ஒருவன் ஓவியம் வரைவதில் பெருவிருப்பமுடையவனாக இருக்கின்றான்.
நள்ளிரவில் விழித்திருந்து நிலவையும், விடிகாலையில் துயிலெழுந்து சூரியனையும்
வரைய விரும்பும் அவன் காதலை தனது 20களில் சந்திக்கின்றான். அந்தக் காதலி
தற்செயலாக கர்ப்பமாக அவளையே மணம் புரிகின்றான். அவனது பெற்றோருக்கு அவன் இப்படி
இளமையின் தொடக்கத்திலே குடும்ப வாழ்க்கைக்குள் நுழைகின்றான் என்பதில் கவலை
இருக்கின்றது.
அவனின் பெற்றோர் வயதாகும்போது அவனுக்கு அந்த வீட்டைக் கொடுத்து ஒரு முதியோர் இல்லத்துக்கு இடம்பெயர்கின்றனர். அப்போதும் அவன் இந்த வீட்டை விற்க விரும்பவில்லை. மனைவிக்கு வேறு விதமான பல கனவுகள் இருக்கின்றன. தமக்கான சொந்த வீடு/ பல்வேறு நாடுகளுக்குப் பயணிப்பதென்று அவளின் கனவுகள் வேறுவிதமானவை. இப்போது இவர்களின் மகள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கவும், மேற்படிப்புப் படித்து வக்கீலாகவும் வர விரும்புகின்றார். அந்தப் பெண்ணுக்கான படிப்புச் செலவுக்காக இந்த வீட்டையே மோட்கேஜ் வைக்கின்றனர். இவ்வாறு இந்த தம்பதிகளின் கனவுகளான் வீட்டைக் கட்டுவதோ, இணைந்து பயணங்கள் செய்வதோ ஒருபோதும் சாத்தியமாகாமல் போகின்றது.
ஒருகட்டத்தில், அவனின் மனைவி பிரிந்து போகின்றாள். அவனால் அவளைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இத்தனைகாலம் சேர்ந்து வாழ்ந்த பெண்ணல்லவா அவள்.
அவனின் தாயாரும் முதியோர் இல்லத்தில் இறந்துபோக, நடக்கமுடியாத தன் தந்தையை வீட்டில் வைத்து இவனே பார்த்துக் கொள்கின்றான். தந்தை இறக்கும்வரை நல்லதொரு மகனாக இருந்து பார்த்துக் கொண்டு, இவன் தன் ஓவியம் வரையும் கனவைத் தூசி தட்டி ஓவியங்களை மீண்டும் வரையத்தொடங்குகின்றான்.
இப்போது அவனுக்கும் அவளுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். காலங்காலமாக மிகுந்த கோலாகலத்துடனும், குதூகலத்துடனும் நடக்கும் Thanks Giving Day Dinner எவருமே இல்லாது கொண்டாடப்படுகின்றது. ஒருமுறை அவளும் இவனும் அந்த விருந்தைக் கொண்டாடுகின்றனர். தனித்து இருக்கும் இவன், அவளை இந்த வீட்டில் வந்து இரு எனக் கேட்கின்றான். அவள் மரியாதையாக முடியாதென மறுக்கின்றாள்.
காலம் அவளைத் தின்று ஞாபகமறதி என்னும் 'நோயை'க் கொண்டு வருகின்றது. அவளுக்கு பெறுமதியான நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டன. சின்னச்சின்ன சந்தோசங்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அவன் இதுவரையும் விற்கமறுத்த அந்த வீட்டை இறுதியில் விற்கின்றான். அவளை அதை விற்க முதல் அழைத்து அமரவைத்து பழைய நினைவுகளைப் பகிர்கின்றான்.
இது 'Here' என்கின்ற திரைப்படத்தின் ஒரு பகுதி. ஒரு வீடு எவ்வளவு நினைவுகளை வைத்திருக்கின்றது என பல்வேறு மனிதர்களின் வாழ்வினூடு வெளிப்படுத்தி நமக்கு நெருக்கமாகின்ற ஒரு திரைப்படம் இது.
இதில் வரும் அந்த 'அவனின்' வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஒருவன் தனது கனவுகளை குடும்பத்துக்காய்க் கைவிடுகின்றான். அவனளவில் அவன் தனது எல்லாவற்றையும் பிறருக்காக கொடுக்கின்றான். ஆனால் அது போதாது இருக்கின்றது அல்லது மற்றவர்களின் கனவுகள் வேறு விதமாக இருக்கின்றது. மகள் படிப்பதற்காக வீட்டை விட்டுப் போகின்றாள். மனைவி அவனை விட்டுப் பிரிந்து போகின்றாள். பெற்றோர் இறந்து போகின்றனர்.
அவன் எப்போதும்போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இந்த வாழ்வை வாழ்கின்றான். எவர் மீதும் கோபமும் இல்லை; எதன் மீதும் அளவுக்கதிகமான ஒட்டுதலும் இல்லை. அப்படியெனில் அவனை நாம் எவ்வாறு மதிப்பிடுவோம்.
நாம் அவனைப் போல வாழும் ஒருவராக இருக்கவே, பெரும்பாலான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனில் நாம் நமது வாழ்வை உண்மையிலே வாழ்ந்தவர்களா அல்லது இந்த சமூகத்தின் பார்வையில் தோற்றுப் போனவர்களா? இன்னொருவகையில் நாம் சமூகம்/குடும்பம் என்று இருந்தாலும் என்றென்றைக்கும் தனித்து இருக்க சாபமிடப்பட்டவர்கள்தானோ? அந்தத் தனித்திருத்தலில் இருந்து, வாழ்வின் 'இறுதி உண்மைகளை'க் கற்றுக்கொண்டு, நம் இறுதிக்காலங்களில் ஓர் தெளிவை அடைகின்றோமா?
சிலவேளைகளில் தமது முதுமையை ஆறுதலாக அடையாமல் சட்டென்று இடைநடுவில் மரணத்தைத் தழுவியர்கள், இவ்வாறான கடும் இருத்தலியக் கேள்விகளைச் சந்திக்காமல், வாழ்ந்து முடிக்க ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என எடுத்துக் கொள்ளலாமா?
*****************
(Mar 16, 2025)
0 comments:
Post a Comment