சுவரொட்டிகளும், கதிர்காம வரலாறும்..
**********
காலையில் நடக்கும்போது ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அது எங்கள்
மாகாணத்தில் கொண்டுவரப்படும் சட்டமான Bill-5 எதிரான
சுவரொட்டி. இங்குள்ள வலதுசாரிகள், பெரும் முதலாளிகளுக்கு 'சுதந்திர
பொருளாதார வலயத்தை' அமைப்பதற்கான சட்டத்திருத்தம் இதுவாகும். இதன் மூலம் இந்த 'சுதந்திர
பொருளாதார வலயம்' மாகாண சட்டங்களுக்கு உட்பட வேண்டியதில்லை. இதன் மூலம் காடுகளை
அழிக்கவும், கனிமங்களைச் சுரண்டியெடுக்கவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இன்றைக்கு
எமது மாகாணத்தில் இயற்கை வளங்கள் பெரும்பாலும் இங்குள்ள பூர்வீகக் குடிகளாலேயே
காப்பாற்றப்பட்டு வருகின்றது. அவர்களிடம் கலந்துபேசாமல் இந்தச் சட்டசீர்திருத்தம்
பெரும்பான்மையாக ஆட்சியமைத்த வலதுசாரிகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சுவிஸில் இவ்வாறான சுவரொட்டிகளைத் தெருக்கள் எங்கும் காணமுடியும். அத்துடன் அரசியல் போராட்டங்களுக்கான அழைப்புக்களையும் கூட.
இந்த சுவரொட்டிகளைப் பற்றி நண்பரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, 80/90களில் வெளிவந்த புலம்பெயர்ந்த சஞ்சிகைகளில் வந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்களை ஒழுங்குபடுத்தினால் கூட, நமது தொடக்க கால புகலிட வாழ்க்கை பற்றி அறிக்கையிட முடியுமென நினைத்தேன்.
*
ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் கண்ணில்பட ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்' நூலை வாசித்துப் பார்த்தேன். அயோத்திதாசர் 1914 காலமாகியவர். நீண்டகாலம் வரலாற்றில் மறைந்து போயிருந்தவர். ஞான அலோசியஸ் அவரின் எழுத்துக்களை 1990களில் தொகுக்கின்றார். ராஜ் கெளதமன் அதைத் தொடர்ந்து 'அயோத்திதாசர் ஆய்வுகள்' என்று இத்தொகுப்புக்களை முன்வைத்து ஒரு விரிவான வாசிப்பை நிகழ்த்துகின்றார். அவரைத் தொடர்ந்து நா.தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் என்று எண்ணற்ற பலர் பண்டிதரை எடுத்துக்கொண்டு சமகாலத்திலும் அணையா விளக்காக அயோத்திதாசரை கொண்டுவந்தபடி இருக்கின்றனர். இன்றைக்கு தமிழ்ச்சூழலில் பெரியாரைப் போல, அயோத்திதாச பண்டிதரும் ஒரு முக்கிய ஆளுமையாக நிறுவப்பட்டுவிட்டார்.
ஈழத்தில் இவ்வாறு விரிவாக வாசிப்புச் செய்து மதிப்பிடவும் விமர்சிக்கவும் கே.டானியல், மு.தளையசிங்கம், விபுலானந்தர், நடேசய்யர், சிவத்தம்பி போன்ற பலர் இருக்கின்றார்கள். தளையசிங்கம், டானியல் போன்றவர்களின் முழுத்தொகுப்புக்கள் கூட வெளிவந்துவிட்டன. எனவே ஆய்வாளர்களுக்கு இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடியெடுக்கும் கஷ்டம் கூட இல்லை. ஆனால் இற்றைக்கு எமது பொதுச்சமூகத்தில் இருந்து மட்டுமில்லை, பல்கலைக்கழகச் சூழலிருந்தும் தனித்துவமான ஆய்வாளர்கள் தோன்றவில்லை.
எனக்கு நம்பிக்கையான சில பல்கலைக்கழக நண்பர்களிடம் இந்தத் திசைகளில் அவர்களின் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்தகாலங்களில் கேட்டிருக்கின்றேன். ஆனால் இன்றைய இலங்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் அவர்களால் முற்றுமுழுதாக இவற்றில் கவனஞ்செலுத்த முடியாத நாளாந்த வாழ்க்கைத் தத்தளிப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான ஆய்வாளர்கள் ஆறுதலாக ஆய்வு செய்து எழுதும் சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்கவோ, அவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களை அமைக்கவோ இன்னமும் இல்லை.
எனினும் இவ்வாறானவற்றை செய்யும் சில நம்பிக்கைக் கீற்றுக்களைக் காண்கின்றேன். உதிரிகளாக இருப்பவர்களை, அவர்களின் நம்பிக்கைகள்/அரசியல் சார்பகளைத் தாண்டி ஏதோ ஒரு புள்ளியில் 'வேற்றுமையில் ஒற்றுமை' போல ஒன்றிணைத்து முன்னே சில காலடிகளையாவது நாம் வைக்கத்தான் வேண்டும்.
*
இன்று கதிர்காமம் (கந்தன்) முற்றுமுழுதாக சிங்களவர்களிடம் ஆகிவிட்டது. ஒருகாலத்தில் பெளத்தர்களும், சிங்களவர்களும் வழிபட்டு வந்த நுழைவாயில் இருந்த கந்தனின் வேல் கூட அகற்றப்பட்டுவிட்டது. கடல் கடந்து வாழ்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலம் என்பதால் இது 14ம் நூற்றாண்டிலே தமிழர்களால் கவனிப்புக்குள்ளான இடம் என்பதை நாம் நிறுவமுடியும். இதற்கு இன்னொரு ஆதாரமாக நடேசய்யரின் இலங்கை சுதந்திரமடைய முன்னர் 1946இல் எழுதிய 'கதிர்காமம்' என்ற நூல் நம்மிடையே இருக்கின்றது. இன்றைக்கு சிங்களர்கள் ஏகபோக உரிமை கொள்ள முயற்சிக்கும் கதிர்காமத்தை நாம் 70 ஆண்டுகளுக்கு முன்னே போய் கதிர்காமம் எப்படி இருந்தது என்று நிரூபிக்க நடேசய்யரின் 'கதிர்காமம்' என்ற ஆவணம், எமக்கு எழுத்தாக மட்டுமின்றி அந்தக்காலத்தைய புகைப்படங்களுடனும் சான்றாக இருக்கின்றது.
நடேசய்யர் கதிர்காகம் என்ற நிலப்பரப்பை சிங்கள - தமிழ் மன்னர்களுக்கு போர் நடந்த இடமாகவும், சிங்கள மன்னர்கள் தமிழர்களை வெல்வதற்காக கதிர்காமத் கடவுளிடம் அருள் வேண்டிச் சென்ற இடமாகவும் காண்கின்றார்.
இன்னொருவகையில் இந்து நூல்களில் இந்த இடம் முருகனும், சூரனும்
போர் செய்த இடமாகவும், முருகன் சூரனை வென்று ஓய்வெடுத்த படைவீடாகவும் பதிவு
செய்யப்பட்டிருக்கின்றது. இன்றிருக்கும் கதிர்காமம் பெளத்ததிலிருந்து
இந்துசமயத்துக்கு மாறிய முதலாம் ராஜசிங்கனால் கட்டப்பட்டது என்கின்ற முக்கிய
விடயத்தை நடேசய்யர் பதிவு செய்கின்றார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழர்களால்
வழிபாடுகள் செய்யப்பட்ட இடத்தை சிங்களவர்கள் எடுத்துக் கொண்டபோது, பிரிட்டிஷ்காரர்
காலத்தில் மீண்டும் அவர்களால் வழிபாட்டு இயற்றும் உரிமை தமிழர்களுக்கு
கொடுக்கப்பட்டது என்றும் நடேசய்யர் சொல்கின்றார்.
ராஜசிங்கன் காலத்திலேயே கல்யாணகிரி என்ற சன்னியாசி கதிர்காமத்துக்கு
இந்தியாவில் இருந்து வந்ததாகவும், அவரின் மூலம் இன்னும் பல சன்னியாசிகள்
கதிர்காமத்தை நோக்கி வந்தார்கள் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. அப்படி வந்த
மரபில் ஒரு சன்னியாசி அன்ன ஆகாரம் எதுவுமின்றி பால் மட்டும் குடித்து தியானம் செய்ததால்
அவரை பால்குடி பாவா என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் 1898இல்
கதிர்காமத்தில் சமாதியடைந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. அந்த சன்னாசியே
அங்கிருக்கும் கல்யாண மண்டப நிர்வாகம் பற்றி மரணசாசனம் எழுதி வைத்ததோடு அது
அப்போதைய ரிஜிஸ்டர் ஜெனரலாக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் காலத்தில்
நடந்தென்றும் பதிவு செய்திருக்கின்றார்.
அதுபோலவே எப்படி முறையான தமிழ்/இந்து நூல்களில் கதிர்காமம் தெளிவாகப்
பதியப்படவில்லையோ, அதைவிட சிங்களவர்கள் தமது எல்லா 'வரலாற்றை'
எழுதிவைத்த மகாவம்சத்திலும் கதிர்காமம் குறித்து விரிவான பதிவுகள்
இல்லை என்று நடேசய்யர் குறிப்பிடுகின்றார். புத்த பெருமானின் வரலாறு அல்ல, கந்த
பெருமானின் சரித்திர வரலாறே சிங்களத்தில் 'கந்தகுமர்
உபத' என்ற நூலில் காணப்படுகின்றது என்று நடேசய்யர் குறிப்பிடுவது
சுவாரசியமானதாகும்.
இவ்வாறு நாம் வரலாற்றில் பின்னகர்ந்து இன்று சிங்களப் பெளத்தர்கள்
ஏகபோக உரிமையாக எடுத்துவிட்ட கதிர்காமத்தின் வரலாறு அவர்கள் மட்டும் உரிமை கொண்டாட
முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும். அதுபோல இந்த நூலில் இறுதி
அத்தியாயத்தில் நடேசய்யர் குறிப்பிடும் இன்னொரு விடயமும் முக்கியமானது.
இதேயிடத்தில் ஒரு முஸ்லிம் ஞானி இருந்ததாகவும் அவரின் பெயர் கிதர்நபி என்றும்,
அவர் மூலமாகவும் மாலதீவில் முஸ்லிம் மதம் பரவியதாகவும் ஒரு குறிப்பைச்
சொல்கின்றார். இதனாலேயே இந்தியாவிலிருந்து கூட முஸ்லிம்கள் கதிர்காமத்தைத் தேடி
வருகின்றனர் என்று எழுதியிருக்கின்றார். அது மட்டுமின்றி வள்ளியமைக்கு அருகில் ஒரு
சமாதி கட்டப்பட்டிருக்கின்றது என்றும். அது ஒரு முஸ்லிம் பெரியாரியுடையது என்றும்,
அந்தப் பெரியார், கதிர்காமத்தில் வாழ்ந்த முத்துலிங்க சுவாமி காலத்தவர் என்றும் அவரோடு
சேர்ந்து தொண்டாற்றியவர் என்றும் சொல்கின்றார்.
இவ்வாறாக கதிர்காமம் என்பது இலங்கையில் பல்லின/மதக் கலாச்சார இடமென்று
நாம் எளிதாக ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஆக 1940களில்
எழுதி ஆவணபப்டுத்தப்பட்ட நூலிலிருந்து நாம் இந்த கதிர்காம வரலாற்றை கட்டவிழ்க்க
முடிகின்றது என்பதுதான் ஆவணப்படுத்தல்களின் முக்கியத்துவம் என்கின்றேன்.
*************
( Jan 13, 2025)
0 comments:
Post a Comment