கடந்த ஞாயிறு தியானத்திற்காக புத்த மடாலயத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். நண்பர் Thug Life திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு மோசமான திரைப்படத்தைப் பற்றி உரையாடுவது என்பதே அதற்கு விளம்பரம் கொடுப்பதாகத்தான் இருக்கும், உங்களுக்கு ஏதேனும் அதில் உறுத்திக் கொண்டிருந்தால் எழுதிவிட்டோ அல்லது காணொளியில் பேசிவிட்டோ நகர்வதே நல்லது என்றேன்.
இந்த Thug Life இல் சமூக வலைத்தளங்கள் எரிந்துகொண்டிருந்தபோது, நான் அமைதியாகவே கடந்து சென்றேன். நண்பரிடமும், பாருங்கள் நீங்கள் கூட Thug Life ஐ இந்தளவுக்கு பேசுகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த ஜெயமோகன் 'காவியம்' என்ற நல்லதொரு நாவலை தொடராக 45 அத்தியாயங்களுக்கு மேலாக எழுதிவிட்டார். இந்த சமூகவலைத்தளத்தில் அது குறித்து ஓர் உருப்படியான கட்டுரையோ/பதிவோ இந்த ஒரு மாதத்திற்குள் வந்திருக்கா என்று சொல்லுங்கள் என்றேன்.
'காவியம்' புதினத்தை வரவேற்கின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒரு கடும் உழைப்பு அதில் இருக்கின்றது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இத்தனைக்கும் என் இலக்கிய செல்நெறியென்பதே ஜெயமோகனுக்கு எதிர்த்திசையில் போகக் கூடியது. ஆனாலும் நான் தினம் விடாது 'காவியத்தை' வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஒரளவு வயதாகும்போது நாம் எதிர்மறை விடயங்களை விட ஆக்கபூர்வமான செயல்களுக்கு பொழுதுகளைச் செலவிட வேண்டும் என்ற விருப்பம் வந்துவிடுகின்றது. வாழ்வென்பதே எந்தக் கணத்தில் நின்றுவிடும் என்பது ஒருபுறமிருக்க, மிச்சமிருக்கும் வாழ்வை கொஞ்சமாவது பிடித்தமான விடயங்களின் திசையில் கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் வந்திருக்கின்றது.
அந்தவகையில்தான் இந்த வயதிலும் சலிப்பில்லாத அ.யேசுராசா, மாதம் ஒரு திரைப்படத்தை திரையிடுவதும், வடகோவை வரதராஜன் தனது நண்பர்களுடன் மாதமொரு முறை ஏதேனும் ஒரு தலைப்பில் துறை/அனுபவம் சார்ந்த ஒருவரை அழைத்து பேச வைப்பதும் மதிப்புக்குரிய செயல்களாக எனக்குத் தெரிகின்றது.
இந்த இலக்கிய உலகென்பது பிற எல்லாத் துறைகளைப் போலவே குழிபறித்தலும், பொறாமைகளும், கோபங்களும் கொண்ட ஒரு சூழல்தான். ஆனால் இதை விரும்பி ஏற்று வந்திருக்கின்றோம் என்றால், (அல்லது வேறு எதுவுமே எமக்குத் தெரியாது என்றால்), நாம் விரும்பிய துறைக்குள் இருந்து உருப்படியாக எதையாவது செய்து பார்க்கலாம். ஏனென்றால் பிடித்த விடயங்களில் நிகழும் இழப்புக்கள் கூட, ஒருபோதும் தோல்விகளாகி விடுவதில்லை.
'நூலகம்', 'எழுநா' போன்ற திட்டங்களின் பின்னால் இருந்து உழைப்பவர்களும் அந்தவகையில் மதிப்புக்குரியவர்கள். அவர்கள் மீது நமக்கு கேள்விகள்/விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களின் இருப்பை ஆவணப்படுத்துவதில் முக்கியமானனை. கடந்த சில வருடங்களாக மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்த 'எழுநா' இப்போது மீண்டும் புத்தகங்களைப் பதிப்பிக்கவும் முன் வந்திருக்கின்றது.
இலங்கையிலே அச்சிட்டு இலங்கை எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தும் இந்தத் திட்டம் மிக முக்கியமானது. ஏனெனில் நம்மவர்களில் பலருக்கு அரசியல் மட்டுமே முழுமூச்சாக இருக்கின்றது. அந்த அரசியலைக் கூட ஆவணமாக்கவேண்டும், எதிர்காலச் சந்ததிக்காய் எழுத்தாக்கி பதிப்பிக்க வேண்டும் என்கின்ற தொலைதூர நோக்கில்லை. பேச்சால் மட்டும் வானில் ஏறி நடனமாடுவதில் நாம் எல்லோருமே வல்லவர்கள். ஆடுவது தவறில்லை, ஆனால் அவ்வப்போது நல்ல விடயங்கள் நடக்கும்போது அவற்றுக்கு ஆதரவு கொடுப்பதால் நாம் எதிலும் குறைந்துவிடப் போவதில்லை.
அண்மையில் 'செம்மணி' புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டு, மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது பேசு பொருளானது. கிருஷாந்தியின் படுகொலையில் வாக்குமூலம் கொடுத்த சிங்கள இராணுவத்தினனின் மூலமே இந்தப் புதைகுழி பற்றிய மர்மம் அன்று துலங்கியது. கிருஷாந்தியின் படுகொலை நடத்தபோது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று கனடாப் பாராளுமன்றத்தின் முன் நாம் இதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளைச் செய்துமிருக்கின்றோம். ஆனால் இப்போது இருந்து யோசித்துப் பார்க்கும்போது செம்மணி படுகொலை குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து ஒரு உருப்படியான நூல் எதுவும் வந்திருக்கின்றதா? நாம் கிருஷாந்தி கொலை, செம்மணி புதைகுழி, அன்று பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்கள் குறித்து சரியாகப் பதிவு செய்திருக்கின்றோமா என்று பார்த்தால் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
ஆனால் இலங்கையில் அண்மையில் உள்ளூராட்சி நடந்தபின், எதற்குமே உருப்படியில்லாத மாநகர சபைகளை யார் கைப்பற்றப்போகின்றார், எந்த தமிழ் அரசியல்வாதி எதைத் திருவாய் மொழிந்தார் என்பதை இந்த Thug Life போல எழுதுவதற்கோ/பேசுவதற்கோ தயங்கவே மாட்டோம். ஏனெனில் நாங்கள் மறத்தமிழர். மேலும் மறத்தமிழர் என்று ஓரினம் இருந்தால் எதிர்க்கோஷ்டி இருக்கவேண்டும் அல்லவா? அவர்களுக்கும் இந்த மறத்தமிழருக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் உறைந்துபோன மூளையுடன் இருக்கும் அவர்களுடன் உரையாடுவதென்பது பாறையொன்றை நகர்த்துவதற்கு நிகர்த்தது.
மறத்தமிழரையும், எதிர்த் தமிழரையும் தாண்டியபடி காலம் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்கு கொஞ்சமாவது பங்களிப்பவர்களாக இந்தக் காலத்தில் நம்மை மாற்றியமைப்பதுதான் எமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால்!
*********
(Jun 12, 2025)
0 comments:
Post a Comment