சில காலத்துக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது நண்பரொருவர் எனது புத்தகம் ஏதாவது கிடைக்குமாவென வாங்கப்போயிருக்கின்றார். நடத்திக் கொண்டிருந்தவருக்கு எனது பெயரோ அல்லது நானெழுதிய புத்தகங்களைப் பற்றிய எந்த அறிமுகமோ இல்லை. அது அவரின் தவறும் இல்லை. எனக்குந்தான் அவரை யாரெனத் தெரியாது. நண்பரோ, 'எங்கட நாட்டில் இருக்கும் எல்லாப் புத்தகங்களும் இங்கை கிடைக்குமெண்டு சொல்கிறியள்? நான் தேடின புத்தகத்தைக் காணவில்லை' என்று இரண்டு வார்த்தைகளைச் சிதறவிட்டிருக்கின்றார்.
என்னடா சிலப்பதிகாரத்துக்கு வந்த சோதனை என்று நான் யாரென்று புத்தக ஒருங்கமைப்பாளர் என்னைத் தேட, பக்கத்தில் இருந்த யாரோ உதவிக்கு வந்திருக்கின்றனர். உதவிக்கு வந்தவருக்கோ, 'நீங்கள் இளங்கோவையெல்லாம் வாசிப்பீர்களா?' என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். நண்பருக்கோ, பெண்கள் வாசிக்கமுடியாத அளவுக்கு நானென்ன அவ்வளவு மோசமாக எழுதியிருக்கின்றேன் என்று உள்மனதில் தாங்கமுடியா ஆத்திரம்!
எழுத மட்டும் தெரிகிறது, நடத்தையில் அதன் சாயலின் துளியும் தெரிவதில்லையெனச் சொல்லித்தான் என் ஸ்பானிஷ் தோழியும் கோவிட் காலத்தில் கொலம்பியா போய் அங்கே நிம்மதியாக இருக்கின்றார். நான் அவரின் நிம்மதியைக் குலைக்க விரைவில் கொலம்பியா வருகின்றேன் என்று அவரோடு கதைக்கும் ஒவ்வொருபொழுதும் சபதமெடுத்துக் கொண்டிருப்பது வேறுவிடயம்.
நண்பருக்கு உதவிக்கு வந்தவர், இப்படி ஒரு இம்பிரஷனைக் கொடுத்தது கூடப் பரவாயில்லை, தன்னிடம் இளங்கோ எழுதிய 5 புத்தகங்களும் இருக்கின்றதென இன்னொரு வெடியைக் கொளுத்திப் போட்டிருக்கின்றார். எனக்குத் தெரிந்து கைவிரல் எண்ணக்கூடிய நண்பர்களிடம் மட்டுமே அனைத்துப் புத்தகங்களும் இருக்கின்றன. அதில் பெரும்பான்மையானோர் எனக்கு ஒரளவுக்கு அறிமுகமானவர்கள். யாரிந்த புதிய வாசகர் என்று எனக்குத் தெரியவில்லை (தயவுசெய்து இதை வாசித்தால் நீங்கள் யாரென்று உங்களை உள்பெட்டியிலாவது அறிமுகப்படுத்துங்கள். எனது அடுத்த புத்தகத்தின் ஒரு பிரதியை நானே கையில் வந்து கொடுக்கின்றேன்).
இப்படிச் சொல்லிவிட்டு நண்பரிடம், நானெழுதிய புத்தகங்களின் பெயர்களைச் சொல்லுங்களென சுடச்சுடப் பரிட்சை கூட வைத்திருக்கின்றார். இப்போது விளங்குகின்றது ஏன் நம்மிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவருகின்றது என்று. இப்படிக் கேட்டால் அடுத்தமுறை யாராவது புத்தகக் கண்காட்சிக்குப் போவார்களா என்ன? இவனின் 'மெக்ஸிக்கோ'வில் காமம் கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. அடுத்தமுறை இன்னும் அதை நிறைய அள்ளிவீசினால் இயல்விருதுக்குத் தகுதி கிடைத்துவிடுமென்றெல்லோ சொல்லியிருக்க வேண்டும் (இந்த நேரத்தில் கண்மணியின் 'இடபத்திற்கு' இயல் விருது கிடைத்திருக்கிறதென்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும். ஆனால் அதேசமயம் 'காலம்' செல்வத்தாரைத் தவிர இயல்விருதுக்குழுவில் வேறு யாரும் இடபத்தை வாசித்திருக்கமாட்டார்களென்பதும் தெளிந்த உண்மை. கண்மணிக்கு வாழ்த்து!)
பிறகு புத்தகக் கண்காட்சியில் நின்றவர்கள், எங்கெங்கோ விசாரித்து தலைநகரில் ஒரு கடையில் என் புத்தகங்கள் இருக்கலாமென கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றனர். அந்தக் கடையிலும் இன்னொரு நண்பரொருவர் தேடிக்களைத்து, அங்கேயும் பிரதி இல்லையென்று இறுதியில் onlineஇல் அந்த நண்பர் என் நாவலை வாங்கியது வேறு விடயம்.
'நல்ல விடயந்தானே, சரி இவ்வளவு கஷ்டப்பட்டு மழை பெய்யப் பெய்ய கண்காட்சிக்கு சென்றீர்கள். என் புத்தகந்தான் கிடைக்கவில்லை, வேறு என்ன புத்தகங்கள் வாங்கிவிட்டு வந்தீர்கள்'என நண்பரிடம் கேட்டேன். உன் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்ற எரிச்சலில் ஒன்றுமே வாங்காமல் திரும்பிவந்துவிட்டேன் என்றார்.
இதுவரை எழுதுபவர்களின் புத்தகங்கள் வாங்கிச் சேகரிப்பவர்களைத்தான் அந்த எழுத்தாளரின் தீவிர வாசகர்கள் என்று சொல்வார்கள், ஆனால் எனக்கு வாய்த்த வாசகர்களோ என் புத்தகங்களை வாங்காமலே இப்படித் தீவிர வாசகர்களாக மாறுகின்றார்கள் என்கின்ற அரிய உண்மையை நண்பரின் மூலம் அறிந்து பின்னர் பரவசப்பட்டுக் கொண்டேன்.
...............
மழையில் நனைந்து போன என் நண்பர் உட்பட, வேறு யாரேனும் என் நாவலைத் தேடினால் (அப்படி யாரும் இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்வது நமக்கு இருக்கும் இறுதி ஆறுதல்) இப்போது அக்கரைப்பற்றில் இடம்பெறும் புத்தகக் கண்காட்சியில் மெக்ஸிக்கோ'வைப் பெற்றுக்கொள்ளலாம் என ஃபாத்திமா புத்தகசாலை சஃப்றி அறியத்தந்திருக்கின்றார்.
என் புத்தகங்களை -என் நண்பரைப் போலவன்றி- வாங்காவிட்டாலும் பரவாயில்லை, வேறு பல அருமையான புத்தகங்கள் கண்காட்சியிலும், ஃபாத்திமா புக் செண்டரிலும் கிடைக்கும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
**************
புகைப்படம்: Volled Ahmed
(Nov 05, 2021)
0 comments:
Post a Comment