கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேலைக்குச் செல்லுதல்

Tuesday, December 28, 2021

நெடும் மாதங்களுக்குப் பிறகு, முழுநேரமாக வேலைத்தளத்துக்குப் போகத் தொடங்கியிருந்தேன். எல்லாமே ஒருவகை சர்ரியலிசம் போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. சூரியனே வெளிவரத் தயங்கும் பனிக்காலத்தில் விடிகாலையில் எழுந்து பஸ், ரெயின் என எடுத்துப் போவதை நினைக்க ஒருவகை அயர்ச்சி வந்தது. போக வரவென கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் பயணம் அவ்வளவு மனதுக்கு உவப்பாவதில்லை.


ஆனால் இந்த வகைப் பயணங்களில் புத்துயிர்ப்புத் தருவது என்னவென்றால், வெவ்வேறான மனிதர்களைச் சந்திப்பதும், அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பார்ப்பதுந்தான். இன்று பெரும்பாலானவர்கள் அலைபேசியிலே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்துக்குப் போய்விட்டார்கள் என்றாலும், அரிதாக அச்சுப் புத்தகங்களை கைகளில் வைத்து வாசிக்கும் சிலரை ரெயில் பயணங்களில் சந்திப்பதுண்டு. அப்படி அவர்கள் எதையாவது வாசிக்கையில் அந்தப் புத்தகங்களின் பெயர்களை நினைவில் வைத்து பிறகு நான் தேடிப் பார்ப்பேன். பிடித்தால் நூலகத்தில் இரவல் பெற்றோ அல்லது புத்தகக்கடையில் வாங்கியோ வாசிப்பேன். அந்தச் சந்தர்ப்பங்கள் அலைபேசியில் பிறர் புத்தகங்களை வாசிக்கும்போது எனக்குக் கிடைப்பதில்லை.

நீண்டநாட்களின் பின் ரெயினில் போகையில், எல்லாமே பதற்றத்தைத் தந்துகொண்டிருந்தபோது, சில பெண்கள் புத்தகங்களை கையில் வைத்து வாசித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது, எனக்கான உலகம் சுழலத் தொடங்கிவிட்டதென்று உள்ளே நினைத்துக் கொண்டேன். எனக்கு மறுபுறத்தில் இருந்தவர் 'Dear Life' என்கின்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அநேகமாய் அது வாழ்க்கை முன்னேற்ற வகையில் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். நானும் மனம் சற்று சோரும்போது இவ்வாறான அபுனைவுகளில் சென்றடைவதுண்டு. அது பெரும்பாலும் புத்தரோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் எளிமையாக வார்த்தைகளில் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ஸென் வகையாக இருக்கும்.

எனக்கு எதிரில் இருந்த பெண் இன்னொரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அது 'Between Two Kingdoms: A Memoir of a Life Interrupted' என்கின்ற நூல். அடடா இது நான் வாசிக்கத் தொடங்கி இடைநடுவில் விட்டு வந்த நூல் என்று அந்தப் பெண்ணோடும் நூலோடும் ஒருவகை நெருக்கம் வந்தது. ஒருவகையில் இதைப் பயணநூல் என்றவகையில்தான் சென்றடைந்திருந்தேன். ஒரு பெண் பல்வேறு உறவுகளில் இருந்து, ஒருகட்டத்தில் பாரிஸுக்கு வேலை நிமித்தம் செல்கின்றார். அப்போதுதான் அவர் அமெரிக்காவில் இறுதியில் டேட்டிங் செய்துகொண்டிருந்த இளைஞரை தீவிரமாக நேசிப்பதாக உணர்கின்றார் (எப்போதும் தொலைவில் விலகிப்போனால்தான் காதல் இனிக்கிறது). அதை அந்தக் காதலனுக்குச் சொல்ல அவர் அமெரிக்காவில் செய்த வேலையை விட்டு இந்தப் பெண்ணைச் சந்திக்கப் பிரான்ஸுக்குப் போகின்றார். அவர்கள் இருவரும் ஐரோப்பாவிற்குள் பயணிக்கும் பெருங்கனவுகளோடு இருக்கும்போது, இந்தப் பெண்ணை புற்றுநோய் தாக்குகின்றது. அதிலிருந்து தொடங்குவது மிகுந்த கடின பயணம்.

அவர் அமெரிக்காவுக்கு வைத்தியத்தின் நிமித்தம் திரும்பி வந்து அதிலிருந்து மீள்வதுதான் மிச்சக்கதையாக இருக்கும். என்னிடம் அந்த நோயினதும் வலியினதும் தீவிரத்தை வாசிக்கும் உறுதியான உள்ளம் இல்லையென்பதால் அந்த நூலை இடைநடுவில் கைவிட்டிருந்தேன். Suleika Jaouad வை நோய் தாக்கும்போது அவருக்கு 22 வயது. அவ்வளவு இளமையில் ஒருவரை எளிதில் குணப்படுத்த முடியாத நோய் தாக்குவதென்பது எவ்வளவு கொடுமையானது, இதிலிருந்து மீண்டுவந்து சொன்ன கதைதான் 'Between Two Kingdoms'.

இவ்வாறு அந்த நினைவுகளோடு ரெயினில் Toronto Downtown வந்திறங்கினால் அது பழைய உற்சாகம் எதுவுமில்லாது கருஞ்சாம்பல் போர்த்தியது போல உள்ளேயும் சோம்பிக் கிடந்தது. ஆனால் சனநெருக்கடி எனக்கு எப்போதும் ஒருவகை விலகலைத் தருவதால் இது குறித்து எந்த முறைப்பாடுகளும் இருக்கவில்லை. பொதுவிடம் எங்கும் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயம் என்பதால், கண்ணாடியில் புகைபடிந்து எரிச்சலை இந்தக் குளிர்காலம் தந்துகொண்டிருந்தது. யாராவது ஒரு பெண் 'உனது கண்களாக நானிருப்பேன், கண்ணாடி எதற்கு கண்ணாளனே' என்று எனது இந்தச் சலிப்பை துடைத்தெறிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பை வழித்தெறிந்து தெருக்களினூடு நடந்துபோய்க் கொண்டிருந்தேன். 'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என என்னை ஆறுதற்படுத்த ஒரு கோப்பிக்கடை எதிரில் தெரிய மனது பின்னர் தெளிவாயிற்று.

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது சோம்பலில் எவருக்கும் தொலைபேசி அழைத்துப் பேச விரும்பாத எனக்கு இப்போது யாரோடேனும் பேசவேண்டுமென உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. நீண்டநாள் பேசாத நண்பருக்கு தொலைபேசினேன். ஏன் இவ்வளவு நாளும் என்னோடு பேசவில்லை என்று கேட்காத அளவுக்கு என்னைப் புரிந்துகொண்டவர் அவர் என்பதால் உடனேயே ஏதோ ஒரு விடயத்தைத் தீவிரமாக இரண்டுபேரும் பேசத் தொடங்கிவிட்டோம். அவரே எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகளை இப்போது திருத்தஞ்செய்தும் தருகின்றவர்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நண்பருக்கு என்று அடுத்த நாள் இன்னொரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவர் இன்னும் மழை அங்கே பெய்துகொண்டிருக்கிறது என்றார். என் கிரஷ்களுடன் எனது மென்னுணர்வுகளை வளர்க்கும் நேரங்களில், முகநூலில் என்ன இப்போதைய ட்ரெண்ட் என்று அவரிடந்தான் கேட்டுப் பெரும்பாலும் தெரிந்துகொள்வேன். தொடக்க காலத்தில் கிரஷ் என்றுதான் சொல்லிதான் நாம் பேசத்தொடங்கியதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றோமா என்று தெரியவில்லை. அவரிடம் அடுத்தமுறை இதைக் கேட்கவேண்டும்.

எனக்கு ஒருவிடயம் எதிரே இருப்பவர் சொல்வது நியாயமாக இருந்தாலும், ஒருவகை உரையாடலுக்காய் சிலவேளைகளில் வேண்டுமென்றே மறுமுனையில் நிற்பவன் போலப் பேசிக்கொள்வேன். தூத்துக்குடி விமான நிலையப் பதிவு பற்றி நண்பர், எழுதியவரின் பெயரில் சாதி இருக்கும் நுட்பம் குறித்து விமர்சிக்க நான் இன்னொருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பிறகு ஜெய்பீம் படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இலக்கிய சாதிக்குஞ்சுகள் பற்றிப் பேச்சு நீண்டது. இத்தனைக்கும் சாதியச் சூழலில் வாழாத பெருநகரத்தில் வாழும் அவர் அவ்வளவு உறுதியாக சாதியெதிர்ப்பு விடயங்களில் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நான் என் வாழ்வில் இதற்கு முன் வேறு விடயங்களில் நெருக்கமாக இருந்தும் சாதிவிடயங்களில் தம் முகங்களைக் காட்டிய நண்பர்களை/இலக்கியவாதிகளை விலகிவந்த சில சம்பவங்களைச் சொன்னேன். மற்றும்படி இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்களில் பெரும்பான்மையோர் எவ்வளவு முற்போக்கு பேசினாலும், தமது சொந்த விடயங்கள் என வரும்போது எப்படி தம் அசல் முகங்களைக் காட்டுவார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்ததுதானே என்றேன். இதைவிட இவ்வாறான விடயங்களைப் பேசாமல், முரசறைவித்துப் பொதுவெளியில் தெரிவிக்காமல் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் எவ்வளவோ போற்றுதற்குரியவர்கள்.

'நான் தெரியாத விடயங்களை ஒருபோதும் எழுதுவதில்லை' என்று ப்யூகோவ்ஸ்கி ஒரு கவிதையில் சொல்வதைப் போல, இவர்களால் வாழமுடியாத அல்லது விரும்பாத வாழ்வைப் பேசாமல் விட்டாலே பெரும்விடயமென்பேன் என எங்கள் உரையாடல் நீண்டபடி போனது.

அத்தோடு, இவ்வாறான அடையாளங்களில் இருப்பவர்களை - எழுத்தாளார்கள், செயற்பாட்டாளர்கள்- திருவுருவாக்கம் செய்யாமல் அவர்களும் சாதாரண மனிதர்களேயென தொடர்ந்து நினைவுபடுத்தியபடி இருப்பது முக்கியமானது. எழுதுபவர்கள் எழுதும்போது மட்டுமே படைப்பாளியாகின்றார்கள், உன்னதம் என்கின்ற நிலையை அந்தக்கணங்களில் சிலவேளைகளில் அடையவும் செய்கின்றார்கள். மற்றும்படி அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணத்தவர்கள். அப்படி இல்லையென்று சொல்பவர்கள் இருந்தால், ஓர் இலக்கியவாதியின் பெயரோடு வாருங்கள். உரையாடிக்கொள்ளலாம் எனச் சொன்னால் எல்லோரும் பின் வாங்கிவிடுவார்கள் என்றேன்.

இவ்வாறு உச்சக்கொதிநிலையில் நின்று பேசியபோது, எனக்குச் சற்றுப் பிந்தி வேலையைத் தொடங்கும் மேனேஜர் வந்துவிட்டதும் தெரியவில்லை. அய்யோ அவர் வந்துவிட்டார் இன்றைக்கு என்ன பூகம்பமோ தெரியவில்லை என்றேன். நீ வேலை செய்யும்போதுமட்டுமே வேலைக்காரன், இப்போது என்னோடு பேசிக்கொண்டிருப்பதால் 'பேசுபவன்' மட்டுமே என்றார் நண்பர். இது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என் மானேஜருக்கு விளங்கவேண்டுமே என்று நினைத்தபடி, வேலை இருக்கையில் ஒரு கள்ளப்பூனையைப் போலப் போய் அமர்ந்தேன்.

காதலிலும், காதலிக்கும்போது மட்டும் காதலனாக இருந்தால், எந்த நேரமும் தொணதொணத்துக்கொண்டிருக்கும் அந்த 24 மணித்தியாலயக் காதலன் என்ற பெரும் தொல்லையில் இருந்தும் நாம் தப்பிக்கலாம். மகிழ்ச்சியாகக் காதலிப்பவர்கள் இப்படித்தான் பகுதிநேரக் காதலர்களாக இருக்கின்றார்கள் போலும்.

**************************
(Nov 20, 2021)

0 comments: