கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 07

Sunday, September 20, 2026

 

பொதுச்சூழலில் புத்தரையோ, அவரைப் போன்ற பரிநிர்வாணமடைந்த போதிசத்துவாக்களைப் பற்றியோ பேசும்போது அவர்களால் தம் ஆயுளை நீட்சிக்க முடித்ததா, அவர்களுக்கு வந்த நோயை மாற்ற முடிந்ததா என்று வழமையான 'கடவுள்' நிலையில் வைத்து கேள்வி கேட்கப்படுவது வழமையான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதாவது ஏதோ இவர்களுக்கு மேலதிக அருள் கிடைத்து நமக்கும் அருள்பாலிப்பார்கள் என்கின்ற கடவுளாக்க நிலை அது.  

புத்தர் மனிதர்கள் தமது துன்பங்களில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் அவர் ஆகக்குறைந்தது இந்த வாழ்வில் துயரங்களைக் களைந்து/குறைத்து நிம்மதியாக வாழ்கின்ற பாதையைப் பற்றிச் சிந்தித்தவர், அதற்கான வழியில் பயணித்து தனக்கான விடுதலையை அடைந்தவர் எனச் சொல்லலாம்.




எனவே புத்தரிடம் அடைக்கலமாகும் நாம் புத்தரிடம் நமது வாழ்வில் வரும் நோய்களுக்கோ, நாம் மூப்படைவதற்கோ, ஏன் எமது செல்வத்தைப் பெருக்குவதற்கோ எவ்வித மந்திர தந்திரங்களும் அவரிடம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்கின்றோம். அப்படியாயின் எமக்கு எந்த நம்பிக்கையையும் தராத ஒருவரிடம் நாம் ஏன் சரணடையவேண்டும்/பின்பற்றவேண்டும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே.

புத்தர் மனிதவுடல்களோடு வாழும் நமக்கு இந்தத் துன்பங்களைக் களைந்து வாழும் முறையாக விபாஸனாவைக் கற்றுத் தருகிறார். அதாவது எந்த உயிரியையும் விட மனிதவுடல் என்பது மேன்மை வாய்ந்தது; அவ்வளவு மேன்மை வாய்ந்த மனிதவுடலைக் கொண்டு நாம் நமது தன்னிலைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார். அவ்வாறு சரி வரப் புரிந்துகொள்ளும்போது நாம் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலையாகி நிம்மதியாகவும், மகிழ்வாகவும் வாழ முடியும் என்கின்ற தம்மபாதையைக் காட்டுகிறார்.

மேலும் முக்கியமானவொன்று புத்தரால் நமக்கு ஒரு பாதையைத்தான் காட்ட முடியும். அதில் காலடி வைப்பதும், தொடர்ந்து நடப்பதும் நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. புத்தர் ஒருபோதும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு நிர்வாணமடைதலின் எல்லை வரை கூட்டிக் கொண்டு போகப் போவதில்லை. அவரவர் அவரவர்க்கான பாதையில் பயணித்து தமக்கான விடுதலையைக் கண்டடைய வேண்டியதுதான்.

ஆகவேதான் 'விபாஸனா' தியானத்தின்போது உங்களுக்கு அந்தக் கணத்தில் எதை அனுபவிக்கின்றீர்களோ அதுவே உங்களுடைய உண்மை/தம்மமாக இருக்கின்றது எனச் சொல்கிறார்கள். பத்துப் பேர் ஒரே நேரத்தில் ஒரு ஆசிரியரின் வழிகாட்டலில் விபாஸனா செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொருவரும் உணர்வது தனித்தன்மையானது. ஒருவரது அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தோடு ஒப்பிட நோக்கியதல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆக, ஒருவகையில் நாம் இந்த உடலும் மனமும் ஒன்றுமேயில்லாத வெற்றிடத்தை அறியத்தான் இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா என்ற கேள்வியும் நமக்குள் எழக்கூடும். ஆம், அந்த வெற்றிடத்தை நோக்கி நாம் நகரும்போது நமக்குள் புதுப்புது உலகங்கள் விரியலாம்.
அதைப் பார்க்க வேண்டும் என்றால் நாம் தரையில் நின்று நீச்சலடித்தால் எவ்வித பலனுமில்லை. கடலுக்குள் தயக்கமின்றி இறங்கத்தான் வேண்டும். சிலவேளைகளில் பரிநிர்வாணமடைதல் என்ற மறுகரையை அடையலாம்.

இல்லாதுவிட்டால் இன்னுமின்னும் பல பிறப்புக்களின் பின் , நமது மாணிக்கவாசகர் கூறியது போல  'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்/பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்/கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்/வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்/ செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்/எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,/ எம்பெருமான்' ஒரு தெளிவை நாம் எப்போதாவது ஒரு 'பிறப்பில்' பெறமுடியலாம். அதற்கான ஒரு விதையை விபாஸனாவைக் கற்பதன் மூலம் நீங்கள் விதைக்கின்றீர்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புக்களில் ஆசிரியர் வெவ்வேறு நேரங்களில் மூன்று மணித்தியாலங்கள் ஆசிரியரோடு இருந்து செய்ய வேண்டும். எனக்கு சிலநேரங்களில் கால் உளைந்து, முதுகு வலித்து இந்த ஒரு மணித்தியாலம் எப்போது முடியும் போல இருக்கும். மற்ற நேரங்களில் ஒரு மணித்தியாலம் இவ்வளவு விரைவாக முடிந்ததா என்ற மாதிரி முடிந்திருக்கும். ஆக நான் சரியாகத் தியானத்தில் ஆழ முடிகின்றதா என்பதற்கான அளவுகோல்களாக இவற்றை வைத்திருந்தேன்.

அதேவேளை எப்போதும் பெண்களின் மீது மனது குவிந்துகொண்டிருக்கும் எனக்கு எதிர்வரிசையில் பெண்கள் இருந்தபோதும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கின்ற குறுகுறுப்பு கடைசிநாள் வரை எழவில்லை. யாரோ வருகிறார்கள், வந்து அமர்கின்றார்கள், விபாஸனா நேரம் முடிந்தபின் எழுந்துபோகின்றார்கள் என்றளவில் பெண்களையும் சாதாரண மனிதர்களாக எடுத்துக்கொண்டேனே தவிர மறுபுறத்தில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்கின்ற பரபரப்பு எதுவும் எனக்குள் எழாததைக் கவனித்தேன். உலகிலே பெண்களின் நினைவுகள்/ஈர்ப்புகள் இல்லாது இருத்தல் கடினம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவனை விபாஸனா, 'அலறாதே மனமே சும்மா அடங்கிக்கிட' என்று அதட்டி விட்டிருந்தது போலும்.

*

இங்கே விபாஸனா கற்றுத் தரும் ஆசிரியர் கோயிங்கா மியான்மாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் பாட்டனார் இந்தியாவிலிருந்து வந்தவர். வசதி வாய்ந்த வணிகக் குடும்பத்தில் பிறந்த கோயிங்கா வர்த்தகத்தில் அவரது இளமைக்காலத்திலே சிறந்து விளங்கியிருக்கின்றார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளிலே அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தனது வணிகத்தை விஸ்தாரிக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றார்.

இந்துவாக பிறப்பால் வளர்க்கப்பட்ட கோயிங்கா இந்துமத ஆசார அனுட்டங்களில் தோய்ந்தொழுகியவர். ஒருமுறை அவருக்கு மிக்கிரேன் (migraine) கடுமையாகத் தாக்க, பல்வேறு சிகிச்சைகளை உள்ளூரில் பெற்றிருக்கின்றார். இரவுகளில் தூங்க முடியாத அவதியால் இறுதியில் வைத்தியர்கள் அவருக்கு மோர்பினை (Morphine) கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த தலையிடி தாங்கமுடியாது கோயிங்கா ஜேர்மனி, சுவிற்சிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று பல மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றிருக்கின்றார். ஆனால் எந்த வைத்தியராலும் இந்த கடும் தலைவலியை தீர்த்துவைக்க முடியவில்லை.

அப்போதுதான் அவரது நண்பரொருவர் விபாஸனாவிற்குச் சென்று பாருங்களேன அனுப்பி வைத்திருக்கின்றார். விபாஸனா புத்தத்தோடு சம்பந்தப்பட்டது, எப்படி அசலான இந்துவான நான் இதற்குப் போவது என்று கோயிங்காவிற்குத் தொடக்கத்தில் குழப்பம் இருந்திருக்கின்றது. ஒருவகையில் இந்து மதத்தில், புத்தர் தங்களின் பத்தாவது அவதாரம் என்று தனக்கு சிறுவயதில் சொல்லித் தந்தாலும், ஆனால் புத்தரின் தியான முறையைக் கற்றுச் சொல்வது ஏதோ மகாபாதகம் போல என்னை உணர வைத்தார்கள் என்று கோயிங்கா ஓர் உரையில் குறிப்பிடுகின்றார்.

கோயிங்கா இறுதியில் விபாஸனா பழக தனது ஆசிரியரிடம் போனபோது, நீங்கள் என்னிடம் விபாஸனா பழகலாம் என்று சொல்கின்ற அவரின் ஆசிரியர், 'நான் இதை எனது கடும் தலைவலி மாறும் என்பதற்காகவே பழகப்போகின்றேன்' என்று கோயிங்கா சொல்கின்றார். உடனேயே அவரின் ஆசிரியர், 'அப்படியெனில் என்னிடம் விபாஸனா பழகவேண்டாம்' என்று திருப்பியனுப்புகின்றார். விபாஸனா என்பது எந்த சிகிச்சைகளுக்கு உரியதல்ல, அப்படியான குணப்படுத்தல்களுக்காக வருவபர்களுக்கு விபாஸனா அதன் முழுப்பலனைத் தராது என்பது ஆசிரியரின் வாதம்.

என்கின்றபோதும் ஆசிரியரின் கனிவும், கருணையும் கோயிங்காவிற்கு வாய்த்ததால், இறுதியில் கோயிங்கா விபாஸனா பழகத் தொடங்குகின்றார். விபாஸனா பழகத் தொடங்கிய இரண்டாம் மூன்றாம் நாட்களிலே, சக விபாஸனா பழகுகின்றவர்கள், தமக்கு அங்கே ஒளி தெரிந்தது, இங்கே ஒளி தெரிந்தது என்று கூறவும், எந்த ஒளியும் தோன்றாத கோயிங்கா இது தன்னைப்போன்ற தந்திர மூளையுள்ள வணிகர்களுக்கு உரியதல்ல, நன்மக்களுக்கு மட்டுமே ஒளி தோன்றுமென விபாஸனாவை விட்டு விலகியோட முயற்சிக்கின்றார்.

அப்போதுதான் அவரோடு விபாஸனா ஒரு பேராசிரியப் பெண்ணொருவர் உங்களுக்கு ஒளி தோன்றாவிட்டாலும், நன்றாக உட்கார்ந்து விபாஸனா செய்கின்றீர்கள், இந்த பத்து நாள் வகுப்பிலிருந்து விலகவேண்டாம் என்று சொல்கின்றார். அதன் பிறகு நடந்தது கோயிங்கா என்னவாக மாறினார் என்ற வரலாறு நம்மனைவருக்கும் தெரியும்.

கோயிங்கா தனது பெரும்பாலான உரைகளில் தனது ஆசிரியரையும், இந்த பேராசிரியப் பெண்மணியையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார். இவர்கள் இருவரும் இல்லாதுவிட்டால் தான் தம்மத்தின் பாதையில் ஒருபோதும் நடந்திருக்க மாட்டேன் என்று நமக்குச் சொல்கின்றார்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 159

Tuesday, September 15, 2026

 

தனிமையின் நூறு ஆண்டுகள் - வெப் சீரிஸ்/சீஸன் 02
***

அண்மையில் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கின்றது. முதலாம் பாகம் மகோந்தாவைக் கட்டியெழுப்பிய ஹோஸே அர்க்காத்தியோவின் மரணத்துடன் நிறைவு பெற்றது, அத்தொடரைப் பார்த்தவர்களுக்கு (2024) ஞாபகம் இருந்திருக்கும்.

இத்தொடர் கிட்டத்தட்ட நாவலின் முழுக்கதையையும் சொல்லி முடிப்பதாக அமைந்திருந்தாலும், Finale இம்மாத முடிவில் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கின்றார்கள். அநேகமாக 3 எபிசோட்களாக அது அமையலாம் என நினைக்கின்றேன். ஏனெனில் கதையின் நாயகி உர்சுலா இறந்துவிட்டார். உர்சலாதான் கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முதுகெலும்பாக தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நாவலை வாசித்தவர்க்குத் தெரிந்திருக்கும்.

Uploaded Image

இந்த இரண்டாம் பகுதியில் இரட்டையர்களான அவுரேலியானோ செகுந்தோவினதும், ஹேசே அர்க்காதியாவினதும் கதைகள் விரிவாகச் சொல்லப்படுகின்றது. இருவருமே இரண்டு வேறுபட்ட வாழ்வைத் தெரிவு செய்கின்றார்கள்.

இதுவரை லிபரல்களாக மத நம்பிக்கை இல்லாது (கர்னல் அவுரேலியானோவின் யுத்தங்களே லிபரல்களுக்கும், மத நம்பிக்கையுடைய மிதவாதிகளுக்கும் இடையில் நடைபெற்றது என்பது நமக்குத் தெரியும்) தலைமுறை தலைமுறையாக இருந்த புயேந்தியா குடும்பத்துக்குள் முதன்முதலாக அவுரேலியானோ செகுந்தோவின் மனைவி பெர்னாண்டா மூலம் அனைத்துமே மாறுகின்றது. தீவிர மதப்பற்றுள்ள பெர்னாண்டாவினால் லிபரல் குடும்பத்தின் 'கட்டற்ற சுதந்திரம்' கட்டுப்படுத்தப்படுகின்றது/கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

என்கின்றபோதும் புயேந்தியாஸ்கள் தமது லிபரல்தன்மையை காலத்துக்காலம் தொடர்ச்சியாகக் கைவிடாது காவியபடி வந்தபடி இருக்கின்றார்கள். அதை ஆண்கள் மட்டுமில்லை பெண்களான அமரந்தாவும், அழகி ரெமிதியாஸும் கூட அந்தத் தன்மையை எவருக்கு முன்னும் விட்டுக் கொடுக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்.

மூதன்னை உர்சுலா மட்டும் மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவை விளங்கிக் கொள்கின்றார். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டென்பதை பெர்னாண்டா தனது மகளான மேமேயையும், மகனான அர்க்காதியோவையும் தீவிர மத நம்பிக்கையுள்ளவர்களாக வளர்க்கும்போது  இடையீடு செய்வதில் நிரூபிக்கின்றார்.

மேமே கன்னியாஸ்திரியாகவும், ஹேசோ அர்க்காதியோ  ஒரு இறையியலாளனாக வத்திக்கானில் கற்பவனாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை ஒரு தீவிர விசுவாசமிக்க கத்தோலிக்கர்களாக பெர்ணான்டாவால் ஒருபோதும் வளர்க்க முடியவில்லை.

அதேசமயம் தனது மகள் மேமே மத நம்பிக்கையை விட்டு விலத்தி ஒரு கறுப்பின இளைஞனோடு காதல் சரசம் செய்வதை பெர்ணான்டாவால்  சகிக்க முடிந்ததில்லை. ஆகவே அந்த இளைஞனை ஒரு திருடன் போல ஆக்கி மகாந்தோவின் பொலிஸைக் கொண்டு கொன்றுவிடுகின்றார்.

அப்படி மேமேயின் காதலைக் கொன்றாலும், அதற்குள் அவர் அந்த கறுப்பின இளைஞனின் கருவை ஏற்றுக்கொள்கின்றார். மேமேயிற்குப் பிறப்பவனே இந்த நாவலின் கடைசித்தலைமுறையாகச் சொல்லப்படும் அவுரேலியானோ. ஆனால் அவன் ஒரு 'பாஸ்டர்ட்டாக' இருப்பதால் அவனுக்கு காலம் காலமாக வழங்கப்படும் புயேந்தியாஸின் குடும்பப் பெயர் கொடுக்கப்படுவதில்லை.
*
இரட்டையர்களில் ஒருவனான அவுரேலியானோ செகுந்தோ இப்படி தீவிர மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவின் காதலில் வீழ்ந்து தன் வாழ்வை சீரழித்து, குடும்பத்தின் தடுமாற்றங்களைப் பார்க்கின்ற ஒரு தோல்வியுள்ள இல்லறத்தவனாக இருக்கின்றான்.

அதேவேளை மற்ற இரட்டையரான ஹோசே அர்க்காதியோ, எதிர்காலத்தைக் கணிப்பிடாது வெள்ளையினத்தவர்க்கு தங்கள் வளமான வாழைமரத்தோட்டங்களைத் தாரை வார்த்து, பிறகு  சக தொழிலாளர்களுடன் சேர்ந்து தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் ஓர் அவல வாழ்க்கையை வாழ்கின்றார்.

ஒருமுறை எதிர்ப்பு ஊர்வலத்துக்குப் போகும் தொழிலாளர்களைக் கலைந்து செல்ல பொலிஸும், வெள்ளையின முதலாளிகளும் கேட்க, அதை மறுப்பதால் துப்பாக்கிச் சூடு கொடூரமாக நடத்தப்பட்ட 3000 இற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டு ஒரேயிரவில் 'காணாமல்' ஆக்கப்படுகின்றார்கள். கொல்லப்பட்ட உடல்களாஇ அதேயிரவில் இரெயினில் நிரப்பி கடலில் கொட்டச்செல்லும்போது தற்செயலாக உயிர்தப்பி வந்த ஹோசே அர்க்காதியோ மனப்பிறழ்வுக்கு உள்ளாகின்றார்.

அதன்பிறகு புயேந்தியாஸின் வீட்டுக்குள் 'செத்துப்போனவனாக' தலைமறைவு வாழ்க்கையை காலம் முழுக்க வாழ்கின்றார். அந்த மனப்பிறழ்வோடு புயேந்தியாஸ்களின்  கடந்தகாலத்தைப் பதிவு செய்தபடி தனி அறைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்.

இந்தச் சகோதரர்கள் இரட்டையர்களாகப் பிறந்தமாதிரி ஒரே நேரத்தில் இருவரும் இறந்தும் போய்விடுகின்றார்கள்.

*

எனக்கு இந்த இரண்டாம் ஸீஸனில் பிடித்தது அமரந்தா இறந்து போகின்ற நிதானமாகும். அமரந்தா ஓர் இரவில் நாளையுடன் தன் வாழ்வு முடியப்போகின்றது என்று குடும்பத்தினர் முன் அறிவிக்கின்றார். அமர்ந்தாவின் மரணத்தை மார்க்வெஸ் விபரிக்கும் முறை எனக்கு புத்தரை நினைவுபடுத்தியபடி இருந்தது. நிதானமாக தன் இறுதி நாளை அமரந்தா அறிவித்துவிட்டு உங்களுக்கு ஏற்கனவே இறந்தவர்க்கு செய்தி அறிவிக்கவேண்டுமெனில் என்னிடம் எழுதித் தாருங்கள் என்கின்றார்.

அடுத்தநாள் அமரந்தா மரணிப்பதை ஊரை கூடி வந்து பார்க்கின்றது. பலர் ஏற்கனவே இறந்துபோன தங்கள் உறவுகளுக்கான செய்திகளை அமரந்தாவிடம் கொடுக்கின்றனர். அமர்ந்தா நிதானமான சவப்பெட்டியில் ஏறியமர்கின்றார். அவரின் தாயாரான மூதன்னை உர்சுலா, அமர்ந்தா ஒரு கன்னி என்று அறிவிக்க அமர்ந்தா நிதானமாகக் கண்ணை மூடுகின்றார்.

அவ்வாறே அழகி ரெமேதியாஸின் மரணத்தை மார்க்குவெஸ் விபரித்ததும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ரெமேதியாஸின் பூவுலோக வாழ்வை அவ்வளவு பரிசுத்தமானது என்றால் அவளின் மரணமோ ஒரு தேவதைக்கு நேர்வதைப் போன்று நிகழ்கின்றது.

*

இதற்கிடையில் பல்வேறு கொலைமுயற்சிகள், தற்கொலை முயற்சிகளில் எல்லாம் இருந்து தப்பிய கர்னல் அவுரேலியாவும் இறுதியில் இறந்துபோகின்றார். ஆனால் அதற்கு முன்னர் அவருக்கு பல்வேறு பெண்களின் மூலம் பிறந்த 17 வளர்ந்த குழந்தைகளை அவருக்கு எதிரானவர்கள் மிக கச்சிதமாகத் திட்டம் போட்டு கொன்றுவிடுகின்றார்கள். ஒருகாலத்தில் வீரநாயகனாக லிபரல்களால் போற்றப்பட்ட கர்னல் இப்போது தோல்வியின் நாயகன். அவரால் மகோந்தாவில் நடக்கும் மாற்றங்களுக்கு எதிராக எந்தப் புரட்சியையும் அல்ல, ஒரு சொல் எதிர்த்துக் கூட கதைக்க முடியாது நிலை. அவரது மரணம் ஒரு கையறு நிலையைப் போல இறுதியில் நிகழ்ந்து விடுகின்றது.

நாவலை அதுவும் மிகச் சிறந்த நாவலை திரைத்தொடர் ஆக்குவது என்பது சிக்கல்கள் நிறைந்தது. அவ்வாறான முழுமையின்மைக்கு இடையிலும் இந்தத் திரைத்தொடரைப் பார்க்கும்தோறும் மீண்டும் மீண்டும் காபோ எழுத்துலகின் மாஸ்டர் தானென்பதை எனக்குள் நிரூபித்தபடி இருந்தார். இவ்வளவு விரிவான கற்பனையுடன் காபோ  இதை எழுத எத்தனைபேரின் அகவுலகத்தில் அவர் நீத்திச் சென்றிருப்பார் என்பது எண்ணிப் பார்க்க பார்க்க மனம் சிலிர்த்தது.

இறுதியில் (இன்னும் சீரிஸில் வரவில்லை) எத்தனையோ தலைமுறைகளின் கனவுகளும், வெற்றிகளும், இரகசியங்களும், காதலும், துரோகங்களும், தோல்விகளும்  இணைந்து எழுந்த மகோந்தாவும் புயேந்தியாஸுக்களும் எல்லோரின் நினைவுகளிலிருந்தும் என்றென்றைக்குமாக அழிந்து போகப் போகின்றார்களல்லவா?

'ஏனெனில் தனிமையின் நூறு ஆண்டுகளுக்காக என்று விதிக்கப்பட்ட வம்சங்களுக்குப் பூமியில் இரண்டாவது வாய்ப்பு கிடையாது.'

***

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் குறித்து தமிழ்நதி

Sunday, September 13, 2026

 

இளங்கோவின், 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' கட்டுரைத் தொகுப்பில் 13 நூல்களைப் பற்றிய பார்வைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன: அனுக் அருட்பிரகாசத்தின் 'வடக்கிற்கான ஒரு பயணம்' (A Passage North), & 'ஒரு குறுகிய திருமணத்தின் கதை' (The Story of a Brief Marriage), வாசுகி கணேசானந்தனின் 'சகோதரனற்ற இரவு' (Brotherless Night) & Love Marriage, நிரோமி டீ ஸொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி' (Tamil Tigress), ஷியாம் செல்லத்துரையின் 'பசித்த பேய்கள்' (The Hungry Ghosts), சாரோன் பாலாவின் 'படகு மக்கள்' (The Boat People)  ரோய் ரத்தினவேலின் 'கைதி #: 1056' (Prisoner #1056)  லோகதாசன் தர்மதுரையின் 'ஓர் ஈழத்தமிழரின் புகலிட வாழ்வு'(The Sadness of Geography), மலரவனின் 'போருலா' (War Journey), மார்க் ஸ்டீபனின் 'தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்' (Tea Time with Terrorists), சங்கரி சந்திரனின் 'சூரியக் கடவுளின் பாடல்' (Song of the Sun God), பெஞ்சமின் டிக்ஸ், லின்ட்சே பொல்லக் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட 'வன்னி' (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கிற 'கிராபிக்' நாவல் ஆகியவையாகும்.

தமிழில் வெளியாகி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, மலரவனின் 'போருலா' வைத் தவிர இதர பன்னிரண்டு நூல்களும் ஈழத்தைக் கதைக்களமாகக் கொண்டு ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. ஈழத்துப் படைப்புகளை மட்டுமல்லாது, பொதுவான இலக்கியத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வாசிப்பவரும், அவற்றைக் குறித்து இணைய, அச்சு சஞ்சிகைகளிலும் எழுதிவருபவருமாக தமிழிலக்கிய வட்டாரத்தில் 'டிசே தமிழன்' என்கிற இளங்கோ அறியப்பட்டிருக்கிறார். கதை நிகழ் களங்களின் பின்னணி பற்றிய அறிதலும், அரசியல் புரிதலும் மிக்கவராக இருக்கும் காரணத்தால், தம்மால் வாசிக்கப்படும் நூல்களுக்கு அப்பால் சென்று(ம்) குறிப்பிட்ட பேசுபொருள் தொடர்பில் அவரால் உரையாட முடிகிறது.

 
ஒருவரை தமிழ்த்தேசிய ஆதரவாளர் - எதிர்ப்பாளர் என எழுந்தமானமாக எளிதாக முத்திரை குத்திவிடும் சூழலில், அத்தகைய விமர்சனங்களுக்கு அஞ்சாது பக்கச்சார்புகளின்றி தனக்கு நியாயமென்று தோன்றுபவற்றை தன்னறத்துடன் எழுதுபவராக இத்தொகுப்பின்வழி இளங்கோவை இனங்காணமுடிகிறது.

வாசுகி கணேசானந்தனின் 'சகோதரனற்ற இரவு' நாவல் பற்றி எழுதும்போது, ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடத் தூண்டப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு இந்நாவலில் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அனுக் அருட்பிரகாசம், அவரது நாவல்களில் (A Passage North & The Story of a Brief Marriage) இடம்பெறும் கதாபாத்திரங்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'நியாயம்' செய்திருப்பதாக எழுதுகிறார்.

'சகோதரனற்ற இரவு' நாவலைப் பற்றிய கட்டுரையில் உள்ள சில பந்திகளை இங்கு மேற்கோள் காட்டலாம்.
//இலங்கையில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது சிங்களப் பேரினவாதமும், அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கும் இனவாத, மதவாத அரசியல் கட்சிகளுமே ஆகும். ஆகவேதான் இன்று யுத்தம் முடிந்தபின்னும் இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி ஏற்படாமல் இருக்கின்றது.

இந்த நாவலும் யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களுள் செல்லாது, அதன் எதிர்வினைகளையும், பின் விளைவுகளையும் முக்கியமானதாகக் காட்ட விழைகின்றது. ஒரு பேரினவாத அரசிற்கெதிராக, ஒரு கெரில்லா இயக்கமாகத் தோன்றி, பின்னர் மரபுவழி இராணுவமாக ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளை, அரசுக்கு நிகராக வாசுகி முன்னிறுத்த விரும்புகின்றார். அதனாலே இந்தப் புனைவு 2009-இல் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர் என்பதை முதன்மையாகச் சொல்கின்றது.

இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு நாம் ஹமாஸை இஸ்ரேல் அரசுக்கு நிகராக வைத்துப் பேசுவது நியாயமாக இருக்கமுடியுமா?'// என்று கேள்வியெழுப்புகிறார் இளங்கோ.

தவிர, நாவலானது 1989 இலிருந்து தடாலடியாக 2009-ஆம் ஆண்டிற் சென்றிறங்கிவிடுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார். அந்த இருபதாண்டு காலத்தில் எத்தனையோ அழிவுகளையும் இழிவுகளையும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாவலில் அந்த இரண்டு தசாப்தங்களும் பேசப்படாதவையாக, வெறும் பக்கங்களாக இருந்திருக்கவேண்டுமென்பதை இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களால் உணர்ந்துகொள்ளமுடியும். முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த போரில், இருபதாண்டுகளை ஒரே பாய்ச்சலில் கடந்துசெல்வதானது தார்மீக மீறலாகும்.

இதே விமர்சனத்தை, வாசுகி கணேசானந்தனின் 'லவ் மரேஜ்' நாவல்மீதும் வைக்கிறார்.
//மிகச் சிக்கலாகவும், பலவீனமாகவும் போய் அழிவில் முடிந்த தமிழரின் ஆயுதப் போராட்டத்தை 'எல்லாத் தரப்புகளும் பிழை செய்கின்றன' என்று எளிதாக விளக்கிவிடமுடியாது. தொடக்க காலத்தில் தமிழரின் உரிமைக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு எவ்வளவு வலிமையான காரணங்கள் இருந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் இருக்கின்றன. இந்நாவலில், தமிழர் தரப்பின் தீர்க்கப்படாத பிரச்சனைகளின் ஆழங்களை அலசாமல், பொதுப்படையாக அனைவரும் தவறு செய்கின்றார்கள் என்று எழுதுவது, ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்களுக்கு தவறான நிலைப்பாட்டை விதைக்கக்கூடியது.//
மேட்டிமைத்தனத்தின் மீதான ஒவ்வாமையை இந்நூலின் பல பக்கங்களில் அவதானிக்கமுடிகிறது.

ரோய் ரத்தினவேலின் 'கைதி எண் 1056' என்ற தன்வரலாற்று நூல் பற்றி எழுதும்போது, 'தனிமனித அனுபவங்களைப் பொதுமைப்படுத்தலாகாது' என்ற தொனிப்பட எழுதியுள்ளார்.

இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குடும்ப நண்பரொருவரின் (இராணுவத்தில் முதல்நிலை அதிகாரிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்) தலையீட்டால் விடுதலை செய்யப்பட்ட ரோய் தன்னுடைய பதினெட்டாவது வயதில் கனடாவில் வந்திறங்குகிறார். ஆரம்பத்தில் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி, படிப்படியாக முன்னேறி ஈற்றில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக உயர்ந்ததைப் பற்றி இந்நூலின் பிற்பகுதியில் விபரித்துள்ளார். இளங்கோ சொல்வதைப் போல, வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உழைப்பும் எல்லோருக்கும் நேர்கோட்டில் சந்திப்பதில்லை. ரோயின் நூலை நானும் வாசித்திருக்கிறேன். பேரினவாத அரசால் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்த பதின்பருவத்துச் சிறுவன் மீது உண்டாகும் பரிவுணர்வு, கடும் உழைப்பால் பொருளாதார ரீதியாக முன்னேறிவரும் இளைஞனிடம் ஏற்படும் மதிப்பு, பெரும் பணக்காரராக மாறி மேட்டுக்குடியின் குரலாக ஒலிக்கத் தொடங்குபவரிடம் உண்டாவதில்லை.

இளங்கோவின் வார்த்தைகளில் சொல்வதானால், 'ஒருவரின் வெற்றிக்கதை (அல்லது அவ்வாறாக நம்புகின்ற) எல்லோரினதும் கதையாகாது; எதையும் பொதுமைப்படுத்துவது ஆபத்தானதாகவே முடியும்'

வெற்றிபெற்றவர்களால் சொர்க்கபுரியாகத் சித்தரிக்கப்படுகிற கனடாதான் போரிலிருந்து தப்பித்து Sun Sea கப்பலில் வந்திறங்கிய ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை குற்றவாளிகளைப் போல நடத்தியது. திருப்பியனுப்பப்பட்டவர்களும், தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டவர்களும், எந்தவொரு ஆவணங்களும் வழங்கப்படாது அல்லலுற்று வாழ்பவர்களுமென அவர்தம் வாழ்வு சீரழிந்துபோயிற்று. சாரோன் பாலாவின் 'படகு மக்கள்' இவ்வாறு வந்திறங்கி அல்லற்படும் மக்களைப் பற்றிப் பேசுகிறது.

நம் எல்லோருக்கும் அரசியல் சார்புகள் இருப்பது உண்மைதான். அவை வெற்றிடத்திலிருந்து உருவானதில்லை. ஒவ்வொருவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கும் பின்னால் அவரவர் அனுபவங்கள், கண்ட காட்சிகள், செவிமடுத்த செய்திகள் இருக்கும். அவ்வாறு முற்சார்புகள் இல்லாத, - யுத்தத்திற்கு வெளியே இருக்கும், அதேவேளை யுத்தத்தோடு தொடர்புடைய- தலைமுறையொன்று இலக்கியத்தில் காலடி எடுத்துவைத்திருப்பதை ஆரோக்கியமானதென இளங்கோ கருதுவதை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பல இடங்களில் காணமுடிகிறது. அனுக் அருட்பிரகாசம், சாரோன் பாலா, சங்கரி கணேசன் ஆகியோரை நம்பிக்கை தரும் நல்வரவுகளாகக் காண்கிறார். புலம்பெயர்ந்து வாழும் இளையவர்களால், ஈழத்தைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் ஆங்கிலம், பிரெஞ்ச், டொச் -இல் எழுதப்படும் நூல்களை புலம்பெயர் தமிழிலக்கியம் என்று விளிப்பதானது பொருத்தப்பாடற்றது. புலம்பெயர்ந்த தமிழர்களால் எழுதப்படும் இலக்கியங்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.

'தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்' நூல் பற்றிய கட்டுரையில், அதை எழுதிய வெள்ளையினத்தைச் சேர்ந்த மார்க் ஸ்டீபனின் எழுத்தில் மேற்கத்தேய மேட்டிமைவாதம் மிகுந்திருந்ததை விமர்சிக்கிறார். அத்துடன், ஈழத்துக்குச் சென்று அவரால் நேர்காணல் செய்யப்பட்டவர்களுள் ஒருவர்தானும் அந்தக் காலகட்டத்தில் (2002-இல் தொடங்கி 2010இல் வெளியிடப்பட்டது) களத்தில் நின்றவர்களில்லை என்றெழுதுகிறார்.

முதலாவது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ள பதின்மூன்று நூல்களையும் பற்றிய சிறந்த அறிமுகங்களாக, வாசிப்பினுள் அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' தொகுப்பின் கட்டுரைகள் அமைந்துள்ளன. தேடி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி இந்நூல்.

வெளியீடு: எழுநா
பக்கங்கள்: 112
விலை: 700 இலங்கை ரூபாய்

***

கார்காலக் குறிப்புகள் - 158

Friday, September 11, 2026

 


நேற்று ஐரோப்பாவிலிருக்கும் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெத்ரோ அல்மதோவரின் புதிய படமான 'Bitter Christmas'ஐ பார்த்ததை நண்பர் சொன்னார்.  ஐரோப்பாவில் வெளியிடப்பட்டாலும், அல்மதோவரின் இந்தப் படம் இன்னும் அமெரிக்காப் பக்கம் வெளியிடப்படவில்லை. எங்களுக்கும் வரும் மாதம் நிகழும் திரைப்படவிழாவில் (TIFF) திரையிடப்படும்போதுதான் பார்க்கும் சந்தர்ப்பம் வரும்.

Bitter Christmas ஒரு படைப்பாளிக்கு வயதாகும்போது அவரது படைப்புத் திறமை முடங்கிப் போவதன் அவதியைப் பற்றிப் பேசுகின்றதாக அமைந்திருக்கின்றது என்று நண்பர் கதையின் தன்மையை மேலோட்டமாகச் சொன்னார். எனக்கு அல்மதோவர் பிடித்த நெறியாளர் என்றாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த  'The Room Next Door' இன்னமும் பார்க்காதது நினைவுக்கு வந்தது.

Uploaded Image

நண்பர் அதையும் பார்த்துவிட்டார். அது கவித்துவம் நிறைந்த திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார். நான் அதை நண்பருடன் உரையாடியபின் பார்க்கத் தொடங்கியிருந்தேன் என்றாலும் அது புற்றுநோயின் பின்னணியில் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவைப் பற்றிப் பேசுவதால் என்னால் தொடர்ந்து பார்க்க முடியாத ஒரு அவதியில் அரைவாசியோடு நிறுத்திவிட்டிருந்தேன்.

நண்பர் இப்படி அவர் பார்த்த திரைப்படங்களைச் சொன்னபோது, நீங்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு ஞாபகத்தில் ஏதோ ஓரிடத்தில் நிற்க, அதைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கும், இப்போதெல்லாம் இப்படியான அரிய விடயங்களைப் பகிரும் இடமாக சமூக வலைத்தளங்கள் இல்லாமல் போய்க்கொண்டிருப்பது கவலையானது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒரு நல்ல புத்தகத்தையோ/திரைப்படத்தையோ/இசையையோ தேடிப் பார்த்தல் மற்றவர்கள் பகிரும்போதே அது சாத்தியமாகின்றது. அது இல்லாதபோது ஒரு குறிப்பிட்ட சிறுவட்டத்துக்குள்ளே அன்றன்றைக்கு நடக்கும் 'கிளர்ச்சியூட்டம் சம்பவங்களை' மட்டும் பேசுவதுடன்/அறிவதுடன் நமது நாளாந்தம் (நண்பர் அதை அன்றாடம் என்று உபயோகிப்பார்) முடிந்துவிடுகின்றது என்றேன் .

*

இப்படி அல்மதோவரின் திரைப்படத்தைப் பார்த்து எனக்குள் வந்த பதற்றத்தை, அமெரிக்காவின் கவிஞரனா மேரி ஒலிவரின் (Mary Oliver: Saved by the Beauty of the World ) ஆவணப்படத்தைப் பார்த்து இயல்புநிலைக்குக் கொண்டுவந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு பதிவைப் பார்த்தே இப்படி ஓர் ஆவணப்படம் மேரி பற்றி வந்திருப்பதை அறிந்திருந்தேன். இயற்கையோடு வாழ்ந்து  இயற்கையை நுட்பமாக இரசித்து அதை தன் எளிமையான வார்த்தைகளுக்குள் மேரி கொண்டு வந்திருந்தாலும்  நாம் அவரின் கவிதைகளை வாசிப்பதுனூடாக  ஒரு மீப்பெரும் உலகை நமக்குள் சிருஷ்டிக்க முடியும்.

மேரி தொடர்ச்சியாக காடுகளுக்குள் போய்க் கொண்டிருந்தவர். அதுபோல தினமும் எழுதுவதை ஒரு தீவிர 'சடங்காக' வைத்திருந்தவர் அவரது பதின்ம வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு வாரமாக காட்டுக்குள் வாழ்ந்தும் மேரி இருந்திருக்கின்றார். அவர் இயற்கையையும் உயிரினங்களையும்  இந்தளவு தனது படைப்புக்களில் கொண்டுவந்ததைப் போல வேறு சிலரே இருப்பார்கள். மேரி ஓரிடத்தில் இன்று நாம் இயற்கையிடம் இருந்து அந்நியமாகும்போது இந்த வாழ்க்கை இரசிக்கும் அழகிலிருந்தும் விலகிப் போகின்றோம் என்கின்றார்.  ஒருவர் பெருநகரத்தில் சூரியன் உதிப்பதையே பார்க்காத கடட்டக்காட்டுக்குள் வாழும்போது, அவர் ஷேக்ஸ்பியரின் ' "It is the east, and Juliet is the sun" என்பதை எப்படி புரிந்துகொள்வார் என்று மேரி ஓர் உரையாடலில் கேட்கின்றார். இயற்கையிடமிருந்தே நாம் எல்லாவற்றையும் கற்றிருக்கின்றோம் என்றால் இயற்கையிடமிருந்து விலகும்போது நமது வாழ்க்கை அவ்வளவு ஆழமாக இருக்குமா என்பது நாம் ஒவ்வொருவரும் நமக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டிய கேள்வியாகும்.

Uploaded Image

நமது தமிழ்ப் படைப்பாளிகள் போலவே மேரியினது இளமைக்கால வாழ்வு வசதியானதல்ல. ஆனால் அவர் ஒரு கவிஞராவது என்பதில் பதின்மத்திலிருந்தே தீவிரமாக இருந்திருக்கின்றார்.  அதேவேளை அவர் உள்ளடங்கியவராக, தனது கவிதைகளைப் பொதுவெளியில் வாசிக்க விரும்பதாவராகவே நீண்டகாலம் இருந்திருக்கின்றார்.

தற்பாலினரான மேரி அவரது நீண்டகாலத் துணையை இழந்ததன் பின்னரே, பொதுவெளிக்குப் போய் கவிதைகளை வாசிக்கவும், கவிதைகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றார்.  மேரியின் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, நாங்களும் மேரியுடன் காடுகளுக்குள் உலாவுவது போலவும், சிறு உயிரிகளையும் அவ்வளவு வியப்புடன் பார்ப்பது போலவும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒருவகையில் மேரி  எப்படி இந்த உலகைப் பார்த்தவர் என்பதை அவரில்லாத காலத்தில் எங்களை இந்த ஆவணப்படத்தின் மூலம் பார்க்க வைப்பது சுவாரசியமானது.

மேரி தனது முதிய காலத்தில்தான் அவரின் பால்யகால மனவடுக்களைப் பேசுகின்றார். அவர் அவரது குடும்பத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளானவர். ஒருவர் தன் உடல் குறித்த பிரக்ஞையை அடைந்தபின், பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்போதே எவ்வளவோ பாதிப்பை அடையும்போது ஒரு குழந்தை தனது உடல் குறித்து விழிப்புணர்வு இல்லாதபோது அதற்குள் சென்று வருவது என்பது இன்னும் கொடுமையானது. ஆகவேதான் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு ஆகின்றவர்களுக்கு கனவுகள் கூட துர்க்கனவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.

மேரி தனது மனவடுக்களைப் புதைத்துவிட்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தினாலும் (அதுதான் இப்படியான துஷ்பிரயோத்துக்கு ஆளாகின்றவர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு துயரமான வழியும் கூட), அவரை அந்த நினைவுகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்ததை அவர் இது குறித்து பிற்காலத்தில் தனது மனதைத் திறந்து காட்டும்போது நாம் காண்கின்றோம்.

மேரியின் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்குக் கடிதம் எழுதும் பலர், 'மேரி நீங்கள் என் வாழ்க்கையைக் காப்பாற்றினீர்கள்' என்று எழுதியிருக்கின்றனர். மேரியோ அவரின் வாழ்வை கவிதைகளுக்குள் நுழைந்தன் மூலம் முதலில் காப்பாற்றியிருக்கின்றார். இல்லாவிட்டால் மேரியால் அவரது வாழ்வைத் தொடர்ந்து பதற்றங்களில்லாது கொண்டு சென்றிருக்க முடியாது. கலை ஒருவகையில் ஆற்றுப்படுத்துவதாகவும், அதேவேளை ஒருவரின் சிருஷ்டித்திறனை முகையவிழ்க்க வைப்பதாகவும் இருப்பதுதான் எவ்வளவு அருமையானது.

*

கடந்த வாரம் இங்குள்ள நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, நமக்கு வயதாகும்போது இப்படி வாசிக்கவும் எழுதவும் முடியுமா, அப்படி இவை நம்மைக் கைவிட்டால் நமது நிலைமை என்னாவகும் என்று நினைக்க அச்சமாக இருக்கிறது என்றார். உண்மையில் இதற்கான பதில்கள் நம் எவரிடமும் இல்லை. ஆனால் நண்பரிடம், 'எது அப்போது நமக்கு தரப்போகின்றதோ, அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான், இப்போது அதையெல்லாம் நினைத்து அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை' என்றேன் என்றாலும் எனக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் இப்படி யோசித்துப் பார்க்கலாம். நாங்கள் இன்று வாழும் வாழ்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் நமக்குத் தெரிந்திருக்குமா? அல்லது நாம் பத்து வருடங்களுக்கு முன் கனவு கண்ட வாழ்க்கையையா இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? ஏன் நம்மில் எவரேனும் இப்படி சில வருடங்களுக்கு முன் கோவிட் வந்து நம் அனைவரையும் முடக்கும் என்று யோசித்துப் பார்த்திருப்போமா? இல்லைத்தானே.

இந்தவேளையில்தான் ஸென் உள்நுழைந்து இப்படியான பதற்றங்களை எனக்குள் நிதானப்படுத்தும். இந்த வாழ்க்கையில் அவசரப்படுவதற்கு அவ்வளவு முக்கியமானது என்று ஒன்றுமே இல்லை என்று எங்களுக்கு நாங்களே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் மேரியைப் போன்ற ஒரு வாழ்க்கையை காடுகளுக்கு அருகாமையில் வாழ்வதற்கு இல்லை, அவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக்கூட நம்மால் எளிதாக முடியாது.

இந்த வாழ்வு நமக்கு ஒரேயொரு முறை என்றும், மரணம் என்பது நிச்சயமானது என்றும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் ஏன் இந்த வாழ்க்கையை இப்படிப் பதற்றங்களோடும், அவசரகதியோடும் எதிர்கொள்கின்றோம்  என்பதுதான் எவ்வளவு முரண்நகையானது.

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 06

Thursday, September 10, 2026

 

இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம். தனியறையிலிருந்து பத்து நாள் உணவு உட்பட அனைத்துக்கும் எந்தக் கட்டணமும் நாம் செலுத்தத் தேவையில்லை.


எவ்வித பணமும் செலவழிக்காமல் இப்படி பத்து நாள் விபாஸனா அனுபவத்தை நீங்கள் எவ்வித புறச்சூழல் அழுத்தங்கள் இல்லாது அனுபவியுங்கள் என்று கோயிங்காவை ஆசிரியராகக் கொண்ட இந்த விபாஸனா நிலையங்கள் நமக்கு வழங்குவதுதான் எவ்வளவு அருமையானது.



இந்தவகையான இலவசமான தியான அனுபவம் இங்கு மட்டுமில்லை, கோயிங்காவை ஆசிரியராகக் கொண்டு உலகெங்கும் இயங்கும் 270 நிலையங்களிலும் இருக்கின்றன. இலங்கையில் ஏழுக்கும் மேற்பட்ட விபாஸனா நிலையங்களும், தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து விபாஸனா நிலையங்களும் இயங்குகின்றன என நினைக்கின்றேன்.

*
எமக்கு தங்குமிடம், உணவு தருவது இலவசம் மட்டுமில்லை, இங்கே வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள், நமக்கு உணவு தயாரித்துத் தருபவர்கள், கட்டடங்களின் உட்கட்டமைப்பு/பராமரித்தல்/சுத்தம் செய்தல் எனச் செய்பவர்கள் அனைவருமே தமது சேவையை இலவசமாகவே வழங்குகின்றனர்.

இப்படியொரு இலவசமான அமைப்பு எப்படி தொடர்ந்து இயங்க முடியும் என்பது 'வியாபாரக் காந்தங்களுக்கே' வியப்பளிக்கும் ஒரு விடயமாகும்.

ஆசிரியர் கோயிங்கா இப்படி விபாஸனா நிலையங்களை முதலில் இந்தியாவில் தொடங்கியபோது, 'இங்கே பலர் ஒழுங்கான உணவில்லாது இருக்கின்றனர். இப்படி இலவசமாக உணவும் இடமும் கொடுக்கின்றோம் என்றால் உணவுக்காகத் தான் வந்து நிரம்புவார்கள், தியானம் செய்ய வரமாட்டார்கள்' என்று கோயிங்காவைப் பயமுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் கோயிங்கா, 'ஒருவர் காலை 4 மணிக்கு எழும்பி, இரவு 9மணிவரை இருந்து கடும் தியானம் செய்யும் நிகழ்ச்சி நிரல் இருக்கும்போது, அப்படி உணவுக்காக மட்டும் வருகின்றார்கள் என்றால் ஒன்றிரண்டு நாளில் இங்கிருந்து ஓடிவிடுவார்கள்' எனச் சொல்லி வெற்றிகரமாக விபாஸனா நிலையங்களை இந்தியா, மியான்மாரில் தொடங்கியிருக்கின்றார்.

சில காலத்துக்குப் பிறகு இதே 'இலவச' மாடல்களை மேற்குலகிற்குக் கொண்டு வந்தபோது, மேற்கத்தையவர்கள் கோயிங்காவிடம், கீழைத்தேயத்தில் இப்படி தன்னார்வ சேவை இயங்க வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மேற்கில் இதெல்லாம் வேலைக்கு உதவாது' என்று சொல்லியிருக்கின்றார்கள். கோயிங்காதான் பரவாயில்லை, முயன்று பார்ப்போம் என்றிருக்கின்றார்.

*

நான் சென்ற இந்த நிலையம் 20 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றது. மாதம் இரண்டு தடவைகள் 10 நாள் விபாஸனா என்று வருடம் முழுதும் வெயில், மழை, பனி என்று பாராது தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.

இத்தனைக்கும் கோயிங்கா தனது விபாஸனா தியான முறைகளில் நம்பிக்கை இல்லாதுவிட்டால் இதைச் செய்திருக்கவே முடியாது. ஏதோ ஒருவகையில் விபாஸனா மூலம் பலர் பயன்பெறுவார்கள், அவர்கள் திரும்பத் திரும்ப இந்த விபாஸனா நிலையங்களுக்கு வருவார்கள், தங்களின் தன்னார்வல சேவையை வழங்குபவர்கள், நிதியுள்ளவர்கள் நிதி வழங்கி நிலையங்களை விஸ்தரிப்பார்கள் என்று உறுதியாக நம்பியிருக்க வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக எந்த அமைப்பினதோ/தனிமனிதர்களினதோ நிதி வழங்கலில் தங்கியிருக்காது விபாஸான கற்ற/கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பில் இந்த விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன என்று அறிந்தபோது உண்மையில் மனம் குளிர்ந்து நின்றேன்.

பத்து நாள் விபாஸனாவிற்கு வருகின்றவர்கள், பத்து நாள் வகுப்பையும் முடித்தால் மட்டுமே, விரும்பினால் நன்கொடைகள் வழங்கலாம். நான் இந்த விபாஸனாவிற்குப் போகும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கலாம் என்று நினைத்துத்தான் போனேன்.

ஆனால் பத்து நாள் விபாஸனாவில் பங்குபற்றியதன் பிறகு நினைத்ததைவிட இரண்டு மடங்கு தானம் செய்துவிட்டு வந்தேன். அப்படிக்கு இதன் இயங்குநிலையும், நம்மை அரவணைத்து விபாஸனா சொல்லிக் கொடுக்கும் நெகிழ்ந்த தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது.

*
கோயிங்கா இந்த பத்துநாள் விபாஸனா அமைப்பை, எப்படி அசலான புத்த பிக்குகள்/பிக்குணிகள் தமது நாளாந்த வாழ்வில் வாழ்வார்களோ அப்படித்தான் வடிவமைத்திருக்கின்றார். துறவிகள் தம்மத்தின் பாதைக்குச் செல்வதற்கு அனைத்தையும் துறந்து போவதைப் போல குடும்பவாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களால் முடிவதில்லை.

கடைசிவரை குடும்பவாழ்வில் இருந்த கோயிங்கா, அப்படி இருக்கக்கூடியவர்களும் தம்மத்தின் பாதையில் நடந்து பரிநிர்வாணம் அடையவோ அல்லது அதை நெருங்கிச் செல்லவோ இந்த வாழ்க்கைக்காலத்தில் முடியும் என்பதை இப்படியான விபாஸனா கற்றுக்கொடுப்பதன் மூலம் நமக்குச் சொல்ல விழைகிறார்.

தொடக்ககாலத்தில் கையில் நிதி இல்லாத நிலையில், இந்தியாவில் விபாஸனா பழக வந்தவர்களிடம் வகுப்புக்களுக்காக நிதி அறவிட்டிருக்கின்றார். அப்படி பணம் வாங்கி விபாஸனா கற்றுக்கொடுத்தாலே அது தம்மத்தின் பாதை இல்லை. அவ்வாறு இருக்கமுடியாது என்று முற்றிலும் இலவசமாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார் கோயிங்கா.

மேலும் இல்லறவாழ்வில் இருக்கும் நாம் துறவிகளின் வாழ்வை இந்த பத்து நாட்களில் வாழ்ந்து பார்க்கப் போகின்றோம் என்றால், துறவிகளின் முக்கிய பண்பு தானம் கேட்பது. அதாவது உணவுக்காக தெருவில் இறங்கி பிச்சையெடுப்பது. அப்படி தானம் கேட்பதை, ஒருவரிடம் பணத்தை அறவிட்டு உணவைக் கொடுப்பதால் அடையமுடியாது.

நமக்கு இந்த விபாஸனா நிலையங்களில் யாரோ ஒரு முன்னாள் விபாஸனா மாணவர் கொடுத்த நிதியின் ஊடாக உணவென்ற தானமாக வழங்கப்படுகின்றது. ஆக நாம் யாரிடமோ துறவிகள் போல (இரந்து கேட்டு) உணவைப் பெற்றுச் சாப்பிடுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்கின்றோம்.

*
அதுபோலவே இந்த நிலையங்களில் எவரும் மற்றைய புத்த மடாலயங்கள் போல நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை. எல்லாமே மாறும் என்று புத்தர் சொல்லியதுபோல இங்கே வருபவர்களைப் போல, அதைப் பின் நின்று நடத்துபவர்களும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுடரேந்திய தொடரோட்டம் போல இந்த நிலையங்கள் உலகெங்கிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்றைய புத்த மடலாயங்களில் அநேகமாக நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புத்த பிக்குகள்/பிக்குணிகளாலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் எந்த ஒரு புத்த மடாலயமும் இப்படி இலவசமாக meditation retreats செய்வதுமில்லை. அதற்கான sustainability அவர்களிடம் இருப்பதுமில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான சூழலில் கோயிங்காவில் இந்த விபாஸனா நிலையங்கள் உலகெங்கும் (270) விபாஸானவை இலவசமாக நமக்கு வழங்குகின்றன என்பதை நினைத்தால் வியப்பாய்த்தான் இருக்கின்றது.

மேலும் நான் போன விபாஸனா நிலையத்தில் புத்தரின் சிலைகளோ/படங்களோ மட்டுமில்லை, கோயிங்காவின் எந்த
புகைப்படமோ/அடையாளப்படுத்தல்களும் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  கோயிங்காவே தனது உரைகளில் ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு அதில் பெயரைப் போடுவது எவ்வளவு அபத்தம் என்று எள்ளல் செய்து கொண்டிருப்பார். அது தன்முனைப்பின் (Ego) உச்சமே தவிர வேறெதுவும் இல்லை என்று ஞாபகப்படுத்துவார். ஆகவே புத்தரை மட்டுமில்லை கோயிங்காவை நினைவுபடுத்தும் எவற்றுக்கும் இங்கு இடமில்லை. தியான மணடபமே சும்மா 'வெறிச்சோடி'த்தான் எல்லாத் திசைகளிலும் இருக்கும்.

ஆக, நீங்கள் இந்த விபாஸனா நிலையத்தில் உலாவும்போது மத அடையாளங்கள் எதுவுமற்ற ஏதோ ஒரு சாதாரண விடுதிச் சூழலில் நிசப்பத்தோடு வாழ்கின்றீர்கள் என்று மட்டுமே உணர்வீர்கள்.

அதனால்தான் இங்கே நானுட்பட,  குரு நானக்கை வழிபடும் தலைப்பாய் கட்டிய சீக்கும், அல்லாஹ்வை பின்தொடரும் முஸ்லிமும், கைகள் முழுதும் கயிறுகள் கட்டிய இந்துவும் என அனைவரும் ஓர் அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டோம் என்ற பதற்றமில்லாது மிக இயல்பாக விபாஸனாவைப் பழகிக் கொண்டிருந்தோம்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 05

Monday, September 07, 2026

 

விபாஸனாவில் இருந்தபோது நான் முற்றுமுழுதாக அதனோடுதான் இருந்தேன் எனச் சொல்ல முடியாது. ஆனால் புறச்சூழல் அமைதியாக்கப்பட்டதால் பெரும்பாலும் சிக்கலான யோசனைகள்/எண்ணங்கள் இல்லாது இருந்தேன் எனச் சொல்வேன்.


தொடக்கத்தில் சில நினைவுகள்/காட்சிகள்/உருவங்கள் மிகத் தீவிரமாக மனதில் வந்து கொண்டே இருந்தன. பிறகு தியானம் செய்யாது அறையினுள் ஓய்வெடுத்துக் கொண்டபோது கூட மிகச் சிறிய உலகிலே எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
Uploaded Image

நான் போன விபாஸனா நிலையம் 140 ஏக்கர் விஸ்தாரமானது என்பதால் நிம்மதியாக உலாவுவதற்கு சிறு காடுகள் இருந்தன. சிலவேளைகளில் தியானம் செய்துவிட்டு காட்டுக்குள் உலாத்தும்போது அவ்வளவு அற்புதமாக சூரியவொளியில் மினுங்கிய மரங்களும், சிறுசெடிகளும் தெரிந்தன. நான் இந்தக் காட்டுக்குள் மிக அமைதியாக இருந்து இரசிக்கும் இடத்தை இந்த நாட்களில் கண்டெடுத்திருந்தேன்.

அடடா எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இந்தச் சூழல் இருக்கின்றதே, நாளையும் இங்கு வரும்போது இருக்குமா என்று எதிர்காலத்துக்குப் பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்தேன். அடுத்தடுத்த நாளில் மழையோ, பெரும் நுளம்புப்படையோ (கொசுவோ) வந்தால் இந்த இதமான சூழல் இருக்கப்போவதில்லை, இப்போது இந்தக் கணத்தில் இந்த இயற்கை என்னவாக அமைகின்றதோ அதை இரசிப்போமே என எண்ணத்தை நிதானமாக்கிக் கொள்ள முயற்சிப்பேன்.

இரவுகளில் ஒரு மணித்தியாலத் தியானத்தின்பின், ஒளிபரப்பாகும் கோயிங்காவின் உரைகள் அவ்வளவு நெகிழ்வாக இருக்கும். மூன்றாம் நாள் கண்ணீர் துளிர்க்க மனது மிக இலேசாவதை உணர்ந்தேன். கவனிக்க, அப்போது அசலான விபாஸனா தொடங்கியிருக்கவே இல்லை.

நாம் ஆனாபானா தியானத்தையே பழகிக் கொண்டிருந்தோம். நான் நெகிழ்வாக இருப்பதை என் உதவி ஆசிரியரிடம் சென்று, எந்தக் கேள்விகளையும் கேட்காது நான் மிக எடையற்று உணர்கின்றேன், அதற்கு நன்றியெனச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று உறங்கினேன்.

*

ஆஸ்மாவின் நிமித்தமோ அல்லது காலநிலைக் காரணமாக நான் கடந்தமாதங்களாக Hives ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இரவுகளில் தோலின் மீது வரும் ஒவ்வாமை மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். விபாஸனாவில் இருந்தபோது, ஒருவருக்கு மனவழுத்தம் வந்துவிட்டால், அதை ஓடிப்போய் விடு என்று சொல்லி அதனோடு சண்டை பிடிக்காமல், நானும் நீயும் ஒரேயிடத்தில் சச்சரவு செய்யாமல் நட்பாக இருந்தால் மனவழுத்ததோடு சேர்ந்து வாழத் தொடங்கிவிடலாம் என்பதுபோல, நான் Hives யோடு ஒரு சமரசத்துக்கு இந்தப் பொழுதுகளில் வந்துவிட்டிருந்தேன்.

எந்த மாத்திரையைப் போட்டாலும், நீ என் மேனி மீது கோலம் போடத்தான் செய்வாய், ஆனால் கோலத்தை எனக்கு காயப்படுத்தாமல்/ கடிக்காமல் போடு என்று அதனோடு சமாதானத்துக்கு வந்திருந்தேன்.

இப்படி உடன்படிக்கை வராது விட்டிருந்தால் என்னால் ஒழுங்காக கொஞ்ச நேரத்துக்கேனும் நித்திரை கொள்ளமுடியாது போயிருக்கும்.

விடிகாலை நான்கரை மணிக்கு தியானத்துக்குப் போகும் வழியில் நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவ்வளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் எனக்குப் பிடித்துப் போனது. ஆனாபானா தியானத்தின்போது உடலை அவ்வப்போது அசைத்துப் பார்க்க விட்டவர்கள், விபாஸனா தியானம் தொடங்கியவுடன் எங்களை அந்த ஒவ்வொரு மணித்தியாலமும் உடலை அசைக்காது, வெளியே போகாது அப்படியே சிலைபோல இருக்கவேண்டுமென உறுதிப்பாட்டை எடுக்கச் சொல்லியிருந்தனர்.

எனக்கு வலது முழங்காலை மடக்கி வைத்ததில் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அந்த வலியைத் தாண்டி உள்ளே மனதைக் குவிக்க முடிந்தது. வலி ஒரு பொருட்டன்று போல அது தன்பாட்டில்  குழந்தை போல கதறிக் கொண்டிருந்தது. அதற்கு கவனம் கொடுத்தால்தான் கூட வலிக்கும். ஆக அது குறித்து யோசிக்காது வலியை வலியாக மட்டும் கடந்து போகப் பழகியிருந்தேன்.

என்கின்றபோதும், நான் தியானத்தின்போது Posture ஐ மாற்றாதபோதும் என் முள்ளந்தண்டை அவ்வப்போது வெவ்வேறு கோணத்தில் மாற்றிக் கொள்ளச் செய்தேன். அதில் நான் மூன்று வெவ்வேறு நிலைகளில் என் முதுகைச் சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு கோணம் எல்லாவற்றையும் துறந்து refugee எடுப்பது. பிறகு முள்ளந்தண்டை நன்றாக நிமிர்த்துவேன்.

இப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு தியானம் செய்ததை அறியாத ஒரு வெள்ளைக்காரர் (எனக்குப் பின்னால் இருந்தவர்), இந்த விபாஸனா வகுப்புகள் முடிந்த பத்தாம் நாள் என்னிடம் வந்து, 'உன்னைப் பார்த்தால் நீ என் வயதொத்தவனாக இருப்பாய் போலத்தான் தெரிகின்றது. ஆனால் எப்படி 90 பாகையில் உன் முள்ளந்தண்டை நிமிர்த்தி வைத்திருந்தாய். எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. என்னால் அது முடியவில்லை' என்றார். 'இல்லையே நானும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன். சிலவேளைகளில் எங்களுக்குச் சிறுவயதிலே சப்பாணி கட்டி அமர்வது இலங்கையில் சொல்லித்தந்ததால் அப்படி இருந்து முதுகை நிமிர்த்தி வைப்பது எளிதாக இருந்திருக்கலாம்' எனச் சொல்லி நான் அவரை ஆறுதற்படுத்தினேன்.

இதற்கிடையில் எனக்குப் பின்னே இருந்த ஒருவர் தடிமனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு என் சுவாசத்தை விட அவர் 'ஜலதோசத்தோடு' சிரமப்பட்டு மூச்சு இழுப்பதுதான் தெள்ளியதாகக் கேட்டது. முதலில் இவரென் தியானத்தைக் குழப்புகின்றாரே என்று கொஞ்ச எரிச்சல் வந்தாலும், பிறகு அவரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அத்தோடு அவர் நல்ல ஆகிருதியான ஆள். அவரால் கால்களை மடக்கியெல்லாம் உட்கார முடியாது. தேவாலயத்தில் முட்டுக்கால் இட்டு நிற்பதுபோல அவர் முழங்காலில் நிற்க அவரின் மூச்சு என் முதுகோடு 'காதோடு தான் ஒரு கதை சொல்வேன்' போல உரசிக் கொண்டு போகும்.

அவருக்கு அதற்குப் பிறகு ஒருகட்டத்தில் இயலாது போய், ஏழோ எட்டாவது நாளோ முற்றாக விபாஸனாவிலிருந்து விலகி வீடு போயிருந்தார். அவரின் தடிமன் ஒருபக்கம் என்றால், எனக்கு வலதுபக்கம் இருந்தவருக்கு உலர் இருமல் வரத்தொடங்கிவிட்டது. அந்த உலர் இருமலோடு எனக்கு நன்கு பரிட்சயம் இருக்கின்றது. நான் இங்குள்ள ரெயினில் இப்படியான இருமலோடு வேலைக்குபோகும்போது மற்றவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்றெல்லாம் இரெயினில் இருந்து இறங்கி அது சரியாக வரும்வரை அடுத்த ஸ்டேசனில் இருந்து இருமலை சீராக்கி விட்டெல்லாம் போயிருக்கின்றேன். அதுவும் இங்கு இருக்கும் GO Train மேற்றளத்தில் எவரும் பேசாது அமைதியாக இருக்க வேண்டும். அப்படியான சூழலில் நான் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

தடிமன் ஆசாமியைப் போல, இருமல் ஆசாமியின் இருமலோடும் நான் நட்பு கொள்ளத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் இருமலைத் தாண்டி மனதை உள்ளே குவிக்கவும் பழகியிருந்தேன். இன்னொருபக்கம் ஆசிரியர் கோயிங்கா, எப்பொழுதும் எதிர்ச்சக்திகளை உருவாக்கிவிடாதீர்கள், பிறகு சம்ஷாராக்கள் உங்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு இருக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்.

நோய்த்தொற்றுள்ளவர்களை நேசிக்க முடிந்தாலும், பின்னே/பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நோயோடு சமர் செய்தபோது அடுத்து நோய்க் காவியாக நான்தான் ஆகப் போகின்றேனே என்ற பயம் வந்தது.
அப்படி வந்தால் நான் இருமியோ தும்மிக்கொண்டோ தியான மண்டபத்துக்கு வரப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. அப்படியாயின் என்னால் இந்த 10 நாள் விபாஸனாவை முழுதாகப் பூர்த்தி செய்யாமல் போய்விடுமே என்ற எண்ணமும் அவ்வப்போது தலைதூக்கியது.

*
இப்படியான 10 நாள் தியான வகுப்புக்களுக்கு, ஏற்கனவே தியானத்தைத் தெரிந்துகொண்டு போவது நல்லதா அல்லது Beginner's mind  போல ஒன்றையும் தெரியாமல் போவது அதிக பலனைத் தருமா என்ற கேள்வியொன்றும் எனக்குள் ஓடியது.  ஏனெனில் ஏற்கனவே கொஞ்சம் தியானம் செய்தும், நிறைய தியானம் குறித்து வாசித்தும் இருந்ததால் என் பகுத்தறிவு மனம் ஆசிரியர் கோயிங்கா சொல்லும் விடயங்களைத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

இது கூட பரவாயில்லை. நான் பதின்மங்களில் வாசித்த பாலகுமாரனின் தியான அனுபவங்களும் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பாலகுமாரன் விசிறி சாமியாரை (யோகி ராம்சுரத்குமார்) சந்தித்து அவரோடு பெற்ற தியான அனுபவங்களை ஒருவித மாயயதார்த்தபாணியில் எழுதியிருப்பார். விசிறி சாமியார் அதிர்வுகளை உருவாக்கி தனக்கு உடலுக்குள் அந்தச் சக்கரம் இந்தச் சக்கரம் சுழன்றது, நெற்றியில் நீலச்சுடர் தோன்றியது என்றெல்லாம் அவர் எழுதியதாக நினைவிருக்கிறது.

நானும் தியானத்தில் உடல் நோவு காணும்போது, இப்படியான நீலச்சுடர் நெற்றியில் சுடர்கின்றதா என்று கனவு காணத்தொடங்குவேன். ஒருநாள் உண்மையாகவே நடு முள்ளந்த்தண்டில் இருந்து ஏதோ ஒன்று ஊரத்தொடங்கியது. அது அப்படியே மேலே மேலே சென்று என் பிடறியை ஒட்டியது. அடடா இந்த ஏழாம் நாளிலே எனக்கு உடலில் சக்கரங்கள் எல்லாம் சுழலப்போகின்றதே என்று மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

முதலில் இப்படி ஊர்ந்துதான் சக்கரங்கள் ஏழும் மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தில் வரை சுழலப்போகின்றது என்று நினைக்க இந்த ஊர்தல் நிலை பின்னந்தலையில் போய் உச்சந்தலைக்குப் போகாது சட்டென்று தலையின் வலதுபக்கமாக திசை மாறத் தொடங்கியது.

அன்றாடத்தில்தான் நான் கோணல்காரன் என்றால், சக்கரங்களையும் கடவுள் திசைமாற்றி கோணலாக மாற்றிவிட்டாரோ என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லாவிட்டால் இந்தப் பரவச ஊர்தல் நிலை உச்சந்தலையில் அல்லவா போய் முடிந்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் யோசிக்கத்தான், வலதுபக்க தலையில் அதிகம் ஊர்வது, இது சக்கரத்திற்கான அறிகுறி அல்ல, ஒரு பூச்சி என்பது தெரிந்தது.

இந்த 'அற்புத நிலை' நிகழ்வதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்ந்து கொண்டிருந்தது. நான் வெளியே காயப்போட்டிருந்த என் உடுப்புகளை இந்தத் தொடர்ச்சியான மழையினால் வெளியிலே விட்டிருந்தேன். பிறகு வெயில் வந்தவுடன் அது நன்கு காய்ந்தவுடன் எடுத்துக் கொண்டு வந்து அணிந்திருந்தேன். அந்த இரண்டு நாட்களில் இந்த பூச்சிப்பிள்ளையார் என் ஆடைக்குள் புகுந்திருக்கின்றார். நான் ஒழுங்காய் உதறிப்போடாததால் என் தியான நேரத்தில் அவர் நான் காட்டுக்குள் உலாப்போவது போல உலாத்தத் தொடங்கியிருந்தார்.

கடைசியாக சுழலும் சக்கரத்தைத் தலையில் இருந்து தட்டி விழுத்தினேன்.

என் நண்பர்களுக்கு மட்டுமில்லை, புத்தருக்குக் கூட என்னை சக்கரங்கள் சுழல்வதாக கற்பனை செய்ய, கொஞ்ச நேரம் விடக் கூட மனம் வரவில்லையே என்று என் விதியை நொந்துகொண்டேன்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 04

Tuesday, September 01, 2026

 

விபாஸனா என்பது புத்தரால் அவரின் காலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் எப்படி புத்தம் இந்தியாவில் அதன் அடிச்சுவடுகள் இல்லாது அழிந்துபோனதோ, அவ்வாறே இந்த தியான முறையும் காணாமல் போயிருந்தது. புத்தரின் போதனைகள் அசல் வடிவத்தில் மியான்மார் (பர்மா), இலங்கை போன்ற இடங்களில் இருந்தாலும் விபாஸனா ஒரு 'மறைந்துபோன பிரதி'யாக காலத்தில் உறைந்து கிடந்திருக்கின்றது.


அதிஷ்டவசமாக மியான்மாரில் இந்தியாவில் இருந்து சென்று புத்தமும் விபாஸனாவும் அதன் அசல்தன்மையோடு ஒரு சிறுவட்டத்தில் தொடர்ச்சியாக காலம் காலமாக எடுத்து வரப்பட்டிருக்கின்றது. அப்படி விபாஸனா கற்பிக்க சிறுவட்டத்தில் இருந்த ஆசிரியரிடமிருந்து எமது விபாஸனா ஆசிரியர் கோயிங்கா தியானத்தைப் பழகியிருக்கின்றார்.




ஒவ்வொரு நாள் மாலையிலும் (ஏற்கனவே இப்படி 10 நாள் விபாஸனா வகுப்புக்களில் பதிவு செய்யப்பட்ட) கோயிங்காவின் தம்ம போதனைகள் நடக்கும். ஒருவகையில் இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள் என்பதற்கான விளக்கமும், நாளைய வகுப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியும் அதிகம் கோயிங்கா உரையாற்றுவார்.

திருப்பத் திரும்ப அவர் நமக்கு நினைவுபடுத்துவது, அனுபவ நிலையில் இந்த தியானத்தை உற்றுக் கவனியுங்கள். இது ஒரு 'அறிவுஜீவு கொண்டாட்டம்' இல்லை. மேலும் இந்த விபாஸனாவை ஒரு மதத்துக்குள்ளோ, ஒரு கல்ட்டுக்குள்ளோ அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால் அது ஒருபோதும் அசலான விபாஸனா இல்லை.

மனிதர்கள் துன்பத்துக்குள் உழல்வது எல்லோருக்கும் பொதுவான என்றால், அந்தத் துன்பத்தை விளங்கி வெளியே வர முயற்சிப்பதும் 'யூனிவர்சலாக' இருக்க முடியுமே தவிர அதையொரு வட்டத்துக்குள் அடக்கிச் சொல்லிக் கொடுத்தால், நீங்கள் ஒருபோதும் உங்கள் துயரங்களிலிருந்து விடுபடமுடியாது மட்டுமில்லை, இந்த விபாஸனாவால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்று தொடர்ச்சியாக தனது தம்ம உரைகளில் கோயிங்கா சொல்லிக் கொண்டே இருந்தார்.

*
விபாஸனா தியானம் பழகுவதற்கு சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவர் பரிநிர்வாணமடைய இப்படிப்பட்ட நிபந்தனைகள் தேவையா என்றால், அப்படி ஒரு கட்டாயமும் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்கள் தமது பழக்கப்பட்ட வட்டங்களில்  (habit patterns) இருந்து வெளியேறி விபாஸனாவுக்குள் நுழைவதற்கு சில முன்நிபந்தனைகள் அவசியம் என்று கோயிங்கா வலியுறுத்துகின்றார்.

அதில் முதலாவது புத்தர் கூறிய பஞ்ச சீலம்: கொல்லாமை, திருடாமை பிறரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமை, பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை போன்றவையாகும்.

நீங்கள் நுட்பமாக கவனித்தீர்கள் என்றால், அதற்காக சூழலைத்தான் எங்கள் அலைபேசிகளை அணைக்க வைத்து, எதையும் பேசாத மெளனத்துக்குள் அமிழ்த்தி, எமக்குரிய உணவைத் தந்து எம்மை விபாஸனாத் தியானத்துக்குள் இங்கே அழைத்துச் செல்கின்றார்கள் என்பது புரியும்.

ஒருவர் இந்த விபாஸனா நாட்களில் எதையும் பேசாமல் இருக்கும்போது, எப்படி பொய் பேச முடியும்? உங்களுக்கான உணவு வழங்கப்படும்போது நீங்கள் எப்படி கொல்லப் போகின்றீர்கள். உங்களுக்கான தனித்த அறைக்குள்ளும், பொது தியான மண்டபத்திலும் இருக்கும்போது எப்படி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடமுடியும்?

மேலும் எமக்கு தனிப்பட்ட அறைகள் தரப்பட்டாலும் அவை எதற்கும் திறப்புக்கள் இருப்பதில்லை. எப்போதும் எவரும் திறந்து நுழையமுடியும். அது நாம் பிறரின் பொருட்களை திருட  சந்தர்ப்பம் இருந்தாலும் திருடாதிருப்பதற்கு நம்மை நெறிப்படுத்துவது.

ஆக இவ்வாறாக சீலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றது. சீலத்தின் பின் சமாதி, அதன் தொடர்ச்சியில் பஞ்ஞ என்கின்ற விபாஸனாவின் ஆழ்நிலை சொல்லித் தரப்படுகின்றது.

கோயிங்காவின் சொற்களின்படி இந்த சீல, சமாதி எல்லாம் புத்தரின் காலத்துக்கு முன்னரே இருந்தன. புத்தரின் அசல் கண்டுபிடிப்பு என்றால் அது பஞ்ஞ மட்டுமே.

அதாவது பற்றறுத்தல் என்கின்ற ஆழ்நிலைக்குப் போவது அல்லது 'சம்ஹாரா' எனப்படுவதை அடிவேரிலிருந்து அகற்றுவது எனச் சொல்லலாம்.
இதை புத்தர் பிற உயிர்களுக்கு அளிக்கப்படாத மனிதவுடல் என்கின்ற அரிய சாதனத்தின் மூலம் கற்றுக்கொள்ளச் சொல்கின்றார் ((within frame work of body). அதாவது உடலின் உணர்வுகள் என்கின்ற தளத்தில் வைத்து நமது புதிய சம்ஹாரக்களையும், அடியில் புதையுண்டு கிடக்கும் சம்ஹாரக்களையும் முற்றாக இல்லாதொழிப்பது.

அனுபவத்தளத்தில் இவற்றைப் புரிந்து கொள்ளுதல் முக்கியமே தவிர  இப்படி அறிவுத்தளத்தில் விளங்கிக் கொண்டாலே நாம் விபாஸாவில் இருந்து வெளியேறிவிடுவோம் என்பதையும் கோயிங்காவும் எச்சரிக்கின்றார். ஆகவே இந்த விபாஸனா தியான விளக்கங்களில் இருந்து இப்போதைக்கு நாமும் விலகி விடுவோம்.

*

மதியம் பன்னிரண்டுக்குள் சாப்பிட்டதன் பின், என்னைப் போன்ற புதியவர்களுக்கு இரக்கப்பட்டுத்தான் என்னவோ மாலையில் தேநீரும், பழமும்  இங்கே தந்தார்கள். நீங்கள் விபாஸானாவுக்கு இரண்டாவது முறை வந்தால் அதுவும் இல்லை.  

எனது கடும்பயமாக இருந்த, இந்த மதியத்துக்குப் பிறகு எப்படி  இரவு உணவில்லாது மட்டுமில்லை,  இடையிடையில் கொறிக்கவும் எதுவும் இல்லாது எப்படி  இந்த நாட்களில் இருப்பேன் என்பதை  மிக எளிதில் இதன் பின்னரான நாட்களில் கடந்துவிட்டேன்.

அதற்கேற்றமாதிரி விபாஸனா நிகழ்ச்சிநிரல் இரவு 9 மணி வரை இருந்ததாலோ அல்லது வேறு எதனாலாவோ என்னால் பசியைப் பெரிதாக உணர முடியவில்லை. தொடக்க நாட்களில்  பின்னர் பசிக்குமே என்கின்ற பயத்தில் காலை, மதிய உணவுகளை அதிகம் எடுத்த நானே, பின் வந்த நாட்களில் கிட்டத்தட்ட அரைவாசி உணவு எடுக்குமளவுக்கு வந்திருந்தேன்.

மேலும் இந்த பத்து நாட்களில் உடலுக்கு பெரிதாக வேலையில்லை. மனது மட்டும் தீவிரமாக இயங்கியதால், இந்த உணவே போதும் போதுமென்ற அளவுக்கு திருப்தியாக இருந்தது. அதேவேளை குறைந்த தெரிவுகளாயினும் உணவை அப்படி இரசித்து உருசித்துச் சாப்பிட முடிந்தது. நாம் சாதாரண வாழ்வில் மூன்று நான்கு கறிகளுடன் சாப்பிடுவது என்பது ஒருவகை 'ஆடம்பரம் (luxury) போலவும் தோன்றச் செய்தது. இப்படியான எளிய உணவுடனும்  இனி வாழ முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்க்க இந்த விபாஸனா நாட்கள் கற்றுத் தந்திருந்தன.

***

(இன்னும் வரும்)