கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 48

Tuesday, October 08, 2024

 கிளிமஞ்சாரோ

எனது முதலாவது தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளை' கனடாவில் வெளியிட்டபோது, அதற்கு அருகில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அது எதோ ஒரு (வைத்தியசாலை?)  நிதிசேகரிப்புக்காக ஒருவர் கிளிமஞ்சாரோவில் ஏறுவதற்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எங்கள் பாடசாலையின் முன்னாள் அதிபரான கனகசபாபதியே (கனக்ஸ்) எனது நூல்களையும் வெளியிட்டு வைத்தார் என்பதால் அது நன்கு நினைவில் இருக்கின்றது. பின்னாட்களில் அந்தத் தமிழர் கிளிமஞ்சாரோவில் ஏறியிருக்கக் கூடும்.

புனைவாக கிளிமஞ்சாரோ என் நினைவில் நுழைந்தது ஹெமிங்வேயின் 'கிளிமஞ்சாரோவில் பனி பொழிகிறது' என்ற நெடுங்கதையினூடாகும். புனைவின் சாத்தியங்கள் எவ்வளவு நீளுமென்பதற்கு ஹெமிங்வே கிளிமஞ்சாரோ மலையில் ஏறாமலே, அதன் அடிவாரத்தில் நின்ற அனுபவத்தை வைத்து ஒருவனின் வாழ்க்கை முழுதையே எழுதியிருப்பார்.

நான் இப்போது இன்னொரு கிளிமஞ்சாரோவைப் பற்றிச் சொல்லப் போறேன். இந்தப் படைப்பாளி ஹெமிங்வே போல அடிவாரத்தில் நிற்காமல், உண்மையாகவே கிளிமஞ்சாரோவின் உச்சியை ஏறி அடைந்தவர். அதை ஒரு அற்புதமான கதையாகவும் எழுதியிருக்கின்றார். இந்தக் கதையில் வரும் கதைசொல்லி ஏதோ ஒரு சொல்லமுடியாத் துயரத்தில் உழன்றாலும், அதை முக்கியப்படுத்தாது கிளிமஞ்சாரோவில் ஏறும் அனுபவத்தை அழகாகச் சொல்கின்றார். 

 

பல நாட்களாக கிளிமஞ்சாரோவில் பகலில் வழிகாட்டிகளுடன் ஏறும் கதைசொல்லி, உச்சியை அடையும் கடைசி நாளில் நள்ளிரவில் ஏறக் கேட்கப்படுகின்றார். ஏன் என வழிகாட்டியிடம் கேட்கும்போது, இனிவருவது மிகச் செங்குத்தான மலையேற்றம், புதிய ஒருவருக்கு கீழே பார்த்தால் அது மிகுந்த பயத்தைத் தரக்கூடியது. எனவேதான் நள்ளிரவில் ஏறத்தொடங்குகின்றோம், சூரியன் வருவதற்குள் மலையுச்சியை அடைந்துவிடுவோம் என்கின்றார். அப்போது கதைசொல்லி இதுவரை இருள் என்பது பயங்கரமானது என்கின்ற தன் கற்பிதத்தை மாற்றி, இருள் என்பது அழகானதும், வழிகாட்டக்கூடியதும் கூட என்கின்ற புரிதலை அடைகிறார்.

அவ்வாறே, இவ்வளவு கடினப்பட்டு மலையுச்சிக்குப் போனால் என்ன அங்கே பார்க்கக் கிடைக்கும் என கதைசொல்லி வழிகாட்டியிடம் வினாவுகின்றார். அங்கே எதுவுமில்லை, பரந்த வெளிமட்டுமே இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது. இப்படி ஒன்றுமே இல்லாமல் செய்வதை விட எங்கள் இந்தியாவின் மலைச்சிகரங்களைப் போல நீங்கள் ஏதேனும் ஒரு கோயிலையோ/கடவுளையோ வைத்திருந்தால், இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறியதற்கு இறுதியில் கடவுளைக் கண்டோம் என்கின்ற திருப்தியாவது வந்திருக்குமே என கதைசொல்லி சொல்கின்றார்.

உங்களுக்கு அங்கே உச்சியில் ஒரு கோயில் என்றால், எங்களுக்கு இந்த மலையே கடவுள்தான். இந்த அன்னை எங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்கின்றார் வழிகாட்டி. அதேபோல மலையை வென்று எளிதில் வாகைசூடிவிடுவோம் என்று மலையை மதிக்காது அகங்காரத்துடன் ஏறத்தொடங்கியவர்கள் எல்லாம் மூச்சுவிடத் திணறி சில நாட்களிலே அடிவாரத்தை நோக்கி ஓடத்தொடங்குவதையும் கதைசொல்லி தன் பயணத்தின் இடைநடுவில் காண்கின்றார்.

'குழந்தை' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட கதைசொல்லி மிகக் கஷ்டப்பட்டு இறுதியில் உச்சியை அடைகின்றார். அதுவரை அடக்கிவைத்த உணர்வுகளை எல்லாம் வழியவிட்டு அழுகின்றார். வாழ்வில் தினமும் போராடிப் போராடி சோர்ந்துவிட்டேன். சந்தோசத்திற்கான வழி என்னவென எனக்குத் தெரியவில்லை' எனத் தன்னை முழுமையாக அந்த மலையுச்சியில் வைத்து அந்நிலத்து பூர்வீக மனிதனின் முன்  வெளிப்படுத்துகின்றார்.

அதற்கு 'எதற்கும் பயப்பிட வேண்டாம் குழந்தை! பயப்பிடும் நிலை வந்தால் வாழ்க்கை சகிக்க முடியாமல் போகும். சிரமம் அதிகமாகி சுகம் குறைந்துகொண்டே போனாலும் -எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு தாங்கும் சக்தி வாழ்க்கைக்கு மட்டுமே உண்டு. கொஞ்சம் பொறுமை வேண்டும். அவ்வளவுதான்! முன்னால் நல்லது காத்திருக்கிறது என்று காத்திருக்க வேண்டும். காலச் சக்கரம் கொஞ்சம் சுழல்வதற்குள் எல்லாம் சரியாகிவிடும். சுகம்-துக்கம் இரண்டுமே வெறும் கற்பனைகள்தான். எதுவுமே இங்கே நிரந்தரமில்லை.' என அந்த மலையேற்ற வழிகாட்டியே குழந்தையின் துயரங்களிலிருந்து மீளும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் மாறுகின்றார்.

குழந்தைக்கு கிளிமாஞ்சாரோ இப்போது வேறொரு வடிவதைக் கொடுக்கின்றது. கடவுளையே நம்பாத குழந்தை அந்த 'மலைகளின் கடவுளுக்கு' மனசார நன்றி சொல்லி தன்னை உணர்ந்து கொள்கின்றார்.

இந்த அருமையான கதை வசுதேந்த்ராவின் 'மோகனசாமி' என்கின்ற சிறுகதைத் தொகுப்பில் இறுதிக் கதையாக இருக்கின்றது. நான் தொகுப்பில் இதையே முதல் கதையாக வாசித்தேன். இதற்குப் பிறகுதான் தொகுப்பின் முதல் கதையான 'சிக்கலான முடிச்சை' வாசித்தேன். இத்தொகுப்பில் இருக்கும் அனைத்துக் கதையுமே 'குழந்தை' என கிளிமஞ்சாரோக் கதையில் அழைக்கப்பட்ட மோகனசாமியைப் பற்றிய கதைகளே. இத்தொகுப்பின் ஒழுங்குவரிசையில் வாசித்திருந்தால் உடனேயே மோகனசாமி ஒரு தற்பாலினர் (கே) என அறிந்திருப்போம். ஆனால் அப்படி அறிந்தாலும், அறியாவிட்டாலும் கிளிமஞ்சாரோ கதையை வாழ்வில் துயரத்திலும்/வெறுமையிலும் உழன்றுகொண்டிருக்கும் யாரும் தம்மோடு பொருத்திக் கொண்டு பார்க்கும்படியாக அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றது.

ஹெமிங்வேயின் 'கிளிமஞ்சாரோவில் பனி பொழிகின்றது' கதையில் வரும் ஹரி எழுதமுடியாத writer's block இல் சிக்கித் திணறுகின்றார். இறப்பை எதிர்நோக்கும் அவர் வீணாக்கிய காலம், எழுதாத பொழுதுகள், உறவுச் சிக்கல்கள் என அனைத்தையும் நினைத்து  அப்போது ஏங்கத் தொடங்குவார்.

'எழுத எத்தனையோ இருக்கின்றது. உலகம் மாறுவதை அவன் பார்த்தான். நிகழ்வுகளை மட்டுமில்லை, மனிதர்கள் மாறுவதையும் கண்டவன். அதில் ஒரு பங்காக தானும் இருந்ததை அவதானித்தவன். தன்னுடைய கடமையாக இவற்றையெல்லாம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் கடைசியில் அவன் எதையும் எழுதவில்லை' என்று ஹெமிங்கே ஹரி பாத்திரத்தினூடாகச் சொல்லியிருப்பார்.

ஹெமிங்வேயின் ஹரி எழுதாமல் விட்டதை, வசுதேந்த்ரா 'மோகனசாமி' என்கின்ற பாத்திரத்தினூடாக 'தொடரேந்திய சுடராக' எழுத வந்திருக்கின்றார்.  அன்று என் புத்தக வெளியீடு நடந்தபோது அருகில் நிகழ்வு நடத்தியவரும் கிளிமஞ்சாரோவில் ஏறிய தன் அனுபவங்களை எங்கேனும் எழுதியோ/பேச்சாகப் பதிந்து கொண்டோ இப்போதும் இருக்கலாம்.

ஆக, இன்னும் கிளிமஞ்சாரோவில் பனி எண்ணற்ற கதைகளாகப் பொழிந்து கொண்டிருக்கின்றது. 'மலைகளின் கடவுள்' மனிதர்களின் துயரங்களைக் கரைத்து மகிழ்ச்சியில் சிலிர்க்க வைக்கும் தனது ஆசிர்வாதங்களை ஒருபோதும்  நிறுத்துவதும் இல்லை.


************** 

(வசுதேந்த்ராவின் 'மோகனசாமி' சிறுகதைகளின் தொகுப்பை கன்னடத்திலிருந்து தமிழுக்கு கே.நல்லதம்பி மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார்.)

 

(Sept 24, 2024)

0 comments: