கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 144

Sunday, March 29, 2026

 

போர் என்பது எவ்வளவு குரூரமானது என்பதை அறிய இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எங்களைப் போன்று போர்ச்சூழலுக்குள் வாழாதவர்களாயினும் இது உங்களை அவ்வளவு நொறுங்க வைக்கும். அமெரிக்காவின் கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகளாலும் வெல்லப்படாத போர் என்பது வியட்னாம் போர்தான். அதேபோல இந்த அரசியல்வாதிகள் எப்படி தமது அதிகாரத்துக்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும் தமது சொந்தப் படையை பகடைக்காய்களாக வைத்து போரை நீடித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.
 

அதேபோல கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே இருந்த வடக்கு வியட்னாமோடு வீணாகப் போர் செய்யப்போய் கடைசியில் அமெர்க்காவுக்குச் சார்பாக இருந்த தென்வியட்னாமையும் கம்யூன்ஸிட்டுப் படைகளுக்குத் தாரை வார்த்துவிட்டுத் தப்பிப்போனவர்கள்தான் அமெரிக்கர்கள். இந்த வியட்னாம் போரில் இறுதியில் எப்படி அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர்களை அமெரிக்கா இறுதியில் கைவிட்டதோ அதேயேதான்  ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மக்களையும் இறுதியில் தலிபான்களின் கைகளில் கொடுத்துவிட்டு வந்தார்கள் என்று அன்று வியட்னாமியப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நினைவுபடுத்துகின்றார்கள்.

ஆக அமெரிக்கா எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டுமில்லை அமெரிக்காவை நம்பும் மக்களையும் தனது நலம் என்று வரும்போது அமெரிக்கா எப்போதும் கைவிடத் தயாராக இருக்கின்றது என்பதையும் இது நமக்கு நினைவுபடுத்துகின்றது.

ஈராக்கிய போர் குறித்து அன்றைக்கு போர் நடத்திய அமெரிக்க ஜெனரல் ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது. ஈராக்கைத் தாக்குவது என்று தெளிவாகத் தீர்மானித்திருந்திருந்தோம். அங்கே weapons of mass destruction (WMD) இருக்கின்றது என்று போருக்குச் செல்வதற்கு மக்களை நம்பவைக்க அப்படிச் சொல்லப்பட்டதே தவிர, ஈராக்கில் அப்படி ஏதுமில்லாமல் paper clips மட்டும் இருந்தால் கூட போரை நடத்தியிருப்போம் என்று அவர் சொல்லியிருப்பார்.

இந்த ஆவணப்படத்தில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதிகள், அவர்களின் செயலாளர்கள், இராணுவ ஜெனரல்கள் வெள்ளைமாளிகையில் உரையாடியவற்றின் பதிவுசெய்யப்பட்ட டேப்புகளில் இருந்து குரல்வழியே அன்று நடந்ததைக் கேட்க முடிகின்றது. இவ்வாறு அமெரிக்கா ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் ,ஏன் இப்போது ஈரானில் நடத்தும் அட்டூழியங்கள் குறித்த உண்மைகளையும் அறிய நாம் இன்னும் 20-30 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா, அதற்குள் பெரும் அழிவுகளைப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டுமா என்று ஒருசேர சலிப்பும், விரக்தியும், வெறுமையுமே மிஞ்சுகின்றது.

Turning Point: The Vietnam War என்கின்ற ஆவணப்படம் ஐந்து பாகங்களாக வியட்னாம் போர் முடிந்து 50 ஆண்டுகளை நினைவுபடுத்த வந்திருக்கின்றது. தென்வியட்னாமின் தலைநகராக சைகோன் நகர் இருந்தது. அமெரிக்கர்கள் வெளியேறியவுடன் வடவியட்னாம் கம்யூனிஸிட்டுகள் அதைக் கைப்பற்றிய ஆண்டு 1975. அத்துடன் ஒன்றிணைந்த வியட்னாம் உருவாகி விட்டிருந்தது. இப்போது சைகோன் நகர், ஹோசிமின் நகராக மாறிவிட்டிருக்கின்றது.

இந்த கம்யூனிஸிட்டுகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவுகின்றார்கள் என்று கம்போடியா, லாவோஸ் மீதும் தேவையே இல்லாது பல்லாயிரக்கணக்கான குண்டுகளை அமெரிக்கர்கள் வீசியிருக்கின்றனர். அன்று வியட்னாம், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகள் மீது வீசப்பட்ட குண்டுகள் அமெரிக்கா இரண்டாம் உலக மகாயுத்ததின்போது ஜேர்மனியர்களுக்கு மேலாக வீசிய குண்டுகளை விட அதிகமானது என்கின்றது புள்ளிவிபரம்.

இந்த ஆவணப்படத்தில் அன்றைக்கு இருந்த ஜனாதிபதிகளுக்கு அருகிலிருந்தவர்கள்,  வியட்னாமிய களநிலவரத்தின் உண்மை நிலவரத்தைச் சரியாகச் சொல்லாது, 'நாம் வென்று கொண்டிருக்கின்றோம்' என்று பொய்யைத் திரும்பச் திருப்பச் சொல்லி அழிவை அதிகரித்ததைக் காண்கின்றோம். இப்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருப்பதற்கும் அன்று நடந்ததற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசமில்லை.

இப்போது ஈரான் குறித்து அமெரிக்கா சொல்வதும்  'நாம் அவர்களில் முக்கியமானவர்களை அழித்துவிட்டோம், விரைவில் வெல்வோம்'.

***

 

0 comments: