கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label விபாஸனா. Show all posts
Showing posts with label விபாஸனா. Show all posts

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 12

Wednesday, September 30, 2026

 

பத்து நாள் விபாஸனா என்றாலும், ஒருவர் இதற்குப் போவதற்கு பன்னிரண்டு நாட்களை ஒதுக்க வேண்டும். அதாவது பன்னிரண்டு பகல்கள், பதினொரு இரவுகளை நாம் இங்கே கழித்திருந்தோம். விபாஸனா தொடங்குவதற்கு முதல் நாள் போய் நம்மைத் தயார்ப்படுத்துவதைப் போல, பன்னிரண்டாம் நாள் (விபாஸனாவின் பதினொராவது நாள்) ஆறரை மணி காலையுணவோடு  எங்களின் விபாஸனா முடிவடைந்திருந்தது.

ஆனால் அந்த பதினொராம் நாள் விடிகாலை 4.30 இற்கு நாம் அனைவரும் தியான மண்டபத்துக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். அப்போது ஆசிரியர் கோயிங்காவின் நமக்கான் இறுதி விடைபெறல் உரை நடைபெறும். அதைத் தொடர்ந்து மெத்தா பாவனா தியானம் செய்வதுடன் பத்து நாள் விபாஸனா நிறைவடையும்.



கடைசி நாள் உரையில் கோயிங்கா இதை எப்படி நாங்கள் தொடர்ச்சியாக செய்வது பற்றி விரிவாகப் பேசியிருப்பார். ஒருநாளைக்கு காலையும் மாலையும் ஒரு மணித்தியாலம் எப்படியாவது உங்களை கஷ்டப்படுத்தி விபாஸனாவில் அமருங்கள். ஒரு வருடத்துக்குப் பின் தியானத்தில் அமர்தல்/ஆழ்தல் இயல்பாகவே உங்களுக்குள் வந்து சேர்ந்திருக்கும் என்கின்றார்.

விபாஸனாவைத் தொடர்ந்து செய்யும்போது நீங்கள் செய்யும் வேலைகளைத் துல்லியமாகவும், வேலை செய்யும் சோர்வு (முக்கியமாக எட்டு மணித்தியால வேலையின் பின் வரும் அலுப்பு) உங்களை விட்டுப் போயிருக்கும் என்றும், தூக்கத்தைக் கூட எட்டு மணித்தியாலத்துக்குச் செய்யும் அவசியம் வராது என்றும் குறிப்பிடுகின்றார். எனவே நீங்கள் தூக்கத்திற்காக ஒதுக்கி வைத்திருக்கும் ஒரிரு மணித்தியாலத்தை இந்த விபாஸனாத்துக்காக ஒதுக்குங்கள், நிச்சயம் பலனைக் கண்டடைவீர்கள் என்கின்றார்.

விபாஸனா முடித்து வந்து ஒருவாரத்துக்கு மேலாகிவிட்ட பிறகும், நான் இந்த காலை/மாலை ஒரு மணித்தியாலத் தியானம் செய்ய உட்கார்கின்றேனா என்று ஒருவர் கேட்டால் இல்லை என்றே சொல்வேன். ஆனால் தினமும் இயன்றளவு 15/20 நிமிடங்களாவது தியானத்தைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கின்றேன் என்பது மட்டுமே உண்மை.

இப்படி தியானம் செய்வதற்கு தொடர்ச்சியாக ஓரிடத்தை ஒதுக்கி வையுங்கள். அது நாளடைவில் நிறைய நேர்நிலை எண்ணங்களைக் கொண்டு வரும் இடமாக இருக்க உங்களால் விபாஸனா செய்வது எளிதாகிவிடும் என்கின்றார் கோயிங்கா.

நாங்கள் மூன்று யாழ்ப்பாணிகள் அங்கே இருந்தோம் என்று சொன்னேன் அல்லவா? மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அறியாதுவிட்டால் யாழ்ப்பாணியின் வேலிக்கு மேலால் எட்டிப் பார்க்கும் கலாசாரம் என்னவாவது? கிரியா யோகம் பழகிய நண்பரிடம் காலையும் மாலையும் ஒரு மணித்தியாலம் தியானத்துக்காக அமர்கின்றீர்களா எனக் கேட்டேன். அவர், 'இப்போதுதான் குடும்பத்தோடு இத்தாலிக்குப் போய் விடுமுறையைக் கழித்துவிட்டு வந்தேன். இனிதான் அப்படி அமரவேண்டும்' என்று என் நெஞ்சில் பாலை வார்த்தார்.

மற்ற யாழ்ப்பாணியின் தொலைபேசி இலக்கத்தை எங்கையோ தவறவிட்டுவிட்டேன். ஆனால் விபாஸனாவில் இருந்து போகும்போது, 'நான் தினமும் விடிகாலையில் எழுந்து ஒரு மணித்தியாலம் விபாஸனா செய்வேன்' என்று எங்களுக்குச் சூளுரைத்திருந்தார். அவரை அவரின் மனைவிதான் விபாஸனாவுக்கு அனுப்பிவைத்தவர் என்பதால், அவர் ஒழுங்காய் விபாஸனா செய்கின்றாரா என அவரின் மனைவி கண்காணித்தபடி இருப்பாரென்றுதான் நினைக்கின்றேன்.

*

இப்படி சோம்பல்பட்டு செய்த விபாஸனாவை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஒரே நகரில் அருகிலிருப்பவர்கள் வாரத்தில் ஒருமுறை ஏதேனும் ஓரிடத்தில் கூடி விபாஸனா செய்யுங்கள் என்று விபாஸனாக்காரர்கள் உற்சாகப்படுத்துகின்றார்கள். அப்படி ஓரிடத்துக்குப் போய் சிலரோடு சேர்ந்து விபாஸனா செய்வது தனித்துச் செய்வதை விட கூடிய பலனைத் தரக்கூடியது என்றார்கள்.



நாங்கள் பத்துநாள் விபாஸனாவைச் செய்துவிட்டால், விபாஸனாக்காரர்களின் குழுவில் -தொடர் கண்ணியில் இன்னொரு கண்ணியாக- ஐக்கியமாகிவிடுகின்றோம். எமக்கென்று கோயிங்காவின் ஒலி/ஒளி உரைகள் உள்ளிட்ட பல விடயங்களை access செய்ய அனுமதி தருகின்றார்கள். கோயிங்காவின் வழிகாட்டும் தியானத்தைக் கேட்டபடி கூட நாங்கள் விபாஸனாவைத் தொடர்ந்து செய்ய முடியும். மேலும் ஒருமுறை விபாஸனா பழகிவிட்டால் நாங்கள் உலகிலுள்ள இருநூற்றுக்குக்கும் மேலே இருக்கும் விபாஸனா நிலையங்களில் எந்த விபாஸனா நிலையத்திலும் சென்று விபாஸனாவைப் பழகவும் முடியும்.

எங்களோடு இருந்து பழகிய ஒரு ஈரான்காரருக்கு இது நான்காவது முறை. இந்தியாவுக்குச் சென்று இரண்டு முறை பழகினார் என்றார். ஈரானிலும் ஒரு விபாஸனா நிலையம் இருக்கின்றது. அங்கேயும் பழகியிருக்கின்றார். அவரும் அவர் குடும்பத்தினரும் நம்மைப் போன்ற அகதிகளாக கனடாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் புலம்பெயர்ந்திருந்தனர். அவருக்கு ஈரான் அரசால் சிக்கல் என்றார். கட்டுப்பாடான இஸ்லாமிய ஆடைகள் அணிவதில் தன் மனைவிக்குப் பிரச்சினை என்றார்.

நிறையக் குறும்படங்களை எடுத்திருக்கின்றார். நான் அதைப் பார்க்க முடியுமா என்றபோது, ஈரான் அரசின் தணிக்கையால் அவை பொதுவெளியில் இல்லை என்றார். இப்போது கனடாவுக்கு வந்துவிட்டீர்கள். இனி இன்னும் சுதந்திரத்தோடு படங்களை எடுக்கலாம் என்றேன். 'இல்லை, என் ஆங்கிலம் போதாது. அதனால்தான் என்னால் ஒழுங்கான வேலை கூட எடுக்க முடியாது கஷ்டப்படுகின்றேன்' என்றார்.

நாங்களும் இப்படித்தான் அரைகுறை ஆங்கிலத்தோடு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரால் கனடாவுக்குத் தப்பியோடிவந்தவர்கள். விரைவில் உங்களுக்கு ஆங்கிலம் பிடிபட்டுவிடும். வளமான வாழ்க்கைக்கு விரைவில் வந்து சேர்வீர்கள் என்று அவருக்கு ஆறுதலாக சிலதைச் சொன்னேன். இலங்கை குறித்து எழுதிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள், நான் அவற்றைத் தேடி வாசிக்கின்றேன் என்றார்.

நான் அவரிடம் ஈரானியத் திரைப்படங்கள் எப்படி எங்களைப் பாதித்தன. திரை என்பது மாபெரும் சாதனம்.  மொழி என்பது அங்கே ஒருபோதும் தடையாவதில்லை. சிலவேளை ஆங்கிலம் நன்றாகத் தெரியாது போனால் கூட உங்களால் சிறந்த படைப்புக்களைத் தரமுடியும் என்று சொன்னேன். அவர்தான் நான் சிறுகாட்டுக்குள் நடக்கும்போது மரங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டும் அதனோடும் பேசிக் கொண்டும் இருந்தவர். கடைசிநாள் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவரிடம் நானும் உங்களைப் போல மரங்களை ஆரத்தழுவுவதில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொள்கின்றவன் என்றேன். தியானத்தின்போது அப்படியே அசையாது உட்கார்ந்திருக்க்கூடிய அவர் நீண்டதாடியும் வளர்த்திருந்ததால் ஒரு அசல் சாமியார் போலவே எனக்குத் தோன்றினார்.

கடைசிநாள் வரும்போது முதல்நாள் காரில் ஏற்றிவந்த மலேசியத்தமிழரை நான் தேடத் தொடங்கினேன். அவரை முதல் ஒன்றிரண்டு நாள் தியான மண்டபத்தில் கண்டேன். பிறகு காணாதது நினைவுக்கு வந்தது. உணவு சமைக்க/பரிமாற, குளியறையைச் சுத்தப்படுத்த/ இன்னபிற வேலைகளைச் செய்ய  (serving) மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்தவர்க்கு என்னவாயிற்று என்று சமையலுக்கு உதவியாக இருந்த இன்னொருவரிடம் கேட்டேன். அவரா, அவருக்கு தொடர்ச்சியாக நின்றதால் முழங்கால் பெருவலி வந்துவிட்டதென்று மூன்றாம் நாளிலே விபாஸனா நிலையத்திலிருந்து போய்விட்டார் என்றார். விஜயின் இரசிகரான அவர் கடுமையாக வலியோடு போராடி வெல்லாது, இடையில் சென்றுவிட்டாரே என்று கொஞ்சம் கவலை வந்திருந்தது.

ஆனால் அவரைத் தேடியதில் கொச்சினில் சிறுவயதில் பிறந்து கனடாவுக்கு வந்த ஒரு இளைஞனோடு பேச முடிந்தது. அவன் இங்கே சிலரோடு சேர்ந்து தனியாகத் தொழில் செய்து வருகின்றான். அதன் நிமித்தம் வந்த மன அழுத்தம்/பதற்றம் காரணமாக விபாஸனாவுக்கு வந்து, அவனுக்கு இது நன்றாகப் பிடித்துவிட, இப்போது ஒவ்வொரு ஆறுமாதமும் இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றேன் என்றான்.

*

கோயிங்கா விபாஸனா குறித்துப் பேசும்போது, ஒவ்வொரு வருடமும் இந்த பத்து நாள் விபாஸனாவை விடாது வந்து செய்யுங்கள் என்று நம்மிடம் கோருகின்றார். விபாஸனாவில் பெருங்காதல் வந்து அடிக்கடி செய்ய வேண்டும் என்றாலும், எமது விபாஸனா நிலையத்தில் நீங்கள் அடுத்த விபாஸானாவை இப்படிச் செய்ய குறைந்தது ஆறு மாதங்கள்வரை காத்திருக்க வேண்டும். புதியவர்கள் பலருக்கும் விபாஸனா பழகச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பழையவர்க்கு ஆறுமாதக் காத்திருத்தலை கட்டாய விதியாக்கியிருக்கின்றனர். இதுவே பொதுவிதியாக அனைத்து விபாஸனா நிலையங்களிலும் இருக்கவும் கூடும்.

எதையும் எவர் மீது நாம் திணிக்க முடியாது. இன்றைய உலகம் நமக்கு பெரும் வெளிகளைத் திறந்திருக்கின்றது. அதனால் நமக்குத் தெரிவு செய்ய, நமது வாழ்வை எமக்கு  விரும்பிய மாதிரி வடிவமைக்க பல்வேறு தெரிவுகள் நம்முன்னே விரிந்து கிடக்கின்றன.

எனவே இதை வாசிக்கும் எவரையும் விபாஸனாவுக்கு நீங்கள் நிச்சயம் போகவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியாது. நானே விபாஸனாவை அறிந்து பழகுவதற்கு விரும்பி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் போயிருக்கின்றேன். எனவே உங்களை விபாஸனாவுக்கு இப்போதே உடனையாகச் செல்லுங்கள் என்று சொல்வது முறையாகாது.

ஆனால் இந்த வாழ்க்கையில் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது/ அறியும்போது நம்மை அறியாமல் நமக்குள் புதிய திறப்புக்கள் அவிழ்கின்றதல்லவா? அப்படி ஒரு புதிய அனுபவத்துக்காக நீங்கள் விபாஸனாவுக்குச் சென்று பாருங்கள் எனச் சொல்வேன்.

இங்கே தியானம் பழகுவதை ஒருபுறம் தள்ளி வையுங்கள். அதில் ஏதும் பெற்றால் ஒரு 'போனஸாக' எண்ணிக் கொள்ளுங்கள். ஆனால் பத்து நாளும் அலைபேசி இல்லாது, எவருடனும் கதைக்காமல் இருப்பது எப்படியிருக்கும் என்பதற்காகவேனும் நீங்கள் இதற்குப் போய்ப் பார்க்கலாம். விபாஸனாவுக்குப் போனதன்பிறகு ஆகக்குறைந்தது மாதம் ஒரு நாளாவது மெளன விரதத்தைக் கடைபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது.

நீங்கள் யாராவது என்னிடம் இன்னொரு முறை விபாஸனாவுக்குச் செல்வாயா என்று கேட்டால் என் பதில் நிச்சயம் போவேன் என்பதாகத்தான் இருக்கும்.. ஏனெனில் இந்த பத்து நாட்களில் நான் புதிதாக நிறைய விடயங்களைக் கற்றிருக்கின்றேன்/அனுபவித்திருக்கின்றேன்.

உங்களுக்கு விபாஸனா குறித்து   தயக்கங்கள்/பயங்கள்/அச்சங்கள் இருக்கலாம். அதை ஒரு  பக்கம் வைத்துவிட்டு, புறச்சூழல் கனிந்து விபாஸனாவிற்குச் செல்லும் சந்தர்ப்பம் வந்தால் அதை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என்றே என் அனுபவத்தை முன்வைத்து உங்களுக்குச் சொல்வேன்.

***

(முற்றும்)

புகைப்படங்கள்: தியான மண்டபமும், நான் தங்கி நின்ற அறையும்

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 11

 

சாக்கியமுனி என அழைக்கப்படும் புத்தர் அவரது முப்பத்தைந்தாவது வயதில் போதிமரததின் கீழ் ஒரு பெளர்ணமி நாளில் பரிநிர்வாணமடைந்தார். அதே புத்தர் தான் பெற்ற விழிப்புணர்வை துயரத்தில் தோய்ந்தொழுகும் மனிதர்களும் பெறவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஊர் ஊராக அலைந்து திரிந்து தம்மத்தைப் போதிப்படி இருந்தார்.

புத்தர் எப்படிப்பட்ட கருணையுள்ள ஆசிரியர் என்பதற்கு விபாஸனா ஆசிரியரான கோயிங்கா ஒரு கதை சொல்லுகின்றார். புத்தர் தனது மரணத்தை அடுத்தநாள் தழுவப்போகின்றார் என்று ஆனந்தாவிடம் கூறுகின்றார். 

 



ஆனந்தாவிற்கோ ஊர் மக்களிடம் இனி புத்தர் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பதை சொல்லாவிட்டால் அந்த ஊர் மக்கள் கோபப்படுவார்களே என்று, ஒரு சிலரிடம் நாளை காலை விடியும்போது புத்தர் உயிரோடு இருக்கப்போவதில்லை என்று சொல்லி விடுகின்றார்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவி, மக்கள் புத்தரை இறுதியாகப் பார்க்க சாரிசாரியாக வந்து கொண்டிருக்கின்றார். நேரமோ நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருக்கின்றது. மக்கள் கூட்டமோ அலைமோதுகின்றது. புத்தர் வயோதிபத்தின் காரணமாக நலிந்து போய் பேச முடியாமல் தவிக்கின்றார்.

அப்போது கூட்டத்தில் ஒருவன் என்னைப் புத்தரோடு பேச விடுங்கள். புத்தரின் சரியான தம்மப்பாதை எதுவென்று நான் அறிய விரும்புகின்றேன். நாளை புத்தர் இறந்தவுடன், அவரின் சீடர்கள் இதுதான் சரியான தம்மப்பாதை என்று சொல்லி என்னைக் குழப்புவார்கள். நான் எது சரியான தம்மம் என்பதை புத்தரிடம் நேரடியாகக் கேட்டறிய விரும்புகின்றேன் என்று கத்துகின்றான்.

உடல் நலிந்திருந்த புத்தர் விழிகளைத் திறந்து ஆனந்தாவிடம் என்ன குழப்பம் என்று கேட்கின்றார். ஆனந்தா நிலைமையைச் சொல்கின்றார். ஒருவன் இப்படிக் கேட்கும்போது நான் அவனுக்கு கற்பிக்காமல் இவ்வுடலை நீங்கிச் செல்லக்கூடாது, அவனை என்னிடம் அழைத்து வாருங்கள் என புத்தர் சொல்லி அவனுக்குப் தம்மத்தைப் போதிக்கின்றார்.

இந்தக் கதை கடைசிவரை புத்தர் சலிக்காது கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக தன் வாழ்நாள் முழுதும் இருந்தார் என்பதற்கான உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

இதேமாதிரியான கதையை நான் என் ஆசிரியராக நினைக்கும் தாய் (Thich Nhat Hanh) குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரின் மாணவர்கள் தாய் நீங்கள் பிறருக்கு எவ்வளவோ வழங்கிவிட்டீர்கள், இனி நீங்கள் பயணங்கள் செய்யாது இந்த மடாலயத்தில் (Plum Village-France) ஆறுதலாகத் தங்கி ஓய்வெடுங்கள் என்று சொல்லும் ஒவ்வொரு பொழுதும் , 'நம்மிடம் ஒரு விடயம் நல்லதாக இருந்தால் அதை நம்மோடு மட்டும் வைத்திருக்கக்கூடாது, அதை இந்த உலகிற்கு வாரி வழங்கவேண்டும்' என்று தாய் ஒவ்வொருபொழுதும் கூறியதாக அவரின் மாணவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

இப்படித்தான் தொடர்ந்து கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாக புத்தரோ, தாயோ, கோயிங்காவோ தமது வாழ்நாள் காலம் முழுதும் இருந்திருக்கின்றார்கள் போலும். அவர்கள் தமக்குள் ஏற்பட்ட விழிப்புணர்வை/தன்னிலை உணர்தலை, இந்த மனித உடல்/வாழ்க்கை மூலம் பிறரும் ஏதோ ஒருவகையில் அடையமுடியும் என்பதால்தான் தொடர்ந்து சலிக்காது கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவேளை புத்தர் தனது பரிநிர்வாணமடைதலின் பின், , இந்த மகிழ்ச்சி எனக்குப் போதும் என்று காட்டுக்கோ, மலைக்கோ தனித்து வாழப் போயிருந்தால் அவரை நாம் புத்தர் என்றே அழைத்திருக்க மாட்டோம் அல்லவா?

புத்தர் தன்னிடம் அடைக்கலம் அடைபவர்களுக்கென சொன்னதாக ஸென்னில் (மகாயானத்தில்) ஒரு நல்லதொரு சூத்திரா இருக்கின்றது. 'கடந்த காலத்தில் இருந்த புத்தர்களோடும், சமகாலத்தில் இருக்கும் புத்தர்களோடும், எதிர்காலத்தில் தோன்றும் புத்தர்களோடும் சேர்ந்து நான் அவர்கள் அனைவரின் முன்னும் அடைக்கலம் பெறுகின்றேன்' என்பதாக அது கிட்டத்தட்ட இருக்கும்.

இதன் மூலம் நாம் சொல்லும் சாக்கியமுனிதான் (அல்லது சித்தார்த்தன்) முதல் புத்தர் இல்லை என்பதையும், புத்தர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளுக்குள் இருந்து வருபவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்படுகின்றது. புத்தர்/கள் என்பவர்கள் எங்கிருந்தும் தோன்றமுடியும். அதற்கு மதமோ நிறமோ, நம்பிக்கைகளோ இன்னபிற புறவடையாளங்களோ ஒரு முன்நிபந்தனையல்ல என்பது நமக்குத் தெளிவாகின்றது.

ஆக புத்தர் என்பவரை கடவுளாக்கி சடங்குகளால் அழகுபடுத்தி மதமாக்கியவர்களிடம், நீங்கள் வேண்டுமானால் உங்களுக்குத் தேவையான புத்தரை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் புத்தர் என்பது தனித்த ஒருவரல்ல, பல்வேறு புத்தர்கள் உலகில் தோன்றியும், தோன்றியபடியும் இருக்கின்றார்கள். அந்தப் புத்தர்கள் இந்த உலகிலுள்ள அனைவர்க்கும் சொந்தமானவர்கள். புத்தரை நீங்கள் மட்டும் 'தனிச்சொத்தாக' ஆக்கிக்கொள்ள முடியாது என்று மதத்திலிருந்து புத்தரை விலத்திப் பார்க்கும் நம்மைப் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.

*

அப்படி புத்தர் இந்த உலகினுக்கு உரியவர் என்றுதான் நமக்கு கற்பித்த விபாஸனா ஆசிரியரான கோயிங்காவும் சொல்கின்றார். ஆகவேதான் இந்த விபாஸனா நிலையங்களில் புத்தரின் விபாஸனா பாவித்தாலும், புத்தருக்கென்று மதங்கள் அடையாளப்படுத்தும் புத்தர் சிலைகளை, படங்களோ, இன்னபிற சடங்கு சம்பிராதயங்களோ இங்கே இருப்பதில்லை/நடப்பதில்லை.

புத்தர் பரிநிர்வாணமடையும்போது இன்று மதங்கள் கூறும் நிபந்தனைகளோடா அவர் தன்னிலை உணர்தலைப் பெற்றார்? இல்லைத்தானே. ஒரு நாடோடியாக ஊர் ஊராக காடு காடாக அலைந்து மரங்களின் கீழே தியானம் செய்து, இறுதியில் போதி மரத்தினடியில்தானே புத்தர் பரிநிர்வாணமடைந்தார். அப்படி புத்தரின் கதையின் மூலம் தொடர்ச்சியாக இந்த 2600 ஆண்டுகளாக ஞாபகப்படுத்தப்படுவது கூட புத்தரைப் போல எவரும் இந்த தம்மத்தின் பாதையை அவரின் இயல்புநிலைகளோடு கண்டடைய முடியும் என்பதுதான்.

நான் இந்தக் காலகட்டத்தில்தான் அமலன் ஸ்டான்லி எழுதிய 'தம்மம்' நூலையும் வாசித்துக் கொண்டிருந்தேன். விபாஸனாவின்போது கோயிங்கா அவரது தம்ம உரைகளில் நிறையப் புத்தரின் வாழ்க்கைக்காலத்தில் நடந்த கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இவையெல்லாம் 'தம்மம்' நூலிலும் விரிவாக தமிழில் இருக்கின்றதே என்று என் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.

எனக்கு மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக இனிக்கத் தொடங்கியது. அந்த மூன்று மணித்தியாலங்கள் தியானம், கோயிங்காவின் தம்ம உரை, மீண்டும் தியானம் என்று போகும். நான் கதைகளைக் கேட்க விரும்புகின்றவன் என்பதால் கோயிங்காவின் தியான வழிகாட்டல்களை விட எனக்கு அவரின் தம்ம உரைகள் மிகப் பிடித்திருந்தன.

ஆனால் தனது தம்ம உரைகள் 'ஒருவகை அறிவுஜீவிக் கொண்டாட்டம், தியானத்தில் ஆழ்வதே முக்கியமானது' என்று கோயிங்கா தொடர்ந்து எங்களை எச்சரித்தும் கொண்டிருந்தார். இறுதிநாள் தம்ம உரையில் கோயிங்கா, 'சிலவேளை நீங்கள் வெவ்வேறு மத நம்பிக்கைகளின் ஊடாக வளந்திருப்பீர்கள், நான் உங்கள் சமயங்கள் பாவிக்கும் வார்த்தைகளைப் பாவிக்காததால் ஒருவித ஒவ்வாமை என் உரைகளின் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடும். அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். என் உரைகள் பிடிக்காவிட்டால் அதைத் தள்ளிவையுங்கள், ஆனால் தியானத்தை மட்டும் கைவிடாதீர்கள். அதுவே உண்மையான தம்மத்திற்கான பாதை' என்று கூறியிருந்தார்.

ஆக கோயிங்கா அவர் உணர்ந்ததை நாம் கற்றலால் அல்ல, அனுபவத்தினூடாக அறிய வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகின்றார் என்பதை இங்கே நாங்கள் அறிந்து கொள்கின்றோம். அதனால்தான் இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புக்களின்போது  விபாஸனா குறித்த விளக்கவுரைகள் எழுத்தின் மூலம் நமக்கு வழங்கப்படுவதில்லை. அதுபோல நாம் விபாஸனா குறித்து எந்த குறிப்புகள் எடுப்பதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லாவற்றையும் அனுபவத்தினூடாக உணர்ந்துகொள்ளவே இந்த பத்து நாட்களையும் அமைத்திருக்கின்றனர்.

பதினேழு வயதில் முதல் விபாஸனா வகுப்புக்கு வந்து என்னோடு உரையாடிய அந்த இருபத்தேழு இளைஞன் என்னிடம் முதல் தடவை கோயிங்காவின் உரையைக் கேட்டபோது தன்னை அவ்வளவு அது பாதிக்கவில்லை. ஆனால் பத்து வருட இடைவெளியின் பின் இதைத் திரும்பக் கேட்கும்போது தன் வாழ்வில் நடந்தவற்றை வைத்து இது மிகவும் அர்த்தப்படுகின்றது (sense) என்றான். ஆக அவனுக்கு கோயிங்கா ஏதோ ஒருவகையில் எதையோ கற்றுக்கொடுத்திருக்கின்றார் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

*

இறுதி நாளின்போது பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது ஒருவரோடு கதைத்தேன். அவரை முதல்நாள் கண்டபோது அவர் ஈழத்தமிழர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர்தான் எனக்குப் பக்கத்தில் இருந்து தொடந்து இருமிக்கொண்டு இருந்தவர். பேசியபோதுதான் அவர் கடந்த நான்காண்டுகளாக கிரியா யோகா பழகியவர் என்பதை அறிந்துகொண்டேன்.

கிரியா யோகத்தைத் தீவிரமாகச் செய்தாலும், ஏதோ கற்றலுக்கும் நடைமுறையில் அதைச் செயற்படுத்துவதற்கும் ஓர் இணைப்பு தவறவதாக நினைத்துக்கொண்டிருந்தேன், விபாஸானாவுக்கு வந்ததால் அந்த கண்ணி தனக்கு புரிபட்டுவிட்டது என்றார் அவர்.

நான் பதினாறு வயதில் கனடாவுக்கு வந்தேன் என்றால், அவர் பத்து வயதில் கனடாவுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார். நாங்கள் இருவரும் இலங்கையில் இருந்த தமிழ்ப்பெளத்தம் பற்றி பிறகு கொஞ்ச நேரம் பேசினோம். உங்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று கேட்டேன். அப்படி தமிழ் தெரிந்தால் தமிழ் பெளத்தம் பற்றி தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை அனுப்பி வைக்கின்றேன் என்றேன்.

ஏன் பத்து வயதில் கனடா வந்தவர்க்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டேன் என்றால், நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது எனக்கொரு காதலி இருந்தார். அவர் கனடாவுக்கு எட்டோ/ஒன்பதோ வயதில் வந்தவர். நானாகவே அவருக்கு தமிழ் தெரியும் என்று நினைத்து நான் தமிழில் எழுதிய காதல் கடிதங்களை மட்டுமில்லை, தமிழில் எழுதப்பட்ட சிறந்த காதல் படைப்புக்களையும் அவருக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். அவரும் சிரத்தையாக அதையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வார். பின்னர் ஒரு பொழுதில் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்பதைக் கண்டறிந்தபோது, ஏன் தொடக்கத்திலே தமிழ் வாசிக்கத் தெரியாது என்று சொல்லியிருக்கக்கூடாது என்று அவரிடம் நான் கேட்டேன். 'இவ்வளவு கஷ்டப்பட்டு தமிழில் நீ எழுதித் தரும்போது அப்படிச் சொன்னால் உன் மனம் கோணாதா?' என்று அவர் திரும்பிக் கேட்டார். தமிழ் வாழ்க என்று மனதிற்குள் நான் அப்போது சபித்துக் கொண்டேன். அதே நிலை பிறகு இந்த நண்பருக்கும் நான் தமிழில் புத்தம் குறித்து எழுதப்பட்டதை அனுப்பும்போது நடந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையுடந்தான்  இவரிடம் தமிழ் தெரியுமா எனக் கேட்டேன்.

இறுதியில் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் கேட்கும் கேள்வியை அவரும் கேட்டார். அதன் மூலம் நாங்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்துகொண்டோம். இப்படி தமிழில் நாங்கள் எமது மூலவேரைக் கண்டடைந்தபோது, அதுவரை கர்நாடகக்காரரோ அல்லது தெலுங்குக்காரோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு முன்வரிசையில் தியானம் செய்து கொண்டிருந்த ஒருவரும், 'நானும் யாழ்ப்பாணத்தான்' என்று குரல் கொடுத்தார்.

பிறகென்ன மூன்று யாழ்ப்பாணக்காரர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள். பத்தாம் நாள் பேச அனுமதித்த இரவில் நுளம்பு கடிக்கக் கடிக்க நமது ஒவ்வொருவரின் கதைகளை, நாம் விபாஸனாவிற்கு வந்து சேர்ந்த பாதைகளை இரவு தூங்கப்போகும்வரை  நட்சத்திரங்களை சாட்சி வைத்து பேசத் தொடங்கினோம்.

***



பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 10

 தியானம், யோகா போன்றவற்றை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதே சிறந்ததாகும். அதுவும் நமக்குக் கிடைக்கும் ஆசிரியர்கள் இவற்றை 'வணிக்கப்படுத்தி தமது சேவைளை விற்காத' தன்னலமற்ற ஆசிரியர்களாக இருந்தால் அது நமது நல்லூழ் எனச் சொல்ல வேண்டும்.


கோயிங்காவின் இந்த விபாஸனா கற்றல்முறையை நாம் இணையத்தில் தேடினால், அவரது வழிகாட்டும் தியானத்திலிருந்து (Guided meditation), அவரது பத்துநாள் தம்ம உரைகள் வரை அனைத்துமே எளிதில் கிடைக்கும். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டு நாம் விபாஸனாவைக் கற்றால் அதைச் சரியாகப் பின்பற்றிச் செல்வோமா என்பது கேள்விக்குறியே. தனியே தியானமோ யோகாவோ கற்காமல் பலரோடு சேர்ந்து கூட்டாக (collective) கற்கும்போது அது தரும் பலன்கள் வேறுவிதமானவை.

இப்படியான கற்றல்களில் பலர் நோயின் காரணமாக தும்மிக்கொண்டோ, இருமிக்கொண்டோ, கால்கள்/முதுகின் வலி காரணமாக பெருமூச்சை இழுத்துக்கொண்டு இருந்தாலும், பலரோடு இருந்து கூட்டாக தியானமோ, யோகாவோ செய்வது இன்னும் இப்பயிற்சிகளில் நம் மனதை/உடலை அதிகம் குவிக்கச் செய்வதாக இருப்பதை நான் அனுபவித்திருக்கின்றேன். மேலும் வழிகாட்டும் ஆசிரியர் ஒருவர் இருக்கும்போது நாம் செல்லும் பாதை இன்னும் எளிதாகத் தென்படும்.

*
இந்த பத்து நாள் விபாஸனாவில் நாம் எதுவுமே பேசாமல் 'மெளன விரதம்' முக்கியமானது என்று நினைக்கின்றேன். அப்படி அமைதியாக இருந்து தியானத்தில் ஒரளவுக்கு எளிதாக மூழ்கிய மனது, பத்தாம் நாள் மதியத்திலிருந்து நீங்கள் noble silence ஐ கலைக்கலாம் என்று சொன்னதன்பிறகு,  அடுத்து வந்த தியான அமர்வில் எனக்கு மனதைக் குவிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை, இன்னும் பலருக்கு அது ஒரு சிக்கலாக இருந்ததை பின்னர் நான் அறிந்துகொண்டேன்.

ஆக புறச்சூழல் காரணிகள் சரியாக அமையும்போது நாம் செய்யும் தியான/யோகப் பயிற்சிகள் மிக எளிதாக அமைந்துவிடுவது இயல்பானதே. நான் யோகா பழகிய நாட்களில் எமது ஆசிரியர் தியானத்தைக் கொஞ்சம் இறுதியில் சொல்லித் தருவார். அதில் ஒரு விடயம், அவர் உடலின் ஒவ்வொரு பகுதிகளாகக் குறிப்பிட்டு நன்றி சொல்லும் பகுதி. அவர் அவ்வாறு உடலின் பகுதியைக் குறிப்பிட்டு நாம் அந்தந்தப் பகுதிகளில் மனதைச் செலுத்தவேண்டும். ஏதேனும் உடல் உள்/வெளி பகுதியில் சிக்கல் இருந்தால், அங்கே இன்னும் ஆழமாக மனதை ஊன்றவேண்டும் என்று சொல்லித் தரப்பட்டிருக்கும்.

அதன் ஒரு பகுதியைத்தான் விபாஸனாவில் கோயிங்காவும் சொல்லித் தருவதைக் கண்டேன். உடலின் ஒவ்வொரு பகுதியை மிக ஆழமாகப் பார்த்து sensations (வேதனா)  இருக்கா, அப்படி இல்லாவிட்டால் flow (பங்கா) இருக்கா எனக் கவனிப்பதாகும். காலில்/முதுகில் வரும் வலி, கடிப்பது போலத் தோன்றல் , கடும் வெப்பம் என்று உணர்வதை  gross sensations எனவும், அப்படி இல்லாது அதிர்வுகளுடனோ, மென் காற்றைப் போன்ற உணர்வுடனோ உடலின் உள்ளோட்டம் தெளிவாக இருப்பதை subtle sensations எனவும் பிரித்துப் பார்க்க விபாஸனா கற்றுத் தருகின்றது.

கோயிங்கா திருப்பத் திருப்ப விபாஸனா தீவிரமாகும்போது Gross, Subtle உணர்ச்சிகளைப் பார்க்கச் சொல்கின்றார். இதன்போது பல்வேறு படிநிலைகள் பலருக்குத் தோன்றச் செய்கின்றன. நான் இதன் ஆழ்நிலையை அவ்வளவாக உணராதபோதும், உடலின் அதிர்வுகளை நுட்பமாக உணர்ந்தேன். அதுவும் மூலாதாரப் பகுதியில் இருந்து அவை எழுவதைக் கண்டேன். அப்போதும் இது ஏற்கனவே பூச்சி ஊர்ந்த உணர்வைப் போன்று என் மனம் செய்யும் சித்துவினால் உடலை அப்படி அசைக்கின்றேனோ என்ற சந்தேகம் வந்தது.

ஆனால் அப்படி இல்லாது உடல் அதிர்கின்றது என்பதையும், அது தன்னியல்பிலே விபாஸனாவின் தொடர்பயிற்சியினால் உடலுக்குள் ஏற்படுவதையும் கண்டடைந்து கொண்டேன்.

*
விபாஸனாவுக்குப் போய் வந்தபின் நண்பர்களுடன் அது குறித்துப் பேசும்போதோ, அவர்களும் அதற்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று சொல்லும்போதோ, இதனால் உனக்கு என்ன நன்மை அல்லது மாற்றம் ஏற்பட்டது என்று அவர்கள் கேட்பார்கள். உண்மையிலே நான் விபாஸனாவுக்குப் போகும்போது எதையும் எதிர்பார்த்து போகவில்லை. அதை என் வாழ்வில் ஒரு புதிய அனுபவமாகப் பார்ப்போம் என்ற நினைப்பு மட்டுமே போகும்போது இருந்தது.

விபாஸனா முடிந்து வரும்போதும், விபாஸனாவில் உள்ளே என்ன மாற்றம் ஏற்பட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் இந்த பத்து நாட்களில் நான் அலைபேசி இல்லாது, எவரோடும் பேசாது அமைதியாக, இரவுணவே இல்லாது மரக்கறி உணவோடு வாழ முடிந்ததே அதுவே பெரும் கற்றல்தானென என் மனம் சொல்லிக் கொண்டது.

மேலும் பத்து நாளில் விபாஸனாவைக் கற்றுவிட்டு ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் நான் நினைத்துப் போகவில்லை. நமது அறுபத்து நான்கு கலையானால் என்ன, இல்லை தியானம்/யோகா என்றால் என்ன, இவற்றைத் தொடந்து தீவிரமாகக் கற்பதன் மூலமே நாம் தேர்ச்சியடைய முடியும்.

அப்போதே அவையவைக்கு இருக்கும் உண்மையான பலனை நாம் கண்டடைய முடியும். 'பருவகால படைப்பாளிகள்' (seasoned writers) போல நாம் எழுத்தில் எதையோ சாதித்துவிட்டோம் என்று அறைகூவல் விட இங்கே முடியாதல்லவா?

கோயிங்காவும் பத்து நாள் விபாஸனாவின் போது நீங்கள் தம்மத்தின் பாதையில் ஒரு சிறு காலடியை வைத்திருக்கின்றீர்கள். அது பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடக்கவேண்டிய நெடும்பாதை. ஆகக்குறைந்தது பலருக்கு  இது இன்னமும் ஆசிர்வதிக்கபடாத ஒரு செயல். ஆகவே நீங்கள் தம்மத்தின் ஒரு சிறுதுளியை உருசித்தீர்கள் என நிறைவு கொள்ளுங்கள் எனச் சொல்லித்தான் இறுதிநாளில் நம்மை அனுப்பி வைக்கின்றார்.

மேலும் இந்த பத்து நாள் விபாஸனாவினால் உங்களுக்குள் இருக்கும்  கோபம் போன்றவை உங்களை விட்டு உடனே விட்டோடிவிடும் என்று நம்பவேண்டாம் என்றும் சொல்கின்றார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடுத்து பத்து முறை கோபப்பட்டால், சிலவேளை இந்த விபாஸனாப் பயிற்சியினால் பத்துக்குப் பதிலாக ஒன்பது முறை கோபப்படுவீர்கள். அந்த ஒருதடவை மட்டும் உங்கள் மூச்சைக் கவனித்து, கோபத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் உங்களை அறியாமல் வந்திருக்கும்.

ஆக விபாஸனாவுக்கு முன் பத்து கோப நிகழ்வாக இருந்தது, இப்போது ஒன்பது ஆகிவிட்டதே என்று மகிழ்ச்சியடையுங்கள். அவ்வாறே தொடர்ச்சியான விபாஸனாப் பயிற்சியின் மூலம் கோபப்படும் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வாருங்கள் எனச் சொல்கின்றார்.

இந்த பத்து நாள் விபாஸனா பயிற்சி உங்களுக்குள் ஏதோ அற்புதங்கள் நிகழப்போகின்றன என்கின்ற போலி நம்பிக்கை எதையும் தருவதில்லை. இந்தக் கணத்தில் என்னவாக நாம் இருக்கின்றோம் எதை அனுபவிக்கின்றோம், எவ்வாறு உணர்கின்றோம் என்பதே தம்மம், அதை அதன் உண்மைத்தன்மையில் இருந்து மாற்றிப் பார்க்காமல் அப்படியே பார்க்க (As it is) கற்றுக் கொள்ளுங்கள் எனத்தான் சொல்லித் தரப்படுகின்றது.

*

எனக்கு விபாஸனாவின்போது உணவருந்திக் கொண்டிருக்கும்போது இந்த உணவுகளில் ஏதோ நமது தமிழ் கைகளில் தொடுகை (touch) இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்துகொண்டிருந்தது. அதுவும் ஒருநாள் பழங்களைக் கொண்டு செய்யப்பட்ட Pudding சாப்பிட்டபோது எனக்கு எங்கள் ஊர் பஞ்சாமிர்தத்தையும் அது நினைவுபடுத்த, நிச்சயம் சமைக்கும் இடத்தில் நமது தமிழ்ப் பெடியன் இருப்பார் என்று உறுதியாக நம்பினேன். அந்த நம்பிக்கை தவறில்லை என்று எமது விபாஸனா வகுப்புக்களின்போது சமைத்துத் தந்த Chef தமிழ் இளைஞன் என்பதை இறுதிநாளின் கண்டுகொண்டேன். அவருக்கு எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காது சுவையாக சமைத்துப் பரிமாறியதற்கு நன்றி சொன்னேன். எனக்கு மட்டுமில்லை இன்னும் பலருக்கும் அவரும் அவரின் உதவியாளர்களும் இந்த பத்து நாட்களில் தயாரித்து அளித்த உணவு வகைகள் மிகப் பிடித்திருந்தன.

அவரோடு பேசிக்கொண்டிரும்போது அவர் விபாஸனாவுக்கு வந்து சேர்ந்த கதையைச் சொன்னார். அது ஒரு துயரான நெடும்கதை. இருபது வருடங்களுக்கு மேலாக போதைக்கு (Drugs) அடிமையாக இருந்தார். கனரக ஊர்தி ஓடுகின்ற சாரதி அவர். ஏதோ ஒரு விபத்தில் சிக்கி நரம்புத்தொகுதி கடுமையாகப் பாதிக்கப்பட அவரின் வாழ்வு இருண்டு போனது.

அப்போதுதான் தற்செயலாக விபாஸனாவுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார். முதல் நான்கைந்து நாட்கள் அவரால் இந்த விபாஸனாவைத் தாங்க முடியாதிருக்கின்றது. ஒரே சத்தியும் (வாந்தி), தலையிடியுமாக இருக்க இங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கின்றார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறி (ஆசிரியர் கோயிங்காவுக்கு அவரோடு விபாஸனா செய்த பெண் பேராசிரியை போல) இந்த பத்துநாளையும் கஷ்டப்பட்டு முடித்துவிடு சிலவேளைகளில் மாற்றத்தை நீ காணக்கூடும் என்று தேற்றி தன்னோடு வைத்திருந்தவர் எமக்குக் கற்றுக் கொண்டிருந்த ஆசிரியர் (எமது ஆசிரியர் அப்போது course manager) எனச் சொன்னார்.

இப்போது அந்த தமிழ் இளைஞர், தான் இந்த போதை அடிமையிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்றார். பெருநகர (Toronto) இரைச்சலிருந்து தப்பி வந்து விபாஸனா நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஊரில் வசித்தபடி farm செய்து கொண்டிருக்கின்றேன் என்றார்.

கடைசிநாளின்போது நிர்வாகத்தினர் பிரியாவிடை தரும்போது இப்போது இந்த விபாஸனா நிலையத்தில் இரண்டு முழுநேர ஊழியர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் உணவகத்தில் இருக்கும் Chef என்றார்கள். அது இந்த தமிழ் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் எண்ணிக்கொண்டது.

இந்த இளைஞர் என்னிடம் 'ஏன் தமிழாக்கள், இந்தமாதிரி விடயங்களுக்கு அதிகம் வருவதில்லை' என்று கேட்டார். பிறகு 'தமிழாக்களை நிறையக் கூட்டி வாருங்கள், நாங்கள் அவர்களுக்கென்று தமிழிலே விபாஸனாவை நடத்துவோம்' என்றார் (வியட்னாமிஷ், மாண்டரின் போன்று தனித்தனி மொழிகளிலும் இங்கே  விபாஸனா வகுப்புக்கள் நடக்கின்றன). நான் நகைச்சுவையாக அப்படி நடந்தால் எங்களுக்கு நன்றாகச் சோறும் கறியும் கமகமக்க தினமும் பரிமாறுவீர்களா என அவரிடம் கேட்டேன்.

***

 


பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 09

Saturday, September 26, 2026

 

விபாஸனா நாட்களில் அமைதியைக் கடைப்பிடித்தல் மிக முக்கியமானது என்பதால் நமது தனித்த அறைகளைப் போல, பொது தியான மண்டபத்தில் நாம் ஒவ்வொருவரும் எங்கே அமர்வது என்பதற்காகவும் எமது பெயர்களுடன் இருக்கைகள் இருக்கும். அவ்வாறே காலை/மதிய உணவு நேரங்களில் ஒவ்வொருவரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு உரிய இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆகவே எனது இருக்கையை இவர் எடுத்துவிட்டார் அவர் எடுத்துவிட்டார் என்கின்ற எவ்வித சச்சரவுகளுக்கும் இங்கு இடமில்லை.

நாம் விபாஸனா நிலையத்திற்குப் போகும்போதே எமது அலைபேசியை ஒப்படைக்கும்போது எமக்கு எமது பெயர் உள்ள துண்டைத் தந்து உணவு அமரும் இடத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்கள். நான் சுவர்களைப் பார்த்து அமர்ந்தாலும் கொஞ்சம் தலையை சரித்துப் பார்த்தால் வெளிச்சூழல் தெரியும் இடத்தைத் தேர்வு செய்தேன். ஆக சாப்பிடும்போது வெறும் சுவரையோ, உண்ணும் உணவையோ பார்க்காது அவ்வப்போது வெளியே மரங்களையும், சூரிய ஒளியையும் பார்த்துக் கொண்டிருப்பேன்.
 



நம்மோடு பெண்களும் சேர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களும் நாங்களும் தியான மண்டபத்தில் மட்டும் சந்தித்துக் கொள்வோம். உணவருந்துவதிலிருந்து, சிறுகாட்டில் உலாவது என்று எல்லாமே எமக்கும் அவர்களுக்கும் என்ற தனித்தனி இடங்கள் இருந்தன. ஆனால் நான் உணவருந்தும்போது மட்டும் பெண்கள் உணவருந்தும் இடத்திலிருந்து தமது அறைகளுக்குப் போய் வரும் நடமாட்டம் வெளியே கண்களை எறியும்போது தெரியும்.

அந்தவேளையில் எல்லாம் விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு சலனமடைந்தபோதும் தொடர்ந்து தீவிரமாகத் தவத்தை மேற்கொண்டது போல என் கண்களை தாழ்த்தி நல்லதொரு யோகியாக மாற முயன்று கொண்டிருந்தேன்.

புத்தர் அலைந்து திரிந்து மரங்களின் கீழே தியானம் செய்து, போதிமரத்தின் கீழ் பரிநிர்வாணமடைந்து, இறுதியில் கடைசிமூச்சையும் ஒரு மரத்தின் கீழ் விட்டு இவ்வுலக வாழ்விலிருந்து நீங்கிப் போனவர் என்றாலும், விபாஸனா ஆசிரியர் கோயிங்கா நம்மை வெளிச்சூழலில் தியானம் செய்வது அவ்வளவு நல்லதல்ல என அவரது உரைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமெல்லோரும் புத்தரைப் போன்ற தீவிரப் பயிற்சியில் இருப்பவர்கள் அல்ல. வெளிச்சூழலின் காற்றும், சூரிய ஒளியும் எமது ஆறுபுலன்களையும் சலனமடையச் செய்யக்கூடியவை என்பதால் எம்மால் எமது உடலின் மேற்பரப்பில் ஏற்படும் sensations ஐ உணரமுடியாது என்பதால் எம்மை வெளியே தியானம் செய்வதை கோயிங்கா வேண்டாம் என்கின்றார்.

அத்துடன் விபாஸனாவிற்கு வந்துவிட்டு எனக்கு யோகா தெரியும்,  Tai Chi தெரியும், நன்றாக gym இல் workout செய்கின்றேன் என்று உடலை வளைத்து நெளித்தல் எல்லாம் இந்த விபாஸனா நிலையத்துக்குள் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. எந்தத் தியான முறைக்கும் விபாஸனாக்காரர் எதிர் இல்லை என்பது போல, இத்தகைய பயிற்சிகளுக்கும் அவர்களுக்கு எதிர் இல்லை என்றாலும், இவ்வாறு ஒருவர் செய்வது மற்றவர்களின் விபாஸனா பயிற்சியை கவனக்கலைப்பான்களாக்கி விடும் என்பதால் இவற்றையெல்லாம் செய்யாது அமைதியாக இருங்கள் எனச் சொல்கின்றார்கள்.

*
ஆக, இவ்வாறாக புறச்சூழல்களை கவனமாக உருவாக்கி நமது மனதை உள்முகமாகக் குவிக்க இத்தகைய விபாஸனா நிலையங்கள் உதவி செய்கின்றன. ஆனால் நாம் எந்தளவுக்கு உள்முகமாகப் போகின்றோம் என்பது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை என்பதையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

விபாஸனாவின் இறுதிநாளின்போது ஒரு 27 வயது இளைஞனிடம் பேசும் சந்தர்ப்பம் வந்தது. அவன் தனது 17வயதில் முதல் விபாஸனாப் பயிற்சியை இந்தியாவில் இருந்தபோது பெற்றிருக்கின்றேன். தனது வீட்டில் அனைவருமே 10 நாள் விபாஸனாவிற்குப் போய் வந்தவர்கள், தான் மட்டுமே வீட்டில் விபாஸனாவுக்குப் போகாது எஞ்சியிருந்தேன். எனவே நான் விபாஸனாவுக்கு 17 வயதில் போனேன் என்றான்.

இப்படியான பதின்மத்தில் நீங்கள் போய் விபாஸனா 10 நாள் கற்பது கடினமில்லையா என்றேன். இல்லை, எனக்கு அது நல்லதொரு அனுபவமாக இந்த பத்து வருடங்களில் உதவியிருக்கின்றது என்றான். இப்போது அவன் இரண்டாவது 10 நாள் விபாஸனாவுக்கு வந்திருந்தான். இந்த 10 வருட இடைவெளியில் தன் சம வயதொத்தவர்களை வாழ்வை வேறுவிதமாகப் பார்க்கவும், உறவுகளை அணுகவும், முக்கியமாக இளமைக்குரிய கோபத்தை உற்றுப்பார்த்து குறைக்கவும் கற்றுக்கொண்டான் என்று சொன்னான்.

சிலரைச் சந்திக்கும்போது அவர்களின் பேச்சைப் பார்க்கையில் எவ்வளவு நிதானமாக இருக்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றும். அவனைப் பார்க்கும்போது அவ்வளவு அமைதியானவனாக இருந்தான். விபாஸனா முடிந்துவரும்போது அவனுக்கு எனது காரில் ride கொடுத்திருந்தேன். கடைசிநாள் நானும் அவனும் சேர்ந்து சிறுகாட்டில் உலாவியபடி நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அவனுக்கு நிச்சயம் விபாஸனாவால் (ஒவ்வொரு வாரமும் ஒரு மணித்தியாலம் அவன் வீட்டுக்கருகில் ஏற்கனவே விபாஸனா பழகியவர் சேர்ந்து செய்யும் sitting இற்கும் அவன் செல்கின்றவன்) நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிந்தது. மேலும் அவன் வயதுக்குரியவர்களுக்குரியவர்கள் புழங்கும் சமூகவலைத்தளங்களில் அவன் இல்லை என்பதும் எனக்கு வியப்பாக இருந்தது.

விபாஸனாவின் ஒன்பதாம் நாளில் அவன் விபாஸனாவின் ஆழத்துக்குப் போகத் தொடங்கியிருந்தான்.  அவனது குழந்தைக்கால நினைவுகள்/மனவடுக்கள் அவ்வளவு துல்லியமாக வெளிவரத் தொடங்கியிருந்தன. அவன் சிறுவயதில் இருந்த வீடு, கதவின் வர்ணம் எல்லாமே தெளிவாகத் தெரிந்தன. ஒருவகையில் தானொரு சிறுவயதில் அந்த வீடு/வீதிகளில் உலாவிக் கொண்டிருந்தவனாக இருந்தேன் என்றான்.

ஒருகட்டத்தில் விபாஸனாவை அவனால் ஒழுங்காகச் செய்யமுடியாதபோது, இடைவேளையின்போது எது தன்னை தியானத்தில் ஆழமுடியாது தடுக்கின்றது என்று ஆழ்ந்து பார்த்தபோது, அது அவனது ஏழாவது வயதில் நடந்த தாத்தாவின் மரணம் என்பதைக் கண்டடைந்திருக்கின்றேன். அன்று அவன் உலகியல் அறியாத பாலகன்.

அப்போது தாத்தாவின் மரணத்தை தன்னைப் பாதிக்கவில்லை. ஆனால் விபாஸனாவில் ஆழ்ந்தபோது அவரது மரணம் தன்னை மிகப் பாதித்தது. தான் தனது அறைக்குள் போய் இருந்து ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அழுதேன் என்றான். அப்படியும்  அவனது மனது சிறுவயது உளவடுக்களால் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அடுத்த நாள் நமக்குச் சொல்லித்தந்த மெத்தா பாவனா தியானத்தால் (Loving Kindness) தனது உள்ளம் நிச்சலமடைந்து அமைதியடைந்தது என்றான்.

*

விபாஸனாவிற்குப் போனாலும் நாமும் சாதாரண மனிதர்கள் அல்லவா? நானும் அவனும் சிறுகாட்டுக்குள் உலாவியபோது அவனுக்குத் தெரிந்த வடஇந்தியா 'குரு'க்கள், நான் எனக்குத் தெரிந்த 'சாமி'மார்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஓஷோ பற்றிய பேச்சு வந்தபோது, அவர் இப்படி விரிவான நிலையங்களை தியானத்துக்கு உருவாக்கியிருக்கலாம். அவரை நோக்கி அப்படி ஆயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவரோ அல்லது அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஓஷோவை ஒரு cult ஆக உருவாக்கத் தொடங்கியதால்  சர்ச்சைக்குள்ளாகிய ஓஷோ ஒரு சிறுவட்டத்துக்குள் சுருங்கிப் போனார் எனச் சொன்னேன்.

பிறகு நாம் மீண்டும் விபாஸனாவிற்குத் திரும்பினோம். அவனைப் பார்த்து நீங்கள் உங்கள் பதின்மத்தில் விபாஸனாவுக்குச் சென்றது நல்லூழ். நானும் என் இருபதுகளில் தியானத்தின் பக்கம் சென்றிருந்தால் கடந்தகால வாழ்க்கையில் பலவற்றை வேறுவிதமாக எதிர்கொண்டிருப்பேன் என்று சொன்னேன். அவரவர்க்கு அது அதற்கான அழைப்பு (Calling) இருக்கின்றது. பத்து வருடத்துக்கு முன்னரே விபாஸனாவுக்குப் போகத் தயார்படுத்திய என்னால் இப்போது அல்லவா போக முடிந்திருக்கின்றது?அதுவரைக்கும் காத்திருத்தலே முக்கியமானது.

மேலும் ஒரு  ஸென் துறவி 'அவ்வளவு வேகமாக நடக்காதே, எல்லா இடத்திலும் இதே மழைதான் பொழிந்து கொண்டிருக்கின்றது' என்று சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது.

புத்தரும் எந்த விடயத்தை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். தொடங்க மட்டுமில்லை, ஏற்கனவே ஒரு விடயம் தவறாக இருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை மீண்டும் தொடங்கவும் முடியும் என்கின்றார் அவர்.

ஆக தியானத்தில் இதை தீவிரமாகக் கடைப்பிடிக்கின்றேனோ இல்லையோ, காதல் விடயத்தில் மட்டும் சரியாகச் செய்கின்றேன் என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டுக் கொண்டேன்.

***

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 08

Thursday, September 24, 2026

 

விபாஸனாவைப் பற்றி இதுவரை சற்று நகைச்சுவையாக எழுதிக் கொண்டிருந்தாலும், உண்மையிலே மிகத் தீவிரமான நிலையிலே அனைவரும் கற்றுக் கொண்டிருந்தோம். என்னை விட மிக இளைய, இருபது வயது இளைஞர்கள் நிறையப் பேர் வந்திருந்து, GenZ என்றாலே இந்த விடயங்களுக்கு அப்பால் இருப்பவர்கள் என்ற பலரின் பொது அபிப்பிராயத்தை மாற்றியிருந்தார்கள்.


இப்படி தீவிரச் சூழலில் தியானம் பழகுவது எனக்கு இன்னொருவிதத்தில் பிடித்திருந்தது. எமக்குள் இருக்குள் madness/weird ஆன விடயங்களை வெளிக்காட்டினால் யார் நம்மை எடைபோடுவார்கள் (judge) என்ற பிரக்ஞை இல்லாது அனைவரும் நம் இயல்பில் இருந்திருக்கின்றோம்.




என்னைப் போன்று மரங்களை கட்டிப் பிடிக்கும் ஒருவர் எவர் அந்தப் பக்கம் நடந்துவருகின்றார் என்ற கவலையில்லாது ஒரு காதலியைப் போல அவ்வளவு ஆதரத்துடன் மரத்தைக் கட்டிப்பிடித்தார். நல்ல காலை இளவெயில் வருகின்றபோது சிலர் கையை விரித்து அப்படியே சூரியஒளியை கண்ணை மூடி உள்வாங்கிக் கொண்டனர்.

நான் அவ்வப்போது சிறுகாட்டுக்குள் நடக்கும்போது சூரியஒளியில் மென்பச்சையாக ஒளிரும் மரங்களைப் பார்த்து 'ஏதோ என் காதலில் எனக்கு மரங்களுக்கிடையில் தரிசனம் தருகின்றார்' போல நின்று நிதானித்து மூச்சை நன்கு இழுத்து எவர் அருகில் வருவார் என்ற கவலையில்லாது இரசித்திருக்கின்றேன்.

இவ்வாறான விடயங்களை வெளியேயுள்ள பொதுச்சூழலில் நாம் செய்தால், பிறர் வித்தியாசமாக எங்களைப் பார்த்திருப்பார்கள். ஆனால் விபாஸானச் சூழலில் ஒவ்வொருவரின் so called weirdness ஐ நாம் மிக இயல்பாக எடுத்துக் கொண்டோம் எனத்தான் சொல்ல வேண்டும்.

*

நகுலன் தனது 'நினைவுப்பாதை' நாவலில், ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும் என்று எழுதியிருப்பார். அவ்வாறான ஒரு உளவியல் மையத்தில்தான் நாவலில் வரும் நவீனனுக்கும், இன்னொரு எழுத்தாளரான நாயருக்கும் இடையில் உரையாடல் நிகழ்கின்றது.

'நிறுத்தாதீர்கள், அப்படியே தொடர்ந்து பேசுங்கள்' என நாயர் சொல்லச் சொல்ல நவீனன் மடைதிறந்ததைப் போலப் பேசுவது, ஒரு படைபாளியின் ஆழ்மனதை அப்படியே வெளிப்படையாக முன்வைக்கும் இடங்கள். அதில் ஓரிடத்தில் 'அவனுக்கு அப்பொழுது தன் ஒவ்வொரு நாவலை எழுதி முடித்த பிறகும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல்தானே என்று ஒரு உணர்ச்சி தோன்றியது' எனச் சொல்லப்படும்.

நகுலன் இன்றிருந்தால் நவீனனை மனநோயாளர் விடுதிக்கு அல்ல, இவ்வாறான விபாஸனா நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என நகுலனிடம் நான் சொல்லியிருப்பேன். என்ன இங்கே வாய்விட்டுப் பேச முடியாது, நாம் மனம் திறந்து பேசவேண்டியதை எல்லாம் மனதுக்குள் இந்த 10 நாட்களுக்குள் பேசித் தீர்த்திருப்போம்.

அதுவும் படைப்பாளியாக சாதாரண மனிதர்களை விட மூளை இன்னும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு விபாஸனா போன்ற ஒன்று அவர்களின் மனதை நிதானித்துப் பார்க்க வைக்கும் என்று நம்புகின்றேன். ஆக, 'ஒவ்வொரு எழுத்தாளரும் வருடத்தில் ஒரு மாதமாவது உளவியல் சிகிச்சை நிலையங்களில் தங்கவேண்டும்' என்று கூறுகின்ற நகுலனிடம், உளவியல் சிகிச்சை நிலையத்துக்குப் பதிலாக விபாஸனா நிலையத்துக்கு செல்ல எழுத்தாளர்களுக்குச் சொல்லுங்கள் என நான் சொல்லுவேன்.

*

விபாஸானாவில் இருந்தபோது எனக்குள் எண்ணங்கள் வந்து குவியும் வேகம் குறைந்திருப்பதைக் கண்டேன். அதாவது எவ்வளவு யோசித்தால் கூட, ஒரு எல்லைக்கு அப்பால் என் எண்ணங்கள் விரிவடைந்து செல்லாது இருப்பதை அவதானித்தேன். அலைபேசியைப் பார்க்காது, வெளியுலகத்தில் நடப்பதை அறியாது, சக மனிதர்களோடு பேசாது என்று பல காரணிகள் இதற்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் அது எனக்கு மிகப் பிடித்திருந்தது.

சில விடயங்கள் அல்லது சில மனிதர்களின் நினைவுகள் மட்டும் வலுவாக அவ்வப்போது எனக்குள் வரும். ஒருமுறை சிறுகாட்டில் உலாப் போனபோது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எனது நண்பரான வடகோவை வரதராஜனின் நினைவுகள் தொடர்ந்து பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தேன். நான்  அவருடன் நட்பாகத் பழகத் தொடங்கிய இந்தச் சில வருடங்களில் அவர் நெருங்கிய உறவுகளின் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார். அவர் பிள்ளைகளுக்கென செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அப்படி இருந்தும் அவர் மிக நிதானமாக இந்த வாழ்வை அணுகுகின்றார், பிறர் மீதோ/இப்பிரபஞ்சம் மீதோ கடும் சொற்களைப் பயன்படுத்தாதை அதிக பொழுதுகளில் அவதானித்திருக்கின்றேன்.

அவர் கடந்துகொண்டிருக்கும் துயரங்களையும், அதேவேளை அவற்றை எதிர்கொண்டு இனிய தருணங்களை அவர் தன் வாழ்வில் உருவாக்கும் மனோதிடத்தையும் யோசித்துப் பார்த்தேன். அவர் மீது சொல்லமுடியாத வாஞ்சை உருவாகி எனக்குள் பரவுவதைக் கண்டேன்.

அப்போது நான் விபாஸனா தியானத்தில் 'மெத்தா பாவனா' பழகவில்லை. அது Loving Kindness meditation.  இந்த தியானத்தை நமக்கு கடைசி நாளான பத்தாவது நாளில் சொல்லித் தருகின்றார்கள். விபாஸனாவை ஒரு மணித்தியாலம் செய்தால், மெத்தா பாவனாவை ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் முடிவில் செய்யச் சொல்கின்றார்கள். இந்தத் தியானம் பிறர் மீது நம் அன்பையும் காருண்யத்தையும் வெளிப்படுத்துகின்ற/பகிரிந்து கொள்கின்ற தியானம்.

அதேவேளை மெத்தா பாவனா செய்யும்போது நம் மனதில் வெஞ்சினமோ, காழ்ப்போ இருந்தால் அதைச் செய்யக்கூடாது என்று ஆசிரியரான கோயிங்கா நம்மை எச்சரிக்கின்றார். நீங்கள் அமைதியாக, கோபமின்றி இருந்தால் மட்டுமே நீங்கள் பிறருக்கு அன்பையோ கருணையையோ தியானத்தின் மூலம் பகிர முடியும். அப்படியான நிதானமான மனோநிலை இல்லாதுவிட்டால் மெத்தா பாவனாவைக் கொஞ்ச நேரம் ஒத்திப் போட்டு ஆறுதலாக உங்களை அமைதியடைச் செய்துவிட்டு,  பிறரின் பொருட்டு இதைச்  செய்யுங்கள் எனச் சொல்கின்றனர்.

ஒருவகையில் நாம் நமக்குள் கோபத்தையும், வன்மத்தையும் வைத்துக்கொண்டு பிறரின் நன்மைக்காக  எதைச் செய்தாலும் அதில் ஒரு துளி பயனும் இருக்கப் போவதில்லை என்பதே இதன் அர்த்தம்.

எனக்குள் இந்த 'மெத்தா பாவனா' பத்தாம் நாளில் தொடங்கமுன்னரே வடகோவையார் மீது ஒரு வித அன்பும் கருணையும் ததும்பிக் கொண்டிருந்தது. சிலவேளைகளில் சிலவற்றுக்கான காரணங்களை எளிதாக விளக்கிவிட முடியாது.

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு நடக்கும்போது ஒரு நுளம்பு என்னைவிடாது நான் தங்கி நின்ற அறைவரை ரீங்ரீங் என்று துரத்திக் கொண்டு வந்தது. நான் என்னையறியாமலே அதிக அன்பை வடகோவையாருக்கு வழங்கிவிட்டேன், அதனால்தான் அவர் நுளம்பாய் 'விடாது கறுப்பாய்' இப்போது என்னை பழிவாங்க கூடவே வந்து கொண்டிருக்கின்றார் என்று நினைத்தபடி அறைக்குள் போய்ச் சேர்ந்தேன்.

*

விபாஸனா பழகத் தொடங்கியபின் வரும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் நாட்களில் பலர் தமது கடந்தகால உளவடுக்களின் நினைவுகள் பொங்கிப் பிராகரித்து அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை இறுதி நாளன்று என்னோடு பகிர்ந்திருக்கின்றனர். எனக்கு அப்படி ஒரு ஆழ ஊடுருவிச் சென்று பார்க்கும் நிலை வந்திருக்கவில்லை அல்லது அப்படி வந்திருந்தால் கூட அதை நான் உற்று அவதானிக்கவில்லையோ தெரியவில்லை.

எனக்கு எப்போதும் சுள்ளென்று வந்துவிடும் என் கோபத்தின் ஆழவேர்களை ஆணிவேரோடு இல்லாமல் செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் இந்த கோபத்தை மேற்றளத்தில் (கோயிங்காவின் வார்த்தைகளில் சொல்வதால் 'அறிவுஜீவி'த் தளத்தில்) புரிந்து கொள்ள முடிகின்றது. கோபம் உச்சமாக வந்துவிடக்கூடாது என்று எப்படி அவதானிக்க வேண்டும் என்பதற்கு நிறைய வாசித்து/அறிந்து வைத்திருந்தாலும், கோபம் வரும்போது அதை அந்தக் கணத்தில் உணரும் சமநிலையை ஒருபோதும் நான் கண்டடைந்ததில்லை.

சிலவேளைகளில் இந்தக் கோபத்துக்கான trauma என் சிறுவயது போர் அனுபவங்களுக்குள் நடந்து அதைச் சரியாக அன்றைய பொழுது கவனிக்காமல் கடந்துவிட்டேனே என்று கூட யோசிப்பதுண்டு. அல்லது எனது பெற்றோர் அல்லது அவர்களின் சந்ததியினரால் இந்தத் தீர்க்கமுடியாக் கோபக் கொந்தளிப்பு' ஏதோ ஒருவகையில் எனக்குள் கடந்தப்பட்டிருக்கலாமோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாயினும் அதை நான் நேரடியாகச் சந்தித்து மாற்றியமைக்காவிட்டால் எவ்விதப் பலனும் இருக்கப்போவதில்லை. எனவே நான் என் கோபத்தின் அடிவேர் வரை ஆழப்போக முடியுமா என்று அவ்வப்போது விபாஸனாவின்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் வேறொரு விடயம் எனக்குள் குவிந்து மலர்ந்தது. அது ஒரு பெண் மீதான பெரும் நன்றியுணர்வு. என் காதல் வாழ்வில் நீண்ட காலம் இருந்த உறவு அது. அவருக்கு அது முதல் காதல் (எனத்தான் நினைக்கின்றேன்). எனக்கோ அது ஒரு பெண்ணோடு  அருகருகில் வாழும் முதல் தீவிர காதல் உறவு. நாம் வெவ்வேறு சூழ்நிலைகளால் பிரிந்து இப்போது 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

விபாஸனாவில் இருந்தபோது அவர் மீதான சிறு கசப்பும் இனி என் வாழ்வில் அவரை நினைக்கும்போது எழக்கூடாதென்று எண்ணம் தீவிரமாக வரத் தொடங்கியது. அதற்காக இதுவரை அவரோடு வெறுப்புடன் இருக்கின்றேன் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. ஆனால் இனி அவர் குறித்து எந்த எண்ணம் எனக்குள் எழுந்தாலும் அதில் சிறுதுளி கசப்போ வெறுப்போ அவர் சார்ந்து தீண்டிவிடக்கூடாது என்று மனம் தெளிவடைந்து கொண்டது. இனி கருணையால் மட்டுமே நிறைந்தது அவர் குறித்த நினைவுகள் என்று ஒரு தீர்க்கம் எனக்குள் முகிழத் தொடங்கியது.

***

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 07

Sunday, September 20, 2026

 

பொதுச்சூழலில் புத்தரையோ, அவரைப் போன்ற பரிநிர்வாணமடைந்த போதிசத்துவாக்களைப் பற்றியோ பேசும்போது அவர்களால் தம் ஆயுளை நீட்சிக்க முடித்ததா, அவர்களுக்கு வந்த நோயை மாற்ற முடிந்ததா என்று வழமையான 'கடவுள்' நிலையில் வைத்து கேள்வி கேட்கப்படுவது வழமையான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதாவது ஏதோ இவர்களுக்கு மேலதிக அருள் கிடைத்து நமக்கும் அருள்பாலிப்பார்கள் என்கின்ற கடவுளாக்க நிலை அது.  

புத்தர் மனிதர்கள் தமது துன்பங்களில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் அவர் ஆகக்குறைந்தது இந்த வாழ்வில் துயரங்களைக் களைந்து/குறைத்து நிம்மதியாக வாழ்கின்ற பாதையைப் பற்றிச் சிந்தித்தவர், அதற்கான வழியில் பயணித்து தனக்கான விடுதலையை அடைந்தவர் எனச் சொல்லலாம்.




எனவே புத்தரிடம் அடைக்கலமாகும் நாம் புத்தரிடம் நமது வாழ்வில் வரும் நோய்களுக்கோ, நாம் மூப்படைவதற்கோ, ஏன் எமது செல்வத்தைப் பெருக்குவதற்கோ எவ்வித மந்திர தந்திரங்களும் அவரிடம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்கின்றோம். அப்படியாயின் எமக்கு எந்த நம்பிக்கையையும் தராத ஒருவரிடம் நாம் ஏன் சரணடையவேண்டும்/பின்பற்றவேண்டும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே.

புத்தர் மனிதவுடல்களோடு வாழும் நமக்கு இந்தத் துன்பங்களைக் களைந்து வாழும் முறையாக விபாஸனாவைக் கற்றுத் தருகிறார். அதாவது எந்த உயிரியையும் விட மனிதவுடல் என்பது மேன்மை வாய்ந்தது; அவ்வளவு மேன்மை வாய்ந்த மனிதவுடலைக் கொண்டு நாம் நமது தன்னிலைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார். அவ்வாறு சரி வரப் புரிந்துகொள்ளும்போது நாம் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலையாகி நிம்மதியாகவும், மகிழ்வாகவும் வாழ முடியும் என்கின்ற தம்மபாதையைக் காட்டுகிறார்.

மேலும் முக்கியமானவொன்று புத்தரால் நமக்கு ஒரு பாதையைத்தான் காட்ட முடியும். அதில் காலடி வைப்பதும், தொடர்ந்து நடப்பதும் நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. புத்தர் ஒருபோதும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு நிர்வாணமடைதலின் எல்லை வரை கூட்டிக் கொண்டு போகப் போவதில்லை. அவரவர் அவரவர்க்கான பாதையில் பயணித்து தமக்கான விடுதலையைக் கண்டடைய வேண்டியதுதான்.

ஆகவேதான் 'விபாஸனா' தியானத்தின்போது உங்களுக்கு அந்தக் கணத்தில் எதை அனுபவிக்கின்றீர்களோ அதுவே உங்களுடைய உண்மை/தம்மமாக இருக்கின்றது எனச் சொல்கிறார்கள். பத்துப் பேர் ஒரே நேரத்தில் ஒரு ஆசிரியரின் வழிகாட்டலில் விபாஸனா செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொருவரும் உணர்வது தனித்தன்மையானது. ஒருவரது அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தோடு ஒப்பிட நோக்கியதல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆக, ஒருவகையில் நாம் இந்த உடலும் மனமும் ஒன்றுமேயில்லாத வெற்றிடத்தை அறியத்தான் இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா என்ற கேள்வியும் நமக்குள் எழக்கூடும். ஆம், அந்த வெற்றிடத்தை நோக்கி நாம் நகரும்போது நமக்குள் புதுப்புது உலகங்கள் விரியலாம்.
அதைப் பார்க்க வேண்டும் என்றால் நாம் தரையில் நின்று நீச்சலடித்தால் எவ்வித பலனுமில்லை. கடலுக்குள் தயக்கமின்றி இறங்கத்தான் வேண்டும். சிலவேளைகளில் பரிநிர்வாணமடைதல் என்ற மறுகரையை அடையலாம்.

இல்லாதுவிட்டால் இன்னுமின்னும் பல பிறப்புக்களின் பின் , நமது மாணிக்கவாசகர் கூறியது போல  'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்/பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்/கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்/வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்/ செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்/எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,/ எம்பெருமான்' ஒரு தெளிவை நாம் எப்போதாவது ஒரு 'பிறப்பில்' பெறமுடியலாம். அதற்கான ஒரு விதையை விபாஸனாவைக் கற்பதன் மூலம் நீங்கள் விதைக்கின்றீர்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புக்களில் ஆசிரியர் வெவ்வேறு நேரங்களில் மூன்று மணித்தியாலங்கள் ஆசிரியரோடு இருந்து செய்ய வேண்டும். எனக்கு சிலநேரங்களில் கால் உளைந்து, முதுகு வலித்து இந்த ஒரு மணித்தியாலம் எப்போது முடியும் போல இருக்கும். மற்ற நேரங்களில் ஒரு மணித்தியாலம் இவ்வளவு விரைவாக முடிந்ததா என்ற மாதிரி முடிந்திருக்கும். ஆக நான் சரியாகத் தியானத்தில் ஆழ முடிகின்றதா என்பதற்கான அளவுகோல்களாக இவற்றை வைத்திருந்தேன்.

அதேவேளை எப்போதும் பெண்களின் மீது மனது குவிந்துகொண்டிருக்கும் எனக்கு எதிர்வரிசையில் பெண்கள் இருந்தபோதும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கின்ற குறுகுறுப்பு கடைசிநாள் வரை எழவில்லை. யாரோ வருகிறார்கள், வந்து அமர்கின்றார்கள், விபாஸனா நேரம் முடிந்தபின் எழுந்துபோகின்றார்கள் என்றளவில் பெண்களையும் சாதாரண மனிதர்களாக எடுத்துக்கொண்டேனே தவிர மறுபுறத்தில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்கின்ற பரபரப்பு எதுவும் எனக்குள் எழாததைக் கவனித்தேன். உலகிலே பெண்களின் நினைவுகள்/ஈர்ப்புகள் இல்லாது இருத்தல் கடினம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவனை விபாஸனா, 'அலறாதே மனமே சும்மா அடங்கிக்கிட' என்று அதட்டி விட்டிருந்தது போலும்.

*

இங்கே விபாஸனா கற்றுத் தரும் ஆசிரியர் கோயிங்கா மியான்மாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் பாட்டனார் இந்தியாவிலிருந்து வந்தவர். வசதி வாய்ந்த வணிகக் குடும்பத்தில் பிறந்த கோயிங்கா வர்த்தகத்தில் அவரது இளமைக்காலத்திலே சிறந்து விளங்கியிருக்கின்றார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளிலே அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தனது வணிகத்தை விஸ்தாரிக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றார்.

இந்துவாக பிறப்பால் வளர்க்கப்பட்ட கோயிங்கா இந்துமத ஆசார அனுட்டங்களில் தோய்ந்தொழுகியவர். ஒருமுறை அவருக்கு மிக்கிரேன் (migraine) கடுமையாகத் தாக்க, பல்வேறு சிகிச்சைகளை உள்ளூரில் பெற்றிருக்கின்றார். இரவுகளில் தூங்க முடியாத அவதியால் இறுதியில் வைத்தியர்கள் அவருக்கு மோர்பினை (Morphine) கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த தலையிடி தாங்கமுடியாது கோயிங்கா ஜேர்மனி, சுவிற்சிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று பல மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றிருக்கின்றார். ஆனால் எந்த வைத்தியராலும் இந்த கடும் தலைவலியை தீர்த்துவைக்க முடியவில்லை.

அப்போதுதான் அவரது நண்பரொருவர் விபாஸனாவிற்குச் சென்று பாருங்களேன அனுப்பி வைத்திருக்கின்றார். விபாஸனா புத்தத்தோடு சம்பந்தப்பட்டது, எப்படி அசலான இந்துவான நான் இதற்குப் போவது என்று கோயிங்காவிற்குத் தொடக்கத்தில் குழப்பம் இருந்திருக்கின்றது. ஒருவகையில் இந்து மதத்தில், புத்தர் தங்களின் பத்தாவது அவதாரம் என்று தனக்கு சிறுவயதில் சொல்லித் தந்தாலும், ஆனால் புத்தரின் தியான முறையைக் கற்றுச் சொல்வது ஏதோ மகாபாதகம் போல என்னை உணர வைத்தார்கள் என்று கோயிங்கா ஓர் உரையில் குறிப்பிடுகின்றார்.

கோயிங்கா இறுதியில் விபாஸனா பழக தனது ஆசிரியரிடம் போனபோது, நீங்கள் என்னிடம் விபாஸனா பழகலாம் என்று சொல்கின்ற அவரின் ஆசிரியர், 'நான் இதை எனது கடும் தலைவலி மாறும் என்பதற்காகவே பழகப்போகின்றேன்' என்று கோயிங்கா சொல்கின்றார். உடனேயே அவரின் ஆசிரியர், 'அப்படியெனில் என்னிடம் விபாஸனா பழகவேண்டாம்' என்று திருப்பியனுப்புகின்றார். விபாஸனா என்பது எந்த சிகிச்சைகளுக்கு உரியதல்ல, அப்படியான குணப்படுத்தல்களுக்காக வருவபர்களுக்கு விபாஸனா அதன் முழுப்பலனைத் தராது என்பது ஆசிரியரின் வாதம்.

என்கின்றபோதும் ஆசிரியரின் கனிவும், கருணையும் கோயிங்காவிற்கு வாய்த்ததால், இறுதியில் கோயிங்கா விபாஸனா பழகத் தொடங்குகின்றார். விபாஸனா பழகத் தொடங்கிய இரண்டாம் மூன்றாம் நாட்களிலே, சக விபாஸனா பழகுகின்றவர்கள், தமக்கு அங்கே ஒளி தெரிந்தது, இங்கே ஒளி தெரிந்தது என்று கூறவும், எந்த ஒளியும் தோன்றாத கோயிங்கா இது தன்னைப்போன்ற தந்திர மூளையுள்ள வணிகர்களுக்கு உரியதல்ல, நன்மக்களுக்கு மட்டுமே ஒளி தோன்றுமென விபாஸனாவை விட்டு விலகியோட முயற்சிக்கின்றார்.

அப்போதுதான் அவரோடு விபாஸனா ஒரு பேராசிரியப் பெண்ணொருவர் உங்களுக்கு ஒளி தோன்றாவிட்டாலும், நன்றாக உட்கார்ந்து விபாஸனா செய்கின்றீர்கள், இந்த பத்து நாள் வகுப்பிலிருந்து விலகவேண்டாம் என்று சொல்கின்றார். அதன் பிறகு நடந்தது கோயிங்கா என்னவாக மாறினார் என்ற வரலாறு நம்மனைவருக்கும் தெரியும்.

கோயிங்கா தனது பெரும்பாலான உரைகளில் தனது ஆசிரியரையும், இந்த பேராசிரியப் பெண்மணியையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார். இவர்கள் இருவரும் இல்லாதுவிட்டால் தான் தம்மத்தின் பாதையில் ஒருபோதும் நடந்திருக்க மாட்டேன் என்று நமக்குச் சொல்கின்றார்.

***

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 06

Thursday, September 10, 2026

 

இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம். தனியறையிலிருந்து பத்து நாள் உணவு உட்பட அனைத்துக்கும் எந்தக் கட்டணமும் நாம் செலுத்தத் தேவையில்லை.


எவ்வித பணமும் செலவழிக்காமல் இப்படி பத்து நாள் விபாஸனா அனுபவத்தை நீங்கள் எவ்வித புறச்சூழல் அழுத்தங்கள் இல்லாது அனுபவியுங்கள் என்று கோயிங்காவை ஆசிரியராகக் கொண்ட இந்த விபாஸனா நிலையங்கள் நமக்கு வழங்குவதுதான் எவ்வளவு அருமையானது.



இந்தவகையான இலவசமான தியான அனுபவம் இங்கு மட்டுமில்லை, கோயிங்காவை ஆசிரியராகக் கொண்டு உலகெங்கும் இயங்கும் 270 நிலையங்களிலும் இருக்கின்றன. இலங்கையில் ஏழுக்கும் மேற்பட்ட விபாஸனா நிலையங்களும், தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து விபாஸனா நிலையங்களும் இயங்குகின்றன என நினைக்கின்றேன்.

*
எமக்கு தங்குமிடம், உணவு தருவது இலவசம் மட்டுமில்லை, இங்கே வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள், நமக்கு உணவு தயாரித்துத் தருபவர்கள், கட்டடங்களின் உட்கட்டமைப்பு/பராமரித்தல்/சுத்தம் செய்தல் எனச் செய்பவர்கள் அனைவருமே தமது சேவையை இலவசமாகவே வழங்குகின்றனர்.

இப்படியொரு இலவசமான அமைப்பு எப்படி தொடர்ந்து இயங்க முடியும் என்பது 'வியாபாரக் காந்தங்களுக்கே' வியப்பளிக்கும் ஒரு விடயமாகும்.

ஆசிரியர் கோயிங்கா இப்படி விபாஸனா நிலையங்களை முதலில் இந்தியாவில் தொடங்கியபோது, 'இங்கே பலர் ஒழுங்கான உணவில்லாது இருக்கின்றனர். இப்படி இலவசமாக உணவும் இடமும் கொடுக்கின்றோம் என்றால் உணவுக்காகத் தான் வந்து நிரம்புவார்கள், தியானம் செய்ய வரமாட்டார்கள்' என்று கோயிங்காவைப் பயமுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் கோயிங்கா, 'ஒருவர் காலை 4 மணிக்கு எழும்பி, இரவு 9மணிவரை இருந்து கடும் தியானம் செய்யும் நிகழ்ச்சி நிரல் இருக்கும்போது, அப்படி உணவுக்காக மட்டும் வருகின்றார்கள் என்றால் ஒன்றிரண்டு நாளில் இங்கிருந்து ஓடிவிடுவார்கள்' எனச் சொல்லி வெற்றிகரமாக விபாஸனா நிலையங்களை இந்தியா, மியான்மாரில் தொடங்கியிருக்கின்றார்.

சில காலத்துக்குப் பிறகு இதே 'இலவச' மாடல்களை மேற்குலகிற்குக் கொண்டு வந்தபோது, மேற்கத்தையவர்கள் கோயிங்காவிடம், கீழைத்தேயத்தில் இப்படி தன்னார்வ சேவை இயங்க வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மேற்கில் இதெல்லாம் வேலைக்கு உதவாது' என்று சொல்லியிருக்கின்றார்கள். கோயிங்காதான் பரவாயில்லை, முயன்று பார்ப்போம் என்றிருக்கின்றார்.

*

நான் சென்ற இந்த நிலையம் 20 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றது. மாதம் இரண்டு தடவைகள் 10 நாள் விபாஸனா என்று வருடம் முழுதும் வெயில், மழை, பனி என்று பாராது தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.

இத்தனைக்கும் கோயிங்கா தனது விபாஸனா தியான முறைகளில் நம்பிக்கை இல்லாதுவிட்டால் இதைச் செய்திருக்கவே முடியாது. ஏதோ ஒருவகையில் விபாஸனா மூலம் பலர் பயன்பெறுவார்கள், அவர்கள் திரும்பத் திரும்ப இந்த விபாஸனா நிலையங்களுக்கு வருவார்கள், தங்களின் தன்னார்வல சேவையை வழங்குபவர்கள், நிதியுள்ளவர்கள் நிதி வழங்கி நிலையங்களை விஸ்தரிப்பார்கள் என்று உறுதியாக நம்பியிருக்க வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக எந்த அமைப்பினதோ/தனிமனிதர்களினதோ நிதி வழங்கலில் தங்கியிருக்காது விபாஸான கற்ற/கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பில் இந்த விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன என்று அறிந்தபோது உண்மையில் மனம் குளிர்ந்து நின்றேன்.

பத்து நாள் விபாஸனாவிற்கு வருகின்றவர்கள், பத்து நாள் வகுப்பையும் முடித்தால் மட்டுமே, விரும்பினால் நன்கொடைகள் வழங்கலாம். நான் இந்த விபாஸனாவிற்குப் போகும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கலாம் என்று நினைத்துத்தான் போனேன்.

ஆனால் பத்து நாள் விபாஸனாவில் பங்குபற்றியதன் பிறகு நினைத்ததைவிட இரண்டு மடங்கு தானம் செய்துவிட்டு வந்தேன். அப்படிக்கு இதன் இயங்குநிலையும், நம்மை அரவணைத்து விபாஸனா சொல்லிக் கொடுக்கும் நெகிழ்ந்த தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது.

*
கோயிங்கா இந்த பத்துநாள் விபாஸனா அமைப்பை, எப்படி அசலான புத்த பிக்குகள்/பிக்குணிகள் தமது நாளாந்த வாழ்வில் வாழ்வார்களோ அப்படித்தான் வடிவமைத்திருக்கின்றார். துறவிகள் தம்மத்தின் பாதைக்குச் செல்வதற்கு அனைத்தையும் துறந்து போவதைப் போல குடும்பவாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களால் முடிவதில்லை.

கடைசிவரை குடும்பவாழ்வில் இருந்த கோயிங்கா, அப்படி இருக்கக்கூடியவர்களும் தம்மத்தின் பாதையில் நடந்து பரிநிர்வாணம் அடையவோ அல்லது அதை நெருங்கிச் செல்லவோ இந்த வாழ்க்கைக்காலத்தில் முடியும் என்பதை இப்படியான விபாஸனா கற்றுக்கொடுப்பதன் மூலம் நமக்குச் சொல்ல விழைகிறார்.

தொடக்ககாலத்தில் கையில் நிதி இல்லாத நிலையில், இந்தியாவில் விபாஸனா பழக வந்தவர்களிடம் வகுப்புக்களுக்காக நிதி அறவிட்டிருக்கின்றார். அப்படி பணம் வாங்கி விபாஸனா கற்றுக்கொடுத்தாலே அது தம்மத்தின் பாதை இல்லை. அவ்வாறு இருக்கமுடியாது என்று முற்றிலும் இலவசமாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார் கோயிங்கா.

மேலும் இல்லறவாழ்வில் இருக்கும் நாம் துறவிகளின் வாழ்வை இந்த பத்து நாட்களில் வாழ்ந்து பார்க்கப் போகின்றோம் என்றால், துறவிகளின் முக்கிய பண்பு தானம் கேட்பது. அதாவது உணவுக்காக தெருவில் இறங்கி பிச்சையெடுப்பது. அப்படி தானம் கேட்பதை, ஒருவரிடம் பணத்தை அறவிட்டு உணவைக் கொடுப்பதால் அடையமுடியாது.

நமக்கு இந்த விபாஸனா நிலையங்களில் யாரோ ஒரு முன்னாள் விபாஸனா மாணவர் கொடுத்த நிதியின் ஊடாக உணவென்ற தானமாக வழங்கப்படுகின்றது. ஆக நாம் யாரிடமோ துறவிகள் போல (இரந்து கேட்டு) உணவைப் பெற்றுச் சாப்பிடுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்கின்றோம்.

*
அதுபோலவே இந்த நிலையங்களில் எவரும் மற்றைய புத்த மடாலயங்கள் போல நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை. எல்லாமே மாறும் என்று புத்தர் சொல்லியதுபோல இங்கே வருபவர்களைப் போல, அதைப் பின் நின்று நடத்துபவர்களும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுடரேந்திய தொடரோட்டம் போல இந்த நிலையங்கள் உலகெங்கிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்றைய புத்த மடலாயங்களில் அநேகமாக நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புத்த பிக்குகள்/பிக்குணிகளாலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் எந்த ஒரு புத்த மடாலயமும் இப்படி இலவசமாக meditation retreats செய்வதுமில்லை. அதற்கான sustainability அவர்களிடம் இருப்பதுமில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான சூழலில் கோயிங்காவில் இந்த விபாஸனா நிலையங்கள் உலகெங்கும் (270) விபாஸானவை இலவசமாக நமக்கு வழங்குகின்றன என்பதை நினைத்தால் வியப்பாய்த்தான் இருக்கின்றது.

மேலும் நான் போன விபாஸனா நிலையத்தில் புத்தரின் சிலைகளோ/படங்களோ மட்டுமில்லை, கோயிங்காவின் எந்த
புகைப்படமோ/அடையாளப்படுத்தல்களும் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  கோயிங்காவே தனது உரைகளில் ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு அதில் பெயரைப் போடுவது எவ்வளவு அபத்தம் என்று எள்ளல் செய்து கொண்டிருப்பார். அது தன்முனைப்பின் (Ego) உச்சமே தவிர வேறெதுவும் இல்லை என்று ஞாபகப்படுத்துவார். ஆகவே புத்தரை மட்டுமில்லை கோயிங்காவை நினைவுபடுத்தும் எவற்றுக்கும் இங்கு இடமில்லை. தியான மணடபமே சும்மா 'வெறிச்சோடி'த்தான் எல்லாத் திசைகளிலும் இருக்கும்.

ஆக, நீங்கள் இந்த விபாஸனா நிலையத்தில் உலாவும்போது மத அடையாளங்கள் எதுவுமற்ற ஏதோ ஒரு சாதாரண விடுதிச் சூழலில் நிசப்பத்தோடு வாழ்கின்றீர்கள் என்று மட்டுமே உணர்வீர்கள்.

அதனால்தான் இங்கே நானுட்பட,  குரு நானக்கை வழிபடும் தலைப்பாய் கட்டிய சீக்கும், அல்லாஹ்வை பின்தொடரும் முஸ்லிமும், கைகள் முழுதும் கயிறுகள் கட்டிய இந்துவும் என அனைவரும் ஓர் அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டோம் என்ற பதற்றமில்லாது மிக இயல்பாக விபாஸனாவைப் பழகிக் கொண்டிருந்தோம்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 05

Monday, September 07, 2026

 

விபாஸனாவில் இருந்தபோது நான் முற்றுமுழுதாக அதனோடுதான் இருந்தேன் எனச் சொல்ல முடியாது. ஆனால் புறச்சூழல் அமைதியாக்கப்பட்டதால் பெரும்பாலும் சிக்கலான யோசனைகள்/எண்ணங்கள் இல்லாது இருந்தேன் எனச் சொல்வேன்.


தொடக்கத்தில் சில நினைவுகள்/காட்சிகள்/உருவங்கள் மிகத் தீவிரமாக மனதில் வந்து கொண்டே இருந்தன. பிறகு தியானம் செய்யாது அறையினுள் ஓய்வெடுத்துக் கொண்டபோது கூட மிகச் சிறிய உலகிலே எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
Uploaded Image

நான் போன விபாஸனா நிலையம் 140 ஏக்கர் விஸ்தாரமானது என்பதால் நிம்மதியாக உலாவுவதற்கு சிறு காடுகள் இருந்தன. சிலவேளைகளில் தியானம் செய்துவிட்டு காட்டுக்குள் உலாத்தும்போது அவ்வளவு அற்புதமாக சூரியவொளியில் மினுங்கிய மரங்களும், சிறுசெடிகளும் தெரிந்தன. நான் இந்தக் காட்டுக்குள் மிக அமைதியாக இருந்து இரசிக்கும் இடத்தை இந்த நாட்களில் கண்டெடுத்திருந்தேன்.

அடடா எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இந்தச் சூழல் இருக்கின்றதே, நாளையும் இங்கு வரும்போது இருக்குமா என்று எதிர்காலத்துக்குப் பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்தேன். அடுத்தடுத்த நாளில் மழையோ, பெரும் நுளம்புப்படையோ (கொசுவோ) வந்தால் இந்த இதமான சூழல் இருக்கப்போவதில்லை, இப்போது இந்தக் கணத்தில் இந்த இயற்கை என்னவாக அமைகின்றதோ அதை இரசிப்போமே என எண்ணத்தை நிதானமாக்கிக் கொள்ள முயற்சிப்பேன்.

இரவுகளில் ஒரு மணித்தியாலத் தியானத்தின்பின், ஒளிபரப்பாகும் கோயிங்காவின் உரைகள் அவ்வளவு நெகிழ்வாக இருக்கும். மூன்றாம் நாள் கண்ணீர் துளிர்க்க மனது மிக இலேசாவதை உணர்ந்தேன். கவனிக்க, அப்போது அசலான விபாஸனா தொடங்கியிருக்கவே இல்லை.

நாம் ஆனாபானா தியானத்தையே பழகிக் கொண்டிருந்தோம். நான் நெகிழ்வாக இருப்பதை என் உதவி ஆசிரியரிடம் சென்று, எந்தக் கேள்விகளையும் கேட்காது நான் மிக எடையற்று உணர்கின்றேன், அதற்கு நன்றியெனச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று உறங்கினேன்.

*

ஆஸ்மாவின் நிமித்தமோ அல்லது காலநிலைக் காரணமாக நான் கடந்தமாதங்களாக Hives ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இரவுகளில் தோலின் மீது வரும் ஒவ்வாமை மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். விபாஸனாவில் இருந்தபோது, ஒருவருக்கு மனவழுத்தம் வந்துவிட்டால், அதை ஓடிப்போய் விடு என்று சொல்லி அதனோடு சண்டை பிடிக்காமல், நானும் நீயும் ஒரேயிடத்தில் சச்சரவு செய்யாமல் நட்பாக இருந்தால் மனவழுத்ததோடு சேர்ந்து வாழத் தொடங்கிவிடலாம் என்பதுபோல, நான் Hives யோடு ஒரு சமரசத்துக்கு இந்தப் பொழுதுகளில் வந்துவிட்டிருந்தேன்.

எந்த மாத்திரையைப் போட்டாலும், நீ என் மேனி மீது கோலம் போடத்தான் செய்வாய், ஆனால் கோலத்தை எனக்கு காயப்படுத்தாமல்/ கடிக்காமல் போடு என்று அதனோடு சமாதானத்துக்கு வந்திருந்தேன்.

இப்படி உடன்படிக்கை வராது விட்டிருந்தால் என்னால் ஒழுங்காக கொஞ்ச நேரத்துக்கேனும் நித்திரை கொள்ளமுடியாது போயிருக்கும்.

விடிகாலை நான்கரை மணிக்கு தியானத்துக்குப் போகும் வழியில் நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவ்வளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் எனக்குப் பிடித்துப் போனது. ஆனாபானா தியானத்தின்போது உடலை அவ்வப்போது அசைத்துப் பார்க்க விட்டவர்கள், விபாஸனா தியானம் தொடங்கியவுடன் எங்களை அந்த ஒவ்வொரு மணித்தியாலமும் உடலை அசைக்காது, வெளியே போகாது அப்படியே சிலைபோல இருக்கவேண்டுமென உறுதிப்பாட்டை எடுக்கச் சொல்லியிருந்தனர்.

எனக்கு வலது முழங்காலை மடக்கி வைத்ததில் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அந்த வலியைத் தாண்டி உள்ளே மனதைக் குவிக்க முடிந்தது. வலி ஒரு பொருட்டன்று போல அது தன்பாட்டில்  குழந்தை போல கதறிக் கொண்டிருந்தது. அதற்கு கவனம் கொடுத்தால்தான் கூட வலிக்கும். ஆக அது குறித்து யோசிக்காது வலியை வலியாக மட்டும் கடந்து போகப் பழகியிருந்தேன்.

என்கின்றபோதும், நான் தியானத்தின்போது Posture ஐ மாற்றாதபோதும் என் முள்ளந்தண்டை அவ்வப்போது வெவ்வேறு கோணத்தில் மாற்றிக் கொள்ளச் செய்தேன். அதில் நான் மூன்று வெவ்வேறு நிலைகளில் என் முதுகைச் சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு கோணம் எல்லாவற்றையும் துறந்து refugee எடுப்பது. பிறகு முள்ளந்தண்டை நன்றாக நிமிர்த்துவேன்.

இப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு தியானம் செய்ததை அறியாத ஒரு வெள்ளைக்காரர் (எனக்குப் பின்னால் இருந்தவர்), இந்த விபாஸனா வகுப்புகள் முடிந்த பத்தாம் நாள் என்னிடம் வந்து, 'உன்னைப் பார்த்தால் நீ என் வயதொத்தவனாக இருப்பாய் போலத்தான் தெரிகின்றது. ஆனால் எப்படி 90 பாகையில் உன் முள்ளந்தண்டை நிமிர்த்தி வைத்திருந்தாய். எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. என்னால் அது முடியவில்லை' என்றார். 'இல்லையே நானும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன். சிலவேளைகளில் எங்களுக்குச் சிறுவயதிலே சப்பாணி கட்டி அமர்வது இலங்கையில் சொல்லித்தந்ததால் அப்படி இருந்து முதுகை நிமிர்த்தி வைப்பது எளிதாக இருந்திருக்கலாம்' எனச் சொல்லி நான் அவரை ஆறுதற்படுத்தினேன்.

இதற்கிடையில் எனக்குப் பின்னே இருந்த ஒருவர் தடிமனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு என் சுவாசத்தை விட அவர் 'ஜலதோசத்தோடு' சிரமப்பட்டு மூச்சு இழுப்பதுதான் தெள்ளியதாகக் கேட்டது. முதலில் இவரென் தியானத்தைக் குழப்புகின்றாரே என்று கொஞ்ச எரிச்சல் வந்தாலும், பிறகு அவரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அத்தோடு அவர் நல்ல ஆகிருதியான ஆள். அவரால் கால்களை மடக்கியெல்லாம் உட்கார முடியாது. தேவாலயத்தில் முட்டுக்கால் இட்டு நிற்பதுபோல அவர் முழங்காலில் நிற்க அவரின் மூச்சு என் முதுகோடு 'காதோடு தான் ஒரு கதை சொல்வேன்' போல உரசிக் கொண்டு போகும்.

அவருக்கு அதற்குப் பிறகு ஒருகட்டத்தில் இயலாது போய், ஏழோ எட்டாவது நாளோ முற்றாக விபாஸனாவிலிருந்து விலகி வீடு போயிருந்தார். அவரின் தடிமன் ஒருபக்கம் என்றால், எனக்கு வலதுபக்கம் இருந்தவருக்கு உலர் இருமல் வரத்தொடங்கிவிட்டது. அந்த உலர் இருமலோடு எனக்கு நன்கு பரிட்சயம் இருக்கின்றது. நான் இங்குள்ள ரெயினில் இப்படியான இருமலோடு வேலைக்குபோகும்போது மற்றவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்றெல்லாம் இரெயினில் இருந்து இறங்கி அது சரியாக வரும்வரை அடுத்த ஸ்டேசனில் இருந்து இருமலை சீராக்கி விட்டெல்லாம் போயிருக்கின்றேன். அதுவும் இங்கு இருக்கும் GO Train மேற்றளத்தில் எவரும் பேசாது அமைதியாக இருக்க வேண்டும். அப்படியான சூழலில் நான் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

தடிமன் ஆசாமியைப் போல, இருமல் ஆசாமியின் இருமலோடும் நான் நட்பு கொள்ளத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் இருமலைத் தாண்டி மனதை உள்ளே குவிக்கவும் பழகியிருந்தேன். இன்னொருபக்கம் ஆசிரியர் கோயிங்கா, எப்பொழுதும் எதிர்ச்சக்திகளை உருவாக்கிவிடாதீர்கள், பிறகு சம்ஷாராக்கள் உங்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு இருக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்.

நோய்த்தொற்றுள்ளவர்களை நேசிக்க முடிந்தாலும், பின்னே/பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நோயோடு சமர் செய்தபோது அடுத்து நோய்க் காவியாக நான்தான் ஆகப் போகின்றேனே என்ற பயம் வந்தது.
அப்படி வந்தால் நான் இருமியோ தும்மிக்கொண்டோ தியான மண்டபத்துக்கு வரப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. அப்படியாயின் என்னால் இந்த 10 நாள் விபாஸனாவை முழுதாகப் பூர்த்தி செய்யாமல் போய்விடுமே என்ற எண்ணமும் அவ்வப்போது தலைதூக்கியது.

*
இப்படியான 10 நாள் தியான வகுப்புக்களுக்கு, ஏற்கனவே தியானத்தைத் தெரிந்துகொண்டு போவது நல்லதா அல்லது Beginner's mind  போல ஒன்றையும் தெரியாமல் போவது அதிக பலனைத் தருமா என்ற கேள்வியொன்றும் எனக்குள் ஓடியது.  ஏனெனில் ஏற்கனவே கொஞ்சம் தியானம் செய்தும், நிறைய தியானம் குறித்து வாசித்தும் இருந்ததால் என் பகுத்தறிவு மனம் ஆசிரியர் கோயிங்கா சொல்லும் விடயங்களைத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

இது கூட பரவாயில்லை. நான் பதின்மங்களில் வாசித்த பாலகுமாரனின் தியான அனுபவங்களும் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பாலகுமாரன் விசிறி சாமியாரை (யோகி ராம்சுரத்குமார்) சந்தித்து அவரோடு பெற்ற தியான அனுபவங்களை ஒருவித மாயயதார்த்தபாணியில் எழுதியிருப்பார். விசிறி சாமியார் அதிர்வுகளை உருவாக்கி தனக்கு உடலுக்குள் அந்தச் சக்கரம் இந்தச் சக்கரம் சுழன்றது, நெற்றியில் நீலச்சுடர் தோன்றியது என்றெல்லாம் அவர் எழுதியதாக நினைவிருக்கிறது.

நானும் தியானத்தில் உடல் நோவு காணும்போது, இப்படியான நீலச்சுடர் நெற்றியில் சுடர்கின்றதா என்று கனவு காணத்தொடங்குவேன். ஒருநாள் உண்மையாகவே நடு முள்ளந்த்தண்டில் இருந்து ஏதோ ஒன்று ஊரத்தொடங்கியது. அது அப்படியே மேலே மேலே சென்று என் பிடறியை ஒட்டியது. அடடா இந்த ஏழாம் நாளிலே எனக்கு உடலில் சக்கரங்கள் எல்லாம் சுழலப்போகின்றதே என்று மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

முதலில் இப்படி ஊர்ந்துதான் சக்கரங்கள் ஏழும் மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தில் வரை சுழலப்போகின்றது என்று நினைக்க இந்த ஊர்தல் நிலை பின்னந்தலையில் போய் உச்சந்தலைக்குப் போகாது சட்டென்று தலையின் வலதுபக்கமாக திசை மாறத் தொடங்கியது.

அன்றாடத்தில்தான் நான் கோணல்காரன் என்றால், சக்கரங்களையும் கடவுள் திசைமாற்றி கோணலாக மாற்றிவிட்டாரோ என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லாவிட்டால் இந்தப் பரவச ஊர்தல் நிலை உச்சந்தலையில் அல்லவா போய் முடிந்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் யோசிக்கத்தான், வலதுபக்க தலையில் அதிகம் ஊர்வது, இது சக்கரத்திற்கான அறிகுறி அல்ல, ஒரு பூச்சி என்பது தெரிந்தது.

இந்த 'அற்புத நிலை' நிகழ்வதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்ந்து கொண்டிருந்தது. நான் வெளியே காயப்போட்டிருந்த என் உடுப்புகளை இந்தத் தொடர்ச்சியான மழையினால் வெளியிலே விட்டிருந்தேன். பிறகு வெயில் வந்தவுடன் அது நன்கு காய்ந்தவுடன் எடுத்துக் கொண்டு வந்து அணிந்திருந்தேன். அந்த இரண்டு நாட்களில் இந்த பூச்சிப்பிள்ளையார் என் ஆடைக்குள் புகுந்திருக்கின்றார். நான் ஒழுங்காய் உதறிப்போடாததால் என் தியான நேரத்தில் அவர் நான் காட்டுக்குள் உலாப்போவது போல உலாத்தத் தொடங்கியிருந்தார்.

கடைசியாக சுழலும் சக்கரத்தைத் தலையில் இருந்து தட்டி விழுத்தினேன்.

என் நண்பர்களுக்கு மட்டுமில்லை, புத்தருக்குக் கூட என்னை சக்கரங்கள் சுழல்வதாக கற்பனை செய்ய, கொஞ்ச நேரம் விடக் கூட மனம் வரவில்லையே என்று என் விதியை நொந்துகொண்டேன்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 04

Tuesday, September 01, 2026

 

விபாஸனா என்பது புத்தரால் அவரின் காலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் எப்படி புத்தம் இந்தியாவில் அதன் அடிச்சுவடுகள் இல்லாது அழிந்துபோனதோ, அவ்வாறே இந்த தியான முறையும் காணாமல் போயிருந்தது. புத்தரின் போதனைகள் அசல் வடிவத்தில் மியான்மார் (பர்மா), இலங்கை போன்ற இடங்களில் இருந்தாலும் விபாஸனா ஒரு 'மறைந்துபோன பிரதி'யாக காலத்தில் உறைந்து கிடந்திருக்கின்றது.


அதிஷ்டவசமாக மியான்மாரில் இந்தியாவில் இருந்து சென்று புத்தமும் விபாஸனாவும் அதன் அசல்தன்மையோடு ஒரு சிறுவட்டத்தில் தொடர்ச்சியாக காலம் காலமாக எடுத்து வரப்பட்டிருக்கின்றது. அப்படி விபாஸனா கற்பிக்க சிறுவட்டத்தில் இருந்த ஆசிரியரிடமிருந்து எமது விபாஸனா ஆசிரியர் கோயிங்கா தியானத்தைப் பழகியிருக்கின்றார்.




ஒவ்வொரு நாள் மாலையிலும் (ஏற்கனவே இப்படி 10 நாள் விபாஸனா வகுப்புக்களில் பதிவு செய்யப்பட்ட) கோயிங்காவின் தம்ம போதனைகள் நடக்கும். ஒருவகையில் இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள் என்பதற்கான விளக்கமும், நாளைய வகுப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியும் அதிகம் கோயிங்கா உரையாற்றுவார்.

திருப்பத் திரும்ப அவர் நமக்கு நினைவுபடுத்துவது, அனுபவ நிலையில் இந்த தியானத்தை உற்றுக் கவனியுங்கள். இது ஒரு 'அறிவுஜீவு கொண்டாட்டம்' இல்லை. மேலும் இந்த விபாஸனாவை ஒரு மதத்துக்குள்ளோ, ஒரு கல்ட்டுக்குள்ளோ அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால் அது ஒருபோதும் அசலான விபாஸனா இல்லை.

மனிதர்கள் துன்பத்துக்குள் உழல்வது எல்லோருக்கும் பொதுவான என்றால், அந்தத் துன்பத்தை விளங்கி வெளியே வர முயற்சிப்பதும் 'யூனிவர்சலாக' இருக்க முடியுமே தவிர அதையொரு வட்டத்துக்குள் அடக்கிச் சொல்லிக் கொடுத்தால், நீங்கள் ஒருபோதும் உங்கள் துயரங்களிலிருந்து விடுபடமுடியாது மட்டுமில்லை, இந்த விபாஸனாவால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்று தொடர்ச்சியாக தனது தம்ம உரைகளில் கோயிங்கா சொல்லிக் கொண்டே இருந்தார்.

*
விபாஸனா தியானம் பழகுவதற்கு சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவர் பரிநிர்வாணமடைய இப்படிப்பட்ட நிபந்தனைகள் தேவையா என்றால், அப்படி ஒரு கட்டாயமும் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்கள் தமது பழக்கப்பட்ட வட்டங்களில்  (habit patterns) இருந்து வெளியேறி விபாஸனாவுக்குள் நுழைவதற்கு சில முன்நிபந்தனைகள் அவசியம் என்று கோயிங்கா வலியுறுத்துகின்றார்.

அதில் முதலாவது புத்தர் கூறிய பஞ்ச சீலம்: கொல்லாமை, திருடாமை பிறரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமை, பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை போன்றவையாகும்.

நீங்கள் நுட்பமாக கவனித்தீர்கள் என்றால், அதற்காக சூழலைத்தான் எங்கள் அலைபேசிகளை அணைக்க வைத்து, எதையும் பேசாத மெளனத்துக்குள் அமிழ்த்தி, எமக்குரிய உணவைத் தந்து எம்மை விபாஸனாத் தியானத்துக்குள் இங்கே அழைத்துச் செல்கின்றார்கள் என்பது புரியும்.

ஒருவர் இந்த விபாஸனா நாட்களில் எதையும் பேசாமல் இருக்கும்போது, எப்படி பொய் பேச முடியும்? உங்களுக்கான உணவு வழங்கப்படும்போது நீங்கள் எப்படி கொல்லப் போகின்றீர்கள். உங்களுக்கான தனித்த அறைக்குள்ளும், பொது தியான மண்டபத்திலும் இருக்கும்போது எப்படி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடமுடியும்?

மேலும் எமக்கு தனிப்பட்ட அறைகள் தரப்பட்டாலும் அவை எதற்கும் திறப்புக்கள் இருப்பதில்லை. எப்போதும் எவரும் திறந்து நுழையமுடியும். அது நாம் பிறரின் பொருட்களை திருட  சந்தர்ப்பம் இருந்தாலும் திருடாதிருப்பதற்கு நம்மை நெறிப்படுத்துவது.

ஆக இவ்வாறாக சீலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றது. சீலத்தின் பின் சமாதி, அதன் தொடர்ச்சியில் பஞ்ஞ என்கின்ற விபாஸனாவின் ஆழ்நிலை சொல்லித் தரப்படுகின்றது.

கோயிங்காவின் சொற்களின்படி இந்த சீல, சமாதி எல்லாம் புத்தரின் காலத்துக்கு முன்னரே இருந்தன. புத்தரின் அசல் கண்டுபிடிப்பு என்றால் அது பஞ்ஞ மட்டுமே.

அதாவது பற்றறுத்தல் என்கின்ற ஆழ்நிலைக்குப் போவது அல்லது 'சம்ஹாரா' எனப்படுவதை அடிவேரிலிருந்து அகற்றுவது எனச் சொல்லலாம்.
இதை புத்தர் பிற உயிர்களுக்கு அளிக்கப்படாத மனிதவுடல் என்கின்ற அரிய சாதனத்தின் மூலம் கற்றுக்கொள்ளச் சொல்கின்றார் ((within frame work of body). அதாவது உடலின் உணர்வுகள் என்கின்ற தளத்தில் வைத்து நமது புதிய சம்ஹாரக்களையும், அடியில் புதையுண்டு கிடக்கும் சம்ஹாரக்களையும் முற்றாக இல்லாதொழிப்பது.

அனுபவத்தளத்தில் இவற்றைப் புரிந்து கொள்ளுதல் முக்கியமே தவிர  இப்படி அறிவுத்தளத்தில் விளங்கிக் கொண்டாலே நாம் விபாஸாவில் இருந்து வெளியேறிவிடுவோம் என்பதையும் கோயிங்காவும் எச்சரிக்கின்றார். ஆகவே இந்த விபாஸனா தியான விளக்கங்களில் இருந்து இப்போதைக்கு நாமும் விலகி விடுவோம்.

*

மதியம் பன்னிரண்டுக்குள் சாப்பிட்டதன் பின், என்னைப் போன்ற புதியவர்களுக்கு இரக்கப்பட்டுத்தான் என்னவோ மாலையில் தேநீரும், பழமும்  இங்கே தந்தார்கள். நீங்கள் விபாஸானாவுக்கு இரண்டாவது முறை வந்தால் அதுவும் இல்லை.  

எனது கடும்பயமாக இருந்த, இந்த மதியத்துக்குப் பிறகு எப்படி  இரவு உணவில்லாது மட்டுமில்லை,  இடையிடையில் கொறிக்கவும் எதுவும் இல்லாது எப்படி  இந்த நாட்களில் இருப்பேன் என்பதை  மிக எளிதில் இதன் பின்னரான நாட்களில் கடந்துவிட்டேன்.

அதற்கேற்றமாதிரி விபாஸனா நிகழ்ச்சிநிரல் இரவு 9 மணி வரை இருந்ததாலோ அல்லது வேறு எதனாலாவோ என்னால் பசியைப் பெரிதாக உணர முடியவில்லை. தொடக்க நாட்களில்  பின்னர் பசிக்குமே என்கின்ற பயத்தில் காலை, மதிய உணவுகளை அதிகம் எடுத்த நானே, பின் வந்த நாட்களில் கிட்டத்தட்ட அரைவாசி உணவு எடுக்குமளவுக்கு வந்திருந்தேன்.

மேலும் இந்த பத்து நாட்களில் உடலுக்கு பெரிதாக வேலையில்லை. மனது மட்டும் தீவிரமாக இயங்கியதால், இந்த உணவே போதும் போதுமென்ற அளவுக்கு திருப்தியாக இருந்தது. அதேவேளை குறைந்த தெரிவுகளாயினும் உணவை அப்படி இரசித்து உருசித்துச் சாப்பிட முடிந்தது. நாம் சாதாரண வாழ்வில் மூன்று நான்கு கறிகளுடன் சாப்பிடுவது என்பது ஒருவகை 'ஆடம்பரம் (luxury) போலவும் தோன்றச் செய்தது. இப்படியான எளிய உணவுடனும்  இனி வாழ முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்க்க இந்த விபாஸனா நாட்கள் கற்றுத் தந்திருந்தன.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 03

Friday, August 28, 2026

 

நாள்  01
ஜூலை 23 - வியாழக்கிழமை


***

முதல் நாளிரவு தூங்கினேனா இல்லையா என்ற குழப்பத்தோடு விடிகாலை நான்கரை மணிக்கு  தியான மண்டபத்துக்கு நடந்து செல்லத் தொடங்கினேன். நான் சென்ற இந்த விபாஸனா நிலையத்தில் அண்மையில் தீ விபத்து நிகழ்ந்து இதன் முதன்மைத் தியான மணடபம் மூடப்பட்டிருந்தது.

தம்மம் என்பது ஒருவகையில் நடைமுறை வாழ்க்கையில் எதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்ப்பதுதானே.
ஆகவே தீ விபத்துக்காக முழு விபஸன்னா நிலையத்தையும் மூடி வைக்காமல், உணவு பரிமாறும் இடத்தின் அரைவாசியைத் தற்காலிக தியான மண்டபமாக மாற்றி அமைத்திருந்தனர்.

Uploaded Image

விபாஸனாப் பயிற்சியின் நாளாந்த அட்டவணை காலை நான்கரை மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பதுவரை இருக்கும். இரவு பத்து மணிக்குள் அறையின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு அனைவரும் உறங்கப் போக வேண்டும்.

நாளாந்த விபாஸனாப் பயிற்சியில் மூன்று வெவ்வேறு தியான அமர்வுகளில் உங்களோடு ஆசிரியர் கட்டாயம் வந்தமவர்வார். மற்ற நேரங்களில் ஆசிரியரின் ஆணைப்படி தியான மண்டபத்திலோ அல்லது உங்கள் அறையிலோ தியானத்தைத் தொடரமுடியும்.

காலை எட்டு மணி, பின்னேரம் இரண்டரை மணி, மாலை ஆறு மணி என இந்த மூன்று நேரத்திலும் கட்டாயம் ஒரு மணித்தியாலம் ஆசிரியரோடு தியானத்தில் உட்கார வேண்டும். இந்த நேரத்தில் கிளாஸுக்கு கட்டடித்து அறைக்குள் முடங்கினால், உங்கள் கதவைத் தட்டி எழுப்பிக் கூட்டிப் போவார்கள்.

நான் ஒரேயொரு முறை மட்டும் எட்டு மணி தியான வகுப்பை மறந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, கதவை வந்து தட்டி, உடல் நலத்துக்கு ஏதும் கேடா என்று கேட்டு அழைத்துச் சென்றிருந்தனர்.

*

விபாஸனாவில் காலை நான்கரையிலிருந்து ஆறரை வரை நீங்கள் தனியே தியானத்தில் அமரலாம். மற்ற விபாஸனா மையங்களில் நடைமுறையில் இது இருக்கின்றதா எனத் தெரியாது, ஆனால் நாங்கள் தியானத்தில் கண்ணை மூடியிருக்கையிலே எங்கள் ஆசிரியர் தினம் அமைதியாக ஐந்தரை மணிக்கு வந்து அமர்ந்து கொள்வார். ஆனால் எந்த உரையாடலும் இருக்காது.

எட்டு மணி, இரண்டரை மணி, ஆறு மணி வகுப்புக்கள், விபாஸனாவின்  ஆசிரியர் கோயிங்காவின் வழிப்படுத்தல்கள்/
உரைகள்/பாளி பாடல்களுடன் தொடங்கும் (ஆசிரியர் கோயிங்கா பற்றி தனியே ஒரு பகுதியை எழுதப்போவதால் அவரைப் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்துக் கொள்கின்றேன்). இன்று உலகெங்கும் 270 இற்கும் மேலான விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அட்டவணைப்படி, ஆசிரியர் கோயிங்காவின் நேரடி உரைகள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன.

எனக்கு இந்த விபாஸனா வகுப்புக்களில் முதல் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஆசிரியர் நேரே இருக்காது அவரது குரல் மட்டும் இவ்வளவு எமக்குள் ஊடுருவித் துளைக்குமா என்பதுதான். எங்களுக்கு ஒரு பெளதீகமான ஆசிரியர் இருந்தாலும் (ஆண்களின் பகுதியில் ஆண் ஒருவர், பெண்களின் பகுதியில் பெண் ஒருவர்) அவர்கள் தியானப் பயிற்சிகள் எதையும் தம்மளவில் நடத்துவதில்லை.

அவர்களை உதவி ஆசிரியர்கள் (Teaching Assistants) என அழைத்துக்கொள்கின்றனர்.  முதன்மை ஆசிரியர் எப்போதும் இந்த விபாஸனாவில் கோயிங்காதான்.

இந்த உதவி ஆசிரியர்கள் நம்மை மிகக் குறைந்த சொற்களால், இப்போது இடைveeளை, இதோ வகுப்பு ஆரம்பிக்கின்றது போன்ற சில ஆணைகளை இடுவதாக மட்டுமே இருக்கின்றனர். ஒரு நாளின் குறிப்பட்ட நேரத்தில் மட்டும்  தனிப்பட்டு அவர்களிடம் சென்று கேள்வி கேட்க நாம் அனுமதிக்கப்படுகின்றோம்.

அங்கேயும் இங்கே செய்யும் தியானம் சம்பந்தபப்பட்டோ, அது குறித்து நம் மனம்/உடல் உணரும் நிலைமைகள் குறித்த சந்தேகங்களுக்கே அவர்கள் பதிலளிப்பார்கள். அதற்கப்பாலான எந்த தேவையற்ற தத்துவ, அரட்டை, அலட்டல் சம்பாசனைகளுக்கு அறவே ஆசிரியர்களிடம் இடமில்லை. அதாவது வந்தமா, வந்த வேலையைப் பார்த்தமா, திரும்பிப் போனோமா என்று இருக்க வேண்டியதுதான்.

*

இந்த 'கட்டாய' ஒரு மணி நேர வகுப்புக்களில் முதுகை நிமிர்த்தி, கால்களை மடக்கி தொடர்ச்சியாக அமர்வது எனக்கு தொடக்க நாட்களில் கஷ்டமாக இருந்தது. யோகாவைச் சில வருடங்களில் பழகியதால், என்னால் அரைத்தாமரை  (Half Lotus Pose) வடிவத்தில் கால்களை மடக்கி முன்னர் நீண்டகாலத்துக்கு அமர்ந்திருக்க முடியும். ஆனால் எந்த விடயமாயினும் தொடர்ச்சியான பயிற்சியில்லையெனில் எல்லாமே துருப்பிடித்து பாழாகிவிடும் என்பதுபோல, யோகாவைத் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்காததால், கொஞ்ச நேரம் அரைத்தாமரை வடிவில் அமர்ந்திருக்கும்போது கால்களில் நோ கண்டது. முள்ளந்த்தண்டு 90 பாகையில் நிமிர்ந்து நிற்காமல் வலதுபக்கம் வலித்தது.

ஆனால் தியான வகுப்புக்களை ஒருவர் இப்படி அமர்ந்துதான் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு விருப்பமான நிலைகளில் தியானத்தைச் செய்யலாம். கதிரையில் (நாற்காலி) அமர்ந்து செய்ய விரும்புவோரும் அப்படி அமர்ந்து செய்யலாம். முதுகிற்கு சப்போர்ட் தேவையானவர்கள் அப்படியான அமைப்புகளைப் பொருத்தி எல்லாம் அமர்ந்து கொள்ள இங்கே வசதிகள் இருந்தன. ஆக ஒருவர் கால்களை மடக்கி 'சப்பாணிகட்டி' இருந்தால்தான் இதில் பங்கேற்ற முடியும்  என்கின்ற அச்சம் எல்லாம் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் அதற்காய் சோம்பேறியாக எனக்கு கொஞ்சம் முதுகு வலிக்கிறது, கதிரையைத் தருகின்றீர்களா என்றெல்லாம் கேட்டால், நல்லாய்த்தான் தரையில் அமர்ந்திருக்கின்றாய், அப்படியே போய் உட்கார்ந்து தியானத்தை தொடர் என்றும் சொல்வார்கள்.  (அப்படி தனக்கு நிகழ்ந்ததாக ஒருவர் பத்தாம் நாளில் எங்களுக்கு பேச அனுமதி தந்தபோது சொன்னார்).

விபாஸனாப் பயிற்சி எனச் சொன்னாலும் அது முதல் நாளில் தொடங்குவதில்லை. உண்மையான விபாஸனா 4ம் 5ம் நாளின்பின் தான் ஆரம்பிக்கின்றது.

முதல் சில நாட்கள் உங்கள் இயல்பான மூச்சில் கவனத்தைக் குவிக்கும் பயிற்சி தரப்படுகின்றது. பின்னர் முகத்தின் மூக்கோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கோணப் பகுதியில் உங்கள் கவனத்தைக் குவித்து மனதைக் கூராக்கும் பயிற்சி தரப்படுகின்றது. இவை 'ஆனாபானா' தியானம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படி மூச்சை மெதுவாக ஆரம்பிக்கும்போது உலகிலிருக்கும் ஆயிரத்தெட்டு கனவுகள், கற்பனைகள், வெறுப்புகள், வெறுமைகள் எல்லாம் பெருக்கி உங்களை எவ்வாறாயினும் தியானத்திலிருந்து வெளித்தள்ள பெரும் முயற்சிகள் நடக்கும்.

மூச்சைத் திரும்ப திரும்ப ஒரு இடத்தில் குவிப்பதற்கு பெரும் பாடு படவேண்டிருக்கும். அப்படிக் கொஞ்சம் செய்தாலும், இரவெல்லாம் வராத நித்திரா தேவி, மகனே உனக்கு இப்போது இரண்டாவது சந்தர்ப்பம் தருகின்றேன், வந்து என் மடியில் தூங்கிக் கொள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்குவார்.

ஒரு மனிதன் வெளியில் இருக்கும்போதுதான் இந்த இலக்கியவாதிகள், காதலிக்கும், காதலித்த பெண்கள் எல்லாம் அவனுக்கு கவனக்கலைப்பான்கள் என்றால், இப்படி எல்லாவற்றையும் துறந்துவிட்டு  உள்ளே வந்தால் இங்கேயும் பலர் என்னை விடாது துரத்துகின்றனரே என்று நொந்தபடி திருப்ப திருப்ப மனதை மூக்கினடியில் குவிக்க நான் முயற்சித்தபடி இருப்பேன்.

***

(இன்னும் வரும்)

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 02

Wednesday, August 26, 2026

 

 நாள் - 00

 ஜூலை -22 - புதன்கிழமை


***

விபாஸனா தியானம் வியாழக்கிழமை தொடங்குகின்றது என்றாலும் எம்மை முதல் நாளான புதன்கிழமை வரச் சொல்லியிருந்தார்கள். நாம் எமது விபரங்களைப் பதிவு செய்து எம்மைத் தயார் செய்வதற்கு முதல் நாளே நாம் செல்ல வேண்டியிருந்தது.

நான் இருந்த நகரிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த விபாஸனா நிலையம் இருந்தது. போகும்போது இன்னும் இரண்டு பேரை என் காரில் ஏற்றிச் சொல்வதாக உறுதியளித்திருந்தேன் (விபாஸானா தொடங்கும் வரை காத்திருக்காமல் எமது meritsஐ  ஜாடிக்குள் முன்னரே சேகரித்தல் எனவும் இதைச் சொல்லிக் கொள்ளலாம்). நாம் விபாஸனாவிற்கு வருகின்றோம் என்று பதிவு செய்யும்போது, உங்கள் வாகனத்தில் வேறு யாரை ஏற்றி வரமுடியுமா (ride) எனக் கேட்பார்கள். 




நான் என் வாகனத்தில் இரண்டு பேரை ஏற்றிக் கொண்டேன். ஒரு பெண் இத்தாலியப் பின்புலத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மலேசியக்காரர், ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த சென்ற தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஒருவர் என்னைப் போல தியான வகுப்புக்கும், மற்றவர் எமக்கு உணவு சமைப்பதற்கும் வந்திருந்தார். தியானத்துக்குப் போவதைப் போல, Serving செய்வதும் விபாஸனாவில் மிக முக்கியமானது. இதை இன்னொரு பொழுது விரிவாகப் பார்ப்போம்.

*
இருவரும் விபாஸனாவுக்கு என்னைப் போன்ற புதியவர்கள் அல்ல. ஏற்கனவே விபாஸனா பழகிய அனுபவசாலிகள். ஆகவே அவர்கள் விபாஸனாவுக்கு புதியவனாக வரும் எனக்கு என்ன அறிவுரை சொல்லுவீர்கள் என்று கேட்டேன். அறிவுரை எல்லாம் உனக்குத் தேவையில்லை, நீ வெற்றி வாகை சூடி வருவாய் என்று மட்டும் உற்சாகப்படுத்தினார்கள்.

போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னரே கால்கள்  எனக்கு நடுங்குகின்றனவே. பத்து நாள் குருஷேத்திரத்தில் இரண்டு நாள் தாக்குப் பிடிப்பேனா, மாமியார் முன் மருகும் மருமகன் போல வெட்கித்து நிற்க, என்னை விபாஸனாவில் இருந்து மூன்று நாளில் 'நீ இன்று போய்  விபாஸனாப் போருக்கு அடுத்துமுறை தயாராகி வா' என்று இராவணனைப் போல அவமானப்படுத்தி அனுப்புவார்களா என்றெல்லாம் என் உள்மனம் கதறுகிறது  என்பதை  எப்படி இவர்களுக்குச் சொல்வது? எனவே என் நடுக்கத்தை வெளிக்காட்டாது காரின் ஸ்டீரியங்கை இறுக்கிப் பிடித்து என்னை நிதானப்படுத்திக் கொண்டேன்.

இத்தாலியன் பெண் கொஞ்சம் இரக்கப்பட்டு, 'உனக்கு பத்தாவது நாளின்போது அந்த அமைதி (noble silence) கலையும்போது உடனே சத்தங்களின் உலகிற்கு வர சிலவேளைகளில் கஷ்டமாக இருக்கும்.  அதற்கு மட்டும் கொஞ்சம் உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்' என்றார்.

அவர் ஏற்கனவே தத்துவியலில் பிஎச்டி பெற்றிருந்தவர். இப்போது அந்தத் துறையை உதறிவிட்டு Psychoanalysis இல் dissertation எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றார். இந்தப் பேராசிரியைமார்களுக்கு எல்லாம் என்னைப் போன்ற 'தற்குறி'களின் நிலைமை எங்கே விளங்கப் போகின்றது?

விபாஸனாப் பேச்சு இனி வேண்டாம் என்று நாங்கள் உலக அரசியலைப் பேசி கடைசியில் தமிழ்நாட்டு விஜய் அரசியலுக்கு வந்து சேர்ந்தோம். மலேஷியத் தமிழர் மிகப்பெரிய விஜய் இரசிகர் போல. எனவே பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தாலியப் பெண்ணின் துணைவர் ஈரானைச் சேர்ந்தவர் என்பதால் போகும் வழி முழுவதும் டிரம்புத் தாத்தா மீது அப்படி அன்பைப் பொழிந்தபடி நாம் அனைவரும்  சென்று கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் நாங்கள் தியானத்துக்குப் போகின்றோமா இல்லை ஏதேனும் அரசியல் ஊர்வலத்துக்குப் போகின்றோமா என்று சந்தேகம் வந்து அமைதியாகி வெளிச்சூழலை வேடிக்கை பார்த்தபடி விபாஸனா நிலையத்தைப் போய்ச் சேர்ந்தோம்.

இனி நாம் அனைவரும்  இறுதிப் பத்தாம் நாள்தான் காண்போம்/பேசுவோம், அப்படிச் சந்தித்து சேர்ந்து மீண்டும் ஒரே வாகனத்தில் திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டு  எங்களிடையே விடைபெறச் செய்தோம்.

*
இத்தாலியன் பெண், பெண்களுக்கான காபினுக்குச் செல்ல, மலேஷியக்காரர் உணவு பரிமாறுபவர்களின் பகுதிக்குப் போக, நான் வேள்விக்குத் தயாராகும் கிடாயைப் போல எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றேன்.

விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன் என்று வீட்டுக்கு அறிவிக்கக்கூட அந்த நிலையத்துக்குள் என் தொலைபேசிக்கு network கிடைக்கவில்லை. கொஞ்சம் ஒதுக்குப்புறமாக காடுகளின் சூழலில் இருந்தாலும் இப்படி விபாஸனாக்காரர்  'அநியாயம்' செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே மீண்டும் காரை எடுத்து ஐந்தாறு கிலோமீற்றர்கள் ஓடி coverage கிடைத்த இடத்தில் வைத்து வீட்டுக்கு சந்திரனுக்கு நீல் ஆம்ஸ்ரோங் காலடி வைத்த சந்தோசத்தைப் போல விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன், இனி பத்து நாளுக்கு என் மூச்சு இல்லை பேச்சுக்கூட கேட்காது நிம்மதியாக இருங்கள் என்று அறிவித்தேன்.

பிறகு விபாஸனா நிலையத்துக்குத் திரும்பி வந்து 'போறாளே பொன்னுத்தாயி/ விபாஸனாக் காட்டில் மனச விட்டு/உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு' என்று கண்ணீர் விடாத குறையாக நிர்வாகத்தினரிடம் என் அலைபேசியைக் கையளித்தேன்.

இனி பத்து நாட்களுக்கு அலைபேசியோடு உறவு முற்றாக இல்லை என்று நினைக்க பரவசமா, நிம்மதியா, பதற்றமா  எது வந்தது என்று சொல்ல முடியாத குழப்ப நிலையில், என்னோடு வேள்விக்கு வந்த மற்றப் பலியாடுகளை அவதானிக்கத் தொடங்கினேன்.

அப்படி ஒருவரோடு கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. அவர்தான் எங்கள் குழுவில் வயதில் மூத்தவராக இருந்தார். எழுபதைத் தாண்டியவர். இரண்டாவது முறையாக விபாஸனாவுக்கு வந்திருந்தார். என்னிடம், 'இப்படி விபாஸனாவை சிரத்தையாக தொடர்ச்சியாகச் செய்பவர்களிடம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள் என்று கேட்பேன். ஒருவரும் ஒழுங்காக இதற்குப் பதில் சொல்வதில்லை. ஒரு நண்பர் மட்டும், விபாஸனாவுக்கு வந்தபின் தனக்கு மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்ததுவிட்டது என்று மட்டும் சொன்னார்' என்றார். அறிமுகமில்லாத மனிதர் முன் எங்கள் மனதை உடனே திறந்து வைத்தால் சிலவேளைகளில் பிறகு ஆபத்தாகிவிடும் என்பதால், 'மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்துவிட்டால், அந்த மனிதருக்கு வாழ்வின் சந்தோசம் ஒரு மடங்கும், அவரின் மனைவிக்கு மகிழ்ச்சி இரண்டு மடங்கும் வந்துவிடுமே, அது போதுமே இந்த வாழ்க்கையை ஒருவர் இனிதாகக் கொண்டு செல்ல என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*

அன்று மாலை  விபாஸனாக்காரர் நிகழ்வுகளுக்கான ஓர் அறிமுகத்தைத் தந்துவிட்டு, இன்றைக்கு உங்களுக்கு கொஞ்சம் மாலையுணவு தருகின்றோம் என்றார்கள். என் மனமோ இயேசு கடைசியாக சாப்பிட்ட 'இறுதி விருந்து' மாதிரி, புத்தரே நீருமா  என்னைக் கைவிடுகின்றீர் என்று  கலங்கியபடி கடைசி இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தேன்.

ஒவ்வொரு நாளும் விடிகாலை நான்கரை மணிக்கு தியானம் தொடங்கிவிடும். நான்கு மணிக்கு மணியை அடித்து, தூக்கத்திலிருந்து விழிக்க எச்சரிக்கை தருவார்கள் என்றனர். நான் இரவு ஒரு மணி இரண்டு மணியெல்லாம் இயல்பாக விழித்திருக்கக்கூடியவன். ஆனால் என்னால் விடிகாலையில் எவ்வளவு முயற்சித்தாலும் இப்படி எழும்ப முடியாதே, எந்தக் கடந்தகால காதலி என்னை சபித்தாரோ, இப்படி நிலைமை ஆகிவிட்டதே என்று உறைந்து போய் நின்றேன்,

அது மட்டுமில்லை, நாளை காலை அல்ல, இன்றிரவு எட்டுமணியோடே noble silence தொடங்கிவிடும் என்று போன முதல் நாளே வாயிற்கு ஆணியடித்து திகைக்க வைத்தார்கள்.

தூக்குமேடைக்கு வந்துவிட்ட பிறகு, கில்லட்டினால் வெட்டினால் என்ன, தூக்குக்கயிற்றை சுருக்கி இழுத்தால் என்ன, முடிவு ஒன்றுதானே என்று என்னை இந்தப் பலிக்களத்துக்குத் தயார்ப்படுத்தினேன்.

ஆனால் நானே ஆச்சரியப்படுமளவுக்கு இந்த பத்து நாட்களில் ஒருநாள் கூட நான் விடிகாலை நான்கரை மணித் தியானத்துக்குப் போகத் தவறியதில்லை என்று நினைக்க இப்போது வியப்பாய்த்தான் இருக்கின்றது.

ஆக இதெல்லாம் முடியாது என்பதெல்லாம் மனது செய்யும் செப்படி வித்தையே தவிர, சூழல் அவ்வாறு நிர்ப்பந்திக்கும்போது நாம் இயல்பாக அந்தச் சூழல் வேண்டுவதைச் செய்யத் தொடங்கிவிடுவோம் என்று சொல்வது உண்மைதான் போலும்.

இப்படியாக என் விபாஸனா ஆயத்தப்படுத்தல் என்னும் திகில் அனுபவங்கள் தொடங்க, அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதென யன்னலுக்கு அப்பால் விரிந்த சிறு காட்டில் எழுந்த வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டபடி படுக்கையில் வெவ்வேறு கோணங்களில் படுத்து நித்திராதேவியே தயவுசெய்து நேரத்துக்கு வந்து என்னை அணைத்துக் கொள்க என்று மன்றாடிக் கொள்ளத் தொடங்கினேன்.

****

(இன்னும் வரும்)