நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 02

Thursday, March 23, 2023


னி பொழிந்து வெண்மை மூடிய நிலத்தை, காலையில் மழை கரைத்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றுடன் பெய்த உறைபனிமழை புற்களை சற்று விலத்த பசுமை தெரிந்தது. அந்தக் காட்சி அவ்வளவு நீடிக்கவுமில்லை. மீண்டும் பனி சடுதியாகப் பொழிந்து வெள்ளை முகில்களால் போர்த்தியது போலத் தரை கண்முன்னே மாறியது.


எல்லாமே சில மணித்தியாலங்களுக்குள்! 

இந்தக் குறுகிய நேரத்திற்குள்ளே ஒரு 'நிரந்தரமின்மை'யைப் பார்க்கின்றேன். வியட்னாமில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, தாயிடம் (Thich Nhat Hanh) இந்தப் போர் எப்போது முடியும் என்று மக்கள் ஆறுதல் தேடி வருகின்றனர். எப்போது போர் முடியும் என்று தெரியாவிட்டாலும், புத்தரை நான் நன்கறிவேன் என்பதால், 'எல்லாமே ஒருநாள் மாறும்' என்பதில் நம்பிக்கை வையுங்கள் என அந்த மக்களிடம் கூறியதாகத் தாய் கூறுகின்றார். 

ஆம். எதுவுமே நிரந்தரமில்லாதவை;  எப்போதுமே மாறிக் கொண்டேயிருப்பவை!

தாயிடம், பின்னர் இந்த உலகம் போர்கள்/காலநிலை மாற்றம்/சுரண்டல் என இவ்வளவு கொடுமையாக இருக்கின்றதே உங்கள் பதில் என்ன என்கின்றபோது தாய் இதையே ஒரு பத்திரிகையாளரிடம் -அவரின் 70வயதுகளில்- 'எல்லாமே மாறக்கூடியவை' என மீண்டும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் நம்மால் செய்யக்கூடியது, நல்லவை விளையக்கூடிய உகந்த காரணிகளை (Right Conditions) தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது என்கின்றார்.


தாயை, 1960களில் வியட்னாமிய அரசு சொந்த நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாது என்கின்றது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின் முதன்முதலாக மீண்டும் வியட்னாமுக்குப் போய் சங்காவை அவர் அமைக்கின்றார். ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கானவர்கள் அந்தச் சங்காவில் சேர, வியட்னாமிய அரசு தம் இறையாண்மையை அச்சுறுத்தும் சக்தி தாயினது சங்காவிற்குள்ளதோவென அச்சமுறுகின்றது. எனவே தாய் நாம் சங்காவை இங்கே நடத்துவதற்கான  உகந்த காரணிகள் இன்னமும் உருவாகவில்லையெனச் சொல்லி, அதை முற்றாகக் கலைத்து விடுகின்றார். ஆனால் அவ்வாறு வந்துசேர்ந்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்காவும் அருகில் தாய்லாந்தில் ஒரு சங்கா புதிதாகத் தொடங்கப்படுகின்றது.

இதையேன் தாயோ அல்லது அவரைப் பின் தொடர்பவர்களோ தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகின்றனர் என்றால், சில விடயங்களுக்கு சரியான காரணிகள் இல்லாதபோது பொறுமையாகக் காத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதற்காகவே.

ஆகவேதான் இப்போது பெரும் பனிக்காலம் தொடங்கிவிட்டபின், பெரும் பனிப்பொழிவு நடந்தேறி, தெருவில் பயணிக்க வேண்டாம் என்றும், விமானங்கள் வானில் ஏறமுடியாத ஒரு சூழலும் இருக்கும்போது, நாமெல்லோரும் சரியான காரணிக்காய்க் காத்திருக்கத்தான் வேண்டும். 

எதையும் நமக்கேற்றமாதிரி எல்லாப் பொழுதும் மாற்றிவிடமுடியாது என்பது பிரபஞ்ச யதார்த்தம்!

000000000000

நான் அவ்வப்போது பேசும் நண்பரொருவர் அடிக்கடி தனது நண்பர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் புரிந்துகொள்ளாமல் பழகிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு நான் என் வாழ்விலிருந்து சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவரைப் போல எனக்கு நிறைய நண்பர்கள் இல்லாதுவிட்டாலும், நானும் பல நண்பர்களுக்கு மெளனமாக விடை கொடுத்திருக்கின்றேன். அது நண்பர்களோ, காதலிகளோ எந்த ஒருவரிடம் நம்மால் மனம் திறந்து பேசும் வெளி இல்லாமல் போகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடைகொடுத்து விடுவது இரு தரப்பினர்க்கும் நல்லது என்றேன்.

இந்தப் பிரபஞ்சம் நமக்கான அரிய விடயங்களை இழக்க வைத்தாலும், அதைவிட இன்னும் பெறுமதி மிக்க மனிதர்களைக் கொண்டு நம் வாழ்வை நிரப்பும். அதை நண்பர்களை விட, காதலிகளின் விடயத்தில் நான் பார்த்திருக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் இவர்கள் என்று வியக்குமளவுக்கு சட்டென்று நம்மிடையே தோன்றி நம்மைப் பலர் புதிதாக வியக்க வைப்பார்கள்.

ஒரு காதலின் பெரும் பிரிவில் தனக்குள் உழன்று கொண்டு, 'இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு என்ன செய்வது' என்று மறுகிக் கொண்டவனுக்கு, பின்னர் ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் காதலிக்க வந்தார்கள் என்பதை காதலின் துயரத்தில் இருந்தபோது அந்த ஒருவன் நம்பியிருக்கத்தான் முடியுமா என்ன?

வாழ்க்கை அப்படி விசித்திரமானதுதான். நம்மை எந்தளவுக்கு நமது பலவீனங்களோடு இன்னொருவரின் முன்னால் வைக்கமுடியுமோ, அந்தளவுக்கு அந்தளவு நமக்கு தோழமையோ/நேசமோ கிடைக்கும். அதேபோல திறந்த மனதுடன் நேசத்துக்குப் பிரியாவிடை வேண்டியபோது கொடுக்கவும் முடியும்.

இந்த நண்பருக்கு நேற்றிரவு நகுலனைப் பற்றி சுகுமாரன் எழுதிய 'நகுலன் விட்டுச் சென்ற வழிகள்' பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். மலையாளக் கவிஞர்களும், தமிழ்க் கவிஞர்களும் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் நகுலனும் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார். அப்போது ஒவ்வொரு கவிஞர்களும் கவிதை வாசிக்கும்போது நகுலனையும் அழைக்கின்றனர். நகுலன், 'கவிதை உரக்க வாசிப்பதற்கானதல்ல; மனதால் வாசிப்பதற்கானது என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு வந்து மெளனமாக உட்கார்ந்து விட்டார். நெருங்கிய நண்பரான அய்யப்பப் பணிக்கர் வற்புறுத்தியும் நகுலன் இசையவில்லை.' என்று சுகுமாரன் அந்த நிகழ்வை நேரில் பார்த்து எழுதியிருக்கின்றார்.

அவ்வாறு ஒரு கவிஞர் ஒருவரின் நூல் அறிமுக நிகழ்வுக்கு, தமிழ்நாட்டில் நின்றபோது சென்றிருந்தபோது, சிறுகூட்டம் என்பதால் ஒவ்வொருத்தரும் அந்தக் கவிஞரின் தொகுப்பிலிருந்து ஏதோ ஒரு கவிதையை வாசித்தபோது, நான் கவிதைகள் மெளன வாசிப்பிற்குரியது என்று மறுத்திருந்ததை (ப்யூகோவ்ஸ்கியின் தமிழாக்கத்திற்கான முன்னுரையிலும் குறிப்பிட்டிருப்பேன்) நண்பருக்கு நினைவூட்டினேன். 'அப்படியெனில் நான் ஒரு நிகழ்வில் கவிதைகளை உரத்து வாசித்ததை மறுதலிக்கத்தான், இவற்றை எனக்குச் சொல்கின்றாயா' எனக் கேட்டார். அப்படி என்றெல்லாம் இல்லை. நான் உணர்ந்ததைப் போல நகுலன் உணர்ந்திருக்கின்றார் என்பது நினைவுக்கு வந்ததென்று கதையை வேறு திசைக்கு மடை மாற்றினேன்.

அத்தோடு இருந்தால் பரவாயில்லை. வெளிக் குளிர் எனக்கு கலக மனோபாவத்தைத் தந்ததோ என்னதோ, அதே கட்டுரையில் நகுலன் சுகுமாரனுக்கு ஒரு எழுத்தாளராக ஆகவேண்டும் என்று விரும்பினால், திருமணம் செய்யாது இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் என்று வாயைத் திறந்து சொல்லிவிட்டேன். சரி இப்போது என்ன சொல்ல வருகின்றாய் அலுப்பான, உடல் நோவிருக்கும் நாளொன்றில், நல்ல மனோநிலையை எனக்குத் தருவாய் என்று உன்னிடம் வந்தால், கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, எழுதப்போவது என்றால் பிரம்மசாரியாய் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது 'பனி' போலக் கதைக்கிறாய் எனச் சலித்துக்கொண்டார் நண்பர்.

நகுலன், பிரமிள், ஏ.ஜே.கனகரட்ன, (ஓவியர்) கருணா என்று தனித்திருந்து தம்போக்கில் வாழ்ந்து, இவ்வுலகிலிருந்து உதிர்ந்து போனவர்கள் மீது ஏனோ பனிக்காலங்களில் இன்னும் பிரியம் கூடிவிடுகின்றது. அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்து - தற்சமயம் எனக்குப் பிடித்த ஆர்ஜெண்டீனா Santa Julia என்கின்ற செம்மதுக்காரியோடு- காதல் நடனமாடி கள்வெறி கொள்ளட்டுமாக.

பெண்களின் அரவணைப்பின்றி ஒருகணமும் இருக்கவே முடியாத என்னைப் ஒருவனுக்கு இவர்களின் வாழ்வு என்றும் தீரா வியப்புத்தான். அதை அருகிலிருந்து பார்த்தபின்னும் இப்படிக் கோபிக்கக்கூடாது, நண்பரே!

00000000000000000000

(Dec 22, 2022)

0 comments: