நேற்று முழுதும் விளையாட்டு மைதானத்தில் இருந்தேன். இம்முறை இலையுதிர்காலத்தின் தொடக்கமே உடலை உருக்கும் குளிராக மாறிவிட்டிருக்கின்றது.
யாழில் அருகருகிலிருக்கும் இரண்டு பாடசாலைகளின் Big Match. முப்பது ஓவர்களில் எதிரணியினரை 139இற்குள் அடக்கிய சிறப்புப் பந்துவீச்சு எமக்கு இருந்தது. எட்டவேண்டிய இலக்கு அவ்வளவு கடினமில்லை என்றபோதும் 50 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்துவிட்டிருந்தோம். அதிலும் கடந்த வருடத்திலும், அதற்கு முதல் வருடத்திலும் எமக்கு அதிக ஓட்டங்களை பெற்றுத்தந்த சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்ற இருவருமே ஓட்டங்கள் எதுவுமே எடுக்காது ஆட்டமிழந்தபோதே வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டிருந்தோம்.
80 ஓட்டங்களைப் பெற்றபோது எட்டு விக்கெட்டுக்கள் போயிருந்தன. இனி வெற்றி சாத்தியமில்லை என்றபோதுதான் ஓர் 'அதிசயம்' எட்டாம் விக்கெட் இழப்பின்போது நிகழ்ந்திருந்தது.
ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஆட்டக்காரரை எவ்வித sportsmanship ம் இல்லாது எதிரணியினர் ஆட்டமிழக்கச் செய்திருந்ததனர். அதாவது bowler hit wicket when batsman's walk out of stump!
எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காது மட்டுமில்லை, கிட்டத்தட்ட கையை முழுதாக பந்துவீசுமளவுக்கு சுற்றிவந்துவிட்டு எங்கள் அணியினரை ஆட்டமிழக்கச் செய்தது எங்களுக்குள் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆட்ட வெற்றி தோல்விகளுக்கு அப்பால் விளையாட்டில் ஒரு கம்பீரம் இருக்கிறது. இப்படி ஆட்டமிழக்கச் செய்யும் சந்தர்ப்பங்கள் எவ்வளவு இருந்தும் எச்சரிக்கை செய்து தமது 'விளையாட்டு அறத்தை'க் காட்டிய எத்தனையோ மேற்கிந்திய விளையாட்டு வீரர்களைச் சிறுவயதில் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். எனவே அதுவரை சும்மா ஓர் ஓரத்தில் 'தாகசாந்தி' செய்துகொண்டபடி, தோற்கும் அணியின் துயரத்தைப் போக்கிக்கொண்டிருந்த எங்கள் ஆதரவாளர்க்குக் கூட ஓர்மம் வந்துவிட்டது.
அதன்பிறகு நிகழ்ந்ததுதான் அற்புதம்!
இரசிகர்கள் எல்லோரும் எல்லைக்கோட்டைச் சுற்றி நின்று ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உற்சாகமளிக்க, ஒன்பதாவது விக்கெட் இணையில் அதிசயம் நிகழத்தொடங்கியது. இரண்டே இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடித்து மொத்த ஓட்டங்களை 133இற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுக்கவேண்டியிருந்தது. மைதானம் முழுதும் அப்படி சுவாரசியத்தின் உச்சியில் நின்றது.
4 பந்துகளில் நான்கு ஓட்டங்கள் எடுக்கவேண்டியிருந்தபோது, அடுத்த பந்தில் அதுவரை எல்லைக் கோட்டையே தொடாத பந்து எல்லையைத்தொட, நாம் அனைவரும் விளையாட்டு மைதானத்துக்குள்!
ஆடியவர்க்கு மட்டுமில்லை, பார்வையாளருக்கும் ஓர் அருமையான விளையாட்டு அனுபவத்தைக் கொடுத்த அந்த இணை கிட்டத்தட்ட ஒன்பதாவது விக்கெட் ஆட்டத்தில் 60 ஓட்டங்களைச் சேர்ந்து பெற்றுத்தந்திருந்தனர். முதலாம் ஆட்ட விளையாட்டுக்காராக இறங்கியவர் 70 ஓட்டங்களையும், ஒன்பதாவது ஆட்டக்காரராக இறங்கியவர் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இது சில வருடங்களுக்கேனும் மறக்கமுடியாத ஓர் ஆட்டமாக எங்களுக்கு இருக்கப்போகின்றது. கடைசி ஓவர்வரை யாருக்கு வெற்றி கிடைக்குமெனத் தெரியாத உச்சக்கட்ட சுவாரசியத்தில் இரண்டு விக்கெட்டுக்களால் வென்றதல்ல முக்கியம், கடைசிவரை நம்மால் மனந்தளராது போராடமுடியுமென்று எடுத்துக்காட்டியதுதான் முக்கியமானது.
தோற்றல் இயல்பானது, அதிலும் விளையாட்டில் சிறந்த விளையாட்டுக்காரர்கள் கூட எளிதாகச் சறுக்குவது சாதாரணமானது. ஆனால் தேவையில்லாது 'அறமற்று'ச் சீண்டப்படும்போது, இதைப்போல நம்பிக்கையிழக்காது இறுதிவரை போராடுவதும் ஒரு வெற்றியின் மூலம் மறைமுகமான sportsmanship statementஐ காட்டுவதுந்தான் விளையாடும் வீரர்களுக்கு அழகானது. அதை நாம் சாத்தியமாக்கியதால் இந்த வெற்றி எங்களுக்கு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவொன்றாக இருக்கும்.
அதிலும் நமது மூத்த விளையாட்டு வீரர்கள் எமது வெற்றியின்போது கண்கலங்கியதும், கட்டியணைத்ததும் இலையுதிர்கால குளிருக்கு வெம்மை தரக்கூடிய நேசத்தின் கதகதப்புக்களாகும்.
ஆடிய அந்த இரண்டு ஆட்டக்காரர்கள் இனி எந்தப் பெரும் சாதனைகளை அவர்கள் தனிப்பட்டு நிகழ்த்தினால் கூட, இதையே இரசிகர்களாகிய பலர் நீண்டகாலம் பேசிக்கொண்டிருப்பதாகவும், நினைவுகூரக்கூடியதாகவும் அமையவும் கூடும்.
இதைவிட ஒரு சிறந்த விளையாட்டு வீரர் விரும்புவதாக எது இருக்கக்கூடும்.
***************
(Sept 27, 2021)
0 comments:
Post a Comment