கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பனிக்காலத் தனிமை - 13

Friday, March 06, 2026

 

திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்துக்குச் சென்றபோது ஒருவரைக் கண்டேன். அப்போது அவருடன் பேசவில்லை என்றபோதும் பின்னர் குவாடிசிஸில் உணவருந்தும்போது அவரோடு உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இந்திய வம்சாவளியின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்றும், அங்கே தானொரு அங்கிலிக்கன் ஃபாதர் எனவும் சொன்னார். ஒரு பாதிரியாருக்கு அருணாச்சலமலையில் என்ன வேலை எனக் கேட்க முன்னரே, அவர் திருவண்ணாமலைக்கு வந்தபோது ஏதோ ஓர் ஈர்ப்பு சிவனில் வந்து, சிவபக்தராகிவிட்டேன் என்றார்.

மனிதர்கள் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலைக்கேற்ப மாறுவது இயல்பு. ஆனால் எப்படி இயேசுவும், சிவனும் ஒருவருக்குள் சரிசமனாக இருக்க முடியும் என்று அவரைப் பார்க்கும்போது வியப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அவரைச் சந்தித்து 10 வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்றும் அவர் இரண்டு நம்பிக்கைகளையும் கைவிடாது தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று மக்களிடம் உரையாடியபடி இருக்கின்றார் என்பதை அவரின் சமூகவலைத்தொடர்பால் அறிந்து கொள்ள முடிகிறது.



இதற்கு நிகரான ஓர் அனுபவத்தை நேற்று அனுபவித்திருந்தேன். இருபது புத்த துறவிகள் 2,300 மைல்கள் 110 நாட்களாக தொடர்ந்து நடந்த Walk for Peace இன்றோடு முடிந்தது. கடந்த சில நாட்களாக அவர்கள் வாஷிங்க்டன் டிசியிலும், மேரிலாண்டிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களை நடக்கும் பாதைகள் எல்லாம் சூழ்ந்திருந்தார்கள். சாதாரண துறவிகளான அவர்களை என்னைப் போன்று முகநூலில் பின் தொடர்பவர்களே கிட்டத்தட்ட 2.8 மில்லியனைத் தாண்டியிருந்தது.

நேற்று ஒரு பிரமாண்டமான கதீட்ரலில் சமாதானத்தின் பொருட்டு அனைத்து மதக்குருமார்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருந்தார்கள். இந்த புத்த துறவிகள் கதீட்ரலுக்குள் நுழையும்போது தேவாலயத்துக்குள் இருந்து ஒரு பெண் பியானோவுடன் இயேசுவிற்கான சமாதானப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தது வார்த்தைகளில் எளிதில் விபரிக்க முடியாத நெகிழ்வாக இருந்தது.

ஊரில் பக்கத்து ஊரில் ஒரு தேவாலயம் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு பயம் காரணமாக, எங்கள் ஊரிலிருந்து போர் நிமித்தம் வெளியேறும்வரை அதற்குள் நுழைந்ததில்லை. அதுபோலவே இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு புத்த ஆலயத்துக்குள்ளும் போனதில்லை. எவரும் போகக்கூடாது, எவரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லாமலே எவ்வாறான இந்தப் பயம்/விலகல் அந்த வயதுகளிலே எம்மைப் போன்றவர்களுக்கு நுழைந்தது என்று இப்போது யோசித்துப் பார்க்க திகைப்பாக இருக்கின்றது.

புலம்பெயர்ந்து கனடா வந்ததன் பிறகு, இங்குள்ள  கோயில்களுக்குப் போனதைவிட, தேவாலயங்களுக்கும், புத்த மடலாயங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும், குருத்துவராக்களுக்குந்தான் அதிகம் போயிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்.

*

சில மனிதர்களுடனான உரையாடல்களோ, சில இடங்களுக்கான பயணங்களோ அவ்வளவு அற்புதமாக இருக்க, இது ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென மனம் அவாவிக் கொண்டிருக்கும். அப்படித்தான் தினமும் Walk for Peace நடையோடு ஒன்றிக்கொண்டிருந்த எனக்கு இந்த நடைப்பயணம் ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென இதயம் விம்மிக் கொண்டிருந்தது. அவர்கள் நடக்கும்போது மக்களின் முகங்களில் இருந்த அமைதியும், அவர்களுக்காக காத்திருந்த குழந்தைகளின் களங்கமின்மையும் எனது நாட்களுக்கு அவ்வளவு நெகிழ்வைத் தந்திருந்தன.

Uploaded Image

இந்த நடைப்பயணத்தைத் தலைமை தாங்கிய துறவி பன்னங்கராவிடம், இப்பயணத்தில் எது உங்களுக்கு மறக்கமுடியாது இருந்தது எனக் கேட்கப்பட்டபோது, ஒருவகையில் இவ்வளவு மக்கள் எமக்காகத் தெருக்களில் காத்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், இன்னொரு புறத்தில் இவ்வளவு மக்கள் துயரங்களோடு இருக்கின்றார்கள் என்பது கவலையைத் தந்தது என்றார். அதாவது எமக்காய்க் கண்ணீருடன் காத்திருந்து கதைகளைச் சொன்ன மக்கள் அவர்கள் தமது சொந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தால் எமக்காக இப்படிக் காத்திருக்க மாட்டார்கள் அல்லவா என்றார்.

அப்படி மக்கள் அமைதியுடன் தமக்கான வாழ்வதையே நான் அதிகம் எதிர்பார்க்கின்றேன், விரும்புகின்றேன் என்றார். எமது நடைபவனி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது, எவருமே எமக்காக காத்திருக்காதபோது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று எண்ணி நாங்கள் இன்னும் சந்தோசமாக நடந்திருப்போம்  என்றார் பன்னங்காரா. இதுதான் இப்பயணத்தினூடு நாம் தவறவிடாது எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் எனச் சொல்வேன்.

தனிப்பட்டோ அல்லது சமூகவலைத்தளத்திலோ ஒருவர் தற்பெருமையோடோ/காழ்ப்புணர்வோடோ உரையாடிக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் உண்மையிலே தன்னளவில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லையென எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் புறவயமாக வரும் எந்த சந்தோசமும் உண்மையான மகிழ்ச்சியே அல்ல என்ற புரிதல் வரும்போது நம் வாழ்வு கொஞ்சம் அமைதியடைந்துவிடக்கூடும்.  சிலவேளைகளில் இன்னும் அர்த்தமுடையதாகவும் அது மாறிவிடவும் கூடும்.

துறவி பன்னங்கராவும் அதனால்தான் 'அமைதி என்பது வேறு காரணிகளால் வரக்கூடியது என்றால் அது உண்மையான அமைதியல்ல. அந்த அமைதி எந்தக் கணத்திலும் குழப்பிவிடக்கூடியது'  (Peace with a condition that is not peace) என்று நம்மை எச்சரிக்கின்றார். அதுபோலத்தான் நேசமும் என்பதை நாம் கவனிக்கத் தவறும்போதுதான் நமக்கான நேசமும் நம்மிலிருந்து கைநழுவிப் போவதையும் அவதானித்திருப்போம்.

ஒரு துறவி சிலவருடங்களுக்கு முன் ஒரு உறுதியை (bow) எடுக்கிறார். தனது ஆசிரியரிடம் இதற்காய்த் தலைவணங்கிச் சம்மதம் கேட்கிறார். பிறகு சகோதரத்துவத்துடன் ஏனைய புத்த மடலாயத் துறவிகளிடம் என்னோடு சேர்ந்து இப்படி நடக்கச் சம்மதமா எனக் கேட்கின்றார்.



இறுதியில் பல்வேறு நாடுகள்/நகரங்களைச் சேர்ந்த 20 புத்த துறவிகள் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றனர். அவர்களில் பலருக்கு இதற்கு முன் ஒருவருக்கு ஒருவரைக் கூடப் பழக்கமில்லை. ஆனால் இந்த 2300 மைல்களை, கடந்த நூறு நாட்களாகச் சேர்ந்து  நடக்கின்றனர். இடையில் பெரும் விபத்தைச் சந்தித்து சிலர் காயமடைகின்றனர். ஒரு புத்த துறவி தனது இடது காலை இதன் நிமித்தம் இழக்கின்றார். இவ்வளவு இழப்பு/துயரத்தினூடாக அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர்.

கடும் வெயில் எரிக்கும் டெக்ஸலிலிருந்து வாஷிங்டன் டிஸியை அடையும்போது பெரும் பனியைச் சந்திக்கின்றனர். வெறும் கால்களோடு நடந்தவர்கள் பின்னர் பாதணிக்கும், இறுதி நாட்களில் குளிரையும் பொருட்படுத்தாது வெறும் காலுக்கும் (சில துறவிகள்) மாறியிருந்தனர். இதில் தலைமை தாங்கிய பன்னங்கரா உட்பட பலர் பனிக்குளிரில் மிக மோசமான உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் ஒருவர் நோயால் பின்தங்கினாலும்  இன்னொருவர் இக்குழுவைத் தலைமை தாங்கித் தொடர்ந்து நடந்திருக்கின்றனர். அவ்வளவு உறுதியாக தாம் எடுத்துக் கொண்ட பயணத்தில்  தளர்வடைவதில்லை என்று இருந்திருக்கின்றனர்.

ஓரிடத்தில் ஒரு முதிய பெண்மணி (78) தனது வாழ்வில் இந்த நடைபயணத்தைப் பார்த்தது பெரும் ஆசிர்வாதம் எனச் சொல்கின்றார். தனக்கு இந்தப் புத்த துறவிகளால் கொடுக்கப்பட்ட பூக்களை நான் உலர வைத்து காப்பாற்றப் போகின்றேன். எனக்குப் பிறகு எனது பிள்ளைகள் எனது பேரப்பிள்ளைகளிடம் இந்தப் பூக்களைக் கொடுக்க வேண்டும், அந்தப் புதிய தலைமுறை இந்த சமாதானத்துக்கான பயணத்தை அப்போது நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு ஆழமாக இந்தத் துறவிகள் அந்தப் பெண்மணியின் ஆழுள்ளத்தில் விதையொன்றை ஊன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறதல்லவா?

இந்த உலகிலிருந்து நாம் நீங்கிப் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்று நம்மனைவருக்கும் எளிதாகப் புரியும். ஆனாலும் நாம் தொடர்ந்து உலகாயத விடயங்களை நோக்கியே ஈர்க்கப்பட்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றோம். அவ்வளவு எளிதாக இது நாம் பிறந்ததிலிருந்தே conditioned செய்யப்பட்ட மூளைக்குப் புரியப்போவதும் இல்லை. இல்லாவிட்டால் அவ்வளவு தெளிவாகத் தெரிந்த ஒன்றைக் கைவிட்டு, தற்காலிக நிம்மதியைத் தரும் விடயங்களை நோக்கி ஆலாய்ப் பறந்து கொண்டிருப்போமா என்ன?

இந்த நாளை நிம்மதியாக, Today is going to be my peaceful day என்று எழுதிவிட்டு, அதை நாள் முழுதும் கைவிடாது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்கள் நாள் அவ்வளவு அழகாக்கிவிடும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விடயங்களையும் mindful ஆகச் செய்யுங்கள், முக்கியமாக multitask என்ற சுழலுக்குள்  மட்டும் விழுந்துவிடாதீர்கள். எதைச் செய்வதாயினும் அந்த விடயத்தை மட்டும் செய்யுங்கள், அதன் பிறகு அடுத்த விடயத்தைத் தொடருங்கள் என்று துறவி பன்னங்கரா மக்கள் குழுமிய ஒவ்வொரும் கூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்படி நமது ஒவ்வொரு நாளையும் அமைதியான நாட்களாக நம்மால் அழகாக்க முடியுமா என்பதுதான் இன்றைய அவசரகதியான உலகில் நம் அனைவர் முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

***
புகைப்படம்: Walk for Peace

 

0 comments: