-சிறு குறிப்புகள்-
*******************இற்றைக்கு 20 வருடங்ளுக்கு முன்னரே புலம்பெயர் X புகலிட வேறுபாடுகள் தீவிரமாகப் பேசப்பட்டிருக்கின்றது. பல்வேறு நிலைகள்/விடயங்கள் இடைவெட்டும் மிக சிக்கலான ஈழத்தமிழர்களின் அந்நிய நாட்டு வாழ்வை தெளிவாக வரையறுத்தும் விட முடியாது. 1983 இனக்கலவரத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்து புலம்பெயர் X புகலிடம் என்பது உரையாடப்பட்டிருக்கின்றது. 80களுக்கு முன் இலங்கையில் இருந்த படித்த உயர்வர்க்கத்தினர் பொருளாதார வசதிக்காய் புலம்பெயர்ந்தனர். முக்கியமான யாழ், கொழும்பு ஆதிக்கசாதியினருக்கு இந்த வாய்ப்புக்கள் எளிதாகக் கிடைத்து அவர்கள் புலம்பெயர்ந்தனர்.
83இல் நிகழ்ந்த படுகொலைகளும், இலங்கை/இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்களும், நம் இயக்கங்களுக்குள் நிகழ்ந்த உட்படுகொலைகளும் சாதி, மத, ஊர் பாகுபாடில்லாது எல்லோரையும் வெளிநாடுகளுக்கு எப்படியெனினும் உயிரைத் தக்கவைப்பதற்காய் அத்தனை ஆபத்துக்களுக்குமிடையில் 80களில் இருந்து அனுப்பி வைக்கத் தொடங்கியது.
இவ்வாறு நிகழ்ந்த விடயங்களை -80களின் பிற்பகுதியில் இருந்து 90களின் முடிவுவரை- புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து வந்த சிறுசஞ்சிகைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் பேசுபொருள்களையும் வைத்துப் பார்த்தாலே இந்த வரலாறு நமக்கு எளிதாகப் புரியும். அந்தக் காலத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் சிலர், ஏற்கனவே பொருளாதார வசதிக்காய் வந்தவர்களையும், அகதிகளாய் உயிர் தப்பி வந்தவர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தல் நியாயமில்லையென்று நினைக்கத் தொடங்கினர். எனவே பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம் கூறும் வித்தியாசங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்த வித்தியாசங்கள் யாழில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும், மலையகத்தில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது அல்லது வடபகுதியில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிழக்கில் அந்தளவுக்குப் பாதிக்கப்படாத முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது என ஒரு எளிய உதாரணத்துக்குச் சொல்லலாம்.
இதன் நிமித்தமே பொருளாதார வசதி காரணமாக வெளிநாடுகளுக்கு வந்தவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், ஊரில் இருக்க முடியாத நிலையில் உயிர்தப்பி வந்தவர்களை புகலிடத்தவர் என்ற வகைமைக்குள்ளும் பலர் வைத்துப் பார்க்கத் தொடங்கினர்.
முன்னவர்கள் தம் படிப்பின் நிமித்தம் ஒரளவு வசதியாகத் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள, 80களின் பின் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் ஒரு விளிம்புநிலை வாழ்வுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த புலம்பெயர்வுக்குள்ளும் இன்னும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தை ஒரளவு கற்று இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்க்கும், ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஸ்கண்டிநேவியன் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வாழ்வியல் முறையே முற்றும் வேறுவிதமானமை. புதிய நாட்டில் புதிய காலநிலையில் புதிய ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது எவ்வளவு கடினமென்பது சொல்லாமலே நமக்குப் புரியக் கூடியவை.
2.
இப்போது புலம்பெயர்ந்த இலக்கியத்திற்குள் வருவோம். இவர்கள் 83 கலவரத்துக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் என்றாலும் நாம் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களையும், 'காலம்' செல்வத்தின் எழுத்துக்களையும் ஒன்றாக மதிப்பிட முடியாது என்பதை அறிவோம். செல்வத்தின் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர் தொடர்ச்சியான தனது இலங்கை வாழ்வில் அவரும், அவரது பெற்றோரும் எப்படி ஒடுக்கப்பட்டிருக்கின்றனர் என்று நேரடியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றார். அப்படியெனில் செல்வத்துக்கு போர் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு இல்லையென்று இந்த ஒடுக்கப்பட்ட விடயங்களை நாம் ஒதுக்கிவிட்டுப் போகமுடியுமா? இல்லைத்தானே. அவ்வாறே புலம்பெயர் எழுத்துக்களிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் பாரதி புத்தகலாயத்தை அடையாளப்படுத்தும் சிராஜ் இப்போது கூறும் 'யாழ் வெள்ளாள மேட்டிமை' வாதத்திற்குள் செல்வத்தின் ஒடுக்கபட்ட எழுத்துக்களை அடக்கி, கடந்து போனால் அவ்வளவு அபத்தமாக இருக்குமல்லவா? இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால் இவ்வாறான விடயங்களை எளிதில் பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே.
இப்போது புகலிட இலக்கியத்துக்கு வருவோம். 83 இற்கு பின் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், அனைவரையும் சாதி, மத, பிரதேச பேதமின்றி வெளிநாடுகளுக்கு துரத்தி வைத்தது. அவர்களின் அநேகர் உணவகங்களில் கோப்பை கழுவியும், சமையலறைகளில் வெந்தும், தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக தேய்ந்தும், இவற்றிற்கிடையில் இருந்து கலை இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கினர். அந்த புகலிட இலக்கியவாதிகளில் அனைத்துச் சாதியினரும் இருந்தனர். விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்ந்தனர். பின்னரான காலத்தில் குடும்பம், பிள்ளைகள் என்று பலர் தமது சொந்தசாதி/மதப் பெருமிதங்களில் திளைத்தாலும், புகலிட இலக்கியம் என்பது விளிம்புகளின் உரையாடலாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றது.
3.
இந்த புலம்பெயர் X புகலிட இலக்கிய வேறுபாடுகள் 2000களின் பின் மெல்ல மெல்லக் கரைந்து போயிருந்தது. ஏனெனில் பொருளாதாரவசதி காரணமாக புலம்பெயர்ந்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 1990/2000 பின்னரான காலம் ஈழத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஈழத்தமிழரையும் அகதிகளாக்கியுமிருந்தது. போரால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்னுமளவுக்கு எல்லோரையும் யுத்தம் அலைய வைத்தது. ஆக 2000 பிறகான காலத்தில் அவரவர் விரும்பியமாதிரி புலம்பெயர், புகலிட இலக்கியம் என்று இதன் வரலாற்றை அவ்வளவு முக்கியப்படுத்தாது தம் விருப்பின்போக்கில் பாவிக்கத் தொடங்கினர்.
80களில் நடந்த இன்னொரு பெரும் புலம்பெயர்வு இந்தியாவை நோக்கியது. அதற்கு முன்னர் சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் நம்மோடு ஒன்றாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாகியது. அவர்களின் ஒருபகுதியை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது. அந்தத் துயருக்கு நமது சில ஈழத்தமிழ்த்தலைவர்களும் காரணமாக இருந்தார்கள் என்பதை வரலாறு என்றும் மன்னிக்கவும் போவதில்லை.
அதற்குப் பின் 80களில் இலங்கையின் எல்லாப் பகுதியிலிருந்தும் பலரை இந்தியாவுக்கு அகதிகளாக யுத்தம் அனுப்பிவைத்தது. அங்கிருந்து வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சிலர் மேற்குலகிற்குத் தப்பியோட, பெரும்பான்மையினர் அகதி முகாமிற்குள்ளும் எவ்வித அடிப்படை வசதியோ, தனி மனித சுதந்திரமோ கிடைக்காமலே வாழவேண்டி வந்தது. இதன் உச்சக் கொடுநிலை ராஜீவ்காந்தியின் மரணத்தோடு வந்து சேர்ந்தது. இன்று எந்த மேற்கு நாடாயினும் நாம் அங்கே அகதியாகப் போனால் ஆகக்குறைந்தது அடிப்படை மனித வசதிகளுடன் வாழமுடியும். ஆனால் கணத்துக்கு கணம், தொப்பூழ்கொடி என்று உருகுகின்ற தமிழக மக்களாலோ, அரசாலோ இவர்கள் சக இந்தியர்களாக வாழ்வதற்கான எந்த வசதியும் ராஜீவ்காந்தியின் மரணம் முடிந்து 30 ஆண்டுகள் கடந்தபின்னும் செய்யமுடியாது இருப்பதென்பதுதான் எவ்வளவு துயரமானது.
இத்தனைக்கும் திபெத்திய மக்களையும், பங்களாதேச மக்களையும் குறிப்பிட்ட ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தபின் தம்மைப் போன்ற சக இந்தியர்களாக மாற வாய்ப்புக்கள் கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, அகதிகளுக்கான அடிப்படை உரிமையைக் கூட ஈழத்தமிழ் அகதிகளுக்கு இன்னமும் கொடுக்கத் தயாரில்லை. இப்போதும் இந்திய உளவுத்துறையின் விசாரிப்புக்களும், கண்காணிப்புக்களும் இருக்கும் அகதி முகாமில் இருந்து எவர் நிம்மதியாக எழுத முடியும்? முகாமை விட்டு வெளியில் வந்தால் கூட உரிய எந்த ஆவணங்களுமின்றி 'தலைமறைவு' அகதிகளாகவே அவர்கள் வாழவும் வேண்டியிருக்கின்றது.
இதுகுறித்து யார் வெட்கப்படவேண்டும்? யார் அவமானப்பட வேண்டும்? நமது நிலத்தில் நமது சகோதரர்களை, நம்மைப் போன்று சரிநிகராக வாழவேண்டிய ஈழத்தமிழர்களை இப்படி நாம் நடத்தவேண்டி இருக்கிறதே என்று தமிழகத்தவர்கள் அல்லவா தலைகுனிய வேண்டும். கனடாவில் ஆதிக்குடிகளை எப்படி வெள்ளையினத்தவரும், பிரெஞ்சுக்காரர்களும் நடத்தினர் என்று வெட்கப்படவேண்டியது நம்மைப் போன்ற கனடிய குடிமக்களே தவிர அந்தப் பூர்வீகக் குடிகள் அல்ல.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் சிலர் இதுகுறித்து எந்த அவமானமும் வெட்கமும் அடையாது புலம்பெயர்ந்த நமக்கு பாடங் கற்பிக்க 'புதிய தீர்க்கதரிசிகளாக' வருகின்றார்கள். புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்தி நம்மையின்னும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போரின் எந்தத் துளியும் தீண்டிப் பார்த்திராத, அதன் மனவடுக்களை அறியாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்ல வருவது எவ்வளவு கேவலமானது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?
ஆதிக்கசாதிக்காரனாக இருந்துகொண்டு அந்த privilegeகள் அறியாது , ஒரு தலித்துக்குப் பாடஞ் சொல்ல வந்தால், நீங்கள் பேசும் மானிடத்தின் எந்த மேன்மையையும் பேசத் தகுதியற்றவரே. அதுபோலவே இதுவும் உங்களின் privileges உங்களுக்குத் தரப்பட்ட உரிமைகளல்ல.
இத்தனை காலமும் ஒடுக்கப்பட்ட அகதி முகாம் குரல்கள் (யார் ஒடுக்கியது? நீங்களேதான்) இப்போது பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. முகாங்களிலிருந்து வரும் குரல்களை தொடக்க கால பத்தினாதனின் எடிட் செய்யப்படாத பனுவல்களிலிருந்து, அண்மைக்கால விஜிதரனின் எழுத்துக்கள் வரை பெரும்பாலானவற்றை என்னைப் போன்றவர்கள் கவனித்துக்கொண்டே வருகின்றோம். அவை குறித்து அவ்வப்போது எழுதியும் இருக்கின்றோம்.
இனியான காலத்தில் அதிகம் ஒலிக்கவேண்டிய இந்த முகாம் வாழ்க்கைக் குரல்களை, யாரேனும் புலம்பெயர்ந்தவரோ, புகலிடத்தவரோ வரவேற்காதவிடத்து அவர்களையும் நாம் கேள்வி கேட்போம், தள்ளிவைப்போம். ஒருகாலத்தில் சிறுபான்மையினர் என்றும், ஒடுக்கப்பட்டோர் என்றும் பஞ்சமர் என்றும் அழைக்கப்பட்டுக் கேவலப்பட்டவர்கள் தமது குரல்களை உயர்த்தியபோது எல்லா ஆதிக்கசாதிகளும் பம்மிப் பதுங்கின அல்லவா. அவ்வாறே இந்த அகதிமுகாமின் குரல்களும் ஓங்கி ஒலிக்கட்டும். குரலற்றவர்களின் குரலான அவர்களுக்குத் துணையாக இருப்பதை விட நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு வேறு எது நிம்மதியைத் தரப்போகின்றது. ஆனால் வெளியில் இருந்து கொண்டு எங்களுக்குப் பாடங்கற்பித்தால், முதலில் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி, அகதி என்று சொல்ல இன்றும் அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்க்கும், என்னைப் போன்று போரின் நிமித்தம் அலைந்தவர்க்கும் மட்டுமே உரிமை இருக்கின்றதே தவிர, தமிழ்நாட்டில் சொகுசாக இருந்துகொண்டு, உங்கள் அரசியல் சுயநலங்களுக்காய் நம்மைப் பாவித்துக்கொண்டிருக்கும் உங்கள் எவருக்கும் நம்மை அகதி என்று அழைக்க உரிமையில்லை என்றும் தெளிவாகச் சொல்லி வைப்போம்.
நாளை இந்தியாவின் அகதி முகாங்களில் இருந்து வெளிவரும் குரல்கள், தம்மை அகதிக் குரல்களாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, இல்லை புகலிடக் குரலாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, அவர்களுக்கான தோழமையுணர்வைக் கொடுக்க நாம் என்றும் துணையிருப்போம். அதில் எந்த மறுபேச்சுக்கும் இடமில்லை.
*********************
(Jan 21, 2022)
0 comments:
Post a Comment