கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் நடந்தது என்ன?

Saturday, December 31, 2022


லங்கையில் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருப்பவை பின்நவீனத்துவ காலகட்டத்துக்கான மிகச் சிறந்த உதாரணம். இதை எந்த மார்க்சியரும் ஒரு இடதுசாரிப் புரட்சி என்று முழுமையாக உரிமை கோரமுடியாது. மார்க்ஸியர்களின் பங்களிப்பு இருக்கின்றதென -அது எவ்வகையான போராட்டமாக இருப்பினும்- சொல்லமுடியுமே தவிர இது முற்றுமுழுதான இடதுசாரிப் போராட்டம் அல்ல என்பது எவருக்குமே எளிதாகப் புரியும்.


1968 இல் பாரிஸில் மாணவர்கள் போராடத் தொடங்கியபோது, சார்த்தர் போன்ற அறிவுஜீவிகள் அது ஒரு பெரும் புரட்சியாக மாறுமெனக் கனவு கண்டார்கள். ஆனால் அது அப்படியாக நிகழவேயில்லை. பின்னர் ஈரானில் கலாசாரப்புரட்சி நிகழ்ந்தபோது ஃபூக்கோ போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அதற்கு ஆதரவளித்தனர். அதுவும் நம்பியதற்கு மாறாக வேறொரு திசையில் சென்று முடிந்தது. அண்மையில் நடந்த அரபு வசந்தம் மிகுந்த நம்பிக்கையோடு முகிழ்ந்தபோதும் பின்னர் திசைமாறியதை அவதானித்திருப்போம்.

இலங்கையில் நடந்ததைப் போல மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமென என்னைப் போன்றவர்கள் நம்பிய occupy wall street ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம்பிக்கையுடன் நிகழ்ந்தபோதும், பணக்கார 1% வீதத்துக்கு எதிரான 99% க்கு ஆதரவாக நடத்தப்பட்டபோதும், எவ்விதப் பெரும் மாற்றங்களையும் காட்டாமலே முடிந்துபோனது. இந்தப் போராட்டங்களை ரொறொண்டோவிலும், லண்டனிலும் நேரில் பார்த்திருக்கின்றேன். முற்றுமுழுதான முதலீட்டிய நாடுகள் நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாது மிகக் கவனமாக இவ்வகைப் போராட்டங்களைப் பார்த்துக்கொள்ளும். நாசூக்காய் இவ்வகைப் போராட்டங்களை அவற்றுக்குக் கையாளவும் தெரியும். ஆனால் இந்தப் போராட்டங்கள் நடந்தபோது கைக்கொள்ளப்பட்ட பல விடயங்களையே GotaGoGama காரர்கள் உள்வாங்கியிருந்தனர் என்பது வெளிப்படையானது. ஒவ்வொரு போராட்டங்களும் அவை தோற்றவையாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்களை வைத்திருக்கவே செய்கின்றன.

ஆக இனியான மாற்றங்கள் இப்படியாக சடுதியாக நிகழுமே என்பதைத்தான் பின்நவீனத்துவமும் பின்நவீனத்துவவாதிகளும் எதிர்வு கூறியிருந்தனர்.

நமக்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டம் என்றாலும் லியோதார்த் 'பின்நவீனத்துவ நிலவரத்தை'ப் பற்றிப் பேசும்போது மார்க்ஸிசம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை நிராகரிக்கின்றார். அதற்கு முக்கிய காரணங்களாக தொழில்நுட்பத்தையும், வெகுசன ஊடகங்களின் பெருக்கத்தையும் (1970 இன் பிற்பகுதியில்) அவர் முன்வைக்கின்றார். அன்று லியோதார்த் எதிர்வுகூறியதை இன்றைய சமூகவலைக்காலத்தில் நடக்கும் போராட்டங்களினூடாகத் தெள்ளிடையாகப் பார்க்கின்றோம்.

நான் மிகவும் நெருக்கமாக உணரும் தெரிதா எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல என்று கூறிவிட்டு அருமையாக ஒரு விளக்கம் தருவார். எதிர்காலம் என்பது கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியது என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா.

தெரிதா சொல்வதற்கு நிகரான ஒன்றுதான் இப்போது இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பது. முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகையாக இந்தப் போராட்டம் நிகழ்ந்து, நவீன துட்டகைமுனுவாக சிறுபான்மையினரின் குரல்களை நசுக்கித் தங்களுக்கான மகாவம்சத்தை எழுதியவர்களை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சேர்த்து வீழ்த்தியிருக்கின்றார்கள்.

(ஒருகாலத்தில் மிக ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்த பின்அமைப்பியல்/பின்நவீனத்துவத்தைக் கற்பதிலிருந்து என்றோ விலகி வந்துவிட்டேன். ஆனால் இன்றும் எனக்கும் அவை நெருக்கமானவை. இலங்கைச் சூழலில் இப்போது நிகழும் மாற்றங்களை விளங்கிக்கொள்பவர்கள் இந்தப் பின்னணியோடும் ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட அவசரக் குறிப்பே இது)

*****************

(July 14, 2022)

0 comments: