கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எருக்கம்பூ குறிப்புகள்

Friday, September 12, 2014

பகிர்ந்தமையிற்கு நன்றி (Thanks for Sharing)  

நாம் வாழ்க்கையில் எதற்கோ நம்மையறியாமல் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் அந்தப் போதையிலிருந்து (addiction) வெளிவருதல், சிலவேளைகளில் நாம் விரும்பினால் கூட அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. மதுவருந்தல், போதைப்பொருள் பாவித்தல் போன்றவற்றை துருத்திக்கொண்டு தெரியும் போதையான விடயங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தில் அரசியல் பேசுவதில் கூட பலருக்கு ஒருவகை addiction இருக்கிறதென நினைப்பதுண்டு.

'பகிர்ந்தமையிற்கு நன்றி' என்கின்ற இத்திரைப்படம் பாலுறவிற்குப் போதையாகின்றவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கின்றது. இவ்வாறு பாலுறவிற்குப் போதையாகின்றவர்கள், தமது நிலைமை விளங்கி தமது கதைகளைக் கூறி போதையிலிருந்து விடுபடுவதற்கான கவுன்சிலிங் பெறுகின்றார்கள். ஒருவர் பாலுறவில் அதீத நாட்டங்காரணமாய் தான் வேலை செய்யும் வைத்தியசாலை மருத்துவரையே இரகசியமாக விடீயோ எடுத்து மாட்டுப்படுகிறார். இன்னொருவர் பாலியல் சார்ந்து எல்லாப் போதையிலிருந்தும், ஐந்து வருடங்களாக விலகி இவ்வாறான போதையிலிருப்பவர்க்கு ஆலோசனை வழங்கி உதவியும் புரிகின்றார்.

ஆனால் இவ்வகையான போதையிலிருந்து விலகினாலும் அது எப்போதும் மீண்டும் பற்றக்கூடிய தீயைப் போல ஐந்து வருடங்களாக ஒழுங்காக இருந்தவரும் மீண்டும் பாலின்பப் போதையிற்கு அடிமையாகின்றார். வாழ்வில் அடுத்த காலடியென நினைத்து காதலில் விழும்போது, இவ்வாறான பாலியல் போதையிற்கு அடிமையானவர்களை காதலிப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் முதலில் ஒளிக்கிறார். பிறகு ஒருகட்டத்தில் உண்மையைப் பேசும்போது காதலி -புற்றுநோயால் மார்பகத்தை இழந்த cancer survivor என்றாலும்- இந்தப் போதை விடயத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருக்கின்றது.

எல்லோருடைய வாழ்வும் மீண்டும் தலைகீழாகிறது. ஆனால் இவ்வாறான போதையிற்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஒரு சிறு சமூகமாய் இருந்து பிரச்சினைகளில் மாட்டுப்படுபவர்களுக்கு மாறி மாறி உதவி செய்கின்றனர். வெளிச்சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மறுத்தாலும் இச்சிறு சமூகம் அவர்களைத் தாங்கிக்கொள்கிறது/புரிந்துகொள்கின்றது. அவர்களின் வாழ்வு இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்தில் தொடர்ந்து நகர்ந்து போகின்றது.

இந்தப் படம் அவ்வளவு சிறப்பான படம் என்றில்லாதுவிட்டாலும், போதையிற்கு அடிமையாகின்றவர்களைப் பற்றியும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் யோசிக்க வைக்கிறது. அவர்கன் போதையின் அடிமையிலிருந்து மீண்டு வரும்போது கூட, இந்தப் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது என்பதையும் கவனப்படுத்துகிறது.

தவறுகள் செய்யாத வாழ்க்கையென்பது நம் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நாமறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறுகளுக்கே நாம் எப்போதும் மன்னிப்பை யாசிப்பவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு மன்னிப்புக்களை எதிர்பார்க்கும் நாம் இவ்வாறான போதைகளிற்கு அடிமையானவர்களையும் சற்று அரவணைத்துக்கொள்ளலாம். ஆகக்குறைந்து அவர்களும் நம்மைப் போன்று ஒரு இயல்புவாழ்க்கையைத்தான் யாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையாவது, அவர்களைக் கேலி செய்யாது நம் மனதில் இருத்திக்கொள்ளலாம்


ராஜீவ்காந்தி சாலை

ளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.


பிறகு (With You, Without You)

த்திரைப்படம். மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார்.

மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்தும் நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது.

சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.

"With you Without you" - What a movie. I am not only very impressed by the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka.

'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' யிற்கு ஒரு எதிர்வினை

Wednesday, September 03, 2014


கெளதம சித்தார்த்தனின் 'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' சில வாரங்களுக்கு முன்னர் வாசித்தபொழுது, அது குறித்து சிலவற்றை எழுத விரும்பியபோதும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது எல்லா பரபரப்புக்களும் ஒய்ந்திருப்பதால் அதுகுறித்து சிலவற்றைப் பேசலாம் என நினைக்கின்றேன்.

எனது மதிப்பிற்குரிய நண்பர் கெளதம சித்தார்த்தன் என்றாலும், இத்தகைய விடயங்களில் சமரசம் தேவையில்லை என்பதால் எதையும் மனந்திறந்து உரையாடலாம் என நினைக்கிறேன்.

கெளதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரையே கட்டியிருக்கும் மாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால், அதைத் தவிர்த்து மிகுதி எல்லாம் எழுதியது போன்ற பாவனையில் எழுதப்பட்டிருக்கின்றது என்பது கவலையான விடயமே.

சரி, இப்போது அவர் சற்று பிரசன்ன விதானகேயின் படத்தைப் பற்றிக் குறிப்பிடும் சில  இடங்களைச் சற்றுக் கவனிப்போம்...

1) "விதானகேவும் with you…. படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்."

கடந்தவை கடந்தவை என்றோ, எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்ற பார்வையோ அந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கு வரவில்லை. பெரும் போருக்குப் பின்னரான காலத்தை, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, போர் நிகழாத நிலப்பரப்பில் வைத்து எடுக்கப்படுகின்ற கதையின் பின்னணியை மறந்துவிட்டு சித்தார்த்தன் பார்த்தால் எல்லாமே தலைகீழாய்ப் பார்க்கும் பார்வையே ஏற்படச் செய்யும். இது இன்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற இணக்க அரசியலை, தனிப்பட்ட இரண்டு மனிதர்களின் சாதாரண வாழ்வின் மூலம் உடைத்தெறிகின்ற படம். இறுதியில் அந்தப் பெண் செய்கின்ற தற்கொலைகூட ஒருவகையில் சிங்களப் பேரினவாதத்திற்கு/சிங்களவர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரும் தண்டனைதான்.

எல்லாவற்றையும் இழந்தபின் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, தன்னிடம் இருக்கின்ற கடைசி துருப்பை அந்தப்பெண்  முன்னாள் இராணுவத்தினனிற்கெதிராகப் பயன்படுகின்றார் என ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? ஏற்கனவே வேறொரு தமிழ்ப்பெண் பாலியல் வல்லுறவிற்குட்பட்டபோது, நடந்ததைச் சொல்லாது தப்பிவந்து குற்றவுணர்வில் துடிக்கின்ற இந்த முன்னாள் இராணுவத்தினனிற்கு இதைவிட எந்தப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?

உண்மையில் இந்தக் காலம் தமிழரின் தரப்பு எல்லாவற்றையும் இழந்து கையாலாகாமல் நிற்கும் துயர்மிக்க காலம். சிங்களப் பேரினவாதம் சாதாரண  சிங்கள மக்களையும் ஊடுருவி நிற்கும் காலம். அண்மையில் இலங்கை அரச சார்பாய் இயங்கும் ஒருவர் ஒரு நிகழ்வில் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 'சந்திரிக்காவின் காலத்தில் சிங்களக் கிராமங்களுக்கு நாங்கள் பயமில்லாமல் நுழைய முடிந்திருந்தது. அங்கே நாம் மேடைகளில் எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறும்போது யாரும் இடைநடுவில் குழப்பினால் கூட, எங்களைக் காப்பாற்றி அனுப்பிவைக்க மக்கள் இருந்தார்கள். இன்றைய (மகிந்த) காலத்தில் நம்மால்  சிங்களக் கிராமங்களில் சாதாரணமாய்க் கூட உள்நுழைய முடியாது' எனக் கூறியிருந்தார்.

எனவே இன்றைய காலத்தில் நாம் நியாயங்களைப் பேசுவதன் மூலம், அவர்களின் மனச்சாட்சிகளை ஊடுருவவே முடியாது. தமிழர்களுக்கு நிகழ்ந்த பேரழிவுகளின் குற்றவுணர்வைப் பெருக்குவதன் மூலமே சிறு காலடியேனும் இது குறித்து முன்வைக்க முடியும். அதையே பிரசன்னா இப்படத்தில் ஏதோ ஒருவகையில் பார்வையாளர்களின் மனங்களைச் சலனமடையச் செய்கின்றார். அநேகமான சிங்கள மக்களிடையே, 'இப்போதுதானே போர் முடிந்துவிட்டது, புலிகள் அழிந்துவிட்டனர், சமாதானமும் சுபீட்சமும் பெருகுகிறதே' எனற சிந்தனையே இருக்கிறது. அதையே தான் எவ்வளவு அபிவிருத்தி நடந்தாலும், எத்தகைய மாடமாளிகைகள் எழும்பினாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவ்வளவு எளிதாய் -அது சாதாரண குடும்ப உறவில் கணவன்/மனைவியாய் ஆனால் கூட- நெருங்கிவிட முடியாது என்பதைத்தானே இப்படம் ஒருவகையில் நம்முன் வைக்கின்றது.

(2) "தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்."

இக்கதை நிகழும் பரப்பு, போர் மிகமோசமாக நடந்த நிலப்பரப்போ அல்லது தமிழர்கள் கணிசமாக வாழும் வடக்கு/கிழக்குப் பகுதிகளோ அல்ல. அப்படியிருக்கும்போது எதை கெளதம சித்தார்த்தன் எதிர்ப்பார்க்கின்றார் என்றே தெரியவில்லை. போர் என்பது நமது கற்பனைகளுக்கு எவ்வளவு அப்பாற்பட்டவையோ அப்படியே அச்சூழலிற்குள் இருப்பவர்கள் வாழ்வும் நம்மால் சிநதித்தே பார்க்க முடியாத விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. மிக மோசமான போர் நடந்த சூழலிற்குள் விஜய படம் பார்த்த சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் சூழலில் இருந்தவர்களால் பதியப்பட்டிருக்கின்றன. போரின் அழிவுகளைப் பார்த்தபின்னும், எதுவுமே இனி செய்வதற்கில்லை என்ற சூழலிலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து நாட்களை நகர்த்தியதை எழுதியிருக்கின்றார்கள். எனவே போர்ச் சூழல் என்பது சாத்தியமற்றதை எல்லாம் சாத்தியமாக்குகின்றது. இப்படியெல்லாம் இருந்திருக்க முடியுமா என எங்கள் சிந்தனைகளை எல்லாம் கேள்விக்குட்படுத்துகின்றன.

எனவே போர்ச்சூழலின் பின் மட்டுமல்ல, போர்ச்சூழலிற்குள் கூட ' கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன' போன்ற சந்தர்ப்பங்கள் நிகழலாம். இதையெல்லாம் ஒரு காரணமாய்க் காட்டி இத்திரைப்படத்தை நிராகரிக்கவே முடியாது.

(3) "தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?"

 இத்திரைப்படத்தில் வரும் இராணுவத்தினன், தமிழ்ப் பெண்ணைக் கூட்டாய்ப் பாலியல் வன்புணர்வு செய்த நண்பனைத் தப்ப வைக்க பொய்ச்சாட்சி சொல்கின்றானே தவிர, அவன் அந்த நிகழ்வின் ஒரு பங்காளியல்ல. ஆனால் அதுவே அவனைப் பெரும் குற்றவுணர்ச்சியில் தள்ளுகின்றது. ஒருகட்டத்தில் இராணுவத்திலிருந்து நீங்க அந்த நிகழ்வே காரணமாகின்றது. ஆக இந்தப் படம் இன்னும் தமிழ் மக்களைக் கொன்றவர்களையோ, பாலியல் வன்புணர்வு செய்தவர்களின் ஆழமான பகுதியிற்குள்ளோ இறங்கவே இல்லை. மேலும் இப்படிப் பொய்ச்சாட்சி சொல்லிய இராணுவத்தினனை (கவனிக்க அவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவேயில்லை) மன்னிப்பதற்கே இன்னும் இந்தப் பெண்ணால் முடியவில்லை.

இத்தனைக்கும் இந்த பெண் வழியற்ற நிலையில் ஏதோ ஒருவகையில் உதவுகின்ற ஆணாகிய இவனையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதற்குள், இத்தகைய பேரழிவை நிகழ்ததிய இலங்கை அரசையோ, அதற்கு ஏதோ ஒருவகையில் மெளனித்து ஆதரவளித்த பெரும்பான்மை சிங்கள மக்களையோ ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்ட இலங்கையிற்குள் பாதிக்கப்பட்ட மக்களால் வாழமுடியுமா? என்ற கேள்வியைத்தானே பிரசன்னா நுட்பமாக எழுப்புகின்றார்.

(4) "ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்."

இப்படி எழுந்தமானமாய் கெளதம் சித்தார்த்தன் எழுதும்போது, தயவு செய்து இன்னொருமுறை 'உணர்ச்சி'களை அடக்கிவைத்துவிட்டு பொறுமையாகத் திரைப்படத்தைப் பாருங்கள் என்பதை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

(5) இக்கட்டுரையில் இடையில் சட்டென்று To Kill a Mocking Bird நாவலை சித்தார்த்தன் கொண்டுவருகின்றார். குற்றவுணர்ச்சி என்ற ஒரு காரணமாய் இருக்கக்கூடும். அந்நாவல் எழுதப்பட்ட காலம் 1960கள். அதுவரை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, அமெரிக்க கறுப்பின மக்கள் தமது உரிமைகள் கேட்டு  எழுச்சி பெறுகின்ற காலகட்டம். ஆதிக்க வெறி கொண்ட பெரும்பான்மை வெள்ளையின மக்களிடையே இருந்து வந்த ஒரு நம்பிக்கை கீற்றுத்தான் இந்த நாவல். இப்போது அதற்கான மதிப்பும், இடமும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அது தன் எல்லைக்குள் நின்று  அன்றைய காலத்தில் ஒரளவுக்கு உண்மையைப் பேசிய நாவல். எதுவுமற்றிருப்பவர்க்கு கிடைக்கின்ற சிறுதுளி வெளிச்சத்தின் அருமை தெரியும். ஆகவேதான் அதைக் கறுப்பின மக்கள் அந்தக்காலத்தில் முக்கியப்படுத்தினார்கள். பின்னர் கறுப்பின மக்களே தம் வாழ்வை தாமே எழுதும்போது இதற்கான முக்கியத்துவம் இல்லாமற் போவதும் இயல்பானதே. அவ்வாறே பிரசன்னாவும் எல்லாம் இழந்து நிற்கும் தமிழ் மக்கள் மீது தன் எல்லைக்குள் இருந்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார். அதே சமயம் அவருக்கு தான் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவன் இல்லை என்பதும் நன்கு தெரிகிறது. எனவேதான் சோமீதரனின் பதிவில் பின்னூட்டம் இடும்போது, தமிழ்மக்களின் துயர் நன்கறிந்த சோமீயை திரைப்படம் எடுக்க உற்சாகப்படுத்துகின்றார்.

(6) "தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? "

இதென்ன கொடுமை....சிங்களவருக்கு உண்மையான காதல் தொடக்கத்தில் இருந்தே இருக்கவில்லை (காதலிக்கும் உணர்விருந்தால் அவர் இத்தனை காலம் தனித்திருக்கவும் தேவையில்லை; அதே போன்று இயந்திரத்தனமாய் ரெஸ்லிங்கை முன்னர் பார்த்ததுபோல, திருமணத்தின் பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாதே பார்க்கிறார்). எனவே இவ்வாறான பாத்திரத்திற்கு எப்படி 'காதலை' ஊட்டமுடியும்? ஆதிக்க இனத்திற்குரிய மற்றும் ஆணுக்குரிய நீ என் இடத்திற்கு வரவேண்டுமே தவிர, நான் உன்னிடத்திற்கு வரமாட்டேன் என்கின்ற அடம்பிடிப்பில் எப்படி ஒரு சிங்களவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளப் போகின்றார். இதுதான் நடைமுறை யதார்த்தம். ஒருவேளை உண்மையான காதல் இருந்தால் ஒருவர் அப்படி தமிழைக் கற்று வரக்கூடும். ஆனால் இந்தப் பாத்திரம் அப்படிப்பட்டது அல்லவே. பிறகேன் அப்படி எதிர்ப்பார்க்க வேண்டும்?

(6) "அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது."

இது அடுத்து கெளதம் சித்தார்த்தன் செய்யும் நகைச்சுவை. அவளுக்கு வேறு தெரிவு இல்லையென்றுதான் இதை முடிவெடுக்கிறாள் என்றுதானே காட்சி காட்சியாக தன்னிடமிருக்கும் ஒவ்வொரு நகையாக அடகுவைப்பதை நிதானமாய் பிரசன்னா காட்டுகின்றார்.

உடல் சார்ந்த இயற்கையை எல்லாம் 'அரசியல்' செய்யக்கூடாது கெளதம சித்தார்த்தன்.

ஒரு பெண் ஆணுடன் முதன்முறை உடலுறவில் ஈடுபடும்போது உற்சாகமாகவும் ம்கிழ்வாகவும் இருப்பதைப் பார்த்து ஆண் இவள் இதற்கு முன் நிறைய அனுபவித்திருப்பாளோ என சந்தேகம் கொள்வதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்னால் பெரிதாய் வித்தியாசம் காணமுடியவில்லை. அதைவிடக் கொடுமை 'தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது' என நீங்கள் கூறுவது. கொஞ்சம் விட்டால் தேசிய அரசியல் பேசும் ஒருவர் இயற்கைக் கடன்களைக் கூட கழிக்ககூடாது என்று கூறிவிடுவீர்கள் போலிருக்கிறது. என்னுடைய அச்சம் இப்போது என்னவென்றால், அஸின் இரசிகனாக இருக்கும் நான் எழுதும் இந்த எதிர்வினையையே அதை வைத்தே நீங்கள் நிராகரித்துவிடுவீர்களோ என்பதுதான்.

(7) "இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?"

என்னுடைய ஞாபகம் சரியென்றால் (சென்ற வருடம் ஒரேயொரு முறைமட்டுமே படத்தைப் பார்த்தது) அவர்கள் இந்தியாவிற்குப் போவது கோயில்களைப் பார்ப்பதற்கு என்பதாகவே காட்சியிருக்கும். அவள் மனம் சோர்ந்து ஒடுங்கியிருப்பதைக் கண்டே ஆண் இந்த முடிவை எடுக்கிறார் (இந்தக் காட்சியில் ஆணுக்கு மெல்ல மெல்லமாக காதல் அரும்புவதைக் கூட அழகாக பிரசன்னா எடுத்திருப்பார்). எனவே சித்தார்த்தன் முன்வைக்கும் பெரும் 'பூகோள அரசியல்' எல்லாம் இங்கு எடுபடாது.

அவ்வாறே சித்தார்த்தன் சொல்வதுபோல இந்தியாவிற்குப் போவதாய் இருந்தால் கூட, ஏன் கனடா, இங்கிலாந்து போகக் கேட்கவில்லை என்று கேட்பது இன்னும் அபத்தம். எனெனில் அவர்களிடம் அவ்வாறு போவதற்கான எந்தப் பணமும் இல்லை என்றுதானே படம் முழுக்கக் காட்டப்பட்டிருக்கிறது. நகைக்கடையை விற்றுவிட்டுத்தானே இந்த இந்தியப் பயணமே சாத்தியமாகிறது. கனவு வேண்டுமானால் அந்தப் பெண் 'ஒரு சனியனும் வேண்டாம் என்று செவ்வாய்க் கிரகத்திற்கு போவதாய்க் கூட காணலாம். ஆனால் யதார்த்த்தில் (கதையின் நீட்சியில்) அவர்களால் இந்தியாவிற்குப் போவதே சாத்தியமான ஒரே வழி.

(8) "ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்."

ம்...இறுதியாக நானும் கெளதம் சித்தார்த்தனும் உடன்படும் ஒரு புள்ளிக்கு வந்துவிட்டோம். ஹொந்தாய்.

ஆனால், பிறகு பழையபடி வேதாளம்...

(9) "சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்."

அந்தப் பெண்ணிற்கு தனியே வாழும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தால், அவள் ஒருபோதும் ஒரு சிங்களவரையே மணந்திருக்க முடியாது. அவளுக்கு வேறு தெரிவுகளில்லலாதுதானே சிங்களவரை மணக்கிறாள் எனத்தானே படத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணிற்கு கடந்தகாலத்தை முற்றாக மறக்க முடியுமென்றால், அவளால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சிங்களக் கணவனோடு வாழ முடிந்திருக்கும்.

அதேபோல, அவனைத் துறந்துவிட்டு தனியே விஜயின் பாட்டுக்களோடு கொண்டாட்டமாய் வாழ முடியுமென்றால், அவனை விலத்தித் தனியே வாழ முடிந்திருக்கும். ஆனால் அவளால் இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதாலேயே அவள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

இதுதான் இன்று ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையல்லவா? இதைவிட எப்படி அப்பட்டமாய் இன்றைய சூழலைக் காட்ட முடியும்? இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழர்களால் முற்றுமுழுதாக கடந்த காலத்தை மறந்துவிட்டு வாழ முடியாது. அதேபோல, சிங்களவர்கள் பெரும்பான்மையான ஒரு நாட்டில் தனித்துப் பிரிந்துபோவதற்கான எந்த சிறு சமிக்ஞைகளும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. ஆக இந்தப் பெண் தேர்ந்தெடுத்த தற்கொலையைப் போலத்தான் மிகவும் சிக்கலான காலத்தில்  தமிழர்கள் இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா?

கெளதம சித்தார்த்தன் இப்படியும் சிந்தித்தும் பார்க்கலாம்.

மற்றும்படி  இதில் அவர் அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்' படத்திற்கு வைத்த விமர்சன்ம் உள்ளிட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையின் பாற்பட்டு வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு உடன்பானதே.  ஆனால் இத்திரைப்படத்தை நான் சித்தார்த்தனின் பார்வையினூடாகப் பார்க்கவில்லை என்பதற்காகவே இந்தக் குறிப்பு.

ஈழத்திலுள்ளவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத இன்றைய சூழ்நிலையில் -நான் ஏற்கனவே கூறியதுபோல- பிரசன்ன விதானகேயின் கரங்களைக் கோர்த்து நடக்கவே விரும்புகின்றேன். அதுவும் நான் நம்பிக்கை வைத்த விமுத்தி ஜெயசுந்தரா ('இரண்டு உலகங்களுக்கிடையில்' படம் பற்றிய பார்வையும் 'உன்னத்திற்கே' எழுதியிருக்கின்றேன்) போன்றவர்களே இன்று 'இலங்கையிற்கு வாருங்கள்' என் இலங்கையரசு சார்பாய் சுற்றுலாப் படங்களை எடுக்கும் காலத்தில் பிரசன்னா போன்றவர்கள் மின்மினிப்பூச்சிகள் என்றாலும் அவர்களின் பறத்தல் எனக்கு முக்கியமானது.


கெளதம சித்தார்த்தனின் கட்டுரை:(http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/26915-2014-08-01-06-14-16)  

(
August 13, 2014)

தற்செயல்களின் அழகு

Sunday, July 27, 2014

-அ.முத்துலிங்கத்தோடு ஒரு சிறு சந்திப்பு-

'In Our Translated World' வெளியிடப்பட்டு மாதங்கள் சில ஆகிவிட்டபோதும், அதன் பிரதியைப் பெறுவதில் ஒவ்வொர்முறையும் ஏதோ 'சகுனப்பிழை' ஏற்பட்டு கையில் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி அ.முத்துலிங்கத்திற்கு -வந்து பெறமுடியுமா- என மின்னஞ்சல் அனுப்பவதும், பிறகு ஏதேதோ காரணங்கள் போகாமல் விடுவதும் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுப்பு வந்திருக்கவேண்டும். அண்மையில் இங்கு பா.கிருஷ்ணனுடன் நடந்த சந்திப்பில் எனக்கான பிரதியைக் கையோடு கொண்டு வந்திருக்கின்றார். அப்போது நான் இன்னொரு நாட்டில் இருந்துகொண்டு, இன்று நான் பார்த்த பெண்களில் அதிகம் கவர்ந்திழுத்தவர் யார் என்ற தீவிர ஆராய்ச்சியில் மூழ்கியிருந்திருக்கின்றேன். கடந்த ஞாயிறும், 'வருகிறேன்' என அ.முவிற்குச் சொல்லிவிட்டு, மாலையில் கவிதைகளை விட, ஏரியில் மறையும் சூரியனைப் பார்ப்பதே முக்கியமென நண்பருடன் புறப்பட்டுவிட்டேன்.

நேற்றுத்தான் எனக்குச் 'செவ்வாய் தோசம்' முடிந்திருக்கவேண்டும். வாய்ப்புக் கிடைத்தது.

ஐந்து நிமிடங்களுக்குள் பிரதியைப் பெற்றுவிட்டு திரும்பிவிடலாம் என நினைத்துக்கொண்டுதான் போனேன். உரையாடத் தொடங்க அது ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்துக்கொண்டு போனது. இதுநாள் வரை சந்திக்கும்போதெல்லாம் வணக்கமும் சுகமும் விசாரித்துவிட்டு நகர்ந்துகொண்டிருந்த நான் இவ்வளவு நேரம் அ.முவோடு உரையாடியது ஓர் ஆச்சரியமான நிகழ்வுதான்..

இப்போது அவர் வாசித்துக்கொண்டிருந்த நாவல்களை தன் Ipad த் திறந்து காட்டிக்கொண்டிருந்தார். முதலாவதே நிரோமி டீ சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி'. அது குறித்து எதையோ சொல்ல வாயெடுத்தேன், பிறகு ஏதேதோ நினைவுகள் பயமுறுத்த அமைதியாகிவிட்டேன். 'தமிழ்ப் பெண்புலி' குறித்த என் பார்வையை எழுதியதற்கே நிரோமி 'பணம் கொடுத்தார்' என்றெழுதிய ஒருவர் என்னை விட அ.முவோடு 'அதிக நட்பாய்' இருக்கின்றபடியால், இதையும் அறிந்தால், அ.முவை இன்னும் 'புகழ்ந்து' அவர் எழுதிவிடுவார் என்பதால் இந்நூல் பற்றித் தொடர்ந்து கதைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

மைக்கல் ஒண்டாச்சி, ஷியாம் செல்வதுரை, ஜூம்பா லகிறி, சிமமண்டா அடீட்சி என நாங்கள் நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். English Patient, Funny boy போன்ற சிறந்த நாவல்களை எழுதிய மைக்கல் ஒண்டாச்சியும், ஷியாமும் பின்னைய நாவல்களில் சரிவு நிலைக்கு வந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறதென அ.மு சொன்னார்.எல்லாப் புக்ழபெற்ற எழுத்தாளர்களுக்கும் முக்கியமான படைப்பாய் ஒரு நாவலே அதிகம் இருக்கிறதென்றேன். மேலும், அ.மு Hungry Ghosts ஐ அரைவாசிக்கு மேலாய்த் தாண்டமுடியவில்லை என்றபோது, நானும் இந்நாவலில் நிறைய எதிர்பார்த்தேன், முக்கியமாய் முடித்தவிதத்தில் நாவல் எங்கையோ தவறிவிட்டதென என் பார்வையைச் சொன்னேன். மொழியில் சாகசம் செய்யவேண்டும், ஷியாமின் இந்த நாவலில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமில்லையென, அண்மையில் நியூயோர்க்கரில் வந்த கதையொன்றில் தனக்குப் பிடித்த வாக்கியங்களைத் தான் அடிக்கோடிட்டிருந்தவற்றை எடுத்துக் காட்டினார்.

Interpreter of Maladies எழுதிய ஜூம்பா லகிறியின் அண்மையில் வந்த நாவலான Lowland ம் அப்படியே என்றார். எனக்கு வாசித்தவளவில் அது சற்று சுவாரசியமாக இருந்தது. அதையின்னும் முடிக்காததால் எதையும் தீர்க்கமாய் இப்போது சொல்லமுடியவில்லை என்றேன். ஜூம்பா லகிறியின் The Namesake' ஐ மீரா நாயர் திரைப்படமாக அழகாக மாற்றியிருந்தார் என அ.மு வியந்து சொன்னார். முக்கியமாய் நாவலில் தாய் பாத்திரம் சிறிது; மகன் பாத்திரமே கதை சொல்லும். ஆனால் திரையில் தாய் பாத்திரம் விரிவாக்கப்பட்டு தாயினூடாக கதை சொல்லும் முறையாக மாற்றப்பட்டதென்றார். நாவலைப் படமாக்குவதில் அநேகம் நாவலே திரைபடத்தை விட நன்றாக இருக்கும், ஆனால் மீரா நாயரினால் நாவலை விட திரைப்படம் அழகாக வந்திருக்கிறதென்றார் (மீரா நாயரின் அண்மைய திரைப்படமான The Reluctant Fundamentalistம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. படம் பார்த்துவிட்டேன். நாவல் எப்படியிருக்குமென வாசித்துப்பார்க்கவேண்டுமென ஆவலைத் தந்த திரைப்படம்).நான் Namesake திரைப்படத்தை மாத்திரமே பார்த்தவன் என்பதால் இந்த நுட்பமான வித்தியாசம தெரியவில்லை, என்றாலும் லகிறியின் unaccustomed earth என்னை அவ்வளவாய் கவர்ந்ததில்லையெனச் சொன்னேன்.

ஒண்டாச்சி, லகிறி போன்றவர்களின் நாவல்கள் ஏற்கனவே சிறுகதை வடிவில் நியூயோர்க்கரில் வநது வாசித்திருந்ததால், பிறகு நாவலாக வந்தபோது ஈர்க்கவில்லையோ தெரியாதென அ.மு சொன்னார். அநேகமானவர்கள் நாவல்களை எழுதிக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் சிலபகுதிகளை சிறுகதைகளாக்கியோ அல்லது சுருக்கியோ வெளியிடுவது இயல்புதானே, ஹருக்கி முரகாமியின் 18Q4 கூட நாவலாக வரமுன்னர் இப்படி வந்தபோது வாசித்திருக்கின்றேன் என்றேன். சிலவேளைகளில் ஒண்டாச்சியோ, லகிறியொ, முரகாமி செய்ததைப் போல நாவலின் பல்வேறு அத்தியாங்களைக் கோர்த்து சிறுகதையாக்கியது போல அல்லாது, அப்படியே தங்களின் நாவலின் பகுதிகளை முன்னரே வெளியிட்டதால் நாவல் வாசிக்கும் சுவாரசியம் இல்லாமற் போய்விட்டதோ தெரியவில்லை.

நாவல்களின் பகுதிகளை முன்னரே வெளியிடுவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்று அ.மு சொன்னபோது, விகடனில் அவர் எழுதும் தொடரில் இறுதியாய் வந்த அத்தியாயத்தை நான் ஏற்கனவே வேறெங்கோ வாசித்து பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படியே நம் கதை திசையெட்டும் அலைந்தபோது , நாஞ்சில்நாடனின் விகடன் பட்டியலில் உமது படம் வரவில்லை? நான் தேடிப்பார்த்தேன், ஏன்?' என்று அ.மு கவலைப்பட்டார். எனக்கும் கவலைதான் இல்லையா என்ன? அடிக்கடி முன்னட்டைகளில் எனக்குப் பிடித்த அஸினின் வர்ணப்படம் வருகின்ற ஒரு பத்திரிகையில் பாஸ்போர்ட் சைஸிலாவது என் படம் வருகின்றபோது அவரின் தீவிர இரசிகனாக எனக்கும் பெருமிதமாகத்தானே இருக்கும். ஆனால் இது எனக்கும், அ.முவிற்கும் புரிகிறது. விகடன்காரர்களுக்கு இது விளங்கவில்லையே? (இப்படி எதையும் முகநூலில் எழுதவும் இப்போது பயமாயிருக்கிறது. 'பட்டியல் சர்ச்சை' பற்றி ஜூலை அம்ருதா கட்டுரையில் நான் முகநூலில் எழுதிய ஒரு சிறுபதிவைப் பிரசுரித்திருக்கின்றார்கள். அதுகூடப் பரவாயில்லை, அதில் நண்பர் யாருக்கோ சொன்ன பதிலான, 'எனக்கு இரசிகைகள் கூடிவிடுவார்கள் எனத்தான் விகடன் படம் போடாது இருட்டடிப்புச் செய்திருக்கின்றது' என்று எழுதிய கொமண்டையும் அல்லவா சேர்த்துப் பிரசுரித்திருக்கின்றார்கள்)

முகநூலிலிருந்து, டொமினிக் ஜீவாவிற்குக் கொடுத்த இயல்விருதுவரை, கோணங்கியிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த ரமேஷ்-பிரேம் வரை..., எழுதத் தொடங்கும்போது பாவித்த சொற்களையே திரும்பத் திரும்பப் பாவிக்கின்றேன் என வருகின்ற என் சோர்வுவரை நிறையத் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். வைதேகியின் தமிழ்ப்பற்றும், அவர் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் பழந்தமிழ் இலக்கிய நூற்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் விதத்தையும் பற்றியும் நிறைய அ.மு சொன்னார். தமிழ் என்பது தொடர்ந்தும் தனிமனிதர்களாலே தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்திருப்பது குறித்தும், உதாசீனம் செய்யும் அரசு/நிறுவனங்கள் குறித்தும் பேசினோம்.

வைதேகி போன்று தமிழ் மீது பற்று வைத்திருப்பவர்கள் குறித்து உங்களைப் போன்றவர்கள் விரிவாக எழுதவேண்டும் என அ.மு சொன்னபோது. என் சங்க இலக்கிய அறிவு மிகவும் குறைவானது எனக்குறிப்பிட்டேன்., இப்போதும் நான் 'காலம்' செல்வத்தின் தொலைபேசி அழைப்புக்களை எடுக்காமல் தவிர்ப்பதற்கு செல்வம் நீ இப்போது சங்க இலக்கியத்தில் என்ன படிக்கிறாய் எனக்கேட்டு, கமபன் பாடிய ஏதாவது ஒரு பாட்டிற்குப் பொருள் சொல்லெனக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தினால் என்பதை அ.முவிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

இப்படி எல்லாப் பக்கமும் கதைத்த நாம், எங்களிருவருக்கும் மிகவும் பிடித்த ஜெயமோகனைப் பற்றிக் கதைக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

நாங்கள் பேசிக்கொண்டிருந்த மேசையிலேயே 'முதற்கனல்' கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அதை, முதலாவது முறை வாசித்துவிட்டு இரண்டாந்தடவையாக வாசித்துக்கொண்டிருந்தார். அ.மு, ஜெமோ குறித்து வியக்காமல் இருந்தால்தான் வியப்பு. நானும், ஜெயமோகன் எழுதும் வேகத்தைப் பற்றி வியந்து சொல்லிக்கொண்டிருந்தேன். சிறுவயதில் திருமூலர்தான் மனதின் வேகத்தை விட எழுதக்கூடியவர் என்று அறிந்திருக்கின்றேன். பதின்மவயதில் எனக்குப் பிடித்தவரான பாலகுமாரன் இப்படி நிறைய எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் ஜெயமோகனின் வேகத்திற்கு முன்னே எனக்குத் தெரிந்த எவ்ரும் நிற்கவேமுடியாது என் உறுதியாய்ச் சொன்னேன். வேகமாய் எழுதுவது மட்டுமில்லை, சொன்னதைத் திருப்பி எழுதாது, அதிகம் வேற்றுமொழிக்கலப்பில்லாது எழுதுவதுதான் இன்னும் வியப்பைத் தருகிறதென்றார் அ.மு.

ஜெயமோகன் மகாபாரதம் எழுதும் வேகத்தையும் ஆழத்தையும் பார்க்கும்போது, ஒரு குழுவே பின்னால் இருந்து இயங்குவது போலிருக்கிறது என்றுதான் எங்கள் இருவருக்கும் சந்தேகம் வந்தது. மகாபாரதம் எழுதுவதோடு மட்டுமின்றி, அதே நேரத்தில் திரைப்படங்களிற்குக் கதை எழுதுகிறார், இரண்டு பேரோடு சண்டைபிடிக்கிறார், மேலும் மூன்று பேருக்கு அறிவுரை கூறுகிறார், இதெல்லாம் ஒரு தனிமனிதரால் செய்யக்கூடியதா என்ற கேள்வி எனக்கும் நிறைய நாளாக உண்டு. இதற்குள் அ.மு, ஜெயமோகன் இப்படி தினம் தினம் எழுதிக்கொண்டிருந்தாலும், அவர் இணையத்தில் பிரசுரிப்பதைவிட ஒரு மாதம் முன்னே பிரசுரிப்பதற்கான அத்தியாயங்களை கைவசம் வைத்திருக்கின்றார் என்றபோது அ.மு அன்போடு தந்த கேக்கைச் சாப்பிட்ட கொண்டிருந்த நானப்படியே உறைந்துவிட்டேன்.

ஏதாவது புதிதாய் என் புத்தகம் வெளிவருகிறதா எனக்கேட்டார். சென்ற வருடம் 2 புத்தகங்கள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருந்தேன். இந்த வருடத்திற்குள் எதையாவது ஒன்றையாவது செய்யும் விருப்பமிருக்கிறதென்றேன். நானோ, என் பதிப்பாளரோ இம்முறையேனும் உறங்குநிலைக்குப் போகாதிருக்கக் கடவ.

'உங்களை எல்லோரும் இந்தியாவிற்கு வர அழைக்கின்றார்களே நீங்கள் போகலாமே?' எனக் கேட்டேன். கனடாவிற்கு வந்ததன்பிறகு இன்னும் இந்தியா போகவில்லை, ஆனால் அங்கே போக சற்றுப் பயமாயிருக்கிறது. நிறையக் குழுக்கள் இருக்கின்றார்கள். சர்ச்சைகளில் சிக்கவேண்டியிருக்கும் என்றார். 'நீங்கள் அங்கே போய் நிரந்தரமாகத் தங்கப் போவதில்லைத்தானே. இதெல்லாம் பெரியவிடயமில்லை' என்றேன். அண்மையில் கூட, ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்காய், விமான ரிக்கெட்டோடு தங்குமிட வசதியெல்லாம் தங்கள் செலவிலே செய்து தருகின்றோம் என்று கேட்டிருக்கின்றார்கள். நான் தான் போகவில்லை' என்றார். 'நிச்சயம் ஒருமுறை செல்லுங்கள். முக்கியமாய் புத்தகக்கண்காட்சிகள் நடக்கும் நேரங்களில் போனீர்களென்றால் நிறையப் பேரை ஒரேயிடத்தில் சந்திப்பதும் எளிதாக இருக்கும்' என்றேன். அப்படிப் போகும்போது தனியே போக அலுப்பாயிருக்கும், ஓர் உதவியாளர் தேவையென்று கூறி என்னையும் செலவில்லாது அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்ல நினைத்தேன். அவரும், நானும் சேர்ந்து போய் ஜெயமோகனைச் சந்தித்து மகாபாரத வேகத்தையும் சற்றுக் குறைக்கலாம். வாசிப்பவர்களும் பாவமல்லவா. அவர்களுக்கும் சற்று ஓய்வு வேண்டுமில்லையா?

இதை எல்லாவற்றையும்விட, அ,முவின் எழுத்துக்களை மட்டுமின்றி அவர் சார்ந்தியங்கும் இயல்விருதுவரை விமர்சனங்கள் வைத்து, அவர் எழுதிய ஒரேயொரு நாவலையும் அது நாவலில்லையென கிழித்து எழுதியவனோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாய் அதன் சுவடுகள் இன்றி அவரால் இயல்பாய் உரையாட முடிந்திருந்ததும் என்னளவில் சற்று வியப்பானது. மேலும் In our translated worldன் colourful hardcover/normal copy என இரண்டு பிரதிகளைப் பத்திரமாய் வைத்துத் தரவும், முதற்கனலின் ஜெயமோகன் கையெழுதிட்ட செம்பதிப்பையும், வைதேகியின் நூலையும் மனமுவந்து தந்து வழியனுப்பியபோது ஒரு மெல்லிய நெகிழ்வு எனக்குள் பரவியிருந்தது.

தற்செயலான நிகழ்வுகள் அழகானவை மட்டுமில்லை. எமக்கான பிரமைகளைச் சிலவேளைகளில் தகர்க்கவும் தாண்டவும் வைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன போலும்.

(முகநூலில்-Elanko Dse- ஜூலை 24 எழுதியது)

கள்ளி

Wednesday, July 16, 2014


தோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான்.  ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உடல்களின் கடலில் இருந்து, கவனத்தைத் திசை திருப்பி இந்த வாசம் இதுவரை அறியாத இன்னொரு உலகிற்கு மெல்ல மெல்ல என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த வாசம் என்னைத் தொடர்வதை விட,  நான் அதற்குப் பின்னே தொடர்ந்து போகின்ற நிலை ஏற்படத் தொடங்கியது. அந்த வாசத்திற்காகவே சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மாலை நேரத்துச் சப்வேயில் ஏறுபவனாக மாறிப்போனேன். சிலவேளைகளில் பாதாளச் சுரங்கத்திற்குள் முன்னரே வந்திருந்தாலும், சரியான நேரம் வரும்வரை காத்திருந்து முன்னர் வரும் இரெயின்களை எல்லாம் போகவிட்டு, குறிப்பிட்ட ரெயினில் மட்டும் ஏறிச் செல்லத் தொடங்கினேன். ஆனால் இந்த நேரக்கணக்கிலும் ஒரு சிக்கல் வந்திருந்தது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் செலவு கூடிய நகர்களில் ஒன்றான ரொறொண்டோவில்தான், உலகில் மிகவும் மோசமான பாதாள இரயில் சேவையும் இருக்கிறது. அவ்வப்போது சேவை தாமதமாவதும், அதற்கு மாற்றீட்டாய் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதும் வழமையான ஓரு நிகழ்வு. தொடக்கத்தில் சேவைகள் குழம்பும்போது கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள் திட்டிய நானும் நாட்போக்கில் களைப்படைந்து, பின்னர் ஒரு பபிள்கம்மை எடுத்து வாயில் போட்டு எனது கோபத்தையும் சேர்த்து சப்பத்தொடங்கிவிடுவேன்.

இவ்வாறாக வாசத்தைப் பின் தொடர்வது பின்னேரங்களில் மட்டுமில்லாது எந்நேரமும் ஆக அது ஆகிப்போனதில்தான் எனக்குப் பிரச்சினை வரத் தொடங்கியது. இரவுகளில் கூட கனவுகளில் நான் அந்த வாசத்தைப் பின் தொடர்கின்றவனாய் மாறத் தொடங்கியிருந்தேன். இதுவரை என் கனவுகள் எழுந்தமானமாய் என்னால் கட்டுப்படுத்த முடியாது வெளிக்கிளம்பியதைப் போலவன்றி இந்த வாசம் என் கனவுகளைக் கட்டுப்படுத்தவும், திசைகளைத் திருப்பவும் தொடங்கியிருந்தது.. இக்கனவுகளில் எப்போதும் சூரியகாந்தித் தோட்டங்களின் இடையிலோ அல்லது லாவண்டர் தோட்டங்களில் நடுவிலேயோ ஒரு பெண் ஓடிக்கொண்டிருப்பவளாகவும், அவளின் முகம் எப்படி இருக்கும் எனக் கண்டுபிடிப்பதில் நான் தோற்றுக் கொண்டிருப்பவனாகவும் இருந்துகொண்டிருந்தேன். என்றேனும் ஒருநாள் அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டுபிடித்தால் நான் இந்த வாசனையைப் பின் தொடர்வதைக் கைவிட்டு விடுவேன் என நம்பவும் தொடங்கியிருந்தேன்.

னவுகளுக்குள் நுழைந்து இன்னுமிச்சிக்கலை ஆழப்படுத்துவதை விட, இவ்வாசனை வந்த மூலத்தில் வைத்தே பிரச்சினையைக் களைவோம் என ஒருநாள் முடிவு செய்தேன். முதலில் மாலை நேரத்து பிதுங்குத்தள்ளும் ரெயினில் நான் அடிக்கடி சந்திக்கும் பெண்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இந்த வாசனையைப் பரப்பக் கூடியவர்கள் என்று நான் நம்பியவர்களை, நினைவில் வைத்திருப்பதற்காய் அவர்கள் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக என்னைக் கவர்ந்த விடயங்களை ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கினேன். விஞ்ஞான பாடத்திற்கு அத்தியாவசியமான மூலகங்களின் ஆவர்த்தனப்பட்டியலைப் போல, இயற்கையாகவே தலைமயிர் பொன்னிறம் உடையவர், புருவத்தில் ரிங் குத்தியிருப்பவர்,  அடர்ந்த சிவப்பு நிறத்தில் உதட்டுக்கு வர்ணம் பூசுபவர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன் தலைமயிரின் வடிவத்தை மாற்றிக் கொண்டிருப்பவர், குதியுயர்ந்த காலணிகளை அணிந்தபடி எப்போதும் நெரிசலில் யாரோ ஒருவரின் காலை மிதித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பவர், பின்னங்கழுத்தில் டிராகன் டட்டூ குத்தியவர் என இப்படி அட்டவணைப்படுத்திக் கொண்டு போகவே, பேப்பர் ஒரு பக்கத்தையும் தாண்டி நீண்டு கொண்டிருந்தது. இதை இன்னும் எளிதாக்க என் கடந்தகால வாழ்க்கையில் சிலிர்க்க வைத்த பெண்களின் பெயர்களை இவர்களுக்குச் சூட்டத் தொடங்கினேன். தமிழே பேசமுடியாத முகங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பது அபத்தம் தான் என்றாலும் தரணியெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியை இன்னொருவிதத்தில் செய்துகொண்டிருந்ததில் எனக்குள் கொஞ்சம் சந்தோசமும் எட்டிப்பார்த்தது.

பெயர்களை வைப்பது எளிது. ஆனால் இவர்களில் யாரிடமிருந்து வாசனை வருகிறதென்பது கண்டுபிடிப்பதுதான் கடினம். என் மூக்கின் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், ஆகக் குறைந்து சற்று அருகில் நெருங்கிப்போய்ப் பார்த்தால் 'உண்மை'யைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்தச் சன நெரிசலுக்குள் எப்படி ஒவ்வொருத்தருக்கும் அருகில் போய் நின்று மூக்கைச் சுழட்டித் துழாவிப் பார்க்க முடியும். இரண்டு கால்களை நெருக்கி வைக்கவே சிறு இடம் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கையில், எப்படித்தான் நினைத்த இடத்திற்கு நகர முடியும். தலைக்கு மேலே தொங்கும் ஒன்றிரண்டு கம்பிக்கே சனம் -கடைசியாய் இருக்கும் ஒரு ரிக்கெட்டுக்காய் தியேட்டரில் அடிபடுவது போல- அல்லற்பட்டுக் கொண்டு நிற்கும்போது, வாசத்தின் ரிஷிமூலத்தைத் தேடுவதென்பது பகல் கனவாய்த்தானிருக்கும். 

இப்படி சப்வேயில் பயணிக்காத பொழுதுக்கும், வாசனையைப் பின் தொடரும் கனவுகள் வராத இரவுகளுக்கும் இடையில் கிடைத்த சொற்பநேரத்தில், யோசிக்க முடிந்ததில் ஒரு தீர்வைக் கண்டடைந்தேன். இப்படியான வாசத்தைப் பின் தொடர்பவனாக நான் மட்டும் இருக்கமுடியாது. வேறு பலரும் இருப்பார்கள். ஆகக் குறைந்தது இந்த வாசனையின் ஊற்றின் இருப்பிடமாய் இருப்பவர், தான் அனுப்பும் சமிக்ஞையை யார் கவனத்தில் கொள்கிறார் எனப் பார்க்கவும் விரும்புவார் அல்லவா? அவரைக் கண்டுபிடிப்போம் எனத் தீர்மானித்து சனம் மிதமாக இருக்கும் ஒரு வாரவிறுதியைத் தேர்ந்தெடுத்தேன். மாலை நேரந்தான். ஆனால் இப்போது பிதுக்கித் தள்ளும் சனம் இல்லை. வழமைக்கு மாறாய் ஒன்றிரண்டு இருக்கைகள் காலியாகக் கூட இருந்தன. நானேறும் குறிப்பிட்ட அந்த நேரத்து ரெயினிற்குள் நுழைந்தபோது எனக்குப் பரிட்சயமான வாசம் வந்துகொண்டிருந்தது. சுற்று முற்றும் விழிகளை எறிந்து பார்த்தேன். வழமையாகச் சந்திக்கும் முகங்கள் எதையும் காணவில்லை. அப்படியாயின் இந்த நறுமணம் நான் நினைக்கின்ற பெண்களிடமிருந்து வரவில்லையா என்கின்ற ஏமாற்றந்தான் முதலில் என்னைத் தாக்கியது. 

இரக்கூன் தெருவைக் கடக்கும்போது தன் தற்காப்புக்காய் மிக மோசமான நாற்றத்தை சுரந்துவிட்டுப் போகும். ஆனால் அது கடந்தபின்னும் நீண்ட நேரத்திற்கு அந்த வாசனை பரவியபடியே இருக்கும். சிலவேளை அவ்வாறுதான் இந்தச் சப்வேயிலும் நான் தேடிய பெண் தன் வாசனை விட்டுவிட்டுப் போய்விட்டாரோ என யோசித்தேன். ரெயினுக்கான டோக்கனைப் போட்டுவிட்டு உள்ளே வந்தாயிற்று அதற்காகவேனும் கொஞ்சத் தூரமாவது பயணித்துவிட்டுத் திரும்புவோம் எனத் தீர்மானித்து 'நவ்' பேப்பரையும் எடுத்துக்கொண்டு காலியிருக்கையொன்றில் அமர்ந்தேன்.

எனக்கு எப்போதும் ஓரு பழக்கமிருக்கிறது. புதுப் புத்தகம் என்றால் என்ன புதுப் பத்திரிகை என்றால் என்ன உடனேயே நுகர்ந்து விடுவது. அந்த வாசனை நான் அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் எழுத்துக்களோடு பரிட்சயம் ஆக முன்னரே என்னோடு நட்பாகிவிடும். பிறகு புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை ஒரு துணையாக வந்திருக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு வாசனை. சிலவேளைகளில் அந்த வாசனையே ஒரு புத்தகம் நல்லதொரு வாசிப்பைத் தருமா இல்லையா என்பதைக் கூட சொல்லிவிடக்கூடும்.

'நவ்' 'வை எடுத்த போதும், உடனேயே நுகர்ந்து பார்க்க ஆசையிருந்தும் ஆட்கள் பார்த்துவிடுவார்களே என்ற தயக்கத்தில் அதை ஒத்திப் போட்டேன். பக்கங்களைப் புரட்டுவதும் அவ்வப்போது சில செய்திகளை வாசித்தபடியும் இருந்தபோது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் கண்களும் இந்தப் பக்கங்களில் மேய்வதைக் கண்டேன். '.நவ்'வின் பிற்பக்கங்களில் அழகான பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் 'எங்களை அழையுங்கள்' எனக் கூறியபடி சிரித்துக்கொண்டிருப்பார்கள். அழைத்துப் பேசுவதற்கு மட்டும் இவ்வளவு கட்டணமா என்று ஒரு காலத்தில் வாய் பிளந்துண்டு. ஆனால் எல்லா வியாபார விளம்பரங்களிலும் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில்தான் நிறைய விடயங்கள் உட்பொதிந்து இருக்கின்றன என்பதைப் பின்னர் அறிந்தபோது திறந்த வாய் தானாய் மூடிக்கொண்டது.  ஒரு சஞ்சிகையை முழுதாய் வாசிக்காமல் வைப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.  எனினும் பக்கத்திலொரு பெண் இருக்கும்போது, 'அழைப்புவிடும் பெண்களின்' பக்கங்களைப் பார்ப்பது சற்று அந்தரமாக இருக்கும். அந்தப் பக்கங்களைப் புரட்டாமலே மடியில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு கண்களை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் பிடித்த வாசத்தைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

'நீ வாசிக்கவில்லையெனில் பேப்பரைக் கொஞ்ச நேரம் இரவல் பெற முடியுமா?' என ஒரு குரல் ஒலித்தது.

சூரியகாந்தித் தோட்டத்திலும் லாவண்டர் நிலப்பரப்புக்களிலும்,  நான் பின் தொடரும் பெண்தான் இன்று கதைக்கவும் தொடங்கிவிட்டாரோ என்றுதான் முதலில் நான் நினைத்தேன்.

'ஓ...! நீ உறங்கிவிட்டாய் போலும்!' என மன்னிப்புக் கோரும் மெல்லிய குரல் கேட்கவும் நான் விழிகளை விரித்துப் பார்த்தேன்.

அருகிலிருந்த பெண்தான் கதைத்திருக்கின்றார். நான் அதற்குள் வழக்கமான என் கனவுக்குள் மூழ்கிவிட்டிருக்கின்றேன்..'தாராளமாக, நீ வாசிக்கலாம்' என பேப்பரை அவரிடம் நீட்டினேன்.

நாம் எந்தப் பக்கங்களைத் தவிர்த்தேனோ அவர் அந்தப் பக்கங்களுக்கே நேரடியாகப் போய், யாருடையதோ தொலைபேசி இலக்கத்தைத் தேடுவது போல நிதானமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பக்கங்களை அவரோடு சேர்நது பார்க்க மனம் குறுகுறுத்தாலும், அவர் அதைப் பார்த்துவிட்டால் என்ன நினைப்பாரோ என்கின்ற அந்தரமும் ஒருங்கே சேர, கொதிக்கின்ற உலையாய் தவித்துக்கொண்டிருந்தேன். இவரும் 'எங்களை தொலைபேசியில் அழையுங்கள்' எனக்கூறும் பெண்களைப் போலத் தொழில் செய்கின்றாரோ என என் மனம் விழித்துக்கொண்டது.

இப்படி நான் அல்லாடிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவர் 'வாசனைகளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பது என்பது குதூகலமும் துயரம் ஒருங்கே சேர்ந்ததுதான் அல்லவா?' என்றார்.

எனக்கு அவர் என் மனதை இப்படியாக வாசித்தது, அவர் நவ் பேப்பரின் இறுதிப்பக்கங்களைப் பார்த்ததைவிட இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை எளிதாக நம்பவும் முடியவில்லை.

ப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஹவானா போயிருந்தபோது மந்திரக்காரி மாதிரியான தோற்றத்தில் பெரும் ஹவானா சுருட்டைப் பிடித்தபடி ஒரு மனுசி இருந்தார். அவர் எங்களுக்கான சீட்டுக்களை எடுத்து வாசித்து எதிர்காலத்தைக் கணிப்பார் என்றும் எங்களின் சுற்றுலா வழிகாட்டி கதை மேல் கதை சொல்லி நம்பவும் வைத்திருந்தார். அவரிடம் எனக்குப் பிடித்த நடிகையான அஸினை நான் எப்போதாவது சந்திக்க வாய்ப்பிருக்கா என்கின்ற முக்கியமான கேள்வியைப் பத்து பெஸோ கொடுத்துக் கேட்டேன். அடுத்த வருடத்திற்குள் அஸின் கனடா வருவார், நீ சந்திக்க மட்டுமில்லை அவரோடு சேர்ந்து டின்னருக்குப் போவாய் என உறுதியாய்க் கூறியிருந்தார். இதைக் கேட்ட சந்தோசத்தில் இன்னும் ஐந்து பெஸோ மேலதிகமாய் அந்த மனுசிக்குக் கொடுத்து விட்டு வந்திருந்தேன். ஆனால் அஸினோ அடுத்த வருடம் கனடா வரவில்லை. இலங்கைக்குத்தான் போயிருந்தார். என்னோடு டின்னர் வருவதற்குப் பதிலாக இலங்கை ஜனாதிபதியின் துணைவியாரோடு எங்கையோ போய்ச சாப்பிட்ட படமும் வெளிவந்ததைக் கண்டு நான் நொந்து போனதுதான் மிச்சம்.


ஆக கடந்தகால வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்ட நான், இன்னொரு முறை இப்படி 'மனதைப் படிப்பவர்களிடம்' ஏமாறத் தயாராக இருக்கவில்லை. என்றாலும், அவரிடம் 'எப்படி நான் வாசனைகளைப் பின் தொடர்கின்றவன் என்று உனக்குத்த் தெரியும்?' எனக் கேட்டேன். 'வாசனைகளைப் பின் தொடர்பவர்கள் தங்களுக்கென்று சில தனித்துவமான சமிக்ஞைகளை வைத்திருக்கின்றார்கள். என்னால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் நானும் அவ்வாறாக வாசனையைப் பின் தொடர்பவர்களில் ஒருத்தி தான்' என்றாள்.

வாசனைகளைப் பின் தொடர்வது ஒருவிதமான நோயோ என நினைத்துக்கொண்ட எனக்கு அப்படி வேறு சிலரும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.

'ஆம்,  நான் பஞ்சாப்பில் இருந்தபோது சிறுவயதில் இருந்தே கோதுமைகளின் வாசனையை எங்கு சென்றாலும் பின் தொடர்பவளாக இருந்திருக்கிறேன். அதுவும் கோதுமை அறுவடைக் காலத்தில் மிகவும் உச்சமான குதூகலத்தையும், அறுவடை முடிந்தபின் மிகப் பெரும் வெறுமையையும் அனுபவித்திருக்கின்றேன். பின்னாளில் வாசனை இல்லாது என் வாழ்வு முழுமையடையாது போல ஏதோ ஒரு வாசனையைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றேன். உனக்கு அப்படி சிறுவயது நினைவுகள் இல்லையா?' என என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நினைவுகளைச் சுழற்றிப் பார்க்கையில், சிறுவயதில் பனம்பழத்தினதும் விளாம்பழத்தினதும் வாசனையைப் பின் தொடர்ந்தவனாக நானும் இருந்தது தெரிந்தது.  எங்கள் வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி இருந்த விளாமரத்தில் பழங்கள் பழுப்பதை என்னால் நுகர முடிந்திருக்கிறது.. இப்படி வாசனையை மோப்பம் பிடிப்பதைப் பார்த்து, ‘உனக்குப் பாம்பின் தன்மையடா' என அம்மாவே அடிக்கடி கூறியிருக்கின்றார்.  இவளுக்கு இதைச் சொன்னால் நானொரு பாம்பு மனிதன் என நினைத்துக்கொள்வாளோ என்கிற அச்சத்தில் அப்படியேதும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லையென இதை மறைத்தேன். மேலும் பிறகான காலத்தில் ஆட்லறிகளினதும், கிபீர்க் குண்டுகளினதும் வாசனையை நுகர்வதே வாழ்வதற்கான ஒரேயொரு வழியாக ஆகிப்போனதை எப்படி இவளுக்கு உணர வைப்பது. எனினும் அரசியல் இன்றி இவ்வுலகில் எதுவும் அசையாது என்பதால், 'உங்களின் இராணுவம் எங்களின் நாட்டுக்குள் வந்தபோது அவர்களிடமிருந்து தனித்துவமான மணம் வந்ததை அறிந்திருக்கின்றேன். ஆனால் அது எனக்குப் பிடிக்காத வாசம், வெறுப்பைத் தருகின்ற நாற்றம்' என்றேன். சற்று நேரம் முன்னரே அறிமுகமான ஒருத்தியிடம் இப்படிக் காட்டமாகக் கூறியது தவறோ என சொன்னதன் பிறகுதான் உறைத்தது.


னக்கு இந்திய இராணுவ கால அனுபவத்தினால் பஞ்சாபிகள் மீது  சற்று வெறுப்பு இருந்தது. ஆனால் இவள் மீது ஏனோ அதையும் தாண்டி ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டது போலத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களை உற்றுப் பார்த்தாள் என்பது மர்மமாயிருந்த்து. சிலவேளை இவளும் அவர்களைப் போன்ற தொழில் ஏதேனும் செய்கின்றாளோ என்கின்ற சந்தேகம் வந்தது. வாய் விட்டுக் கேட்கலாந்தான், ஆனால் இப்படிக் கேட்டுவிட்டால், நான் இதுவரை கஷ்டபட்டுக் கட்டியமைத்த ‘நல்ல மனுஷன்' பிம்பம் காற்றில் பறந்துபோய்விடுமே என்பதுதான் சங்கடமாய் இருந்தது.

 பூடகமாய்த்தான் இதைக் கேட்க வேண்டும் என நினைத்து 'நீ என்ன வேலை செய்கின்றாய்?' என்றேன்.

 'நான் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களைப் பார்த்ததால் உனக்கு இப்படிக் கேட்கவேண்டும் போலத் தோன்றியதா என்றாள் சட்டென்று.

இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவள் எப்படி என் மனதில் தோன்றுவதை எல்லாம் உடனே உடனே அறிந்து கொள்கிறாள்?

'இல்லை, நானும் வேலை ஒன்று தேடிக்கொண்டிருக்கிறேன்....அதுதான் கேட்டேன்' எனச் சமாளித்தேன்.

'சரி, நீயென்ன எனது உறவா இல்லை என்னைக் காதலிப்பவனா... உண்மையைச் சொல்வதில் நானேன் தயங்கவேண்டும். ஆமாம் நானும் இந்தப் பெண்களைப் போலத்தான் தொழில் செய்து சம்பாதிக்கின்றேன், அதிலேதும் உனக்குப் பிரச்சினையா?' என்றாள்.

மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை நம் பரம்பரை எனச் சொல்லித் தரப்பட்ட எனக்கு இதற்குப் பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனவே மவுனத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவள் மேலும் தொடர்ந்தாள்...

'ஆனால் நான் என் வாடிககையாளர்களை நேரடியாகச் சந்திப்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே உரையாடுவேன். உங்களைப் போன்ற ஆண்களுக்குத்தானே சற்றுக் கிறக்கமாய்க் கதைத்தாலே எல்லாவற்றிலும் உச்ச நிலைக்குப் போய்விடுவீர்களே. கொஞ்சம் குரலில் கிறக்கமும், மொழியில் நெருப்பும் இருந்தால் போதும். ஆதனால் இந்த வேலை பெரிய கஷ்டமில்லை' என்றாள்.

எனக்கு அவள் இப்படிச் சொன்னது இன்னும் அந்தரமாகப் போய்விட்டது. ஏதோ என் வீட்டுக்குள் வந்து பார்த்தது மாதிரியல்லவா எல்லாவற்றையும் போட்டுடைக்கிறாள். இனி இவளோடு கவனமாகக் கதைக்கவேண்டும் என எச்சரிக்கை நிலைக்குப் போயிருந்தேன்.

'இப்படி நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன் என்றால் எல்லா ஆண்களும் நிறையக் கேள்விகள் கேட்பார்கள். நீயின்னும் அதைத் தொடங்கவில்லையே?' என்றாள்.

ஏற்கனவே என் இரகசியங்களை அறிந்த அவளின் முன் அம்மணமாக நிற்பதாய் உணர்ந்துகொண்டிருக்கின்றவனுக்கு இது ஒரு கேடா என நினைத்துக்கொண்டேன்..செஸ்டர் ஸ்ரேசனை ரெயின் நெருங்கிக்கொண்டிருந்தது. இது, தான் இறங்குவதற்கான தரிப்பிடம் என அவள் சொன்னாள். என்னைப் போல வாசனைகளைப் பின் தொடர்கின்றவள் என்பதில் ஒரு நெருக்கத்தை உணர்ந்து அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்போமோ என முதலில் யோசித்தேன். அது அவ்வளவு நல்லதில்லையென நினைத்து எனது இலக்கத்தை 'நவ்' பேப்பரின் ஓரத்தில் கடகடவென எழுதிவிட்டு அவளிடம் கிழித்துக் கொடுத்தேன். 'நீயும் அவர்களில் ஒருவன் தானோ' என நினைத்தாளோ தெரியாது, ஆனால் வாங்கிக் கொண்டாள்.

வள் என்னை எப்போதாவது தொலைபேசியில் அழைப்பாளென எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. என்னைப் போல எத்தனை பேரைக் கண்டிருப்பாள். நான் கொடுத்த இலக்கத்தை அந்தக்கணமே  கசக்கியெறிந்துவிட்டுப் போயிருக்கக் கூடும். ரெயில்கள் ஒரு தரிப்பிடத்தில் மட்டும் தங்கி நிற்காதது போல, அவளைப் போன்றவர்களும் ஓடிக் கொண்டிருக்க விருப்பமுடையவர்களாக இருக்கக்கூடும். என்னைப் போன்ற பயணிகள் தான் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் தினமும் இறங்கி சலித்துப் போன வாழ்க்கையை வாழவேண்டியிருக்கிறது..

அடுத்த வாரவிறுதி வந்தபோது, வீட்டிலிருந்தால் பஞ்சி இன்னொரு போர்வையாய் என்னைப் போர்த்திவிடுமென்பதால் அவசரமவசரமாய் வாசனையை நுகரப் புறப்பட்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் மஞ்சளாய் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. நான் இரெயினுக்குள் என்னுடைய வழமையான நேரத்திற்கு ஏறிப் பயணித்தபோது, அவள் செஸ்டர் ஸ்ரேசனில் ஏறுவதைப் பார்த்தேன். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா' என்றாள். ' அப்படி இல்லையே...' என, அவள் என்னை இதுவரை தொலைபேசியில் அழைக்காத ஏமாற்றத்தை மறைத்துப் பதில் சொன்னேன். அவளுக்கு இது விளங்கியதோ என்னவோ தெரியாது. 'வாசத்தைப் பின் தொடரும் நமக்கு தொலைபேசி அழைப்புக்கள் அவ்வளவு முக்கியமில்லை. வாசம் சொல்லாத செய்தியையா தொலைபேசி சொல்லிவிடும்? என்றாள். உண்மைதான், இந்த நறுமணம் எனக்கு ஏதோ இரகசிய அழைப்புக்களை விடுத்துக்கொண்டிருப்பதால்தானே மற்ற அனைத்தையும் மறுத்து இதன் பின்னால் நான் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என நானும் நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக ஒவ்வொரு வாரவிறுதியும் சந்தித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வாசனைகளினூடாக அனுப்பப்படும சிக்கலான சமிக்ஞைகளை அறிவதில் இன்னும் தேர்ச்சி பெறுவதைப் பற்றி நிறையக் கதைத்தோம். எனது நாட்கள் வாசனைகள் நிரம்பிய அழகிய உலகமாய் இருந்தது. நான் கொஞ்சங் கொஞ்சமாய் நண்பர்களை வழமையாகச் சந்திக்கும் கோப்பிக்கடைகளில் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். வருகின்ற தொலைபேசி அழைப்புக்களையும் தவிர்த்து, வாசத்தின் மொழியினூடு வரும் அழைப்புக்களோடு பேசவும் தொடங்கியிருந்தேன். ஒருமுறை அவளிடமிருந்து கோதுமை வாசம் வருவது போலத் தோன்றியது. 'நீ கோதுமை மணத்தை உடையவள்' என்றேன். இல்லை நான் நீராலானவள். உன்னைப் போன்றவர்கள் நினைக்கும் வாசங்களுக்கு ஏற்ப மாறிவிடக் கூடியவள்' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

ருநாள் அவளைச் சந்தித்தபோது சற்றுப் பதற்றமாயிருந்தாள். வாசங்களைப் பற்றிக் கதைப்பதை மறந்து விட்டு, யாரோ அவளைப் பின் தொடர்வது போன்ற அச்சத்திலிருந்தாள். மெல்லிய குரலில் 'உன்னோடு கொஞ்ச நாளைக்கு வந்து தங்கியிருக்க முடியுமா?' என்றாள். நான் அப்போது ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டின் நிலவறையில் வாடகைக்கு இருந்தேன். ‘அதுவல்ல பிரச்சினை, உன்னை என்னறையில் வைத்திருக்கலாம். ஆனால் நான் நேசித்துக்கொண்டிருப்பவள் நோர்வேயில் தற்சமயம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?' எனக் கேட்டேன். 'நீ அவளுக்கும் வாசனையின் மொழியைச் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். அது தெரிந்திருந்தால் அவள் எதற்காய் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை மட்டுமில்லை, என்ன சிக்கலில் மாட்டியிருக்கின்றேன் என்பதையும் புரிந்திருப்பாள்' எனச் சொல்லிவிட்டு எனக்கொரு முத்தத்தைத் தந்துவிட்டு செஸ்டர் ஸ்ரேசனில் இறங்கிப் போகத் தொடங்கினாள். இந்த முறை பனம்பழத்தின் வாசனை அவளிலிருந்து வீசுவது போலத் தோன்றியது. இரெயின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. நான் அவள் இறங்கிப் போகும் ஸ்ரேசனிலிருந்து பனம்பழத்தின் வாசனையைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு அவளை நான் சந்திக்கவில்லை என்பது மட்டுமின்றி எனக்குப் பிடித்த அந்த வாசனைகளும் எனனை விட்டுபோய்விட்டன. மீண்டும் மீண்டும் நினைவிலும் நுகர்விலும் கொண்டு வர எத்தனை பிரயத்தனப்பட்டாலும் என்னால் அந்த வாசனையை மீளக் கொண்டுவர முடியவில்லை. இப்போது எல்லாம் சனம் பிதுங்கும் நெரிசலில் மனிதர்களின் வியர்வை நாற்றத்தைத்தான் என்னால் நுகர முடிந்தது. அவளும் இல்லாது போனதன்பின், வாரவிறுதிகளில் குறிப்பிட்ட ரெயினுக்காய் காத்திருந்து வாசனையைத் தேடிப் போவதை எல்லாம் நிறுத்திவிட்டிருந்தேன். நான் சந்தித்த அந்தப் பெண் தான் இந்த வாசனையைக் காவிய கடைசிப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒரு முதியவர் இறக்கும்போது ஒரு நூலகமே இல்லாமற் போய்விடுகின்றதெனும் சீனப் பழமொழியைப் போல இந்த நறுமணத்தின் இறுதித் தூதுவர் செஸ்டர் ஸ்ரேசனில் இருந்து நீங்கிப் போயிருக்க வேண்டும். ஆனால் அவள் நேரடியாக இருக்காதபோதும் முன்னர் எப்படி என்னால் அந்த வாசனையை சப்வே ரெயினுக்குள் நுகர முடிந்தது என்பதுதான் அதிசயமாயிருந்தது. சிலவேளைகளில் அவளோடு தொலைபேசியில் கதைக்கும்  வாடிக்கையாளர்களின் மூலந்தான் ரெயினில் வாசம் பரவியபடி இருந்ததோ தெரியவில்லை. நேரே சந்திக்காமல் காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்பவர்கள், வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதைப் பிறகு அறிந்துகொண்டேன்.  அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் விரும்பும் வாசத்திற்கேற்ப அவளால் வாசனைப் பரப்ப முடிந்திருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை, வாரவிறுதியில் வரப்போகும் ஓய்வை எண்ணித் திளைத்தபடி ரெயினில் 'மெட்ரோ' பேப்பரை வாசித்துக்கொண்டு போனேன். இலங்கையில் யாரோ ஒரு ராஜபக்சே தன் மனைவி நாய் வேண்டியதற்காய் ஐரோப்பாவிற்கு தனி விமானம் அனுப்பியிருந்ததை ஒரு செய்தியாய்ப் போட்டிருந்தார்கள். மனைவி மீது இவ்வளவு பிரியமாயிருக்கும் ராஜபக்சேக்கள் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் சற்றேனும் மனிதாபிமானத்தோடு இருந்திருக்கலாமென நினைத்துக் கொண்டேன். செஸ்டர் ஸ்ரேசனைத் தாண்டும்போது அவளின் ஞாபகம் வந்தது. எனது தொலைபேசி இலக்கதைக் கொடுத்திருந்தபோதும் அவள் ஏன் என்னை அழைக்கவில்லை எனவும் யோசித்தேன். ஆகக் குறைந்தது அவளிடம், நான் நீண்டகாலம் தேடி அலைந்த வாசனையை அவளை இறுதியாச் சந்தித்தபின் காணாமற் போய்விட்டதென்பதைச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். ஒரேயொரு முறையாவது எனக்குப் பதின்மங்களில் பிடித்த ஈரப்பலா வாசனையை அவளின் உடலில் இருந்து நுகர்ந்து பார்க்கவேண்டுமெனவும் ஆசை கிளர்ந்தது.

இவ்வாறு நினைவுகள் அலைக்கழிக்க, மெட்ரோவின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.  பஞ்சாப்பில் பிறந்த ஜஸ்மீட்ற் என்பவர் வன்கூவரில் நீண்டகாலம் வசித்தவர் என்றும், அங்கே முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்ததால் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு ஓடிவந்தவர் எனவும், ரொரண்டோவிற்கு சிலமாதங்களுக்கு முன் வந்து தலைமறைவாக வாழ்ந்த அவரை யாரோ நேற்று இரவு டொன்வெலி வீதியிலுள்ள பாலத்தின் கீழே கொன்று போட்டிருக்கின்றனர் எனவும் போடப்பட்டிருந்தது. செய்தியோடு பிரசுரிக்கப்பட்ட புகைப்படம் நான் சந்தித்த பெண்ணின் சாயலில் இருந்ததைப் பார்த்து மனம் அதிர்ச்சியில் உறைந்தது.  மேலும் இது தற்செயலாய் நடந்த கொலையல்லவெனவும், கெளரவக் கொலையாக இருக்குமெனவும் கிடைக்கப்பெறும் ஆதாரங்களினூடாக பொலிஸ் சந்தேகிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அவளை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று சந்தேகித்ததால் தான் என்னோடு கொஞ்சநாள் வந்து இருக்கலாம் எனக் கேட்டிருக்கின்றாள் போலும். நான் தான் அவளின் சிக்கலை விளங்கிக் கொள்ளாமல், என் கெளரவத்தைப் பார்த்து அவளைக் கைவிட்டிருக்கின்றேன். அவளைக் கொன்றவர்கள் மட்டுமில்லை,  நானுங்கூட என் கெளரவத்தின் பொருட்டு ஒரு கொலை நிகழக் காரணமாயிருக்கின்றென நினைக்க மிகுந்த கவலையாயிருந்தது.

ஒரு பெண்ணின் அகால மரணம் நிகழும்போது உலகில் இருந்து ஒரு வாசனை இல்லாமற் போகின்றது. நம் இதிகாசத்திலும் சூர்ப்பணகையின் மூக்கை வெட்டியது கூட அவள் தனக்குப் பிடித்தமான ஒருவனின் வாசனையைப் பின் தொடர்ந்து போய்விடக்கூடாது என்கின்ற அச்சத்தினால்தான் நிகழ்ந்திருக்கின்றது போலும்.

பொறுப்பற்றதன்மையால் ஒருத்தியைக் கொலை செய்துவிட்டென குற்றவுணர்வுடன் நோர்வேயில் படித்துக்கொண்டிருந்த காதலிக்கு நடந்ததைத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தேன். கணங்கள் கழியக் கழிய என் அறை எங்கும் கோதுமையின் வாசனை பரவத் தொடங்கியது. எனக்குத் திடீரென்று, அருகில் இல்லாமலே காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்புபவர்கள் நினைவில் வந்தார்கள். மேலும் வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும் என்பதும் ஞாபகத்தில் வந்தது. அப்படியாயின் என் காதலி இவர்களில் ஒருத்திதானோ? ஆக தொலைவில் இருக்கும் அவள் என்னை வாசனைகளால் எந் நேரமும் பின் தொடந்து கொண்டிருக்கின்றாளா? இப்போது கோதுமை வாசம் போய் ஈரப்பலா வாசம் கமிழத் தொடங்கியிருந்தது. எனக்குப் பயத்தில் உடல் வேர்க்கத் தொடங்கியது.. அப்படியாயின் நான் உண்மையாகவே அந்தப் பஞ்சாபிப் பெண்ணைச் சந்திக்கவேயில்லையா?

.......................
('அம்ருதா' - ஜூலை, 2014)
நன்றி: ஓவியம்: ராஜா சேகர்

காலமற்ற வெளியில் மிதந்தபடியிருக்கும் முத்தங்கள்

Wednesday, July 02, 2014

ரான் பாமுக் இன்னமும் திறக்காத அப்பாவின் சூட்கேஸை உற்றுப்பார்த்தபடி இருக்கின்றார். அதில் பிரியங்கள் இருக்கின்றதா அல்லது கடக்கமுடியாத் துயரங்கள் இருக்கின்றதா என்கின்ற பதற்றங்களுடன் 'அப்பாவின் சூட்கேஸை'ப் பற்றி தன் நோபல் பரிசு உரையை அவர் நிகழ்த்துகின்றார். தனது இருபதுகளில் ஓர் எழுத்தாளனாய் வரவேண்டுமென விரும்பி எல்லாவற்றையும் உதறித்தள்ளி -நான்கு வருடங்கள் செலவழித்து- முதல் நாவலை எழுதியபோது எந்த மனோநிலையில் ஓரான் இருந்திருப்பார். 'எனது பெயர் சிவப்பில்' வரும் நுண்ணோவியர்களில் ஒளிந்திருப்பது ஓவியராக வரவிரும்பி தோற்றுப்போன இன்னொரு ஓரான் தானா?

ஒரானின் அப்பா மகன் வாசிப்பதற்காய், இதுவரை காலமும் தான் எழுதியவற்றைத் தன் சூட்கேஸிற்குள் போட்டு கொடுத்துவிட்டுப் போகின்றார். ஒரானின் தகப்பனாரும் ஒருகாலத்தில் கவிஞனாக வர விரும்பி தன் முயற்சியில் தோற்றுப் போனவர். நினைத்தபோதெல்லாம் ஓரானையும் தன் குடும்பத்தையும் விட்டுவிட்டு பாரிஸிற்கும் அமெரிக்காவிற்கும் பயணமாகிக்கொண்டிருந்தவர். இந்தப் பயணங்கள் தான் விரும்பியதை எழுதுவதற்கான சூழலையும், காலத்தையும் தருமென நம்பி அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தவர். அப்பாவை நினைவு கொள்ளும் ஓரான்,  ஓர் எழுத்தாளராக அப்பா வர முடியாவிட்டாலும் தனது வாழ்க்கையை நண்பர்களோடும் குடும்பத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு மறைந்து போயிருக்கின்றார் எனக் குறிப்பிடுகின்றார். தன்னால் தனது தந்தையைப் போல உற்சாகமாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கையை எதிர்நோக்க முடியவில்லை என்பதைத்தான் மறைமுகமாக அப்பாவை நினைவுகூர்வதன் மூலமாக ஓரான் சொல்ல வருகின்றாரா?

எழுதுபவர்களெல்லாம் தம்மை எவரும் தொந்தரவுபடுத்தாத ஓர் அறையில் தனித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் தனித்திருக்கும் கொஞ்ச நேரத்திலேயே தங்களால் மனிதர்கள் அருகில் இல்லாமல் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதும் அவர்களுக்குப் புரிந்துவிடுகின்றது. காதல் வேண்டாம் என வரும் உறவுகளை உதறித்தள்ளிவிட்டு, தனித்திருக்கும்போது காதல் தங்கள் கதவைத் தட்டாதா என எதிர்பார்க்கும் சாதாரண மனிதர்களின் மனதுதான் இந்த எழுத்தாளர்களுக்கு உரித்தானதோ?

சல்மான் ருஷ்டி முதல் நாவல் வெளியிட்டு வந்த 700 பவுண்ட்ஸோடு இந்தியாவைச் சுற்றியலைகிறார். அந்தப் பொழுதில் முளைத்ததே 'நள்ளிரவின் குழந்தைகளை' எழுதும் யோசனை. மீண்டும் இங்கிலாந்து திரும்பும்போது அவரிடம் பணமேயில்லை. ஒரு விளம்பரக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறார். ஒருகட்டத்தில் எழுதுவதே முக்கியமென வேலையை உதறித்தள்ளும்போது நிறுவன அதிபர் 'ஊதியத்தை இன்னும் உயர்த்துகிறேன், வேலையில் இரு' என்கிறார்.  பணத்திற்காக அல்ல, எழுதுவதற்காகவே வேலையை விடுகிறேன் என  ருஷ்டி கூறுகின்றபோது, அந்த நிறுவன அதிபர் இவன் பிழைக்கத்தெரியாதவன் என்றுகூட நினைத்திருக்கலாம்.

எழுத்தாளர்கள் எப்போதும் பித்துப்பிடித்தவர்கள் போலும். எதற்காய் இவர்கள் இப்படியான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை விளங்கிக்கொள்வதே கடினமானதுதான். மேலும் எந்த நாட்டில் எழுத்தாளர்கள் இருந்தாலும், தம்மை வாசிக்காத மதிக்காத ஒரு நாட்டில்/சமூகத்தில் தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என அநேகர் கவலைப்படவும் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் அறியாத தேசத்திலிருந்து, தினந்தோறும் புதுப்புது வாசகர்களை அவர்களை வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிவதில்லை.

மொழியை, கலாசாரத்தை, நாடுகளின் எல்லைகளைத்தாண்டி ஒவ்வொரு படைப்பும் எங்கோ தொலைவிலிருக்கும் பல்லாயிரம் வாசகர்களைத் தீண்டிக்கொள்ள அல்லவா செய்கிறது? அந்த வாசகர்கள் இவர் எங்கள் எழுத்தாளரென கோப்பிக்கடைகளிலும், வீட்டு வரவேற்பறைகளிலும் விவாதிக்கொண்டல்லவா இருக்கின்றார்கள். பெயர் தெரியாத தேசமொன்றில் ஒரு வாசகர் ஒரு பிரதியைக் கொண்டாடுகின்றபோது எழுத்தாளர்கள் தம் மொழியை/பண்பாட்டை/கதை நிகழும் புதிய நிலப்பரப்பை அறிமுகப்படுத்தும் பெரும்பணியை தெரிந்தோ தெரியாமலோ செய்தும் விடுகின்றார்கள்.
கலாச்சாரங்களையும், தேசங்களின் எல்லைகளையும் தாண்டி மனிதர்களுக்குள் இருக்கும் நுண்ணுணர்வுகளோடு ஒவ்வோர் படைப்பும் உரையாடுகிறதல்லவா? சிலவேளைகளில் அருகிலிருக்கும் மனிதர்களை விட தூரதேசத்திலிருக்கும் ஓர் எழுத்தாளரோடு நாம் அதிகம் நேசம் கொள்கின்றோமல்லவா? நாமெல்லோருந்தான் ஈற்றில் தூசுகளைப் போல இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்துவிடப் போகின்றோம். ஆனால் எழுதுபவர்கள் நம் ஆன்மாவைத் தீண்டும்போது அவர்களின் நினைவுகளுமல்லவா நம்மோடு கலந்துவிடுகிறது?  .

ஆனால் அவர்களின் வாழ்வு சந்தோசமாய் இருந்ததா?  காலம் முழுதும் துயரில் தோய்ந்தொழுகிய வாழ்க்கையை அல்லவா தாஸ்தவேஸ்கி வாழ்ந்திருகின்றார். நறுக்கான சொற்களில் கதைகளைச் சொல்லிய ரேமண்ட் காவருக்கோ, புதுமைப்பித்தனுக்கோ அவர்கள் விரும்பிய வாழ்வு கிடைத்ததா? பீடில்ஸ் கலாசாரத்தில் முக்கியமானவரும், பயணிப்பதையே வாழ்வின் உன்னதமாய்க்கொண்டவருமான ஜாக் கீரோவிற் (Jack Kerouac) ஏன் அத்தனை இளமையில் இறந்து போகின்றார்?  ஜாக்கைப் போல தன்னையே பிரதிகளில் சிதைத்துப் பார்த்த ரோபார்ட் பாலானோவை (Robert Bolano)  அவர் வாழ்ந்த காலத்தில் யார் கண்டுகொண்டார்கள்?

ருவகையில் இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த அந்தக் கணத்தில் வாழ முயற்சித்திருப்பார்களோ போலத் தோன்றுகிறது. நம்மைப் போல என்றுமே வரமுடியாத ஒரு பொற்காலத்திற்காய்க் காத்திருக்கவில்லைப் போலும். இல்லாவிட்டால் அவர்கள் தம் கனவுகளைப் பெருக்கி பெருக்கி எதையும் எழுதாமற் போயிருக்கக்கூடும். அவர்கள் அந்தக் கணத்திலே வாழமுடிந்ததால் தான், தாம் விரும்பியதைச் செய்திருக்கின்றார்கள். மகிழ வேண்டிய கணத்தில் மலர்ந்து, துயரம் சூழந்த பொழுதுகளில் சோர்ந்து அதையதை அந்தக் கணங்களில் அனுபவித்துப் போயிருக்கின்றனர். மதுவினதும் போதைப்பொருட்களினது பாவனை சிலரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது, பலரைச் சிதைக்கவும் செய்திருக்கிறது
எழுதுபவர்களில் அநேகர் எப்போதுமே எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடியும், கேள்விகளை எழுப்பியபடியும் இருக்கின்றார்கள். எல்லோராலும் வாழ்வை அனுபவிக்கமுடியும், ஆனால் கலைகளினூடாடு தாம் உணர்பவற்றை முன்வைக்க சிலராலேயே முடியும். அதிலும் சிலரால்தான் இன்னும் நுட்பமாகவும் ஆழமாகவும் முன்வைக்கமுடியும். ஆகவேதான் இந்த எழுத்தாளர்கள் மற்ற விடயங்களில் மிக மிகச்சாதாரணமாய்த் தெரிந்தாலும் அவர்களின் படைப்புக்களின் மூலம் நமக்குள் உயர்ந்து நிற்கின்றனர் அவர்களை மேலும் மேலும் நேசிக்க முடிகிறது.

இவர்கள் பிற எல்லாவற்றிலும் தோற்றவர்கள் என்றாலும் தம் படைப்பின் மூலம் மினுங்கிக்கொண்டிருப்பதால்தான் அவர்களைச் சலிப்பின்றி பின் தொடர்ந்து செல்ல முடிகிறது. ஆகவேதான் யாருமற்றவர்களாய் எதுவுமற்ற சூனியத்தில் அலைகிறோமென எப்போதாவது அவர்களின் உள்மனக்குரல்கள் பேசுகின்றபோது நாம் அவர்களை கதகதப்பாய் அணைந்துவிட விரும்புகிறோம்.

மேலும், காலமற்ற வெளியில் அவர்களுக்கான எமது  முத்தங்கள் என்றென்றும்  மிதந்தபடியே இருக்கின்றன.

(நன்றி: 'உரையாடல்' இதழ் -01)

தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள்

Friday, June 20, 2014

-சிறு எதிர்வினை-

1.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன்.

நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவர்களாகவோ ஆகிவிடுவது இன்னொரு துரதிஷ்டம்.

இவ்வாறான அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களில் அநேகர் இரண்டு வகையான அரசியல் எழுத்து இருப்பதைக் கூட அவ்வளவு எளிதில் உள்வாங்குவதில்லை. ஒன்று, ஒரு பிரச்சினையிற்கான உடனடி எதிர்வினை. மற்றது நிதானமான ஆய்வு வகையிலான வரலாற்று, கலாசாரப் பின்னணியை உள்ளடக்கிய எழுத்துவகை. ஆனால் நம் தமிழ்ச்சூழலை உற்றுப்பார்க்கும் ஒருவர் அரசியல் கட்டுரைகள் என்றெழுதப்படும் அநேகம் உடனடி எதிர்வினை வகையைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறான உடனடி எதிர்வினைகளையே அரசியல் ஆய்வுக் கட்டுரைகளாகத்தான் அநேக தமிழ் ஊடகங்கள் பிரசுரித்தபடியுமிருக்கின்றன.

இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றபோது நாம் அனைவருமே உடனடி எதிர்வினைகளையே செய்யவேண்டியவராகின்றோம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அங்கே நிலைமை கட்டுக்கடங்காமலும், உயிர்ச்சேதம் இன்னும் ஏற்படப்போகின்றதோ என்ற பதற்றத்துடன் நாம் தோழமை உணர்வோடு ஒன்று சேர வேண்டியவர்களாகின்றோம்.

2.

முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களாகிய நாம் செய்த கொடுமைகள் வரலாற்றுப் பக்கங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. முஸ்லிம்களை நாம் 'அந்நியராக' அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, அவர்களைப் பார்த்து நீங்கள் தமிழர் என அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் என்ற குரலை இப்போதும் கேட்க வேண்டியது என்பது எவ்வளவு அவலம். 'தமிழர்கள்' என்ற அடையாளத்திற்குள் இருந்தவர்களை விலத்தி/விலக்கிவிட்டு இப்போது தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் வாருங்கள் என அழைப்பது, சிங்களவர்கள், நீங்கள் ஏன் தமிழர்களென பிரிந்து நிற்கின்றீர்கள், வாருங்கள் அனைவரும் இலங்கையர் என ஒற்றுமைப்படுவோம் எனச் சொல்வதற்கு நிகர்த்தது. இலங்கை முஸ்லிம்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் மீண்டும் வர அழைப்பவர்கள், சிங்களப் பேரினவாதம் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு இலங்கையர் என்ற ஒற்றையடையாளத்திற்குள் தமிழர்களாகிய நாம் நுழைய முடியுமா என யோசித்தால் இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் எழுப்பவே முடியாது.

நாம் அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழராய் நின்று அங்கு நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்த்துக் குரல்களை எழுப்பலாம் அல்லது வேண்டுமானால் மவுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட கொள்ளலாம். அதை விடுத்து முள்ளிவாய்க்கால் காலத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்புவது, உயிர்களும் உடைமைகளும் ஊசலாடிக்கொண்டிருக்கும் பதற்றமான கணத்தில் மனிதாபிமானம் அற்றது. முள்ளிவாய்க்கால் காலத்தில் போர் நடைபெற்ற வன்னி தவிர்ந்து தமிழர்கள் கணிசமாய் வாழ்ந்த யாழ் மாவட்டத்திலோ அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து கூட எதிர்ப்புக்குரல் எழுப்ப முடியாது அல்லவா இருந்தது? அவ்வாறு மெளனம் காத்ததற்கு அங்கிருந்தவர்க்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்ததுபோல, தமிழர்களுக்காய் குரல் கொடுக்க விரும்பியபோதும் இலங்கை முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம் என்பதைக்கூட ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது?

மேலும், முஸ்லிம்களுக்கு தமிழர்களாகிய நாம் பல அநீதிகளைச் செய்துவிட்டு எமக்கான அநீதியிற்கு நீங்கள் குரல்கொடுக்கவில்லை என்பது எவ்வளவு சுயநலமாக இருக்கும்? நாம் இதுவரை கடந்த காலங்களில் செய்த விடயங்களுக்காய், மீளிணக்கம் செய்ய என்ன செய்திருக்கின்றோம் என்று ஆறுதலாக யோசித்திருக்கின்றோமா? அந்நியராகவும் துரோகிகளாவும் துரத்தியடிக்கப்பட்ட அவர்களுடனான மீளிணக்கம் என்பது கூட எவ்வளவு நெடிய பாதையென்பதை அறிந்து, தொடர்ந்து நாம் நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டியவராய் அல்லவா இருக்க வேண்டும். அந்த சமிக்ஞைகளை ஏற்றுக்கொள்வதற்கும் விலத்துவதற்கும் நம்மால் ஒடுக்கப்பட்ட அவர்களுக்கே தெரிவு இருக்கிறதே தவிர நமக்கில்லை என்பதையும் அறிந்தாகவும் வேண்டும்.

உதாரணமாக, எதிர்காலத்தில் சிங்களச் சமூகம், நடந்தவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்வோமென தமிழர்களை நோக்கி நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்பினாலும், அவர்கள் மீது நம்பிக்கை வந்து எதிர் நல்லிணக்க சமிக்ஞை அனுப்பும் தெரிவு தமிழர்களுக்கு இருக்கிறதே தவிர சிங்களவர்க்கு இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை.

அவ்வாறான ஒருநிலையேதான் முஸ்லிம்கள் தொடர்பாய் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். நடந்தவற்றை மறந்துவிட்டு பழையபடியிருப்போம் என புலிகளோ,சம்பந்தரோ அறிக்கைகளால் மட்டும் சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. அதற்கப்பால் என்னவிதமான சூழ்நிலைகள் நம்மால் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று கவனித்தாகவேண்டும். இப்போது முஸ்லிம்கள் சிங்களப்பேரினவாதத்தால் ஒடுக்கப்படும்போது எவ்வித நிபந்தனையுமின்றி முஸ்லிம்களின் பக்கம் நின்று நாம் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறையிற்கு எதிராகக் குரல் கொடுப்பது, அவ்வாறான நல்லிணக்க சமிக்ஞைகளில் ஒன்றுதான்.

முஸ்லிம்களுக்கு இதில் தெரிவிருக்கிறது. தமிழர் தரப்பிலிருந்து நீட்டப்படும் கரத்தைப் பற்றிக்கொள்வதா அல்லது இன்னும் காலம் வரவில்லையென மறுப்பதா என்பது குறித்து. ஆனால் தமிழர்களாகிய நாம் தொடர்ந்து அவர்களுக்காய் தோழமைக் குரல் கொடுப்பதை மட்டுமே செய்யமுடியும். காலம் ஒருநாள் கனியும்போது நாம் எமது வித்தியாசங்களை விளங்கிக்கொண்டு, அருகருகில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடாது.

3.
இந்த விடயத்தோடு இன்னொரு தகவலையும் அடிக்கடி பார்க்கின்றேன். தமிழர்களின் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசோடு இணைந்து நிற்கும் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பது பற்றியது. தமிழர்களாகிய எமக்கு முஸ்லிம்களோடு தோழமை உணர்வை வளர்ப்பதே முக்கியமே தவிர, முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறுவது முக்கியமற்றது. இவ்வாறான அறிவுரைகளால், திருப்பவும் நாங்கள் அவர்களை ஆதிக்கம் செய்ய விரும்புகின்றோமா என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டியவர்களாகின்றோம். முஸ்லிம் மக்கள் தமக்கு எந்தத் தலைமை தேவையெனத் தேர்ந்தெடுக்கட்டும். முஸ்லிம் காங்கிரஸ் மீது நிறைய முஸ்லிம்களுக்கு விமர்சனம் இருக்கிறதென்பதை அவர்கள் பலரின் எழுத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்பது வேறுவிடயம்.

இதையேன் சொல்கிறேன் என்றால், இந்த எரியும் பிரச்சினையில் நாம் விமர்சனமும் கண்டனமும் செய்யவேண்டியது சிங்களப் பேரினவாதமே தவிர, முஸ்லிம் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டும். இந் நிகழ்விற்கு எதிர்ப்பாய் எழுதிய சிங்களவர்களின் கட்டுரைகளை வாசித்தபோது அவர்கள் எவரும் முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறவில்லை. முக்கிய எதிரியான அரசையும், பொதுபல சேனாவையும்தான் குறிவைத்து எழுதுகின்றார்களே தவிர முஸ்லிம் தலைமை குறித்து எதுவும் எழுதி வாசித்தாக நினைவினில்லை.

தொடர்ந்து சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசோடு இணைந்திருப்பதா இல்லையா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்யும் நேரம் வரும். முஸ்லிம் மக்களும் காலமும் அதைத் தீர்மானிக்கட்டும். அதைத் தமிழர்களாகிய நாம் எதைச் செய்யவேண்டுமென அவர்களுக்குச் சொல்லிக் காட்டத் தேவையில்லை. தொடர்ந்து இவ்வாறு இணக்க அரசியல் செய்யும்போது சிலவேளைகளில் பேரினவாத அரசோடு இயங்கும் தமிழ்க்கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புத்தான் தங்களுக்கும் எதிர்காலத்தில் நிகழுமென்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணராமலா இருக்கப் போகின்றது

4.
இந்த விடயம் குறித்து மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், இப்போது தமிழர்களாகிய நாம் முஸ்லிம்களுக்கு தோழமைக் குரல் கொடுப்பதும், நிகழும் கொடூரங்களுக்கு எதிராக நம் முழு ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு நிபந்தனையின்றி வழங்கவேண்டும் என்பதே. இங்கும் நான் அதைச் செய்தேன், நீங்கள் இதைச் செய்தீர்கள் என்றோ அல்லது உங்களுக்கு இது வேண்டும் என்கின்ற சிறுபிள்ளைத்தனமாய் அரசியல் செய்வதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். இது தமிழர் தரப்பு தன் நல்லிணக்க சமிக்ஞையைக் காட்டுவதற்கு மிக முக்கியமான தருணமாகும். காலம் அவ்வளவு எளிதில் எல்லாப் பொழுதுகளிலும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடுவதில்லை.

சிங்களவர் சிலருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நமக்கில்லையென்றால் எவ்வளவு வெட்கப்படவேண்டும்.


(ஜூன் 17, 2014, முகநூலில் எழுதியது)

செவ்வந்திப்பூ குறிப்புகள்

Wednesday, June 04, 2014

In Our Translated World

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒரு திட்டத்தில் எனது கவிதையொன்றையும் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அதற்கு அனுமதி தரமுடியுமா எனவும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவ்வாறான தொகுப்பாக்கும் வேறு சில முயற்சிகளுக்காய் ஆக்கங்களை அனுப்பக் கேட்ட -முக்கியமாய் தமிழ்நாட்டிலிருந்து வந்த- மின்னஞ்சல்களுக்கு, என் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் அவற்றைத் தவிர்த்திருக்கின்றேன்.

அவ்வப்போது மாற்றமும் தேவையாய்த்தானிருக்கிறது அல்லவா? இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவித்தாலும், அவர்கள் 'வதை' கவிதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றபோது, இதை நான் எப்போது எழுதியது என்ற குழப்பமும் ஏற்பட்டது. அநேகமான கவிதைகளுக்கு  நான் பெயரிடுவதேயில்லை, இல்லாவிட்டால் பிரசுரிக்கும்போது மட்டுமே தலைப்பிடுவதுண்டு. மேலும் எனது பெயர் பொதுவான் பெயராக இருப்பதாலும் நிறையப்பேர் அதேபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பதாலும், வேறு எவரினதும் கவிதையை என் பெயரில் பிரசுரிக்கக் கூடாது என்ற கவனத்துடனும் 'தயவு செய்து நீங்கள் தேர்வு செய்த கவிதையை ஒருமுறை எனக்கு அனுப்பிவிட முடியுமா?' எனக் கேட்டிருந்தேன். எழுதியவனுக்கே தான் எதை எழுதினேன் எனத் தெரியாதா என்று தேர்வுக்குழுவினர் தலையிலடித்திருக்கக்கூடுமென்றாலும், பொறுமையாய் எனக்கு என் கவிதையையே திருப்பி அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு நன்றி.

அண்மையில் இங்கு நடந்த வெளியீட்டு விழாவிற்கும் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை. ஆகவே இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பதிவு செய்யமுடியாதிருக்கின்றது. அ.முத்துலிங்கம் தான் இத்தொகுப்பு வேலையிற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றார் என நினைக்கின்றேன்.

நான் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்- என்னை யாரெனத் தெரியாதே- 'திண்ணை' போன்றவற்றில் கவிதைகள் வெளிவந்தபோது உற்சாகப்படுத்தி மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது இப்போதும் நினைவிலிருக்கிறது. அவ்வாறு உற்சாகப்படுத்தியவரை, என் நூற்களின் வெளியீட்டு விழாக்களிற்கு வந்தவரை, என் வாசிப்பு மற்றும் தெரிவுகள் காரணமாக அவரின் படைப்புக்கள் உட்பட அவர் சார்ந்து இயங்கும் 'இயல்விருது' வரை தொடர்ந்து விமர்சித்தே வந்திருக்கின்றேன் என்பது வேறுவிடயம். இரண்டு வார்த்தைகள் மறுதலிப்பாய் எழுதினாலே, முகப்புத்தகத்தில் நம்மைத் தடை செய்து, பின் படைப்புச் சுதந்திரத்திற்குக் 'குரல்'கொடுக்கச் சொல்லி முழங்கும் நிறையப் பேரைப் பார்க்கும்போது, கடுமையாய் விமர்சித்தாலும், படைப்பைப் படைப்பாய் மட்டும் பார்க்கத் தெரிந்த அ.மு என்னளவில் சற்று உயர்ந்துதான் நிற்கிறார்.

நூல் வெளியீட்டிற்குப் போய் தொகுப்பைப் பெற முடியவில்லை என்பதைவிட, அத்தொகுப்பில் கவிதைகள சேர்க்கப்பட்டவர்களுக்கு, கொடுக்கப்பட்ட ஒற்றை ரோஜாப் பூவைத் தவறவிட்டேன் என்பதை நினைக்கத்தான் சற்றுக் கவலையாக இருக்கிறது.

வதை
--------

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயப்படுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

நீல மல்லிகை (Blue Jasmine)

வூடி அலனின் அண்மைக்கால ரொமாண்டிச படங்களிலிருந்து சற்று விலகிய ஓர் படமிது. உயர்தர வாழ்க்கை வாழும் பெண் எப்படி அடித்தளம்வரை செல்கிறார் என்பதையும், அப்போதும் கூட தன் 'அந்தஸ்தை' விட்டுக்கொடுக்காது இறுதிவரை வீறாப்புடன் இருக்கிறார் என்பதையும் ஜாஸ்மின் என்கின்ற பாத்திரத்தினூடாக கொண்டுவருகிறார். வூடி அலனின் படங்கள் அநேகமாய் உரையாடல்களாலேயே செதுக்கப்பட்டாலும், கதாபாத்திரங்கள் மீது எமக்கு எப்படியோ வாஞ்சையையும் நெருக்கத்தையும் உருவாக்கியிருப்பார். இப்படத்தில் வூடி அலன், ஜாஸ்மின் பாத்திரத்திற்கு கருணையே வழங்குவதில்லைப் போன்று மிக இறுக்கமாய் வார்த்திருக்கிறார். ஒவ்வொரு வீழ்ச்சியின்போதும் ஜாஸ்மின் பாத்திரத்தின்மீது நமது நெருக்கம் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளின் மூலம் நம்மை ஜாஸ்மின் பாத்திரத்தின் மீது வாஞ்சை கொள்வதையே தடுத்தும் விடுகிறார்.

கணவரின் -திருமணத்திற்கான அப்பாலான- சில உறவுகளால் அவரோடு முரண்பட்டுப் பிரிகிறார். கணவரின் 'துரோகத்தை'யும் ஏதோ ஒருவகையில் பழிவாங்குவதற்காயத் தன் செல்வாக்கையும்/ செல்வத்தையும் இழக்கிறார். மகன் இவரின் செயற்பாடுகளால் - தாய் என்ற உறவே வேண்டாம்- என்ற நிலைப்பாடோடு ஜாஸ்மினை விட்டு முற்றுமுழுதாகப் பிரிகிறார். வீடற்ற ஜாஸ்மினுக்கு ஏழ்மையாக இருந்தாலும் தங்குமிடம் கொடுக்கும் தங்கையையும் கீழ்த்தரமாகவே நடத்துகிறார். எப்படியேனும் எல்லாவற்றையும் மறைத்து பொய் சொல்லியேனும் ஒரு பணக்காரரை காதலிக்கவும் வைக்கிறார். இறுதியில் எல்லாமே தலைகீழாக நடந்துபோகின்றபோதும், தன் போலிக் கெளரவத்தை விட்டுவிடாது அப்படியே இருக்கவும் செய்கிறார்.

கணவரை அப்படியே எளிதாக நம்புகின்ற ஜாஸ்மின், பல் வைத்தியரின் பாலியல் சுரண்டலைச் சகிக்கின்ற ஜாஸ்மின், தொலைந்துபோகின்ற மகனைத் தேடிச்செல்லும்போது மகனால் நிராகரிக்கப்படுகின்ற ஜாஸ்மின், காதலுக்காய் (மற்றும் அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற்காய்) பொய்களைச் சொன்னாலும், அங்கே உண்மையாகவே மெல்ல முகிழும் காதலில் நேசம் ததும்புகின்ற ஜாஸ்மின், இறுதியில் எல்லாவற்றாலும்/எல்லோராலும் நிராகரிக்கப்பட்டாலும் தான் இப்படித்தான் இருப்பேனென நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கின்ற ஜாஸ்மினென உணர்ச்சிகளை மாறிமாறிக் குழைந்து Cate Blanchett இயல்பாக நடித்திருக்கிறார்.

ஜாஸ்மின் இத்தகைய சரிவுகளைக் கண்டபின்னும் ஏன் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் என்று குழம்புவதை விட, ஜாஸ்மின்களால் இப்படித்தான் இருக்கமுடியும் என நாம் அவர்களைப் புரிந்துகொள்வதே சாலவும் சிறந்ததாக இருக்கும்.


பாரிஸ் கடிதங்கள் (Paris Letters)

சில வாரங்களுக்கு முன் தான், தற்செயலாய் ஜெனீசைக் கண்டடைந்ததையும், அவரின் எழுத்தும் வாழ்வும் என்னை வசீகரித்ததையும், எழுதியிருந்தேன். அவரின் 'பாரிஸ் கடிதங்கள்' (Paris Letters) சென்ற செவ்வாயனறுதான் வெளியாகியிருக்கிறது. இன்று பார்த்தால், ஜெனீஸ் எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரான எலிஸபெத்தை பாரிஸில் சந்தித்திருப்பதை வாசிக்க முடிந்திருந்தது. இன்னும் இவர்களைப் போல எத்தனை பேர்களின் வாழ்வையும் எழுத்தையும் பார்த்துப் பொறாமைப்பட காலம் 'கட்டளை'யிட்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஜெனீஸ், 2006ல் தற்செயலாய் எலிசபெத்தின் (Eat, Pray, Love) நூலை ஒரு புத்தகசாலையின் மூலையில் இருந்து எட்டு அத்தியாயங்களை வாசித்துவிட்டு வாங்கியதையும், அது தன்வாழ்வில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிடுகிறார். ஜெனிஸாவது குறிப்பிட்ட சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு அந்த நூலை வாங்கியிருக்கின்றார், நான் விலை கொடுக்காது வாங்காமலே இப்படி எத்தனை புத்தகங்களை புத்தகசாலையில் வாசித்திருக்கின்றேன் என நினைக்க சற்று கூச்சமாய்த்தானிருக்கிறது, ஆனால் அவமானப்பட எதுவுமில்லை.
எலிசபெத்தோடான பாரிஸ் சந்திப்பில், யாரோ ஒருவர் 'உங்கள் வெற்றியின் உச்சத்தை எப்போது உணர்ந்தீர்கள்?' எனக் கேட்க, அவர் -நம்மால் வெற்றியென நினைக்கப்பட்ட விடயம் எதையும் குறிப்பிடாது- 'எந்தக் கணத்தில் ரோமிற்கான விமானத்தில் ஏறினேனோ, அப்போதிருந்து எல்லாமே மிக நன்றாக மாறின' என்றிருக்கிறார்.

இதே கேள்வியைத் தன்னிடம் ஒருவர் கேட்டிருந்தால் எப்படி பதில் அளித்திருப்பார் என ஜெனிஸ் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார். அது,

If I were to answer the question, What was the peak of my success, I’d have a different answer.

It wasn’t meeting Elizabeth Gilbert, even though it was an astounding moment and am so very blessed that it happened. And it wasn’t Rome, Paris or London. It wasn’t even the lovely Christophe or Paris Letters.

The peak of my success is a quiet one.
And it happens every day.

At 8:20 each morning, as I sip my coffee and write my daily pages in my journal, I hear a door open and close. It’s my upstairs neighbor leaving for work. In my old life, I left for work at 8:20, too. Sometimes seeing 8:20 on the clock made my want to cry. Now, remembering back, I smile and take another sip of coffee. In a mug. In my apartment. In my yoga pants. Knowing I have a full day ahead of me to do what I want to do.

...இவ்வாறாக இந்த நாளும் அழகாகியது.

கொன்றைப்பூ குறிப்புகள்

Thursday, May 29, 2014


மாதொருபாகனும், ஆளண்டாப் பட்சியும், சில நினைவுகளும்...

'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன்.

ஈழத்தில் இருந்த காலங்களில் பிளாஸ்ரிக் வயர் பின்னிய கதிரையில் சுருண்டு கிடந்தபடி, மாலைச்சூரியன் எப்போது மங்கியதென அறியாது மெல்லிய இருள் படிவது கூடத் தெரியாது வாசித்துக்கொண்டிருப்பேன். 'மாதொருபாகனை' வாசித்து முடிக்கும்வேளையில் அவ்வாறுதான் இருள் சூழச்சூழ, எந்தநிலையிலும் மின்குமிழை இயக்காது வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற விருப்புடன் இயற்கை ஒளியிலேயே முடித்திருந்தேன்.

'மாதொருபாகனாய்' இருந்தாலென்ன, 'ஆளண்டாப் பட்சி'யாய் இருந்தாலென்ன, ஏன் 'கூளமாதாரி'யாய் இருந்தாலென்ன, நாவலின் உள்கிடக்கை சிலவேளைகளில் அவ்வளவு கவராவிட்டால் கூட, பெருமாள் முருகனின் சித்தரிப்புக்கள் நம்மை அப்படியே அந்தச் சூழலில் கொண்டு சென்று சேர்த்துவிடும்.

மாதொருபாகனின் விபரிப்புக்கள் எனக்குள் இழந்துவந்த கிராமத்தின் நினைவுகளை பெருக்கெடுக்கச் செய்தன. காடுகளில் (தோட்டங்களில்) செய்யும் விவசாயமும், வளர்க்கும் ஆடு மாடு, கோழிகளும் அவற்றை அளவிறந்து நேசிக்கும் காளியென, நானும் ஒரு பாத்திரமாய் இருப்பது போல மாதொருபாகன் ஆக்கியிருந்தது. எனக்குப் பழக்கமான பூவரசுகளையும்,வேம்புகளையும், பனைகளையும் மட்டுமில்லை வாதநாராயணி, கிளுவைகளென -நினைவிலிருந்து இல்லாமற்போய்க்கொண்டிருந்த- இன்னும் பல மரங்களையும், பறவைகளையும் மீளக் கண்டுபிடிக்க முடிந்தது.

காளி, ஒழுங்காய் கோழிகள் முட்டை பொரித்து குஞ்சுகள் பிற பிராணிகளிடமிருந்து தப்புவதற்காய் கரிப்புக்குருவிகள் வளர்க்கும் இடமெல்லாம் நுட்பமானது. எப்போதும் எங்கள் வீட்டில் கோழிகள் உலாத்தியபடியேயிருக்கும், அந்த முட்டைகளே அவசரத்திற்கு விற்கவும், பிறபொருட்களுக்கு பண்டமாற்றம் செய்வதற்குமென உதவிக்கொண்டேயிருக்கும்.

கோழி அடைகாத்து நிறையக் குஞ்சுகள் வந்தாலும் பெரிதாக வளரும்போது அவை பருந்துகளாலும், மரநாயாலும் அரைவாசியாக எண்ணிக்கையில் மாறியிருக்கும். இரவுத்தூக்கத்திற்காய் மாமரத்தின் கிளைகளிலே எங்கள் வீட்டுக் கோழிகள் தூங்குவதும், அவ்வப்போது மரநாய்கள் வந்து அவற்றை பலியெடுத்துச் செல்வதும் அடிக்கடி நிகழ்வது.

கோழிகளால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பறக்கமுடியும், அவைகள் தம்பாட்டிலே மாமரக்கொப்பிலே ஏறுபவை என்று நகரத்திலே பிறந்து வளர்ந்த நண்பருக்குச் சொல்லும்போதேல்லாம், நண்பர் சும்மா பொய் சொல்லாதே, கோழி பறக்காது என என்னை நக்கலடிப்பதுண்டு. பின்னர் தற்செயலாய் யூரீயுப்பில் கோழிகள் பறக்கும் விடீயோவைக் காட்டி நான் சொன்னது உண்மைதானென நிரூபிக்க வேண்டி வந்தது வேறு விடயம்.

பெருமாள் முருகனின் நாவல்களில் அநேகம் வருபவர்கள் கவுண்டர்களும் சாணர்களுமாய்த்தானிருக்கின்றார்கள். முக்கியபாத்திரமான கவுண்டர்கள் சாணர்களை ஒரளவு மதிக்கக்கூடியபவர்களாகவும், ஆனால் அதேசமயம் உள்ளே முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அதை 'ஆளண்டாப் பட்சி'யில் வரும் குப்பண்ணா பாத்திரம் மூலம் நன்கறிய முடியும். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் ஓடாய் தேய்ந்து வேலை செய்தாலும் கவுண்டர்கள் ஓர் எல்லைக்கு மேலே விடவும் மாட்டார்கள்.

'மாதொருபாகனில்' மாட்டுவண்டியில் சாணர்கள் அருகே அமரவே தீட்டுப் பார்க்கப்படும், அவர்களுக்குத் திருவிழாக் காலத்தில் மோரோ நீரோ ஊற்றும்போதுகூட தனியே பனங்கோட்டைகளில் ஏந்தி பவ்வியமாய்த்தான் குடிக்கவேண்டியிருக்கிறது. அன்பாய் காசுகொடுக்கும்போதுகூட சாணர் பெண், தன் துணிவிரித்துத்தான் நாலணாவையோ எட்டணாவையோ பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் இந்தச் சூட்சுமம் எல்லாம், சாணர் வீட்டில் கள்ளோ சாரயமோ வாங்கிக்கொடுக்கும்போது எப்படி காணாமற் போய்விடுகிறது என்பதுதான் 'அதிசயம்'. சாணர் பெண் சமைத்துக்கொடுக்கும் கறியிலும், சாறிலும், சோத்திலும் எந்தத் 'தீட்டை'யும் பார்க்காமால் எப்படி அள்ளியள்ளிச் சுவைத்துச் சாப்பிட முடிகிறது. பிள்ளை பிறக்கதாதால் 'வறடி' எனப் பெயரெடுக்கின்ற, அதன் நிமித்தம் ஒதுக்கப்படுகின்ற கவுண்டப் பெண் கூட, அழகாய் இருக்கும் சாணர் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச விரும்பினால் கூட 'தீட்டு வந்துவிடும்' என அஞ்சுபவராக, அந்த அனுபவத்தை மறுதலிப்பவராக இருக்கின்றார் என்பதில் எல்லாம் இருப்பது சாதியின் அரசியலன்றி வேறென்ன?

ஓரிடத்தில், 'வறடி'யாக இருப்பதால் ஒரு சடங்கில் ஒதுக்கப்படுகின்றார் கவுண்டர்பெண். அப்போது அந்தப் பெண் இப்படி எங்களைத் தீண்டாச் சாதியாக வைத்துவிடுகின்றார்களே என கவுண்டர்களைத் திட்டுகிறார். நான் இதைத்தாண்டி யோசித்துப் பார்க்கும்போது, கவுண்டர் பெண்ணுக்காகவது அவரால் குழந்தை பெறமுடியவில்லை என்ற உடலியல் காரணத்திற்காய் (அது கூட எவ்வளவு முட்டாள்தனமானது என்று சொல்லத் தேவையில்லை) தான் ஒதுக்கப்படுகிறார். ஆனால் இந்த 'தீண்டப்படாத' சாதி என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம் என்ன காரணத்திற்காய் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று சற்று யோசித்துப் பார்க்கலாமே எனத் தோன்றியது. அவர்கள் செய்த ஒரேயொரு 'தவறு' இந்த 'தீண்டப்படாத சாதி' என அழைக்கப்படும் பிரிவிற்குள் வந்து பிறந்ததைத் தவிர வேறென்ன...?

'கூளமாதாரி'க்கு பிறகு மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்த பெருமாள் முருகனின் நாவல் 'மாதொரு பாகன்' . இந்நாவலை 'கூளமாதாரி' மாதிரி எங்கே முடிப்பதென மிக நுட்பமாகத் தெரிந்து முடிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிடித்தமாயிருந்தது. 'ஆளண்டாப் பட்சி' நிலம்பெயர்வின் சிறுவரலாற்றைக் கோட்டிட்டு காட்ட முனைகிறதென்றாலும், நாவலாக அது வளரவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது.


த்ரிஷம்

குழல் பிட்டோடு தொடங்கும் காட்சியோடு அமிழ்ந்து இறுதிக்காட்சியில் மோகன்லால் பொலிஸ் ஸ்ரேசனிலிருந்து வெளிவரும்வரை உள்ளிழுத்துக்கொண்ட ஓர் திரைப்படம். இன்றைய சூழலில் எந்தக் கணத்திலும் நம் முன்னே சாதாரணமாய் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள ஒரு கதை. அதை எவ்வாறு திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதோடு 'அறம்' என்பது எதுவாக இருக்கும் என்பது குறித்தும் நம் மனதில் கேள்விகளையும் உருவாக்கிறது இத்திரைப்படம்.

மலையாளச் சூழலில் தொடர்ந்து எவ்வாறு நம்மைச் சலனமடையுச் செய்யும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடிகிறதெனவே யோசித்துப் பார்க்கிறேன். மலையாளத் திரைப்படங்களுக்கும் - எல்லா மொழிப்படங்களுக்கு நிகழ்வதைப் போல- ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்படி அவர்களால் வீழ்ச்சியிலிருந்து எளிதாக மீள உயிர்க்க முடிகின்றது? தமிழில் நல்ல படங்கள் வருவதற்கான சூழ்நிலை உருவாகின்றது என நாம் சற்று மகிழும்போதே அவ்வாறான நம்பிக்கைகள் தூர்ந்து மீண்டும் பழைய 'வழமை'யான நிலைக்குத் திரும்புவிடும் குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.

சென்ற வருடம் இங்கே நிகழ்ந்த திரைப்படம் சம்பந்தமான ஒரு கலந்துரையாடலிலும், தமிழில் நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகள் புதியவர்கள் (முக்கியமாய் 'நாளைய இயக்குநர் யார்? போன்ற நிகழ்வுகளின்) ஊடாக வந்தாலும் அதை ஒரு மாற்றத்திற்குரிய புள்ளியெனக் கொள்ளமுடியாதெனவும், ஒரளவு கவனிக்கத்தக்க இந்த இயக்குநர்கள் அடுத்தடுத்து இயக்கும் திரைப்படங்களை வைத்தே நாம் தமிழ்ச் சூழல் மாறுமா/மாறாதா என அவதானிக்க முடியுமெனச் சொன்னதும் ஞாபகத்திலுண்டு.

ஏன் மலையாளத்தில் இவ்வாறான நல்ல திரைப்படங்கள் -அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும்- வெளிவருகின்றது எனப் பார்க்கும்போது, அங்கேயிருக்கும் 'நட்சத்திர நடிகர்கள்' கூட கதைக்கேற்ப மாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கிய காரணங்களில் ஒன்று. திரிஷம் படத்தில் மோகன்ல்லால் சப்பாத்துக்காலால் அடிவாங்குகின்ற காட்சிகளையெல்லாம் தமிழ்ச்சூழலில் ஒரு படம் நடித்து (அதுவே ஹிட்டாயிற்று என்றால் சொல்லவே தேவையில்லை) தந்த நாயகர்கள் கூட இப்படி 'பாத்திரத்திற்கேற்ப' நடிப்பார்களென எதிர்பார்க்கவே முடியாது.

தமிழ்ச் சூழலில் சில இயக்குநர்கள் தன் சுயத்தில் ஒரு நல்ல படத்தைத் தந்தால் கூட, அவர் அடுத்தடுத்து 'நட்சத்திர நடிகர்களை' வைத்து படமாக்கும்போது அந்த நடிகர்களுக்கேற்ற ' நாயக விம்பக் கதைகளை' உருவாக்கின்றார்களே தவிர அநேகமாய் தம் சுயத்தைக் கைவிட்டு விடுபவர்களாக இருக்கின்றார்கள். இதில் பாலா போன்ற ஒன்றிரண்டு பேரே விதிவிலக்கு. 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற கதைகளைத் தந்த சுசீந்திரன் போன்றவர்கள் மறுதிசைக்கு உதாரணங்கள்.

ஆகவேதான், ஒரளவு நம்பிக்கை தந்து தமிழ்சூழலின் ஏதேனும் சலனத்தை உருவாக்குவார்கள் என நம்பிக்கை தந்த (நாளைய இயக்குநர் புகழ்) புதியவர்களால் கூட, அவர்களின் 2ம் 3ம் படங்களில் தமிழ்சூழல் ஏற்கனவே பயணித்துக்கொண்டிருக்கின்ற 'நாயக விம்ப வழிபாட்டு'த் திசையில் அலையும் அவலம் நிகழ்ந்திருகின்றது.

மலையாளச் சூழலில், எத்தகைய நட்சத்திரங்களாய் இருந்தாலும் அவர்களால் கதைக்கேற்ப இறங்கி வரமுடிகிறது. தங்களை அத்தகைய பாத்திரங்களிற்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. எனவேதான் மலையாளத் திரைப்படங்கள் காலத்துக்காலம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் தன்னைப் புதுப்புத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்ச்சூழலோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய பார்வையாளர்களைக் கொண்டிருந்தாலும் வணிக நெருக்கடியென போலிக் காரண்ங்கள் கூறிச் சிக்கிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் தன்னை உயிர்ப்பித்தபடி இருக்கிறது.

பாலாவினால் 'நடிகர்'களாக்கப்பட்டு, மாற்றத்தை ஏதேனும் ஒருவகையில் தமிழ்ச்சூழலிற்குக் கொணர்வார்களென நம்பப்பட்ட விக்ரமோ, சூர்யாவோ இன்று நிற்கும் திசையைப் பார்க்கும்போது நமது அவலம் புரியும். மலையாளச் சூழலில் ஃபகத் பாசில் போன்ற ஒருவருக்கு நிகராகக் காட்டக்கூடிய ஒருவர் கூட நம்மிடையே இல்லை என்பதையிட்டு வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.


Gods in Print: Masterpieces of India's Mythological Art (by Richardh Davis)

கொஞ்சக் காலம் முன்பு ரொறொண்டோவில் புத்தக சாலையிற்குச் சென்றபோது இந்நூலைக் கண்டு வாங்கியிருந்தேன். அழகான வர்ணப்படங்களுடன் வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. எப்படி கடவுள் படங்கள் முதன்முதலாக அச்சு ஊடகங்களிற்கு வருகின்றது, எந்த ஓவியர்கள் நாம் இன்று வணங்கும் கடவுளரிற்கு உருவங்களைக் கொடுத்தார்கள் என்பதை காலனித்துவக் காலத்திலிருந்து இதில் காட்சிப்படுத்துகின்றார்கள். அசல் ஓவியங்களின் கையெழுத்துப் பிரதிகளுடன் அவற்றைப் பக்கம் பக்கமாய்ப் பார்க்கும்போது சிலிர்ப்பாயிருந்தது.

மேலும் நாமின்று பார்க்கும் கடவுளரின் ஓவியங்கள் , எவ்வாறாக காலவோட்டத்தில் மாற்றமடைகிறது என்பதை அறிய/பார்க்கக் கிடைத்தது வித்தியாசமான அனுபவம் (சரஸ்வதி ஆரம்பகாலத்தில் வைத்திருக்கும் வீணை/இன்று நாம் பார்க்கும் வீணை. தாமரைப் பூவில் இல்லாத சரஸ்வதி/லக்சுமி ஓவியங்கள்). அதுவும் அச்சு ஊடகங்கள் மேற்கிலிருந்த காலத்தில், எப்படி ஜேர்மனியில் வைத்து அச்சிட்டப்போது அங்கிருந்த ஓவியர்கள் அவர்களுக்குத் தெரிந்த பின்னணியில் கடவுளரை வரைந்தார்கள் என்பது இன்னும் சுவாரசியமானது.

கிருஸ்ணனும் ராதாவும் மேற்கின் கோட்டைகளுக்கு முன்னும், கிருஸ்ணன் கோபியர்கள் குளிக்கும்போது ஆடைகளைக் களவாடிச்சென்று விளையாடுவதையும் மேற்கத்தைய மனம் எப்படிக் கற்பனை செய்திருக்கிறது என்பதை அறிவது.... தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுச் சென்ற ரவி/ராஜா வர்மா சகோதரர்கள் எப்படி தம் ஓவியங்களின் மூலம் அச்சுப்பொறியை தமக்குச் சொந்தமாய் வாங்கும்வரை புகழின் உச்சத்துக்குச் சென்றார்கள் என்பதையும், பிறகு எப்படி அதை தாம் வேலைக்கு அமர்த்தியிருந்த ஜேர்மனியருக்கு விற்றதையும், அந்த ஜேர்மன்காரர் தொடர்ந்து ரவி வர்மாவின் ஓவியங்களின் உரிமையை வாங்கி தன் அச்சுக்கூடம் 1970(1980?) தீயில் எரியும்வரை அச்சிட்டாரென பல விடயங்களின் வரலாற்றை வர்ணப்படங்களினூடாக அறியக்கூடியதாய் இருந்தது.

இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் 1960 களிலிருந்தே இந்தியாவிற்கு -முக்கியமாய் தமிழகத்திற்கு- அடிக்கடி பயணித்துக்கொண்டிருப்பவர். அவர் எப்படி தான் மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனார் என்பதையும் அங்கே உள்மாடத்திலிருந்த சிறுகடையொன்றில் கடவுளரின் படம் வாங்கத்தொடங்கி அந்தக் கடைக்காரரினூடாக கடவுளரின் கதைகளை அறிந்ததையும், தமிழகத்துக் கடைகள் எங்கினும் (ஓட்டோக்களில் கூட) கடவுள் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என விரிவாக எழுதியிருப்பதை வாசிப்பது சுவாரசியமானது.

இந்த ஓவியங்களில் தெறிக்கும் அழகை விட, ஒவ்வொரு படங்களும் வரையப்பட்ட மாந்தீரிகத்தன்மைதான் இன்னுமின்னும் ஈர்த்துக்கொண்டேயிக்கிறது.