கள் டெஞ்ஞர் என்ற சொர்க்கத்துப் போகவே முடியாது. நாடோடிகளையும் அவர்களின் கால்நடைகளையும் அடிக்கடி காயப்படுத்திக் கொல்லும் ஓநாய்களுக்கே, தமது இறந்த உடல்களை இந்த நாடோடிகள் உண்ணக் கொடுக்கின்றனர். நன்றாக ஓநாய்களால் உண்ணப்படும் உடலே உடனே சொர்க்கத்துக்குப் போகும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவேதான் சீனக்காரர்களுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, என்றாலும் சிலபகுதிகளில் நாய்களைச் சாப்பிடுவார்கள் என்று இந்த மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடிகள் அறியும்போது, 'எப்படி உங்களால் நீங்கள் வெறுக்கும் ஒரு பிராணியை பிறகு உணவாகச் சாப்பிட முடிகின்றது' என்று கேட்கின்றனர். 


இப்போது எதிர்த்திசையில் நடந்துகொண்டிருப்பதால், ஆறு ஓடும் கரையில் இருந்து 'ஸென் மனம்; தொடங்குபவர்களின் மனம்' கேட்கத் தொடங்குகின்றான். எப்போது எதில் அவன் அமிழ்ந்து தன்னைத் தொலைத்தானோ சட்டென்று கட்டுக்கயிறு இல்லாது வந்த நாயொன்றால் விழித்தெழுகின்றான். நாய்களைப் பிடிக்கும், ஆனால் சிறுவயதில் பல நாய்களிடம் ஆறாத்தழும்புகளையெல்லாம் பெற்றுவிட்டாதால், எப்போதும் ஒரு பயம் அவனுக்கிருக்கும்.  அந்த நாயை வளர்ப்பவர் தூரத்தில் வர, அருகில் வரும் நாயை அரவணைப்பதா, இல்லை துரத்துவதா என்ற குழப்பமெழ, தகாதகர் கூறிய மத்தியபாதையே நல்லதென துரத்துவதைப் போல மெல்ல pet செய்து விடுகின்றான்.


'அந்த மனிதன் சும்மா தன்பாட்டில் இருக்கின்றான், அவனையேன் கஷ்டப்படுத்துகின்றாய், அன்பே' என்று நாயின் சொந்தக்காரர் சொல்லியபடி வருகின்றார். 'பரவாயில்லை' என இவன் சொல்கின்றபோது, 'இந்த நாள் அழகான நாள்' என்று சொல்லியபடி அவர் கடக்கின்றார். இவன் நினைவுகளில் மூழ்கின்றான். 'ஓநாய்குலச்சின்னத்தில்' நாடோடிகளின் வாழ்க்கையைக் கற்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் செல்லும் சீன மாணவன் ஒரு ஓநாயை,  குகையில் இருந்து குட்டியாக எடுத்து வளர்க்கின்றான். அதற்கு பால் கொடுக்க ஒரு நாயைத் தேர்ந்தெடுத்து, அதன் பிற குட்டிகளோடு இந்த ஓநாயையும் சேர்த்துவிடுகின்றான். நாய் எப்படிப் பால் கொடுத்தாலும் ஓநாய் தன்னியல்பை விடாது மூர்க்கமாகவே நடந்துகொள்ளும். 


ஆண் என்பதாலோ அல்லது தன்னியல்பாகவே வந்துவிட்ட மமதையோடு அவன் போனால் கூட, தம் நெஞ்சங்களைத் திறந்து அரவணைத்த காதலிகளை நினைத்துக் கொள்கின்றான். தானொரு ஓநாய்தான், ஒருபோதும் கருணையுள்ள நாயாக மாறமுடியாது அதில் சந்தேகமில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றான்.


4.


ஜப்பானிய தேநீர் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய Sen Rikyu, ஒவ்வொரு தேநீர் நிகழ்வின்போதும்,  தான் ஒவ்வொரு கணங்களிலும் இறந்து பிறப்பதாகச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவ்வளவு விழிப்புடன் அந்தத் தேநீர்க்கலையை நிகழ்த்தும் அற்புதம் பெற்றவர் அவர். தியானம் மூலம் வரும் விழிப்பும் இப்படி கணங்களில் இருந்து எழுவதேயாகும். இவ்வாறு கணங்களில் இருப்பையும் இறப்பையும் கண்டுணர்கின்ற Sen Rikyu, தன்னோடு சூழவிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தேநீர் விருந்தை இறுதியாகக் கொடுத்துவிட்டு தனக்கான தற்கொலையை நிதானமாகச் செய்து கொளகின்றார். ஒவ்வொரு கணங்களில் இருப்பையும், இறப்பையும் கண்டுணர்ந்தவர்க்கு, உடல் நீங்கிச் செல்லல் அவ்வளவு கடினமாக இருக்காது போலும்.


அவன் நடந்த தன் வட்டத்தைப் பூர்த்தி செய்யும் இடத்துக்கு வந்தபோது, நாயோடு எதிர்த்திசையில் போனவரை மீண்டும் சந்திக்கின்றான். எதிர்த்திசை என்றாலும் வட்டம் உங்களை மீண்டும் சந்திக்க வைக்கும். நல்ல மழை பெய்ததால் உலாப்போகும் பாதை பல இடங்களில் சகதியாக இருந்ததை அவன் ஏற்கனவே அவதானித்திருந்தான். நாயோடு வந்தவர், ‘நான் வந்தவழியில் சறுக்கிவிழுந்துவிட்டேன், நீ கவனமாக நடந்துபோ என்று தனது சேறு அப்பிய ஜீன்ஸைக் காட்டுகின்றார். ‘கவனமாக நடப்பேன், எச்சரித்தமைக்கு நன்றி’யென அவருக்கு விடைகொடுத்து நகர்கின்றான்.


வீட்டுக்கு வந்தவுடன் பின் வளவில் நேற்று சிறுதளிராக இருந்த மரத்தில் இருந்தவை அனைத்தும், பொன்மஞ்சள் சிற்றிலைகளாக‌விரிந்து காற்றில் அசைவதை ஒருநாளில் நடந்துவிட்ட அற்புதமென நினைக்கின்றான். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது பின்னிரவில் ஆஸ்மா தொந்தரவு செய்கின்றது. தலையணைகளை முதுகில் வைத்து நிமிர்ந்து இருந்தால் கொஞ்சம் சுகமாகவிருக்கும். ஆனால் இதுவும் ஓர்நாளில் சட்டென்று நடந்துவிடக் கூடியது நிகழ்வுதான். ஒவ்வொரு கணத்திலும் இறப்பும் இருப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தால் இதையும் சகித்துக் கொள்ளலாம். ஓர் அழகான நாளைப் போல இதுவும் கடந்துபோகும்.


ஒருபோதும் தம்மை வந்தடையும் பாதைகளை மூடிவிடாத காதலிகளின் கருணையின் பொருட்டும், இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!


****************


(நன்றி: "அம்ருதா" -மார்கழி, 2022)


0 comments: