நண்பர் இளங்கோ எழுதிய "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" சிறுகதைத் தொகுதியை வாசித்தேன்.
இளங்கோ அவர்களை தமிழ் பிளாகர், தமிழ்மணம் காலந்தொட்டு டி.சே வாக அறிந்தாலும், அனுக்கமாக வாசிக்கத் தொடங்கியது சமீபமாக முகநூலில் தான்.
அவரது
விட்டேத்தியான பதிவுகளும், அவர் வசிக்கும் கனடா தேச காடுகளுக்குள்ளும்,
இயற்கையான சூழல்களில் தன்போக்கில் நடை பயிலும் காணொளிகளும், அதே நேரம் அவர்
வாசிக்கும் கடினமான புத்தகங்களும், பயணிக்கும் உலக நாடுகளும், எழுதும்
விஷயங்களின் அடர்த்தி என ஒவ்வொன்றும் எப்பொழுதும் பிரமிக்க வைக்கும்.
எப்படி
ஒரு மனிதரால், தன்னையும் வாழ்வையும் நையாண்டி செய்தபடியும், அதன் தீரா
வசீகரங்களை நுகர்ந்தபடியும், சத்துவரை சாட்சியாக வைத்து ரத்த காவு கொண்ட
ஒரு தேசத்திலிருந்து வந்தும், புத்தரை நேசித்தபடியும் என்று வெவ்வேறு
திசைகளில் மிக இயல்பாக பயணிக்க முடிகிறதென வியந்திருக்கிறேன்.
புலம்பெயர் வாழ்வு, ஒரு கலைஞனுக்குள் உண்டாக்கும் அநேக வடுக்களை, அனுபவ கீறல்களை, செக்கு மாடாய் சுழலும் ஒரு வாழ்வு முறையில் இருப்பவனால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.
இவை எல்லாம் தான் அவரது கதைகளாக இப்புத்தகத்தில் விரிந்திருக்கின்றன.ஒரு மனிதரை அனுக்கமாக பின் தொடரும் பொழுது, அவரது படைப்புகள் இன்னும் கூடுதல் ஒத்திசைவைத் தருகின்றன.
இப்புத்தகத்தில் வரும் இயக்கக்காரி, அரசன் அன்று கொல்வான், நம் இயல்புவாத சிறுகதையின் தொனியில் இருந்தாலும், வெளிப்படும் விதத்தில் நம் அனுபவத்திற்கு மிகப் புதிது.
ஒவ்வொரு சிறுகதையிலும், அவரை அடையாளம் காண முடிவது போல், கதை முழுவதும் வரும் அப்பாத்திரங்களின் காதலிகள் ஒன்றே தானா வெவ்வேறா என ஒரு குறுகுறுப்பும் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது.அவரது நாயகர்களால், மிக இயல்பாக ஒரு தோழியை போகுமிடமெல்லாம் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
மிஸ்டர் கே சிறுகதையில் வரும் ஒரு நபரை அவர் இன்னாராக இருக்குமோ என சொல்லும் பொழுது, நம் பிரிய எழுத்தாளர்களை இவரும் பிரியப்பட்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி.
சற்றே கொஞ்சம் இலங்கைத் தமிழ் சொற்கள் மலிந்திருந்தாலும், வாசிக்க லகுவான, ஆனால் தமிழ் சிறுகதைகள் அதிகம் பேசாத விஷயங்களால் விளைந்த கதைகள் இவை.
வாசித்து பாருங்கள்..சுவாரஸியமான புத்தகம்.
***
(நன்றி: ராஜேஷ்)


0 comments:
Post a Comment