தமிழில் - மோ.செந்தில்குமார்
'கபர்' மிகச் சிறிய நாவல். குறுநாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஏழு அத்தியாயங்களே உள்ள ஒரு புனைவு. எனினும் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதிக பாய்ச்சல்களை ஏற்படுத்தும் என்று நம்பிய மாய யதார்த்த கதைகள், பின்னர் மொழியை மட்டும் கடுமையாக்கி பாவனைகளைச் செய்யச் தொடங்கியபோது அது எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை. ஆனால் மலையாளத்தில் அந்தவகை எழுத்துக்களுக்கான இடம் இன்னுமிருக்கின்றது போலும். மிகக் குறைந்த பக்கங்களில் கூட ஒரு மாய யதார்த்தப் புனைவைச் சொல்ல முடியும் என்பதற்கு கே.ஆர்.மீராவின் இந்த நாவலை உதாரணமாகச் சொல்லமுடியும்.
பாவனா என்கின்ற நீதிபதியின் முன்,விற்கப்பட்ட ஒரு காணியில் இருக்கும் கபரை இடிப்பதற்கான தடை செய்வதற்கான வழக்கு வருகின்றது. அதிலிருந்து பாவனா என்கின்ற் நீதிபதியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகின்றது. ஒரு கபரிலிருந்து வரலாறு பின்னோக்கி நகர்கின்றது. யதார்த்தத்தில் நடக்கவே முடியாத பல விடயங்கள் நிகழத்தொடங்கின்றன.
கே.ஆர்.மீரா |
இப்படியான காசிக்குப் போகும் மரபில் யோகீஸ்வரன் மாமா என்கின்ற ஒருவர் மட்டும் காசிக்குப் போய்விட்டு 5 வருடங்களில் திரும்பிவருகின்றார். அவர் திரும்பிவரும்போது தனியே வரவில்லை. இரண்டு பெண்பிள்ளைகளையும் கூட்டிவருகின்றார்.
அந்த யோகீஸ்வரனை அவரின் மூத்த மருமகன் நுட்பமாகக் கொலை செய்தார் என்றும், இல்லை அவர் தடுமாறிக் கீழே விழுந்து இறந்தார் என்றும் வெவ்வேறு ஜதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான யோகீஸ்வரன் மாமாவுக்கும், இப்போது சமகாலத்தில் வழக்கு வந்த இந்த இஸ்லாமியர்களின் கபருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த நாவலின் மைய முடிச்சு.
இந்த ஜதிகக் கதை/வழக்குகளுக்கிடையில் பாவனாவின் சமகால வாழ்க்கையும் சொல்லப்படுகின்றது. அவர் திருமணம் செய்த பிரமோத், இவர்களுக்கு ஒரு ADHD குழந்தை பிறந்தபின் விலத்திச் போய்விடுகின்றார். தனித்த ஒரு தாயாக இருந்த இந்த ADHD குழந்தையை வளர்க்கும், சமாளித்து தன் நாளாந்தங்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தனித்த வேலை செய்யும் தாயின் அவதிகளையும் மீரா அவ்வளவு தத்ரூபமாக எழுதிச் செல்கின்றார். சாதாரணமாக ஒரு தனித்த தாயாக இருந்து பிள்ளையை வளர்ப்பதென்பதே கடினமாக இருக்கும்போது ஒரு ADHD குழந்தையையும் வளர்ப்பதென்பது வாசிக்கும் நமக்கு ஒவ்வொரு பொழுதும் நினைவூட்டப்படுகின்றது.
இத்தகைய அவதிக்கிடையில் பாவனாவின் கணவர் பிரமோத் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கான அழைப்பிதழை பாவனாவின் பெற்றோருக்கு அனுப்புகின்றார். அது ஒருவகை உளைச்சலை பாவனாக்குக் கொடுத்தாலும், அந்தத் திருமண நிகழ்வுக்கும் - எப்படியென்றாலும் தன் மகன் நாளை தன் தகப்பனையும் அவர் திருமணம் செய்த பெண்ணையும் சந்திக்கவேண்டியிருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் - அந்த நிகழ்வுக்குப் போகின்றார்.
இன்றைக்கும் தமது முன்னாள் காதலிகள்/மனைவிகள் இன்னொரு வாழ்விற்குள் நுழையும்போது, எவ்வளவு கொடுமைகள்/துன்பங்களைக் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுக்கும் பெரும்பாலானவர்களாய் ஆண்கள் இருக்கும்போது, அவர்களைப் போன்றவர்கள் பாவனா இந்த விடயங்களை எவ்வளவு நிதானமாக -அதன் அத்தனை துயரங்களோடும்- எதிர்கொள்கின்றார் என்பதை மீராவின் எழுத்தினூடாக நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.
இறுதியில் இந்தக் கபர் வழக்கு தள்ளிவைக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த 'கபர்' அங்கே இருப்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை என்பதால் வழக்கு நிராகரிக்கப்படுகின்றது.
வழக்கைப் பதிவு செய்த வாதியான காக்கசேரி கயாலுதீன் தங்ஙள் எப்படி மாந்தீரிகம் செய்து பாவனாவின் மனதை வாசிக்கின்றார் என்பது மிகச் சுவாரசியமானது. ஒருகட்டத்தில் அவரிடமிருந்தே மெல்ல மெல்லமாக கயாலுதீன் தங்ஙளின் மனதை வாசிக்கும் நுட்பத்தை பாவனாவும் கற்றுக் கொள்கின்றார். அது ஒருவகையில் பறக்கும் கம்பளங்களில் விரிந்து செல்லும் உலகாக, கயாலுதீன் தங்ஙள் முத்தம் தருகின்ற காதலானகவும் பாவனாவுக்கு மாறுகின்றார்.
இறுதியில் வழக்கு வேறுவிதமாகப் போனாலும், பாவனா தன் 'தாரவாடு' வம்சத்தின் யோகீஸ்வரன் ஏன் காசியிலிருந்து திரும்பி வருகின்றார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார். காசிக்குப் போய் மோட்சமடையாமல் யோகீஸ்வரன் திரும்பி வருவதற்குக் காரணம், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்பதாலேயாகும். அவரோடு வரும் பெண்கள் அவருக்குத் துணை புரிய வருகின்ற இரு ஜின்கள் என்பதை நாவலில் சொல்லாமலே நாம் புரிந்துகொள்கின்றோம்.
அந்தக் கபர் என்பது உண்மையிலே யோகீஸ்வரன் மாமா புதைக்கப்பட்ட இடம். அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது விபத்தாலோ இறந்ததோரோ என்னவோ, ஆனால் அவர் இரகசியமாகப் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அந்தக் குடும்பத்து பெண் ஒருத்தி அன்றைய கேரள ராஜாவிடம் முறையிடுகின்றார். யோகீஸ்வரன் மாமா குழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு ஒரு இஸ்லாமியரைப் போல இந்த அடையாளமில்லாத 'கபரு'க்குள் புதைக்கப்பட்டிருக்கின்றார் என்பதே நிகழ்ந்திருக்கின்றது.
அப்படியெனில் எதற்காக காக்கசேரி கயாலுதீன் தங்ஙள், தங்கள் பரம்பரையின் கபர் இதென்கின்றார். அதற்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. நாவலை வாசித்துப் பாருங்கள்.
இவ்வளவு குறைந்த பக்கங்களுக்குள் (100) ஒவ்வொரு அத்தியாயங்கள் தோன்றும் வியப்புத் தோன்றும் சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை மீராவினால் இப்படி எழுத முடிகின்றதே என்பதையே இந்த நாவல் முடிந்த பின்னும் யோசித்துக் கொண்டிருந்தேன்.
******************
(Oct 16, 2022)
0 comments:
Post a Comment