வேலைத்தளத்தில் தன்னோடு பணிபுரியும் ஒரு சிங்கள இளைஞர் பற்றி நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சிங்கள இளைஞர் சிறப்பாகக் கதைகளைச் சொல்லக்கூடியவர்; என்னவகையான கதையைச் சொல்கின்றார் என்று ஊகித்தறிய முடியாது இறுதிவரை கதையை நேர்த்தியாகக் கொண்டு செல்லும் வித்தை அறிந்தவர் என்றார்.
அசோகமித்திரனும், ‘படிக்கும்போது நாம் படிக்கிறோம் என்ற உணர்வைக்கூட எழுப்பாமல் படிப்போர் முழுக்கவனமும் எழுத்தின் செய்தியிலும் அது வெளிப்படும் அமைப்பிலும் ஆழ்ந்திருக்கும்படி செய்வது சிறந்த உரைநடைக்கு அடையாளம். சிறந்த புனைகதைக்கும் அதுதான் அடையாளம்’ என்று ஓரிடத்தில் கூறியிருப்பார்.
இப்போது ஒரு புனைவை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். முக்கியமான காலகட்டத்தை, தமிழில் அவ்வளவு பேசப்படாத ஒரு நிலப்பரப்பின் அரசியல் எழுச்சிகளைப் பேசுகின்ற நூலாக இருந்தாலும், அதில் நுழைய முடியாது தொடக்கப்பக்கங்களிலே அவ்வளவு வரட்சியாக இருக்கின்றது. எப்படியெனினும் அதை நான் வாசித்து முடித்துவிடுவேன் என்றாலும், முக்கியமான ஒரு பிரதியை பல வாசகர்கள் இந்த நடையின் நிமித்தமே வாசிக்காமல் கடந்து போய்விடுவார்கள் போலத் தோன்றியது.
அவ்வாறே இன்னொரு தொகுப்பையும் இதற்கிடையில் வாசித்து முடித்திருந்தேன். போதும் போதுமென்ற அளவுக்கு வன்முறை திகட்டத் திகட்ட எழுதப்பட்டிருந்தது. ஒருவன் சித்திரவதையாளனாக இருக்கின்றானோ அல்லது இன்னொருவன் சித்திரவதை செய்யப்படுகின்றானோ எதுவெனினும் அந்த விடயங்களை விபரிப்பதால் மட்டுமே அது ஒரு முக்கிய அரசியல் பிரதியாக ஆகிவிடப் போவதில்லை. ஒருவன் சித்திரவதையாளனாக இருக்கின்றான் என்று கதையில் அறிமுகம் செய்யப்பட்டவுடனேயே, வாசகர் அந்தப் பின்னணிக்குத் தயாராகிவிடுவார்கள். ஆக மனதளவில் தயாராகிவிட்ட ஒரு வாசகரின் மனதின் ஆழந்தொட ‘ஆண்குறியை வெட்டி வாயில் வைத்தான்’ என்கின்ற விபரிப்புக்கள் எல்லாம் எதுவுமே பெரிதாகச் செய்யப்போவதில்லை. ஒருவகையில் இப்படி விலாவரியாக வன்முறையை விவரிப்பது மலினப்படும் உத்தியென ஒரு தேர்ந்த வாசகருக்கு விளங்கிவிடும்.
ஒரு புதிய படைப்பாளி இவ்வாறு செய்தால் கூட அதை எல்லாவற்றையும் எழுதிப்பார்க்கும் ஆர்வத்தால் விளைந்தவை என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தேர்ந்த படைப்பாளியான ஒருவர் இப்படியே தொடர்ந்து ஒரேவகையான வன்முறை விபரிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தால் அவரின் படைப்புக்கள் சமகாலத்தில் நீர்த்துப் போகாமல் இருக்க, கற்றுக்கொண்ட முழு வித்தையையும் இறக்கின்றாரோ என்றுதான் நினைக்கத்தான் தோன்றும். இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது, ஏன் இதே படைப்பாளியின் அண்மையில் வெளிவந்த நாவலும் என்னை ஈர்க்கவில்லை என்பதற்கான காரணம் புரிந்தது. இதே வன்முறையையை குடும்பத்துக்குள்ளும், வெளியில் அரசியல்ரீதியாகவும் திகட்டத் திகட்டச் சொன்னதுதான் முக்கிய காரணம்.
ஹாருகி முரகாமியின் பெரும்பாலான புனைவுகளில் காதலிகளால் கைவிடப்பட்ட அல்லது காதலிகளிலிருந்தும் அவர்களால் அவ்வளவு ஒட்டாத ஒரு தனிமையான மனிதனே முக்கிய பாத்திரமாக இருப்பான். ஆனால் அந்த ஒரேமாதிரியான பாத்திர வடிவமைப்பை நாம் உணரமுடியாவண்ணம் முரகாமி வெவ்வேறு கதைப்பின்னணிக்குள்ளும், வித்தியாசமான கதைசொல்லகளாலும் மாற்றியமைத்திருப்பார். ஆனால் ஒரே போராட்ட சுழல், குறுகிய அரசியல் சூழல், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பிறழ்வுடைய இயல்புவாழ்க்கையோடு ஒட்டாத மனிதர்கள் என்ற வடிவமைக்கப்பட்ட சட்டகங்களில் நின்று கதைசொல்லும்போது காலப்போக்கில் அவை நீர்த்துப் போகவே செய்கின்றன. மேலும் நம்முடைய கதைகளை நாங்கள் எமக்குச் சொல்கின்றோமா அல்லது வேறு யாருக்கோ சொல்லப் போகின்றோமா என்றும் ஒவ்வொரு படைப்பாளியும் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய தார்மீக அறம் சார்ந்த கேள்விகளும் நம் முன்னே இக்காலத்தில் இருக்கின்றன.
இப்படி இன்னொரு புதினத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கங்களில் இலங்கைச் சொற்களுக்கான அகராதி போடப்பட்டிருந்தது. இந்தப் புதினம் இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கும் புதினம். ஒரளவு தமிழகத்துப் படைப்புக்களை வாசித்த எனக்கே சில தமிழக அலுவலகச் சொற்களுக்கான வார்த்தைகளின் அர்த்தம் விளங்கவில்லை. அப்படியெனில் அந்த எழுத்தாளருக்கு ஈழ/புலம்பெயர் வாசகர் முக்கியமில்லையா என்று தோன்றியது. ஏன் எமக்கான ஒரு தமிழகத்து சொல்லகராதி சேர்க்கப்படவில்லை? ஆக, இது கூட ஒருவகையான அதிகாரநிலைசார்ந்த நுண்ணரசியல் என்பதை அந்தப் படைப்பாளி புரிந்துகொள்ளவேண்டும்.
பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ இம்முறை 'மான் புக்கர்' விருதின் நெடும்பட்டியலில் இருந்தபோதும், அது குறும்பட்டியலுக்குப் போகவில்லை. பெருமாள் முருகனின் தொடக்க கால நாவல்களை வாசித்தவர்க்கு, இந்தக் கதையின் பேசுபொருள் முக்கியமெனினும் அது எழுதப்பட்டவிதம் (கல்கியோ அல்லது எதிலோ தொடராகவும் வந்திருக்கவேண்டும்?) மிகவும் எளிமையானது என்று புரியும். தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு மான் புக்கருக்குப் போவதற்கு நாம் பெருமிதப்பட்டாலும், ஒரு புதிய ஈழத்து எழுத்தாளரான அனுக் அருட்பிரகாசத்தின் A North Passage எவ்வாறு பெரிய சிபார்சுகளில்லாது சில வருடங்களுக்கு முன் புக்கரின் நெடும்பட்டியலில் மட்டுமில்லாது இறுதிச் சுற்றுக்குப்போன ஐந்து நாவல்களில் ஒன்றாக இருந்தது என்பதை நாம் யோசிக்கவேண்டும். அனுக்கும் தமிழ் நிலப்பரப்பின் முக்கியமான கதையைத்தான் கூறினார், ஆனால் அவருடைய தனித்துவமானபாணியில் நின்றபடி சொன்னதுதான் அதன் சிறப்பே.
இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாளாக இருக்கின்றது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுதிய அவர், ஒரு நூற்றாண்டானாலும் இன்னும் நீர்த்துப் போகாத படைப்புக்களைத் தந்திருக்கின்றார். என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்கு புதுமைப்பித்தனை விட கு.அழகிரிசாமி, கு.ப.ரா போன்றவர்களைப் பிடிக்கும் என்றாலும், அன்றைய காலத்தில் புதுமைப்பித்தனின் பாய்ச்சல், தமிழ்ச் சூழலில் பெரும்பாய்ச்சல்தான், அதில் சந்தேகமில்லை.
ஆனால் அந்தத் தொடர்ச்சியுடன், இன்றைய காலகட்டத்துக்கேற்ப தமிழ்ச்சூழல் தன்னை இலக்கியத்தில் தகவமைத்துக் கொண்டதா என்பதே நம் முன்னாலிருக்கும் முக்கிய வினா. இந்தக் கேள்விகளுடன் நம்மை மறுவாசிப்புச் செய்து மறுசீரமைப்புச் செய்யவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். அதுவே புதுமைப்பித்தன் போன்ற நம் முன்னோடிகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரும் காணிக்கையாக இருக்கும்.
(Apr 25, 2023)
0 comments:
Post a Comment