கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரசன்ன விதானகேயின் 'Paradise'

Friday, August 30, 2024

பிரசன்ன விதானகேயின் அநேக திரைப்படங்கள் எளிதான போலத் தோற்றமளித்தாலும் அவை ஆழமான உள்ளடுக்குகளைக் கொண்டவை. பிரசன்னாவின் திரைப்படங்களின் பாத்திரங்களின் உரையாடல்களை மட்டுமில்லை, காட்சிச் சட்டகங்களையும் கூர்மையாக அவதானிக்க வேண்டும். 'பரடைஸ்' என்கின்ற இத்திரைப்படத்தில் நாயகிக்கு வைக்கப்பட்டிருக்கும் 'பிரேம்'களே ஒவ்வொருபொழுதும் ஒரு கதை சொல்வதை நாம் கண்டுகொள்ள முடியும். அந்தக் காட்சிச் சட்டகங்கள் பேசப்படும்/நடக்கும் சம்பவங்களுக்கு அப்பால் ஒரு கதையை மறைமுகமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.

இலங்கை பொருளாதாரத்தில் அடிவாங்கி, நாடு திவாலாகிக் கொண்டிருந்த காலத்தில் கேரளாவில் இருந்து கேசவ்வும், அம்ருதாவும் இலங்கைக்குப் பயணம் செய்கின்றனர். இவர்கள் ஐந்து வருடங்களாகத் திருமணம் செய்த ஒரு இணை. தொலைக்காட்சித் தொடர் (?) இயக்குநனராக இருக்கும்கேசவ் தொடக்கத்தில் இருந்தே அலைபேசிக்குள் அமிழ்ந்து கிடப்பவராக இருக்கின்றார். அவரது வேலை தொடர்பாக அழைப்புக்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கேசவ்வின் துணையான அம்ருதாவோ ஒரு பயணியைப் போல புதிய இடங்களை/கதைகளை அறிய விரும்புகின்றார். இவர்கள் இருவருக்கும் பயண வழிகாட்டியாக மிஸ்டர்.அன்ட்ரூ இருக்கின்றார்.

இத்திரைப்படம் ஒருவகையில் இராமயணத்தைக் கட்டவிழ்க்கின்றது. அன்ட்ரூ, இந்த இணையை எல்லவில் இருக்கும் இராவணன் நீர்வீழ்ச்சி, குகைக்கு எல்லாம் அழைத்துச் செல்கின்றார். இந்தக் குகையில்தான் இராவணன் இன்னும் உறங்குகின்றார். என்றோ ஒருநாள் லங்கா சிக்கலில் மூழ்க்கும்போது எழுந்து வருவார் என்று ஒரு கதையைச் சொல்கின்றார். பின்னர் நுவரெலியாவில் இருக்கும் சீதா எலியவுக்குச் செல்லும்போது, இங்கேதான் சீதை சிறை வைக்கப்பட்டார். இந்தப் பாறையில் இருந்துதான் சீதை சூரிய ஒளியே பார்ப்பார் என அன்ட்ரூ சொல்கின்றார். சீதா எலிய கோயிலுக்குப் போன நமக்கு (அது இப்போது முற்றுமுழுதாக சம்ஸ்கிருதப்பட்ட இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஒரு கோயிலாக இருப்பதை கடந்த வருடம் சென்றபோது நான் அவதானித்து எழுதியிருக்கின்றேன்) அங்கே பாறையில் தெரியும் பெரும் குழி அனுமானின் காலடித்தடம் எனச் சொல்லப்பட்டு புனித இடமாக இருப்பதை அறிந்திருப்போம்.

இங்கேதான் அனுமான் வந்து சீதையைச் சந்தித்தார் என்றும், பின்னர் ராமன் வந்து சீதையை மீட்டுச் சென்றார் என்றும் சொல்கின்றபோது, அம்ருதா அடக்கிய சிரிப்பைக் கண்களால் காட்டியபடி செவிமடுக்கின்றார். பின்னர் அவர் அன்ட்ரூவிடம், 'அன்ட்ரூ, நீங்கள் உண்மையிலே சீதையை ராமன் வந்து காப்பாறியிருப்பார்ர் எனவா நினைக்கின்றீர்கள்?' எனக் கேட்கின்றார். சீதைக்கு தன்னைத்தானே காப்பாற்ற முடியாதா எனக் கேட்டுவிட்டு, நீங்கள் சொல்வது வால்மீகி எழுதிய இராமாயணம். ராமாயணத்துக்கு முந்நூறுக்கு மேற்பட்ட வடிவங்கள் இருப்பது தெரியுமா எனக் கேட்கின்றார்.

அப்படி அம்ருதா சொல்லிவிட்டு
, ஜைனர்களுக்கு இருக்கும் ஒரு இராமாயணத்தில் ராமன் ஒரு தேர்ச்சாரதி மட்டுமே. சீதை இராவணைக் கொன்றுவிட்டு வரும்போது அவரை அழைத்துச் செல்கின்ற சாரதியாக மட்டுமே அங்கே ராமர் இருக்கின்றார் எனச் சொல்கின்றார்.
இப்போது அன்ட்ரூவுக்கு தன்னோடு பேசிக்கொண்டிருக்கும் அம்ருதா ஒரு சாதாரண -எல்லாக் கதைகளையும் உண்மையென நம்பும்- ஒரு பெண் இல்லையென்பது புரிகின்றது. ஆகவேதான் இன்னொரு இடத்தில் ஒரு மதகுரு இங்கேதான் சீதை தீக்குளித்து தன் 'கற்பை' நிரூபித்து இராமனைக் கைபிடித்துச் சென்றார் என்று ஒரு கதையைக் கூறும்போது, அன்ட்ரூ 'இப்படித்தானே நான் ஒரு கற்பனைக் கதையைச் சொன்னேன், என்னை மன்னியுங்கள்' என்கின்றார். அம்ருதாவோ 'இல்லை இல்லை உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது' என்கின்றார். தந்தை வயதிருக்கும் அன்ட்ரூவுக்கும், அம்ருதாவுக்கும் அதன்பிறகு சொல்லாமலே இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் உறவு முகிழ்ந்துவிடுகின்றது.

இந்தப் பொழுதுகளிலே கேசவ்வினுடையதும், அம்ருதாவினதும் அலைபேசிகளும், மடிக்கணனிகளும் திருடப்படுகின்றன. அதன்பின் கேசவ் வேறு ஒருமாதிரியான மனிதராக மாறிவிடுகின்றார். பொலிஸில் இது குறித்து முறையிடுகின்றனர். பொலிஸ் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நுவரெலியாவில் இருக்கும் சில தமிழ் இளைஞர்களை திருடர்களென முன்னிறுத்துகின்றது. இவர்கள்தானா களவெடுத்தவர்கள் என அடையாளங் காட்டக் கேட்கும்போது, தனது பொருட்கள் கிடைத்துவிடவேண்டுமென்கின்ற அவதியில் கேசவ் அவர்கள்தான் களவெடுத்தனர் எனச் சொல்லிவிடுகின்றார். அதிலிருந்து நிகழ்வதெல்லாம் துன்பகரமான நிகழ்வுகள். இந்தப் பொலிஸ் சித்திரவதையால் ஒருவர் பொலிஸ் காவலிலேயே இறந்துவிடுகின்றார்.

அப்போதும் கேசவ் சுற்றி நடப்பவைகளை கவனிக்கத் தவறுகின்றார். அம்ருதா இவையெல்லாம் மெளனமாக இருந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றார். பொலிஸிடம் அம்ருதா, இப் படி ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட்டாரே, நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்கும்போது, அவர் சொல்வார், இதில் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை, வேண்டுமெனில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்துவிட்டது, அவ்வளவுதான்' என்று எள்ளலாகச் சொல்கின்றார்.

இந்த ஒரு காட்சி மூலமாகவே பிரசன்ன இலங்கையில் சிறுபான்மை இனங்களில் நிலை பற்றி நமக்கு மறைமுகமாகச் சொல்லிவிட்டார். மேலும் நாடு திவலாகிப் போய்க் கொண்டிருக்கும் காலத்தில்கூட இந்த இனத்துவேசமும், பொலிஸ்/இராணுவம் என்கின்ற அமைப்புக்கள் தமது அதிகாரத்தைக் கைவிடத் தயாரில்லை என்பதை இந்தக் காட்சியினூடாகக் காண்கின்றோம்.

ஒரு தமிழ்த் தோட்டதொழிலாளியின் சிறைமரணம் தொழிலாளர்களைக் கொந்தளிக்கச் செய்கின்றது. பொலிஸோ களவாடப்பட்ட அலைபேசிகளையோ/ கணனிகளையோ கண்டுபிடிக்க முடியாமல், அந்த சுற்றுலா விடுதியில் சமையல் வேலை செய்யும் தமிழ்/முஸ்லிம் இளைஞர்களும் இந்தக் களவுக்குக் கூட்டு என குற்றஞ்சாட்ட நிலைமை இன்னும் மோசமாகின்றது. ஒருவகையில் இந்தக் கொலைக்கும்/ நிகழ்வுக்கும் தாங்களும் ஒரு காரணமென்று நம்பும் அம்ருதா இறுதியில் கொடுக்கும் தீர்ப்பு அதிர்ச்சிகரமானது.

அந்தச் சம்பவத்தையிட்டு பொலிஸிடம் சாட்சி சொல்லும் அன்ட்ரூ அது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்கின்றார். நாட்டை விட்டு வெளியேறும்போது அம்ருதா அன்ட்ரூவிடம், 'நீங்கள் நான் அதைத் தற்செயலாகத்தான் செய்திருப்ப்பேன் என்றா நம்புகின்றீர்கள்' எனக் கேட்கின்றார். அதுதான் இந்த திரைப்படத்தின் அடிநாதம்.

இராமாயணத்தை பிரசன்ன இன்னொருவிதமாக கட்டவிழ்த்துப்பார்க்கின்றார் என இத்திரைப்படத்தை வைத்துச் சொல்லலாம். ஏற்கனவே
300 இராமாயணங்கள் இருந்தால் ஏன் இன்னொரு வடிவமாக பிரசன்னாவின் கதை இருக்கமுடியாது. இங்கே ராவணன் என்கின்ற பாத்திரமே இல்லை. ஆனால் ராமனும், சீதையும் இருக்கின்றனர். சீதைக்கு மானை வேட்டையாடும் சந்தர்ப்பம் வரும்போது அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனச் சொல்கின்றார். அந்த மான் பல்வேறு நேரங்களில்/பல்வேறு வடிவங்களில் அம்ருதாவுக்குக் காட்சியளிக்கின்றது. அப்படித் தோன்றுவதன் மூலம் அம்ருதாவின் உள்மனதுக்கு அது எதையோஒவ்வொருமுறையும் உணர்த்தியபடி இருக்கின்றது. இங்கே அன்ட்ரூதான் அனுமான். இந்த அனுமான் ராமனை விட சீதைக்கு நெருக்கமாக இருக்கின்றார். சீதையை நன்றாகப் புரிந்துகொள்ளும் அன்ட்ரூ அவரை இறுதியாக இக்கட்டான ஒரு பெரும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகின்றார்.

இத்திரைப்படத்தில் சீதை, ராமன், அனுமன் கதைகள் குலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. மேலும் பிரசன்னாவின் சீதை, கொடும் விடயங்கள் நடக்கும்போது சும்மா இருப்பதில்லை. ஒருகட்டத்தில் தன் சுயத்தில் இருந்து எழுந்து, கொடுமை செய்பவர் ராமனாக இருந்தாலும் அவனுக்குரிய தண்டனையைக் கொடுக்கவும் செய்கின்றார். ஆகவே சீதை பற்றிய ராமாயணக் கதையாடல் மாற்றியமைக்கப்படுகின்றது. இன்றைய ராமன்கள் எப்போதும் தமக்காய் சீதைகள் காத்திருப்பார்கள்/ தம் சொல் கேட்பார்கள் என்று கனவுகாண்கின்றார்கள். ஆனால் அந்தக் காலம் எப்போதோ மலையேறிப் போய்விட்டது.

ஆண்களுக்கு ஒரு விடயம் முக்கியமாகிப் போய்விட்டதெனில் அதையே கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அது போராட்டமாக இருந்தால் கூட மாற்றுவழிப் பாதைகளைப் பற்றி யோசிக்க முரண்டு பிடிப்பார்கள். ஆகவே பல போராட்டங்கள் எவ்வளவோ விலைகொடுத்தும் அதன் இலக்குகளை அடையமுடியாமல் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால் பெண்கள் தமது போராட்டங்களின் போது சுற்றியிருப்பவற்றை அவதானிப்பவர்கள். அதனூடு தம் வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடியவர்கள். ஆகவேதான் போர்காலமானால் என்ன, பட்டினிக்காலமானால் என்ன நமது அன்னையர்களும், சகோதரிகளும் நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கின்றார்கள். அத்தோடு பெண்கள் தமது உரிமைகளுக்காகப் போராடிப் பெற்றவையெல்லாம் அதிக இழப்புக்கள் இல்லாமல் அமைதியாகவே இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நடந்தேறியிருப்பதை நாம் நேரடிச் சாட்சிகளாகப் பார்த்துமிருப்போம்.

இங்கேயும் கேசவ் ஒரு விடயத்துக்குள் மட்டும் சிக்குப்பட்டவனாக இருக்கின்றான். அவனால் தொலைந்துபோன தனது பொருட்களை மீளப்பெறுவதைத் தவிர வேறொன்றையும் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. ஆகவேதான் அம்ருதா இயற்கையை,இன்னபிற விடயங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக தன்னை வைத்திருக்கும்போது, 'இங்கே நான் அகப்பட்டிருக்க, எப்படி உன்னால் இப்படி சிரித்துக் கொண்டிருக்க முடிகின்றது' என்று கோபப்படுகின்றான். அந்தக் காட்சியில் அம்ருதா தனது கண்களால் காட்டும் மகிழ்ச்சியையும் எள்ளலையும் எந்த ஆணாலும் எளிதாகக் கடந்து போகமுடியாது.

இலங்கையில் இப்போது சிங்களவர்கள் சட்டென்று இதுவரை 'தமிழ் அரசன் இராவணன்' என்ற கதையாடலை மாற்றி இராவணன் தமது சிங்கள அரசன் என்கின்ற கதைகளை கட்டியமைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். அதன் மூலம் இலங்கைக்கான தமது வருகையை மகாவம்சம் சொல்லும் காலத்துக்கு முன்பாக நீட்சித்துப் பார்க்க விரும்பும் அவர்களின் பேரவா எனச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு இராவணனை தமது அரசனாக கட்டியமைக்கின்ற காலத்தில்தான் சமாந்திரமாக இன்னும் இலங்கையிலிருக்கும் சிறுபான்மை மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்கின்ற ஒரு கதையாடலையும் பிரசன்ன முன்வைக்கின்றார். அந்த மக்களை போட்டு மிதிக்கின்ற, அதிகாரத்தில் திளைக்கின்ற பொலிஸ் அதிகாரி கூட, I'm a dog. I'm good dog. I'm loyal to my master. you're my master, sir' என்று யாரோ ஒரு சுற்றுலாப் பயணிடம் தன்னை அடிமையாக்கும் நிலையைக் காட்டுவதை விட வேறு எப்படி ஒரு கறாரான விமர்சனத்தை சிங்கள அதிகார அமைப்புக்கள் மீது வைத்துவிட முடியும். இதை இன்னொருவகையாக இலங்கையில் மற்ற சக இனங்களை மதிக்காமல் அந்நியர்களிடம் அடிபணிந்து வாலாட்டுகின்ற அடிமை மனோநிலையை பொலிஸிக்கு மட்டுமில்லை இலங்கை அரசுக்கும் இருப்பதை விமர்சிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தவகையில் பலவித உள்ளடுக்குக்களையும், உரையாடல்களையும் தன்னகத்தே கொண்ட 'பரடைஸ்' திரைப்படம் முக்கியமானது. நமது ஈழ/புலம்பெயர் திரை செல்லவேண்டிய திசைக்கு முன்னோடியாக பிரசன்னவை முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகச் சொல்லிக் கொண்டிருப்பவன் நான். இத்திரைப்படம் அதற்கு இன்னுமொரு தெளிவான உதாரணமாகும்.

 
***********

(Aug 05, 2024)

 

வி.வி. கணேசானந்தனின் 'சகோதரனற்ற இரவு'

Tuesday, August 27, 2024

Brotherless Night by V.V.Ganeshananthan


லங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து பதற்றமான சூழ்நிலையில் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றது. 1956 சிங்களத் தனிச்சட்டம், இன்னொரு இனத்தின் மீதான மொழியின் மீதான வெறுப்புக்கு உதாரணமானது. அதன் நீட்சியில் நடந்த தமிழர் மீதான படுகொலைகள் 1956, 1958 இல் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டில் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்துக்கு ஏறியவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவேதான் பின்னரான காலங்களில் அநியாயமாக மனித உயிர்கள் பல்லாயிரக்கணக்கில் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை சுதந்திரம் பெற்றபின் எந்த ஒரு தசாப்தத்திலும், முழுநாட்டும் அமைதியாக இருந்த காலங்கள் என்று பார்த்தால் அரிதாகவே இருக்கும். தமிழர்களின் மீதான சிங்களப் பேரினவாதத்தால் பின்னர் 1977, 1983 காலங்களில் படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.  பின்னர் முற்றுமுழுதாக நாடு போரிற்குள் 2009வரை அமிழ்ந்திருக்கின்றது.

இவ்வாறாக பல்வேறு சூழ்நிலைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், யாழ்ப்பாணம் என்கின்ற ஒரு நகரைப் பின்னணியாக வைத்து வாசுகி கணேசனாந்தன் 'சகோதரனற்ற இரவு' (Brotherless Night) எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் 1980-1989 வரை நடந்த நிகழ்வுகள் பல இங்கே சொல்லப்படுகின்றன

 

சசி என்கின்ற பெண்ணே இந்தக் கதையை நமக்குச் சொல்கின்றார். சசிக்கு நான்கு ஆண் சகோதரர்கள். அந்தக் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியராக வர விரும்புகின்றவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் சசியின் மூத்த சகோதரன் நிரஞ்சன் வைத்தியராகத் தயாராகி விட்டிருந்தார். சசி அவரின் சகோதரர்கள் சீலனோடும், அவரின் நண்பரான 'கே'யுடனும் சேர்ந்து உயர்தரப் பரிட்சைக்காய்ப் படிக்கின்றார். அப்படிப் பழக்கமாகின்ற கேயுடன் சசிக்குக் காதல் வருகின்றது. அது ஒருவகையான 'யாழ்ப்பாணத்துக் காதல்'. சொல்லியும், சொல்லாமலும், தெரிந்தும், தெரியாமலுமாக முகிழ்கின்ற நேசமென எடுத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் காலத்தில்யேயே இவர்கள் படிக்கச் செல்லும் யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்படுகின்றது. தமிழர்களின் ஒரு நீண்டகால வரலாற்றைச் சொல்லும் பல நூல்கள் அழிந்து போகின்றன. இந்தக் காலங்களில் யாழில் பொலிஸ் மீதான தமிழ் இளைஞர்களின் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இந்தத் தாக்குதல்களினால் பொதுசனமாக இருந்த கேயும், சசியின் சகோதரர்களும் பொலிஸால் விசாரிக்கப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.

சசி உயரதரப்பரிட்சையில் சுகவீனம் காரணமாக முதற்தடவை சிறப்பாகச் செய்யவில்லை. மறுமுறை பரிட்சைக்குப் படிக்க அவர் அவரது மூத்த சகோதரனான நிரஞ்சனோடு கொழும்புக்குப்ப் படிக்க அனுப்பபடுகின்றனர். இப்போது நிரஞ்சன் ஒரு வைத்தியசாலையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆகிவிட்டார். சசியும், நிரஞ்சனும் அவர்களின் அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருக்கின்றனர். இந்த காலகட்டத்தில்தான் கொழும்பில் ஆடி-1983 தமிழர்களுக்கெதிராக நிகழ்கின்றது. கிட்டத்தட்ட 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள், தமிழ் மொழி பேசுகின்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காய் அடையாளமிட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலையில் ஒருமாதிரியாக சசியும், அவரின் அம்மம்மாவும் தப்பி யாழ் வந்து சேர்கின்றார்கள். துன்பியல் நிகழ்வாக, இன்னொரு நண்பருடன் தெஹிவளைக்குச் சென்ற நிரஞ்சன் என்றென்றைக்குமாய்த் திரும்பாமல் காணாமற் போகின்றார். பிறகு சில மாதங்களுக்குப் பிறகு நிரஞ்சன் சிங்களக்காடையர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று கொழும்பில் இருந்த வேறொரு குடும்பத்தால் உறுதிப்படுகின்றது. சசி மிக நெருக்கமான ஒருவரின் இழப்பை வாழ்வில் முதன்முதலாகச் சந்திக்கின்றார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிவரும் சசிக்கு, அவர் நேசிக்க விரும்பும் 'கே' மட்டுமில்லை, அவரது இரண்டு சகோதர்களான சீலனும், தயாளனும் புலிகள் இயக்கத்தில் சேர்வதைக் காண்கின்றார். சில வருடங்களில் மருத்துவத் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட சசி, அஞ்சலி என்கின்ற அவரது பேராசிரியரைப் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றார். அஞ்சலியினதும், அவரின் துணைவரான வரதனினும் நட்பானது சசியினது வாழ்க்கையை வேறொரு திசையில் அழைத்துச் செல்கின்றது. இதே காலகட்டப் பகுதியில் இந்திய இராணுவம், 'அமைதிபப்டை' என்கின்ற பெயரில் இலங்கைக்குள் வந்து இறங்குகின்றது.

புலிகளுக்கும், இந்திய் இராணுவத்துக்கும் போர் மூளத் தொடங்குகின்றது. இந்தக் காலத்தில் புலிகள் போராட்டத்தின் பெயரில்' எனச் செய்யும் கொலைகளைப் பார்த்தபடி, அதை அவ்வப்போது அவரின் வீட்டுக்கு வரும் அவரின் சகோதரர்கள், கே உள்ளிட்டோரோ சசி விவாதிக்கின்றார். காயடையும் புலிகளை, ஒரு மருத்துவர் என்றரீதியில் சசி காப்பாற்றவும் செய்கின்றார். ஒருவகையில் இங்கே சசி இருதலைக் கொள்ளியாக ஒருபக்க்கம் சகோதரர்கள்/காதலர் கே புரிந்துகொள்கின்றவராகவும், மறுபுறத்தில் அநியாயமாக பலர் கொலைசெய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகத் தவிர்க்கின்றார்.

இதே காலகட்டப்பகுதியில் கே புலிகளின் சார்பில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார். அந்த உண்ணாவிரதத்தின் ஒவ்வொரு நாள் நிகழ்வும் விபரமாக இங்கே விபரிக்கப்படுகினறது. கே யின் மீது நேசம் வைத்த சசி, அவரின் இறுதி மூச்சுவரை அந்த உண்ணாவிரத மேடையில் ஒரு வைத்தியராக இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில்நிலைமை இன்னும் மோசமாகின்றது. இந்திய இராணுவம் உள்ளிட்ட இயக்கங்களின் பொதுமக்கள் மீதான வன்முறையை பேராசிரியர்களான அஞ்சலியும், வரதனும் எழுத்தில் பதிவு செய்கின்றனர். அந்த இரகசியான செயற்பாட்டில் சசி தன்னையும் இணைத்துக் கொள்கின்றார். ஒருமுறை இந்திய இராணுவத்தால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பிரியா என்கின்ற பெண்ணுக்கு சசி வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கின்றது. பிரியாவின் நான்கு சகோதரர்களும் பிரியா வன்புணர்வு செய்யப்பட்ட நாளில் இந்திய இராணுவத்தால் கொல்லப்படுகின்றனர். சசி, பிரியா இதன் வன்புணர்வினால் கருத்தரித்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார்.

இனியும் யாழ்ப்பாணத்தில் சசியை வைத்திருக்க முடியாதென, சசியையும், அவரது கடைசிச் சகோதரனான ஆர்யனையும் இங்கிலாந்துக்கு சசியின் பெற்றோர் அனுப்புகின்றனர். இதன் நிமித்தம் கொழும்பில் நிற்கும்போது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்று கொழும்பில் நடக்கின்றது. அந்த  தற்கொலைப் போராளி வன்புணர்வுக்குள்ளாகி கருத்தரித்திருந்த பிரியா என்பதை ஒருவகையில் சசி கண்டடைகின்றார்.

இங்கிலாந்தில் கொஞ்சக்காலம் வசித்துவிட்டு சசி மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்புகின்றார். அப்போது அஞ்சலியைப் புலிகள் கடத்திக் கொண்டுபோய் காணாமற் செய்துவிடுகின்றார். காணாமற்போன அஞ்சலியின் உடைமைகளைப் புலிகள் வந்து எடுத்துச் செல்லுமாறு அவரின் கணவரான வரதனிடம் சொல்கின்றார். அஞ்சலியின் இருப்புக் குறித்து விசாரிக்க வரதனும், சசியும் புலிகளின் முகாமுக்கு செல்கின்றனர். அந்த முகாம பொறுப்பாளாரான 'ரி' என்பவருடன் சீலனும் நிற்கின்றார். 

காணாமற்போய்விட்ட அஞ்சலி இறந்துவிட்டார் என்பதை அறிந்து பல்கலைக்கழக மாணவர்கள், பொதுசனங்கள் அவ்வளவு அச்சத்துக்கு நடுவிலும் ஒரு பேரணியைச் செய்கின்றார். அதில் முன்னே போகும் வரதன் அதுவரை எழுதப்பட்ட இரகசிய அறிக்கைகளில் ஒன்றை வெளியிடுகின்றனர். அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தோடு வரதனும், சசியும் தலைமறைவாகின்றனர். அதுவரை இரகசியமாக எழுதப்பட்ட இரண்டு யாழ்ப்பணத்தின் குறிப்புகளை ஒரு நூலாக சசி தன்னோடு கடத்திக் கொண்டு வருகின்றார். அதை அவர் ஒருநாள் நியூயோர்க்கிலிருக்கும் .நா சபையில் சமர்பித்துப் பேசுகின்றார். இவ்வாறு 1980 ‍வரை யாழ்ப்பாணத்தில் நிகழும் சம்பவங்களினூடாக கதை சொல்லப்படுகின்றது. இறுதியில் அது 2009 இற்குஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்திற்குத் தாவிவிடுகின்றது.

இப்போது போரில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பி வந்த சீலன், அவரின் சகோதரியான சசியிடம், அங்கே அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்ற .நாவில் சென்று பேசக் கேட்கின்றார். முதலில் மறுத்தாலும், ஒரு தவறான நபர், சரியான விடயத்தைக் கேட்கும்போது அதைச் செய்யாது தட்டிக் கழிக்கமுடியாதெனச் சொல்லி சசி .நாவுக்கு  இறுதி யுத்தம் பற்றிப் பேசச் செல்கின்றார். அத்துடன் நாவல் முடிவடைகின்றது.

 

லங்கை பற்றியோ, ஈழப்போராட்டம் பற்றியோ ஆங்கிலத்தில் எழுதப்படும் புதினங்களில் 1983 இனப்படுகொலை மையமாக இருப்பதை அவதானிக்க முடியும். ஒருவகையில் கொழும்பில் நடைபெற்ற அந்த இனவழிப்பால் சாதாரண மக்கள் மட்டுமில்லை, கொழும்பு வாழ் உயர்வர்க்க தமிழ்ச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளானது. அவர்களில் பெரும்பானமையினரே இதே முன்னிட்டு வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களாவார். அவர்கள் அதை பல்வேறுவகையில் இதை ஆவணப்படுத்தினார்கள், பேசினார்கள் என்பதால் அடுத்து வரும் தலைமுறை என்ன நடந்தது என்று பார்க்க ஆவணங்கள் கிடைத்தன. 1983 முக்கிய பேசுபொருளாக ஷியாம் செல்வதுரை, மேரி ஆன் மோகன்ராஜ் போன்றவரக்ளின் புதினங்களில் மட்டுமில்லை, சிங்களப் படைப்பாளியான நயோமி முன்னவீராவின் படைப்புக்களில் இருப்பதைக் காண்கின்றோம். ஒருவகையில் அதுவே இலங்கை அரசியலின் திருப்புமுனை என்பதாலும் 1983 பேசாது இலங்கையில் அண்மைக்கால வரலாற்றைப் பேசமுடியாது.

 

1983 இற்குப் பிறகு போரின் ஒரு காலகட்டத்தைப் பதிவு செய்த ஆவணமாக ராஜினி திரணகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் பதிப்பிக்கப்பட்ட 'முறிந்த பனை'யைக் கூறலாம். இது இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நடந்த காலப்பகுத்யில் இந்திய இராணுவத்தாலும், புலிகள், ஈபிஆர் எல் எப் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களாலும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைச் சொல்கின்றது. ஒருவகையில் முறிந்தபனையும் இல்லாவிட்டால் நமக்கு இந்திய இராணுவ காலத்தின் துயரத்தைச் சொல்ல எந்த ஆவணமும் இல்லாது போயிருக்கும்.

வாசுகி கணேசானந்தன் இரண்டு இரண்டு முக்கிய காலப்பகுதிகளின் ஆவணங்களை உசாத்துணையாக வைத்து எழுதியிருக்கின்றார். ஆனாலும் அவர் இதை புறவயமாக சம்பவங்களினூடாக எழுத முயற்சித்திருப்பது ஒருவகையில் பலவீனமாக அமைந்துவிடுகின்றது. மூத்த சகோதரனை 1983 கலவரத்துக்கு பலி கொடுத்து, இன்னொரு சகோதரனான தயாளனை ஈழப்போராட்டத்துக்கு காவு கொடுத்து, அவரின் பிரியமான பேராசிரியரான அஞ்சலியை இயக்கத்தின் பழிவாங்கலுக்கு அநியாயமாக இழந்த சசி என்கின்ற பெண்ணின் அகவுலகினூடு ஒர் அற்புதமான கதையை வாசுகி சொல்லியிருக்க முடியும். ஆனால் அவர் இந்த இழப்புக்கள் ஒவ்வொன்றையும் மிக வேகமாக தாண்டிச் செல்வதால் சசியின் பாத்திரத்தினூடாக வாசகர் நுழைந்து பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது.

 

மேலும் இந்நாவல் 1980 ‍வரை நடந்த பல சம்பவங்கள் விரிவாக சொல்லப்பட்டு, சட்டென்றும் 2009 இற்குப் பாய்ந்து சென்றுவிடுகின்றது. அந்த இடைவெளியுள்ள 20 ஆண்டுகளில் ஈழத்தில் யுத்தம் இன்னும் கோரமாக நிழந்திருக்கின்றது. இரண்டு தலைமுறை அதற்குள் தோன்றி போரைத் தவிர வேறு தெரிவில்லை எனவும் வளர்ந்து வந்திருக்கின்றது. வாசுகி கதையை 1989 இல் முடித்திருக்கலாம். அவர் 2009 தாவியதால், இரண்டு தலைமுறையின் வாழ்வை வரலாற்றில் இருந்து இல்லாமற் செய்கின்றார்.

 

 

வாசுகி 1970களில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெற்றோருக்கு 1980இல் பிறந்தவர். அவர் இந்த நாவல் நடக்கும் காலப்பகுதியில் நம்மைப் போல ஈழத்தில் இருக்கவோ, போரின் எந்தத் துளியாலும் தீண்டப்படாதவர். படைப்பாளியாகவும், பேராசிரியாகவும் இருக்கும் வாசுகி ஒரு வெளியாளின் பார்வையில் இவை எழுதப்பட்டதென்கின்ற குறிப்புக்களை நாவலின் தொடக்கத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாவல் பெரும்பாலும் நடந்த சம்பவங்களையும், அசல் மனிதர்களின் கதைகளையும் சொல்கின்றது. 

 

இந்த நாவல் கே என்கின்ற பாத்திரத்தில் வருவது புலிகள் இயக்கத்து திலீபன் என்பதும், அஞ்சலி என்ற பெயரில் வருவது ராஜினி திரணகம் என்பதும் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியது. போருக்கு வெளியே, போரால் நேரடியாக பாதிக்கப்படாத ஒருவராக இருக்கின்றேன் என்றுதான் அனுக் அருட்பிரகாசம் இறுதிப்போர்க்காலத்தையும், அதன் பின்னரான காலத்தையும் வைத்து இரண்டு அருமையான நாவல்களை எழுதியபோது நமக்கு அறிவுறுத்துகின்றார். அவ்வாறாக தம்மை இந்த யுத்தப் பின்னணியில் எங்கே இருக்கின்றோம் என அடையாளப்படுத்துவது- முக்கியமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனைவு எழுதும்-  எந்தப் படைப்பாளியும் செய்யவேண்டிய நல்லதொரு காரியமாகும். ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் எழுதும் வாசுகி மட்டுமில்லை தமிழில் எழுதுபவர்களும் இந்தத் தவறைத் தெரிந்தே செய்கின்றார்கள்.

 

இலங்கையில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது சிங்களப் பேரினவாதமும், அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கும் இனவாத மத அரசியல் கட்சிகளும் ஆகும். ஆகவேதான் இன்று யுத்தம் முடிந்தபின்னும் இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி ஏற்படாமல் இருக்கின்றது. அந்தப் பேரினவாதத்திற்கு காலத்துக்காலம் ஒரு எதிரி தேவைப்பட்டபடி இருக்கின்றது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதைப் போல அந்த எதிரிகளாக சிறுபான்மை இனங்களும், அவர்களுக்குள் தோன்றும் இயக்கங்களும் அமைந்துவிடுகின்றன. சிலவேளைகளில் சிறுபான்மையினர் பலிகொடுக்க தயாராக இல்லாதபோது, இதே பேரினவாதப் பிசாசு தன் இருப்புக்காய், நீதி/நியாயம் கேட்டுப் போராடும் சிங்கள இளைஞர்களையும் காவு கொள்ளத் தயங்குவதுமில்லை. அதற்கு சிறந்த உதாரணங்களாக எப்படி ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளின்போதும் கொடூரமான முறையில் அடக்கப்பட்டிருக்கின்றனர் என்பது வரலாற்றில் அழியாக் கறையாக நம் முன்னே இருக்கின்றது. இன்றைக்கும் ஏன் இலங்கையில் அனைத்து இனங்களும் சமாதானமாக இருந்து நாட்டை சுபீட்சமாக வளர்க்க முடியவில்லை என நாமனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

இந்த நாவலும் இந்தக் கேள்விகளை எளிதாகத் தவிர்த்து, யுத்ததிற்கான அடிப்படைக் காரணங்களுக்குள் செல்லாது, அதன்  எதிர்வினைகளையும், பின்விளைவுகளையும் முக்கியமானதாக் காட்ட விழைகின்றது. ஒரு பேரினவாத அரசுக்கெதிராக, ஒரு கொரில்லா இயக்காகத் தோன்றி, பின்னர் மரபுவழி இராணுவமாக ஒரு குறிப்பிட்ட பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகளை, அரசுக்கு நிகராக வாசுகி முன்னிறுத்த விரும்புகின்றார். அதனாலே இந்தப் புனைவு 2009 இல் புலிகள் மக்களை பயணக்கைதிகளாக வைத்திருக்கின்றனர் எனச் சொல்கின்றது. புலிகள் மக்களை வெளியே செல்ல விடவில்லை என்பது உண்மை என்றாலும், புலிகள் பலநாடுகளால் தடைசெய்யபட்ட இயக்கம், ஆனால் தனது சொந்த மக்களையே காப்பாற்றவேண்டிய அரசுதான் செய்ததுதான் என்ன? இந்நாவல் நடக்கும் 1980களின் நடுப்பகுதியில் ஒரு அரசானது தனது சொந்த மக்களைக் கொல்ல விமானத்தாக்குதலையும் ஷெல் தாக்குதல்களயும் நடத்தி, சொந்த நாட்டு மக்களையே அந்நியமாகிப் பார்த்திருக்கின்றது.

இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு நாம் ஹாமாஸை இஸ்ரேல் அரசுக்கு நிகராக வைத்துப் பேசினால் நியாயமாக இருக்க முடியுமா? இந்த அடிப்படைக் கேள்விகளைத்தான் இந்தப் புதினத்தை முன்வைத்து வாசுகியை நோக்கி நாம் கேட்க வேண்டியவராகின்றோம்.

 

ஓர் அரசியல் நாவல் முடியும்போது அது  பாதிப்படைந்தவர்களின் பக்கம் அழைத்துச் செல்வதோடு, அவர்களின் பலவீனங்களையும் ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொள்ள வைக்கும். அனுக் அருட்பிரகாசத்தின் நாவல்களை வாசித்தவர்களுக்கு- அவர் எந்தத் தரப்பையும் வெளிப்படையாகச் சொல்லாமல்-  கதாபாத்திரங்களினூடாக உள்ளிறங்கி நம்மை நிலைகுலையச் செய்வதை அறியலாம். வாசுகியின் இந்நாவலின் கதைசொல்லியான சசியினூடாக இந்த முயற்சி நிகழ்த்திப் பார்த்திருக்கக்கூட சந்தர்ப்பம்  இருந்தபோதும் அது நிகழாது  ஒருவகையில் துரதிஷ்டமே. ஈழத்து அரசியல் தெரிந்த எங்களைப் போன்றவர்களுக்கு இதில் இருந்து அறிந்துகொள்ள புதிதாக அவ்வளவாக எதுவும் இல்லை. நமக்குப் பரிட்சயமான களங்கள், நபர்கள், சம்பவங்களே இதில் இருக்கின்றன. ஆனால் இது தமிழர் அல்லாதவர்க்கும், புலம்பெயர்ந்தவர்களின்  இங்கு பிறந்த முதல் தலைமுறைகளுக்கும் வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும்.

 

வாசுகியின் முதல் புத்தகமான 'Love Marriage'  வாசித்து 2008இல் என் வாசிப்பை எழுதியிருந்தேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அதில்...

 

"இன்று மிகச் சிக்கலாகவும், வீனமாகவும் போய்க்கொண்டிருக்கும் மிழரின் போராட்டத்தை, எல்லாத் ப்புகளும் பிழை செய்கின்ற என்று எளிதாகக் கூறித் ப்பியோட முடியாது. தொடக்க காலத்தில் மிழரின் உரிமைக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு எவ்வவு லுவான காரங்களிலிருந்ததோ அந்தப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருப்பதைச் சிங்கப் பேரினவாதத்திற்கோ, உலநாடுகளுக்கோ ட்டுமில்லாது, வெற்றி/தோல்விகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூகலிக்கும் 'புதிய நாயவாதிகளுக்கும்' நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்நாவலில் மிழர் ப்பின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் ஆழங்களை அலசாமல், பொதுப்படையாக/எளிமையாக அனைவரும் று செய்கின்றார்கள் என்று எழுதுவது/பேசுவது, ஈழப்போராட்டம் குறித்து அவ்வவு அறியாதர்களுக்கு றான நிலைப்பாட்டை விதைக்கக் கூடியதாகவிருக்கும். முக்கியமாய் மிழல்லாத, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் நேரடியாக எழுதுபர்கள் இவை குறித்து அதிக த்தோடு, ந்த கால லாற்றை ஆழமாய் அறிந்து கொள்வதினூடே நிதானமாய் எழுத வேண்டியிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருப்பேன்.

 

யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் ஏன் இலங்கை இப்படி பெரும் அரசியல்/பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது? எதன் பொருட்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பொதுமக்கள் மீது நிகழ்த்தபட்டது? இறுதி யுத்த்த்தை முடித்துவைத்த வீரநாயகர்கள் எனக் கொண்டாடப்பட்ட ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ஏன் நாட்டின் நிறைவேற்றுமிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து அவரது சொந்த மக்களாலேயே தூக்கியெறியப்படு சொந்த நாட்டைவிட்டு துரத்தப்பட்டார் போன்ற கேள்விகளை நாம் கேட்கும்போது, தமிழ் இயக்கங்களோ, ஜேவிபியினரோ நடத்திய ஆயுதப்போராட்டம் மட்டும் இலங்கையின் சீரழிவுக்கு முக்கிய காரணமில்லை என்பது விளங்கும். அந்தப் புள்ளிகளில் ஒரு படைப்பு முதன்மையாக கவனத்தைக் குவித்து, போராட்ட இயக்கங்களின் பலவீனங்களோடு ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முயன்றிருந்தால் ஓர் அசலான படைப்பாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் அடையாளப்படுத்துகின்ற ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் இந்த நாவல் மாறிவிட்டிருக்கக் கூடும்.. ஆனால் அது வாசுகியின் சகோதரனற்ற இரவில் நிகழவில்லை என்பதுதான் துயரமானது.

 

************

 

 நன்றி: 'எழுநா' -பங்குனி

https://ezhunaonline.com/brotherless-night-novel-review