கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.இரவியின் 'PKM என்கின்ற புகையிரத நிலையம்'

Thursday, December 22, 2022

 1.

அ.இரவியின் பெரும்பாலான படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அவர் என் தமிழாசிரியர் என்பதால் மட்டும் அல்ல, அவரின் சிறுகதைகளையும், பத்தியெழுத்துக்களையும் 'சரிநிகரில்' வாசிக்கத் தொடங்கிய என் பதினைந்து/பதினாறுகளிலேயே அவரென்னை வசீகரித்தவர். 'காலம் ஆகி வந்த கதை' அவரின் முக்கிய படைப்பென்பேன். 'பாலைகள் நூறு'க்கு விரிவாக என் வாசிப்பைப் பதிவு செய்திருக்கின்றேன். அவரின் '1958' முக்கியமான வரலாற்று ( 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அமுலாக்கத்தின் பின் வந்த இனக்கலவரம் ) நிகழ்வைப் பதிவு செய்கின்றதெனினும், அதில் துருத்திய சில சிக்கல்களையும் எழுதியதாகவும் நினைவு.


அண்மையில் வெளிவந்த 'PKM என்கின்ற புகையிர நிலையம்' என்கின்ற படைப்பை என்ன வகைக்குள் அடக்குவதென்று சற்றுக் குழப்பமிருந்தாலும் ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கலாமெனத் தோன்றுகின்றது. 


இது ராசா என்றழைக்கப்படுகின்ற சிறுவன் வயதுக்கு வரும் ஒரு புதினமெனச் சொல்லலாம் (coming of age). ஆனால் இதில் ராசா என்பவனின் குழந்தைப் பருவம், பதின்மம் ஆகுவதைக் கவனப்படுத்துவதை விட அவனின் மாமாவாகிய வாழ்க்கையே அதிகம் கவனப்படுத்துகின்றது. ஒருவகையில் இது அந்த மாமாவின் கதையெனத்தான் அடையாளப்படுத்த வேண்டும். பிள்ளைகளே இல்லாத அந்த மாமாவை தன் பிள்ளைகளைப் போல ராசாவின் மீதும், ராசாவின் சகோதரியின் மீதும் பாசம் காட்டுகின்றார். இந்தப் புதினம் எனக்குத் தெரிந்த கிராமங்களின் பின்னணியில்  எழுதபப்ட்டதால், என்னால் எனக்கு அறிமுகமான இடங்களின் வரைபடங்களைப் பிந்தொடருவதும் ஒருவகையில் சுவாரசியமாகவும் இருந்தது. 


ஒன்று எனது அம்மாவின் ஊருக்கு அருகிலிருந்த கீரிமலை. மற்றது நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இருந்த அளவெட்டி. எப்படி சிறுவயதில் செங்கை ஆழியானின் 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' வாசித்தபோது கதை நிகழ்வது எனக்குத் தெரிந்த வழித்தடங்களென ஒருவகை சிலிர்ப்போடு வாசித்தேனோ, அவ்வாறான ஒருவித நிறைவோடு இரவியின் இந்தப் புதினத்தையும் வாசித்தேன்.


ராசாவின் சின்னமாமா, அவர்  ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிற்பாட்டி, ரெயில் நிலையத்தில் வேலை செய்கையில் 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களத் திட்டத்தில் அரசாங்க வேலை இழப்பது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்த குடிக்கு அவர் அடிமையாதல், தன் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அதன் நிமித்தம் மனப்பிறழ்வுக்கு ஆளாதல் என அருமையான மனிதனின் வீழ்ச்சியை இந்தப் புதினத்தில் காண்கின்றோம். இந்தப் புதினம் அந்த மாமாவின் புறவயமான உலகை மட்டுமில்லை, இதில் வரும் மற்றப் பாத்திரங்களையும், கதை நிகழும் சூழல் பின்னணியையும் நுட்பமாக விபரிக்கின்றது. கீரிமலைக் கேணிக் குளியல்கள், யாழ்ப்பாணத்துக்குரிய பிரத்தியேக உணவு வகைகள் என்பவை சிலாகித்துச் சொல்லவேண்டியவை. ஆனால் இதன் சிக்கல் என்னவென்றால் எந்தவகையில் புறவயமாகக் கதை சொல்லமுயன்றதோ, அதேயளவுக்கு இது பாத்திரங்களின் அகவயத்துக்குச் செல்ல அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்பதேயாகும்.2.


தமிழில் இப்போது விமர்சனக் கோட்பாடுகளில் ஒரு பகுதியாக இருக்கும் அழகியல் விமர்சனத்தையே ஒரு தனித்த விமர்சனமாகக் காட்டும் அபத்தம் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். அழகியலும் விமர்சனக்கோட்பாடுகளில் ஒரு பகுதியே தவிர அதுமட்டுமே படைப்புக்களைப் பார்க்க அளவீடாக இருப்பதில்லை. அதேபோன்று ஒரு சில பாத்திரங்கள் மட்டும் இருந்து ஒரு புதினத்தை எழுதிவிட்டாலே 'தட்டையானது' என்று சொல்கின்ற எரிச்சலான குரல்களையும் பார்க்கின்றோம். என் பார்வையில் 'தட்டையானது' எதுவெனில், வாசிக்கும் நம்மை நாவல்களிலிருக்கும் பாத்திரங்களுக்குள் ஒன்றிக்கவிடாது புறம்தள்ளிக் கொண்டிருப்பவற்றை என்பேன். 


ஈழத்து/புலம்பெயர் நாவல்களில் முக்கிய பலவீனமாகப் பார்ப்பது இப்படி நாம் புறவயமாகக் கதை சொல்லல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அகவயமான தேடல்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதாகும். இன்று ஒரளவு கவனம் பெற்ற புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கூட இதில் அதிக விதிவிலக்குகளல்ல. அவர்களில் சிலர் இந்தப் பலவீனத்தை தமது கச்சிதமான எழுத்து நடையில் கடந்து செல்ல முயற்சிக்கின்றனரே தவிர, இன்னும் அகவயமான கதை சொல்லல் முறைக்கு ஆழமாகச் செல்லவில்லை என்றே சொல்வேன். 


இதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கு நாம் நகுலனை, மெளனியை, லா.ச.ராவை வாசிக்கும்போது எளிதாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் நமக்குச் சொல்லும் புறவயமான கதைகள் மிகவும் சுருங்கியது. ஆனால் அகவயமான ஆழமான தேடல்களுக்கு அவர்கள் தம் பாத்திரங்களினூடாக நம்மை அழைத்துச் செல்கின்றார்கள். ஆகவேதான் அவர்கள் நமக்குப் பரிட்சயமற்ற சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு சென்றாலும், நமக்கு நெருக்கமான படைப்புக்களாக அவை இருக்கின்றன.  அதுவே, இன்றும் என்னைப் போன்ற அவர்களின் தலைமுறையைத் தாண்டிய பலரை அவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடி வாசிக்க வைக்கின்றது.  அவர்கள் காலத்தின் முன் இன்னமும் உதிராது புதிது புதிதாய் மலர்ந்தபடி இருக்கிறார்கள்.


இங்கே இரவியின் இந்தப்புதினம் சிறுவனின் அகவயமான எல்லாத் தேடல்களையும் புறவயமான நிகழ்வுகளில் மட்டும் கவனஞ்செலுத்திக் கடந்து போவதைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த மாமா என்ற பாத்திரத்திற்குள் உள்ளே இறங்காததால், அவரின் வீழ்ச்சியைக் கூட வாசிக்கும் நாம் இன்னொரு மூன்றாம் மனிதரின் சரிவாகப் பார்க்கின்றோமே தவிர, நம்மைப் போன்ற ஒருவரின் வாழ்வு இப்படி வீணாகிவிட்டதே என்ற கழிவிரக்கம் அவ்வளவு வராது தாண்டிப் போகின்றோம். இந்தப் புதினத்தில் அந்த மாமாவின் மீது அவ்வளவு காதலும், அதேசமயம் அவரின் வன்முறையைத் தாங்கியபடி இருக்கின்ற அந்த மாமி பாத்திரத்தை விரித்தெழுத எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அது தவறவிடப்பட்டிருப்பதும் கவலையானது.


இலக்கியப் படைப்புக்களால் ஆனாலென்ன, திரைப்படப் பிரதிகளாய் இருந்தாலென்ன, நம்மிடம் சொல்வதற்கு எண்ணற்ற கதைகள் -அதுவும் மூன்று தசாப்தகாலத்தை போருக்குக் காவுகொடுத்த- நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அதை எப்படிச் சொல்லப்போகின்றோம் என்பதும் எழுதுகின்ற/படைக்கின்ற நம்மெல்லோருக்கும் முன்னாலுள்ள சவால். அதையறியாதுவிடின், அதில் கவனங்கொடுக்காவிடின், நாம் அவ்வவ்ப்போது ஒன்றிரண்டு நல்ல படைப்புக்கொடுத்துவிட்டு வால் நட்சத்திரங்களாக மறைந்து விடுவோம் என்பதாகத்தான் ஆகிவிடும். சில படைப்புக்களை வாசிக்கும்போது அது எழுதியவர்களின் ஆன்மாக்களிலிருந்து விகசித்து எழுந்துவந்ததென்பதை  நாம் உணர்ந்து, சில கணங்களாவது அதை வாசித்து முடிக்கும்போது அப்படியொரு நிறைவு வந்து கண்களை மூடி யோசிப்போம் அல்லவா?  இன்று எண்ணற்ற படைப்புக்கள் வரும் சூழலில், அவை நிகழ்வது மட்டும் ஏன் அரிதாக இருக்கின்றது என்பது பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.


000000000000000


(Dec 22, 2021)

0 comments: