கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 03

Tuesday, March 28, 2023


1.

சென்ற வாரம் ஒரு நண்பர் அவர் சிறிதளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கும் ஒரு திரைப்படம் பற்றி கூறிக் கொண்டிருந்தார். 'இது ஒரு நடுநிலையான திரைப்படம், அரசு X இயக்கம் என்கின்ற இரு தரப்பையும் விமர்சிக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். எனக்கு இவ்வாறான 'நடுநிலை'மைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை, ஒரு படைப்பு அது எடுத்துக்கொள்ளும் களத்துக்கு உண்மையாகவும்/genuine ஆகவும் இருக்கின்றதா என்பதை மட்டுமே பார்ப்பேன் எனச் சொன்னேன். மேலும் அரசு என்னும் மாபெரும் இயந்திரத்தை, எந்த ஒரு போராடும் இயக்கத்திற்கும் நிகராக வைத்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் அவருக்குக் குறிப்பிட்டேன். எந்த ஒரு இயக்கமும் தன்னியல்பிலே விரும்பி ஆயுதமெடுத்துப் போராடுவதில்லை, தம்மைத் தாமே பலிகொடுக்கவும் வருவதில்லை. இவ்வாறான இயக்கங்கள் தோன்றுவதற்குப் பெரும்பாலும் அரசுக்களும், சமூக புறக்காரணிகளுமே முக்கியமானவை. அதைத் தவிர்த்து, இந்த இயக்கங்கள் பிறகான காலத்தில் தம்மளவில் வன்முறையாளர்களாகவும், தம்மைச் சுற்றியவர்களை அழித்து தம்மையும் அழித்துக்கொண்டாலும் அவற்றைப் பேசும்போதும் கூட, இவை எழுந்தவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை நாம் மறந்துவிடக்கூடாது என்றேன்.

இன்றைக்கு ஒரளவு வாசிப்புடைய எவருக்குமே உலகில் மக்களுக்காய் மக்களிடையே எழுந்த எந்தவொரு ஆயுத இயக்கமும் தன் கையில் இரத்தக்கறையில்லாது வரலாற்றின் முன் நின்றதேயில்லை என்பது புரியும். அவையவற்றின் கறையில் கூடக் குறைய இருக்குமே தவிர, எவருமே 'புரட்சியின் பெயரால்' எனச் சொல்லித் தப்பி விடமுடியாது. அது நாம் உலகப்பரப்பில் வியந்துகொண்டிருக்கும் சே, லெனினில் இருந்து, ஈழப்போராட்டத்தில் நல்லதொரு தலைமைப்பண்பு உடையவரென பலரால் சொல்லப்படுகின்ற பத்மநாபா உட்பட அனைவரும் இந்தப் பழியிலிருந்து தப்பமுடியாது.

இந்த 'கசப்பான உண்மை'யை அறிந்துகொண்டு ஈழப்போராட்டத்தை அணுகியவர்கள் என்று பார்த்தால் மிகக்குறைவானவர்களே இருக்கின்றனர். இன்றைக்கு ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் அதன் தோற்றுவாய், துன்பவியலான முடிவு, இனியான எதிர்காலம் என்று தத்துவார்த்த பின்னணியில் தமிழ் நிலத்தோடு ஆராய்ந்து எழுதியவர்கள் என்பது மிகக் குறைவு. அதிலும் ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் இருந்து எழுதும் ஆய்வாளர்கள் நிலைபற்றிச் சொல்லத் தேவையில்லை. இன்னமும் 2000களின் தொடக்கத்திலேயே தேங்கிவிட்டு, புதிதாக நாம் வாசிப்பதற்கு/சிந்திப்பதற்கு, எதையும் எழுத அவர்கள் தயாரில்லை. அது எத்தரப்பாயினும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடுவதில் மட்டும் அவர்களுக்குப் பெருமிதம்.

ஈழப்போராட்டம் இறுதிக்கட்டத்தில் நின்றபோது, அதன் அத்தனை பலவீனங்களையும் அறிந்துகொண்டு அதைத் தமிழ்நிலப் பண்பாட்டிலும், சர்வதேச அரசியல் நிலைமைகளோடும் நானறிய இருவர் எழுதிக் கொண்டிருந்தனர். ஒருவர் நாகார்ஜூனன், மற்றவர் தமிழவன். நாகார்ஜூனன் தனது இணையத்தளத்திலும், தமிழவன் தீராநதி போன்ற அச்சு ஊடகங்களிலும் எழுதிக்கொண்டிருந்தனர். வேறு சில தமிழகப் படைப்பாளிகள் அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியா போன்ற தேசங்களுக்குப் பயணஞ்செய்கையில், இந்தக் கடும் யுத்தம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டபோது, 'நானொரு அரசு ஊழியன், அது பற்றி கருத்து எதுவும் கூறமாட்டேன்' என்று கூறியும் இருந்தார்கள். அந்தக் காலத்தில்தான் தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் தீக்குளித்தபடியும், இன்னும் பலர் கையாலாகநிலையிலும் தம் எதிர்ப்பைக் காட்டி சிறைக்குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள். அவரவர்க்கு அவரவர்க்கான அறம் அல்லது அந்தந்த நேரத்து நியாயங்கள்!


2.

ழப்போராட்டம் தீவிரமான கட்டத்தில் இருந்தபோது தமிழவன் அதை நீண்ட நம் தமிழ்ப்பண்பாட்டில் வைத்து புரிந்துகொள்கின்றார். எவ்வாறு 1980களில் ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தமிழகத்தின் அந்தக்காலத்தைய தலைமுறையைப் பாதித்ததோ, அவ்வாறே ஈழப்போராட்டத்தின் இறுதி முடிவானது தமிழவனை மீண்டும் தமிழடையாளத்தைத் தேடச் செய்கின்றது. அதை அவர் தமிழின் செழுமையான தமிழ் இலக்கியங்களினூடாக சென்று மறுவரையாக்கம் செய்கின்றார். அதுவே தொகுக்கப்பட்டு இப்போது 'திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் ( ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு)' என நூலாக வந்துள்ளது. இத்தொகுப்பின் முன்னுரையில் தமிழவன், 'தமிழ் இலக்கியமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன' என்று தெளிவாகச் சொல்லிவிடுகின்றார்.

இன்றும் பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் விரிவாகப் பேசப்பட்டபின்னும், இன்னும் இலக்கியத்தில் அரசியல் வேண்டாம் என்கின்ற குரல்களைப் பல இடங்களில் கேட்கின்றோம். இலக்கியத்தில் அரசியல் உரத்து ஒலிக்கின்றதா, மெளனத்தினூடாகப் பேசப்படுகின்றதா என்பதே ஒரு வாசகர் பார்க்கவேண்டியதே தவிர, இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது அபத்தம் என்பதை நாமனைவரும் அறிவோம்.

தமிழவன் இத்தொகுப்பில் இருக்கும் 25 கட்டுரைகளிலும், நாம் ஏற்கின்றோமோ/மறுக்கின்றோமோ நாம் விவாதிக்கக் கூடிய பலபுள்ளிகளை ஒவ்வொரு கட்டுரையிலும் தருகின்றார். திராவிட இயக்கங்களின் முக்கியமாய் அண்ணாவின் பங்களிப்பை பெரும் நிகழ்வாகக் கொள்கின்ற அவர் அதேசமயம் அண்ணாத்துரையின் எழுத்துக்களை பலவீனம் என்றும் ஒதுக்கிவிடுகின்றார். ஆனால் அண்ணா கண்டெடுத்த பாரதிதாசனை தமிழவனும் முன்னிறுத்துகின்றார். பாரதியாருக்கும், அவரின் தாசனாக தொடக்கத்தில் கிளைத்த பாரதிதாசன் பிற்காலத்தில் எப்படி பாரதியாரிலிருந்து விலகி வந்திருக்கின்றார் என்று இதில் விபரமாக எழுதுகின்றார். பாரதியாருக்கு பக்தி இயக்கம் முன்னோடியாக இருந்து அதுவே அவரது சுதந்திரவேட்கைப் பாடல்களில் 'பாரத மாதா'வாக தீர்க்கமாக ஒலித்ததென்கின்ற தமிழவன், பாரதிதாசன் பிற்காலத்தில் சங்கப்பாடல்களுக்குள் அதிகம் மூழ்கின்றபோது அது தமிழ் அடையாளம் என்ற முக்கிய கதையாடலை முன்வைக்கின்ற புள்ளியாக மாறுகின்றதென்கின்றார். அந்தவகையில் 'தமிழ் தொல்மனமும் பாரதிதாசனும்', 'பாரதியும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த தமிழ்த்தேசமும்' முக்கியமான கட்டுரைகள் என்பேன்.

திராவிட இயக்கத்தினர் இன்றைக்கும் பாரதிதாசன் உள்ளிட்ட திராவிட எழுத்தாளர்கள் பற்றி முறையான ஆய்வுகள் செய்யாது ஒரு சிமிழுக்குள் பலரை அடக்கிவிட்டனர் என்பதைத் தமிழவன் விமர்சிக்கவும் செய்கின்றார். அதேவேளை திராவிட இயக்கத்தினர் கவனிக்காதுவிட்ட மணிக்கொடி/எழுத்து/க.நா.சு பற்றியும் அவர்கள் தமிழை வளர்த்துக்கொண்டு வந்த விதம்பற்றியும் குறிப்பிடுகின்றார். அதை ஒரு தனிக்கட்டுரையில் 'க.நா.சு வென்றார்' என்று தமிழவன் எழுதியிருக்கின்றார்.

அவ்வாறே ஈழத்தவர்களின் அரசியலைப் பேசுவதற்கு மஹாகவியின் படைப்புக்களையும், எஸ்.பொவின் 'மாயினி'யையும் எடுத்தாண்டிருக்கின்றார். கைலாசபதியும், ஏ.ஜே.கனரட்னவும், முக்கியமாய் சிவத்தம்பியும் பல கட்டுரைகளில் அவர்களின் பங்களிப்புக்காய் கவனப்படுத்தப்படுகின்றனர். இன்றைக்கு தமிழ் அரசியல் பேசும் ஆய்வாளர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய கட்டுரைகளாக தமிழவனின் 'இருபதாம் நூற்றாண்டின் தமிழாய்வில் அரசியல்' மற்றும் 'இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசமும் தமிழும்' என்பவற்றைச் சொல்வேன்.

தமிழுக்கென்று சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு தொடர்ச்சியும், தொன்மையும் இருந்தாலும், சிறுகதைகள், நாவல் உள்ளிட்ட வகைமைகள் மேற்கிலிருந்து வந்ததை ஏற்றுக்கொள்பவர்கள், பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் என்று வரும்போது அவை நம்சூழலுக்கு ஒத்துக்கொள்ளாது என முகஞ்சுழித்தபடி இருக்கின்றார்கள். அவர்கள் நிதானமாய்த் தங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதற்கு, இங்கே 'எண்பதுகளில் தமிழில் தோன்றிய புதுவகை கதை இயக்கமும் சில விமரிசனங்களும்', 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும், 21ஆம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும்' போன்ற கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

எண்பதுகளில் உரையாடப்பட்ட பின் அமைப்பியல்/பின் நவீனத்துவம் போன்றவையே தமிழ்ச்சூழலில் தலித்தியமும், பெண்ணியமும் பேசுவதற்கான தளங்களை இன்னும் விரிவாக்கியது என்கின்ற உண்மையறியாதவர்களே இலக்கியத்தில் தத்துவ/கோட்பாட்டு உரையாடல்கள் தேவையில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். ஒரு இலக்கிய படைப்பு எத்தகைய தத்துவ சட்டகத்திற்குள்ளும் வலிந்து நின்று எழுதப்படுவதில்லை என்பது எந்த ஒரு இலக்கிய விமர்சகருக்கும் தெரிந்த எளிய உண்மை. ஆனால் ஒரு பிரதியைப் புரிந்துகொள்ள, அதை விரித்துப் பார்க்க இவ்வாறான கோட்பாடுகளே தேவையென்பதும், எல்லாக் கோட்பாடுகளும் காலத்தின் நீட்சியில் இன்னொன்றாக விரிந்து தன் வீரியத்தை இழந்துபோவதும் இயல்பானவைதான். இதைப் புரிந்துகொள்ளாமலே இன்றும் 80/90களில் பேசப்பட்ட கோட்பாடுகள் தற்காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டன, எனவே கோட்பாடுகள்/விமர்சனங்கள் தேவையில்லை என்று கிடைக்கும் மேடைதோறும் சிலர் பேசி அலுப்படைய வைக்கின்றனர்

திராவிடம் என்று தமிழடையாளம் தேடிய தமிழர், பின்னர் தமிழ்ச் சினிமா நாயகர்களைத் தமது தலைவர்களாகக் கொண்டு பாலும் தண்ணீரும் கட்-அவுட்களுக்கு அபிஷேசம் செய்பவர்களாகவும், அவர்களே தமிழ்நிலத்தின் நாயக பிம்பங்களாக தொலைக்காட்சிகளில் மாற்றப்பட்டதையும் தமிழவன் சிறப்பாக ' எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட கலையும், தமிழன் அகதி ஆனதும்' மூலம் எழுதிச் செல்கின்றார்.

இந்தத் தொகுப்பு தமிழ் அடையாளம் சீரழிந்து போவதை மட்டுமில்லாது, நாம் அந்த அடையாளங்களை எதன் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கின்ற சில புள்ளிகளை முன்வைப்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ் அடையாளம் சார்ந்து அரசியல்/இலக்கியம் பேசும் எவராயினும் இந்த நூலை வாசிக்கவேண்டும் என்பேன்.

நாம் தமிழவனின் கட்டுரைகளை ஏற்கின்றோமோ, இல்லையோ என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆகக்குறைந்தது போலி தமிழ் அடையாள உணர்விலும், பெருமையிலும் நம்மைத் தோய வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்/இலக்கிய/நடிக விம்பங்களிலிருந்தும், அதன் நச்சுச்சூழல்களிலிருந்தும் இதை வாசிப்பதன் மூலம் நாம் ஒரளவு தப்பிப் போகவாவது முடியும். 

**************************

(Dec 29, 2022)Part

0 comments: