கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நிலம் தாண்டி நீளும் மழை

Friday, June 10, 2016

 Maheshinte Prathikaaram & Charlie (மலையாளம்)

டந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். Netflixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லையென, 'How to be Single' என பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு 'Maheshinte Prathikaaram'ம் 'Charlie'யும் மிகுந்த குதூகலத்தைத் தந்திருந்தன. அந்தப் படங்களை பார்த்த நீட்சியில் 'கலை ஏன் நமக்குத் தேவை அல்லது எது கலையாகிறது' என ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி, இடைநடுவில் எழுதுவதை விட அனுபவங்களோடு கரைதலே இனிதென வாரவிறுதியைக் கடந்து வந்தாயிற்று.

தமிழ்நாட்டு நிலப்பரப்பும், மக்களும் தொலைவிலிருந்த எனக்கு நெருக்கமானதிற்கு முக்கிய காரணம், சிறுவயதுகளிலிருந்து வாசித்த கலை, இலக்கியப் படைப்புக்கள் எனச் சொல்வேன். ஆனால் எழுத்தினூடாக எனக்குள் கட்டியமைக்கப்பட்ட நிலவரைவியலை தமிழகத் திரைப்படங்கள் எதுவுமே நெருக்கமாக நின்று கற்பிக்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. தமிழ்த்திரைப்படங்களில் கற்பித நிலப்பரப்புக்களே (அது தவறில்லையெனினும்) பெரும்பான்மையென்றாலும் அவைகூட என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

ஆனால் மாறாக மொழியே பரிட்சயமில்லாத மலையாளத் திரைப்படங்கள் கேரளாவின் நிலப்பரப்புக்களை மிக விசாலமாகவும், ஆழமாகவும் எனக்குள் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்நாட்டிற்குள் பயணிப்பதைவிட நிலம்சார்ந்து பயணிக்க கேரளா என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.

Maheshinte Prathikaaramலும் Charlieயிலும் கதைகள் மிக எளிமையானவை. ஆனால் கேரளாவின் நிலப்பரப்புக்களினூடும் அவர்களின் கலை/ கலாசாரங்களின் ஊடும் அவர்கள் அதை நம்மைப் பாதிக்கும் வகையாகக் காட்சிப்படுத்துகின்றனர். சார்ளியில் முக்கிய இரண்டு பாத்திரங்களும் ஒருமுறையேனும் இறுதிவரை சந்திக்கமாட்டார்கள். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினூடாக தொய்வே ஏற்படாதமாதிரி கதையைக் கொண்டு சென்றிருப்பார்கள். துல்காருக்கு அவர் ஏற்கனவே நடித்த 'நீல ஆகாசம் பச்சைக்கடல் சுவர்ணபூமி' போல அலைகின்ற ஒருவனின் கதாபாத்திரந்தான் (இங்கே கேரளாவிற்குள் அலைகின்றார்). துல்காருக்கோ, பார்வதியிற்கோ உணர்ச்சிவசமான எந்த கடந்தகாலத்தையும் காட்டாமல் அலைகின்ற இருவர் என்கின்ற அலைவரிசையில் மட்டும் இணைவதைக் காட்டும் முறைகூட பிடித்திருந்தது.

Maheshinte Prathikaaram திரைப்படம் இன்னும் ஆழமாய் கேரளாவின் உட்கிராமங்களில் இறங்குகின்றது. சிறு ஊர்களிலிருந்து இருந்து பிறந்து வளர்ந்த நமக்குத் தெரியும், சிறுசிறு பிரச்சினைகளுக்கே உறவுகள்/நட்புகள் சண்டை பிடிப்பதும், பகைத்துக் கொள்வதும் பற்றி. இதில் ஊர்ச்சந்தியில் தற்செயலான நிகழும் ஒரு சண்டையைத் தடுக்கப்போகும் ஒருவன் இன்னொருவனால் அவமானப்படுத்துகின்றான். ஒரு அப்பாவியான அந்தப் பாத்திரம், எப்படி தன்னை அவமானப்படுத்தியவனை பழிவாங்குகின்றது என்பதையும் அந்தப் பழிவாங்குதல்வரை செருப்பைக் காலின் அணியமாட்டேன் என சூளுரைத்து செருப்புப் போடாமல் திரிவதுந்தான் முழுக்கதையும்.

துல்காருக்குள் இயல்பாகவே ஒரு துள்ளல் இருப்பதைப் போல, எனக்குப் பிடித்த பகத் ஃபாசிலுக்குள் எப்போதும் ஒரு தனிமை விரிந்துகொண்டிருக்கும் என எண்ணிக்கொள்பவன் நான். அவருடைய அநேக திரைப்படங்களில் எத்தகைய கதாபாத்திரமாய் இருந்தாலும், அந்தத் தனிமையை நாம் எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். இங்கே அவருக்கும் தந்தையிற்குமான அவ்வளவு பேசாத உறவு அந்தளவு இயல்பானது, அவரின் காதல் முறிவின்போது, 'நீ அவளை நிறைய நேசித்தாய் அல்லவா?' எனக் கேட்பது, ஊர் மக்கள் முன்னர் வேட்டி கழன்று விழ அடிவாங்க அவமானப்பட்டபின், 'அடித்தாயிற்று அல்லவா, இனி அவனை விட்டுவிடுங்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என தந்தையிற்கும் மகனுக்குமான ஒரு இடைவெளி இருந்தாலும் அதை மீறி உள்ளேயூறும் நேசம் அருமையாக வந்திருக்கும்.

இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிலப்பரப்பு, நாயகர்கள் என்பதற்கு அப்பால் பெண்களின் பாத்திரங்களும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைகள் ஆழமாக இல்லாவிட்டால் கூட, கதாபாத்திரங்களை வலுவாக்கிவிட்டால் ஒரு திரைப்படம் நம்மால் எளிதில் கடக்க முடியாதவையாக மாறிவிடுகின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
எது கலையாக மாறுகிறது அல்லது ஏன் கலை நமக்குத் தேவையாகிறது என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் சில புள்ளிகளை என்னளவில் விட்டுச் சென்றிருந்தன.

மகிழ்ச்சியான மனோநிலையின் தீற்றை ஏதோ ஒன்று உங்களில் பற்றவைத்துவிட்டால் அந்த நாள் இன்னும் அழகாவிடுகிறது. அந்தத் தருணங்களை உருவாக்கியவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். மழை பிறகு மனதிற்குள்ளும் பொழியத் தொடங்கிவிடும்.

(மே 19, 2016)

நேசம் பற்றிய ஏழு குறிப்புகள்

Wednesday, June 01, 2016

1.

நீ வாசித்துப் புரியா மொழியில் நமக்கான காதலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நமக்குப் பொதுவான மொழியில் எழுதினால்தான் என்ன என்கிறாய்.

தனித்திருந்து வாழ்வை, அதன் ஏகாந்தத்தை இரசிக்கத் தெரிந்தவனுக்கு, தன் காதல் உணர்வுகளையும் கட்டாயம் யாருக்கும் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. பிறரோடு பகிராமலே எத்தனை அழகிய காதல்கள் ஒவ்வொருவருக்குள்ளும் முகிழ்ந்திருக்கின்றன, பொழுதுகளைச் சிலிர்க்க வைத்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணங்களை வைத்திருப்பவன் நீ என்றாய்
எல்லாவற்றின் மீதும் விமர்சனங்களை வைத்திருக்கும் உன்னை நெருங்கவே முடியாது என்பதன் கடந்தகாலத்தின் எதிரொலியா இது- தெரியவில்லை.

அன்பே, ஒரு முத்தம் சொல்லித்தருவதை விட இந்த மொழி எதைத்தான் நமக்கு கற்பித்துவிடப்போகிறது?


02.

வசந்தகாலத்தின் வருகையை முதலில் தெரிவிப்பது அந்த மரந்தான். எல்லா மரங்களும் பசுமையைத் தேடியலைய, இது மட்டும் இலையெல்லாம் மஞ்சளாக விரித்து சிரிப்பதென்பது ஓர் அதிசயந்தான். இன்னொருபுறத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு குருவி சிறுகச்சிறுக கூடு கட்டிக்கொண்டிருக்கின்றது.

நேசமென்பதும் மழைபெய்ய பறவையொன்று சட்டென்று சிறகை விரியவும், சிலிர்க்கவும் செய்கின்ற ஒரு நிகழ்வு. அதன் வருகையிற்காக கடந்தகாலத்தில் பெற்ற எல்லாத் துயரங்களையும் மறந்துவிடலாம் போலிருக்கின்றது.
மண்ணிறக்காரியான நீ மென்மஞ்சள் ஆடையுடன் வந்தபோது மஞ்சளாய் இலைகள் விரித்த மரத்தையும், சாம்பல் நிறக்குருவியின் கழுத்து ஆரத்தையும் மீண்டும் நினைவுபடுத்தினாய்.

உன்னை அணைத்தலென்பது இயற்கையை ஆரத்தழுவலும் கூட.


03.

கடல் எப்போதும் தனக்குள் சிறகு முளைத்து பறக்கத்துடிக்கும் பல்வேறு கதைகளைப் பதுக்கி வைத்திருக்கின்றது. கரைதொடும் அலைகளை வாஞ்சையோடு வருடத் தெரிந்தவர்க்கு அது தன் கதைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக் காட்டுகின்றது. கடலோடு விடிகாலையில், வெயிலேறிய மதியத்தில், அந்தி சாயும் மாலையில், இருள்மூடிக்கிடக்கும் நள்ளிரவில் கலக்கத் தெரிந்தவர்க்கு - அது நகர்ந்து செல்கின்ற ஒரு போதிமரம்.

ஆதியிலே சொற்களில்லாத பெரும் மெளனம் இருந்தது. இரைந்து கொண்டிருக்கும் அலைகளுக்கிடையில் அமைதியைக் காண முடிந்தவர்க்கு, எட்டித் தொடுகின்ற தூரத்தில் ஒரு போதிசத்துவா காத்துக்கொண்டிருக்கின்றான்.

மனிதர்கள் நிழல்களைப் போல மறைந்துகொண்டிருக்கும் வாழ்வில் நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். நீரில் விழும் நிலவின் வர்ணத்தைக் கைகளில் பிடித்துவிட முடியுமென்று நம்பும் மழலையைப் போலத்தான் எல்லாப் பொழுதும் எதுவுமற்றுக் கரைகின்றனவோ?

கடக்கமுடியாத் தனிமையை இங்கேதான் கரைத்து மீளவும் எழுந்தேன் என கடலொன்றைக் காட்டிக்கொண்டிருக்கின்றேன். வெறுங்கால்களுடன் நடக்கும் எம் தடங்களை அலைகள் வந்து சுவடுகளின்றி அழித்தபடி போய்க்கொண்டிருக்கின்றன.

பூரணை நிலவு.

நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்களைப் பார்த்தபடி அழகிய நிலவை தவறவிட்ட கதைதானோ இதுவரை கடந்துவந்த வாழ்வு என நெஞ்சலறி அதிர்கின்றது. மனதின் தவிப்பு புரிந்தோ அல்லது புரியாமலோ என் விரல்களை இதமாய் கோர்த்துக்கொள்கின்றாய்.

அன்பே, நேற்று, நம்மிடையே கவிழ்ந்திருந்த பெரும் மெளனத்தினூடு நாம் இதுவரை கடக்காத்தூரங்களைப் பேசிக் கடந்தோம்.


04.

இலையுதிர்த்து உறங்குநிலைக்குப் போயிருந்த மரங்களிலெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மென்பச்சை துளிர்கள் தளிர்க்கத் தொடங்கிவிட்டன. இருக்கும் துண்டுநிலத்திலும் எதையாவது கட்டிவிடத்துடிக்கும் மனிதர்களின் பேராசையைப் பார்த்தபடியும் இன்னும் பச்சையம் இழக்காத இந்த மரங்கள்தான் எத்தகைய மகத்துவம் வாய்ந்தவை.

ஒவ்வொரு வருடமும் சொந்தமாக ஒரு சைக்கிளை வைத்திருக்கவேண்டும் என்கின்ற ஆசை இறுதியாய் நிறைவேறிவிட்டது. நமது சைக்கிள் சக்கரங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன, அதைவிட வேகமாய் 'விசையுறு பந்தினை'ப்போல மனம் விரைகின்றது. மேடும் பள்ளமான நிலங்கள் கடந்து, தான் தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த செடிகளின் பூக்களின் அழகில் கிறங்கி , வாவி நோக்கி பறக்கும் இரண்டு பறவைகளில் சிறகசைப்பை நிதானமாய் இரசித்து நீள உழக்கின்றோம் எமது சைக்கிள்களை.

இதுதான் நான் படித்த உயர்கல்லூரியென சூரியஒளி சுவர்களில் சிதறி மிதந்துகொண்டிருந்த ஒரு இடத்தைக் காட்டினாய். இங்கேதான் எனது முதல்காதல் முகிழ்ந்து இந்த இடத்தில்தான் எனது முதல் முத்தத்தைப் பெற்றேனென இரண்டு கட்டிடங்களுக்குள் இடையிலிருந்த பெருமரமொன்றைக் சுட்டினாய். எனது முதல் முத்தமும் மரத்தின் கீழேதான், ஆனால் கல்லூரியில் அல்ல, பூங்காவில் எனச் சொல்கிறேன்.

பூங்காக்களில் மறைந்துபோனவர்களின் ஞாபகமாய் மரங்களை நாட்டி பெயர்களைக் குறிப்பதுபோல, ஏன் நமது முத்தங்களின் நினைவுகளுக்கும் மரங்களை நடக்கூடாதென கேட்டேன். அவற்றுக்கு முத்தமரங்களென பெயர் சூட்டி, இங்கே முத்தமிடுவதற்கு மட்டுமே அனுமதியெனவும் எழுதி வைக்கலாமென சொல்லிச் சிரித்தாய் நீ .

அருகிலிருந்த DQ யில் வாங்கிய ஜஸ்கிறிமை பாடசாலை மைதானத்துப் பெஞ்சில் இருந்து குடித்துக்கொண்டிருந்தபோது, விளையாட்டுக்கள் மீதிருக்கும் பெருவிருப்பையும் எனக்குப் பிடித்த ஆட்டங்களையும் சொல்லிக்கொண்டிருந்தேன். வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்காத விளையாட்டுக்கள் மீதே உனக்கு ஈர்ப்பிருக்கிறதெனக் கூறினாய். எதை நோக்கியோ அல்லது ஒரு முடிவை நோக்கி விரைந்துசெல்வதே வாழ்விற்குரிய இலட்சியமாகவும், இலட்சணமாகவும் நிர்ணயிக்கப்படுகின்ற காலத்தில் விளையாட்டுக்களும் அதையே எல்லைகளாகக் கொண்டிருப்பதும் பெரிய விடயமில்லை என்றாய். தோற்பதில் எந்த அவமானமில்லையென்றும் தோற்பவராலேயே புதிதாய் நிறையக் கற்றுக்கொள்ளமுடியுமெனவும் முன்னெப்போதோ எழுதியது எனக்குள் மின்னிவிட்டு மறைந்தது.

ஏற்றம், இறக்கம், சமதரையென எல்லா நிலப்பரப்புக்களையும் சைக்கிளால் கடப்பதுபோல ஒருநாள் வாழ்வென்பதும் அனைத்துத் தருணங்களையும் கொண்டது. இதுதான் நல்லதென எந்த இடத்திலும் நின்றுவிடமுடியாது. ஒவ்வொரு புள்ளியையும் வாழ்வு உருண்டோடிக் கடந்துகொண்டேயிருக்கின்றது.

ஒவ்வொரு நேசிப்பின் பின்னால் வெறுப்பும், ஒவ்வொரு உறவின் பின்னால் பிரிவும் எப்போதும் மறைந்துகொண்டிருக்கின்றது என்று நன்கறிந்தபின்னும் ஏன் நாம் நேசிக்க விழைகின்றோம். நமக்குள் பெருகிக்கொண்டிருக்கும் அன்பினைப் பிறருக்கு பகிர்தலே அற்புதமென காதலிக்கும் நாம் ஏன் அதைக்கொண்டே பின்னர் இன்னொருவரை கட்டிப்போட முயல்கின்றோம்.

எனக்கு முன்னே கேசம் காற்றில் பறக்க, கழுத்தில் வியர்வை வழிய, ஒற்றைக் காற்கொலுசோடு சைக்கிள் ஓடிக்கொண்டு போகும் உன்னைவிட என் கேள்விகள் இன்னும் வேகமாய் விரைகின்றன.

என்னுடைய பலவீனங்களுடன், எழுத்தில் வைக்கின்ற வாழ்வுநிலைக்கு இன்னமும் போகவே முடியாத நான், உன்னை நேசிக்காமலே இருந்திருக்கலாமோ எனச் சந்தேகங்கள் காற்றில் அலையத் தொடங்க சோர்ந்து போகின்றேன்.

காதலென்பது எதன்பொருட்டும் சமரசம் செய்யாதது மட்டுமல்ல, சுதந்திரத்தின் சிறுநுனியையும் கருக்காமல் இருப்பதும் கூட. எப்போதேனும் ஒருநாள் நாங்கள் பிரிந்துபோனாலும் இதே காதலுடன் உன்னை அனுப்பிவைக்கும் மனம் வாய்க்க வேண்டும்.


05.

எப்போதும் தனிமையிற்குள் புதைய விரும்பும் நான், அந்த மாலையை விரும்பியே உருவாக்கினேன். வருவதற்கு நேரமாகும் என்ற நீ சொன்னபோதும், காத்திருக்கின்றேன் என புத்தகத்தை விரித்து வைத்திருந்தேன்.

இம்முறை செல்லுமிடத்தை என்னைத் தீர்மானிக்கச் சொன்னாய். நாங்கள் அந்த pubற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது மாலைச்சூரியன் உன் பொன்முடிகளில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. மெல்லிருள் சூழ்ந்த மெல்லிசை கசிந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றோம். உனக்குப் பிடித்தமானது ஷெர்ரி மிதக்கும் cocktails என்றாலும் இன்றென் தேர்வென்பதால் பெருங்குவளை நிரம்ப பியருக்கு ஓடர் கொடுத்தோம்.

உன்னோடு மட்டுமின்றி பிறரோடும் ஒரு எல்லைக்கு மீறி எதுவும் தொடர்ந்து கதைக்கமுடியாது வந்துவிடும் அலுப்பு இன்றும் எட்டிப் பார்த்துவிடுமோ பயந்துகொண்டிருந்தேன். இப்படி எங்கையோ தொலைந்துவிடுவது என் இயல்பே தவிர, அது எதிரே இருப்பவரின் தவறுகளல்ல.

எமக்குத் தரப்பட்ட குவளைகளில் 'அலெக்ஸாண்டரை' நிரப்பிக்கொள்கின்றோம். மிதமாகப் பொரிக்கப்பட்ட இறால் துணைக்கு வந்து நிற்கின்றன. ஜோர்ஜ் எஸ்ராவின Budapest பாடலின்
"Give me one good reason/ Why I should never make a change/Baby if you hold me/Then all of this will go away" வரிகளில் நின்று நிதானித்து மீள்கின்றேன்.

பெற்றோர் இன்னொரு நாட்டிலிருக்க பதின்மத்தில் இந்நாடு ஏகியவள். இங்கே வந்த தொடக்கத்தில் நெருக்கமாயிருந்த தோழியொருத்தியை நெடுங்காலத்தின் பின் விலத்தவேண்டிய ஊடலைச் சொல்லிக்கொண்டிருந்தாய். நட்பென்பது அவ்வப்போது அடிபடுவதும் பிறகு அரவணைத்துக்கொள்வதுந்தானே. ஆனால் அதைச் சொல்லாது பியரை அவ்வப்போது நம் கிண்ணங்களில் நிரப்பியபடி பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மணித்தியாலங்கள் கழிவது தெரியாது நிறையக் கதைத்துக் கொண்டிருந்தோம். உணவருந்தி வெளியே வந்தபோது இரவு இன்னும் அழகாய்த் தெரிந்தது. பெருநகரத்தில் திசைகள் தொலைந்து சப்வேயைத் தேடி நடந்தபடியே இருந்தோம். ஆனால் அது அலுப்போ சோர்வோ தராத நடை.
சிலவேளை இந்தப் பொழுது இப்படியே கைநழுவிப்போய்விடக்கூடாது என்றுதான் திசைகளைத் தொலைத்தமாதிரி அலைந்து கொண்டிருந்தோமோ தெரியாது.

நீ இன்னும் அழகாய் இருப்பதாகவும், நான் இன்று நிறையச் சிரித்துக்கொண்டிருப்பதாகவும் இருவரும் மாறி மாறி நம்மைப் பாராட்டியும் கொண்டோம்.

என்றேனும் ஒருநாள் நெறியாள்கை செய்யும் என் நாடகத்திற்கு நீ கட்டாயம் வரவேண்டும் என அழைத்தேன். மொழி தெரியாவிட்டாலும் அரங்கிற்கு வந்து உன் ஆர்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்றாய்.

அன்றைய என் தனித்த சப்வே பயணம் எனக்கு வழமைபோலில்லாது இனிமையாய் இருந்தது. Broadway ஸ்ரேசனைக் கடக்கும்போது ரொறொண்டோவின் அழகை மறைக்கின்றதாய் எரிச்சல் தரும் நெடிதுயர்ந்த கட்டடங்கள் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

என்னிருக்கையிற்கு எதிரே முத்தமிட்டுக் கொண்டிருந்த இணையிற்கு, எப்போதாவது அரிதாய்த் தோன்றும் புன்னகையொன்றைப் பரிசளித்தேன்.

எவரது வெளியையும் எவரும் குறுக்கிடாத, எவர் மீது எவரும் சார்ந்திடாது, இது என்னவகையான உறவென்று தெரியா நேசம் இரவில் ஒரு மின்மினியைப் போல் இன்னமும் பறந்துகொண்டிருக்கின்றது.

இது போல ஒரு பொழுது இனி இப்படி வனப்பாய் அமையுமா தெரியாது. இதே அனுபவம் இன்னொருமுறை வாய்த்தால் இப்படி நிறைவாய் இருக்குமா என்றும் தெரியவில்லை.

நாங்கள் காதலர்களுமில்லை. நாம் காதலர்களாவதற்கான எந்தச் சிறு நிகழ்தகவும் ஒருபோதும் சாத்தியமுமில்லை.

காதலில் மட்டுந்தானா எல்லாம் தொலைந்து பறத்தல் சாத்தியம்?

இல்லை என்றது இந்த நாள் மற்றும் நீ.


06.

'எல்லாவற்றையும் பொதுவில் பகிரும் நீயேன் இதையும் பகிரக்கூடாது?'

'பகிர்வதில் எந்தப் பிரச்சினையுமே இல்லை. எனது விருப்பு மிக எளிதானது.'
'அப்படியெனில் சொல்லு...'

'எப்போதும் என் எல்லாப் பயணங்களிலும் உற்சாகமாய் வரக்கூடிய ஒரு சகபயணி. கொஞ்சம் தமிழ் வாசிக்கத் தெரிந்தால் நல்லது; மூக்குத்தி அணிய விருப்பமுடையவராய் இருப்பின் இன்னும் இனிது.'

'அவ்வளவுதானா?'

'இவ்வளவேதான்.'


07.

எப்போதாவது நின்று நிதானித்து உங்கள் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்திருக்கின்றீர்களா? எதிர்காலத்தை எட்டிப் பிடிக்கவே நேரமில்லாதபோது, நிகழ்காலமே நழுவிப்போய்க்கொண்டிருக்கும்போது கடந்தகாலந்தான் இப்போது முக்கியமென நீங்கள் முறைக்கவும் கூடும். மேலும் கடந்தகாலம் தேவையில்லாத நினைவுகளையெல்லாம் குப்பைகளாய்க் கூட்டிக்கொண்டுவந்துவிடுமென முணுமுணுப்பதையும் அலட்சியம் செய்துவிடமுடியாதுதான். ஆனால் ஏதாவது புகைப்படத்தையோ அல்லது ஏதேனும் ஒரு நினைவையோ தற்செயலாய்ச் சந்திக்கும்போது உங்களிடம் ஒரு புன்னகை மலர்வதை மறைக்கமாட்டீர்களல்லவா?

நான் புன்னகை மலரச்செய்யும் அந்தக் கணத்தைத்தான் உள்ளங்கையில் பொத்திவைத்தபடி உங்களைத் தொடர்ந்து உரையாடக் கேட்கின்றேன். அந்த அழகிய கடந்தகாலத்தின் தருணம் - உங்கள் வாழ்க்கை கடந்தகாலத்தில் வீணாகப் போகவில்லை என மெல்லியகுரலில் ஒரு பாடலாய் இசைப்பது கேட்கின்றதா? எதுவுமே இறந்தகாலத்தில் செய்யவில்லையென்ற அலுப்பை, இல்லை நிறையவே கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றேன் என இந்தப்பாடல் உள்ளத்தைப் பூரிக்கச் செய்கின்றதா? வாழ்க்கையில் சின்னச் சின்னத் தருணங்கள் முக்கியமானவையென மீண்டும் மீண்டும் கடந்தகாலம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றதல்லவா?

'நீ இந்த நள்ளிரவில் இன்னும் நித்திரைகொள்ளவில்லையா?'

'நானொரு ஆந்தை; ஆந்தைகள் ஆரவாரிப்பதற்கெனவே இரவுகள் வருகின்றன.'

'அப்படியா?'

'மிக மிக அமைதியான இரவில் மழைபொழிந்துகொண்டிருப்பதை மட்டுமின்றி அதனோடும் அதுவில்லாமலும் இருளில் கரையும் சிறிய சப்தங்களைக் கேட்பதும் எனக்கு மிகப்பிடித்தமானது.'

'நீ Paulo Coelhoவின் Alchemistல் வந்த protagonist ஐ எனக்கு நினைவுபடுத்துகின்றாய்'

'அந்த நூலைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். கதையும் ஒரளவிற்குத் தெரியும், ஆனால் வாசித்தில்லை.'

'அப்படியொருவனை என் வாழ்க்கையில் சந்திக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். உன்னைச் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.'

'நன்றி. நான் அந்தளவு மகிழ்ச்சிகொள்வதவற்கு உரித்தானவனல்ல. இயற்கையை, சிறுசத்தங்களை இரசிக்கும், ஆலங்கட்டி மழையில் மனமும் உடலும் நனைகின்ற ஆயிரக்கணக்கான தறிகெட்டதுகள் இன்னும் இந்த உலகில் இருக்கின்றன.'

நாட்கள்; வாரங்கள்: மாதங்கள்.

கதை; சிரிப்பு; பகிர்தல்கள் மற்றும் பகிரல்கள்.

யன்னலோரம், நீ தந்த ஐந்தூரியம் பூக்கத் தொடங்கிவிட்டன. சாப்பாட்டு மேசை மூங்கில் குருத்துக்களும் சிரிக்கின்றன. அணில்கள் அந்தப் பழைய பைன்மரத்திலேறி ஏறி குருவிகளைத் துரத்துகின்றன. சென்றமுறை காயப்பட்ட ரெட் ரொபினை கராஜிற்குள் தனிமையில் விட்டு பூனையிடம் பலிகொடுத்தமாதிரி இல்லாது இம்முறை இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

'நீ இப்பவாவது சொல்வாயென எதிர்பார்த்தேன்'

'என்ன?'

'இவ்வளவு காலமாய் கதைத்துக்கொண்டிருக்கின்றோமே?'

'நான் நெருக்கமாய்ப் பழகுபவர்கள் மிகக்குறைவு. அதிலும் அவர்களோடு நிறையப் பகிர்வதென்பது இன்னும் அரிது'

'அப்படியெனில் நான் அவர்களிலிருந்து வித்தியாசமானவள்.'

'நிச்சயமாக.. அதனால்தானே ஒருநாளின் சலிப்பிலிருந்து, துயரிலிருந்து, சட்டென்று புன்னகைக்க வைக்கும் தருணங்கள் வரை என எல்லாவற்றையும் உன்னோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.'

'எல்லாம் சரி. ஆனால் நீயின்னும் என்னிடம் அதை உரியமுறையில் கேட்கவில்லை.'

'எதை?'

'உண்மையிலே தெரியாதா?'

'சிலவேளைகளில் என்னால் உன் அலைவரிசையைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடிவதில்லை'

'Dont you ever think to propose me?'

'................'

மெளனம்...இடைவெளி.

பிடித்த விழிகளையே நேருக்குநேராயப் பார்க்கமுடியாத் தவிப்பு.

'ஒன்றுமே சொல்ல மாட்டாயா?'

'என்ன சொல்வதென்று தெரியவில்லை.'

மீண்டும் அமைதி.

சின்னச் சின்னச் சப்தங்கள் பிடிக்கும். ஆனால் இப்போதில்லை.

'உனக்கு மூக்குத்தி அணிபவர்களைத்தானே பிடிக்கும். அதுதான் என்னைப் பிடிக்கவில்லை.'

எழுந்து போகிறாய். இவ்வளவு காலமும் கதைத்ததைவிட இன்னும் நிறைய அந்த நேரத்தில் கதைக்கவிரும்பினேன். ஆனால் எதையும்  திரும்பிப் பேசாதது மட்டுமின்றி உன்னைப் போகவேண்டாமெனச் சொல்லவுமில்லை.

(நன்றி: ‘காலம்’ இதழ் 49, எப்ரல், 2016)

குவளைப்பூ குறிப்புகள்

Tuesday, May 10, 2016

The Purple Rose of Cairo

நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு அப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் பிடித்துவிடுகின்றது. அதற்காகவே மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் போய்ப் பார்க்கின்றீர்கள். திரையில் தோன்றும் அப்பாத்திரம் உங்கள் தீவிரத்தை உணர்ந்து ஒருநாள் திரையில் இருந்து வெளியே வந்து உங்களோடு உரையாடத் தொடங்கினால் எவ்வாறு இருக்கும்?

The Purple Rose of Cairoவில் ஒரு பெண்ணுக்காய் திரையிலிருந்து ஒரு பாத்திரம் நழுவி வருகின்றது. ஏற்கனவே திருமணமான பெண் என்றபோதும் அந்தப் பெண்ணை இந்தத் திரைப் பாத்திரம் நேசிக்கத் தொடங்குகின்றது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அடுத்த காட்சியிற்குப் போகமுடியாது தேங்கிவிடுகின்றது. பார்வையாளர்கள் குழம்புகின்றார்கள். திரையிற்குள் இருக்கும் மற்றப் பாத்திரங்கள் தங்களால், வெளியேறிச் சென்ற பாத்திரம் இல்லாது தொடர்ந்து நடிக்கமுடியாதென அப்படியே நின்று விடுகின்றார்கள்.
ஒரு நகரத்தில் இப்பாத்திரம் வெளியேறிவிட்டதை அறிந்ததும், இப்படம் திரையிடப்பட்ட மற்ற நகரங்கள் சிலதில் இருந்தும் இப்பாத்திரம் வெளியேறிவிடுகின்றது. இந்த விடயம், இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநனருக்கும் மிகச் சிக்கலை ஏற்படுத்துகின்றது. எனெனில் திரையிலிருந்து வெளியேறிய இப்பாத்திரம் யதார்த்ததில் என்ன செய்தாலும் - அது கொலையோ, திருட்டோ என்ன செய்தாலும்- இவர்களே அதற்கு முழுப் பொறுபேற்கவும் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட இப்பாத்திரத்தில் நடித்து மெருகேற்றிய நடிகருக்கு இது பெரும் பிரச்சினையாக மட்டுமில்லாது, அவரின் நடிப்புத் தொழிலையே தொடர்ந்து செய்யமுடியாது போய்விடுகின்றது. எனெனில் அவரைக் கொண்ட உருவாக்கிய பாத்திரம் வெளியேறியதால், இனி அவர் நடிக்கும் புதிய படங்களிலிருந்தும் அவரது பாத்திரங்கள் வெளியேறாது என்பதற்கும் எந்த உத்திரவாதம் இல்லை. நடிகரும் தயாரிப்பாளர்களும் வெளியேறிய பாத்திரத்தை மீண்டும் திரைக்குள் நுழைத்துவிட்டு, நட்டமேற்பட்டாலும் எல்லாத் திரையரங்குகளிலிருந்து திரைப்படத்தை நிறுத்தி முழுப் பிரிண்டையும் அடையாளமின்றி எரித்துவிடுவது என்று தீர்மானிக்கின்றார்கள்.

திரைப்பாத்திரம் வெளியேறிய நகருக்கு அப்பாத்திரத்தில் நடித்த அசல் நடிகர் போகின்றார். வெளியேறிய பாத்திரத்தைச் சந்தித்து மீண்டும் திரைக்குள் போகச் சொல்லி மன்றாடுகின்றார். திரைப்பாத்திரமோ நான் இப்பெண்ணின் மீது காதலில் இருக்கின்றேன் திரும்பமுடியாது என அடம்பிடிக்கின்றது. இதற்கிடையில் அசல் நடிகருக்கும் இந்தப் பெண் மீது காதல் வந்துவிடுகின்றது.

ஏற்கனவே திருமணமாகி உறவு சுமுகமில்லாது இருந்த பெண் 'சென்ற வாரம் வரை காதல் எதுவுமின்றி இருந்தேன், இப்போது ஒரேமாதிரியான இரண்டு பேரின் காதல்களில் எதைத் தேர்ந்தெடுப்பதெனக் குழம்புகின்றேன்' என்கின்றார்..இறுதியில் அந்தப் பாத்திரம் மீண்டும் திரைக்குள் போகின்றதா? இந்தப் பெண் எந்தக் காதலை/காதலனை தெரிவுசெய்கின்றார் என்பதோடு வாழ்வின் இருத்தல்/இருப்பு பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.

இது எண்பதுகளில் எடுக்கப்பட்ட வூடி அலனின் திரைப்படம். இவ்வாறு நடக்குமா/நடக்காதா என்ற கேள்வியே பார்வையாளருக்கு எழாதவண்ணம் மிக அருமையாக திரைக்கதை இப்படத்தில் கொண்டு செல்லப்படுகின்றது, அதேபோன்று நடிக்கும் நடிகர்களும் மிகத் திறமையாகச் செய்திருக்கின்றார்கள்.

ஒருவேளை திரையில் தோன்றும் நமக்குப் பிடித்த பாத்திரங்கள் நம்முடைய நிஜவாழ்விற்குள் வந்துவிட்டால் என்னவெல்லாம் நிகழுமென எண்ணிப்பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாய் அல்லவா இருக்கும்?

Borders

மாயா (M.I.A ) தனது Bordersஐ Apple Music ஊடாக வெளியிட்டாலும், சிலவேளை அதை எல்லோராலும் பார்க்க/கேட்க முடியாதென்பதால் யாரோ ஒருவரால் Youtubeல் பகிரப்பட்டிருக்கின்றது. விடீயோ வெளிவந்து மூன்றுநாட்களுக்குள் Youtubeலே கிட்டத்தட்ட 460,000 பார்வையாளர் பார்த்திருக்கின்றனர் என்றபோதும் அங்கே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்கள் அநேகம் மாயா மீதும் அகதிகள் மீதான பெரும் வெறுப்பில் எழுதப்பட்டிருக்கின்றன. அகதிகள் 'கரப்பான்பூச்சி'கள் என்பது தொடக்கம், மாயா 'அகதிகள்' என்ற லெபிளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்வரை எல்லாவிதமாகவும் காழ்ப்புணர்வில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டமாதிரி, மேற்குலகில் பலருக்கு அகதிகளாக வந்தவர்கள் தங்களுக்கு நிகராக வாழ்வதை அநேகபொழுதுகளில் ஏற்றுக்கொள்ள இலகுவாக இருப்பதில்லை. இந்தப் பாடல் வந்ததன் பிறகு மாயா, ஒரு நேர்காணலில் தனது மாமனார் பாலாவிற்கு நன்றி கூறியிருக்கின்றார். அவரின் உதவியில்லாவிட்டால் தான் இங்கிலாந்திற்கு வந்திருக்கமுடியாது என்கின்றார். இன்றைய வாழ்விற்கு அவரே முக்கிய காரணம் என தான் வந்த கதையை, உதவிய மனிதர்களை நன்றியுடன் அதில் நினைவுகூர்கின்றார். சிலவேளைகளில் மேற்குநாடுகளில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருப்பவர்களால் மட்டுமில்லை, முன்னொருகாலத்தில் 'அகதி'களாக வந்த பலருக்குக் கூட தங்கள் பழைய கதைகளை மறந்துவிட்டு புதிய அகதிகளை வெறுப்பதை ஒதுக்கிவைப்பதை அவதானிக்கமுடியும்.

தற்செயலாக எங்கோ ஒதுங்கியிருந்த 'அம்ருதா' வை இன்று கண்டடைந்தேன். 2010ல் அம்ருதாவில் 'மாயா' அல்பம் வந்தபோது எழுதிய பதிவு இது. அத்தோடு அவ்வளவு எளிதில் உட்பக்கங்களில் வர்ணப்பக்கங்கள் வராத 'அம்ருதா'வில் மாயாவின் வர்ணப்படமும் வெளிவந்திருக்கின்றது. இலக்கியச் சூழலில் ஒருகாலத்தில் பார்த்துப் பிரமித்தவர்கள் பலர் பின்னர் தடம்புரண்டபோது கோபத்தைவிட சலிப்பே வந்ததுண்டு. அவ்வாறான ஒரு சோர்வைத்தராத, மாயாவின் முதல் அல்பத்திலிருந்து, அவரது நேரடி இசை நிகழ்ச்சியைப் பார்த்ததிலிருந்து இற்றைவரை சரியான ஒருவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன் என்பது மாயாவின் 'எல்லைகளை'ப் பார்க்கும்போதும் அவரின் நேர்காணல்களைப் படிக்கும்போதும் உற்சாகம் வருகின்றது.
(Nov 28,2015)

Lean On

'Clouds of Sils Maria' வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, படத்தில் 'இழந்த அப்பாவித்தனத்தை இன்னொரு காலகட்டத்தில் மீளப்பெற முடியாது' என்று ஓரிடத்தில் வரும். அதுபோலவே, இசையிலும் இனி அசலான குரல்களைக் கேட்கமுடியாது போல தொழில்நுட்பம் ஒவ்வொரு குரல்களையும் கட்டுப்படுத்தவும், செதுக்கவும் தொடங்கி நீண்டகாலமாயிற்று இவ்வாறு 'செதுக்கப்பட்ட' குரலாயிருந்தாலும், இந்தப் பாடலை('Lean On') எப்ஃ எம்மில் கேட்டபோது பிடித்திருந்தது. எந்தப் பொழுதாயினும் தோளில் சாய்வதற்கு நமக்கெல்லாம் யாரோ தேவையாயிருக்கின்றார்கள் அல்லவா? 'எமக்கு வயதாகும்போது நாமென்ன செய்வோம்/ நாங்கள் அதே பழைய பாதைகளில் நடப்போமா/ நீ எனக்கு அருகாமையில் இருப்பாயா/ அலைகள் திரண்டு வரும்போது உறுதியாய் (எதிர்த்து) நிற்பாயா?' என்ற பாடல்வரிகளில் உருகாமல் இருக்க முடியுமா என்ன?

பிறகு பாடலை காணொளியாய்ப் பார்த்தபோதும் இந்தியாவில் பாடல் பாடமாக்கியது சற்று ஈர்த்திருந்தது. எனினும் திரும்பச் சில தடவைகள் பார்த்தபோது இன்னொரு கலாசாரத்தின் மீதான exploitation எல்லாவற்றையும் மீறி உறுத்தத்தொடங்கியது. வாழ்க்கையில் அப்பாவித்தனத்தோடு எல்லாவற்றையும் இரசிக்க முடிவது எத்தகை அற்புதமானது. ஆனால் நாமெல்லாம் அந்த அப்பாவித்தனத்தை மீளவும் பெறமுடியாத ஒரு காலகட்டத்திற்கல்லவா நகர்ந்துவிட்டோம்?
(Oct 03, 2015)

Inner flow (உள்ளோட்டம்)

Friday, May 06, 2016


'சென்ற வருடத்தின் தொடக்கத்தில் ஷங்கரின் (ஷங்கரராம சுப்பிரமணியன்) வீட்டுக்குப் போனபோது அன்பாய்க் கிடைத்தது Inner flow என்கின்ற இந்த நூல். ஓவியங்களும் கவிதைகளுமென மிக அருமையாக பாலாஜியால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. வாய்மொழி வழக்காக வந்துகொண்டிருந்த மகாபாரதக் கதை, 'சித்திரக் கத' வடிவில் மகாராஷ்டிரா, கர்னாடக எல்லைக் கிராமங்களில் இன்னொரு வடிவம் பெற்று கதையும் சித்திரமாகவும் காலங்காலமாய் வந்துகொண்டிருக்கின்றது என இந்நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகின்றது. இதன் இன்னொரு வடிவமாய் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாரதக் கூத்து நடைபெற்று வருதையும் நம்மில் பலர் அறிந்திருப்போம்.

'உள்ளோட்டம்' என்கின்ற இந்நூல் பாடல்களாகவும், இடைநடுவில் கதை சொல்லலாகவும் இருக்கின்ற பாரதக் கூத்தை வேறொருவகையில் இணைத்து பார்க்கின்ற முயற்சி. நாடோடிகளாய்த் திரிந்த தக்கார்ஸ் எப்படி சித்திரக்கத (சித்திரக்கதி)யை பல்வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்களோ அவ்வாறான ஒரு பரிசோதனைக் களனாக பாரதக் கூத்திலிருந்து பல்வேறு பகுதிகளை வரைந்து பார்த்தலே இந்தத் தொகுப்பின் நோக்கமென பாலாஜி குறிப்பிடுகின்றார்.

வெவ்வேறு விதமான ஆறு பெண்களும், ஒரு ஆணுமென ஏழு ஓவியர்கள் பாரதக் கதையிலிருந்து பல்வேறு சித்திரங்களை வரைந்திருக்கின்றார்கள். இந்த ஓவியங்களோடு ஒட்டியும் சிலவேளைகளில் தனித்துமாய் ஷங்கர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்.

வியங்களைப் பார்த்தும் கவிதைகளை வாசித்தும் போகும் எங்களை அவை இரண்டும் தங்களுக்குள் இணைத்தும் தனித்தும் விலத்தியும் பார்க்கச் செய்கின்றது. அதாவது இந்தக் கவிதையை இந்த ஓவியத்தோடு சேர்ந்து வாசிக்காதுவிட்டால் என்னமாதிரியான மனோநிலை இருந்திருக்கும்? அதேபோன்று கவிதை இல்லாது ஓவியத்தை மட்டும் பார்த்திருந்தால் என்னமாதிரியான உலகம் நமக்குள் விரிந்திருக்கும் என்பதே ஒரு சுவாரசியமான விளையாட்டாக எனக்கு இருந்தது.

கவிதைகளில் அநேகம் அருச்சுனன், அரவான், கர்ணன் பற்றியதாக இருக்கின்றது. எனக்கு மிகப்பிடித்த பகுதியாக அரவானின் கவிதைகள் வரும் பகுதி இருந்தது. முதற்கவிதையாக பாரதக் கதைகள் பற்றிய இந்நூலிற்கு ஏன் ஷங்கர் இராமனைப் பற்றிக் கவிதை எழுதினார் என்பது சற்று ஆச்சரியமாயிருக்கின்றது.

நேரடியாக தமிழகத்தில் நடக்கும் எந்தப் பாரதக் கூத்துக்களைப் பார்க்காததால் இந்தவகையான கூத்தில் இராமன் எங்கேனும் இடைவெட்டுகின்றாரா என்று தெரியவில்லை. ஓவியங்களோடு நிச்சயம் தொடர்புடையதாகத்தான் கவிதைகள் இருக்கத்தேவையில்லை என்று தெரிந்தாலும், நூல் தொடங்கும் முதல் ஓவியத்திலே இராமனை பற்றியொரு கவிதை வருவது துருத்திக்கொண்டு தொடர்பில்லாது அந்தரத்தில் நிற்பது போல எனக்குத் தோன்றியது.

அரவானைப் பலிக்குத் தயார் செய்கின்ற ஓவியத்திற்கு எழுதிய ஷங்கரின் கவிதை அருமையாக வந்திருக்கின்றது...

'தியாகிக்கு நிகழ்காலம் இல்லை
தியாகத்திற்கும் தான்
தியாகியின் மரணத்தின் பின்
உருவாகும்
சுதந்திரம்
அரசாட்சி
தேசம்
லட்சிய சமூகம்
எல்லாவற்றிலும் தியாகிக்கும் சிறுபங்குண்டு
ஆனால்
தியாகிகள் வனத்தின் நடுவில் சுடப்படுகின்றார்கள்
எரிந்து மாய்கின்றனர்
வரலாற்றுக்குத் தேவை
எப்போதும் என்போன்ற தியாகிகள்
நாங்கள் எதிர்காலத்தின் மீது
ஏக்கத்தோடு கண் வைத்திருப்பவர்கள்'

ன்னொரு ஓவியத்தில் துரியோதனன் போருக்குப் போக முன்னர் அதுநாள் வரை கண்களை மூடிவைத்திருந்த காந்தாரி கட்டுக்களை அவிழ்த்து துரியோதனை எவராலும் கொல்லமுடியாத சக்தியைக் கொடுக்கின்றார். உடலெங்கும் காந்தாரியின் சக்தி பரவ துரியோதனன் நிர்வாணமாக நிற்கின்றார். ஆனால் கிருஷ்ணர் தெரிந்தோ தெரியாதமாதிரி துரியோதனின் தொடையையும் ஆண்குறியையும் மறைக்கின்றமாதிரி ஒரு செடியைப் பிடித்தபடி இருக்கின்றார். பாரதத்தில் எளிதில் கொல்லப்படமுடியா துரியோதனை பீமன் கதாயுதத்தால் அடித்துக் கொல்வது தொடைப்பகுதி என்பதை பாரதம் வாசித்த நாமனைவரும் அறிந்திருப்போம் அல்லவா?

இந்த ஓவியத்திற்கு அழகாக வந்து விழுகின்றது ஷங்கரின் வார்த்தைகளும்...

'அம்மாவுக்கு
முன்னால் நிர்வாணம் காண்பிக்க
உனக்கு என்ன வெட்கம்...
இலைகொண்டு
பூ கொண்டு
அவளிடம் மறைக்க முடியக்கூடியதா
பிள்ளையின் நிர்வாணம்
நீ சிசுவாக வாழைப்பழம் போல
அவளிடம் தானே இருந்தாய்
ஞாபகம் இல்லையா
நீயும் உண்டாயா
அந்த விலக்கப்பட்ட கனியை?'

பாரத ஓவியமொன்றிலிருந்து நிகழ்கால மனிதனின் கதை விரிகின்றது. ஆனால் இறுதியில் இன்னொரு ஆதிக்கதையான பைபிளில் போய் நின்று நீயும் விலத்தப்பட்ட கனியை நீயும் உண்டாயா? என்கின்றது. வெவ்வேறு உலகங்களுக்கு அந்தரத்தில் மிதந்து நம்மை காலமற்ற காலத்திற்குள் கவிதையும் ஓவியமும் இழுத்துச் செல்கின்றது.

கிட்டத்தட்ட 50 அருமையான வர்ண ஓவியங்களுடனும் கவிதைகளுடனும் ஒருவகையான சித்திரக் கத வடிவில் வந்த இந்நூல் மிக முக்கியமான முயற்சியாகும். செவ்வியலும் நவீனமும் ஒன்றையொன்று இடைவெட்டும்/ஊடுபாவும் ஒரு புள்ளியில் எங்களை நிறுத்திவைக்கும் இந்த 'உள்ளோட்டம்' இன்னும் பரவலாக அவசியம் பேசவேண்டியதொன்றாகும்.

மரங்கள்...மழைக்காடுகள்

Thursday, May 05, 2016

இந்த வாரவிறுதியில் 'மரங்களை நட்டவன்' மற்றும் 'மழைக்காடுகளின் மரணம்' என்கின்ற இரு சிறு நூற்களை வாசிக்க முடித்தது. இரண்டையும் 'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்டிருக்கின்றார்கள். 'சிறியதே அழகு' என்ற பெயரின் கீழ் இந்த நூற்களை வெளியிடப்பட்டதோடல்லாது, சூழலியலுக்கு சிநேகபூர்வமாக மண்ணிறத்தாளில் முகப்பிருப்பதும் பிடித்திருந்தது.

'மரங்களை நட்டவன்' என்பது ழான் ழியோனா எழுதிய ஒரு புனைவின் தமிழாக்கம். அல்பஸ் மலையடிவாரத்தில் தனித்து வாழும் ஒரு மனிதன் எப்படி தசாப்தகாலங்களாய் மரங்களை நட்டு ஒரு பெருங்காட்டை உருவாக்குகின்றான் என்பதே ழானின் கதை. இந்தப் புனைவை, கட்டுரை ஒன்று எழுதித்தரச்சொல்லிய ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கே ழான் அனுப்புகின்றார். முதலில் வியந்து அந்தக் அதைப் பிரசுரக்க ஏற்றுக்கொள்ளும் சஞ்சிகை, பிறகு அப்படியொரு மனிதர் அல்பஸ் மலையடிவாரத்தில் வாழ்ந்ததில்லையென நிராகரிக்கின்றது.  ழானோ 'கற்பனைப் பாத்திரங்களைப் படைப்பது எழுத்தாளனின் சுதந்திரம், அவனிடம், "நீ சந்தித்தவர்களில் மிகவும் வியக்கத்தக்கவர் யார்?" என வினாவினால் அவன் நிச்சயம் தன் கற்பனையில் சந்தித்த ஒருவரைப் பற்றியே பேசவேண்டியிருக்கும்' என்கின்றார்.

ஒரு காட்டை உருவாக்கியவன் இதில் புனைவாக இருந்தாலும், நாமறிய எத்தனையோ மனிதர்கள் மரங்களை நட்டு காட்டை உருவாக்கியதை அறிவோம். நிஜத்தில் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய விபரங்களை ழானின் கதையின் பின்பாக இந்த நூலில் இரா.கிருஷ்ணமூர்த்தியால் தரப்பட்டிருக்கின்றது. அண்மையில் கூட இந்தியாவில் வடக்கிலிருக்கும் ஒரு தீவில் ஒரு மனிதர் (Jadav Payeng) எப்படி பெருங்காட்டை உருவாக்கினார் என்பதை வாசித்து இங்கே பகிர்ந்திருக்கின்றேன். சென்ற வாரம் கூட, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பெண்பிள்ளைகள் பிறந்தால் நூறு மரங்களை நடுவதும் அதைக் கவனமாய்ப் பராமரிப்பதுமான வழக்கம் இருக்கிறதையும் கூட வாசித்திருக்கின்றேன். ழானின் இந்த நூலை, ஒரு புனைவென்றே அறியமுடியாது, வருடங்கள் குறிப்பிடப்பட்டும், மரங்களை நடும் மனிதர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஊகிக்க முடியாவண்ணம் எழுதிச் செல்கின்றார்.

'மழைக்காடுகளின் மரணம்' என்பது நக்கீரன் அவர் பணி நிமித்தம் சென்ற தென்கிழக்காசியாவின் போர்னியோ காடுகள் பற்றியது. இன்றைக்கு ஏறக்குறைய அந்த காடுகளில் அரைவாசிப்பரப்பு அழிக்கப்பட்டுவிட்டது. காடுகளிற்குள் வேலை செய்யப் பிரியத்துடன் செல்லும் ஒருவர், அங்கே அவர் பணிபுரியும் நிறுவனமே காடுகளை அழித்து மரங்களை வெளியுலகிற்கு அனுப்புகின்றபோது அவருக்கு மனம் கசந்து போகின்றது. மரங்களை வெட்ட கனரக இயந்திரங்களும், புல்டோசர்களும் வந்து இறங்கி அடர் இருமையானதும், குளுமையானதுமான காடுகளை அழிக்கும்போது உள்ளே புகும் சூரிய ஒளி கூட மிகப்பெரும் வெறுமையைக் கொடுத்ததாக தன் அனுபவங்களினூடு நக்கீரன் எழுதுகின்றார்.

பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் மிகப்பெரும் சொத்தான காடுகளை எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் உலகவங்கிகள் மூலம் அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை வழங்கி, காடுகளையும் இன்னபிற வளங்களை அழிக்கவும் சுவீகரிக்கவும் செய்கின்றது என்பது மிக எளிமையாக இந்த நூலில் விபரிக்கப்படுகின்றது. காடுகளை அழிப்பதால் வரும் 'இலாபத்தை' விட காடுகளை அப்படியே பராமரிப்பதால் வரும் 'இலாபம்' எத்தனையோ வீதம் அதிகம் என்றபோதும், பெருநிறுவனங்கள் எப்படி குறுகிய காலத்தில் மிகப்பெரும் செல்வத்தைப் பெறுவதென்ற போட்டியில் மழைக்காடுகளை அழித்துவருகின்றன என்பதை இதை வாசிக்கும்போது விரிவாக அறியமுடியும்.

காடுகளை அழித்து, மீள்காடு செய்தல் என்பது ஒருவகையான சுத்துமாத்து என்பதையும் மேலும் பெருங்காடுகளை அழித்துவிட்டு இடையிடையே சிறுகாடுகளை அரசாங்கங்கள் பாதுகாப்பான வலயங்களாய் பராமரிப்பதால் அவ்வளவு பெரிய பலன்கள் கிடைக்கப்போவதில்லை என்பதையும் இந்நூல் சுட்டுகிறது. எவ்வாறு காடுகளுக்கிடையில் இருக்கும் உயிரிகளின் நகர்வுகளும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது.

சனத்தொகை பெருகும்போது, எந்தவகையில் காடுகளைத் தக்கவைப்பது என்ற சிக்கலான பக்கத்தை இந்நூல் தொட்டுவிடவில்லை என்பது ஒரு சிறுகுறையாகவே இருக்கிறது. மனிதர்கள் தமது ஆசைகளை எளிதாக்கிக்கொள்ளும்போதும், இன்னுமின்னும் இலாபம் வேண்டும் என்று பெருநிறுவனங்கள் தங்கள் அசுரப்பசியை குறைக்கும்போதும், நாம் இயற்கையை அதிகம் சுரண்டாமல் இருக்க முடியும் என்பது ஒரு எளியவழி.

இவ்விரு நூற்களும் சிறியதாக இருந்தாலும், வாசிப்பவர்க்கு மரங்களின் மீது காதலை வரச்செய்யவும், மரமொன்று தறிக்கப்படும்போது சற்றுக் கவலைப்படவும் செய்கின்ற மனதை தரவும்கூடும்.

(Feb 08, 2016)

சி.மோகன்

Wednesday, May 04, 2016

மோகன் எனக்கு அவரின் 'புனைகளம்' இதழ்களினூடாகத்தான்  முதன்முதலாக அறிமுகமாகியிருக்கவேண்டும் என நினைக்கின்றேன். 2002ல் இலண்டன் போயிருந்தபோது சபேசனின் வீட்டில் புனைகளம் இதழ்களை முதன்முதலாக வாசித்திருக்கின்றேன். அதன்  நேர்த்தியான வடிவமைப்பும், நாட்டார் கலைகளுக்காய் அதிக பக்கங்களை ஒதுக்கியிருந்ததும் என்னை சடுதியாகவே இழுத்துக்கொண்டது. அப்போதுதான் ஒரளவு தீவிரமான வாசிப்பு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மாணவபருவம். சிற்றிதழ்களுக்குரிய மொழிக்குள் நுழைய எனக்குச் சற்று சிக்கலாயிருந்தாலும், புனைகளம் எனக்குள் ஒரு புதிய வெளியைத் திறந்திருக்கின்றதென இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. நாட்டார் மற்றும் நுண் கலைகளுக்காய் தன்னை அர்ப்பணிந்திருந்த 'புனைகளம்' இதழ் ஏதோ ஒன்றில்தான் அ.மார்க்ஸ்(?) எழுதிய நாட்டார்கலைகளோடு பின்னிப்பிணைந்திருக்கும் சாதி பற்றியும் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டும் என எச்சரித்த கட்டுரையையும் வாசித்ததாகவே நினைவு. 

பின்னர் மோகன் ஒருகாலத்தில் 'தீராநதி'யின் கடைசிப்பக்கங்களில் நுண்கலைகளை அறிமுகஞ்செய்யும் பத்தியை ஆர்வமாய் வாசித்தது வந்ததும் நினைவிலிருக்கின்றது. இப்போது 'ஓநாய் குலச்சின்னம்' மொழியாக்கம் என் வசத்து இருக்கின்றது. இன்னமும் 'விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' நாவல் கையில் கிடைக்கவில்லையெனினும் விரைவில் வாசிக்கவேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது.

மோகன் தமிழ்ச்சூழலில் தேடித்தேடி அறிமுகப்படுத்திய விடயங்களுக்காய், நாம் அவர் இருப்பை அங்கீகரித்திருக்கின்றோமா என்று இப்போதும் எனக்குள் கேள்வி இருக்கின்றது. மோகனின் தேடலில்லாவிட்டால் இன்றுகூட ப.சிங்காரத்தை கண்டுபிடித்திருப்போமா என்று தெரியவில்லை. ஜி.நாகராஜனோடு இறுதிக்காலத்தில் நெருக்கமாய் இருந்து, ஜி.ரா பற்றி மோகன் எழுதிய பதிவை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது    இப்போது புனைவாய் எழுதிய ''விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' கூட கலைகளில் மீது பித்துபிடித்து தன்னை உருவழித்து நம் சூழலில் அவ்வளவு கவனிக்கப்படாதிருந்த ஓவியரான ராமானுஜத்தைப் பற்றிய கதையல்லவா?

இவ்வாறு நாம் கண்டுகொள்ளாது எளிதாய் மூடிமறைக்கப்பட்டவர்களையும், கலைகளின் மீது பித்துப்பிடித்தலைபவர்களையும் தேடித்தேடி மோகன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றார். இத்தகைய எழுத்தாளர்கள், ஓவியர்கள் நம்மிடையே வாழ்ந்தார்களா என ஒருவகையில் வியப்பையும் இன்னொருபுறத்தில் அவர்களைக் கவனிக்கத்தவறிய நம்மை வெட்கிக்கவும் செய்கின்றார்.

ராமானுஜம் பற்றிய சிறப்புரையை வழங்க வந்திருந்த மோகனைச் சந்தித்தபோது ஒரு நண்பர் என்னிடம், எத்தனையோ பேருக்கு இயல்விருது வழங்கும்போது ஏன் மோகனுக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை எனக் கேட்டார். நான் இயல்விருதை பிரதிநிலைப்படுத்துபவன் என்றில்லாவிட்டாலும் கனடாவிலிருந்து வந்தவன் என்பதால் அவர் என்னிடம் கேட்டிருக்கலாம். மோகனை நன்கறிந்த 'காலம்' செல்வம் போன்றவர்கள் இயல்விருதுக் குழுவில் இருக்கின்றனர்,இதைக் கவனித்திருக்கலாம் என நாங்களிருவரும் ஒருவகையான சோர்வுடன் தொடர்ந்து பேசியதாய் நினைவிருக்கிறது.

'விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரத்தில்' ஓரிடத்தில் 'நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது' என ஓவியர் ராமனைப் பற்றி பணிக்கர் கூறுவதாய் வரும்.

அதையேதான் நானும் மோகனுக்குப் பொருத்திப் பார்க்கின்றேன். தங்களை தாங்கள் ஒன்றித்துப் போகும் கலைகளுக்காய் அர்ப்பணித்துப் போகின்றவர்கள், பொருளாதார வசதி குறித்தோ, தங்களை முன்னிறுத்தும் அரசியல்பற்றியோ அவ்வளவு யோசிப்பதில்லை.

ஆகவேதான் மோகன் என்னை இன்னுமின்னும்  வசீகரிப்பவராக இருக்கின்றார்.

(June 26, 2015)

கே.ராமானுஜமும், வான்கோவும்....

Thursday, April 28, 2016

சென்ற வருடம் சென்னையில் நின்றபோது 'ஆதிமூலம்' நினைவாக நடந்த நிகழ்விற்கு 'ஸ்பேசஸிற்கு'ப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே சி.மோகன் ஓவியர் கே.ராமானுஜம் பற்றி ஒரு நினைவு உரையை 'Mapping Mind and Matter' என்ற தலைப்பில் ஆற்றியிருந்தார். அத்துடன் ராமானுஜடன் படித்த/தெரிந்த பல ஓவியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்வில் நடேஷ், தட்சிணாமூர்த்தி, டக்ளஸ், ட்ராஸ்கி மருது போன்றவர்களை கண்ட உற்சாகத்திலும், அலைகள் தழுவி வந்த இதமான இரவுக்காற்றாலும் முழுதாக அமிழ்ந்து சி.மோகனின் உரையைக் கேட்கமுடியவில்லை. நல்லவேளையாக, அந்த உரையை சிறுபுத்தகமாகவும் நிகழ்விற்கு வந்தவர்களுக்கு அச்சிட்டுத் தந்திருந்தார்கள். இப்போது ஆறுதலாக வாசிக்க, எனக்கு ஒரளவு தெரிந்த ராமானுஜம் இன்னும் நெருக்கமாகிப்போகின்றார்.
ராமானுஜத்திற்கும் வான்கோவிற்கும் இடையிலான ஒற்றுமைகளே எனக்குள் விரியத்தொடங்கின. வான்கோ போலவே ராமானுஜமும் மனப்பிளவிற்குள் ஆளானவர். வான்கோ போலவே ராமானுஜத்திற்கும் பாடசாலைப் படிப்பு பிடித்ததில்லை. ராமானுஜம் இடை நடுவில் பாடசாலையிலிருந்து விலகி ஓவியக்கல்லூரியில் சேர்கின்றார். தனித்தும், அதிகம் பேசாதவராகவும் ராமானுஜம் இருந்திருக்கின்றார். வான்கோவிற்கு தியோ இருந்ததுமாதிரி, ராமானுஜத்தின் திறமையைக் கண்டுபிடித்தவர் கே.பணிக்கர். ஆகவேதான் வீட்டால் புறக்கணிக்கப்பட்டு தெருக்களில் ஓரிடமில்லாது அலைந்து திரிந்த ராமானுஜத்தை, பணிக்கர் சோழமண்டலத்திற்குள் இருத்துகின்றார்.

வியம் வரைவதே அக/புற உலகினுள் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழியாக இருவருக்கும் இருந்திருக்கின்றது. வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் 'வான்கோ மியூசியத்தில்' நேரடியாகப் பார்த்தபோது பல விடயங்களை வான்கோவின் ஓவியங்களுக்கு அப்பால் அறிய முடிந்திருந்தது, வான்கோ தான் வரையும் ஓவியங்களை வீட்டின் முன்னால் பிறருக்கு காட்சியிற்கு வைப்பதைப் போல, ராமானுஜமும் ஓவியக்கல்லூரியில் தன் அறையின் முன் வைத்திருக்கின்றார். அவ்வப்போது வரைந்த ஓவியங்களை உணவு போன்ற நாளாந்த விடயங்களை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்து தம் தேவைகளை இருவரும் நிறைவேற்றியுமிருக்கின்றார்கள்.

அதேபோல வான்கோ தான் வரையும் தாள்களை ஒரளவு ஈரமாக்கி வரைவது போலவே, ராமானுஜமும் தாள்களை ஈரமாக்கி காயமாக்கி பிறகு மெல்லிய ஈரத்துடன் தன் ஓவியங்களை வரைந்திருக்கின்றார். இருவரும் மனிதவுருவங்களை வரைவதிலும் ஆர்வமாய் இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் உருவாக்கிய ஓவியங்கள் பல கனவுநிலையில் இருப்பவை. சிலவேளைகளில் சாதாரண மனிதமனங்களால் அவர்களின் எல்லைக்கு சிறகடித்துப் பறக்கமுடிவதும் அவ்வளவு எளிதாக இருக்காது. அதேபோல இருவருக்குள்ளும் பெண் பற்றிய ஏக்கம் ஆழமாகவும், அதேவேளை அந்த நெருக்கம் அவ்வளவு கிடைக்காதும் தவிர்த்தவர்கள்.

இன்று பல லட்சங்கள் மதிப்பிருக்கும் ராமானுஜத்தின் ஓவியங்கள் அவரிருந்த காலத்தில் அந்தளவிற்கு மதிப்பிருக்கவில்லை. விற்பனை செய்யப்படவுமில்லை. வான்கோவும் எப்படி அவரின் இறப்பின்பின் பிரபல்யமடைந்தார் என்பதைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.

மேலும், வான்கோ தன் 37 வயதிலும், ராமானுஜம் தன் 33 வயதிலும் தமக்கான மரணத்தை தற்கொலைகள் மூலம் தேர்ந்தெடுத்தும் கொண்டனர்.

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்

Thursday, April 14, 2016

(Machu Pichchu, Peru)
பயணக்குறிப்புகள் - 12


பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது.

மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மித்தபோது இந்த நகரில் எப்படி விமானத்தை தரையிறக்கப் போகின்றார்களோ என்கின்ற சிறு அச்சம் வந்திருந்தது. எனெனில் அந்தளவிற்கு நிறைய மலைகள் உடைய சமதரையற்ற நிலப்பகுதி அது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 3000 மீற்றர்களுக்கு மேலே இருக்கின்றது. தலையிடி/தலைச்சுற்றல் இன்றி இந்த நகரின் காலநிலையை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உள்வாங்கிக்கொள்ளவும் முடியாது.

மச்சு பிச்சுவிற்குப் போவதென்பதை பலர் மாதக்கணக்காய்த் திட்டமிடுவார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காய்த் தயார் செய்துவிட்டுத்தான் பெருவிற்குள்ளேயே கால் வைப்பார்கள். நான் அப்படியில்லாது வருவது வரட்டுமென பெருவிற்குப் போய் மச்சு பிச்சுவிற்கான திட்டத்தைப் போடுவோமெனப் போயிருந்தேன். மச்சு பிச்சுவிற்குள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. மொன்ரானா அல்லது ஹயானா பிச்சு போன்ற அருகருகிலிருக்கும் மலைகளிலிருந்து மச்சு பிச்சுவின் அழகைப் பருகவேண்டுமென்றால் அதற்கும் தனியே நுழைவுச்சீட்டுக்கள் எடுக்கவேண்டும். ஹயானா பிச்சுவில் ஏறுவதற்கு இருநூறு பேர் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுவார்கள்.
நான் பெருவிற்குள் இறங்கிய முதல்வாரம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சில தினங்கள் மச்சு பிச்சுவிற்கான பயணமும் தடைபட்டிருந்ததென அங்கே தற்செயலாய் சந்தித்த ஒரு நியூசிலாந்துத் தம்பதியினர் சொல்ல, இவ்வளவு தூரம் வந்துவிட்டதன் பின் என் கனவு நிறைவேறாதோ என்ற கலக்கமும் வந்தது. அதிஷ்டவசமாக நான் செல்வதற்கு நினைத்த நாளில் மச்சு பிச்சுவிற்கான வாசல்கள் மீண்டும் திறந்துவிட்டிருந்தன.

குஸ்கோவிலிருந்து முதலில் ரெயினில் மச்சு பிச்சுவிற்குப் போகலாம் அல்லது இன்காக்களின் இன்னொரு நகரான ஒலாண்டேதம்பேயில் இருந்தும் ரெயின் எடுத்தும் மச்சு பிச்சுப் போகலாம். நான் ஒலாண்டேதம்பே சென்று அங்கிருந்து ரெயின் எடுத்து மச்சு பிச்சுவை அடைந்தேன்.

ஒலாண்டேதம்பேயும் ஒரு பிரசித்தி பெற்ற இன்காக்களின் நகர். இன்னும் இன்காக்களின் கட்டட அமைப்புக்களின் எச்சங்களைப் பார்க்கலாம். எங்கு பார்க்கினும் மலைகள் சூழ்ந்த நகரில் அந்த நகரில் மூன்று நாட்கள் நின்றதும், அந்தவேளை நகரில் நிகழ்ந்த முக்கிய கலாசார விழாவினைக் கண்டு களிக்க முடிந்ததும் மச்சுபிச்சுவிற்கான என் பயணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

ஒலாண்டேதம்பேயிலிருந்து உள்ளூர் மக்களுக்கென தனிப்பட்ட ரெயினும், பிற நாட்டிலிருந்து வருபவர்க்கென இன்னொரு ரெயினும் புறப்படுகின்றது. உள்ளூர் மக்களுடன் அவர்களின் ரெயினில் போகவே எனக்கு விருப்பம் இருந்தபோதும் அதில் செல்ல அந்நியர்களுக்கு அனுமதியில்லை. பெரு ரெயில் அல்லது இன்கா ரெயில் என்கின்ற சேவைகளில் ஒன்றில் பிறநாட்டவர்கள் போகலாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும் ரெயின் சிறு கிராமங்களையும் மலைகளையும் காடுகளையும் ஆறுகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. முன்னே தெரியும் மலைகள் பச்சையாய்த் தெரிய, பின்னாலிருக்கும் மலைகளை முகில்களும் பனியும் மூடியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பது அற்புதமானது. நதியொன்றும் விடாது எங்களோடு தொடர்ந்து மச்சு பிச்சுவரை வந்துகொண்டிருந்தது.

ரெயின் மச்சுபிச்சு அடிவாரத்திற்கு அப்பால் நகர்வதில்லை. பின்னர் பஸ்செடுத்து -30 நிமிடங்கள்- மச்சுபிச்சு அமைந்திருக்கும் மலைக்குச் செல்லவேண்டும். மலையேறியும் போகலாம். ஆனால் நிறைய நேரமெடுக்கும். மச்சுபிச்சுவின் நுழைவாயிலை அடைந்ததும் நிறைய வழிகாட்டிகள் நிற்பார்கள். விருப்பமெனில் அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களைக் கூட்டிச் செல்லலாம்.

மச்சு பிச்சுவின் முக்கிய பகுதிகளைப் போய்ப் பார்க்க முன்னர், மலையில் ஏறுவதற்குத் தயாராகினேன். எனெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மலையில் ஏறவேண்டும். இல்லாவிட்டால் அனுமதியிருக்காது. ஹயானா பிச்சுவிற்கு அனுமதிச் சீட்டு வாங்க முடியாது போனததால் மொன்ரானா மலையினுள் ஏறததொடங்கினேன்.

அடிக்கடி மலையேற்றம் செய்யாவிட்டால் ஏறுவதற்கு கடினமான மலை இது. சிறுபாதைகள்/ செங்குத்தான சரிவுகள் உடைய சற்று ஆபத்தான பாதையும் கூட. மூச்சு இழுத்து கஷ்டப்பட்டு ஏறியபோதும் வழிநெடுகிலும் காட்சிகள் அழகாயிருந்தது. சிலர் இடைநடுவிலேயே இயலாதென திரும்பி விட்டிருந்தனர். நான் உச்சிக்குப்போனபோது 360 பார்வைக்கோணம் உள்ள இடத்தை நேரம் சென்றுவிட்டதென்று மூடிவிட்டிருந்தனர். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கின்றோம், 10 நிமிடங்கள்தானே பிந்திவந்தோம் என என்னைப் போன்ற நான்கைந்து பேர் 'அனுமதிக்க மாட்டீர்களா?' எனக்கேட்டபோதும் அவர்கள் அந்தப் பார்வைக் கோணத்தை எமக்காகத் திறந்துவிடவில்லை. உடனே திரும்பி நடக்கவும் சொல்லிவிட்டார்கள். எனெனில் நாங்கள் கீழே இறங்கியவுடன் பாதையை முற்றுமுழுதாக மூடி விடவும் வேண்டும். இவ்வளவு உயரம் ஏறிவந்துவிட்டு உடனே திரும்பி இறங்க முடியாது என அங்கேயே அமர்ந்து 'உள்ளே அனுமதிக்கும் போராட்டத்தை' நாங்கள் எல்லோரும் நடத்தினோம். இறுதியில் வழமைபோல அவர்களிடம் தோற்று இறங்கி நடக்கத்தொடங்கினோம். கூடவே ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று பேச்சுத் துணைக்கு வந்தததால் இறங்கி வருவது அவ்வளவு களைப்பாய்த் தெரியவில்லை.



மச்சு பிச்சுவை அன்றைய காலத்தில் இன்காக்கள் எப்படிப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்பதை அனுபவிக்க வேண்டுமானால் இன்கா வழித்தடங்கள் (Inca Trails) ஊடாக நான்கைந்து நாட்கள் நடந்து போய்ப் பார்க்கலாம். ஆனால் தனியே போக அனுமதியில்லை. குழுக்களாய்த்தான் சேர்ந்தே போகவேண்டும். இன்கா வழித்தடங்களினூடாகப் போவதென்றால் பல மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யாவேண்டும், இல்லாவிட்டால் இடம் கிடைப்பது அரிது. இரவுகளில் கூடாரங்கள் அடித்து தங்கவேண்டும். மிகுந்த சுவாரசியமான பயணம் அதுவென மச்சுபிச்சுவில் சந்தித்த ஒரு பிரேசிலிய இணை கூறினார்கள். வழியெங்கும் இயற்கையின் அதிசயங்களையும், பல்வேறு விலங்குகள்/நகர்வனபனவற்றையும் பார்த்து வந்ததை அவர்கள் விபரித்தபோது நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்ற உணர்வே வந்தது.

ச்சுபிச்சு, 1450 ஆண்டளவில் இன்கா அரசனொருவனால் நிர்மாணிக்கப்பட்டதாய் நம்பப்படுகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் வந்து இன்காவினரையும் அவர்களின் கலாசாரங்களையும் கொடூரமாய் அழித்தபோதும் மச்சுபிச்சு அதிலிருந்து தப்பியதென்பது ஓர் அதிசயமென்றே சொல்லவேண்டும். ஸ்பானியர்களின் கண்களுக்கு மட்டுமின்றி, இன்காவினரின் செழிப்புமிக்க வாய்மொழிப் பாடல்களில் கூட மச்சு பிச்சு பல நூற்றாண்டுகளாய் இல்லாதிருந்தது ஏனென்பதும் இன்னமும் மர்மாகவே இருக்கின்றது. பதினாறாம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானியர்களின் படையெடுப்புடன் வரலாற்றின் தடங்களில் இருந்து இல்லாமற்போன மச்சுபிச்சு மீண்டும் 1911ல் கண்டுபிடிக்கப்படுகின்றது.

இன்றும் கூட மச்சுபிச்சு எதற்காய் அமைக்கப்பட்டதென்று மர்மமாகவே இருக்கின்றது. புனிதமான வழிபாட்டுக்காய் அமைக்கப்பட்டிருக்கலாமென்று ஒருசாராரும், விவசாயத்தின் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாமென்று இன்னொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இன்றும் கூட மலைகளாலும் பெருங்காடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் ஓரிடத்தில் இவ்வளவு நுட்பமான ஒரு நகரை அமைத்திருப்பது என்பது அதிசயமாய்த்தானிருக்கிறது. மச்சுபிச்சுயின் உள்கட்டுமானம், இரண்டு பகுதிகளாகத் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒருபகுதி வசிப்பதற்கெனவும், இன்னொரு பகுதி விவசாயம் செய்வதற்குமென வகுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கென நீர் வழங்கல் முறை நவீன தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் முறையில் அவ்வளவு கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

மச்சு பிச்சுவில் உயர் வர்க்கம் வாழ்வதற்கென வசதியான வீடுகளும், சாதாரணர்கள் வாழ்வதற்கு எளிய வீடுகளும் அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணமுடியும். அதேபோன்று சூரிய வழிபாடுகள் நடந்தற்குரிய தடங்களையும் தெளிவாய்க் காணமுடியும். சில இடங்களில் விலங்குகள்/மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது.

நான் மச்சுபிச்சு சென்றதற்கு முதல்நாள் மழை தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்ததாகவும், இடங்களை நிதானமாகப் பார்க்கவோ, மலையில் ஏறமுடியவோ இல்லையெனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக நான் போனபோது மச்சுபிச்சுவில் நன்றாக வெயில் காய்ந்துகொண்டிருந்தது. மலையேறல் கூட மிகுந்த தாகத்துடனேயே நிகழ்ந்தது. எனினும் மாலையானபோது மழை எங்கிருந்து ஒளிந்து வந்ததென அறியமுடியாது பெரும்பாட்டமாய் பொழியத்தொடங்கியது. ஒரேநாளில் வெவ்வேறான இரண்டு காலநிலைகளை மச்சுபிச்சுவில் அனுபவிப்பது என்பது கூட ஒருவகையான ஆசிர்வாதமெனத்தான் சொல்லவேண்டும்.

இப்போதிருக்கும் மச்சுபிச்சுவும் அதன் அழகிய சுற்றுப்புறங்களும் இப்படியே தொடர்ந்து இருக்குமெனவும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வருடமும் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தனியார் நிறுவனங்களும் இவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்குச் சொகுசான வசதிகளைச் செய்வதற்கென மச்சுபிச்சுவை அண்மித்து கட்டங்களையும் அமைக்கவும், காடுகளை அழிக்கவும் தொடங்கி விட்டிருக்கின்றனர். காலம் என்பதும் இன்னொரு பெரும் விடயமாக மச்சுபிச்சுவின் மீது கவிழ்ந்து அதன் அழகை மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கி இருக்கின்றது. இவ்வாறுதான் உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக மச்சுபிச்சுவைப் போல மெக்ஸிக்கோவில் இருக்கும் ஸெசென் இட்ஸாவிற்கு (Chetzen Itza)போனபோதும் நிகழ்ந்தது. சில காலங்களுக்கு முன்வரை அந்த பிரமிட்டில் ஏறிப்பார்ப்பது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அது அழிவை நோக்கிச் செல்வதால் எவருக்கும் ஏறிச்செல்வதற்கு அனுமதியில்லை. வெளியில் நின்றே அதைச் சுற்றிப் பார்க்க முடியும்.

ச்சு பிச்சுவே ஒரு மலையிலிருக்கின்றதென்றால், குஸ்கோ நகரம் அதைவிட இன்னும் கடல்மட்டத்திலிருந்து 3400 மீற்றர் உயரத்திலிருக்கின்றது. ஆகவே நிறையப்பேருக்கு உயரங்காரணமாய் தலையிடி, தலைப்பாரம் போன்றவை சாதாரணமாகவே வந்துவிடும். குஸ்கோ நகரே ஸ்பானியர்களால் கடைசியாகக் கைப்பற்றப்பட்ட நகரம். இங்கேதான் இன்கா மக்கள் மிகுந்த வலிமையுடனும் பெரும் எண்ணிகையுடனும் இருந்தவர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாய் ஸ்பானியர்களுடன் பல்வேறு வழிகளில் அவர்கள் சண்டைபிடித்திருக்கின்றனர்.

ப்போது சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துவழியும் சதுக்கத்திலேயே (Plaza De Armas) இன்காவினது இறுதி அரசன் ஸ்பானியர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். மியூசியம் ஒன்றிரண்டை கிடைத்த சந்தர்ப்பத்தில் பார்த்தபோது, ஸ்பானியர்கள் இன்கா மக்களைப் பிடித்து சித்திரவதை செய்த முறைகள் நாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. ஒரு சித்திரத்தில் ஒருவரை கை, கால் என நான்கு பக்கங்களும் கயிற்றால் கட்டி ஒவ்வொரு திசையிலிருந்து குதிரையால் இழுத்துத் தண்டணை கொடுத்திருப்பதாய்க் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வெற்றி மிகுந்த சரித்திரம் எனச் சொல்லப்பட்ட அனைத்தின் பின்னாலும் எஞ்சியிருப்பவை கண்ணீரும் குருதியும் தானல்லவா?

ஏற்கனவே உயரத்தில் அமைந்திருக்கும் நகரில் இன்னும் உயரமான ஒரு மலையில் இந்த வெள்ளை இயேசு காட்சியளிக்கின்றார். 26 அடி உயரமான சிலை எனச் சொல்லப்படுகின்றது. இந்த இயேசு பிரேசிலிருக்கும் பிரபல்யமான ' Christ the Redeemer' சிலையை மாடலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரமான வெள்ளை யேசு அமைக்கப்பட்ட வரலாறுதான் சுவாரசியமானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது, அடைக்கலந்தேடி வந்த பாலஸ்தீனியர்களால், தமக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாய் அவர்கள் பெரு மக்களுக்காய் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

பயணங்களில் நாம் பார்க்கும் இடங்களை விட சந்திக்கும் அனுபவங்களே பிறகு ஆறுதலாக இருந்து அசைபோடும்போது முக்கியமானதாக ஆகிவிடுகின்றன. மேலும் மச்சு பிச்சு போன்ற மிகப் பிரசித்திபெற்ற இடத்தை புகைப்படங்களாலும், காணொளிகளாலும் பார்த்தபிறகு நேரில் பார்க்கும்போது அவ்வளவு பெரிய மனவெழுச்சியைத் தராமல் கூடப்போகலாம். எனினும் மச்சு பிச்சுவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கவே செய்யும். அவ்வாறான தனித்த அனுபவங்களும், இன்காக்களின் பெரும் சரித்திரத்தின் சிதைவுகளை எங்கும் காணக்கூடிய குஸ்கோ, ஒலியாண்டேதம்பே போன்ற நகரங்களில் நின்று தரிசித்த காட்சிகளுமே நீண்ட காலத்திற்கு மனதிற்குள் சேகரமாய்த் தங்கும் போலத் தோன்றுகின்றது.

(‘அம்ருதா’ மாசி இதழிலும், சுருங்கிய வடிவம் இந்தவார (மாசி, 17) ‘தீபம்’ பத்திரிகையிலும் வெளிவந்தது)

உம்பர்த்தோ ஈக்கோவின் 'Numero Zero'

Tuesday, April 12, 2016

1.
ஒரு பெருவணிகர் தன்னுடைய எதிரியான இன்னொரு வணிகரைப் பயமுறுத்த  பத்திரிகை  ஒன்றைத் தொடங்க விரும்புகின்றார். உண்மையிலேயே பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதற்கு கூட அவருக்கு விருப்பமில்லை. இப்படி ஒரு பத்திரிகை வரப்போகின்றது, எதிரியான வர்த்தகர் அம்பலப்படுத்தப்படப்போகின்றார் என்று எச்சரிக்கை செய்யவே பத்திரிகை தொடங்கப்படுகின்றது. எதிரி சரணடைந்தவுடன் அல்லது இப்படி பத்திரிகை வரப்போகின்றது என்று அவர் பயந்தவுடனேயே பத்திரிகையை நிறுத்துவதே அந்தப் பெருவணிகரின் எண்ணம். ஆனால் இந்த உண்மையறிந்தவர்கள் ஒரு சில பேரே. மிகுதி அனைவரும் புதிய பத்திரிகை வரப்போகின்றது என பல்வேறு கனவுகளுடன் 'நாளை' (Domani) எனப் பெயரிடப்படுகின்ற பத்திரிகையில் வந்து சேர்கின்றனர். இந்த உண்மையை ஒரளவு அறிந்த ஒருவரே இந்தப் புதினத்தில் கதையை வருகின்றார்.

கதைசொல்லியான Colonna கடந்தகாலத்தில் எழுத்துத் திருத்தம் பார்ப்பவராகவும், பிறருக்கு படைப்புக்களை எழுதிக்கொடுக்கின்ற ghost writerராகவும் இருந்திருக்கின்றார். இவருக்கு அந்தப் பத்திரிகையில் பொறுப்பாசிரியருக்கு அடுத்த பெரும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. பத்திரிகை அச்சுக்குப் போவதிற்கு முன்னர் 0-1, 0-2,.....0-12 வரை பன்னிரண்டு இதழ்களைத் தயாரிப்பதே இவர்களின் முதன்மையான வேலையாக இருக்கின்றது. புதிய பத்திரிகையினூடாகப் பல புதிய விடயங்களைச் செய்து பார்க்கலாம் என பல்வேறு கனவுகளுடன் பலர் வருகின்றனர். அதிலும் ஒரு பெண், ஏற்கனவே நடிகர்களின் கிசுகிசுக்களை வேறொரு பத்திரிகையில் எழுதி வந்த அலுப்பில் சொந்தமாய் புதிய ஆக்கங்களை எழுதலாமென வருகின்றார். அவருக்கு மரண அறிவித்தல்களை எழுதும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு குறுக்கெழுத்து, சோதிடம் போன்ற வழமையான பதிவுகளே பிறருக்குக் கொடுக்கப்படுகின்றது.

இதற்கிடையில் இந்தப் பத்திரிகையில் சேரும் Braggadocio முக்கியமான ஒரு விடயத்தோடு வருகின்றார். அதற்காய் நிறையத் தரவுகளைச் சேகரித்து நிறையக் காலம் உழைத்துமிருக்கின்றார். இந்தப் பத்திரிகை, தான் அகழ்ந்தெடுத்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓரிடம் தருமென நம்புகின்றார். அவர் இந்தக் கதைசொல்லிக்கு மட்டும் தனது கண்டுபிடிப்புக்களைச் சொல்கின்றார். தொடக்கத்தில் அதில் அவ்வளவு நம்பிக்கை வராத Colonna, Braggadocio செய்த தேடல்களின் நிமித்தம் எங்கேனும் உண்மை இருக்கக் கூடுமென ஒரு கட்டத்தில் நம்பத்தொடங்குகின்றார். விபரமாகக் கேட்பதற்கு நேரத்தையும் செவிகளையும் தொடர்ந்து வரும் நாட்களில் கொடுக்கின்றார்.

2.
அந்த உண்மை என்னவெனில் இத்தாலியில் பாஸிஸ்ட்டாக இருந்த முசோலினி உண்மையில் வெளியில் சொல்லப்படுவதைப் போலக் கொல்லப்படவில்லை என்பதே. முசோலினி எனக் கொல்லப்பட்டு உலகிற்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவர்,  அவரைப் போல டூப்பாக, முசோலினியால் உலாவ விடப்பட்ட இன்னொருவர் என்று Braggadocio உறுதியாக நம்புகின்றார். அதற்கான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வருகின்றார். இறுதிநேரத்தில் முசோலினி ஜேர்மனிப் பக்கமாய் தப்பிப் போகும்போது கொல்லப்பட்டதாய்ச் சொல்லப்பட்டபோது, அசல் முசோலினி இத்தாலியின் வேறொரு பகுதியில் இருந்தார் என்றும், வத்திகான் தேவாலயத்தின் உதவியுடன் ஒரு பழமைவாய்ந்த தேவாலயத்தினூடாக சுரங்கப்பாதையினூடு தப்பிப் போயிருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்கா நேசப்படைகளும், அதன் உளவு நிறுவனங்களும் அவரை அப்படித் தப்பச் செய்ததாகவும், அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிய புரட்சிகர செம்படை இத்தாலியில் முன்னணியிற்கு வந்தால் முசோலினியை மீண்டும் களத்தில் இறக்கவும் அமெரிக்கா தயாராக இருந்தததாகவும் Braggadocio நம்புகின்றார் . தனது வாதங்களுக்கு வரலாற்றின் ஓட்டைகள்/பலவீனங்கள் இருந்த பகுதிகளில் இருந்து ஆதாரங்களை அள்ளி வழங்குகின்றார். மேலும் முசோலினியின் ஆதரவுடன் ஒரு பெரும் படை இத்தாலியின் உள்ளே இரகசியமாகக் கட்டியமைக்கப்பட்டதாகவும், முசோலினியின் மீள்வரவுடன் இத்தாலி மீண்டும் கைப்பற்றப்படத் தயாராக இருந்ததாகவும் கூறுகின்றார், ஆனால் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த முசோலினி திடீரென இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும், அதனால் முசோலினி தப்பி வாழ்ந்த காலம் வரலாற்றிலிருந்து அப்படியே மறைக்கப்பட்டதாகவும் இவர் கண்டுபிடிக்கின்றார். இது ஒரு conspiracy theory என்ற தொடக்க்கத்தில் உதறித்தள்ளிய Colonna, ஒருகட்டத்தில் Braggadocio கூறுவதை நம்பத்தொடங்குகின்றார்.

இந்த உண்மையை உலகம் முழுவதற்குச் சொல்வதற்கு முன்னர் ஒரேயொருவரிடம் கேட்டு உறுதி செய்துவிட்டால் போதுமென Braggadocio ஒருநாள் விடைபெற்றுப் போகின்றார். அவர் சந்திக்கப் போகும் நபர் இத்தாலிய உளவு நிறுவனத்தில் வேலை செய்கின்றவர். அவ்வாறு அந்த உளவு நிறுவனத்தில் இருப்பவரைச் சந்தித்துவிட்டு இரவில் தனியே நடந்து வரும்போது Braggadocio கொல்லப்படுகின்றார்.

3.
அந்தக் கொலையோடு அனைத்து நிலைமைகளும் மாறிப்போகின்றன. அடுத்த நாள் பொலிஸ் இவர்களின் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைகின்றது. கொல்லப்பட்ட நபரின் ஆவணங்களை எல்லாம் கைப்பற்றுகின்றது. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் யாரென விசாரிக்கின்றது. இந்தக் கதைசொல்லியும் விசாரிக்கப்படுகின்றார். ஆனால் அவர் கவனமாய் தனக்குச் சொல்லப்பட்ட முசோலினி பற்றிய conspiracy theoryஐ மறைத்துவிடுகின்றார்.
பத்திரிகைக்கு பொறுப்பானவர் இனி பத்திரிகை வராதெனவும் இனியெவருக்கும் வேலையில்லையெனவும் எல்லோரையும் இரண்டு மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்புகின்றார். அவருக்கும் Colonnaவிற்கும் மட்டுமே முசோலினி பற்றிய இந்தப் புதுக்கதை தெரியும். இதனால் இனி தனக்கு ஆபத்தெனவும் தான் இத்தாலியை விட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று தலைமறைவாக வாழப்போகின்றேன் என்றும், அவ்வாறே Colonnaவையும் எங்கேயாவது சென்று வாழச் சொல்கின்றார்.

Colonnaக்கு தன்னை யாராவது கொலை செய்ய வந்திருவார்கள் என்ற அச்சம் எழுகின்றது. அடுத்தடுத்த நாட்களில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார். தான் உறங்கிக்கிடந்தபோது யாரோ இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார் என நம்பவும் செய்கின்றார்.

Colonnaக்கு வயது ஐம்பத்துக்கு மேல் ஆகிவிட்டதென்றாலும், பத்திரிகையில் புதிதாய் வந்து சேர்ந்த ஒரு இளம்பெண்ணோடு காதலும் இருக்கின்றது. இனி மிலானில் வசிக்கமுடியாது என முடிவுசெய்து, அந்தக் காதலிக்கு சொந்தமாய் ஒதுக்குப்புறமான கிராமத்தில் இருக்கும் வீட்டுக்குச் சென்று காதலியோடு ஒளிந்துகொள்கின்றார். அப்படியே இருவரும் கிழக்கு ஐரோப்பியா நாட்டுக்கோ அல்லது தென்னமெரிக்கா நாடொன்றுக்கோ தப்பிச் செல்வதே அவர்களின் முடிவாக இருக்கின்றது. பழக்கமில்லாத ஸ்பானிய மொழியை கற்று வழமைபோல பழைய தொழிலைத்தான் செய்யலாமென்றும், காதலியும் வழமையான எழுதும் திரைத்துறை சார்ந்த கிசுகிசுக்களை எழுதி வாழ்க்கையை நகர்த்தலாமெனவும் தீர்மானிக்கின்றனர்.

நாவலின் முடிவில் கூட Colonnaவால் முசோலினி பற்றிய இந்தக்கதை conspiracy theoryயா அல்லது உண்மையில் அப்படி இருந்திருக்கலாமோ என முடிவுசெய்ய இயலாது இருக்கின்றது. உம்பர்த்தோ ஈக்கோவின் இந்த நாவலை வாசிக்கும்போது அவரின் இன்னொரு நாவலான Foucault's Pendulum நமக்கு நினைவுக்கு வரலாம். நமக்கு உண்மையெனச் சொல்லித் தரப்பட்ட வரலாற்றை, ஏன் வேறு விதமாய் இருந்திருக்கக்கூடாது என கேள்விக்குட்படுத்துவதில் ஈக்கோ திறமையானவர். இங்கேயும் எது உண்மையாக இருக்கும் எது கற்பனையாக இருக்கும் என நம்மை கேள்விக்குட்படுத்துவதில் நிறைய விடயங்களை வரலாற்றிலிருந்து எடுத்துக் கொண்டுவருகின்றார். ஒருகட்டத்தில் கதைசொல்லியான Colonna நம்புவது போல, முசோலினி நமக்குச் சொல்லப்பட்டவகையில் கொல்லப்பட்டிருக்கமாட்டாரோ என நம்பவைப்பதில் ஈக்கோவின் எழுத்தின் ஆழம் நமக்குத் தெரியவருகின்றது.

(நன்றி: 'அம்ருதா' - ஏப்ரல்/2016)

Tamasha

Thursday, April 07, 2016

ரு ஆணும், பெண்ணும் தற்செயலாய் பிரான்ஸின் ஒதுக்குபுறமான நகரொன்றில் சந்திக்கின்றனர். சொற்ப காலந்தானே பழகப்போகின்றோம், எனவே உண்மையான அடையாளங்களை மறைத்தபடி பழகலாமென முடிவெடுகின்றனர். ஆண் தன்னை 'டொன்' எனவும், பெண் 'மோனா டார்லிங்' எனவும் பழைய திரைப்படக் கதாபாத்திரங்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டியும் கொள்கின்றனர். அந்நகரையும், அருகிலுள்ள காடுகளையும், மலைகளையும் இணைந்து சுற்றுகின்றனர். மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு டொன் மீது காதல் அரும்புகின்றது. திடீரென பயணத்தில் தொலைந்த சூட்கேஸும் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட, சட்டென்று அந்தப் பெண் இந்தியாவிற்குப் பயணமாகிவிடுகின்றார்.

இடையில் சிறுவன் 'டொன்'னின் கதை சொல்லப்படுகின்றது. எப்போதும் கதைகள் கேட்பதிலும், வாசிப்பதிலும் ஆர்வமிருக்கும் சிறுவனை தந்தை படி படி என கஷ்டப்படுத்துகின்றார். நாடோடிகளாய் அலைபவர்களிடம் வீட்டில் காசு களவெடுத்துச் சென்று கதை கேட்குமளவிற்கு சிறுவன் 'டொன்' கதைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவனாக இருக்கின்றான். பல்வேறு இதிகாசப் பாத்திரங்களோடு கற்பனையின் விளைநிலங்களில் பறந்து போகின்ற சிறுவன் பதின்மங்களுக்கு வரும்போது, நீ இப்படியிருக்கமுடியாது கணிதம் நன்கு கற்று பொறியியலானாக வரவேண்டுமென வீட்டிலிருந்து ஹொஸ்டலுக்கு அனுப்பப்படுகின்றான். அந்தப் படிப்பு பிடிக்கவில்லை என்றாலும் தந்தையிற்காய் தன்னை வருந்திக் கற்கின்றான்.

பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பும் பெண்ணான மகேஸ்வரியின் தந்தையார் மிகப்பெரும் ரீ தொழிற்சாலையை வைத்திருக்கின்றார். மகளான மகேஸ்வரி அந்நிறுவனத்தின் இலாபத்தை அவரின் திறமையால் உயர்த்துகின்றார். என்கின்றபோதும் பிரான்ஸில் 'டொன்னோடு' பழகிய காலங்கள் அவரைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடியே இருக்கிறது. டொன்னை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் ஏதுமில்லை. எனெனில் இனி மீண்டும் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்துத்தான் இருவரும் அடையாளங்களை மறைத்துப் பழகியதோடு மட்டுமின்றி, தொடர்பு கொள்வதற்கான எந்த முகவரிகளையும் இருவரும் விட்டும் பிரியவில்லை.

டொன்னின் நினைவுகள் சுழன்றடிக்க சட்டென்று மகேஸ்வரிக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. டொன் Catch-22 நாவலை பிரான்ஸில் இருக்கும்போது வாசித்துக்கொண்டிருந்ததையும், அது டெல்கியில் இருக்கும் ஒரு புத்தகசாலையில் வாங்கப்பட்டதையும் கண்டுகொள்கிறார். சந்திப்பு நடந்து சில வருடங்களான பின், மகேஸ்வரி டெல்கியிற்குச் செல்கிறார். அந்தப் புத்தகசாலையில் பெரும்பொழுதுகளைக் கழிக்கும்போதாவது டொன்னை எப்போதாவது சந்திக்கவிடக்கூடுமென ஆசைப்படுகின்றார்.

காலத்தின் நீட்சியில் அதே புத்தகசாலையில் தற்செயலாய் டொன்னை மகேஸ்வரி சந்திக்கின்றார். தனக்கு அவரில் அளவிறந்த காதல் இருப்பதாக தன் நிலைமையை உணரச்செய்கின்றார். தொடர்ந்து இருவரும் பழகுகின்றனர். டொன் ஒரு அலுவலகத்தில் மானேஜராக இருக்கின்றார். அவரின் ஒரேமாதிரியான நாளாந்த வாழ்க்கையும், அலுவலகத்தில் மிகவும் கீழ்ப்படிவான ஊழிய வாழ்க்கையும் மகேஸ்வரிக்கு வியப்பைத் தருகின்றது. பயணங்களில் உற்சாகமாகவும், கதைகள் பல சொல்லித் திரிந்த டொன் எங்கே மாயமாய்ப் போனான் என வினாவுகிறார். டொன் இதுதான் எனது நிஜ முகம், நீ பார்த்தது கற்பனையான ஒருவன் என்கின்றார். இந்த சராசரியான அலுவலக வாழ்க்கையிற்குள் சிக்கிக்கொண்ட ஒருவனை என்னால் நேசிக்க முடியாதென, டொன் நண்பர்களுக்கு முன்னிலையில் திருமணஞ்  செய்யக் கேட்கும்போது மகேஸ்வரி நிராகரிக்கின்றார்.

ன் வழமையான வாழ்க்கையிற்குள் டொன் மீண்டும் போகின்றார். அவ்வப்போது schizophreniaவிற்குள்ளும் விழும் டொன், மகேஸ்வரி தன் தவறை உணர்ந்து மீண்டும் காதலை யாசிக்கும்போதும் அதை நிராகரிக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாய் தனது அசலான முகத்தைத் தேடத் தொடங்குகின்றார். இடையில் ஒரு ஓட்டோக்காரரை டொன் சந்திக்கின்றார். தனது நகரத்தில் பெரும் பாடகனாக இருந்த அவரை, எப்படி நாளாந்த வாழ்க்கை ஒரு ஆட்டோக்காரராக டெல்கியில் கொண்டு வந்து சேர்த்தென தன் கதையை அந்த ஓட்டோக்காரர் சொல்கிறார்.

அதிலிருந்து ஒரு தீப்பொறி டொன்னுக்குள் நுழைகிறது. தனது கதைசொல்லல்களை மக்களுக்குள் நிகழ்த்திக்காட்டுகின்றார். எப்போதும் சமரசம் செய்து, வேறொரு முகமூடியை அணியச் செய்யும் பெருநிறுவன வேலையை உதறித்தள்ளி, ஆறு மாதங்களாய் அலைந்துவிட்டு, சிம்லாவிலிருக்கும் வீட்டுக்குச் செல்கின்றார். வேலையை விட்டுவிட்டார் என அறிந்த தந்தையும் தாய் பதறுகின்றனர். மீண்டும் வேலையைத் தேடு என அவரைச் சொற்களால் வதைக்கின்றனர்.

அல்லாடும் மனத்திடையே தான் சிறுவனாக இருந்தபோது கதைகளச் சொன்னவரிடம் டொன் மீண்டும் போகின்றார். ஏன் எப்போதும் மகிழ்ச்சி குறுகிய காலமே தங்குகின்றது, மிகுதிக்காலம் முழுதும் துயராக வடிகிறது என சோர்ந்து போகும் டொன், தனது எதிர்காலம் என்னவாகும் இருக்கும் எனக் கேட்கின்றார். மிகவும் முதிர்ந்துபோய் பார்வையும் ஒரளவு இழந்திருக்கும் அந்த கதைசொல்லி, 'நீ பொய்யாக வாழ்கிறாய்...உனது வாழ்க்கையின் கதை எப்படியென என்னிடம் கேட்காதே, உனக்காக கதையை நீதான் சொல்லவேண்டும் அதைத் தேடு' எனத் துரத்திவிடுகின்றார்.

டொன்னின் தேடல் பிறகு என்னவாகிறது? மகேஸ்வரியால் அவரையும், அவரால் மகேஸ்வரியும் புரிந்து கொள்ளப்படுகின்றனரா என்பது இதன் நீட்சியில் நிகழ்கின்றன. டொன்னின் குழந்தைப்பருவம், பதினம், பிறகு தற்போதைய காலம் என மூன்று காலங்களும் ஒரு தொடர்ச்சியின்றி இத்திரைப்படத்தில் சொல்லப்படுகின்றது. மனித மனம் என்பதே நிகழ்காலத்தில் இருக்கும்போதே கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்துகொண்டிருப்பதுதான் அல்லவா?

இந்தக் கதை இன்றைய நவீன மனிதனின், அதுவும் பெருநிறுவனங்களில் தங்களின் அசல் முகங்களைத் தொலைத்தவர்களைப் பற்றியது எனச் சொல்லலாம். இன்னொருவகையில் நாம் வாழ விரும்பும் வாழ்க்கையிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிற்கும் இடையில் நெரிபடும் நம் எல்லோருடைய பிரதிபலிப்புத்தான் டொன் எனலாம்.

Beautiful mindல் நாஷிற்குக் வாய்க்கும் ஒரு துணை போல, Tamasha வில் டொன்னுக்குக் கிடைக்கும் காதலி போல எல்லோருக்கும் அமைவது அரிது என்பது ஒருபுறமிருந்தாலும், இதையெல்லாவற்றையும் விட நாம் நமக்கு விரும்பியதைச் செய்வதற்கான தயக்கங்களையும் பயங்களையும் தாண்டிச் செல்வதுதான் நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள பெரும் சவால் போலவும் தோன்றுகின்றது.

(நன்றி: தீபம்)