கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'வடு' - வீழ்ச்சி': பகிர்வுக்குறிப்புகள்

Monday, July 30, 2007

-இரண்டு புதினங்களை முன்வைத்து-

நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருக்கின்றோம். சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு நம்பிக்கை தந்த புரட்சிகள் கூட இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கங்களால் பொடிப்பொடியாக தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலங்காலமாய் இருந்துவரும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரமோ இன்னும் தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியிருக்கின்றது. நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று எதுவும் அண்மையில் தென்படாதபோதும் தமது வாழ்க்கையை ஒடுக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பதிவுகளில் ஒளித்து வைக்கப்படும் தீக்குச்சியளவு வெடிமருந்திலிருந்து தமது அடுத்த சந்ததி பெரும் ஒளிப்பந்தங்களை ஏந்திக்கொண்டு தமது சந்ததிகளை எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடச்செய்வார்கள் என்ற நம்பிக்கையை தமது எழுத்துக்களில் புதைத்துவைக்கின்றார்கள். அவ்வாறு மேலாதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்படும் ஒரு தலித்தின் சுயசரிதையை கே. ஏ.குணசேகரனின் வடுவும், காலனித்துவத்தால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உட்கட்ட வாழ்வியலை சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சியும் (No Longer at Ease) வாசகர்களுக்கு விரித்து வைக்கின்றது.

2.
கே.ஏ.குணசேகரனின் வடு ஒரு சுயசரிதை நாவல். மராட்டி, கன்னடம் போன்றவற்றில் மிக வீரியமாய் பதிவுசெய்யப்பட்ட தலித் சுயசரிதை நாவல்கள் போன்றல்லாது மிகக்குறைவாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் புதினத்தில் கே.ஏ.குணசேகரனின் பதினம்வயதுவரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவர் இதில், 'இடதுசாரி இயக்கங்களோடு என்னை ஈடுபடுத்திக்கொண்டு, கலைப்பயணம் மேற்கொண்ட காலம் தொட்டு இன்றுவரை என் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை இதில் இடம்பெறவில்லை' என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அதையும் பதிவு செய்யும்போது இன்னும் வீரியமான தலித் ஒருவரின் வாழ்வு தொகுக்கப்படும் சாத்தியம் உண்டு. ஒரு சிறுவனாய் -அவர் பகுத்தறிந்து ஆராய முடியாத வயதிலேயே- எப்படி சாதிப்பேய் தனக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெகு நுட்பமாய் குணசேகரன் வடுவில் பதிவு செய்கின்றார். இதிலே குணசேகரனும் அவரது உறவினர்களும் ஆதிக்கசாதியால் அடிவாங்கிய சம்பவங்களையும், நிலத்தில் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்ட நிகழ்வுகளும் எண்ணிக்கையில் நீண்டவை. ஒவ்வொரு சம்பவங்களையும் குணசேகரன் விபரிக்கும்போது, இங்கேயும் அவர் அடிவாங்கிவிடுவாரோ அல்லது இவரது எதிர்ப்புக்காய் ஆதிக்கச்சாதியினரிடம் அவரது தாத்தா காலில் வீழ்ந்து கும்பிடப்போகின்றாரோ என்ற பதட்டம் ஒவ்வொருமுறையும் வாசிப்பவருக்கு வந்துகொண்டேயிருக்கும். தமது கிராமம் முஸ்லிம் சமூகத்தால் அதிகம் சூழப்பட்டதால் அவ்வளவு சாதியின் வீரியம் தெரியாமல் வளர்ந்திருந்தாலும் ஊரைவிட்டுபோகும்போது எப்படி சாதிப்பேய் தங்களை ஆட்டுவித்தது என்பதை குணசேகரன் வேதனையோடு பதிவுசெய்கின்றார். இன்னும் அவரது அண்ணா முறையான ஒருவரை அவரது தகப்பனும் சித்தப்பாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து வைத்தியராக ஆக்கும்போது, அவர் வேலைசெய்யும் நகரில் சிகிச்சை பெறும்போது மட்டும் ஒரளவு மதிப்புக்கொடுத்துவிட்டு ஊருக்கு வரும்போது அவ்வைத்தியரை ஒருமையில் அழைத்து நக்கலடித்து மதிப்புக்கொடுக்காத ஊரின் ஆதிக்கச்சாதியினர் பற்றிக்கூறும்போது, பொருளாதார ஏற்றத்தால்கூட இந்தச் சாதிப்பேய் அழிந்துவிடாது என்பது நமக்கு உறைக்கத்தான் செய்கின்றது. மேலும் தலித்துக்களின் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதைகளைக்கூட் ஆதிக்கச் சாதிகள் எப்படி வழிமறித்து பயணிக்கவிடாது அழிச்சாட்சியம் செய்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒடுக்குபவர்கள் மீது வெறுப்பு வராதிருந்தால் மனிதர்களாய் இருக்கமுடியாது. ஆசிரியப்பணியில் இருக்கும் இருவர் திருமணம் செய்து மாட்டுவண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்துதான் தமது தெருக்களால் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும் ஆதிக்கசாதியின்ரைப் பார்க்கும்போது நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக்கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்கவேண்டியிருக்கின்றது. ஆதிக்கச் சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து நக்கலடிப்பதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

ஒரு சம்பவத்தில், கதைசொல்லியை ஒரு ஆதிக்கச்சாதிப் பையன் வேண்டுமென்று அடித்துவிட்டு 'பறப்பயலே' என்று திட்டிவிட்டு ஓடிவிடுகின்றான். வந்த கோபத்தில் திருப்ப அவனைத் துரத்திச்சென்று ஆதிக்கச்சாதி பையனின் வீட்டடியில் வைத்து கதைசொல்லி திருப்பி அடித்துவிடுகின்றான். இப்படியொரு சம்பவம் நடந்தால் ஆதிககச்சாதிப்ப்பேய்கள் சும்மாயிருக்குமா?

'சாதி தெரியாம வந்து வூட்டுக்குள்ள நொழைச்சிருக்கான்னா அந்தப் பயலுக்கு என்ன திமிரு இருக்கும். எங்க? அவனைக் கையையும் காலையும் கட்டித் தூக்கிட்டுப் போகணும்'ன்னு சத்தம் போட்டாங்க. எனக்கு திக் திக்குன்னு இருந்திச்சு. காலனி ஆளுகளும் வாசல் முன்னாடிக் கூட்டமாக் கூடிட்டாங்க. அப்பாடா ஒருவழியா அமைதியாக திருப்பிப் போனாங்க. அவன் அடிச்சதப் பத்தியாரும் பெரிசாப் பேசல. சாதி தெரியாம தெருவுக்குள்ள பறையன் போனதும் வூடு நொழைஞ்சதையும்தான் எல்லோரும் பெருசாகப் பேசினாக' (ப 52) என்கின்றார்.

இதேமாதிரி இன்னொரு இடத்தில், கதைசொல்லியின் வீட்டில் இருந்த மரஞ்செடிகளிலிருந்து 'பூவையும் பிஞ்சையும் இலையோட ஏன் அத்துபோடுற?' என்று ஆதிக்கச்சாதிப்பையனிடம் திரும்பிக் கேட்கும்போது அவன் கதைசொல்லியை அறைந்துவிட்டு ஓடிப்போய் நாலைஞ்சு பெரிய ஆட்களோடு திரும்பி வருகின்றான். நிலைமை விபரீதமாய்ப் போவதைக் கண்ட கதைசொல்லியின் தாத்தா, 'அவங்களைக் கும்பிட்டு, 'அய்யா! அய்யா! டவுன்ல இருந்து வந்த புள்ள, அதுக்கு நம்ம ஊரு வெவரம்லாம் புரியாது, தெரியாதுங்க.மன்னிச்சு விட்டுங்க அய்யா. அய்யா'ன்னு நெடுஞ்சாண்கெடையா விழுந்து கும்பிட்டாரு'(ப 80).

இப்படித்தான் பல சம்பவங்கள் இறுதியில் எதுவுமே செய்யமுடியாது அடிபணிவதோடு போய்விடுகின்றது. சிறுவர்களின் வயதிலே இப்படியான சாதிக்கொடுமைகள் அடையாளப்படுத்தப்படும்போது இப்படி வளர்கின்ற சிறுவர்கள் பின்னாட்களில் என்னவாறு இருப்பார்கள் நாம் கட்டங்கட்டி விபரிக்கத்தேவையில்லை. நகரங்களுக்கு நகர்வதுதான் ஒரளவு சாதியின் கொடுமையைக் குறைக்கும் என்றும் தனது அனுபவத்தினூடு குணசேகரன் குறிப்பிடவும் தவறவில்லை (பெரியாரும் இதை வலியுறுத்துகின்றார்). ஆனால் இவ்வாறான முடிவு தற்காலிக முடிவாய் இருக்குமே தவிர ஒரு நிரந்தரமான தீர்வாய் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். அதேசமயம் நாட்டார் தெய்வங்களை இந்துத்துவத்திற்கு எதிராய் முன்வைக்கும் அவசியம் இருப்பினும், நாட்டார் தெய்வ வழிபாடுகள் கூட இன்னொருவிதத்தில் சாதியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் அபாயம் உள்ளதென்ற நுண்ணரசியலையும் நான் விளங்கிக் கொள்ளவேண்டும். சாதியின் நுண்ணரசியலை வெவ்வேறு தத்துவங்கள்/அரசியல் படிப்புகள் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நம்மிலிருந்து நாம் சாதியின் கூறுகளை விடுபடச்செய்வதென்பது நம் ஒவ்வொருத்தரின் அகத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறுசெயல்களிலிருந்தும் சாதிய நீக்கம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆனால் யதார்த்தமோ (புலம்பெயர்சூழலில்கூட) ஜீன்களிலிருந்து கடத்தப்படுவதைப்போல, பெற்றோர் உறவுகளிடமிருந்து இங்கே பிறக்கும் பிள்ளைகளிடம் கூட சாதி அட்சரம் தவறாது பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலமானது; அபாயகரமானது.

3.
சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சி (No Longer at Ease) நாவல் காலனியத்துவத்தை கேள்விக்குட்ப்படுத்துவதில் ஆரம்பித்து, பின் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தின் உள்கட்டுமானத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதுடன் முடிகின்றது. ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னை ஒடுக்கும் சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்ற அதேவேளை தன்னையும் சுயவிமர்சனம் செய்கின்ற இடத்தையும் எவரும் மறுத்துவிடமுடியாது. நைஜீரியாவின் ஒக்கொங்கோ சமூகத்தைச் சேர்ந்த ஓபியின் பார்வையிலேயே இந்த நாவல் கூறப்படுகின்றது. காலனித்துவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து இங்கிலாந்து சென்று படிப்பதற்காய் ஒபியை அந்தச்சமூக மக்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் சேர்ந்து அனுப்புகின்றார்கள். அங்கே படிப்பை முடித்துவரும் ஒபிக்கு மீண்டும் தனது சொந்தமக்களோடு ஒட்டமுடியாத அவதி மிக நுட்பமாய் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றது (அமெரிக்கப்பூர்வீககுடிகளுக்கு தாங்கள் கல்வியறிவு புகட்டுகின்றோம் என்று வெள்ளையினத்தவர் அழைத்து படிப்பித்து விவிலியத்தையும் கொடுத்து -தமது பூர்வீகதொழிலோடும் மக்களோடும் ஒட்டமுடியாத- பூர்வீககுடிகளின் ஒரு புதிய தலைமுறையினர் தோன்றியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). இங்கிலாந்திலிருந்து திரும்பி வருகின்ற ஒபிக்கு பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. ஊழலும் இலஞ்சமும் நிரம்பியிருக்கும் நைஜீரியா அரச அமைப்போடு ஒத்துப்போகமுடியாத அவதி ஒபிக்கு வருகின்றது. மேலும் ஒபி தனது சமூகத்தை (சாதியை) சேராத ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பதால் ஒபியின் சமூகம் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மேலும் தன்னை புரிந்துகொள்வார்கள் என்று நினைகின்ற அவரது பெற்றோர் கூட ஒபியின் காதலை நிராகரிக்கின்றார்கள்.

இப்படி ஒபியை தாங்கள் கஷ்டப்பட்டு பணஞ்சேகரித்து படிக்கவைத்ததால் தமது சமூகத்திற்கு பலவேறு வழிகளில் ஒபி உதவுவார் என்று அவரது சமூகம் அவரில் வைக்கும் நம்பிக்கையையும், ஒபி தானொரு நேர்மையாளராய் இருக்கும் விருப்புக்கேற்ப (இலஞ்சம் வாங்காத, சிபார்சு செய்யாத குணங்களால்) அதையும் செய்யமுடியாது போகின்றது. இறுதியில் ஒபியின் காதல் நிறைவேறாது, தனது காதலியின் வயிற்றில் வளரும் குழந்தையை -காதலின் முறிவால்- கருச்சிதைவு செய்யவேண்டிய நிலை ஒபிக்கு வருகின்றது. அதன் நீட்சியில், தாம் மிகவும் நேசிக்கும் தாய் இறந்தும்கூட -இன்னொரு நகரில் வேலை செய்யும் ஒபியால்- தாயின் இறுதிச்சடங்கைப் பார்க்க விரும்பதாதவளவுக்கு தனது கிராமத்தின் மீது அதிக வெறுப்பு வளர்கின்றது. தாய், காதலி எல்லோரும் போய்விட்டதால் தன்னைச் சுற்றிய இறுக்கமான் இழைகள் அகற்றபட்டு, தானொரு செட்டை கழட்டி மீண்டும் புத்துயிரான பாம்பு என ஒபி நினைக்கின்றார். ஆனால் இதுவரை இலஞ்சம் வாங்காத, புலமைப்பரிசில் சிபார்சுகடிதத்திற்கு வரும் பெண்களை கட்டிலுக்கு அழைக்காத ஒபி என்ற நேர்மையாளன், காலப்போக்கில் இல்லாமற் சிதைந்து போகின்றார். புலமைப்பரிசிலுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு சிபார்சுக்கடிதம் கொடுப்பதற்காய் அவர்களின் உடல்கள் ஒபிக்க காணிக்கை செய்யப்படுகின்றது. அவ்வாறு காணிக்கை செய்யமுடியாத ஆண்களிடம்/பெண்களிடமும் நிறைய இலஞ்சம் வாங்குகின்றார். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல ஒருநாள் இலஞ்சம் வாங்கும்போது ஒபி கைதாகின்றார். எப்படியிருந்த ஒபி இப்படியாகப் போய்விட்டாரே என்று எல்லோரும் வியக்கும்படியாக் ஒபி ஜெயிலுக்குப் போவதுடன் புதினம் முடிகின்றது.

இந்நாவலை வாசித்து முடியும்போது, இந்தப் படிப்பு, வசதி போன்றவற்றால் என்ன பயன் என்ற வாழ்வின் அபத்தமான் கேள்வி நம்முன் வந்து விழுவதை நாம் தவிர்க்கமுடியாது. இன்றும் காலனித்துவம் முடிந்தபின்னும், காலனித்துவம் எப்படி மூன்றாம் உலக நாடுகளின் தனது கண்காணிப்பை வைத்திருக்கின்றது என்பதை உய்த்துணர அவ்வளவு கஷ்டப்படத்தேவையில்லை. ஒருகாலத்தில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் இப்போது எப்படி உலகமயமாக்கங்கள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வைச் சீரழிக்கின்றார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. (வேண்டும் என்றால் John Perkins எழுதிய Confessions of an Economic Hit Man என்று 2004ல் வந்த நூலைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்). இதனால்தான் நாமின்று NGO என்றும் இன்னபிற பெயர்களிலும் நம் நாடுகளிலும் வந்திறங்கும் 'கருணைபொங்கும்' அமைப்புக்கள் மீது சந்தேகப்படவேண்டியிருக்கின்றது. மிக நுட்பமாய் அவர்கள் நமது சமூகத்தில், கலாசாரத்தில் ஊடுருவும் புள்ளிகள் குறித்து அதிக கேள்விகள் எழுப்பவேண்டியுமிருக்கின்றது.

4.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப்போன்ற பலர் அனுபவித்துணரமுடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றது. பதின்மவயதோடு இச்சுயசரிதை முடிவது ஒருவிதத்தில் பலவீனம் என்றும் சொல்லவேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் தலித்துக்கள்/ ஒடுக்கப்பட்ட பெண்கள் போன்றோரை தன்னுடைய சிறகுகளால் அடைக்கலம் கொடுக்கும் இடதுசாரிகளை நாம் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும். ஆனால் அதேசமயம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட குஞ்சுகள் சிறகுகள் வளர்ந்து தமக்கான் சொந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்து பறக்கத் தொடங்கும்போது கையசைத்து விடைகொடுக்கவேண்டுமே தவிர துரோகிகள்/எதிரிகள் என்ற அடையாளப்படுத்துவதை இடதுசாரிகள் தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். இதே சமயத்தில், குணசேகரன் போன்ற ஒரு தலித் ஏன் காலச்சுவடை தனது பதிப்பாளாராகத் தேர்ந்தெடுத்தார் என்று நாம் கேள்வி எழுப்புவதையும் தவிர்க்கமுடியாது. இதுவரை குணசேகரனின் புத்தகங்கள் எதுவுமே காலச்சுவடால் வராதபோது இந்த சுயசரிதையை எழுதிவிட்டு தான் காலச்சுவடுக்கே பிரசுரிக்க முதலில் அனுப்பினேன் என்று ஒருவித 'பெருமிதத்துடன்' குணசேகரன் குறிப்பிடுவதன் அரசியல் குறித்தும் நாம் கேள்விகேட்கவேண்டியிருக்கின்றது (தலித்துக்கள்/விளிம்புநிலைமனிதர்கள் மீது அக்கறையெடுத்து புத்தகம் போடும் பிற பதிப்பகங்கள் குணசேகரனின் கண்களில் தென்படாதது பெரும் வியப்புத்தான்).

சினுவா ஆச்சுபேயின் நாவலை தமிழில் கே.மகாலிங்கம் நல்லதொருவிதமாய் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால் தலைப்பை இப்படிச் சுருக்கவேண்டுமா என்ற கேள்வியும் உண்டு. அது மொழிபெயர்ப்பு என்பதாய் அன்றி மொழித்தழுவலாய் போய்விடும் அபாயமுண்டு. ஏற்கனவே மொழிபெயர்த்த 'சிதைவு'களுக்கும் (Things Fall Apart) இவ்வாறான சர்ச்சை வந்ததை மகாலிங்கம் அறியாதவரல்ல அல்லது அந்த விமர்சனத்துக்காய் ஒரு எதிரொலியாகத்தான் இதையும் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவெனினும் நல்லதொரு மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பதற்காய் இவ்வாறான சின்னச்சின்ன விடயங்கள் குறித்து மறந்துவிடலாம். ஆனால் வழமைபோல இங்கேயும் ஜெயமோகன் முன்னுரையில் அரசியல் செய்வதை நாம் அவ்வளவு இல்குவாய் கடந்துபோக முடியாது....'சினுவா ஆச்செபியின் நாவல் கிட்டத்தட்ட ஒரு இந்திய-தமிழ் நாவல் மாதிரியே உள்ளது' (ஏன் ஈழ-தமிழ் நாவலாய் இருக்கமுடியாது?)என்பதில் ஜெயமோகன் எதனைக் கூறவருகின்றார்? ஏன் அவரால் இதையொரு தமிழ் நாவல் என்றோ மூன்றாமுலக நாடுகளின் நாவல் என்றோ பொதுவாய்ச் சொல்லமுடியவில்லை? இந்தியா என்ற அடையாளம் ஏன் இங்கு தேவைப்படுகின்றது? இந்நாவல் இந்தியா, இலங்கை மட்டுமில்லை; காலனியத்துவத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளுக்கும் பொருத்தமானதே. அதைவிட அடுத்த வரியில் ஜெயமோகன் சொல்லவருவதுதான் அவர் எந்தப்புள்ளியில் நிற்கின்றார் என்பது புரியவரும். 'இங்குள்ள ஊழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சிவப்பு நாடா அனைத்துமே அங்கும் உள்ளன'. இதை இன்னொரு வாசிப்பாய், இந்தியாவில் மட்டுமில்லை நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் கூட சாதி இருக்கின்றது என்று எங்களை நியாயப்படுத்துவது போன்ற வாசிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. எங்கோ ஒரு விவாதத்தில் இந்தியா (ஈழம்) போன்றவற்றில் இருக்கும் சாதியக்கொடுமைகளை விபரித்தபோது படித்த சில அறிவுஜீவிகள் ஆபிரிக்கா நாடுகளிலும் சாதி இருக்கின்றன என்று புலம்பியபடி ஓடிவந்தது நினைவுக்கு வருகின்றது. ஒன்றைப் பற்றிப்பேசும்போது அதைப்பற்றி மட்டும் முதலில் பேசுங்கள், எங்களுக்குள் சாதி இருந்தால் அதை எப்படி அரசியல் நீக்கம் செய்வது என்று பேசுவதைவிட்டுவிட்டு, அங்கேயுமிருக்கின்றது அதனால் நாங்கள் -மட்டும்- அவ்வளவு கெட்டவர்களல்ல என்ற தொனியில் வரும் உரையாடல்கள் அலுப்பையல்ல, கோபத்தை வரச்செய்பவை.

நாம் நவீன உலகில் எல்லா வசதிகளோடும் எல்லோரையும் மதித்தபடி இருக்கின்றோம் என்று நமக்குள் கூறியபடி இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான புதினங்கள் நாம் நினைத்துக்கொள்கின்ற அனைத்தையும் அதிர்வுக்குட்படுத்துகின்றது. மேலும் சாதியைப் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியோ நாம் உரையாடும்போது யார் அதிகம் பதட்டம் அடைகின்றார்களோ அவர்களே இன்னும் இந்த அடையாளங்களில் தங்களை தேக்கிவைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடவும் முடியும். நாம் நம்மிலிருந்து சாதியை இல்லாமற்செய்ய மிகுந்த சகிப்புத்தன்மையும் விசாலமான மனமுமே வேண்டும், மேலும் வர்க்க அழிப்பாலும், படிப்பாலும், பொருளாதார ஏற்றங்களாலும், சாதி முற்றாக அழிந்துவிடும் என்று கூறுபவர்களை நோக்கி நாம் புன்னகையை வீசியபடி எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே நியாயமாகவிருக்கும்; அதுவே நாமின்னும் மனிதத்தன்மையுடன் வாழ்கின்றோம் என்பதைச் சாட்சிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

(ஆபிரிக்காக் கலாசாரத்தின் மீது பெருவிருப்புக்கொண்டவளுக்கு)

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

Wednesday, July 25, 2007

(யூலை நினைவுகளுக்கு - மீள்பதிவு)

அப்போது எனக்கு ஜந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல் ஒரு கையையும், மறுகையில் பை நிறைய இனிப்புக்களுடன் நேர்சரி வகுப்புக்கு போகின்றேன். வகுப்பு, மாணவர்கள் எதுவுமற்று வெறுமையாக இருக்கின்றது. ஆசிரியர் தொலைவில் வருவது தெரிகின்றது. 'இன்றைக்கு ஹர்த்தால் எல்லோ. வகுப்பு இல்லை என்று உங்களுக்கு முதலே தெரியுந்தானே' என்று அண்ணாவிடம் கூறுகின்றார். 'ஓம் தெரியும், இவன் தான் சிலநேரம் நேர்சரி வகுப்பு நடக்குமென்டு கூட்டிக்கொண்டு வந்தவன்' என்கிறார் அண்ணா. எனது முகத்தில் கவலையும் மனதில் வெறுமையும் நிரம்ப திரும்புகின்றேன். அன்று எனது பிறந்ததினம்.



எங்கள் வீட்டு வரவேற்பறையில் வள்ளுவரும், அண்ணாவும், கலைஞரும்தான் எப்போதும் காட்சி தந்தபடி இருப்பார்கள். ஈழத்தில் இருந்தவரைக்கும் அப்பா ஒரு தீவிர நாத்திகராக இருந்திருக்கின்றார். திராவிடக் கட்சிகளின் மீது மிகுந்த அபிமானமும் நம்பிக்கை உடையவராக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். ஊரில் இருந்த வரைக்கும் (இப்போதும் கூட) தைப்பொங்கலையோ, வருடப்பிறப்பையோ அயலவர்கள் கொண்டாடியமாதிரி நாங்கள் கொண்டாடியதில்லை. அதற்குக் காரணம் அப்பா நாத்திகராக இருந்தது அல்ல. வேலையின் நிமிர்த்தம் எமது தந்தையார் மட்டக்களப்பு, வன்னி, தீவுப்பகுதிகள் என்று மாறி மாறி அலைந்தபடி இருந்தவர். எல்லைக் கிராமங்களில் சிங்கள இனவாதிகளால் அந்த மக்கள்படும் துயரைக் கண்டதால், 'அவர்கள் அங்கே துன்பப்படுகையில் இங்கே எங்களுக்கு என்ன கொண்டாட்டம் குதூகலம் வேண்டிக்கிடக்கிறது' என்று கூறி விழாக்களைக் கொண்டாடும் எமது ஆசைகளை இல்லாமற்செய்துவிடுவார். அந்தக்காலத்தில், போரின் எந்தத் துளியும் தீண்டாது எங்கள் கிராமம் மிக இயல்பாயிருந்தது. பொங்கலுக்கு, வருடப்பிறப்புக்கு என்று பக்கத்து வீட்டுக்காரர்கள், கோலம் போட்டு வாழைகள் நாட்டி, வெளி முற்றத்தில் பொங்கிப் படைக்கும்போது அப்பாவை மனதுக்குள் திட்டியிருக்கின்றேன். கொண்டாட்டங்களின்போது அயல் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குதூகலத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றேன். எனக்கும் எனது பெற்றோர் கைவிசேடம், புது ஆடைகள் விழாக்களின்போது தரமாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கின்றேன்.



போர் தீண்டாத எந்த ஊரையும் இன்றைய பொழுதில் ஈழத்தில் பார்க்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரைவிட்டு முற்றாகவே வெளியேற வேண்டி நிலை வந்தது. அதுவரை, சிங்கள் இராணுவம் தனது முகாமைவிட்டு கொஞ்சம் முன்னேறும்போது, அவ்வவ்போது வேறு கிராமங்களுக்கு சென்று விட்டுத் தங்கித் திரும்பிவருவதுதான் வழமையாக இருந்தது. பிறகு சண்டைகொஞ்சம் கடுமையானபோது இரவுகளில் பக்கத்து ஊரில் போய் படுத்துவிட்டு பகல்பொழுதில் ஊரிற்குத் திரும்பி வருவதுமாயும் இருந்தோம். தமிழர் பிரதேசங்களை கைப்பற்றிக்கொள்ள இராணுவம் இரவுநேரங்களையே அந்தக்காலத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழமையாக இருந்ததால், அப்படி பகல்/இரவு என் இரண்டுவிதமான விக்கிரமாதித்திய வாழ்க்கை முறைக்கும் நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம். அதுவும் கார்த்திகை, மார்கழி போன்ற குளிரும் மழையும் கூடிய காலங்களில் விடிகாலையில் எழும்பி ஊருக்குத் திரும்பிப் போவது போல ஒரு அவதி கிடையாது.

என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன். ஊரை விட்டு முற்றுமுழுதாக நீங்கிய நாள் நினைவுக்கு வருகின்றது. அகோரமான செல்லடிகளும், குண்டுத்த்தாக்குதலுடந்தான் ஆரம்பித்தது அன்றையபொழுது. இப்படி ஒரு பொழுது ஆரம்பிக்கிறது என்றால் நிச்சயம் எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரன் முன்னேறப்போகின்றான் என்று. இது ஒரு தாக்குதலுக்கான முன் ஆயத்தம் என்றும் சொல்லலாம். தடைகளை நீக்குவதற்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெறும். அத்தோடு எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவற்கும் ஆகவும் இருக்கலாம். 'ஆரம்பமே இப்படி என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என்று உனக்குக் காட்டத் தேவையில்லை, பின்வாங்கிப் போய்விடு' என்று போராளிகளைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிப்பதன் மறுவடிவம்தான் விமானத்தாக்குதல்களும், ஆட்லறித் தாக்குதல்களும்.

துப்பாக்கிச் சூட்டுக்கள் எல்லாம் நெருங்கி வருகின்றமாதிரி இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் உரசிக்கொண்டு போகும் ஓசையெல்லாம் தெளிவாய்க் கேட்கின்றது. 'வீட்டை விட்டு போவோம் போவோம்' என்று பயத்தோடு அழுகை வரும் நிலையில் பெற்றோரிடம் நான் கெஞ்சுகிறேன். அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும், இதுதான் நாங்கள் எங்கள் ஊரில், வாழ்ந்த வீட்டில் கடைசியாக வாழப்ப்போகும் கணங்கள் என்று. அதனால் வீட்டைவிட்டு அவ்வளவு இலகுவில் நீங்கி வர பிரியப்படாதிருக்கின்றனர். 'சரி நீயும் அக்காவும் முதலில் போங்கோ, நாங்கள் பின்னாலை வாறோம்' என்று எங்களை அனுப்புகின்றனர் எமது பெற்றோர். ஒரு சைக்கிளின் பின் பாரில் கட்டப்பட்ட ஆடைப்பெட்டியுடன் நானும் அக்காவும் வீட்டினின்று நீங்குகின்றோம். வெளியே ஒழுங்காய் நடந்தே செல்லமுடியாத நிலை. நிமிர்ந்து நடந்தால் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைப் பதம் பார்த்துவிடும் போன்று அகோரமான யுத்தக்களம். சைக்கிளை உருட்டியபடி குனிந்து குனிந்து நடக்கின்றோம். ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்போம். பாரிய ஒலியுடன் ஒரு செல் விழுந்து வெடிக்கின்றது. எங்கள் வேலிக்கருகில் இருந்த பக்கத்து வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ எழும்புகின்றது. 'அய்யோ வீட்டில் நின்ற அம்மா அப்பா ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எனக்கு அழுகை வருகின்றது. திரும்பிப் போய்ப் பார்க்கவும் முடியாத நிலை. அக்கா சொல்கிறாள் 'கொஞ்சம் தூரம் போய் சைக்கிளை நிறுத்தி ரவுண்ட்ஸ் அடி குறையும்போது திரும்பி வந்து பார்ப்போம் இப்போது வேண்டாம்' என்று.

நாங்கள் சைக்கிளை உருட்டுகிறோம். வைரவர் கோயில் தாண்டி, அதன் பக்கத்தில் இருந்த கள்ளுக்கொட்டில் தாண்டுகையில் தேவதூதர்களாய் போராளிகள் வருகின்றார்கள். நாங்கள் போரை விட்டு விலத்தி ஓட ஓட அவர்கள் போரைத் தேடி வருகின்றனர். பலரின் கால்களைப் பார்க்கின்றேன். ஒழுங்காய் செருப்புக்கூட அணியாமல் வெறுங்காலுடன் பலர் இருக்கின்றார்கள். பயத்தின் எந்த ரேகையும் அவர்களின் முகத்தில் இல்லை. யாரையோ சந்திக்கப் போகும் நிதானத்துடன் நடந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். எதிரியைக் காணும்வரை எந்தத் தோட்டாவும் உபயோகிப்பதில்லை என்பதுபோல துப்பாக்கிகள் முதுகில் தூங்கியபடி இருக்கின்றன. அடுத்த கிராமத்தை அடைந்தபோது கொஞ்ச நேரத்தில் எமது பெற்றோரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத்திலும் பயம் பொங்கி வழிகின்றது. எல்லோரையும் மீண்டும் உயிருடன் பார்த்தவுடன், எல்லோர் மனதிலும் ஒருவித நிம்மதி வந்துவிடுகின்றது. ஆனால் எனது சொந்தக்கிராமம் கைப்பற்றப்படுகையிலும் உயிரைக்காக்க வேண்டும் என்று ஓடுகின்ற எனது சுயநலத்துக்கும், எங்கையோ ஒரிடத்தில் பிறந்து உறவுகளைத் துறந்து எந்தத் தமிழ்ப்பிரதேசமும் கைப்பற்றப்படவோ, தமிழ் மக்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்று 'மரணத்திலும் வாழ்வைத் தேடி' போகின்றவர்களுக்கும் இடையிலான உள்மனயுத்தம் ஆரம்பிக்கின்றது. அது இன்று வரைக்கும் தொடர்கிறது. சாகும்வரை இது குறித்த ஒரு குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டியிருக்கவும் போகின்றது.

2.

ஈழத்தில் இருந்தவரைக்கும் எதிர்காலத்தில் மருத்துவம் படிப்பதே ஒரு கனவாக இருந்தது அல்லது அது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஒரு முறை யாழ் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம், அனுமதிக்கப்பட்ட அண்ணாவைப் பார்ப்பதற்காய் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயம் செல்லடிபட்டு சிதைவுற்ற ஒருவரை இரத்தம் கொட்ட கொட்டக் கைகளில் ஏந்திவருகின்றார்கள். முகம் எது வயிறு எது என்று பிரித்துணரமுடியாது இரத்த நிறம் உடலை ஆடை போல மூடியிருக்கின்றது. ஒரு மரணத்தை முதன் முதலாய் அருகிலிருந்த பார்த்த சந்தர்ப்பம் அது. இப்படியும் ஒரு மரணம் நிகழுமா எனச் சிந்திக்கமுடியாத ஏழெட்டு வயதில் அது நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தபின் ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றேன். சத்தி வருகின்றமாதிரியான உணர்நிலையில் அந்த நாள் முழுதும் அலைந்திருக்கின்றேன். அந்தச் சம்பவத்தை பார்த்தபோது வாயில் வைத்திருந்த சூப்புத்தடி (Lollipop) அதற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று அல்லது லொலிபாப்பை எப்போது பார்த்தாலும் அந்த சம்பவமே உடனே நினைவுக்கு வருவதாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு இரத்தம் என்பது மிகவும் பீதியடையும் ஒரு விடயமாகப் போய்விட்டது. ஒரு சில நொடிகளுக்கு மேல், இரத்தத்துடன் வரும் எந்தக் காட்சியையோ கதையையோ பார்க்கவோ கேட்கவோ என்னால் முடிவதில்லை. சிலவருடங்களுக்கு முன், கார் விபத்தில் சிக்கிக்கொண்ட நண்பன் அந்த விபத்துச்சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தபோது (காலில் பலமாய் அடிபட்டிருந்தான்) கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அருகில் நான் போயிருந்தேன். இன்னமும் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவமும், இரத்தமும் எப்படி என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றது என்பது வியப்பாக இருந்தது. அப்படியெனில் இதைவிட இன்னும் ஆழமான பாதிப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கும் ஆளானவர்கள் எப்படியெல்லாம் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடிந்ததில்லை.

'In the name of Buddha' திரைப்படம் வந்தபோது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் கண்களை மூடித்தான் பார்த்தேன் (தேங்காய் உரிக்கும் அலவாங்கால் இராணுவம் ஒரு ஆணைக் கொல்வது, சிறுவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டு அரைகுறையுமாக புதைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் ஆரம்பமானது மட்டும் தெரியும், பிறகு எனது உலகம் இருட்டாகிவிட்டது). கண்மூடி இருந்தவேளையில் எனது பின்சீட்டில் இருந்த ஒரு பதின்மவயதுப்பெண் தன் தாயிடம் கூறியது காதில் விழுந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற குரலில், 'அம்மா I can't watch this movie, I wanna go outside' என்கிறாள். தாயோ, 'பிள்ளை இப்படித்தான் எங்கட நாட்டில் நடக்கிறது. நீர் இதையெல்லாம் பார்க்கவேண்டும், அப்பத்தான் அங்கை நடக்கிறதெல்லாம் தெரியும்' என்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியாத எனக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளியே போகவேண்டும் போல இருக்கிறது அல்லது இப்படியான காட்சிகளைப் பார்க்கவிரும்பாத பிள்ளையை வற்புறுத்தி அவரது மனநிலையைச் சிதைக்காதீர்கள் என்று அந்தத் தாயிடம் கூறவாவது வேண்டும் போலக்கிடக்கிறது. இறுதியில் அந்தப் பிள்ளை கண்ணை மூடிக்கொண்டு தாயின் தோளில் சாய்ந்துவிடுகின்றார்.

3.
ஈழத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்ற வருடம் ஈழத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வித அவசரமான திட்டமிடலில் நண்பர்களாய் செல்லவேண்டியிருந்ததால்தான் அது கூட சாத்தியமாயிருந்தது. இன்றும் ஊரைப் பார்க்கமுடியாது இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஈழத்துக்குப் போவதற்கு என்ன காரணம் வேண்டிக்கிடக்கிறது? அதனால் யாழில் மூன்றே நாள்கள் மட்டுந்தான் தங்கியிருந்தேன். இதுவரை காலமும் காலடி வைக்காத வன்னியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தது புதிய அனுபவமாயிருந்தது. அங்கே இருந்து கேட்ட விவாதித்த கதைகள் நாட்டைவிட்டு வெளியேறிய என் குற்றவுணர்வை இன்னும் பலமடங்காய் அதிகரிக்கச் செய்தன. அதுவும் பெண் போராளிகள் கூறிய கதைகளும் இடை நடுவில் மேலே சொல்ல முடியாது தவித்து அழுத கணங்களும் இன்னமும் கண்முன்னாலே நிற்கின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால் வைத்தபோது மூன்று வருடங்களுக்கு முன் உலகை வியக்க வைத்து போராளிகள் நடத்திய தாக்குதல் கண்முன் விரிந்தது. சனங்கள் ஆயிரக்கணக்கில் புழங்கும் (முக்கியமாய் வெளிநாட்டு மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று அனைவருக்கும் தெரிந்ததே) எந்த ஒரு பொதுசனத்துக்கும் பாதிப்பு இல்லாது மிகத்துல்லியமாய் இராணுவ, வர்த்தக விமானங்களைத் தகர்ந்திருந்தார்கள். குண்டு குண்டாய் போட்டு மக்களை கொல்வது முற்பகலில் செய்யின், உனது ஆணிவேருக்கே தீ கொளுத்துவோம் என பிற்பகலில் எதிரியை வினையறுக்கச் செய்தவர்கள் போராளிகள். 83ல் தமிழரைத் தலைநகரில் நூற்றுக்கணக்கில் குடல் உருவியும் கண்கள் பிடுங்கியும் கொன்றும், உயிரோடு ரயர்கள் போட்டு எரித்துக்காட்டியும் கெக்கலித்தது பேரினவாதம். ஒரு அரச இராணுவ அமைப்புக்கு நிகரான பலத்துடன் தமிழர்கள் ஒரு காலத்தில் நிமிர்ந்தபின், தமிழர்களை விட சிங்களப்பேரினவாதமே ஒவ்வொரு கறுப்பு ஜூலையும் நடுநடுங்கியபடி எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கத் தொடங்கியது. அவ்வாறான ஒரு கறுப்பு ஜீலையில் நடந்த பதிலடியே கட்டுநாயக்காவில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதல். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கியபோது இந்த இடந்தானே சென்றுபோன வருடத்தில் ஒரு நாள் உலகையே திரும்பிப்ப்பார்க்க வைத்ததென்ற பெருமை எனக்குள் பொங்கியது. ஆனால் அது தங்கி நின்றது கொஞ்ச நொடிகள்தான். சிதைந்த விமானத்தின் முன் மல்லாக்க விழுந்துகிடந்த போராளிகளின் முகங்கள்தான் பிறகு நினைவு முழுவதற்கும் பரவியது. அந்த இளைஞர்களில், சிறுவயதில் ஊரைவிட்டு அகன்ற நேரம் எதிர்ப்பட்ட போராளிகளின் முகங்களைக் கண்டேன். போரிற்குள் இருந்த எந்த ஒரு ஒருத்தனும்/ஒருத்தியும் போரை கொண்டாடிக் குதூகலிக்கமுடியாது. பிரியமான மனிதர்கள் இறக்க இறக்க இன்னும் கொல் கொல் என்று நரம்புக்கள் புடைக்க புடைக்க பேசிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள்.



எண்பத்து மூன்றில் கறுப்பு ஜீலையில் (ஆடி இருபத்தைந்து) தொடங்கிய மரணங்கள் இன்றும் அதே நாளில் நீண்டுகொண்டிருப்பதுதான் எவ்வளவு துயரமானது. 2001ல் தங்களையே விலையாகக் கொடுத்த அந்தத் தோழர்கள் மரணித்த நாளில் பிறந்தநாள் வரும் ஒருவன் மகிழ்வு கொள்ள என்ன வேண்டிக்கிடக்கிறது? மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.

நன்றி:புகைப்படங்கள்
கறுப்பு வெள்ளைப் படங்கள்:
ஆடிக்கலவரம் 1983
சைக்கிள் படம்:
ஈழவிஷன்
பெண்ணும் இராணுவமும்:
In the name of buddha

Wednesday, July 18, 2007

அவர்கள் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்கள்
கொட்டாவிவந்து அலுப்பு நெளிந்தது.
அவர்கள் அறிவைச் சுடச்சுட அடுப்பிலிருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்
மூளை கரியாகிக்கரியாகி சாம்பலாய் உதிர்ந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் இடைக்கிடை தண்ணீரையருந்தியபடி கைகளை ஆட்டி
தாம் சொல்வதே உண்மையென நம்பவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்
மூத்திரப்பை நிரம்பி ஆசுவாசப்படமுடியாது குறுகிய அறைச்சுவர்கள் அடைத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னலுக்கப்பால் விரியும் பெஞ்சில்

காதலியொருத்தியை முத்தமிட்டு முதுகைவருடியபடியிருக்கும் கரங்கள் நடுவிரலைக்காட்டிக் கேலிசெய்கிறது
நீயில்லாத உனதின் இருப்பை.

(ஒரு மாநாட்டு அரங்கில் இருந்தபொழுதில்)



பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.

(murder-sucide இரட்டைக்கொலைகளின்பின்)

ம்..ஆமென்!

Friday, July 13, 2007

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு பாஸிடிவ்தானே' என காலந்தோறும் சொக்கப்பனை எரிக்கும் தேசியர்களுக்கும்...

புலம்பெயர்ந்து வாழ்தல் பற்றியும் தோல்விகள் பற்றியும்

இல்லை.
சேனாவில் நான் கழித்த
மோசமான காலமோ
அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட
இராணுவ விசாரணைக் குழுக்கள் தொடுத்த
திடீர்க் குற்றச்சாட்டுகளோ
என் முதுகில் அழுத்திய துப்பாக்கிக் கட்டையோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை
புலன் விசாரணையின் திகிலூட்டும் கறுப்பு முகமூடியோ
பயங்கரத்தின் ஓலங்கள் ஒலித்த
விளையாட்டரங்கங்கள் என்னும் துன்ப நகரமோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
வாழ்க்கையிலிருந்து நம்மைத் துண்டித்த
ஜன்னலின் இரும்புக் கம்பிகளோ
எங்கள் வீட்டின்மீது குவிக்கப்பட்டிருந்த கண்காணிப்போ
பதுங்கி பதுங்கி வந்த காலடியோசைகளோ
பசியில் பிளந்த வாய்க்குள் நான் சரிந்து விழுந்ததோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
என்னை வீழ்த்தியது
நான் உரிமை கொண்டாட முடியாத தெரு
அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடு
நான் கற்றுக்கொண்ட இரவல் மொழி.
எங்களுக்குத் சொந்தமில்லாத தீர்க்கரேகைகளில்
தனித்து நிற்கும் நிச்சயமற்ற உருவம்தான்
என்னை வீழ்த்தியது.
அது கிறீன்விச் தீர்க்கரேகை பூஜ்யம் டிகிரி
எதற்கும் அருகிலில்லை.

என்னை வீழ்த்தியது இந்த அந்நிய மழை
சொற்களை மறந்து
துழாவிச் செல்லும் நினைவு
வெகுதூரத்திலுள்ள நண்பர்கள்
எங்களுக்கிடையே உள்ள இந்த அடாத பெருங்கடல் -
எனக்கு வந்த சேராத
நான் எதிர்பார்த்திருந்த கடிதங்களை ஈரமாக்குகின்ற
இந்த அடாத பெருங்கடல்.

-Maria Eugenia Calderarara (Chile)

கண்டனம்

ஒரு புல்லின் இதழுக்கு
ஊறு விளைவிக்கும் உரிமையை
என் நாட்டின் போராளிகளுக்கு
மறுக்கிறேன்
ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை
குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும்
மறுக்கிறேன்
ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை
என் சகோதரிக்கு
மறுக்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் மறுக்க முடியும் - ஆனால்
அவர்களின் கண்கள்
கொலைகாரர்களின் குதிரைகள்
பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது
இத்தனை இலட்சியங்களை
யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்?

பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை
எதிர்க்கிறேன்
மரங்களின் உடல்கள்
வெடிமருந்துக்குப் புகலிடமாவதை
எதிர்க்கிறேன்
எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள்
தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
எனது தோட்டத்தின் ரோஜாப் பாத்திகள்
மரணதண்டனை நிறைவேற்றும்
துப்பாக்கிப் படையினரால் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் எதிர்க்கமுடியும் -ஆனால்
எனது நாடு
எனது நண்பர்களோடும்
எனது இளமையோடும்
சேர்ந்து எரியும்போது
எனது கவிதைகள் ஆயுதங்களாக மாறாமல்
இருக்கமுடியுமா?

- Rachid Hussein (Palestine)

எனது நாடு எவ்வளவு சிறியது

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச்சணடைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது

-எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ் (Nicargua)

தென்னாபிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்


நாடே:
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவரில் உள்ளவொரு அறையில்
நான் காத்திருக்கிறேன்
கடலிடையே தெருக்களிடையே வானத்திடையே
செல்கிறேன்;
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.

நாடே:
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான் தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்துகொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன்
நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது;
நான் ஒளிமயமானவள்
ஒளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும்
ஒரு மந்திரச்சொல்

நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.


-Karen Press (South Africa)

நன்றி: மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்)
தமிழாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை

துயரத்தை மீளவும் இசைத்தல்

Sunday, July 08, 2007

-பெலினியின் *Amarcordஐ முன்வைத்து-


பதின்மம் நம் எல்லோரிடமும் சிறகுகளுள்ள ஒரு பறவையைப் போல வந்தடைகிறது. பலர் அதன் சிறகுகளைக்கொண்டு இன்னும் உயர உயரப்பறந்துகொண்டும் வேறு பலர் அந்தச் சிறகுகள் முறிய இப்பருவத்தை எப்படிக் கடப்பதென்னும் கவலையுடனும் வாழ்வின் சாட்சிகளாகின்றனர். எப்படியெனினும் கடந்தபோனால் மீண்டும் வராத பதின்மம் நிறைய நனவிடை தோய்தலைகளைக் கொண்டுவருகின்றது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெலினியின் (Fedrico Fellini) Amarcord, ஒருவன் பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறும் பருவத்தைக் காட்சிப்படுத்துகின்றது. பதின்மங்களுக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதில்லை. கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத ஒரு குழப்பகரமான வாழ்விற்குள் நம்மைப் பதின்மம் தள்ளிவிடுவதை பெலினியும் ஒரு நேர்கோட்டுக் கதைசொல்லலில்லாது துண்டு துண்டுகளாய்க் காட்சிகளை நகரத்தபடியிருக்கின்றார்.




நகரத்தை விட்டு சற்று ஒதுக்கியுள்ள ஒரு கடற்கரை கிராமமே இப்படத்தின் பின்புலமாகின்றது. ரிற்றா என்ற பதின்ம வயதுடையவனே முக்கிய பாத்திரமாகின்றான். ஒரு கிராமத்து வாழ்வுக்குரிய அழகோடும் கசப்புகளோடும் வெகுளித்தனங்களோடும் இப்படம் விரிகின்றது. இறுக்கமுள்ள கத்தோலிக்கத் தேவாலயம் இக்கிராம மக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றதெனினும், கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் ரிற்றா முதலான பையன்கள் இந்த இறுக்கங்களைத் தமது குழப்படிகளால் கடந்து போய்விடுகின்றார்கள். பாடசாலையில் ஒழுக்கத்தையையும், பொறுமையையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு அதை வைத்தே ஒழுங்கைக் குலைக்கச் செய்து அந்தமாதிரி நக்கலடிக்கின்றார்கள் ரிற்றாவும் அவரது நண்பர்களும்.

அநேக கிராமங்களில் வயது வித்தியாசமின்றி எல்லோர் மனதையுன் சுண்டியிழுக்கும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள். 'கன்னியிவள் கடைக்கண் காட்டிவிட்டால் வெண்ணிலவையும் தரைக்குக்கொண்டுவரும்' மிதப்போடு பல இளைஞர்கள் அந்தப்பெண்களின் பின்னால் அலைந்தபடியிருப்பார்கள். இப்படியாக இளைஞர்களைத் தாங்கள் தேவதைகளாகக் கவர்ந்திழுக்கின்றோம் என்று நன்று தெரிந்தும், தெரியாதபடி -எதற்கும் இடங்கொடுக்காமல்- தங்களைப்பற்றிய புனைவு வழிப்பட்ட இரகசியங்களைப் பெருக்கச் செய்தபடி குறும்புகளுடன் அந்தப்பெண்கள் நகர்ந்தபடி இருப்பர்கள். அவ்வாறான பெண ஒருத்தி (Gradisca) இப்படத்திலும் வருகின்றார். அவரில் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ரிற்றாவிற்கும் மையலுண்டு. அவரோடு காதலுற்று களிப்பது போன்ற கனவுகள் எல்லாம் ரிற்றாவிற்கும் வந்துபோகின்றது.

பெலினி காட்டுகின்ற ரிற்றாவின் வீடென்பதுகூட நம்மைப்போன்ற பலருக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு குடும்ப அமைப்புத்தான். தங்கள் பிள்ளைகள் மீது அளவிறந்து அன்பைக்காட்டும் பெற்றோர், எல்லோரையும் ஒருகாலத்தில் அதிகாரத்தில் மேய்த்து அந்தக் காலங்கள் வழக்கொழிந்து போய் தன் வார்த்தைகள் அம்பலத்தில் ஏறாததை நகைச்சுவையாக்கிபடி இருக்கும் ரிற்றாவின் தாத்தா, எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்தபடி/கேட்டபடி தனக்கான உலகில் இயங்கும் மாமா, வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் சேஷ்டைகள் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் தாத்தா, அப்பாவின் மீதிருக்கும் கோபத்தில் திரைப்படம் பாரத்துக்கொண்டிருக்கும்போது அவரின் தொப்பிக்குள் சிறுநீர் கழிக்கும் ரிற்றா என்று இந்தப்படத்தின் குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் நமக்கு நெருக்கமாகக்கூடியவர்கள். இப்படி இந்தப்பாத்திரங்களினூடாகவும், நிலப்பின்னணியினூடாகவும் ஒரு இத்தாலிய (கிராமத்தின்) வாழ்க்கை முறையை பெலினி மிக நேர்த்தியாக சித்தரிக்கின்றார்.


அதிலும் உணவருந்தும் ஒரு காட்சியில், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரிற்றாவின் பெற்றோருக்குள் சண்டை மூள்கிறது. பிள்ளைகள் மற்றும் குடுமப உறவுகள் -இவற்றையெல்லாம் கேட்டு மரத்துப்போன சூழ்நிலையில்- சண்டையினால் எந்தச் சலனமுமில்லாது தங்கள்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'இந்த மனுசனோடு என்னோடு வாழமுடியாது நான் சாகப்போகின்றேன்' என்று வேதனையோடு ரிற்றாவின் தாயார் குளிக்கும் அறைக்குள் சென்றுவிடுகின்றார். 'நீ செத்தால் நான் தனியே இருப்பேனா?' என்று ரிற்றாவின் தகப்பன் தன் வாயைக் கரங்களால் கிழித்து தற்கொலை செய்யப்போவதாய் அடம்பிடிப்பார் (மிகுந்த நகைச்சுவையுடன் பெலினி இதைக் காட்சிப்படுத்தியிருப்பார்). பிறகு தற்கொலை செய்து 'சாகமுடியாத' கொடுமையை தன் தலையில் கையால் அடி அடியென்று அடித்துக்கொண்டிருப்பார். திடீரென்று இதையெல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வு வர, கோபத்துடன் மேசையிலிருக்கும் சாப்பாட்டை ரிற்றாவின் தகப்பன் தூக்கியெறிவார்.

எப்படி திருச்சபைகளின் மீதான தன் விமர்சனத்தை மெல்லிய நகைசுவையுடன் பெலினி காட்டினாரோ அதைப் போன்று குடும்பம் என்ற அமைப்பால் ஏற்படும் வன்முறையையும் இத்திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டுகின்றார். ரிற்றாவின் தகப்பனின் சகோதரர் ஒருவர் மனம்பிறழ்ந்தவராக இருப்பதும், அவரோடு சுற்றுலா போகின்ற வேளையில் மரம் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு ஒரு பெண் தனக்கு வேண்டும் என்று கேட்டு அவர் அடம்பிடித்து மரத்தை விட்டு இறங்காத இன்னொரு காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்த ஒற்றை மரம், பின்னால் நீளும் வெறுமையான வானம், நீண்ட சமதரை என்று பல்வேறு குறியீடுகள் வரக்கூடியதாய் பெலினி அக்காட்சியை எடுத்திருப்பார்)

முஸோலினியின் பாஸிசக் காலத்திலேயே ரிற்றாவின் பதின்மம் இருக்கின்றது. குறிம்பிடும்படியான அரசியல்/இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடாமலே சும்மா சில வார்த்தைகள் முசோலினியைப் பற்றிப் பேசியதற்காகவே ரிற்றாவின் தந்தையார் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நெடுநேரமாய் வீடு திரும்பாத கணவனை ரிற்றாவின் தாயார் தேடுவதும், சித்திரவதைக்குள்ளான அவரது உடலின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்து குளிக்கவைப்பதும் போன்ற காட்சிகள் -எத்தனை பிணக்குகள் இருந்தாலும்- அதற்கப்பாலிருக்கும் அற்புதமான மானுட நேசிப்பை ரிற்றாவின் பெற்றோரின் மூலம் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது.


இப்படத்தில் பதின்ம வயதினருடைய வாழ்வியல்முறை இயல்புகெடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெடியங்கள் பாத்ரூமில் புகைபிடிப்பது, செக்ஸை பற்றி கிளுகிளுப்பாய் கதைப்பது, காரொன்றுக்குள் அமர்ந்துகொண்டு தமக்குப் பிடித்த பெண்களை நினைத்தபடி சுயமைத்துனம் செய்வது (அப்படி சுயமைத்துனம் செய்வதை அவர்கள் திருச்சபைக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்பது, அந்நிகழ்வை ஒருவித இன்பத்துடன் கேட்டு பாவமன்னிப்பு வழங்கும் மதகுரு போன்ற நுண்ணிய விமர்சனங்களும் அடங்கும்), தங்களை விட வயது கூடிய பெண்களின் உடல் அங்கங்களை விபரித்து தங்களுக்குள் மகிழ்ந்துகொள்வதென பதின்மர்களுடைய பருவம் இயல்பாய் விரித்து வைக்கப்படுகின்றது.

அவ்வூரில் எல்லோருடைய கனவுக்கன்னியாக இருக்கும் பெண் (Gradisca) முஸோலினியின் அதிகாரத்திலிருக்கும் அதிகாரியொருவருக்கு விடுதியொன்றில் தன்னைக் கொடுக்கின்றார். இறுதியில் அந்தப்பெண் அப்படியான ஒரு அதிகாரியைத் திருமணஞ்செய்து அவ்வூரைவிட்டே போகின்றார். அப்படிப் போகும்போது திரும்பி தன் ஊரைப் பார்த்து பூக்கொத்தை எறிவதும் அதையெடுக்கக்கூட ஒருவரும் இல்லாத தனிமையும், அந்தப்பெண் ஊரைவிட்டுப் போகும் காரை சின்னப்பையன்கள் மட்டுமே கொஞ்சத் தூரம் தூரத்திக்கொண்டிருக்கும் துயரமும் மனதை அசைத்துப் பார்க்கக்கூடியவை.

பெலினி, திருச்சபைகளையும், குடும்ப அமைப்பையும், முசோலினியின் பாஸிசத்தையும் ஒருவித எள்ளல்தொனியுடனே விமர்சிக்கின்றார். கடுமையான மொழியில்/காட்சிகளில் இவற்றை ஏன் முவைக்கவில்லை என்று பெலினியை நோக்கிக் கேட்கலாம் என்றாலும் இப்படம் ஒரு பதின்மனுடைய வயதில் விரிவதால் அவனுக்குள் எற்படும் பார்வைகளைத்தான் பெலினி காட்டுகின்றார் என்றும் வேறொருவர் பெலினியின் சார்பில் நின்று உரையாடவும்கூடும். படத்தில் பனி -பூக்களாய்- விழ ஆரம்பிக்கின்ற காட்சியும், அதுபோல வசந்தம் தொடங்குவதான காட்சியும் மிக அற்புதமானவை. 70 களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இப்படி நுட்பமாக கமரா தன் கலைவண்ணத்தைக் காட்டுகின்றது என்று நினைக்கும்போது வியப்புத் தோன்றாமல் இருக்கமுடியாது.

படத்தின் ஆரம்பம், ஊரே சேர்ந்து ஒரு விழாவை உற்சாகமாய்க் கொண்டாடுவதில் ஆரம்பித்து, இறுதிக் காட்சி Gradiscaவின் திருமணம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மிகச்சொற்பானவர்கள் பங்குபற்றுவதுடன் முடிகின்றது. இங்கே Gradiscaவின் திருமணம் என்பதே வாழ்வின் வீழ்ச்சிக்கான குறியீடுதான். மெல்லியதாய் மழைவருவதும், ஒரு இசைஞன் இசைக்கும் வாத்திய இசை -அது- எவரும் அசட்டை செய்யாத நிசப்தத்தில் அமிழ்ந்துபோவதான இறுதிக்காட்சிகள் மனதைச் சலனமடையச்செய்பவை.

முக்கியமாய், எல்லோரும் தலையின் மேல் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருந்த பெண்ணை(Gradisca) முசோலினியின் ஆட்சியிலுள்ள அதிகாரி ஒருவர் திருமணம் செய்துகொண்டு அந்தப்பெண்ணை ஊரைவிட்டு அழைத்துச்செல்லும்போது, அந்த ஊரின் உயிர்ப்பும் மெல்ல மெல்லமாய் கரைந்துபோவதான உணர்வு எமக்கு வந்துவிடுகின்றது. மேலும், இதை இன்னொருவிதமாய் ரிற்றா தனது பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறுவதான காலத்துடன் இணைத்தும் பார்க்கக்கூடியது. பதின்மத்தைப் போல கொண்டாடக்கூடியதான ஒரு காலம் இனி இளைஞனாகையில் சாத்திமில்லை என்ற குறியீடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

2.

என்னுடைய பதின்மம் ஓரிடத்தில் நிரந்தரமாய் கழியவில்லை. அப்படி ஓரிடத்தில் கழியாததால் பலதைத் தவறவிட்டிருக்கின்றேன் என்ற கவலையுமிருக்கிறது. பதின்மம் - யாழ், கொழும்பு, ரொரண்டோ என்று சிதறிப்போனதில், புதிய இடங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடவே காலம் கழிந்ததால் பதின்மத்தைக் கொண்டாட முடியாமற்போய்விட்டது. அதைவிட பதின்மத்துக்குள் வருவதிற்குள்ளேயே போர் என்னைப்போன்றவர்களை பெரியவர்களாக அடித்து அடித்து பழுக்கச்செய்திருந்தது. போரே வாழ்வான காலத்தில் சுவாரசியமான விடயங்களுக்கும் ஊரில் (யாழில்) குறைவில்லைத்தான்.

எங்கள் ஊரிலும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தார். அவரின் பெற்றோர்கள் அப்போதே ஜரோப்பா நாடொன்றுக்கு குடிபெயர்ந்ததால் இவர் அவரின் தாத்தாவோடு வசித்துக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகில்தான் பாடசாலை. அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப் படித்துக்கொண்டிருந்த ஒருவரோடு இவருக்கு காதல் முகிழ்ந்தது. எங்கள் வீடிருக்கும் ஒழுங்கையில் நின்று ஹொஸ்டலின் பின்பக்க மதிலால் இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தப்பெண்ணுக்கு வெளிநாட்டுப் பயணம் சாத்தியமானபோது, காதலித்த பையனுடன் ஓடுவதற்குத் தீர்மானித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்தப்பெண் செமையாக அடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஒருநாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது இவர் கிணற்றில் குதித்திருந்தார். நாங்களும் 'ஐயோ ...... அக்கா கிணற்றுக்குள் குதித்துவிட்டா, எல்லோரும் ஓடிவாங்கோ' என்று கத்தியபடி கிணற்றை நோக்கி ஓடியிருந்தோம். ஆனால் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த மற்றதொரு ஆழ்ப்பம் (ஆழம்) கூடவாயிருந்த கிணற்றுக்குள் விழாது ... அக்கா ஏன் இந்த ஆழம் குறைந்த கிணற்றில் குதிக்க முடிவுசெய்தார் என்பது விரிவாக விவாதிக்கக்கூடிய புள்ளிதான். பிறகு அந்த அக்கா கிணற்றிலிருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்ததும், கதிரையை எல்லாம் இறக்கி கயிறு கட்டி மேலே எடுத்தது என்று மிகவிரிவாகச் சிலாகிக்கக்கூடியவை (உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வருகின்ற இதே கிணற்றில், வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அண்மையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்டதையும் இங்கே சேர்த்து வாசிக்கவேண்டும்).

அதேபோன்று பதின்மம் ஆரம்பிக்க முன்னர் நடந்த நினைவில் என்றும் அகலமுடியாத சம்பவமும் ஒன்றுண்டு. இந்திய இராணுவ காலத்தில், இந்திய இராணுவமும், அதைச் சார்ந்து நின்று துணை (தமிழ்) இராணுவமும் எங்கள் அண்ணாவைக் கொண்டுபோய் சித்திரவதை செய்தது. அடியென்றால் செம அடி. அண்ணாவை எப்படி விடுவிப்பதென்று எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்ற சமயம். ஒருமாதிரி ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்த எங்கள் உறவுக்காரர் மற்றும் சிலரின் முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அண்ணா அடிகளுடன் திரும்பிவந்தபோதுதான், முதன்முதலாய் எனது பெற்றோர்கள் எங்களுக்கு முன்னால் அழுததைப் பார்த்திருந்தேன். உடலில் பட்ட சித்திரவதைகளுக்கு ஒழுங்காய் மருந்துகொடுக்க முடியாத காலம் அது. சாப்பிடுவற்காய் இருந்த சோற்றைச் சூடாக்கி துணித்துண்டுக்குள் கட்டி ஒத்தடம் கொடுத்ததாயும் நினைவு. அண்ணா எங்களுடன் தொடர்ந்திருந்தால், உயிருடன் பார்ப்பதே சாத்திமில்லை என்ற நிலையில், அவரை கஷ்டப்பட்டு பலாலியில் விமானம் ஏற்றி மாமியொருவர் வசித்துவந்த சிலாபத்திற்கு அனுப்பியிருந்தோம். அப்போதிருந்த பணநெருக்கடிக்காலத்தில் ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ நாங்கள் சேகரிக்கப்பட்ட கஷ்டமும், அண்ணாவை பலாலி விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து எப்படி கவனமாய்க் காரொன்றில் கொண்டுபோய்ச் சேர்த்தோம் என்பதும் ஒரு சிறுகதையாக எழுதக்கூடிய சேதிகள்.

பெலினி சித்தரிக்கின்ற திரைப்படத்தைப்போலத்தான் எங்கள் பலரது பதின்மங்களும் துண்டு துண்டாக பல்வேறு திசைகளுக்குச் சிதறியிருந்தன. ஆனால் கொண்டாட்டத்தை விட, வேதனைகளும் வலிகளும் நிறைந்திருந்தவை அவை. இப்போதும் கூட பின் தொடரும் அத்துயரங்களிலிருந்து தப்பும் வழிதெரியாது அதை சாமர்த்தியமாய் வேறு விடயங்களில் புதைத்துவிட்டு புன்னகையைப் பலவந்தமாய் அணிந்திருப்பவர்கள் நாங்கள். ஆனால், எங்களைப்போன்ற பதினமங்களை கழிக்ககாதவர்கள், சொகுசான மேலைத்தேச இடங்களிலிருந்து (சிலவேளை இந்திய இராணுவத்தை அனுப்பிய தேசத்திலிருந்தும்) கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் அறிவுரை கூறுவதுபோல மேலிடத்திலிருந்து 'மனிதர்களாகுங்கள்' என்று கீதாவுபதேசங்கள் தரும்போது, அடுத்த பிறப்பிலாவது(?) எங்களைப்போன்ற போர் நடக்கும் நாடுகளில் நீங்களும் பிறந்து உங்கள் வாழ்வைக் கழித்துப்பாருங்கள் என்று மனதிற்குள் சபித்துவிட்டு மெளனமாய் நகர்ந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் எங்களுக்கு இருப்பதேயில்லை.


*Amarcord - I remember என்று ஆங்கிலத்தில் அர்த்தம் வரக்கூடியது.

ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும்

Friday, June 29, 2007

நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 )

ப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிருந்தனர். பஸ் வர இனி எத்தனை நிமிடங்களாகும் என்று அட்டவணையைப் பார்த்துச் சலித்து தெருவை வெறிக்கத்தொடங்குகையில்தான் அவளும் பஸ்ஸிற்காய் வருவதைக் கண்டான். அவள் இவனை விட இரண்டு வகுப்பு மேலே படித்துக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும், ‘Boi, do you have (an) extra ticket?’ என்று வினாவ, ‘நான் ரிக்கெட் தாறன்; ஆனால் கொஞ்சநேரம் நீ என்னை அணைத்துக் கொள்ளவேண்டும்’ என்றான் இவன். இந்த வயதுக்குரிய குறும்பு இப்படித்தான் கேட்கும் என்று நினைத்தாளோ என்னவோ இவனை அணைத்துக்கொள்ளத் தொடங்கினாள். அணைத்தபடியிருக்கையில் பஸ் தொலைவில் வருவதைக் கண்டதும், ‘என்னிடம் மீதமிருக்கும் மூன்று ரிக்கெட்டுக்களையும் தாறன். ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் தரவேண்டும்’ என்று அவளது காதுக்குள் கிசுகிசுத்தான். பஸ் கிட்ட நெருங்கும்போது அவனுக்கொரு முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு ஒரேயொரு ரிக்கெட்டை மட்டும் வாங்கிக்கொண்டு பஸ்சினுள் ஏறினாள். அவள் இறங்கும் இடம் வந்தபோது, ‘உனது ரெலிபோன் நம்பரைத் தரமாட்டியா?’ என்று இவன் கேட்க, ‘Baby boi, you’re close to my little brother’s age. don’t ever think of dating me. If you keep botherin’ me, I kick your butt’ என்று சிரித்தபடி அவனை விலத்திப் போயிருந்தாள். என்றென்றைக்குமாய் நினைவுகொள்ள, இவன் பெற்ற முதலாவது முத்தமாய் அது இருந்தது.

பதினாறு வயதாகும்போது குடிக்க ஆரம்பித்திருந்தான். இவனது நண்பர்கள் வட்டத்தில், குடிக்க விரும்பாதவர்களை ஒதுக்கி வைப்பதைப் பார்த்து இவனும் குடிக்க ஆரம்பித்தான். அத்தோடு இவனுக்கும் குடித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் ஏற்கனவே இருந்தது என்பதுவும் உண்மை. பதினெட்டு வயதுக்குப் பிறகுதான் குடிக்க முடியும் என்று அரசாங்கம் கூறினாலும், இவனுக்கும் இவனது நண்பர்களுக்கும் பழக்கமான அண்ணாமார்களின் மூலம் குடிவகைகளின் விநியோகம் தடங்கலின்றி நடந்தது. அதற்கு இவன்கள் அந்த அண்ணாமாருக்குச் செய்யவேண்டியது, அப்படியும் இப்படியுமாய் அலைபாயத்துடிக்கும் இவன்கள் வயதொத்த பெண்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும். புகைக்கவும் குடிக்கவும் தெரிந்த பதின்மவயதுப் பையன்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று ஏனையோரைப் போல இவனும் நம்பினான். புகைபிடித்து புகையை ஸ்ரைலாக வாய்க்குள்ளிருந்து விடுவதைப் படம் எடுத்துக் காட்டி, ‘girl it’s really wicked’ என்று பிற பெண்கள் ஆச்சரியமாய்க் கூறுவதைக் கேட்பதுதான் இவன் படித்த பாடசாலைப் பெண்களில் அப்போது பிரபல்யமாய் இருந்தது. அத்தோடு தங்களுக்கும் சிகரெட் தாவென்று கேட்கும் பெண்களுடன் தொடர்ந்து உரையாடி வார்த்தைகளால் வளையம் போட்டு கழுத்தை இறுக்கி கோழிக்குஞ்சைப் போல அமுக்குவதும் சுலபமாயிருந்தது. ஆனால் இவன், முதன்முதலில் சுற்றித்திரிந்த பெண்ணுக்கும் இவனுக்குமிடையில் கிட்டத்தட்ட நான்கு வயது வித்தியாசமிருக்கும். இவன் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்தப்பெண் வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். படிப்பதற்காய் அரசாங்கம் கடனாய்க் கொடுத்த உதவிப்பணத்தில் பெரும்பகுதியை அவள் இவனுக்காகவே செலவுசெய்வாள். புதுப்புது பிராண்ட் நேம்களுடன் ஆடைகளும், சப்பாத்துக்களும் அணிந்து வருவதைப் பார்த்து அவனது நண்பர்கள் பொறாமைப்பட்டாலும், தான் தன்னைவிட நான்குவயது கூடிய பெண்ணுடன் டேட்டிங் செய்வதைக் கவனமாக மறைத்துக்கொண்டிருந்தான். கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப்பெண்ணுக்கு அவளோடு வளாகத்தில் படித்த பெடியன் ஒருவனோடு காதல் வர இவனிடம் நேரடியாகச் சொல்லியே உறவைத் துண்டித்தாள். இவன் கெட்ட கெட்ட வார்த்தைகளால் எல்லாம் திட்டி, இவ்வளவு காலமும் தன்னோடு திரிந்ததற்கு நன்றியாய் ‘b****’ என்று நாமமும் சூட்டி அனுப்பி வைத்தான். இவனுக்கு அவளது நேசம் இல்லாமற் போகின்றதே என்பதைவிட, தனது செலவுக்கு காசு இனி வராதே என்ற கவலைதான் அதிகம் மனதில் நிரம்பியிருந்தது.

ஒரு நாள் இவனும், இவனது நண்பனும், நண்பனின் கேர்ள் பிரண்டும் கிளப் ஒன்றுக்குப் போயிருந்தனர். அப்போது வெளியே நல்லாய் பனி கொட்டிக்கொண்டிருந்தது. கிறிஸ்மஸ் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தபடியால் எல்லா இடங்களிலும் கொண்டாட்டத்தின் களை கட்டியிருந்தது. சனங்களும் கிறிஸ்மஸ் வந்தால் இருக்கின்ற எல்லாப் பிரச்சினைகளும் தங்களைவிட்டுப் போய்விடும் என்ற மாதிரியான மென்டாலிட்டியோடுதான் இருப்பினம். கிறிஸ்மஸ் முடிந்து புதுவருடமும் பிறந்துவிட்டால் யதார்த்த உலகுக்கு வந்து பெருமூச்சு விட்டபடி அடுத்த கிறிஸ்மஸை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கத் தொடங்குவார்கள். பாலன் பிறந்துகொண்டும், வளர்ந்து கொண்டும் சிலுவையில் அறையப்பட்டும், உயிர்த்து எழுந்துகொண்டும்தான் இருக்கிறார். இது பத்தாது என்று ரூபாக் போன்றவர்கள் கறுப்பு ஜீசஸ் வேண்டுமென்று பாடல்களில் பாடிக்கொண்டு இருந்தமை சிலவேளைகளில் இவனுக்கு எரிச்சலாயிருந்தாலும், கறுப்பு ஜீசஸை புனிதமாக்காமல் தன்னை மாதிரி பலவீனங்களுடன் உள்ள மனிதராய் அடையாளப்படுத்தியது பிடித்துமிருந்தது.

டான்ஸ் கிளப்புகளுக்குப் போவதென்றால் இரவு பதினொரு மணிக்குப் பிறகுதான் வெளிக்கிடவேண்டும். பன்னிரண்டு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்பத் தொடங்கிவிடும். ஒரு மணிக்கு டான்ஸ் உச்சம்பிடிக்கும். இரண்டு மணிக்கு கிளப்பை மூடவேண்டும் என்பது சட்டம் இட்ட நிபந்தனை. ஆனால் எவரும் அதைப் பெரிதாக எடுப்பதில்லை. சிலவேளை இரண்டு மணிக்கு பொலிஸ் வந்து கதவடியில் நிற்கும். ஆனால் ஆடுகின்ற பெண்களைப் பார்த்து மயங்கியோ கிறங்கியோ என்னவோ தெரியாது, இழுத்து மூடு என்று ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அதட்டமாட்டார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று தமிழ் வகுப்பு ஒன்றில் படித்தது இவனுக்கு நினைவில் உண்டு. ஆனால் பொலிஸும் வாயைப் பிளந்து நிற்கும் என்பதை கிளப்புகளுக்குப் போகத்தொடங்கிய பிறகுதான் அறிந்துகொண்டான். ஒரு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்புகிறதென்றால், ஒன்றரைக்கு ஆட்டம் highற்குப் போகும். ‘..grind with me baby’ போன்ற வரிகள் உள்ள பாடல்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத் தொடங்கும். குடிவெறியில் பலபேருக்கு என்ன நடக்கிறதென்றோ அல்லது என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்றோ தெரிவதில்லை. அதுவும் கஞ்சாவைக் கொஞ்சம் இழுத்திருந்தால் நிலைமை பற்றி எதுவுமே விபரிக்க வேண்டியதில்லை. ஹை ஹீல்ஸைப் போட்டுக்கொண்டும் கீழே வழுக்கி விழாமல் எப்படி இசையின் இலயத்துக்கேற்ப பெண்கள் நடனமாடுகின்றார்கள் என்பது இவனுக்கு எப்போதும் ஒரு அதிசய விசயமாய்த்தான் இருக்கும்.

வனது நண்பனுக்கும், அவனது காதலிக்கும் அண்மைக்காலமாய் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறதென்று இவனுக்குச் சாடைமாடையாய்த் தெரியும். ஆனால் பிரண்ட் அவனாய்க் கூறும்வரை எதையும் கேட்பதில்லை என்று இவன் வாளாவிருந்தான். இவனது நண்பன், சில மாதங்களுக்கு முன் தான் அப்போது புதிதாய் மார்க்கெட்டுக்கு வந்த கமரா போன் ஒன்றை கன காசு செலவழித்து, தனது காதலிக்கு வாங்கிக் கொடுத்திருந்தான். நல்ல எக்ஸ்பென்சிவ்வான பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் பெண்கள் காலைச் சுற்றிக் கிடப்பார்கள் என்றுதான் இவனைப் போன்றவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு டான்ஸ் கிளப்பில் நடந்த சம்பவம் அவனது நண்பனின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. இப்படி அடிக்கடி டான்ஸ் கிளப்புக்கு வந்து நண்பனின் காதலிக்கு, அங்கே வருகின்ற ஒரு பெடியனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவள் இவனது நண்பனின் உறவை முற்றாகத் துண்டித்துவிட்டுப் போயிருக்கலாம். அவள் விசர் மாதிரி, இவங்களோடு கிளப்புக்கு வந்துவிட்டு, இரவு டான்ஸ் உச்சத்தை அடையும்போது அந்தப் புதுப்பெடியனோடு சேர்ந்து ஆடத்தொடங்கிவிட்டாள். ஆட்டம் என்றால் சும்மா ஆட்டமல்ல. அதுவும் வேண்டும் என்று இவனின் நண்பனைப் பார்ப்பதும், பிறகு ஏதோ அவனைப் பற்றி நக்கலாய்ச் சொல்லிச் சிரிப்பதும் என்று அவள் செய்தது இவனது நண்பனை இன்னும் கூட கோபப்படுத்திவிட்டது. அன்று நல்லாய் இவங்கள் குடித்துமிருந்தார்கள்.

நண்பன் அந்தப் பெடியனுக்கருகில் போய் சடாரென்று ஒரு உதை கொடுத்தான். அந்தப்பெடியனும் இதை எதிர்பார்க்கவில்லை, வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டான். ஆனால் அவனோடு அவனுடைய நாலைந்து நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் இவனது நண்பனுக்கு அடிப்பதற்காய் சுற்றி வர, கிளப் பவுண்ஸர்கள் வந்து தடுத்துவிட்டார்கள். இவனுக்கு அந்த நேரத்திலும் புத்தி நன்றாக ஓடியது. இனி இந்தப் பெட்டை நண்பனிடம் வரமாட்டாள் என்பது தெளிவாய்ப் புரிந்ததால், அவள் மேசையில் வைத்துவிட்டுப் போயிருந்த புது போனைச் சுருட்டிக்கொண்டு நண்பனுடன் வெளியே வந்துவிட்டான். நண்பனோ அந்தப்பெடியனுக்கு இன்னும் இரண்டு உதைகொடுக்காமல் வீட்டை போய்ச்சேருவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தான். ‘நாங்கள் ரெண்டுபேர்; அவங்களிலை நாலைந்து பேர் நிற்கின்றாங்கள், சமாளிக்க முடியாதடா’ என்றான் இவன். அத்தோடு நல்லவெறியில் நின்றதால், வலுவாய் நின்று அடிபடவும் முடியாது என்பது இவனுக்குத் தெரியும்.

இவங்கள் இப்படி விவாதித்துக் கொண்டிருக்கையில் அவளையும் கூட்டிக்கொண்டு அவங்கள் வெளியே வந்துவிட்டாங்கள். இவனது நண்பன் கார்க்கதவைத் திறந்துகொண்டு ஆவேசமாய் அந்தப்பெடியனை அடிக்க ஓடத்தொடங்கினான். ‘இப்ப போகாதையடா அவங்கள் சாத்திப்போடுவாங்கள்’ என்று இவன் கத்தினான். அவங்கள் ஐந்துபேர். சுற்றி வளைத்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினாங்கள். கழுத்தில் மொத்த சைஸ்ஸில் போட்டிருந்த வெள்ளிச் செயினைக் கையில் சுற்றிக்கொண்டு மாறி மாறி அடித்தார்கள். இவனுக்கு முகத்தில் பயங்கர அடி. பற்கள் எல்லாம் உதிர்ந்து போகின்றமாதிரி வலித்தது. ஆனால் இவனது நண்பனுக்கு இடம் வலம் என்று எதுவும் பார்க்காமல் ஸ்நோவுக்குள் புதையப் புதைய அடித்தார்கள். அடி தாங்காமல் நண்பன் சுருண்டு விழுந்துவிட்டான். அவங்களும் இவன் மயங்கிவிட்டான் என்று அவளையும் கூட்டிக்கொண்டு போய் காரில் ஏறும்போது, ஏதோ வெறி வந்தமாதிரி இவனது நண்பன் தனது காரின் பின் கதவைத் திறந்து கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு போய் அந்தப்பெடியனின் இடுப்பில் குத்தி இழுத்துவிட்டான். இரத்தம் குபுகுபுவென்று பெருக்கத் தொடங்கிவிட்டது. ‘if anyone wanna f*** me, step up yoo’ என்று அவன் இரத்தம் படிந்த கத்தியைப் பிடித்துக்கொண்டு கத்தியதைப் பார்க்கும்போது இவனுக்கே பயமாயிருந்தது. எல்லோரும் பீதியில் உறைந்து போகத் தொடங்கினார்கள். விபரீதத்தை உணர்ந்து முதலில் சுதாகரித்துக்கொண்டது இவன்தான். நண்பனைப் பார்த்து, ‘டேய் பொலிஸ் வரமுன்னம் இந்த இடத்தை விட்டுப்போயிடு, என்னை யார் இதைச் செய்தது என்று பொலிஸ் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடுவன்’ என்று இவன் கூறினான். இவனுக்குத் தெரியும் இவ்வளவு நடந்தாலும் கடைசிவரை அவனது காதலி இவனைக் காட்டிக்கொடுக்கமாட்டாள் என்று. குத்து வாங்கிய பெடியன் தப்புவது கஷ்டம்போல மூச்சுத் திணறி மூர்ச்சையாகத் தொடங்கினான். ஆனால் இவனது நண்பன் அந்த இடத்தை விட்டுப்போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான். ‘அவளும் என்னைவிட்டுப் போய்விட்டாள், இனி என்ன வாழ்க்கை தனக்குத் தேவையாயிருக்கிறது’ என்று விரக்தியாய் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நின்றான். பிறகு பொலிஸ் வந்து நண்பனைப் பிடித்துக்கொண்டு போய் ஜெயிலுக்குள்ளை போட்டது.

குத்தப்பட்ட பெடியன் அதிர்ஷ்டவசமாய்த் தப்பியதால், சில வருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து இவனது நண்பன் வெளியே வந்தான். கொஞ்ச மாதங்களுக்குப்பின் நண்பனுக்கு அருமையானதொரு பெண் காதலியாகக் கிடைத்திருந்தாள். ஆனால் நண்பனோ குடியில் மூழ்க ஆரம்பித்திருந்தான். அதோடு ஜெயிலுக்குள் கிடைத்த சகவாசத்தால் potற்கும் அடிமையாகிவிட்டிருந்தான். நண்பனின் காதலி, இவனிடம் வந்து ‘அவனை போதை மருந்து எடுக்கவேண்டாமென்று அட்வைஸ் செய்யடா’ என்று கெஞ்சுவாள். நண்பனும் கொஞ்ச நாளைக்கு ஓமென்று இருப்பான்; பிறகு தன்னாலை முடியலைடா என்று பழைய பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துவிடுவான். ஒருநாள் over doseஆகிப் போய் இளவயதிலேயே இறந்தும் போனான். நண்பனின் இறுதிச்சடங்கின்போது அவனது காதலி கதறி அழுததைப் பார்த்தபோது இவனுக்குத் தனது நண்பன் அவளுக்காகவேனும் உயிரோடு திரும்பி வரமாட்டானோ என்று நினைக்கத்தோன்றியது. பிறகு அந்தப்பெண் இவனோடு கொஞ்சக்காலம் திரிந்தாள். இவன் எப்படி தன்னை சுதந்திரமானவனாய் காட்டிக் கொண்டாலும், அடிமனசில் கன்னி கலையாத, காதலில் ஒருபோதும் விழாத பெண்ணே துணையாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தான். மேலும் உயர்சாதிப் பெட்டையாக இருந்தால் சொந்தக்காரர்களாலும் பிரச்சினை எதுவும் வராது என்பதும் இவனுக்கு நன்றாகவே தெரியும்.

ந்தப் பெண்ணொடு அவன் பள்ளிக்கூடத்திலை நடந்த multicutlure festivalலில்தான் முதன்முதலாய்க் கதைக்கத் தொடங்கினான். அதற்கு முதல் சிலபொழுது வகுப்புக்களுக்கிடையில் சந்தித்திருந்தாலும் ஒருபோதும் நேருக்கு நேர் உரையாடியதில்லை. அவளுக்கு இவன் வேட்டி கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டு திரிந்ததைப் பார்க்க, சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. அத்தோடு அவளுக்கு கண்டறியாத தமிழ்க் கலாச்சார அடையாளங்கள் புதிதும் கூட. அவள் ஸ்பானியப் பின்புலத்தில் வந்தவள். ஆனால் அவள் அதிகம் தமிழ் கேர்ல்ஸோடுதான் திரிகின்றவள். அவள்தான் இவனுக்கு வேட்டியைச் சுற்றிக் கட்ட உதவி செய்திருந்தாள். நல்லவேளையாக உள்ளுக்குள்ளை டெனிம் ஜீன்ஸ் போட்டிருந்தான். மானம் காப்பதற்கு மட்டுமில்லை, அந்தக் குளிர்காலத்திலை வேட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே போனால் அப்படியே ஒரு சிலையைப் போல உறைந்துவிட வேண்டிவரும் என்ற பயமுந்தான் காரணம். வேட்டி கட்ட உதவிசெய்தபடி, அவள் தனக்கும் சாறி கட்டிப்பார்க்க விருப்பம் இருக்கிறதென்று சொன்னாள். அத்தோடு தங்களின் கலாச்சாரத்திலும் சாறிக்கு நிகரான ஒருவித ஆடை இருப்பதாயும் கிராமப்புறங்களில் அநேக பெண்கள் அதைத்தான் அணிவார்கள் என்றும் கூறினாள். இவனும், ‘சாறி கட்டுவது பெரிய பிரச்சினையில்லை, ஆனால் இன்னொரு மனித உடலையும் காவுகின்ற பாவனையுடன்தான் நீ நடமாடவேண்டி வரும்’ என்று எச்சரித்தான். இப்படி அந்த multicultural dayயில் ஆரம்பித்த பழக்கம் வகுப்புக்களில், வகுப்பு இடைவேளைகளில், மதியவுணவு வேளைகளில் என்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.

எப்போதும் வெள்ளை, பழுப்பு நிறத் தோல் கொண்டவர்கள் உயர்ந்தரக வாழ்க்கை வாழ்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த இவனுக்கு அவளும் தன்னைப் போன்ற ஒரு குக்கிராமத்திலிருந்து வறிய பின்னணியில் வந்திருந்ததை அறிந்தபோது வியப்பாயிருந்தது. அவனுக்கு புரியாவிட்டாலும், ஸ்பானிஷ் மொழி மீது இவனுக்கு ஒருவித நெருக்கம் வரத்தொடங்கியிருந்தது. பிறகு அவளுக்காகவும், மொழியின் வசீகரத்துக்காகவும் இவனும் அவளுடன் சேர்ந்து பாடசாலையில் நடந்த ஸ்பானிஷ் வகுப்புக்குப் போகத் தொடங்கியிருந்தான். இவன் இதுவரை சந்தித்த பெண்களிடம் இருந்து தனித்துவமாய் அவள் இருப்பதாய் உணரத் தொடங்கினான். புத்தகங்களின் மீது அளவு கடந்த பிரியம் அவள் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்கு இன்னும் ஆச்சரியமாயிருந்தது. அதுவும் அவள் வயதொத்த பெண்கள் ரீனேஜ் ரொமாண்ஸ் நாவல்கள் வாசிக்கையில் இவள் இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாவல்களை வாசிப்பவளாயிருந்தது இன்னும் வியப்பாயிருந்தது. இவனுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல, மற்றப் புத்தகங்களை வாசிப்பது என்பது கூட வேப்பங்காய்ச் சுவையாக இருந்தது. லைபிரரிகளுக்கு எந்தத் திசையில் வாசல்கள் இருக்குமென்பதையே அறிய விரும்பாதவனாய்த்தான் இவ்வளவு காலமும் இவன் இருந்தான். அவளோடு பழகத் தொடங்கியபின் chapters, coles என்று புத்தகக் கடைகளுக்குப் போய் புத்தகங்கள் அவளுக்காய் வாங்கிக் கொடுக்கத் தொடங்கினான். ஒருமுறை ‘Lutesong and Lament’ என்ற தமிழாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை இவன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுத்தபோது, ‘நீயும் வாசித்துப் பாரேன்’ என்று அவள் சொன்னபோது, ‘இதிலை என்ன இருக்கிறது என்று வாசித்துவிட்டு நீ சொல் அது காணும், அதற்கு அப்பால் என்னைக் கஷ்டப்படுத்தாதே’ என்றான்.

அவள் தனது தாயோடும், தங்கையோடும், step-dadயோடும்தான் வசித்துக்கொண்டிருந்தாள். தாய்க்கு இவள் இப்படி புத்தகங்கள் வாசிப்பது துண்டறப் பிடிப்பதில்லை. இரவில் மட்டுமில்லை, எல்லாப் பொழுதிலும் இந்த இந்த நேரத்துக்கு இவற்றைச் செய்யவேண்டும் என்ற தாயின் அட்டவணையைத் தவறாது பின்பற்றவேண்டும், இல்லாவிட்டால் தாயிடம் பேச்சுவாங்கித் தாங்காது என்றாள். இவளுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அலாதிப்பிரியம் என்பதால், படுக்கைப் போர்வைக்குள் சின்ன ரோச் லைட்டை எரியவிட்டு வாசிப்பதாயும், சிலவேளைகளில் எல்லா லைட்டுகளையும் அணைத்துவிட்டு கொம்பியூட்டர் மொனிற்ரர் வெளிச்சத்தில் வாசிப்பதாயும் இவனிடம் கூறியிருந்தாள். நல்லாய் வகுப்புக்களில் மார்க்ஸ் எடுத்துக்கொண்டிருந்தவள் பிறகு வந்த தவணைகளில் மார்க்ஸ் குறைய எடுக்கத் தொடங்கியிருந்தாள். இவன் என்ன காரணம் என்று கேட்டபோது முதலில் ஒன்றுமில்லை என்றாள். பிறகு உருக்கிக் கேட்டபோது தனது வீட்டுப் பிரச்சினையைக் கூறத் தொடங்கினாள்.


அவளது வளர்ப்புத்தந்தை ஒரு தந்தையைப் போல பழகுவதில்லை எனவும், தன்னைப் பலதடவைகள் தொட முயன்றதாகவும், சமையலறையில் வேலை செய்யும்போது தனக்கு உதவி செய்வதுபோல தன்னிடம் நெருங்க முயல்வதாகவும் கூறினாள். ‘நீ இதை உனது அம்மாவிடம் கூறலாந்தானே?’ என்று இவன் கேட்க, ‘அவாவுக்கு அவர் நல்ல மனுஷன் என்று நினைப்பு. தான் எது சொன்னாலும் செவி கொடுத்துக் கேட்பதில்லை. தான் ஏதோ மனப்பீதியில் திரிவதாய் அவர் அதை அலட்சியம் செய்துவிடுகின்றார்’ என்றாள். அத்தோடு அவளது வளர்ப்புத்தந்தைக்கும், தாயிற்கும் ஒரேநேரத்தில் வேலை நேரம் இருப்பதில்லை என்பதால் இவள் தனித்து நிற்கும்போது abuse செய்ய முயல்வாராம். பல சமயங்களில் அவர் தன்னுடைய அறைக்குள் வந்தால், உடனே ஓடிப்போய் பாத்ரூம் கதவை இழுத்து மூடிவிட்டு அதற்குள் அழுதபடி இருந்தாய் சொன்னாள். இவன், ‘அப்ப நான் பொலிஸுக்கு இதை அடித்துச் சொல்லட்டா?’ என்று கேட்க, ‘நான் செத்தாப்பிறகு அதைச் செய்’ என்று வெடுக்கென்று பேசினாள். ‘அவரைப் பொலீஸ் பிடித்துக்கொண்டு போனால், அம்மா தன்னைச் சும்மா விடமாட்டார்… தன்னோடு சேர்க்கவும் மாட்டார். இதைவிட அவலமான வாழ்வைத் தெருக்களில் வாழவேண்டிய நிலைதான் தனக்கு வருமென்றாள். ‘சரி, அதற்கும் உனது பரீட்சை பெறுபேறுகள் குறைவதற்கும் என்ன தொடர்பு?’ என்று வினாவியபோது, ‘அம்மாவுக்கு நான் நல்லாய்ப் படித்து வெளிவரவேண்டும் என்பதுதான் ஆசை. அவாவின் ஆசைக்கு அடிபணிந்து கொடுக்கக்கூடாது என்பதற்காய்த்தான் வீம்பாய் படிக்காமல் குறைய மார்க்ஸ் எடுக்கிறேன்’ என்றாள். ‘விசரி, நீ இப்படி படிக்காமல் இருந்தால் உன்னுடைய எதிர்காலம் அல்லவா சீரழிந்து போகப்போகிறது. அதோடு நீயொரு டிப்ளோமாவை எடுத்தாயென்றால், இலகுவாய் வீட்டைவிட்டு வெளியே போய் ரெசிடண்டில் இருந்துகொண்டு மேற்கொண்டு வளாகத்தில் படிக்கமுடியும், பிறகு ஒருத்தரின் தொல்லையும் இருக்காது அல்லவா?’ என்றான் இவன். அவள் இதைப் பெரிதாய்க் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது இவனுக்கு கொஞ்சம் கோபமாயும் நிறையக் கவலையாகவும் இருந்தது.

அவன் அவளை முத்தமிடும் அநேக பொழுதுகளில் ஒருவித வாசனை அவள் வாயிலிருந்து வருவதை அவதானித்திருந்தான். கிட்டத்தட்ட தமிழாக்களில் பருப்புக்கறி சாப்பிட்டால் உள்ளி வாசத்துடன் எப்படி வாய் மணக்குமோ அப்படி ஸ்பானிய ஸ்பைசி உணவொன்றின் வாசம்தான் அது. ஆரம்பத்தில் weirdயாய் இருந்தாலும், பிறகு அந்த வாசம் அவனுக்கும் பிடித்துப் போய்விட்டது. ஆனால் அவன் ஒவ்வொருமுறையு முத்தமிட்டபிறகும் ‘ewww’ என்று உதட்டைச் சுழிப்பான். அவளும் ’sorry, sorry! chewing gum போட மறந்துவிட்டேன்’ என்று கெஞ்சியபடி இவனது தலையைக் கோதிவிடுவாள். இந்த அழகையும் அவளது சின்னப் பதட்டத்தையும் இரசிப்பதற்காகவே, பிறகு முத்தமிடும்போது வாசம் வராதபோதும் வேண்டுமென்றே இவன் உதட்டைச் சுழிக்கப்பழகியிருந்தான்.

ருநாள், தனது வீட்டில் தாய் வேலைக்குப் போய்விட்டார்; வளர்ப்புத் தந்தையும் உறவினர் யாரையோ சந்திக்க இன்னொரு நகருக்குச் சென்றுவிட்டார்; வீட்டை வா, எங்கள் கலாச்சாரத்து உணவை உனக்குச் சமைத்துப் பரிமாறவேண்டும் என்றாள். ‘சரி நான் வாறன், ஆனால் பிறகு தமிழாக்களின் உணவை உனக்குச் சமைத்துத் தரவேண்டும் என்று என்னிடம் கேட்காமல் இருக்கவேண்டும்’ என்றான். ‘சரி சரி பயப்பிடாதே, எந்தச் சமூகத்திலும் இந்த ஆண்கள் சோம்பறிகள்தானே, இது எங்களுக்குத் தெரியாதா என்ன?’ என்று நக்கலடித்தாள். நல்ல சுவையான ஸ்பானிய உணவுகளைச் சமைத்திருந்தவள், வீட்டின் பின்புறத்தில் பூத்திருந்த பூக்களைக் கொண்டு அழகாய் சாப்பாட்டு மேசையை அலங்கரித்துமிருந்தாள். தெளிவான ஸ்ரியோ ஸிஸ்டத்தில் அதிகம் அதிராத ஸ்பானிய இசை பரவியபடி இருந்தது. ஒரே விதமான தமிழ்ச் சமையலை நுகர்ந்த இவன் மூக்குக்குள் அவள் சமைத்த உணவு வகைகள் நறுமணத்தைப் போல இறங்கிக்கொண்டிருந்தன. அறுசுவை உணவுகள் மட்டுமல்லாது, ஒரு பிரியத்துக்குரிய பெண்ணின் அன்பை உள்வாங்கி இரசிக்கும் எந்தப்பொழுதும் அருமையாய்த்தானிருக்கும் போல என்று இவன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டென்பதால், அவள் ஸோபாவிலும், இவன் அவள் மடியில் தலையைச் சாய்த்தபடியுமிருக்க teenage crushesஐ நகைச்சுவையாக எடுத்த ஒரு படத்தை இருவருமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருவரும் உறக்க நிலைக்குப் போயிருப்பார்கள். தடதடவென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இவன் நினைத்தான், சரி இண்டைக்கு எங்கடைபாடு அவ்வளவுதான் என்று. அவள் அந்த நேரத்திலும் பதட்டப்படாமல், ‘கெதியாய் ஸூவைப் போட்டுக்கொண்டு பின்பக்கம் உள்ள பேஸ்மெண்ட் கதவைத் திறந்து ஓடிப்போய்விடு’ என்றாள். இவனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டநிலையில் பின்பக்க வாசலால் ஓடியது மட்டும்தான் நினைவிலிருந்தது. ஒரு பஸ் ஸ்ராண்டை அடைந்தபிறகுதான் இவனுக்கு மூச்சுவிடும் சத்தமே கேட்டது. அங்கே நின்று கொண்டு ஒரு இருபத்தைந்து சதம் போட்டு அவளுக்கு ரெலிபோன் அடித்தான். தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும், அவளது வளர்ப்புத் தந்தைதான் கார் ரயர் பழுதாகி இடைநடுவில் பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கின்றார் என்றாள். ‘விசரா, ஓடுகின்ற வேகத்தில் உன்னுடைய ஸ்வெட்டரை விட்டுவிட்டு போய்விட்டாய், நல்லவேளை நான் அதை எடுத்து எனது ரூமுக்குள் வைத்துவிட்டேன்’ என்றபோதுதான் இவனுக்கு குளிருக்குள் ஸ்வெட்டர் இல்லாது நிற்பது தெரியவந்தது. ‘அது சரி, இந்த நாற்றம் பிடித்த ஸ்வெட்டரை எத்தனை நாட்களாய்த் தோய்க்காமல் போட்டுக்கொண்டு திரிகிறாய்?' என்று கேட்டுவிட்டு, சரி, நான் அதை வடிவாய் தோய்த்துவிட்டு நாளை கொண்டுவந்து தருகிறேன்’ என்று அவள் சொல்ல, இவன், ‘இன்னும் கனக்க உடுப்புக்கள் இப்படித்தான் வீட்டில் தோய்க்காமல் கிடக்கிறது, அதையும் கொண்டுவந்து தரட்டா?’ என்று கேட்க, அவள் கெட்ட வார்த்தை ஒன்றால் திட்டிவிட்டு போனை வைத்தாள்.

அப்போதுதான் கோடைகாலம் ஆரம்பித்து கொஞ்ச வாரங்கள் ஆகியிருந்தன. அந்தத் தவணைக்கான இறுதிப்பரீட்சைகள் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தநிலையில், அவள் உப்பிய கன்னங்களோடு தலைமயிரைக் கூடச் சரியாக வாராமல் வகுப்புக்கு வந்திருந்தாள். ‘உனக்கு என்ன நடந்தது?’ என்று இவன் அவளைப் பார்த்துக் கேட்க, பொலபொலவென்று வகுப்புக்குள்ளேயே அழத்தொடங்கிவிட்டாள். மெல்லியதாய் நெஞ்சில் அணைத்துக்கொண்டு அழுது முடியட்டும் என்று இவன் காத்திருந்தான். பிறகு வகுப்புக்கு வெளியே கூட்டிக்கொண்டுபோய் ‘என்ன நடந்தது என்று சொல்?’ என்றான். தனது ரூமுக்குள் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது வளர்ப்புத் தந்தை தன்னை முத்தமிட்டதாகவும், தான் திடுக்குற்றெழுந்து திமிறியபோது தனது கன்னங்களில் அறைந்ததாகவும், இப்படிச் செய்தால் பொலீசுக்கு சொல்லிவிடுவேன் என்று தான் சொல்ல, உனக்கு கனக்கப் பெடியங்களோடு தொடர்பிருக்கிறது; அதைக் கண்டுபிடித்து கண்டிக்கத்தான் இப்படி ஒரு பொய்யைத் தன்மேல் சுமத்துக்கிறாள் என்று பொலிசுக்கும், இவளது தாயுக்கும் கூறுவேன் என்று வளர்ப்புத் தந்தை பயமுறுத்தியதாகவும் கூறினாள். ‘சரி, நீ பொலீஸுக்கு இந்த விடயத்தைக் கூறினாயா?’ என்று இவன் கேட்க, ‘என்னால் எப்படி அவர் இவ்வளவு சொன்னபிறகும் அதைச் செய்யமுடியும்?’ என்று சின்னப்பிள்ளை போல அவள் திரும்பிக்கேட்க, இவன் ஆத்திரத்தில் ‘f*** you’ என்று பேசிவிட்டு அவளை அநாதரவாய் விட்டுவிட்டுப் போய்விட்டான். பிறகு அவளது நிலையில் நின்று பார்க்க அவளின் கையாலாகாத நிலை புரிந்து திரும்பிப்போய் அவளிடம் கூறினான், ‘ok, இனி உனக்கு ஒரு பிரச்சினையும் வளர்ப்புத்தந்தையால் வராது, கவலைப்படாதே' என்றான். ‘போலீசுக்கு இதைச் சொல்லப்போகின்றியா?’ என்று அவள் கேட்க, ‘இல்லை, இதனால் உனக்கு எந்தப்பிரச்சினையும் வராது என்னை நம்பு’ என்று சொன்னானே தவிர, அவள் எவ்வளவு கேட்டும் இவன் என்ன செய்யப்போகின்றான் என்று கூறவில்லை.


மதியவுணவு இடைவேளையின்போது அவளுக்குச் சொல்லாமல், இவன் அவளது வீட்டுக்குப்போனான். இவனுக்குத் தெரியும், அந்த நேரத்தில் வீட்டில் அவளது வளர்ப்புத் தந்தை நிற்பார் என்று. அவர் வீட்டுக் கதவைத் திறக்க, இவன் அவரை வெளியே இழுத்து விழுத்தி, கொண்டுபோன பேஸ்போல் மட்டையால் சரமாரியாக அடித்தான். மண்டை உடைந்து இரத்தம் வடிய மனுஷன் அலறத்தொடங்கினார். ‘இனியும் அவளைத் தொடமுயன்றாய் என்றால் உன்னைக் கொல்லாமல் விடமாட்டன்’ என்று தூசணத்தால் திரும்பிக் கத்திவிட்டு பாடசாலைக்குப் போயிருந்தான்.

அன்றிரவே இவனைத் தேடி பொலீஸ் வீட்டுக்கு வந்தது. வளர்ப்புத் தந்தை இவன் மீது குற்றச்சாட்டைக் கொடுத்திருக்கின்றார். அவளும் பயத்தில் இவனது பெயரைச் சொல்லியிருக்கிறாள். ஜெயிலில் இரண்டரை வருடம் இருக்கவேண்டும் எனத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பதினெட்டு வயது நிரம்பாததால் முதல் வருடம் வேறிடத்திலும், பதினெட்டு வயது வந்தவுடன் வேறொரு இடத்துக்கும் மாற்றப்பட்டான். ஜெயிலில் இவன் இருக்கும்போதுதான், ஏன் இறந்துபோன தனது நண்பன் பிறகு போதை மருந்துக்கு அடிமையாகி இறந்துபோனான் என்ற உண்மைக் காரணத்தை அறியக்கூடியதாக இருந்தது. அங்கேயிருந்த இவனைவிட வயதில் இரண்டு மடங்கு கூடிய thugs களும், Gangsters களும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை மீறி எதுவும் செய்யமுடியாது. வன்முறை என்பது அவர்களுக்கு விளையாட்டுப் போல இருந்தது. தினமும் யாரையாவது கொழுவ வைத்து அடிபடச்செய்து இரசிப்பார்கள். சிலவேளைகளில் இரவு நேரத்தில் தூக்கத்திலிருக்கும் இவனது காற்சட்டைகளுக்குள் கைகளை நுழைத்தோ அல்லது தங்களது பின்பக்கங்களை வைத்துத் தேய்த்துக்கொண்டோ இருப்பார்கள். முரண்டு பிடித்தால் இரத்தம் வரும்வரை அடிப்பதை நிறுத்தாமல் விடமாட்டார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் சில பொலிசார் இதைத் தெரிந்துகொண்டும் அமைதியாக இருந்ததுதான். இப்படி தனிமையுடனும், சித்திரவதைகளுடனும் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும் போல இவனுக்குத் தோன்றியது. அதுவே இவனைப் புத்தகங்களை வாசிக்கத் தூண்டியது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க, ஏன் அவள் தன்னைப் புத்தகங்களில் தொலைத்துக் கொண்டிருந்தாள் என்ற காரணம் இவனுக்குப் புரியத்தொடங்கியது. புத்தகங்கள் சிலவேளைகளில் கற்பனா உலகத்தைச் சிருட்டித்தாலும், யதார்த்தத்திலிருந்து தப்புவதற்கு அவை இலகுவான வழியைத் திறந்துகாட்டியபடி இருந்தது இவனுக்குப் பிடித்திருந்தது. அங்கேதான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்பானிஷ் மொழியையும், பிரெஞ்ச் மொழியையும் அறிந்துகொள்ளத் தொடங்கினான். ஆங்கிலத்தை விட அவை எவ்வளவோ செழுமையும் அழகும் நிறைந்தவை என்பதை உணரத்தொடங்க, அவளை நினைத்துக் கவிதைகளும் இவன் எழுதத் தொடங்கினான். என்றாலும் இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் தன்னைத் தேடி அவள் ஒருதடவை கூட வரவில்லை என்பது இவனுக்கு உறுத்தலாய் இருந்தது. அவ்வப்போது வரும் நண்பர்களிடம் அவளை பற்றி விசாரிக்கும்போது, அவளது குடும்பத்தினர் வீடுமாறிப் போனதால் பாடசாலைக்கு அவள் வருவதில்லை எனவும் தங்களால் அவளைத் தொடர்புகொள்ள முடியாதிருக்கின்றது என்றும் கூறினார்கள். இரண்டரை வருடங்களாய் இருந்த சிறைத்தண்டனை இவனது ‘நன்னடத்தை' காரணமாக இரண்டு வருடங்களுக்குள் முடிந்திருந்தது.

வன் ஜெயிலில் இருந்து, வீடு போய் ஒருவாரம் இருக்கும். அவள் தொலைபேசியில் அழைத்தாள். தான் ‘நாளை இந்த பஸ் ரெமினலில் வந்து நிற்பேன், அங்கை வந்து என்னைச் சந்தி. இப்போது முந்நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேறு ஒரு நகரத்தில் இருப்பதால் என்னால் எல்லாவற்றையும் கதைக்க முடியாது’ என்றாள். ‘சரி நான் நாளை வருகின்றேன், உனக்கு இப்போது எந்தபிரச்சினையும் இல்லையா?’ என்று கேட்டபோது அவள் ‘இல்லை’ என்றாள்.

அடுத்த நாள் காலையில், அவள் பஸ் ரெமினலில் இரண்டு ட்ரெவலிங் பைகளுடன், ஒரு சிறிய தோற்பையுடனும் வந்திறங்கினாள். ‘இனி நான் உன்னோடு தங்கப்போகின்றேன்’ என்றாள். ‘என்னோடயா?’ என்று இவன் சற்று ஆச்சரியமாய்க் கேட்டான். ‘ஏன் உனது அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதா?’ என்று திரும்பிக் கேட்டாள். ‘இல்லை, அம்மாவுக்கு ஒரு பிள்ளையாய் என்னைப் பெற்றதற்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கமுடியுமோ அவ்வளவும் கொடுத்துவிட்டேன். இவ்வளவு நடந்தபிறகும் என்னை ஏற்றுக்கொண்டவர் அவர். உன்னை ஏற்றுக்கொள்வதில் அவர் தயங்கமாட்டார்’ என்றான். ‘பிறகேன் யோசிக்கிறாய்?’ என்று அவள் கேட்க, ‘இல்லை, உனது வளர்ப்புத் தந்தையும் அம்மாவும் என்ன செய்வார்களோ தெரியாது' என்றபோது, ‘ஓ.. உனக்குப் பிறகு நடந்த கதை தெரியாது என்ன, சொல்லுறன் கேள்' என்றாள்.

உன்னைப் பொலிஸ் பிடித்துக்கொண்டுபோன சில நாள்களுக்குள் எனது வளர்ப்புத் தந்தை இந்த நகரத்தில் இருக்கமுடியாது, வேறொரு நகருக்குப் போவோம் என்று வெளிக்கிட்டுவிட்டார். ஏனென்றால் அவருக்குத் தெரியும், உன்னை ஜெயிலுக்குள் பொலிஸ் போட்டுவிட்டால், உனது நண்பர்கள் தன்னைச் சும்மா விடமாட்டார்கள் என்று. ஆனால் மற்ற நகரத்துக்குப் போனாபிறகும் அவருடைய சேட்டைகள் தொடர நான் பொலிசுக்கு அடித்துச் சொல்லிவிட்டேன். அவர்கள் அவர் மீது கேஸ் பதிவு செய்து என்னோடு இனி அவர் தங்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்கு இதனால் என் மீது சரியான கோபம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, இப்படி வீட்டுப்பிரச்சினைகளால் வீட்டைவிட்டு போகின்றவர்களுக்கு அடைக்கலம் தரும் ஷெல்ட்டருக்குப் போய்விட்டேன். இன்னொரு நகரத்துக்குள் நின்றதால் என்னால் உன்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்தோடு நான் தங்கிநின்ற ஷெல்ட்டருக்குப் பொறுப்பான பெண்மணிக்கு உனது பிரச்சினையும் தெரியும். எனவே நீ ஜெயிலுக்குள் இருக்கும்வரை உன்னோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார்கள். ‘பரவாயில்லை, நீ என்னைத் தொடர்பு கொள்ளாததில் எந்தப் பிரச்சினையுமில்லை. உனது வளர்ப்புத் தந்தையின் சித்திரவதைகளில் இருந்து நீ தப்பியிருந்தது எனக்கு நிம்மதியைத் தருகின்றது’ என்றான் இவன். பிறகு அவள், ‘எனது பொறுப்பதிகாரியின் மூலம், உனக்கு எப்போது சிறைத்தண்டணை முடிகிறதோ அப்போது எனக்குத் தெரியப்படுத்தச் சொன்னேன். அவர்களும் இப்போது தெரிவித்திருந்தார்கள். அத்தோடு எனக்கு பதினெட்டு வயதும் முடிந்துவிட்டதால் ஷெல்ட்டர் பொறுப்பதிகாரி எனக்கு விருப்பமான முடிவை எடுக்க அனுமதி தந்தார்' என்றாள்.

இப்போது மெல்லியதாய்க் குளிரத் தொடங்கியிருநது. இலைகள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் பழுக்கத் தொடங்கியிருந்தன. பாடசாலையில் இருந்தபோது பழுப்பு நிற வானத்துடன் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்ததை குழந்தை மனசுடன் இரசித்துக்கொண்டிருந்தது இவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அவளை அணைக்கவேண்டும்போல, ‘எவரது வன்முறையும் இல்லாது இயல்பாய் நீ வாழ துணையாயிருப்பேன்’ என்று சொல்லவேண்டும் போலத் தோன்றியது. அவளுக்கும் புரிந்ததோ என்னவோ, அவனை இழுத்து முத்தம் கொடுக்கத் தொடங்கினாள். இடைநடுவில் ‘ewww’ என்று இவன் உதட்டைச் சுழிக்க, ‘Don’t be lying boi, I didnt even eat spanish dishes for a while’ என்று இவனது நெஞ்சில் மெல்லியதாய் அடிகள் கொடுத்தாள். இனி தான், double shift அடித்தென்றாலும் கொஞ்சம் பணத்தைச் சேமித்து, அவள் சிறுவயதில் விளையாடித்திரிந்த சொந்தத் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்ற ஆசை இவனில் பெருகத் தொடங்கியது. அங்கே போனால், களங்கமில்லாத அவளது சிறுவயது நினைவுகள், பதின்மங்களில் பெற்ற காயங்களை, கடல் அலைகளைப் போல கழுவிக்கொண்டு போகக்கூடுமென்றும் நம்பினான்.

உதிர்ந்துகொண்டிருந்த ஒரு மேப்பிள் இலை அவளது தலைமயிரில் சிக்கிக்கொள்ள அதை எடுத்துவிட்டபடி இவன் சொன்னான், ‘உனக்குத் தெரியுமா? நான் இப்போது நல்லாய்ப் புத்தகங்கள் வாசிக்கிறனான். ஏன் கவிதைகள் கூட உனக்காய் எழுதியிருக்கின்றேன்’ என்று. அவள் இவனது விரல்களைக் கோர்த்தபடி, ‘எனக்குத் தெரியும், நீ எப்ப என்னை நேசிக்கத் தொடங்குகின்றாயோ அப்போதே புத்தகங்களில் அமிழத் தொடங்குவாய்’ என்றாள் புன்னகைத்தபடி.

(2005)

xx/xx/20xx

Thursday, June 28, 2007

உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் தொடராமல் இருக்கும் என்பற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. அது ஆடையில் அப்பிக்கொண்ட உருக்கப்பட்ட தாரைப்போல அகற்றமுடியாதிருக்கின்றது. உனக்கான தெரிவுகளைத் தெரிவு செய்த நீ அதற்கான விளைவுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று இருத்தலியம் கூறக்கூடும் உனக்கான முற்பிறப்பின் பாவங்களின் ஊழ்வினையை நீ அனுபவிக்கத்தான் வேண்டுமென மதங்கள் வேறொரு திசையில் நின்று விளம்பவும்கூடும். ஆனால் உன் நிலை பரிதாபமானது, எனெனில் நீயிரண்டிலும் இல்லை. இந்த மற்றதுகள் நீ மூர்க்கமாய் நிராகரித்தவை அல்லது உன்னை அவை நிராகரித்தவை. ஆகவே நீ இவற்றைச் சொந்தம் கொண்டாடி ஒரு மூலையில் இருந்துகொண்டு இவை குறித்து எழுதப்பட்ட பிரதிகளைப் புரட்டி புரட்டி சமாதானமாகிவிடமுடியாது. நீ சாதாரணமானவன், உனக்கான பலங்களை விட பலவீனங்களுடன் இயங்கிக்கொண்டிருப்பவன். இந்த நாளின் இந்தக்கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்றெண்ணியபடி கழிவிரக்கமுள்ள நேற்றிலும் நிச்சயமற்ற நாளையிலும் பொழுதுகளை விரயமாக்கிகொண்டிருப்பவன். செய்யவேண்டிய காரியங்களையோ எதிர்கொள்ளவேண்டிய சவாலகளையோ தட்டிக் கழித்தபடி எனது இயல்புநிலை குலைகின்றதென முணுமுணுத்தபடி நள்ளிரவு ஆந்தைகளோடு கரியவிருளில் உனது வழிகளைத் தொலைப்பவன். நீ மிகவும் இயலாத சந்தர்ப்பங்களில் உன்னை விமர்சிக்கத் தொடங்குகின்றாய். ஆனால் அந்த வாசிப்புகள உனது தவறுகளைத் திருத்தமுடியாமல் அறிவியலிலோ ஆன்மீகத்திலோ காரணங்களை உனது விளைவுகளுக்கு தேடத் தொடங்கும்போது நீ உன்னையல்ல பிறரைத் தான் விமர்சிகின்றேனெனும் புரிதலையடைந்து மீண்டும் அபத்தங்களின் நுண்ணிய வட்டங்களுக்குள் சிக்கிவிடுகின்றாய். யாருக்கும் உயர்ந்தவனுமல்ல தாழ்ந்தவனுமல்ல என்று கூறத்தொடங்கும்போதே நீ யாருகோ உயர்ந்தவனாகவும் யாருக்கோ தாழ்ந்தவனாகவும் இருக்கத் தொடங்கிவிடுகிறாய். மதம், இனம், சாதி, காலசாரம் போன்றவற்றை மிகவும் மட்டந்தட்டியபடி, ஆனால் அப்படிக்கட்டுக்களோடு இருப்பவர்களால் எப்படி இப்படி நிம்மதியாக வாழமுடிகின்றது என்பதை உள்ளுக்குள் பிரமிக்கவும் செய்கின்றாய். உலகமற்ற உலகில் உண்மையற்ற உண்மையில் நீயற்ற நீ சாத்தியம்தானா என்றெல்லாம் யோசித்துப்பார்க்கத் தொடங்குகின்றாய். உண்மையற்ற உண்மை நீயற்ற நீயின் மேலேறி நின்று தொடர்ந்து பேசவிடாது தவிர்க்கச் செய்கிறது. அபத்தஙகளோடு வாழ்வது பல சிக்கலகளுக்கும் புதிர்களுக்கும் அழைத்துச் செல்லும் எனவெண்ணும் நீ உன் காலகளிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதுமிருக்கும் மயிர்களை சிலவேளைகளில் வேதனையோடும், பல சமயங்களில் ஒருவித கிளுகிளுப்பான இன்பத்தோடும் பிடுங்கியெறியத் தொடங்குகின்றாய். அவ்வாறு செய்வதால் உனது அடையாளங்களைத் தொலைத்து உன்னைப் பின் தொடர்ந்து வரும் அபத்தப் பிசாசுகளின் நிழல்களிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றாய். பின் குவிந்துகிடக்கும் மயிர்களை எரியூட்டி உனது பிரதியை அழித்துவிட்டேன் என நீ நடனமாடிக் குதூகலிக்கும்போது எரியூட்டப்பட்டவை தனக்கான பிரதியை எழுதிக்கொள்கிறது. அதில் முழுதும் உன்னைப்பற்றிய விபரங்கள் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது உன்னை மிகவும் அச்சுறுத்துகிறது. உன் கனவுகளுக்குள் இருக்கும் கள்வனையும், காமுகனையும், போதைக்கு அடிமையாகுபவனையும் அது வெளிப்படுத்திக்கொள்ள நீ நிர்வாணமாக்கப்படுவது அறிந்து அதிர்கிறாய். மேலும் நிர்வாணம் என்பது மிகப்பெரும் விடுதலையென்ற எளிய புரிதல் கூட இல்லாது மிகவும் கோபிக்கத் தொடங்கி, இந்தப்பிரதியிற்கு எதிர்ப்பிரதியை உனது தோலைக் கிழித்து உன்னை நியாயமாக்கும் வகையில் எழுதத்தொடங்குகின்றாய். சிலவேளைகளில் உனது பிரதியிலிருந்து எழும் குரல்கள் இவை பொய்கள் என்று உரத்துக்கொடுக்கும்போது அந்தப்பக்கங்களைக் கிழித்து கிழித்து கரப்பான் பூச்சிகளைப்போல காலில் வைத்து தேய்த்தழிக்கிறாய். இவ்வாறான இரண்டு பிரதிகளுக்கு அப்பால் காலம் தன் மூன்றாவது பிரதியை எழுதுகிறது. அங்கே, 'நீ உனக்கு நேர்மையாக இருந்தாய்' என்ற கல்லறை வாசகம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதைத்தாங்க முடியாத நீ கடற்கரையை நோக்கி ஓடும்போது குளிர்ப்பருவத்தின் முதல் பனி, மயிரும் தோலுமில்லாத உனது உடலில் ஒரு பெரும் வெடிகுண்டைப் போல விழுந்துவெடிக்கின்றது.. காற்று, இரத்தம் பாய்கின்ற நாடிகளில் நுழைந்து குரூரத்தின் இசையை வாசிக்கிறது. அலைகளை, கடல் துப்பித் துப்பியெறிய நீ எழுதிய இரண்டாவது பிரதி கரையத் தொடங்குகின்றது. அது ஒரு படகைப் போல மெல்ல மெல்ல அசைந்து செல்வதைப் பார்க்கையில் உனது இருத்தலை மீள நிர்மாணிப்பதற்கான கடைசித் துருப்பு என விளங்குகின்றபோதும் வெறித்தபடி நீ வாளாவிருக்கிறாய். பின், உனது மற்றவர்கள்/மற்றதுகள் உன்னையின்னும் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் அச்சத்தில் நீ நண்டுகள் நிறைய நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழியினுள் உன்னைப் புதைத்துக்கொள்கின்றாய். அங்கேயும் குடும்பம், உயர்வு/தாழ்வு, அமைப்புகள், இதுவே சிறந்ததென்கின்ற தத்துவ வியாபாரங்கள் இருப்பதைப் பார்த்து உனது வாழ்வின் அபத்தங்களுக்கு என்றுமே தீர்வில்லையெனத் தெளிவடைகிறாய். ஆனால் அங்கிருந்த நண்டுகளின் இராணி நண்டு உனது மயிர்களும் தோலுமில்லாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை முலைகளைப் போல உறிஞ்சத் தொடங்கும்போது நீ ஆணும்/பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வர நிலையை அடைந்துவிடுகின்றாய். உன் இதயம் உறிஞ்சப்படும் ஒவ்வொரு முறையும் நீ உலகெங்குமுள்ள மனம்பிறழ்ந்தவர்களின் துயர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கின்றாய். துயரங்களுக்கும், பாரிய வன்முறைக்கும் அப்பால் அவர்கள் தமக்கான உலகில் தாங்களாக வாழ்வதைப் பார்த்து அவ்ர்களில் ஒருவனாய் என்றைக்குமாய் இருந்துவிடத் துடிக்கிறாய். எனினும் அதுவாக மாறுதல் அல்ல அதுவாக ஆகுதல் என்பதே உண்மையான உனகான மீட்சி என்று கூறி இதயமுறிஞ்சிய இராணி நண்டு உன்னை குழிக்கு மேலே தூக்கியெறிந்துவிடுகிறது. பனிவிழுந்து ஈரஞ்சிலிர்த்திருக்கும் மணலில் வந்தொதுங்கிய பாசியொன்று உன்னோடு உரையாடத் தொடங்கும்போது உனக்கு மீண்டும் மயிர்களும் தோலும் வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அச்சமடைகிறாய். ஒரு உச்சக்கட்ட புணர்வு தரும் இன்பத்திற்கு நிகரான உற்சாகத்தில் நீ நட்சத்திரமொன்றில் சுருக்குப்போட்டு நிலவு நாற்காலியை உதைத்துதுன் கால்களை விடுவித்து விடுதலையைத் தேடிக்கொள்கின்றாய். உனது இனி உனதல்லாத உடலம் பிரபஞ்சப் பெருவெளியில் அலையத்தொடங்குகிறது நடுநடுங்கியபடி.

2.
தொடர்ந்து துயரம் மழையைப் போல இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது அவன் செய்வதறியாது திகைக்கத் தொடங்குகின்றான். இப்படியெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்குமா என்று நினைத்தபடி தொடர்ந்து சிந்திப்பதே ஒரு வன்முறையாக சூனியத்திற்குள் இழுத்துச்செல்வதைப் பார்க்கச் சகிக்கமுடியாது ஒரு நீண்ட துயிலுக்கு சென்றுவிட விரும்புகின்றான். ஒரு பின்னேரப் பொழுதில் factoryயின் பின்வாசலொன்றில் நின்றபடி தனக்கு மிக நெருக்கானவருடன் ப்கிர்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அவர் அவனைவிட இந்நிகழ்வுகளால் நிலைகுலைந்திருப்பதைப் பார்த்து தான் பகிரவிரும்பியதைப் பகிராது இருட்டாகிக்கொண்டிருக்கும் வானத்தை வெறித்தபடி வார்த்தைகளை எண்ணியெண்ணி உரையாடத் தொடங்குகின்றான். பின்னர் மனது வெடித்துவிடக்கூடுமென்ற பாரத்துடன் மின்னொளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தின் விளிம்பில் நின்றபடி தனக்கு பிரியமானவளுக்கு தொலைபேசுகிறான். வார்த்தைகளில்லாது தடுமாறும் அவள இவ்வாறான பொழுதுகளில் அவனுக்கருகில்லாத துயரத்தை தன் பெருமூச்சுகளால் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள. இதுவரையில்லாத கடவுள் நம்பிக்கை நீ துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவேனும் எனக்கு வந்துவிடக்கூடாதோ எனும் நெகிழ்வுதரும் வார்த்தைகளை அலைவரிசையில் கரைக்கிறாள். அந்த இதமான வார்த்தைகளுடன் அவன் தாண்டவக்கூத்திற்கு ஆயத்தாமாகின்றான். 'சாவதும் ஒரு கலை' என்று கூறிய சில்வியா பிளாத் கூட முதல்முயற்சியிலேயே நேர்த்தியாக தனது கலையை நிகழ்த்தினாரில்லை
.

நாடற்றவனின் குறிப்புகள்

Thursday, June 07, 2007

-கவிதைத் தொகுப்பு: இணையத்தில் வெளியீடு செய்தல்-

elanko1

கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று வலைபதிவு நண்பர்களிலிருந்து -வலைப்பதிவுக்கு அப்பாலிருந்து- உற்சாகப்படுத்திய நண்பர்கள்வரை அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவுகூர்கின்றேன். தொகுப்பு வேலைக்கு உதவி என்று நான் தேடிப்போன அனைவரும் தங்களால இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் மனமுவந்து தந்திருந்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தொகுப்பு வேலையின்போது அருமையான சிலர் புதிதாக நணபர்களாகியும் இருக்கிறார்கள்.

எனது சோம்பலாலும் -இவையெல்லாம் கவிதைகள்தானா- என்று வந்த சோர்வாலும், தொகுப்பு வேலையிலிருந்து தப்பியோட முனைந்தபோதெல்லாம், மீண்டும் தொகுப்பு வேலைக்கு இழுத்து வந்து அமர்த்திய பிரியமானவர்களின் கரங்களை நெகிழ்வுடன் பற்றிக்கொள்கின்றேன். பத்து வருடங்களுக்கு மேலாய் எழுதிக்கொண்டிருக்கின்றேனென காலம் கணக்குச் சொன்னாலும், அவற்றிலிருந்து ஒரு ஐம்பது ந்ல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே எவ்வளவு கடினமாய் இருந்தது என்பதை நினைக்கும்போது கடக்கவேண்டிய தூரம் மிகத் தொலைவில் இருப்பது புரிகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாய் நீண்ட இத்தொகுப்பு வேலைக்கு உதவிபுரிந்த அனைவரையும் பட்டியலிட்டு பிரதியில் நன்றி கூருதல் சாத்தியமில்லை. பட்டியலிட்டவர்களை விட பட்டியலிட்டப்படாத நண்பர்களின் எண்ணிக்கை நீண்டதானது. அனைவரின் நினைவுகளையும் நேசத்துடன் பத்திரப்படுத்தியபடி வழிப்பயணம் தொடரும் நன்றி.


Nadattavain Kuripukal (Poetry Collection in Tamil)
Elanko, First Edition: 2007
Published by Ampana


பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு:
டிசே (இளங்கோ)
E-mail: elanko@rogers.com / dj_tamilan25@yahoo.ca

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

வலிகளை ஆவணப்படுத்துதல்

Friday, May 04, 2007

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.


Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood

ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், 'இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன' என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் 'சாதாரணமாய்' நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. 'கொலையும் செய்வாள் பத்தினி' என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று 'அதிர்ச்சியானது'தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, 'எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்' என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் 'சாதாரண'மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, 'இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்' பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.