நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள்

Monday, March 20, 2023

1.

கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானுடம்' எனக்குப் பிடித்த ஒரு நாவல். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' கணியன் பூங்குன்றன் போல, 'புயலிலே ஒரு தோணி' சிங்காரம் போல, 'பசித்த மானுடம்' என்கின்ற புதினத்தோடு கரிச்சான் குஞ்சு, அவரின் வாழ்நாளைத் தாண்டி  நிலைத்திருக்கக்கூடியவர் என்பது என் வாசிப்பின் துணிபு. அப்படி ஆதவனை காலங்களில்  ஏந்திச் செல்ல 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' நமக்குப் போதும். 


கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்தை'த்  தவிர்த்து வேறு சில சிறுகதைகளை எழுதியிருப்பாரென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவரின் முழுத்தொகுப்பை வாசிக்கும்போது, அவர் கிட்டத்தட்ட 99 கதைகள் எழுதியிருக்கின்றார் என்பதைப் பார்க்க மலைப்பாக இருக்கின்றது. இன்னமும் தொகுக்கப்படாத கரிச்சான் குஞ்சின் கதைகள் எங்கேயும் இருக்கக்கூடுமென்று தொகுப்பாளர்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


எனக்கு எந்தப் படைப்பாளியினதும் முழுத்தொகுப்புக்களை வாசிப்பதில் தயக்கமிருக்கும். தனித்தொகுப்பாக ஒருவரின் படைப்புக்களை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் முழுத்தொகுப்பாக வாசிப்பதில் இருப்பதில்லை. அதை பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த 'பூமணியின் கதைகள்', மு.தளையசிங்கம் படைப்புகள்' 'சு.வில்வரத்தினம் கவிதைகள்' போன்றவற்றிலே கண்டடைந்துவிட்டதால் முழுத்தொகுப்பின் பக்கம் அவ்வளவாகப் போவதில்லை. ஒரு கதையில் கூட அலுப்படைய வைக்காது எழுதக்கூடியவர் என்று தயக்கம் எதுவுமின்றி சொல்லக்கூடிய என் விருப்புக்குரிய அம்பையின் முழுத்தொகுப்பை வாங்கி வாசிப்பதைத் தவிர்த்துக் கொண்டு இருப்பதற்கும், முழுத்தொகுப்புக்களின் மீது எனக்கு இருக்கும் தனிப்பட்ட இந்த ஒவ்வாமை மட்டுந்தான் காரணம்.


இப்போதும் கரிச்சான் குஞ்சின் கதைகளை முழுதாக வாசித்துவிடவில்லைத்தான். 'பசித்த மானுடம்' போல காலம் தாண்டிய சிறுகதைகளை கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கின்றார் என்று அறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அவரின் 'அன்றிரவே' (1983) தொகுப்பில் வந்த கதைகள் முக்கியமானவை. 'அன்றிரவே' என்று 1955 இல் எழுதப்பட்ட கதையே அன்றைய காலத்தில் வித்தியாசமானது என்று சொல்லமுடியும். அந்தக் கதையின் தொடக்கமே 'வெங்கட்ராம் இந்தக் கதையை எழுதிவிட்டான்' என்று சொல்லப்பட்டே கதை சொல்லப்படுகின்றது. 


நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்டவர் கரிச்சான் குஞ்சு என மாறியது கு.ப..ராவின் மீதிருந்த பற்றினால் என்பது நாமறிந்ததே. கு.ப.ரா தொடக்க காலத்தில் கரிச்சான் என்ற பெயரில் எழுதி வந்தவர். கு.ப.ராவின் அணைப்பில் இருந்து எழுந்தவர்களென கரிச்சான் குஞ்சு, எம்.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் என்பவரைச் சொல்லலாம். கரிச்சான் குஞ்சை, கு.ப.ராவிடம் அறிமுகம் செய்தது தி.ஜானகிராமன். கு.ப.ரா கொடுத்த உற்சாகத்தில் எழுதத்தொடங்கியவர் கரிச்சான் குஞ்சு. 


20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதுவரை மரபுகளுடனும், சாதி/மத வேர்களுடனும் இருந்த ஆதிக்கசாதியினர், தம்மைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்படுகின்றது. அந்த விரிசலில் மேலெழுந்த வந்த ஒருவராக கரிச்சான் குஞ்சின் எழுத்துக்களைப் பார்க்கின்றோம். அவரின் இளமைக் காலத்தில் மரபை/மதத்தை/சுயசாதியை கேள்விக்குட்படுத்தும்/சுயஎள்ளல் செய்யும் கரிச்சான் குஞ்சு பிறகான காலத்தில் சற்று மரபின் பக்கம்  -தனக்குள்ளே ஆழ்கின்றபோது- அதிகம் சாய்வதையும் காண்கின்றோம்.  


இன்றைய காலத்திலேயே வெளியே 'எல்லா விடயங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகிவிட்டோம்' என்று பிரகடனம் செய்தபடி சுயசாதிகளில் திருமணம் செய்தபடியும், சீதனம் வாங்கிக்கொண்டு, சாதியெதிர்ப்புப் போராளிகளாகவும், பெண்ணுரிமை பேசுபவர்களாகவும் பலர் இருக்கும்போது அந்தக்காலத்தைய கரிச்சான் குஞ்சின் இந்தச் சாய்வு அவ்வளவு பெரிய விடயமில்லை. லெளதீகத்தில் தன் சுயசாதி சார்ந்த அடையாளங்களைக் காவியபடி  கரிச்சான் குஞ்சு இருந்தாலும், இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பங்குபெற்றியிருக்கின்றார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வித்தியாசமான கலவையே கரிச்சான் குஞ்சின் கதைகளிலும் வெளிப்படுகின்றது.


2.


கரிச்சான் குஞ்சின் சிறுகதைத் தொகுப்பொன்றுக்கு முன்னுரை எழுதிய ஆதவன் கரிச்சான் குஞ்சின் கதைகள் பற்றிய ஒரு முக்கிய அவதானத்தை முன்வைக்கின்றார். இன்று யதார்த்தவாதக் கதைகள் என்றால் என்ன, இயல்புவாதக் கதைகள் என்றால் என்ன உரையாடல்கள் நடக்கும்போது, ஆதவன் அன்றே கரிச்சான் குஞ்சின் கதைகள் இயல்புவாதக் கதைகள் என்று அடையாளப்படுத்துகின்றார். அதற்கு ஓர் உதாரணமாக 'பித்தப்பசி' என்கின்ற கதையை முன்வைக்கின்றார். ராஜூ என்கின்ற ஆணுக்கு பத்மா என்ற மனைவியும் சில குழந்தைகளும் இருக்கின்றனர். பத்மா தற்சமயம் ஒரு குழந்தையும் பெற்றிருக்கின்றார். பிள்ளைகளையும், பத்மாவையும் கவனித்துக்கொண்டிருந்த ராஜூவின் தாயார் ஒரு மரண நிகழ்வுக்காக அவரின் ஊருக்கு இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருக்கின்றது. ராஜூ நம்மைப் போன்ற  வீட்டு வேலை எதிலும் பங்காற்றாத ஆண். ராஜூவின் தாயார், உன் மனைவியைக் கஷ்டப்படுத்தாது, உன் பிள்ளைகளைப் பார்த்து அவளுக்கு உதவியாக இரு' என்று சொல்லிவிட்டுப் போகின்றார். 


பத்மாவிற்கு உடம்பு சரியில்லை, அத்தோடு மூன்று பிள்ளைகளையும் பார்க்கவும் வேண்டும். ராஜூ ஒவ்வொருமுறையும் ஏதாவது உதவி வேண்டுமா வேண்டுமா என்று கேள்வி கேட்டுவிட்டு வழமையாக எப்படி இருப்பானோ அப்படியே இருக்கின்றான். தனது உணவைக் கூட, எடுத்துப் போடாது பத்மாவே அவனுக்குப் பரிமாற வேண்டியிருக்கின்றது. உணவுண்டபின் அடுத்த விருப்பமான தேகவேட்கை ராஜூவிற்குள் பொங்குகின்றது. பத்மா உண்மையிலே அலுப்பாக இருப்பதால் கொஞ்சம் மறுக்கின்றாள். ராஜூவிற்குக் கோபம் வருகின்றது. வீட்டை விட்டு வெளியேறுகின்றான். அப்போது கூட வழமை போல எல்லாம் மறந்து தன்னை வீட்டுக்குள் பத்மா அழைப்பாள் என்று எதிர்பார்க்கின்றான். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு வெளியே அலைந்து திரிந்து வரும் ராஜூவிடம், பத்மா தன் அலுப்பின் காரணமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ மன்னிப்புக் கேட்பதில்லை. அப்படியே தூங்கிவிடுகின்றாள். அத்தோடு கதை முடிகின்றது. 


இங்கே கரிச்சான்குஞ்சு என்கின்ற படைப்பாளி  எந்த உரிமையும் எடுத்துக் கதையில் குறுக்கிடுவதில்லை. ஆதவன் குறிப்பிடுதைப் போல இங்கே ராஜூ ஒரு வில்லனாகச் சித்தரிக்கப்படுவதில்லை. பத்மா கூட ஒரு சொற்பொழிவு ஆற்றுவதில்லை. 'ஆசிரியர் ஒதுக்கமாகப் புற நிகழ்ச்சிகளை மட்டும் விவரித்து அழுத்தாமனதொரு சூழலை உருவாக்கும் இந்த நாச்சுரஸிஸ பாணியை' கரிச்சான் குஞ்சு கையாள்கின்றார் என்று ஆதவன் குறிப்பிடுகின்றார்.


முழுத்தொகுப்புக்கள் ஒருவகையில் படைப்பாளிகளின் முழுப்பரிணாமத்தையும் நம் முன்னே வைப்பதுபோல, அவர்களின் பலவீனமான படைப்பின் பக்கங்களையும்  எளிதாகக் காட்டிவிடக்கூடியவை. அதுவும் ஒரு படைப்பாளி காலமானபின், அவர் வாழுங்காலத்தில் தன் தொகுப்பில் சேர்க்க விரும்பாத கதைகளை எல்லாம் ஒரு தேர்ந்த தொகுப்பாளர் சேர்த்துவிடும்போது, நாம் நல்லதில்லாத கதைகளையும் வாசிக்க நேர்ந்துவிடுகின்றது. அந்தப் பலவீனங்களையும் தாண்டி ஒரு படைப்பளி விகசித்து எழுவதென்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கக்கூடிய பெரும் சவால். 


இதை வேறுவிதத்தில் 'ஒரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளையும் எல்லா வாசகர்களும் ரசிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. அத்தகைய வீரவழிபாட்டை, நுட்பமான ஒரு இலக்கியாசிரியன் ரசிப்பவனுமில்லை' என்று ஆதவன் எழுதியிருப்பது இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதுதான். காதலிகளை அரவணைத்துக் கொண்டிருந்தால் அது தெய்வீக அனுபவம், நம்மைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒருவர் தன் படைப்புக்களை ஆரத்தழுவிக் கொண்டிருந்தால், இலக்கியம் மட்டுமில்லை  அவரவர்க்கிருக்கும்  துணைகளும் பாவம் என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். 


**********************

(Dec 27, 2022)

0 comments: