தனிமையின் நூறு ஆண்டுகள் - வெப் சீரிஸ்/சீஸன் 02
***
இத்தொடர் கிட்டத்தட்ட நாவலின்
முழுக்கதையையும் சொல்லி முடிப்பதாக அமைந்திருந்தாலும், Finale இம்மாத
முடிவில் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கின்றார்கள். அநேகமாக 3 எபிசோட்களாக
அது அமையலாம் என நினைக்கின்றேன். ஏனெனில் கதையின் நாயகி உர்சுலா
இறந்துவிட்டார். உர்சலாதான் கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை
முதுகெலும்பாக தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நாவலை வாசித்தவர்க்குத்
தெரிந்திருக்கும்.

இந்த
இரண்டாம் பகுதியில் இரட்டையர்களான அவுரேலியானோ செகுந்தோவினதும், ஹேசே
அர்க்காதியாவினதும் கதைகள் விரிவாகச் சொல்லப்படுகின்றது. இருவருமே இரண்டு
வேறுபட்ட வாழ்வைத் தெரிவு செய்கின்றார்கள்.
இதுவரை லிபரல்களாக மத நம்பிக்கை இல்லாது (கர்னல் அவுரேலியானோவின் யுத்தங்களே லிபரல்களுக்கும், மத நம்பிக்கையுடைய மிதவாதிகளுக்கும் இடையில் நடைபெற்றது என்பது நமக்குத் தெரியும்) தலைமுறை தலைமுறையாக இருந்த புயேந்தியா குடும்பத்துக்குள் முதன்முதலாக அவுரேலியானோ செகுந்தோவின் மனைவி பெர்னாண்டா மூலம் அனைத்துமே மாறுகின்றது. தீவிர மதப்பற்றுள்ள பெர்னாண்டாவினால் லிபரல் குடும்பத்தின் 'கட்டற்ற சுதந்திரம்' கட்டுப்படுத்தப்படுகின்றது/கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
என்கின்றபோதும் புயேந்தியாஸ்கள் தமது லிபரல்தன்மையை காலத்துக்காலம் தொடர்ச்சியாகக் கைவிடாது காவியபடி வந்தபடி இருக்கின்றார்கள். அதை ஆண்கள் மட்டுமில்லை பெண்களான அமரந்தாவும், அழகி ரெமிதியாஸும் கூட அந்தத் தன்மையை எவருக்கு முன்னும் விட்டுக் கொடுக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்.
மூதன்னை உர்சுலா மட்டும் மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவை விளங்கிக் கொள்கின்றார். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டென்பதை பெர்னாண்டா தனது மகளான மேமேயையும், மகனான அர்க்காதியோவையும் தீவிர மத நம்பிக்கையுள்ளவர்களாக வளர்க்கும்போது இடையீடு செய்வதில் நிரூபிக்கின்றார்.
மேமே கன்னியாஸ்திரியாகவும், ஹேசோ அர்க்காதியோ ஒரு இறையியலாளனாக வத்திக்கானில் கற்பவனாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை ஒரு தீவிர விசுவாசமிக்க கத்தோலிக்கர்களாக பெர்ணான்டாவால் ஒருபோதும் வளர்க்க முடியவில்லை.
அதேசமயம் தனது மகள் மேமே மத நம்பிக்கையை விட்டு விலத்தி ஒரு கறுப்பின இளைஞனோடு காதல் சரசம் செய்வதை பெர்ணான்டாவால் சகிக்க முடிந்ததில்லை. ஆகவே அந்த இளைஞனை ஒரு திருடன் போல ஆக்கி மகாந்தோவின் பொலிஸைக் கொண்டு கொன்றுவிடுகின்றார்.
அப்படி மேமேயின் காதலைக் கொன்றாலும், அதற்குள் அவர் அந்த கறுப்பின இளைஞனின் கருவை ஏற்றுக்கொள்கின்றார். மேமேயிற்குப் பிறப்பவனே இந்த நாவலின் கடைசித்தலைமுறையாகச் சொல்லப்படும் அவுரேலியானோ. ஆனால் அவன் ஒரு 'பாஸ்டர்ட்டாக' இருப்பதால் அவனுக்கு காலம் காலமாக வழங்கப்படும் புயேந்தியாஸின் குடும்பப் பெயர் கொடுக்கப்படுவதில்லை.
*
இரட்டையர்களில் ஒருவனான அவுரேலியானோ செகுந்தோ இப்படி தீவிர மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவின் காதலில் வீழ்ந்து தன் வாழ்வை சீரழித்து, குடும்பத்தின் தடுமாற்றங்களைப் பார்க்கின்ற ஒரு தோல்வியுள்ள இல்லறத்தவனாக இருக்கின்றான்.
அதேவேளை மற்ற இரட்டையரான ஹோசே அர்க்காதியோ, எதிர்காலத்தைக் கணிப்பிடாது வெள்ளையினத்தவர்க்கு தங்கள் வளமான வாழைமரத்தோட்டங்களைத் தாரை வார்த்து, பிறகு சக தொழிலாளர்களுடன் சேர்ந்து தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் ஓர் அவல வாழ்க்கையை வாழ்கின்றார்.
ஒருமுறை எதிர்ப்பு ஊர்வலத்துக்குப் போகும் தொழிலாளர்களைக் கலைந்து செல்ல பொலிஸும், வெள்ளையின முதலாளிகளும் கேட்க, அதை மறுப்பதால் துப்பாக்கிச் சூடு கொடூரமாக நடத்தப்பட்ட 3000 இற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டு ஒரேயிரவில் 'காணாமல்' ஆக்கப்படுகின்றார்கள். கொல்லப்பட்ட உடல்களாஇ அதேயிரவில் இரெயினில் நிரப்பி கடலில் கொட்டச்செல்லும்போது தற்செயலாக உயிர்தப்பி வந்த ஹோசே அர்க்காதியோ மனப்பிறழ்வுக்கு உள்ளாகின்றார்.
அதன்பிறகு புயேந்தியாஸின் வீட்டுக்குள் 'செத்துப்போனவனாக' தலைமறைவு வாழ்க்கையை காலம் முழுக்க வாழ்கின்றார். அந்த மனப்பிறழ்வோடு புயேந்தியாஸ்களின் கடந்தகாலத்தைப் பதிவு செய்தபடி தனி அறைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்.
இந்தச் சகோதரர்கள் இரட்டையர்களாகப் பிறந்தமாதிரி ஒரே நேரத்தில் இருவரும் இறந்தும் போய்விடுகின்றார்கள்.
*
எனக்கு இந்த இரண்டாம் ஸீஸனில் பிடித்தது அமரந்தா இறந்து போகின்ற நிதானமாகும். அமரந்தா ஓர் இரவில் நாளையுடன் தன் வாழ்வு முடியப்போகின்றது என்று குடும்பத்தினர் முன் அறிவிக்கின்றார். அமர்ந்தாவின் மரணத்தை மார்க்வெஸ் விபரிக்கும் முறை எனக்கு புத்தரை நினைவுபடுத்தியபடி இருந்தது. நிதானமாக தன் இறுதி நாளை அமரந்தா அறிவித்துவிட்டு உங்களுக்கு ஏற்கனவே இறந்தவர்க்கு செய்தி அறிவிக்கவேண்டுமெனில் என்னிடம் எழுதித் தாருங்கள் என்கின்றார்.
அடுத்தநாள் அமரந்தா மரணிப்பதை ஊரை கூடி வந்து பார்க்கின்றது. பலர் ஏற்கனவே இறந்துபோன தங்கள் உறவுகளுக்கான செய்திகளை அமரந்தாவிடம் கொடுக்கின்றனர். அமர்ந்தா நிதானமான சவப்பெட்டியில் ஏறியமர்கின்றார். அவரின் தாயாரான மூதன்னை உர்சுலா, அமர்ந்தா ஒரு கன்னி என்று அறிவிக்க அமர்ந்தா நிதானமாகக் கண்ணை மூடுகின்றார்.
அவ்வாறே அழகி ரெமேதியாஸின் மரணத்தை மார்க்குவெஸ் விபரித்ததும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ரெமேதியாஸின் பூவுலோக வாழ்வை அவ்வளவு பரிசுத்தமானது என்றால் அவளின் மரணமோ ஒரு தேவதைக்கு நேர்வதைப் போன்று நிகழ்கின்றது.
*
இதற்கிடையில் பல்வேறு கொலைமுயற்சிகள், தற்கொலை முயற்சிகளில் எல்லாம் இருந்து தப்பிய கர்னல் அவுரேலியாவும் இறுதியில் இறந்துபோகின்றார். ஆனால் அதற்கு முன்னர் அவருக்கு பல்வேறு பெண்களின் மூலம் பிறந்த 17 வளர்ந்த குழந்தைகளை அவருக்கு எதிரானவர்கள் மிக கச்சிதமாகத் திட்டம் போட்டு கொன்றுவிடுகின்றார்கள். ஒருகாலத்தில் வீரநாயகனாக லிபரல்களால் போற்றப்பட்ட கர்னல் இப்போது தோல்வியின் நாயகன். அவரால் மகோந்தாவில் நடக்கும் மாற்றங்களுக்கு எதிராக எந்தப் புரட்சியையும் அல்ல, ஒரு சொல் எதிர்த்துக் கூட கதைக்க முடியாது நிலை. அவரது மரணம் ஒரு கையறு நிலையைப் போல இறுதியில் நிகழ்ந்து விடுகின்றது.
நாவலை அதுவும் மிகச் சிறந்த நாவலை திரைத்தொடர் ஆக்குவது என்பது சிக்கல்கள் நிறைந்தது. அவ்வாறான முழுமையின்மைக்கு இடையிலும் இந்தத் திரைத்தொடரைப் பார்க்கும்தோறும் மீண்டும் மீண்டும் காபோ எழுத்துலகின் மாஸ்டர் தானென்பதை எனக்குள் நிரூபித்தபடி இருந்தார். இவ்வளவு விரிவான கற்பனையுடன் காபோ இதை எழுத எத்தனைபேரின் அகவுலகத்தில் அவர் நீத்திச் சென்றிருப்பார் என்பது எண்ணிப் பார்க்க பார்க்க மனம் சிலிர்த்தது.
இறுதியில் (இன்னும் சீரிஸில் வரவில்லை) எத்தனையோ தலைமுறைகளின் கனவுகளும், வெற்றிகளும், இரகசியங்களும், காதலும், துரோகங்களும், தோல்விகளும் இணைந்து எழுந்த மகோந்தாவும் புயேந்தியாஸுக்களும் எல்லோரின் நினைவுகளிலிருந்தும் என்றென்றைக்குமாக அழிந்து போகப் போகின்றார்களல்லவா?
'ஏனெனில் தனிமையின் நூறு ஆண்டுகளுக்காக என்று விதிக்கப்பட்ட வம்சங்களுக்குப் பூமியில் இரண்டாவது வாய்ப்பு கிடையாது.'
***

0 comments:
Post a Comment