"நான் யன்னலுக்கருகில் வைத்திருந்த ஹேஸேயின் தட்டெழுத்து இயந்திரத்தில் கைவைத்தபடி, அதற்கப்பால் கிளைகள் விரித்துச் சடைத்திருந்த மேப்பிள் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இந்த வாழ்க்கை என்றால் என்னவென கேள்விகள் வந்து என்னைப் பதற்றமடையவைக்கும் ஒவ்வொருபொழுதிலும் ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுவிடும் 'சித்தார்த்தா'வை, ஹேஸே இப்படித்தானே ஏதோ ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கவே மிகக் கதகதப்பாக இருந்தது. எழுத்துக்கள் ஊர்ந்துகொண்டிருப்பது போலவும், தன் தியானம் தோல்வியடைந்து, கெளதம புத்தரிடமும் நிம்மதி காணாது, திரும்பி வந்துகொண்டிருந்த சித்தார்த்தா அதன் வழியே நடந்துகொண்டிருப்பதாகவும் தோன்றியது."
("ஹேஸேயின் சித்தார்த்தாவை மேப்பிள் மரத்தடியில் சந்தித்தல்" இலிருந்து..) பயணித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாயிற்று. பெரும்பாலும் வீட்டிற்குள் அடங்கி அகத்திற்குள் அலைந்து திரிவது விருப்பமெனினும், புறப்பயணங்கள் நிகழ்ந்தும் விந்தைகளின் எல்லை அளவற்றவை. காரோடிக்கொண்டிருக்கையில் சட்டென்று காலநிலை மாறி மழை பெய்ய, இன்னொருமுனையில் வெயில் பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கலாம். அன்றைய நாளில் அதிஷ்டம் இன்னும் மிச்சமிருப்பின் ஏரிக்குள் விழும் இரட்டை வானவில்லை கண்டு மயங்கலாம். பயணங்களின்போது புதிய மனிதர்களால் மட்டுமில்லை, காடுகளையும் சமதரைகளையும் கடந்துசெல்லும்போதும் மனது விரிந்து ஆழத்தினுள் செல்வதை அவதானிக்கையில் பேச்சற்ற மோனத்தில் நாம் தொலைந்தும் போகலாம். அவ்வப்போது ஒரு நாளுக்கான பயணத்தை கொரோனாவுக்குப் பின் செய்து கொண்டிருந்தாலும், வீட்டை விட்டு நீங்கி நீளும் பயணங்கள் சாத்தியமாகவில்லை. கோடை உலர்ந்து இலையுதிர்காலம் இன்னும் இரண்டு வாரங்களில் எட்டிப் பார்க்க இருக்கையில் இதைவிடப் பயணிப்பதற்கான சிறந்த காலம் இருக்கப்போவதுமில்லை. கொரோனாவின் நான்காவது அலை ஆர்முடுகலில் போவது ஒருபுறம், கனடாத் தேர்தல் இன்னொருபுறம் என்கின்ற ஆர்ப்பாட்டங்களின் இடையில், பயணிப்பது என்பது ஒரு ஊரடங்குக்கால அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்தகாலங்களில் Road Trip எனத் தொடங்கி, ஒரு நாளிலேயே 14 மணித்தியாலங்கள் காரோடி, 1000 கிலோமீற்றர்களைத் தாண்டிய கதைகளெல்லாம் உண்டு. இம்முறையும் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் ஓடும் பயணத்தைத்தான் திட்டமிருந்தேன். எனினும் நோயச்சக்காலம் என்பதாலும், ஆரவாரமில்லாத ஆறுதலாகப் பயணிக்கும் மனோநிலை வந்துவிட்டதாலும் அவ்வளவு தூரம் 'வெறி'த்தனமாய்க் காரோட்டி தொலைத்தூரத்துக்குப் போய்த்தான் தொலையவேண்டும் என்ற எண்ணத்தைப் பிறகு கைவிட்டுவிட்டேன்.
முதல்நாள் பயணத்தில் 350 கிலோமீற்றர்கள் பயணித்து North Bay சென்றடைந்தேன். பொதுவாகவே நகரங்களுக்குள் சனநெருக்கடி இருக்கும் இடங்களை -அதற்கு ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் இருந்தாலே தவிர- தவிர்ப்பதுண்டு. இம்முறை கொரானா காரணமாக பல உள்ளக இடங்கள் மூடியிருக்கும் என்பதால், வெளியே அதிகம் உலாவித்திரிவதாகவும், இயன்றளவு மற்றப் பயணங்களின் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத உள்ளூர் உணவுகளைத் தேடிச் சாப்பிடுவதாகவும் தீர்மானித்திருந்தேன்.
North Bayஐ கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு, குடும்பம் ஒன்றினால் காலங்காலமாய் நடத்தப்படும் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். பெருநகரங்களை விட்டு வரும்போது பல்வேறு மாற்றங்களை நாம் பார்க்கலாம். முக்கியமாக மெதுவாக நகரும் வாழ்வு, அதன் நிமித்தம் அங்கிருப்பவர்களுக்கிடையில் வரும் அந்நியோன்னியம்.
நாம் வெளியில் சாப்பிடும் உணவென்பது, அங்கே சமைத்துப் பரிமாறுபவர்களின் மனோநிலைக்கு ஏற்ப சுவையாக இருக்கும் என்ற 'ஜதீகத்தில்' எனக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதுண்டு. இங்கே பரிமாறியவர்கள் மட்டுமில்லை, அதன் சூழ்நிலையும் இனிமையாகக இருந்தது.
அடுத்து North Bay நகரிலிருந்து 150 கிலோமீற்றர்கள் பயணம் செய்து Sudbury சென்றடைந்திருந்தேன். இது ஒருகாலத்தில் Ojibwe என்கின்ற பூர்வீகக்குடிகளின் வாழ்விடமாக இருந்தது. பின்னர் குடியேற்றவாதிகளால் நிக்கல் கனிமம் நிறைந்திருக்கும் இடமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலப்பரப்புக்கு வந்தபோது ஏதோ வேறொரு நாட்டின் நிலப்பரப்புக்கு வந்தமாதிரித் தோன்றியது. மலைகளும் அதைக் குடைந்து செல்லும் சாலைகளும், சட்டென்று மாறும் காலநிலைகளும் என வித்தியாசமாகத் தெரிந்தது.
000000000000
(Sep 2021)
0 comments:
Post a Comment