கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார்.
india3
'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும் என்று அலையவில்லை; என்னை, எனது இசையை எவற்றோடும் சமரசம் செய்யாமல் வெளியிடவேண்டும் என்பதில் மட்டுமே அதிகம் கவனஞ்செலுத்தினேன்' என்று கூறுகின்ற இண்டியா அரி, சென்ற மாதமளவில் Testimony: Vol. 1, Life & Relationship என்ற தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மகாத்மா காந்தியின் மீதிருந்த ஈர்ப்பினால் இண்டியா (India) என்ற பெயரையும், அரி (Arie) என்று தாயால் செல்லமாய் அழைக்கப்பட்டதை பிற்பகுதியாகவும் சேர்த்து இண்டியா அரி ஆகியிருக்கின்றார்.

2001ல் வெளிவந்த 'வீடியோ' என்ற பாடல்தான் இண்டியா அரியின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தனது பெண் என்ற அடையாளத்தை அந்தப் பாடலில் இண்டியா அரி தேட முயல்கின்றார்...

'நான் உனது வீடியோவிலிருக்கும் சாதாரண பெண் அல்ல
நான் ஒரு பேரழகியைப் போல வடிவமைக்கப்பட்டவளுமல்ல
ஆனால் நான் அறிந்துவைத்திருக்கின்றேன்
என்னை நானே எப்படி அளவிறந்து நேசிப்பது என்று
ஏனெனில் நானொரு அரசிளங்குமரி
எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை
இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ
அதை மட்டுமே நான் அணிவேன்'


இந்தப்பாடலோடு அண்மையில் பிரபல்யம் அடைந்த பிங்கின்(Pink), Stupid Girls ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிங்கும் தனது பாடலில் வெகுசன ஊடகங்கள் பெண் பற்றி கட்டமைக்கபடும் விம்பங்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அதில் ஒரிடத்தில் இப்படி வரும்...., 'என்னவாயிற்று? /அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாகும் இந்தப் பெண்ணின் கனவுக்கு/ அவள் இப்போது 50CENTன் வீடியோவில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்/' என்று.

தனிப்பாடலான 'வீடியோ' இண்டியா அரியை பிற பாடகர்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது என்றால், அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான் 'இந்தியாவுக்கான பயணம்' (Voyage to India), அவரை அதிக இசை இரசிகர்களிடம் அறிமுகம் செய்திருப்பதோடு கிராமி விருதுகளையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

'எதுவென்றாலும் நீ எனக்குச் சொல்லித்தந்தாய்
நானும் காரணங்களோடு கற்றுக்கொண்டேன்
நான் நம்புகின்றேன்; நாங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டவர்கள்
'நாளை' எதை வைத்திருக்கின்றது என்று தெரியாது
நான் இந்தக் கணத்தில் வாழ்கின்றவள்
நான் ஆணெனும் உனக்காய் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
நீ, நான் - எனது பிரார்த்தனைகளில் கேட்கின்ற எல்லாமாயும் இருக்கின்றாய்
ஆகவே உன்னை எனது தேவதைகள்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும்
உனது அன்பு என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றது
நீ எனது வாழ்வின் பிடிமானம்
நான் சிரித்துக்கொண்டிருப்பதற்கும் நீயே காரணம்
நீ ஒரு அழகிய வியப்பு!
'

என்று தனது இரண்டாவது இசைத்தட்டில் மலரும் புதிய உறவில் சிலிர்த்துப்போகின்ற இண்டியா அரி, மூன்றாவது இசைத்தட்டிலும் உறவுகளைப் பற்றியே பேசுகின்றார். தனது கடந்த (மூன்றாண்டு)கால உறவையும், பின் நிகழ்ந்த பிரிவையும் இறுதியாய் வந்த இசைத்தொகுப்பில் சொல்ல விளைவதாகவும், ஆனால் கசப்பான நினைவுகளில் தங்கிவிடாது வாழ்வின் இயல்பென வலிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்வதையே தான் பேச விரும்புவதாகவும் அரி கூறுகின்றார். Wings of Forgivenessல்....

'நெல்சன் மண்டேலாவால்
தன்னை ஒடுக்கியவர்களை மன்னிக்கமுடியுமென்றால்
நான் நிச்சயம் உன்னை மன்னிப்பேன், உனது தனித்துவத்திற்காய்.
.....
காந்தியால் persecutionஐ (தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) மன்னிக்க முடியுமென்றால்
நிச்சயமாய் உனது பரிதாபத்துக்காய் என்னால் உன்னை மன்னிக்கமுடியும்.
....
இயேசு அவருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களை மன்னிக்கின்றார் என்றால்
நிச்சயமாய் நாங்கள் இதற்கொரு முடிவு கண்டு நகரமுடி
யும்'

என்று மன்னிப்பதன் மகோன்னதத்தை அருமையாக கூறுகின்றார். அதே பாடலில்.....

'குற்றங்களும் இரகசியஙளும்
நிறைந்த கடலில்
நான் நீந்தத்தொடங்கினேன்
என்னை யாரென
அடையாளங்காண்பதற்காய்.....
யாருமற்ற ஒரு தீவில்
எனக்குரிய தனிமையில்
உயர்ந்த உண்மை எதுவெனக் கேட்டேன்...'

என்று கூறிவிட்டு, நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் அதியுயர்ந்த உண்மையாக இருக்கும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாய் கூறிக்கொள்ளவும் செய்கின்றார்.
indianew
அதே போல இன்னோரு பாடலான 'I am not my hair', ஒரு பெண்ணின் தலைமயிரை வைத்து சமூகம் செய்யும் அரசியல் குறித்து பேசுகின்றது. (தமிழ்பெண்களுக்கு உள்ளது போன்றே) கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் எப்படி தலைமயிரை கட்டமைக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் இருக்கின்றன என்கிறார் அரி. ஒவ்வொரு பருவத்திலும் எப்படி எப்படி தனது தலைமயிர் அலங்காரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்றும், பிறர் இவ்வாறான தலைமயிர் அலங்காரத்தை முன்மாதிரியாக வைத்து எப்படி எல்லாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்/பேசுகின்றனர் என்பதையும் இந்தப்பாடல் பேசுகிறது. இறுதியில் தனக்குரியதை தேர்வு செய்யும் உரிமை தனக்கு மட்டுமே என்று கூறுகின்றார். பெண்களின் தலைமயிரை வைத்து ஆண்கள் செய்யும் அரசியலை மிக அழகாக புற்றுநோய வந்த பெண்ணின் படிமம் மூலம் உடைத்துக்காட்டுகின்றார்.

மார்பகப் புற்றுநோயும், அதன் பின்பான சிகிச்சையும்
அவளது அழகையும் பெருமையையும் எடுத்துச் சென்றன
அவள் கடவுளிடம் உறுதிமொழி எடுத்தாள்
நான் உயிர்தப்பினேன் என்றால்
எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசிப்பேன் என்று
தேசியத் தொலைக்காட்சியில்
அவளது கண்கள் மின்னலடிக்கின்றன வைரங்களாய்
அவளது வழுக்கைத் தலை ஒரு முழுநிலவாய் மினுங்குகின்றது
முழு உலகுக்குமாய் அவள் இப்போது பாடிக்கொண்டிருக்கின்றாள்...hey
'

indai2

வனப்புடன் இருப்பதாய் கட்டமைக்கப்படும் அமெரிக்க வாழ்வியலை, பிரேசில் நாட்டில் தான் சந்தித்த பையன் ஒருவனின் பார்வையால் அரி சீர்குலைத்துக்காட்டுகின்றார் இப்படியாக....,

'என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை
உணரவைத்தான்
பிரேசில் நாட்டில்
ஒரு ஒதுக்குப்புறத்தில் சந்தித்த
இளஞ்சகோதரன்;
அவனும் என்னைப் போலவே பாடவிரும்பினான்
அவனது வீட்டுக்கு யன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை
ஒரு எளிய வாழ்க்கை வாழும் அவன் மிகுந்த ஏழ்மையாக இருந்தான்
இவற்றுக்கும் மேலாய் அவனுக்கு பார்வையும் இல்லை
ஆனால் அது அவன் 'ஒளி'யைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை
அவன் கேட்டான், அமெரிக்கா எப்படி இருக்குமென்று
எனது பதில் முழுதும் முறைப்பாடுகளாகவே இருந்தன
அவன் சொன்னான், இங்கே வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது...
அவன் எனக்கு சொல்லித் தந்தான்;
சொர்க்கம் என்பது எனது மனதின் உள்ளேதான் உள்ளது என்று.'

Pop, R&B, Rap பாடுபவர்களின் பாடல்களை ஓரளவு உற்றுக கவனிக்கின்றவன் என்றவகையில், இண்டியா அரியின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கவிதைக்குரிய தனித்துவத்துடன் மிளிர்கின்றன என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம் என்று நினைக்கின்றேன் (Kanye Westன் பாடல்களிலும் இவ்வாறான நம்பிக்கைகள் துலங்குகின்றன). இண்டியா அரியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை அவற்றின் பின்புலங்களுடன்/அரசியல்களுடன் விரித்துச் சொல்ல முயல்கின்றன. அவற்றில் அதீத காழ்ப்போ, வெறுப்போ இல்லாது சமூகத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்னும் ஆழமாய் நேசிக்க அரியின் பாடல்கள் கற்றுத் தருகின்றன என்பதுவும் முக்கியமானது. மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட நொய்ந்துபோன வார்த்தைகளை வைத்து பாடல்கள் இயற்றப்படுவதைத் தவிர்த்து தனக்குரிய தனித்துவங்களுடன் புதிய படிமங்களையும், அர்த்தங்களையும் தேடும் அரியின் பாடல்கள் கேட்கும் எவரையும் இலகுவில் வசீகரிக்கச் செய்வதில் வியப்பேதுமில்லைதானே.

குறிஞ்சிப்பூ

Thursday, August 31, 2006

பயணஞ் செய்தலை ஓடுகின்ற ஆற்றுக்கு உவமிக்கலாம் போலத் தோன்றுகின்றது. இப்போது ஓடுகின்ற ஆறு முன்னர் ஓடியது போன்றதல்ல என்பது போல ஒவ்வொரு பயணமும் புதுப்புது அனுபவங்களை, சிலிர்ப்புக்களை தந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே நேர்கோட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் நாளாந்த வாழ்வை இடைவெட்டி ஒழுங்கைக் குலைக்கச் செய்கின்ற பயணங்கள் எப்போதும் சுவாரசியந்தரக்கூடியனதான். வீட்டில், வீட்டின் அறைகளுக்குள் மட்டுமே மர்மச்சுழிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன எனக்கற்பிதம் செய்து, பொழுதை வெயிலோடு பந்தென எறிந்து அலுப்புடன் ஆட்டம் ஆடுகின்றவனுக்கு வெளியே கால்களை முன்னகர்த்தும் எந்த அனுபவமும் அலுக்கப் போவதுமில்லை.

வாழ்வை ஒரு கொண்டாடும் நகர் அது. தம் பண்பாடுகளை கலாச்சாரங்களை செழிப்புடன் வைத்திருக்க விரும்புவர்கள் எனினும் தமது நம்பிக்கைகளை எவர் மீதும் திணிக்க விரும்புவதில்லை அந்நகர் வாழ் மக்கள். தேவாலயங்கள், ஆடுகின்ற கிளப்புக்கள், நிர்வாண விடுதிகள், தெருவில் சிகரெட் பிடித்தபடி,ஒளிரும் தோள்பைகளை தாங்கியபடி மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்' செய்யும் பெண்கள், ஒரினப்பாலாருக்கான் கேளிக்கை அரங்குகள், 'பெண்களுக்கு மட்டும் அனுமதி'யென அழைப்புவிடுக்கும் விடுதிகள் எல்லாமே/எல்லோருமே நிரம்பக் கிடைக்கும் உங்கள் நம்பிக்கைக்களுக்கேற்ப, நீங்கள் வரிந்துகொண்ட வாழ்வின் பாதைக்கேற்ப எதையேனும் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்; இல்லையெனில் விலத்திப்போகலாம். ஆனால் எவரும் எவரையும் மிரட்டமுடியாது; எவரும் எவர் மீதும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடவும் முடியாது.

e4

ஆமாம் அந்த ஆண்டு
மலர்கள் நிறையப் பூத்திருந்த ஓர் ஆண்டு
கண்ணுக்கு மைதீட்டிய பலபெண்கள்
அந்த ஆண்டில்
வீதிகளில் உலவினர் தேர்போல
(ப 10)


ஊரில் இருந்தவரை பழமை வாய்ந்த கோயில்களின் மீது ஈர்ப்பிருந்தது. வருகின்ற வருமானத்துக்கேற்ப வர்ணங்களைப் பூசி, இன்னுமின்னும் மனிதர்களை வர்ண'ஜிகினா'க்காட்டி உள்ளிழுக்கும் கோயில்களைவிட, பழமை ஊறிய, பாசி படிந்த, சிலைகளின் செப்பு துருவேறிய தலங்கள் மீது அதிக ஈர்ப்புண்டு. அதுவரை சாதாரணமாய் தெரிந்த பெண்கள் எல்லாம் கோயிலுக்கு வரும்போது விபரித்துச் சொல்லமுடியாத உணர்வுகளை மனதுக்குள் கிளர்த்திக்கொண்டிருக்கின்றார்கள். . 'உன் கடைக்கண் பார்வை பெற்றால்...' எல்லாவற்றையும் சாதித்துவிடுவேன் என்று பாரதி எழுதும்போது அவன் கோயிலொன்றுக்கு அருகிலிருந்திருக்கவும் கூடும். சனநெரிசல்களிடையே,மூலஸ்தானக் கடவுளைக் காண்பது எவ்வளவு கடினமானதோ, அவவளவு கடினமானது தோழிகளுடன், பெற்றோருடன், சகோதரகளுடன் வரும் ஒரு பெண்ணுடன் கோயிலில் வைத்து இயல்பாய் உரையாடுவதும். எனினும் இத்தகைய இறுக்கங்களிடையேயும் பார்வைகள் பரிமாறப்படுகின்றன், மவுன பாசைகள் கற்றலையில் அதிர்வெண்ணாகின்றன, திருநீறு சந்தனம் பிடித்தமான கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறான பொழுதுகளில் மனம் மிகச் சாந்தியடைந்து உலகம் தழுவிய அன்பு பெருக்கெடுத்து ஓடவும் தொடங்குகின்றது. கடவுளர்களும் தமது இருப்பிறகான ஒரே நோககம் -இனங்களை மொழிகளை மதங்களைத்தாண்டிய - இவ்வாறான பொழுதுகளை உருவாக்குதலேயென மனம் நிறைந்து புன்னகைக்கக்கூடும்.

காலம் செல்லச் செல்ல கோயில்கள் மீதும் கடவுளர் மீதும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்துபோய் சித்தர்களோடும் யோகிகளோடும் இப்போது எஞ்சி நிற்கின்றது. சிறுவயதில் உனக்குப் பிடித்தமான கார்த்திகேயன் பின்பான பொழுதுகளில் உலர்ந்துவிட்டான். என்னைப் போலன்றி, உனக்குள் கடவுளின் மரணம் விரைவில் நிகழ்ந்தமைக்கு, உனது பரந்த வாசிப்பும், இடதுசாரிக் குடும்ப பின்புலமும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும். குறிஞ்சி மலையில் குமரன் புன்னகை ததும்ப வீற்றிருக்கின்றான். அவனைப் பார்க்க எல்லாப் பருவங்களிலும் மலையேறிப் போய்விடமுடியாது. பனிக்காலங்களில் -மனிதர்களைப்போல-குளிர் தாங்காது தன் தலம் நீங்கி மலையடிவாரம் சென்றுவிடுவான் போலும். கோயிலுக்குள் போக விரும்புவர்களை கோயிலுக்குள் போகச் சொல்லிவிட்டு, காட்டை ஊடுருவி மலையடிவார ஆச்சிரமத்தை அடையும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்குகின்றோம். கோயிலின் சாம்பிராணிப் புகை நம்மைப் பின் தொடர்கின்றது போலும்.

e2

உனக்குத் தெரியுமா? தமிழக நிலப்பரப்பிலிருந்த் மனிதர்களின் ஆதிக்கடவுளாய் முருகன் இருந்திருக்கின்றான், அவனுக்கு அப்போது வள்ளி என்ற குறத்தி மட்டுமே துணையாக இருந்திருக்கின்றாள்; பிறகு இந் நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தவர்களால் முருகன் அவர்களினதும் கடவுள் ஆக்கப்பட்டு தெய்வானை என்ற இன்னொரு துணையும் உருவாக்கப்பட்டார் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன் என்கின்றேன். எங்கே போனாலும் உன் குதர்க்கப் புத்தி மாறாதாக்கும் என்று ஒரு முறைப்புப் பார்வை பார்த்துவிட்டு மலையினிலிருந்து வெண்பஞ்சைப் போல இறங்கிக்கொண்டிருக்கின்றாய். இப்போது மழை மெல்லியதாய் தூறத் தொடங்குகின்றது. மலையில் மழையில் கருஞ்சாம்பர் வானப்பின்னணியில் பசுமை விரிந்த நிலஙகளினுடாக நடந்து செல்லுவது மிகவும் இதமானது. தியான மணடபத்துடன், மரத்தால் செய்யப்பட்ட சிறு கோயில்கள், தங்குமிட விடுதிகளுடன் அந்த ஆச்சிரமம் தென்படத் தொடங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் எழுதலாம்
வெவ்வேறு விதமாக இந்த மழையை
முகில் கவிந்திருந்தபோது
அண்ணாந்து பார்த்து
வானம் விழப்போகுதென்று
நீ சொன்னபோது
இந்தப் பத்தாவது பாடல் பிறந்தது
மழைபற்றிய
பதினொராவது பாடலுக்கான ஆயத்தங்களுடன்
(ப 35)


தியானம் பழகுகின்றவர்களின் நிசப்தத்தினூடே இவ்வழகிய பூந்தோட்டங்களில் அலைந்து திரிவது இதுவரை அனுபவித்திராத அனுபவம். நெற்றியில் விழுந்த மழையின் துளியொன்று இறங்கி உன் உதட்டில் மினுங்குகையில் எமக்கான காலம் உறைகின்றது. நானும் நீயும் சேர்ந்து நனைவதற்காய் வருடங்களாய் காத்திருந்த பெருமழை இப்போது பொழியத் தொடங்குகின்றது.


கவிதைகள்: சோலைக்கிளியின் 'என்ன செப்பங்கா நீ' யிலிருந்து

புத்தக வாசிப்பு

Monday, August 28, 2006

சொல்வதால் வாழ்கிறேன் - அ.மார்க்ஸ்

நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாக வாசிப்பவருக்கு அமைந்துவிடுகின்றன. சிறுகதைகள் பற்றி எஸ்.பொ ஒருமுறை விவரிக்கும்போது, ஒரு வாசகர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது 'சா நான் சொல்ல நினைத்ததை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே' என்று ஒரு வாசகரை வாயூறச் செய்துவிட்டால் அந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகின்றது என்று கூறியிருப்பார். அப்படி ஒரு மனோநிலையுடன் வாசித்து முடித்த தொகுப்பு அ.மார்க்ஸின் 'சொல்வதால் வாழ்கிறேன்' என்று கட்டுரைகளின் தொகுப்பு.

File0001

அ.மார்க்ஸ் பலவேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சொல்ல வந்த விடயங்களை ஆக அதிகம் நீட்டி முழங்காமல் நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமாகவும் எளிமையாகவும் அ.மார்க்ஸ் எழுதி முடித்து விடுகின்றார். ஒரே கருத்தை ஒன்பது விதமாய் எழுதி 9X9 தத்துவ/அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் அ.மார்க்ஸின் பரந்த வாசிப்பையும் அவ்விடயங்களைச் சொல்ல அவர் பயன்படுத்தும் -வாசகரைப் பயமுறுத்தாத- மொழி குறித்தும் நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.

கடந்து சென்ற நூற்றாண்டின் பக்கங்களை எழுந்தமானமாய் எட்டிப்பார்க்கும் முதலாவது கட்டுரை(தொகுப்பில் இருப்பதில் இதுதான் சற்று நீளமான கட்டுரை) பல விவாதத்திற்கான புள்ளிகளைக்கொண்டுள்ளது. அதேபோன்று பிரமீளின் கதைகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை வித்தியாசமான கோணத்தில் பிரமீளை அணுகுகின்றது. பிரமீளுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை இருந்தாலும் அவர் பிற ஆன்மீக எழுத்தாளர்களைப் போல எழுதவில்லை எனவும், தமிழில் பன்முகத்துடனும், விளிம்புநிலை மனிதர்களை முக்கிய கதாபாத்திரங்களாய் கொண்டும் எழுதியிருக்கின்றார் என்று ஒரு கட்டுரை பேசுகிறது. அதே போன்று இந்துத்துவவாதிகளின் பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராய் சிறுதெய்வ வழிபாடுகளை நாம் முன்னிறுத்த வேண்டிய அவசியமிருந்தாலும், அவை மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமைந்துவிட முடியாது என அ.மார்க்ஸ் விவாதிக்கின்றார். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்கள் மதங்களுக்குள் மட்டும் தேங்கிப்போனவர்கள், அதற்கப்பால் அவர்களால் நீட்சியடையமுடியவில்லை என்பது போன்ற அவதானங்கள் முக்கியமானவை.

பெளதீகப் பேராசிரியராக இருந்த அ.மார்க்ஸ், ஈழப்போராளியொருவரின் பாதிப்பில் அரசியல்/இலக்கிய திறனாய்வுத்தளத்துக்கு வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மனிதருக்கு, ஒவ்வொரு அமைப்புக்கு என்று தனிப்பட்ட அரசியல் உள்ளதுபோல, காலச்சுவடுக்கு, ஜெயமோகன்-வசந்தகுமார்-தேவசகாயகுமார் & கோவுக்கு, திண்ணை & விளக்கு கோவுக்கு உள்ள அரசியல் போல என்னால் அதிகளவு உடன்பட முடிகின்ற அரசியலைப் பேசுகின்ற குழு நிறப்பிரிகைக்குழுதான். குழுவாக இயங்கியபோது மட்டும் அல்ல, இப்போது தனித் தனியாக இயங்கும்போதும் அவர்களது ஆளுமைகள் மிகவும் வசீகரிக்கின்றன. (அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், ரவிக்குமார், பொதியவெற்பன், பொ.வேல்சாமி, சமயவேல்....).

எந்த அமைப்பும் சிறிது சிறிதாக வளர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உச்சத்தை அடைந்து பிறகு பிளவுபடுவதும் வெடிப்பதும் இயற்கையானது. அந்த அளவில் நிறப்பிரிகை குழுவின் பிளவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இன்று தனித்தனியாக இயங்கும் நிறப்பிரிகை நண்பர்கள் தமக்குப் பின்பான அடுத்த சந்தியினர் குறித்தும் அக்கறைப்படவேண்டும். தமது சிந்தனைகளின் நீட்சிகளை தொடர்ந்து வரும் சந்தியினருக்கு வழங்க, ஆகக் குறைந்தது இவ்வாறான் உரையாடல்களையும், கட்டுடைப்புக்களையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டாவது இருக்கவேண்டும்.

'சொல்வதால் வாழ்கிறேன்' தொகுப்பில் -நான்- அடிக்கோடிட்டு வாசித்த சில பகுதிகள் கீழே

-பின் நவீனம் எதையும் இயற்கை என ஏற்றுக்கொள்வதில்லை. எந்த விவரணமும், சொல்லும் முறையும் நடுநிலையானதல்ல. எல்லாமே கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப்படுபவை, கருத்தியல் தளத்தில் கட்டப்படுபவை. இதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. எல்லாவிதமான கதை சொல்லாடல்களையும் 'இயற்கை நீக்கம்' (de-naturalisede-toxing) செய்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு.
(ப 53)

-இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் முக்கியமானவை (ஆலா, லங்காபுரி ராஜா, கோடரி...முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்களுடன் இனவிடுதலை என்கிற பெருங்கதையாடலை முன்வைத்துக் 'குழு மனிதவாதிகளாக' அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும், அடாவடிக்காரர்களாகவும் மாறிப்போகின்ற நிலையையும் புனைவு நியாயங்கள் சிதறாமல் செதுக்கித் தருகின்றார். 'தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்' என்பது அவர் கூற்று. புத்த பகவான் சொன்னதுபோல (இப்படிப் பெருங்கதையாடலாக இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலை செய்யவே பயன்படும்.
(ப 44)

-இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை (1973) தேசப்படம், தேசியக்கொடி, அரசியல் சட்டம், கடவுளரின் புனித உருவங்கள், கம்ப இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்கள் ஆகியவற்றை அழிப்பவராகவும் அவமானம் செய்தவராகவும் இருந்தார் என்பதும் தேசத்திற்கும், மொழிக்கும், மரபுகளுக்கும், இந்து மதத்திற்கும் விசுவாசமற்ற சுயமரியாதை மிக்கத் தன்னிலைகளை உருவாக்குவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கன. பன்நூற்றாண்டுகளாக இங்கே மேலாண்மை செய்துவந்த பார்ப்பனியம் சற்றே கதிகலங்கியது இந்த நூற்றாண்டில்தான், அதுவும் பெரியாரைக் கண்டுதான்.
(ப 21)

-'டாட் காம்' களில் குறிப்பாகத் 'திண்ணை' டாட்காமில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களில் உள்ளார்ந்து நெளிந்து செல்லும் இந்துத்துவ இழையை, கலாச்சார ஏக்கத்தை 'டாட் காம்' வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

தமிழக எழுத்துலகை ஆக்கிரமித்திருக்கும் உயர்சாதி எழுத்தாளர்களின்/அறிவுஜீவிகளின் பிடி சற்றே நெகிழத் தொடங்கியுள்ளதையும், இதுகாறும் ஒடுக்கப்பட்டு கிடந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் தன்னம்பிக்கையோடு செயற்படத்தொடங்கியிருப்பதையும் கண்டு, பழைய பீடங்கள் விசத்தையும், வெறியையும் கக்கத் தொடங்கியிருக்கின்றன....
(ப 88)

-மதநீக்கம் - பார்ப்பன நீக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைச் சரியாக வற்புறுத்தியவர் பெரியார். அரசியல் சமூகக் களத்தில் பார்ப்பன நீக்கம் என்ற குரலை திராவிட இயக்கம் முன் வைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் நவீனங்கள் பேசிய நமது உயர்சாதி எழுத்தாளர்கள் இத்தகைய பார்ப்பனீய நீக்க முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியக்கத்தக்க அளவிற்கு சர்வதேசப் பார்வை கொண்டவரும், இரசியப் புரட்சியை கூர்ந்து அவதானித்து வாழ்த்தியவருமான பாரதியால் கூட இங்கே உருவான பார்பனரல்லாதோர் இயக்கத்தைச் செரிக்க முடியவில்லை. கடும் வார்த்தைகளால் சாடுகிறார். தமிழ் நவீனத்துவத்தின் எல்லைக் கல்லாகச் சுட்டிக்காட்டப்படும் 'மணிக்கொடி' இதழ் பார்ப்பனரல்லாதவர் இயக்கத்தைக் கடுமையாகச்சாடி வந்தது. 'சுயமரியாதைக்காலிகள்' எனத் தொடர்ந்து எழுதியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. 'தலைவர் அவர்களேங் தாமில்ப் பெருங்குடி மக்களேய்ங்....' எனத் திராவிட இயக்க மேடைப் பேச்சைக் கேலி செய்து கவிதைகள் எழுதினார் ஞானக்கூத்தன். ஏதோ திராவிட இயக்கம் என்றாலே வெறும் மேடைப் பேச்சுதான் என்பதைப்போல, இன்றைய இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் குறையாத தொனியுடன் மதமாற்றத்தையும் கிண்டலடித்தார் புதுமைப்பித்தன். மார்க்சீய அணுகுமுறையையும் அடித்தள மக்கள் இலக்கியங்களையும் 'முற்போக்கு' என்றும் 'வரட்டுத்தனம்' என்றும் இவர்கள் அளவிற்கு இழிவு செய்தவர்கள் எவருமில்லை
(ப 72)

-நம்மைப் பொறுத்தவரை பாரதி மீதோ, பித்தன் மீதோ அதீதப் பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனீயத்தையும், புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய, மதவாதக் கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நம் கண்டிக்காதிருந்ததில்லை. அதேசமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் 'திருஉரு'க்களை (icons) விமர்சனம் செய்யக்கூடாது என்பது எத்தனை மோசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவது. நாம் இரண்டையும் எதிர்ப்போம்.
(ப 94)

Monday, February 27, 2006

- ஒவ்வொரு விவாதமும்
அந்தக் கொலையில் மையங்கொள்ளும்
அல்லது
மூச்சுத்திணறவைத்தபடி முற்றுப்பெறும்
அதே கொலையில்
.......
- ஆணாதிக்கத்தைப் போல
என்றும் வெறுப்பேன்
உங்களின் மேலாதிக்கத்தையும்.
...........
- இரும்புக் கவசத்தால்
கோதுமைமா அள்ளித்தந்தவர்
பிறகு
மண்டைகள் உடைத்ததையும்
வீட்டினருகிலிருந்த முகாமிலிருந்து
அலறும் குரல்கள்
நம் இரவுகள் தின்றதையும்
மறந்தும்விடலாம்
செம்மணிப் புதைகுழிபோல
...........
- புதைந்த குழியிலிருந்து
எலும்புக்கூடுகளை எடுத்தால்
வெறுப்புத்தான் எஞ்சும்
மனிதத்தை இழக்காதிரெனும்
உம் அறிவுரைகளையும் கேட்டோம்:
மறந்தோம்
வைத்தியசாலைக் கொலைகளை
அகதிமுகாம் அவலங்களை
தோழிகளின் யோனிச்சிதைவுகளை
...........
- கிளிப்பிள்ளையாய்
ஒரு உயிருக்கு
பல்லாயிரம் கொலைகளைச் சமானஞ்செய்வதில்
ஜன்ஸ்டீனின் e=mc^2மாய்
எஞ்சிய அன்போ
வெறுப்போ அடங்கியிருக்கலாம்
...........
- விந்தைதான்.
தலைவரின் தாயைப் பிணமாக்கியவரை
மறக்கவும் முடியும்
செய்த கொலைகளுக்கு
மன்னிப்புக் கேடகவும் தோன்றும்
'கொலையாளியின்' ஜீனை பிரதமராக்கி
தேசியம்பாடவும் முடிகிறது
...........
- உங்களுக்கு
மனிதத்தில் அக்கறையிருந்தால்
ஆயுதங்களில் நம்பிக்கையில்லையெனில்
தலைவருக்காய்
பலியிடப்பட்ட ஆயிரம் 'வீரர்கள்' குறித்தும் பேசுங்கள்
வல்லரசுக் கனவுகளையும் கைவிடுங்கள்
...........
- ஒடுக்கப்பட்டவர்கள்
என்றும் விளைவது
ஆண்-பெண் உறவின்
பரஸ்பரப் புரிந்துணார்வு
உங்களின் விருப்பு
ஆண்டாள்-அடிமை விசுவாசமெனில்
கட்டுங்கள் நடையை
..........
- *வீழ்வதும் எழுவதும்
எதுவெனினும்
நாம் நாமாகவே
இருக்கப் பிரியப்படுவோம்.

*தோழியொருத்தின் கடித வரிகள்

மூன்று படைப்பாளிகள்

Wednesday, February 22, 2006

-வலைப்பக்க அறிமுகங்கள்-

(1)சனாதனன்


ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம்.

(2)சுஜித்(ஜி)


இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem's lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. 'அன்புக் காதலி'யும், 'பயணமும்' மிகவும் பிடித்த பாடல்கள். 'ஒரு சில பெண்களின்...' பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

உண்மையில் எத்தனையோ சீரழிவுகள் நிரம்பிக் கிடக்கும் நமது சமூகம் போன்ற ஒன்றில் தீவிரமாய் சில விசயங்களைப் பேசுவதை விட, நக்கலடித்து எழுதுவதுதான் நிரம்பப் பேரை சென்று அடையும் என்ற தனிப்பட்ட எண்ணம் என்னளவில் உண்டு. இந்த ஆல்பத்தில் (Singles) தான் வாழும் இலண்டன் தமிழ்ச் சமூகத்தையும், தன்னையும் நையாண்டி செய்து பாடப்பட்ட பாடல் ('கொஞ்சம் கொஞ்சம் நில்') இரசித்துக் கேட்கக்கூடியது. இரண்டாவது ஆல்பத்தில் சேர்க்கப்படவிருக்கும் Buyakka பாடலை (நட்பின் நிமிர்த்தம்) முழுதாய்க் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தபோது, மிகவும் பிடித்திருந்தது (அதற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது என்க :-)). இதன் Memo version ஐ இங்கே சென்றும் கேட்டுப் பார்க்கலாம்

இதுவரை ரீமிக்ஸ் செய்து பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் சுஜீத்தைப் போல அடுத்த கட்டங்களுக்கு நகர முயற்சிப்பது நமது தமிழ் அடையாளங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் நிலை நிறுத்த ஏதேனும் ஒருவகையில் உதவி புரியலாம் (I beleive it's the time to change these tamil guys from DJs (or MCs) to Rappers. Also If it is expensive to release whole album at the beginning, they may release single CDs like black guys releasing mix tapes. So they can know who are the audience for them and can get sponsors). இவ்வாறு தன்பாட்டில் பாடல்களை எழுதி, பாடவும் செய்கின்ற ஒருவரைக் கண்டபோது, இவர் வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நினைத்ததைப் போல எழுத்து, விவாதங்கள் என்ற வேறு தளங்களிலும் சுஜீத் ஈடுபாடுடையவர் என்றறிய முடிந்தது. ஆனால் தனது இசை சம்பந்தமான விடயங்கள், பிற விடயங்களோடு கலந்து வாசிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னொரு புனைபெயரில் அவற்றில் இருக்கின்றார். எப்படி எனினும் அவர் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பது நல்ல விடயந்தானே. நாமும் வாழ்த்துவோம்.

(3)திருமாவளவன்


புலம்பெயர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு கவிஞர். அவருடனான அரசியற்புள்ளிகள், இலக்கியவாதிகள் பற்றிய பார்வை என்று பல புள்ளிகளில் எனக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் என்னை மிகவும் வசீகரிப்பது நறுக்குத் தெறித்தாற்போல வந்து விழும் அவரது கவிதை நடை. பனி வயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல் என்று இரண்டு கவிதைத் தொகுதிகளையும் மிகக் குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்டவர். அவரது கவிதைகள் மட்டுமின்றி கதைகளையும், பிற முயற்சிகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.

மலர்களும், 'மலர்களும்'

Tuesday, February 14, 2006

காதலர் தினம் என்றவுடன் எத்தனையோ நினைவுகள் ஞாபக அலைகளில் புரள்கின்றன. காதலர் தினம் என்பது 'காதலிப்பவர்க்கு' மட்டுமல்ல அன்பைப் பகிர விரும்பும் எந்த உறவுகளுக்கும் உரியது என்று விரிவான தளத்தில்தான் எடுத்துக்கொள்கின்றேன்.

இப்படித்தான் பலவருடங்களுக்கு முன், படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணில் ஈர்ப்பு வந்து, கனக்க ரோசாப்பூக்கள் வாங்கி வைத்தபடி அவருக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். வாங்கி வைத்திருந்த ரோசாப்பூக்கள் அவரது வயதைவிட கூடுதலாக - ஒன்றரை டசினுக்கு- மேலாய் இருந்தது. சரி பிள்ளை ரோசாப்பூக்களில் மயங்கி என்னையும் உச்சிமுகர்ந்து போகப்போகின்றது என்று கனவில் அமிழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளையோ அதை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு காற்றாய் நகர்ந்துவிட்டது. காதல் முகிழவில்லை என்ற வருத்தத்தைவிட எவ்வளவு காசு செலவழித்து வாங்கிய பூக்கள் வீணாய்ப்போய்விட்டதே என்ற கவலைதான் அதிகம் என்னில் எஞ்சியது. அதுவும் அந்தக்காலத்தில் ஒரு டொலருக்கே அம்மாவிடமும் அண்ணாக்களிடமும் சிங்கியடித்துக்கொண்டிருந்த காலம். ரோசாப்பூவைக் கொடுக்கமுன்னர் நான் ரோசாப்பூக்களின், விலைப்பட்டியலை முன்னுக்கே நீட்டியிருந்தால் ஆகக்குறைந்தது ரோசாப்பூவை குப்பைத் தொட்டிக்குள் எறியாது -recycle செய்வதுமாதிரி வேறொருவருக்கு கொடு என்று- அந்தப் பெண் கூறிவிட்டாவது சென்றிருப்பார் என்று பிறகு யோசித்துமிருக்கின்றேன்.

இந்தச் சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது என்று நண்பர்களுடன் அலசி ஆராய்ந்தபோது, 'டேய் காதல் என்றால், டசின் கணக்கில் பூக்கள் கொடுப்பதில்லை, ஒன்றே ஒன்று என்று ஒரு சிவப்பு ரோஜாவை மட்டும் கொடுக்கவேண்டும்' என்றார்கள் (அதாவது என்னிடம் இருக்கும் ஒரேயொரு இதயம் உனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சிம்பாலிக்காய் காட்டவேண்டுமாம்). ஆனால் நான் நினைத்தது என்னவோ, ஒரு ரோஜாவைக் கொடுத்தால் இவ்வளவு கஞ்சத்தனமாய்த்தான் பிறகு அன்பையும் காட்டுவான் என்று அவர் நினைக்கககூடும். ஆகவே ஒன்றரை டசினில் ரோசாப்பூக்களை வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு விசாலமான அன்பு தன்னில் இருக்கிறது என்று நினைத்து உடனேயே என் நேசததை பிள்ளை ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன். நாம் நினைப்பவை எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? ரோசாப்பூக்களைக் கொடுத்தவுடனேயே, குப்பைத் தொட்டிக்குள் bastket ballஜ வளையத்தில் எறிகின்றமாதிரி துல்லியமாய்ப் போட்டவருக்கு, எப்படி நான் கண்டுபிடித்த காதற்தத்துவங்களையோ, அதற்கான பொழிப்புரைகளையோ, பொறுமையாகக் கேட்க நேரம் கிடைத்திருக்கும்?

பிறகு, ஒருமுறை நண்பன் ஒருவன் தனது காதலியின் தாயாரை முதன்முதலாய்ச் சந்திக்கப்போகின்றேன், 'என்னடா அவருக்குக் கொடுக்கலாம்?' என்றபோது 'பூக்களை வாங்கிக்கொடு' என்றேன். 'நான் அவாவைக் காதலிக்கிறனா அல்லது அவாவின்ரை மகளைக் காதலிக்கின்றேனா என்று நீ நினைக்கின்றாய்?' எனப் 'புத்திசாலித்தனமாய்' அவன் திரும்பிக்கேட்டான். இப்படி விதாண்டவாதம் கதைப்பவனோடு என்னத்தை மேற்கொண்டு கதைப்பதாம்? 'நீ பூவை வாங்கிக்கொடுத்தால் என்ன, இல்லை விளக்குமாற்றை வாங்கிக்கொடுத்து உன்ரை மாமியின்ரை கையால் அடிவாங்கினால் என்ன, இனிமேல் என்னிடம் மட்டும் அட்வைஸ் கேட்காதே' என்று கோபத்தில் கூறிவிட்டு அமைதியாகிவிட்டேன்.

Mothers day, பிறந்ததினங்கள் என்றால், நான் அதிகம் பூக்களை வாங்கித்தான் பரிசளிப்பேன். பூக்களில் எப்போதும் ஒருவித அலாதிப் பிரியம் உண்டென்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற விடயங்களைப் போலத் தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது என்பது மற்றொரு காரணமும் ஆகும். இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பலவருடங்களாய் மறந்து இருந்த இந்தப்பழக்கம், சென்றவருடம் இயல் விருது பத்மநாப ஐயருக்கு வழங்கியபோது மீண்டும் விழித்துக்கொண்டது. விழாவன்று, மேசை நிறைய ரோசாப்பூகளை அழகுபடுத்துவதற்காய் வைத்திருந்தார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி, இருந்த ரோசாப்பூக்கள் அனைத்தையும் வீட்டுக்கு கொண்டுபோகவேண்டும் என்ற அவசரத்தில் சுருட்டிக்கொண்டிருந்தார். வளர்ந்த மகன் யாராவது என்னைப்போல வீட்டில் சோம்பறியாயிருந்து, யாராவது பெண்ணுக்கு ரோசாப்பூ கொடு என்று மகனுக்கு அன்புக்கட்டளையிடுவதற்காய் பூக்களை அவர் சேகரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

நானும் இடையில் புகுந்து ஒரு ரோசாப்பூவைக் கடினப்பட்டுக் கைப்பற்றினேன். பிறகு அது பத்திரமாய் களவு போய்விடாமல் இருக்க புத்தகத்தின் பக்கங்களின் இடையில் அதை வைத்துக்கொண்டிருந்தபோது, கண்டவர்கள் எல்லாம், 'என்ன யாரோ உமக்கு ரோஸ் தந்திச்சினமோ?' என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ரோசாப்பூவை யாராவது தந்திருந்தால், இந்த நேரம் பச்சைக் கிளியோடு வானத்தில் அல்லவா பறந்துகொண்டிருப்பேன். இப்படி அலுப்பூட்டும் after ceremony இலக்கியக்கூட்டங்களில் ஏன் நான் நிற்கப்போகின்றேன் என்று பிறருக்கு விளங்காது, ரோசாப்பூவுக்கும் மட்டும் கேட்கக்கூடியதாய்க் கூறிக்கொண்டிருந்தேன்.

உயர்கல்லூரியில் காதலர் தினமன்று நல்லதொரு ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ரோசாப்பூ -செருப்படி விழாது safetyயாய்- கொடுக்கவேண்டும் என்றால், ஒரு இடத்தில் போய், ரோசாப்பூ கொடுக்கப்படவேண்டியவரின் வகுப்பையும் பெயரையும் பதிவு செய்துவிட்டால், உங்கள் பெயரோடு அல்லது விருப்பம் இல்லையெனில் anonymousயாய், அந்த நபருக்கு ரோசாபூவைக் கொண்டுபோய் வகுப்பு நேரத்தில் கொடுப்பார்கள். என்னைப் போன்றவர்களின் வேலை அந்தச்சமயங்களில் என்னவென்றால், எந்தப் பெண்ணுக்கு அதிகம் ரோசாப்பூகள் கிடைக்கிறதென்று எண்ணிக்கொள்வது. பின்னே, அதிகம் ரோசாப்பூ கிடைப்பவரைத்தானே அதிகம் பேர் நேசிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். அத்தோடு, அந்த லிஸ்டில் எங்களின் பெயரையும் அடுத்த முறை இணைத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையும் எங்களில் அனேகம் பேருக்கு இருந்து என்பதுவும் உண்மைதான். சரி, சரி உனக்கு எத்தனை ரோசாப்பூக்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையைச் சொன்னால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்?

உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரேயொருவருக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்திருக்கலாம், தவறவிட்டுவிட்டேன் என்று இப்போதும் கவலைப்படுவதுண்டு. அவர் என்னோடு படித்த பெண் அல்ல, அவர் எங்களுக்கு programming language கற்பித்த ஒரு பெண் ஆசிரியர். பெண் ஆசிரியர் என்றவுடன், நீங்கள் ஆசிரியர்-மாணவர் crush என்று நினைத்துவிடாதீர்கள். இது அதற்கு எதிர்மாறானது. அன்புக்குப் பதிலாக வெறுப்பைக் காட்டுவது. நல்ல ஆசிரியர்தான். எனக்கும் programmingல் ஆரம்பத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. பிறகு கணணிமொழியை விட பெண்களின் மனமொழியில் அதிக ஆர்வம் வரத்தொடங்க, பாடத்தில் கவனம் சிதறத்தொடங்கியது. வகுப்புக்களுக்கு அடிக்கடி கட் பண்ணினால் வீட்டுவேலை(homework) போன்றவற்றிற்கு 'group work'தான் செய்யவேண்டும். Group work என்றால் அப்படி இப்படித்தானே இருக்கும். ஆனால் மனுசியோ அவன், இவனைப் பார்த்து கொப்பியடித்திருக்கின்றான். நீ அவனைப் பார்த்து கொப்பி அடித்திருக்கின்றாய் என்று எங்களை வைத்து வெருட்டத்தொடங்கிவிடும். அத்தோடு அவரும் மிக இளையவராய் இருந்ததால் அவருக்கும் இந்த 'group work'ன் அடியும் நுனியும் நன்கு தெரியும். பிறகு மனுசி சிலவேளைகள் தனித்துச் செய்தாலும், group work செய்யப்பட்டிருக்கின்றதா என்று கண்ணுக்குள்ளை விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு தேடிப்பார்க்கும். அந்தக் கோபத்திலேயே அவரின் வகுப்புக்களையும், அந்தப்பாடத்துக்கான இறுதிப் பரீட்சையையும் தவறவிட்டு boycott செய்திருக்கின்றேன். (அதன் இழப்பு வளாகத்தில் ப்ரோகிராமிங் பாடங்கள் எடுக்கும்போது புரிந்தது, வேறு விடயம்).

இந்த மனுசிக்கு காதலர் தினத்தில் unknown nameல் அல்லது ex-lover என்றோ, இல்லை ஏலியன் என்ற பெயரிலோ, ஒரு ரோசாப்பூ அனுப்பி அவர் முகம் கொஞ்சம் வெளிறுவதைக் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன். பின்னே, அவா எத்தனை முறை என்னைப்போன்றவர்களின் முகத்தை வெளிறச் செய்தவர்? இதை விட வேறு எது சிறந்த குருதட்சிணையாக என்னைப்போன்றவர்கள் அவருக்கு வழங்கிவிடமுடியும்?

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

விரைவில் திருமணஞ்செய்து வாழ்வின் 'இன்பக் கடலில்' மூழ்கிச் சாகாவரம் காண வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டிருக்கும் தோழர்களும், தோழிகளுக்கும், 'அச்சச்சோ புன்னகை ஆள்கொல்லும் புன்னகை' என்று இன்றையபொழுதில் உங்களைப் பார்த்து யாரோ ஒரு இளைஞனோ, யுவதியோ புன்னகைக்க வாழ்த்துகின்றேன்.

வளாக நாட்கள்

Thursday, February 02, 2006

இங்கே ring ceremony என்று ஒரு கொண்டாட்டம் பொறியியல் படித்து முடிப்பவர்களுக்கு வளாகங்களில் நடக்கும். கனடாவுக்கு மட்டுமே உரித்தான, தனித்துவமான விழா அது. அந்த நிகழ்வில், தவறுதலாய்க் கட்டி நொறுங்கிய ஒரு பாலத்தின் இரும்பிலிருந்து, மோதிரம் செய்து தருவார்கள். நீங்கள் அதை உங்களது சின்னவிரலில் அணிந்துகொள்ளலாம். இந்த நிகழ்வுக்காய் ரூட்யாட் கிப்ளிங்தான் (Rudyard Kipling) ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கின்றார். விழா ஒரு மூடிய நிகழ்வாய், பொறியியல் படிக்கும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு நிகழும். நான்காம் வருடம் வரமுன்னர், மற்றப் பொறியியல் மாணவர்களுக்கும் விழாவைப் பார்க்க அனுமதி இருப்பதில்லை.

இந்த நிகழ்வு எங்களுக்கு நடந்தபோது சரியான உற்சாகத்தோடு போனேன். பின்னே, இப்படி ஒளிப்பு மறைப்பாய் இருந்தால், அங்கே கனக்க சுவாரசியமான விடயங்கள் இருக்கும் என்றுதானே எவரும் நினைப்பார்கள். ஆனால் அங்கே போனால் அலுப்பூட்டும் பேச்சுக்களும், ஒரு நீண்ட சங்கிலியை எல்லோரின் கையாலும் பிடிக்கச் சொல்லிவிட்டு, ஒரு உறுதிமொழியையும் எடுக்கவைத்திருந்தனர் (நீங்கள் படித்ததை எந்தப்பொழுதிலும் சமூகத்துக்குத் தவறாய்ப் பிரயோகிக்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த உறுதிமொழியில் அதிகம் தெரிந்தது). அந்த விழாவில் ஒருவர் பேசும்போது, தான் ஜப்பானில் வேலை செய்துகொண்டிருந்தபோது, நண்பர்கள் எவரும் இல்லையென்று சலித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு பெண் தனது சின்னவிரலில் இருந்த மோதிரத்தைக் கண்டுவிட்டு, are you from Canada என்று கேட்டு தன்பொழுதுகளைப் பிறகு 'இனிமையாக்கினார்' என்று கூறியதைவிட வேறெதுவும் நான் அங்கு சுவாரசியமாய்க் கேட்கவில்லை.

ஒரு திருமணவிழாவும், அங்கே மோதிரம் மாற்றும் நிகழ்வும்தான் அலுப்பான விடயம் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அதையும் விட இந்த் ring ceremony மிகவும் அலுப்பூட்டுவதாய் இருந்தது. இந்த மோதிரத்தைப் பெற்றபின், சென்றவருடம் கோப்பிக்கடையில் சில நண்பர்களைச் சந்தித்தபோது சுவாரசியமான தகவல்கள் சில கிடைத்தன. யார் யாரெல்லாம் மோதிரம் போட்டுக்கொண்டு திரிகிறார்கள் என்று பார்த்தபோது, ஒரு நண்பன் தான் போடுவதில்லை என்றான். ஏன் என்று கேட்டபோது, ரெஸ்ரோரண்டில் பாத்திரங்களை உரஞ்சிக்கழுவ இந்த இழவு பிடித்த மோதிரம் இடைஞ்சலாயிருக்கிறது என்றான். இன்னொருவன் தான் படிப்பதற்காய் பெற்ற லோனைக் கட்டும்வரை இதைப் போட்டுக்கொண்டு திரியப்போகின்றேன் என்றான் (மோதிரத்தை பார்த்து பார்த்து, கட்டிமுடிக்கவேண்டிய லோனை அடிக்கடி நினைவுபடுத்துவானாம்). எங்கேயாவது வேறுநாடுகளுக்குப் போனால் அணிந்துகொண்டு திரியலாம் என்று நினைக்கின்றேன் என்றேன் நான். ஏன் என்று கேட்டபோது, இல்லை இங்கைதானே எல்லோருக்கும் எங்களின் வண்டவாளம் தெரியும். வேறு நாட்டில் என்றால், சிலவேளை அந்த ஜப்பான் ஆசாமிக்கு நிகழ்ந்தது போல, யாராவது ஒரு பெண் ஓடிவந்து are you from Canada? என்றும் I love enginerds என்றும் கூறி என்பொழுதை வனப்பாக்க கூடுமல்லவா? என்றேன்.

ஆனாலும் என்ன, இப்படி இந்த விழா அலுப்பாய் இருக்கும் என்று தெரிந்தோ என்னவோ தெரியாது, எங்கடை தமிழ்ப்பெடியள் புதுவிழா ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்கள். Ring ceremonyக்குப் பிறகு எங்களின் party இரவில் நடக்கும். ரிங் அணியும் அந்த வருடத்து மாணவர்கள், காசு போட்டு, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு விருந்து கொடுப்பது சம்பியதாயமாக எங்கள் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நிகழும். Ring party என்று நாகரிகமாய் நாங்கள் அழைத்தாலும், அது உண்மையில் drink partyதான். பணம், ராப் பாடல்களில் பறக்கும் தாள்களாய்ப் பறக்க பறக்க,பாரில் குடிவகைகள் ஆறாய்ப் பெருக்கெடுக்கும். வழமையாய் இந்தப் பார்ட்டிகள், எங்கள் வளாக pubற்குள்தான் நடைபெறும். நாங்கள் செய்த வருடம், எங்களால் pubற்குள் இடம் எடுக்கமுடியாமற்போய்விடவே, வெளியே வேறொரு pubல் செய்வதாய்த் தீர்மானித்திருந்தோம். இந்த ரிங் பார்ட்டிக்கு, இதுவரை பங்குபெற்றாத பெண்களும் தாங்களும் இந்தமுறை வரப்போகின்றோம் என்றார்கள். ஆகா, iron ring ceremonyயோடு, ஒரு wedding ring ceremonyயும் எனக்கு வைக்கலாம் என்று வழமைபோலக் கனவுகாண நானும் தொடங்கிவிட்டிருந்தேன். அத்தோடு ஒரு தோழியிடம், இந்தமுறை குடி குடியென்று குடித்து போதையில் மூழ்கி எனது வீரத்தைக் காட்டுகின்றேன் பார் என்று சபதமும் செய்திருந்தேன்.

விருந்து அழகாய்த்தான் ஆரம்பித்தது. sex on the beachஜ எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தால், அங்காலை பெண்கள் தங்களுக்குள் ஆட்டம் போடத்தொடங்கியிருந்தார்கள். ஆகா எல்லாம் நான் நினைத்த ஒழுங்கில் நிகழ்கின்றது என்று புளங்காகிதம் அடைந்து இரண்டு மூன்று ஸிப் இழுத்திருப்பேன், நண்பர்கள் சிலர் வந்து 'நீதானே குடிப்பதில்லை (sex on the beach எல்லாம் குடி என்ற வகைக்குள் அவர்கள் அடக்குவதில்லை), இரவு உணவுக்காய் கொத்து ரொட்டி மற்றும் கறிகள் ஒரு வீட்டில் செய்யச் சொல்லியிருக்கின்றோம் எடுத்துக்கொண்டு வா'வென்றார்கள். நாசாமாய்ப்போறவங்களே வாழ்க்கையில் செட்டில் ஆவோம் என்று நினைத்தால், என்னை chef ஆக்கத் திட்டம்போடுகின்றீர்களே என்று திட்டிக்கொண்டுபோனாலும், ஒரு சின்ன சந்தோசம் மனதில் இருந்தது. எனென்றால், நாங்கள் கொத்து ரொட்டி செய்யச்சொன்ன வீட்டில் மற்றொரு யூனிவர்சிட்டியில் படிக்கிற ஒரு பெண் இருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை இழக்கச் செய்து இன்னொரு அரிய தருணத்தை உருவாக்கித் தருகின்றார் என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்குப் போனேன். அவர்களின் விட்டுக் கதவைத் தட்டியவுடனேயே, 'உவங்கள் அங்கே குடிக்கவும் கூத்தடிக்கவும் செய்ய, நாங்கள் இங்கை கிட்சினிற்குள் அவிந்துகொண்டிருக்கின்றோம்' என்று எல்லோரையும் பார்த்து பொதுவாய்த் திட்டவேண்டியதை, என்னையும் அவரது தாயாரையும் மாறி மாறிப் பார்த்து அந்தப்பெண் திட்டத்தொடங்கினார். நிரம்பக் குடித்து மயங்கிக்கிடக்கவேண்டும் என்ற சபதத்தைத்தான் நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தோடு இங்கு வந்தால், நீங்களும் இப்படிக் கூறுதல் நியாயந்தானா என்று கேட்க விரும்பினாலும், அந்தப்பெண்ணின் கையில் சுடச்சுட ஆவி பறந்துகொண்டிருந்த கொத்து ரொட்டி என் முகத்தைப் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கொத்து ரொட்டியையும், அந்தப்பிள்ளையின் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு ஸ்நோவிற்குள்ளால் போனால், அங்கே எல்லோரும் குடித்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்கள். அதுவும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று வளாகத்தில் பதுங்கி பதுங்கித் திரிந்தவன்கள் எல்லாம், குடித்த கிளாசுகளை உடை உடையென்று கீழே போட்டு உடைத்துக்கொண்டு நல்ல மப்பில் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்க, என் வயிற்றில் எரிந்த நெருப்பு வெளியே உறைந்துகிடந்த ஸ்நோவைக் கூட உருகச்செய்துவிடும் போல இருந்தது.

வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நான் அதிகம் சேர்ந்து திரிந்த நண்பர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு பத்து வயது வித்தியாசம் இருக்கும். அதில் ஒருவர் எனது அண்ணாவுடன் யாழில் ரீயூசனில் படித்திருந்தார். இங்கே உள்ள கல்விமுறையில் எனக்குப் பிடித்த இரண்டு விடயங்கள், ராக்கிங் இல்லாததும், எவரும் எந்த வயதிலும் படிக்கலாம் என்பதுவும். அனேகமான தமிழ் பெடியங்கள், படித்துக்கொண்டிருக்கும்போது இடையில் தங்கள் துணையை, குடும்பத்தை கனடாவுக்கு அழைக்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது படிப்பை இடையில் நிறுத்தி, வேலை செய்துவிட்டு, பிறகு சில வருடங்களுக்குப் பிறகு படிப்பைத் தொடர்வார்கள். எனக்கு என்னைவிட வயது மூத்த நண்பர்கள் இருந்ததால் எப்போதும் செல்லப்பிள்ளையாக அவர்களுடன் இருப்பேன். போற வாற வழியில் கேர்ள்ஸை கண்டு மனஞ்சிலிர்த்தால் மட்டும், 'உன்ரை கொப்பருக்கு ரெலிபோன் அடித்து ஹலோ சொல்லட்டோ?' என்று மட்டும் 'அன்பாய்' அதட்டுவார்கள். அப்படி இருந்தாலும் பலசமயங்களில், 'அண்ணை எனக்கு இந்தப்பாடத்திலை கொஞ்சம் டவுட், அவாவிடம் கேட்டு கிளியர் பண்ணிவிட்டு வருகின்றேன்' என்று நைசாக நழுவியும் இருக்கின்றேன் ('கிளி'யர் பாடத்துக்கா அல்லது வேறெதுக்கா என்பது யாருக்குத் தெரியும்? ). அனேகமாய் பெண்களோடு கதைக்கின்ற இடமென்றால், uni food courtயாய் இருக்கும். Tim Hortonsனில் லைனில் நிற்கும் பெண்களைப் பார்த்துவிட்டு 'என்ன coffee வாங்கவா நிற்கின்றீர்கள்?' என்றுதான் கதையை என்னைப் போன்றவர்கள் ஆரம்பிப்போம். கலியாண வீட்டுக்குள் இருந்துகொண்டு, என்ன கலியாண வீட்டுக்கோ வந்திருக்கின்றியள் என்று கேட்பது போலத்தான் Tim Hortonsனில் நின்றுகொண்டு கோப்பி வாங்கவா நிற்கிறியள் என்பது. என்றாலும் பெண்களும் எங்களின் 'புத்திசாலித்தனம்' பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கும் தெரியும் எங்களில் அனேகம் பேர், தங்களை இரசிப்பதற்கு மட்டும் அல்ல, ஓசியாய் தங்கடை காசில் கோப்பி குடிக்கவும்தான் வழிந்துகொண்டு நிற்கின்றாங்கள் என்று.

வளாகத்தில் Science Faculty உள்ள கட்டடத்தை நாங்கள் அந்தப்புரம் என்றுதான் அழைப்பதுண்டு. எனென்றால் அங்கேதான் விஞ்ஞானபீட, வரத்தகபீட மாணவிகள் எல்லாம் குழுமியிருப்பார்கள். அதுவும் மதியவேளைகளில் அங்கே போனால், யாராவது ஒரு தோழிகொண்டுவரும் சாப்பாடாவது கிடைக்காமற் போகாது. இதுக்காகவே, லெக்சர்களுக்குப் போகமறந்தாலும் மதியவேளைகளில் அந்தப்புரத்துக்குப் போவதை மட்டும் என்னைப் போன்றவர்கள் மறந்ததில்லை. உள்ளங்கையில் மட்டும் நிரம்பக் கூடியதாய் 'நிரம்ப' உணவு கொண்டுவரும் பெண்களின் உணவில் எங்களைப் போன்றவ்ர்கள் கைவைத்தால் அவர்களுக்கு இறுதியில் எது எஞ்சும் என்று உங்களுக்கு படம் வரைந்து விளக்கத்தேவையில்லை. வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும், எதிர்காலத்தில் இவங்களை மாதிரி ஆக்கள் மட்டும் புருஷனாய் வந்து தொலைக்கக்கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதேபோல, என்னைப்போன்றவர்கள் நன்கு உறைப்புப்போட்டுச் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடமாட்டோம் என்று புரிந்துகொண்டு, நல்ல காரமாய் உணவைச் சமைத்துக்கொண்டுவந்துவிட்டு, 'வாருமன் சாப்பிட..' என்று நக்கல் சிரிப்புச் சிரிக்கும் 'அருமையான' தோழிகள் சிலரும் இருந்தார்கள் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

வளாகத்தில் படிக்கும்போது எனக்கு மிகக் கஷ்டமாய் இருந்த ஒரு விடயம். பல sources லிருந்து ஒரு masterpiecesஜ உருவாக்குவதான். நீங்கள் sources, masterpieces என்றவுடன் பயந்துவிடாதீர்கள். பழைய (past years) assignments, labs போன்றவற்றிலிருந்து profs லிருந்து பிடிபடாமல் எப்படி நல்ல மார்க்ஸ் வாங்க எங்களின் பிரதியை (masterpiece) எழுதுவது என்பதுதான் இதன் அர்த்தம். அதிக profs, அலுப்பில் syllabusஜ பல வருடங்களுக்கு மாற்றமாட்டார்கள். ஆரம்ப வருடத்தில் நாங்கள்தான் இப்படி 'group work' செய்கின்றோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் 'அறிவு' வளர வளரத்தான், எலலா மாணவர்களும் இன, மொழி, இன்னபிற வித்தியாசம் இல்லாமல் இதில் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவந்தது. அதுவும் சில மாணவர்கள், பரிசோதனைகள் (labs) செய்யும்போது, sorucesஜ bagsகளிலும், binderகளிலும் இருந்து எடுத்து பயமில்லாது அந்தமாதிரி வெளுத்துக்கட்டுவார்கள். soruceற்கு ஒருசமயம், masterpieceற்கு ஒருசமயம் என்று ஏன் இரட்டிப்பு வேலை செய்வான் என்று பரிசோதனைக்கூடத்திலேயே இரண்டையும் ஒன்றாய் செய்து கொடுத்து நிம்மதியாய் வீடு போய்ச்சேரும் இந்த 'intellectuals'ஜப் பார்த்து பெருமூச்சைத்தான் என்னைப்போன்றவர்கள் விடுவார்கள்.

இப்படி, soruce - masterpiece விவகாரம், நான்காம் வருடத்தில் வளாகம் முழுதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் வருடத்தில், ஆங்கிலப்பாடம் ஒன்று கட்டாயம் எடுக்கவேண்டும். அதற்கு இரண்டு கட்டுரைகளும் இறுதிப்பரீட்சையும் மட்டுமே இருந்தன. பூச்சியத்தையும் ஒன்றையும் வைத்து மண்டையைக் குழப்புவனுக்கு எல்லாம் இருபத்தாறு எழுத்துக்களைத் தந்து கட்டுரைகள் எழுது என்றால் எனன செய்வது? வழமைபோல அனேகருக்கு google கடவுள் அவதாரம் தந்தார். அவர் காட்சிதான் தந்தார். ஆனால் வரத்தை நாங்கள்தானே கேட்கவேண்டும். ஆனால் எங்களின் வகுப்பில் பலருக்கு தாங்கள் கடவுளாய் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து, கூகிளிலிருந்து கட்டுரைகளை அப்படியே இறக்கி எதையும் மாற்றாது சமர்ப்பித்தனர். அதுதான் பிறகு பிரச்சினையாகப் போய்விட்டது. நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் plagiarism என்று பிடிபட்டு பெரிய விவகாரமாகி பிபிஸி வரை எங்களின் 'புகழ்' பரவியது. நானும் கொஞ்சம் கூகிளிலும், மிச்சம் என்னுடைய சொந்த சரக்கிலும் கட்டுரையை (The Influence of Gender Issues on Deciding Potential Careers) எழுதி, புத்திசாலித்தனமாய் ஒரு தோழியிடம் அனுப்பி மெய்ப்பு பார் என்று அனுப்பியிருந்தேன். அவளுக்குத் தெரியாதா என்ன, எனது ஆங்கில அறிவின் உச்சம். எனவே ஆறுதலாக மெய்ப்பு பார்த்து கூகிள் வார்த்தைகளை எல்லாம் அழகாக மாற்றிவிட்டிருந்தாள். நல்ல மார்க்ஸும் கிடைத்தது. பிறகு இரண்டாவது கட்டுரை எழுத வந்தபோது, ஏன் கடவுளை -கூகிளை- கஷ்டப்படுத்துவான் என்று, சில outlinesஐ மட்டும் கட்டுரைக்கு எடுத்துக்கொடுத்து அவளிடம் கட்டுரையை நீயே எழுதித்தாவென்று இருந்துவிட்டேன். அவளும் தானெழுதும் கட்டுரைகளை விட கஷ்டப்பட்டு உழைத்து நல்லதொரு கட்டுரையைத் தயார்படுத்தி எனக்குத் தந்திருந்தாள். வழமைபோல் என்னுடைய நல்லபழக்கத்தால் அது சரியில்லை இது சரியில்லை என்று நொட்டைகளைத்தான் அவளுக்கு நன்றியாகத் திருப்பிக் கொடுத்திருந்தேன். அப்படி ஏதாவது 'நல்ல வார்த்தைகள்' எதுவும் கூறாவிட்டால், எனக்கு அன்று நித்திரையே வராது என்று அவளுக்கும் நன்கு தெரியும் என்பதால் இப்படியான சமயங்களில் அவள் ஒன்றும் திருப்பிக்கூறுவதில்லை.

வளாக வாழ்வில் நடந்த சுவாரசியமான பல சம்பவங்களில் ஒன்று, இந்த இணைய அரட்டை. பெடியங்கள் நள்ளிரவிலிருந்து விடிய விடிய இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். மற்றப்பக்கம் கதைக்கின்ற கேர்ள் கனடா, அமெரிக்கா என்றால் கொஞ்சமாவது பரவாயில்லை. தூக்கம் வருகின்றது என்று கூறி குறிப்பிட்ட நேரத்தில் போய்விடுவார்கள். உள்ளூரில் மட்டுமில்லாது சர்வதேசம் எங்கும் தோழிகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நேரப் பிரச்சினையால், இரவுத் தூக்கம் எல்லாம் இல்லாமற் போய்விடும். சிலபேர் சீரியஸாய் லல் பண்ணத் தொடங்கினால் நிலைமை பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அது கூடப் பரவாயில்லை, சிலர் என்ன செய்வாங்கள் என்டால், நண்பர்களின் பெயரை தங்களின் மெஸஞ்சரில் சேர்த்துவிட்டு, பெண்களின் பெயரில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இதுகள் அப்பாவிகள் மாதிரி உருகி உருகி கதைத்து, சிலதுகள் காதலிக்கின்ற நிலைமை வரை போயிருக்கிறதுகள். பிறகு நிலைமை சீரியாசாகப் போகின்றது என்று புரிந்து உண்மையைச் சொன்னால் எல்லாக் கனவுகளும் பொடிப்பொடியாகப் போய் முழுசிக்கொண்டு நிற்பதைப் பார்க்க பரிதாபமாய் இருக்கும்.

இணையம், இணைய அரட்டை குறித்து பல எதிர்மறையான விடயங்கள் இருந்தாலும், எனக்குத் தெரிந்த பல தோழர்கள், தோழிகள் தங்கள் காதல்களை, துணைகளை இணையத்தின் மூலம் கண்டுபிடித்திருக்கின்றார்கள். வெளியேபோய் ஒரு ஆணோடு கதைப்பது (dating போன்றவை இன்னும் முழுமையாய் அங்கீகரிக்கப்படாத எங்கள் சமூகத்தில்) இந்த அரட்டைகள் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள முடிவது நல்லதொரு விடயந்தானே. அண்மையில் ஒருவரின் வீட்டுக்குச் சென்றசமயத்தில் ஒரு பதின்மவயதுப் பையன் இணையஅரட்டை செய்வதைப் பார்த்தபோது, அவர்கள் பயன்படுத்தும் பல சொற்களின் (slangs) அர்த்தம் புரியாது முழித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கான காலம்-இணைய அரட்டை- முடிந்துவிட்டதே என்ற கவலையில் ஒப்பாரி வைக்கவேண்டும் போலத்தோன்றியது. இப்போது webcam போன்றவையும் வந்துவிட்டதால் எவரும் எவரைம் இலகுவில் எமாற்றவும் முடியாது.

அந்தப் பையனோடு நின்றபோது, இரவு பத்து மணி இருக்கும்... சட சடவென்று இவன் வெளிக்கிட்டான், தலைக்கு ஜெல் வைத்து, sun glass, leather jacket எல்லாம் போட்டு அமர்களப்படுத்தினான். 'என்னடா எங்கையாவது வெளியில் (இரவிலையும் sun glass போடுகின்றவன் அறிவாளியாகத் தானிருக்கவேண்டும்) என்று வினாவ, 'இல்லை, என்ரை மச்சாள் ஜேர்மனியில் இருந்து சாட்டுக்கு வாற நேரம் அதான்' என்றான்....அதுக்குத்தான் இந்த ஆரவாரம், அமர்க்களம். 'cologne யும் மறந்துவிடாது ஸ்பிரே பண்ணடா, பிறகு மச்சாள் அங்கையிருந்துகொண்டு bad smell வருகிறது எண்டு சொல்லப்போறா கவனமடா' என்றேன் நான். அதைவிடச் சிரிப்பு, இவருக்கு பதினைந்து வயது, இவரது மச்சாளுக்கு இவரை விட ஜந்தோ அல்லது ஆறோ வயது அதிகம். இப்படி எல்லாம் இங்கே நான் 'அன்பாய்' எழுதுவது, நான் ஏதோ அவனுடைய மச்சாளின்ரை ஈமெயில் முகவரியைத் தாவென்று கேட்டபோது, அவன் தராது மறுத்த கடுப்பில்தான் என்று பிழையாக நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடாது பாருங்கோ.

இன்று மெல்லப்பின்னோக்கி வளாக வாழ்வைப் பார்த்தால் அந்த வாழ்வில் அனுபவித்திருக்கவேண்டிய அரிய பல தருணங்களைத் தவறவிட்டாலும், கழித்து வந்த வருடங்கள் மிகவும் இதமாயிருக்கிறது. எத்தனையோ பிரச்சினைகள், பிணக்குகள், வேதனைகள் என்று அலைந்திருந்தாலும், இன்று நினைவில் நிற்பது நல்ல நினைவுகளே. அதுதான் வாழ்வின் அதியற்புதம் போலும்.

(இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் Shakiraவுக்கு)

கடிதங்கள்

Monday, January 30, 2006

நினைவுகள்....பிரியங்கள்.....அக்கறைகள்

சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்.....ம்....அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன.

இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக் கடிதங்களை எழுதிய அனேகர் ஆழமான வாசிப்பும் எழுத்துத் திறமையும் கொண்டவர்கள். ஒவ்வொரு மடல்களிலும், இவர்களின் ஆளுமை என்னை வசீகரித்து வியக்கச்செய்ததுண்டு. எனினும் இவர்களில் அனேகர், பொதுத்தளத்தில் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமில்லாது ஒரு தெளிந்த ஆற்றைப்போல வாழ்வில் நகர்ந்துகொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுவதில்லை என்று வினாவுகின்றபோது, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்பவற்றைவிட வாழ்வில் இரசிப்பதற்கான விடயங்கள் அதிகமுண்டு என்று கூறி என்னை மெளனிக்கச்செய்பவர்கள். தனிப்பட்டரீதியில் அது குறித்து அவர்கள் மீது சின்னதாய் கோபமும் உண்டு.

இங்கே பதியப்படும் கடிதங்களுக்கு எவரிடமும் உரிய அனுமதி பெறாமலே -இயன்றளவு தனிப்பட்ட விபரங்களை தவிர்த்து- பதிகின்றேன். இதைக் கூட பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணம், விமர்சிப்பதற்கு ஓடிவரும் என்னைப் போன்றவர்கள், நல்லவிடயங்களை மனந்திறந்து பாராட்டுவதற்கு பின் தங்கி நிற்கின்றோம் என்ற நிலைப்பாட்டை ஒரளவாவது -என்னளவில்- உடைத்துப்பார்க்கவேண்டும் என்பது மட்டுமே.

கடிதங்கள் அழகானவை.... நாமும், நம்மிலும் பிரியம் வைக்கும் மனிதர்களைப் போல!

(1)
எந்த இடமும் எமக்காக உருவாக்கப்படவில்லை. நாம்தான் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். I love Bharathy, அவன் நல்ல கவிஞன் என்பதால். ஆனால் அவன் நல்ல கணவனா, தகப்பனா என்பது கேள்விக்குரியது. கடன் வாங்கிய அரிசியைக் குருவிகளிற்குப் போட்டு ரசித்தது முட்டாள்தனம். வாழ்க்கை யதார்த்தமானது. கவிதைகளை ரசிப்பதோ எழுதுவதோ மட்டுமில்லை அதை வாழ்ந்தும் பார்க்கவேண்டும். தமிழ் தாய்மொழி அதை மறப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைப் போல புகுந்த நாட்டு மொழியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும். பல மொழிகள் தெரிவது அறிவுக்கு ஊக்கம் தரும். பாரதிக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகளிலும் நல்ல தேர்ச்சியிருந்தது. இலக்குகளை நிர்ணயிப்பது நாம்தானே. பின்பு ஏன் அது கடினமாகப்போகிறது. கவனக்கலைப்பான்கள் பலவா? காலம் கடந்தாலும் இலக்குகளை அடைவதில் கவனமாக இரு.

உனக்கு ............. வர நல்ல தகுதியிருக்கிறது. ஆனால், 'அதிகம் கதைக்காமல் என்னைக் கவர்ந்தவளென்று' பொய் சொல்கிறாய் தம்பி. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தே சொல்கிறது. புத்தகங்கள் வாசி. கடிதம் எழுது. post பண்ணவேண்டுமென்று கூட அவசியமில்லை. புரிகிறதா? மனதில் இருப்பதை வெளிபடுத்த நல்லவழி கடிதம் எழுதுவதுதான்.

மிக முக்கியமான விடயம். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பம், இங்குள்ள உன் வயதொத்தவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள். முதலில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின்பு நீ எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வாழ்க்கை எப்போதும் அழகானதுதான். சில தேவையற்ற கவிஞர்கள்தான் சோகம் சுகமானது என்று சொல்லி எல்லோரையுஞ் சோம்பறியாக்கிறார்கள். கோபப்படாதே. தியானஞ் செய்யப் பழகு. எழுது எல்லாவற்றையும். Please try to write in English. மொழி கவிதைக்குத் தடையல்ல. Try it.
-----------------------------------------
(2)
நான் சிறுவயதிலிருந்து இன்றுவரையும் எனக்கென்று கடவுளிடம் மன்றாடுவதனால்....
-கடவுளே, நான் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் நினைக்கின்றீரோ அப்படி நான் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும்.
-மற்றவர்களுக்கு help பண்ணவேண்டும். அதற்கு அறிவைத் தாரும். நல்ல வேலையைத் தாரும். அப்பதான் நான் எல்லோருக்கும் help பண்ணமுடியும்.
என்று கடவுளிடம் மன்றாடுவேன்.

நான் மட்டும் அல்ல இப்படித்தான் பலபேர் கடவுளிடம் மன்றாடுவினம் என்று எனக்குத் தெரியும். எப்போதும், நல்ல பிள்ளையாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நான் எப்போதும் முயற்சிசெய்து என்னைப்பற்றி சுய அனுதாபம் கொள்வதை தவிர்த்துக்கொள்வேன். சுய அனுதாபம் கொள்வது எனக்குப் பிடிக்காது. அத்தோடு பிறர்முன் அழுவது அதுவும் பெண்கள் அழுவது எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனெனில் புரியாதவர்கள் கண்ணீர் பெண்களின் பலம், பலவீனம் என்பார்கள்.

எனக்கே என்ன சிரிப்பு என்றால் எனக்கு என்னில் சரியான விருப்பம். நேற்று வேலையில் ஒருவர் சொன்னார். கனடா வந்து 4 வருசம் ஒரு boy friend இல்லையென்றால் பொய் சொல்கின்றேனாம். அத்துடன் நான் style ஆக வேறு வெளிக்கிட்டு வாறேனாம். அப்போது நான் எல்லோருக்கும் முன்னால் சொன்ன்னேன். 'ஒருத்தி தன்னைத்தானே அழகுபடுத்தி வருகின்றாள் என்றால் அவள் தன்னைத்தானே விரும்புவதுக்காகவும் இருக்கலாம். not only for boyfriend. because தன்னை நேசிக்க முடிபவர்களால்தான் உலகை நேசிக்கமுடியும்' என்று. அவா இது, 'விதாண்டாவாதம்' என்றா. நான் சொன்னேன், 'அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்' என்று. அருகில் இருந்தவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். because நான் இவ்வளவும் கதைத்தது எங்கள் supervisorடம்.
-------------------------------------------------------
(3)
இன்று சர்வதேச ஆசிரியர் தினம்! இன்றுதான் முதன்முதலில் பள்ளியில் ஆசிரியர் தினம் மதியபோசனத்துடன் கொண்டாடப்பட்டது. நான் இசையமைக்க, அடிகள் கவிதைகள் புனைய பக்க வாத்தியமாக செந்தூரன் மிருதங்கம் இசைக்க பாடல் பாடினோம். இறுதியாக 'இந்துவின் ஆசிரியர்கள்' என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை (தாள லயத்தை) நாம் மூவரும் வழங்கினோம். நான், சகிலா ஆசிரியை, அதிபர் மன்மதன், ஹரிகரன் வாத்தி, சண் சேர் போன்றவர்கள் போல நடிக்க, அடிகள், சுசி ஆசிரியை, பிரியா ரீச்சர், வரதராஜன் மிஸ், சச்சிதானந்தன் ஆசிரியை போல நடிக்க செந்தூரன் பின்னணி இசையும் குரலும் கொடுக்க, விசில் சகிதம் பலத்த கைதட்டல் தோஸ்துகளிடமிருந்து கிடைத்தது.

அந்த தாளலயத்திலிருந்து ஒரு சில பாடல்கள் வருமாறு....
'நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, மின்சாரக் காசை உன் கொப்பரோ கட்டிறது
நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, தம்பிமார் watcher Fees கட்டியாச்சோ....'
-பிரின்ஸி

'சீதமதி குடைக்குள் செம்மை அறங்கிடப்ப Britainனில்
என் புருஷன்Broadcasting பண்ணப்போகிறார்
பிள்ளைகள் கதைக்க வேண்டாம்-குரல்
எனக்குச் சரியில்லை....'
-ரவி ஆசிரியை

'குச்சிவாத்தி நானெல்லோ குச்சொழுங்கை தாண்டிவாறன்....
சொகுசாக நான் வரேல்லை...சொய்சாவில் இருந்து வாறன்'
-ஹரிகரன் வாத்தி

இப்படி எல்லா ஆசான்களினதும் வசனங்களை எழுதப்போனால், கடிதம் 'ஆசான் ஸ்பெஷல்' ஆகிவிடும்.
-----------------------------------------------------------------------
(4)
உமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தகுதி பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏகலைவன் போலாகிவிட்டீர். ........... உம்மை நினைக்கும் போதெல்லாம் Exam hallல் நிற்கும்போது புளியின் கீழ் நின்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நான் உம்மை அழைத்துக் கதைக்க எண்ணிவிட்டு நாளை கதைக்கலாம் என்றிருந்தேன். அந்த நாள் எனக்கு வரவேயில்லை. எனவே, 'நாளை என்று ஒத்திப்போடுவது நடைபெறாமலும் போகலாம்.' எதையும் ஒத்திவைக்காது அன்றன்று செய்து நற்பிரசையாக பார் போற்ற வாழக் கற்றுக்கொள்ளவும்.
------------------------------------------------------
(5)
'உனக்கான வாழ்வின் பகுதி
எவராலும் அபகரிக்கப்படாதிருக்கின்றதென்பதை
அறிக.'
இவை உங்கள் கவி வரிகள்தான். உங்களுடான சந்திப்பு நிகழ்ந்துபோன இந்த இரண்டு வருடங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத, சந்தோசங்கள், துக்கங்கள், சந்தேகங்கள், அவமானங்கள், வலிகள் என எதுவுமேயில்லை என்னிடம். ஆனாலும் நண்பனே சில சமயங்களில் காதுகளை மட்டுமே என் செய்திகளுக்கு வழங்கிவிட்டு எதுவுமே செய்யாமல் எனை தனித்திருக்கச் செய்து, உன் பிரச்சினையை, உன் வலியை, உன் சந்தோசத்தை நீயே முழுதாய் அனுபவி என நீ விலகும் வேளையில் இமைகளைத் தட்டும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, 'எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன், உனக்கும் பசித்தால் நீயும் சாப்பிடு. உனக்கேதேனும் சோகமா, சந்தோசமா என்னவொன்றாலும் என்னிடம் சொல்லு எனது செவிகள் உனது வார்த்தைகள் செவிமடுக்க எப்போதும் தயார். ஆனால் அதற்கான solutionsஓ, அன்றேல் எனக்கான இனிய நிமிடங்களையோ அதற்காய் ஒதுக்கலோ சாத்தியமில்லை. உன் சந்தோசத்தை, துக்கத்தை முழுதாய் நீயே பங்கிட்டுக் கொள். எனக்கு எதுவும் வேண்டாம். உனக்காய் நான் பிரார்த்திக்கின்றேன்' அப்படித்தான் இருக்கமுடியும்.

அது உங்கள் இயல்பு. உங்களை எனக்கு ஏற்றமாதிரி மாறச் சொல்லல் மிக மிகத்தப்பு. என் சுயம் இழக்கச் சொல்கையில் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அப்படித்தானே இருக்கும் உங்களுக்கும். உங்கள் நட்பு எனக்கு தந்த பலத்தை வேறு எதுவும் என் வாழ்க்கையில் தரவேயில்லை. எனக்கென்னவோ நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை எனத்தான் தோன்றுகின்றது. ......... பிரச்சினையோ, அன்றேல் ......... உடனான பிரச்சினையோ உங்களிடம் சொன்ன போதெல்லாம் solution எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தீர்கள் நீங்கள். இது உண்மையான நட்பல்ல.
---------------------------------
(6)
மேலும், தங்கள் கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளான "எல்லாம் மனதிற்கு பிடித்தமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகிறேன்” என்ற தயோகுணத்தில் இருந்தே நாம் சரிவரப் பேசிக்கொள்ள நிறைய விடயமிருக்கிறது.

எனது நம்பிக்கைகளை, கொள்கையை வழிமொழியாத அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒருவரது கொள்கையை நாம் எப்படி முட்டாள்தனமென்று கூறமுடியாதோ, அதேபோலத்தான் நாம் இன்று பெரிதுவக்கும் பல விடயங்களும் காலப்போக்கில் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து எம்மைப்பார்த்து முட்டாள் என்று சிரிக்க வைக்கும். தமிழிலக்கிய, பண்பாட்டுப்பரப்பில் ஞானியின் சிந்தனைகள் போற்றப்பட வேண்டிய தொன்றாக இருப்பினும் அவரது தமிழியம், தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவங்கள் நெருடலாகவே எனக்குத் தோன்றுகின்றது. மாபெரும் மனிதநேயன் தேசியம் என்ற கற்பிதம் உதிர்ந்து போக வேண்டிய தொன்றாகவே கருதுவான். ஆதியில் இருந்து இற்றைவரை தேசியத்திற்கான தேவைகளும். வரையறைகளும் பாரபட்சமானதாகவும், சுயநலம் சார்ந்ததாகவும் இருப்பது கண்கூடு. சேர, சோழ, பாண்டியர் தம் எல்லைப்பரப்பிற்குள் எதற்காக இறுக்கமான இனத் தனித்துவத்தைப் பேணிக் கொண்டனர் என்று சிந்தித்துப் பாருங்கள். வரி, மானியம், கிரீடம் போன்றவைதான் அவர்கட்கு முக்கியமாகப்பட்டிருக்கும். மாறாக இனம்மாறி அவர்கள் பெண் கொண்ட சூழ்நிலைகளும் சுயநலம் சார்ந்த வழுவாகவே புலப்படும்.

நசுக்கப்படும் இனங்களின் விடிவுக்கு தேசியப்போராட்டம் ஒரு தற்காலிகத் தேவையே தவிர, மானிடர் என்பவர் எல்லைகளைக் கடந்த மனிதநேய ஒன்றல்களுக்குள் அணைத்துக் கொள்வதைத்தான் திரு. ஞானி பெரிதும் நம்பும் மார்க்சியமும் சொல்கிறது. சங்ககாலத்திலேயே கணியன்பூங்குன்றன் என்ற கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லைகள், இனக்குழுக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகமக்கள் யாவரும் நமது சுற்றத்தாரே என்று பாடுகிறான்.
--------------------------------
(7)
சில நண்பர்கள் அவர்களுக்கான என் வீடு விசாலமானது. எப்போதும் வரலாம் எப்போதும் பேசலாம் எந்த வரையறைகளும் இல்லை. நிரம்ப பிரச்சனைகளில் இருந்த நண்பியுடன் விடிய விடிய கதைத்து பாடசாலை போகாத அநுபவங்களும் உண்டு. ஆதலால்,என் தம்பிகள் பற்றிய கவலைகளை விட இப்போது உங்களைப்பற்றி நிறைய யோசனையாய் இருக்கிறது. நீங்கள் காயமின்றி வெளிவரவேண்டும் அதற்கான எந்த உதவியையும் என்னிடம் கேட்கலாம். நானும் நீங்கள் சந்தோசமாக இருப்பதற்கு உதவியாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருந்தால் உதவியிருக்க மாட்டீர்களா என்ன?

எழுதுவதை மட்டும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதை வரவில்லை என்றால் கதைக்குப்போங்கள் அதுவும் வரவில்லை என்றால் கனடா வாழ் அநுபவங்களை எழுதுங்கள். எழுத்து எவ்வளவோ விடயங்களை ஆற்றும் என்று நான் நினைக்கிறேன். ...... நீங்கள் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆதிக்கமான ஒரு ஆணாய் இருப்பதை விட மற்றவர்களை புரிந்து வாழ்வது தான் நல்ல மனிதனாய் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
---------------------------------------------
(8)
உனது கவிதைகள் பற்றி - ஆகா ஓகோவென்று புளுகி உன்னைப் பப்பாவில் ஏற்றுவதும் சரியல்ல. அதே நேரம், கவிதையைத் தாக்கி உன்னைப் பாதாளத்தில் தள்ளிவிடுவதும் சரியல்ல. நான் சொல்வேன்: உனது பருவத்துக்கு இது சிறப்பான கவிதை. ஆனால் இதுவே முழுமையான கவிதையல்ல. இன்னும் அனுபவத்தைச் சேர்த்து, சொற்களைத் தேர்ந்தெடுத்து, கவிதையை நீ செதுக்கப்பார். உனது அனுபவத்தினூடாக எழுதப்பார். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுத முயல். சேரன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், முதலானோரின் கவிதைகளை, பாரதியார், மகாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பது முக்கியமானது. 'சரிநிகர்' பத்திரிக்கையை தொடர்ந்து வாசிப்பது நல்லது. தொடர்ந்து வாசிக்கிறாயா?
-------------------------------------------------
(9)
தாய்மையென்பது பெண்மையின் அடையாளம்தான். என்னால் இன்னொரு உயிரை.., இன்னொரு ஜீவனை உருவாக்க முடிகிறதென்பது எத்தனை உன்னதமானதொரு விடயம். எனது உதிரத்தைக் கொண்டு அதற்கு உணவூட்ட முடிகிறதென்பது எத்தனை அற்புதம். உயிர்.. உயிர்.. இன்னுமொரு உயிர் என்னுடலில் தங்கி, ஊட்டம் பெறப்போகிறது. அதற்கு இந்த உலகத்தை நான்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒவ்வொரு உயிரும் எவ்வளவு பெறுமதியானவை. நாளைய உலகமொன்று என்னிலிருந்து உருவாகப் போகின்றது. ஒருகணம் கடவுளாய், இறைவியாய் மாறியதாயொரு உணர்வு. இதை இழக்க நான் தயாரில்லை.

'விடுதலையை எழுதுதல்' என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன். மாலதியின் நூலில் இவற்றைப் பார்த்ததும்தான் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்களென விளங்கியது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எனது கர்ப்பப்பை, எனது சொத்து. வேறு எவனும் அதில் உரிமையெடுக்கவோ, தலையிடவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
-------------------------------------------------

ஒன்பது வித்தியாசமானவர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த கடிதங்களில் சிறுபகுதிகள்தான் இவை. மேலே எழுதிய கடிதக்காரர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் இன்று எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவர்களது நினைவுகள், எழுத்துக்களாய், சம்பாசணைகளாய் என்றும் எனக்குள் மிதந்துகொண்டேயிருக்கும்.

புளியமரங்களின் கதை

Monday, January 09, 2006

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

(1)
ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமியின் முதலாவது நாவல். புளியமரமே முக்கிய பாத்திரமாய் நாவலின் மையவோட்டம் எங்கும் தன் வேர்களையும் கிளைகளையும் பரப்பியபடி நாவல் முழுதும் நகர்கின்றது. எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், குதூகலங்களையும், வக்கிரகங்களையும்- காலத்தால் ஒரு ஊரில் ஏற்படும் மாற்றத்தை- பேசாய்ச் சாட்சியாய் பார்த்தபடி இருக்கிறது, புளியமரம். நாவலின் முடிவில் புளியமரம் அழிக்கப்பட்டாலும், தொடர்ந்தும் அந்தச் சந்தி புளியமர ஜங்ஷன் என்றே அழைக்கப்படுவதாய் குறிப்பிடப்படுவது, மனிதனைப்போலல்லாது புளியமரத்துக்கு என்றும் அழிவில்லை என்பதாய்த்தான் வாசிப்பவருக்குத் தோன்றும். அனேக நவீன கதைகளுக்குள் உட்பொதிந்து இருக்கும் - மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்வது- என்ற வினாவைத்தான் கதைமுழுதும் பாத்திரங்களினூடாக சு.ரா கேட்டபடி இருக்கின்றார். ஒரு கதைசொல்லியாக தன்னையும் சு.ரா நாவலில் இணைத்துக்கொண்டாலும், பிற பாத்திரங்களில் தன் ஆளுமையைக்காட்டாது அவர்களை தம் இயல்பிலேயே விடுகின்றார். அனேக பாத்திரங்களை பலங்களுடன் காட்டுவதற்கு முயற்சிப்பதற்குப் பதில் பலவீனங்களுடன் காட்டத்தான் சு.ரா அதிகநேரம் செலவழிக்கின்றார். அதற்கு அவரது எள்ளல் நடை மிகவும் துணைபுரிகின்றது.

PA140010

(2)
சு.ராவின் புளியமரத்தின்கதையைப் போல, ஈழத்தில் எங்கள் ஊரிலும் ஒரு பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. நாவலில் உள்ளதுபோல பல சம்பவங்கள் நான் அறிந்தும் அறியாமலும் அதைச்சுற்றியும் நிகழ்ந்திருக்கின்றது. நாவலிலுள்ள சிறுவர்களைப் போல, நாங்களும் கிளித்தட்டு, கிளிப்பொந்து போன்ற விளையாட்டுக்களை புளியமரத்தடியில் விளையாடியிருக்கின்றோம். பேய்கள், பிசாசுகள் எல்லாம் இரவில் நடமாடச்செய்யும் என்று இரவு நேரங்களில் புளியமரத்தடியை பயந்தபடி பலதடவைகள் ஓடிக்கடந்துமிருக்கின்றேன். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் எத்தனையோ ஆண்டுகள் நிரம்பிய புளியமரத்தை வெட்டத்தொடங்கியபோது- ஊரிலிருந்தவர்களின் எதிர்ப்பில்- சில கிளைகள் தறிப்பதுடன் அழிவுவேலை நிறுத்தப்பட்டது. நாவலில் தாமோதர ஆசான் அப்படி ஒரு தடவை புளியமரம் தறிப்பதைக் காப்பாற்றுவதாய் ஒரு சம்பவம் சித்தரிக்கப்படும். எங்களூர்ப் புளியமரத்தடியிலும் (அருகில் வைரவர் கோயில் இருந்தது) கூட்டணியினரின், கொம்யூனிஸ்ட் கட்சியினரின் அரசியற்கூட்டங்களும், கலைப்பெருமனறத்தின் விழாக்களும் களைகட்டியிருக்கின்றன என்றும் சில வருடங்களுக்கு முன் கேள்விப்படவும் செய்திருந்தேன். பிறகொருபொழுதில், அருகிலிருந்த பாடசாலைக் கட்டடங்கள் எலலாம் இராணுவத்தின் குண்டுவீச்சால் சிதைந்துபோனபோதும் புளியமரம் நெஞ்சு நிமிர்த்தி நின்றதைப் பார்த்துச் சிலிர்த்துமிருக்கின்றேன். ஒரு புளியமரத்தின் கதையைப்போல ஒரு விரிவான தளத்தில் கதையை எங்களூர்ப் புளியமரம் தன்னகத்தில் வைத்திருக்காவிட்டாலும், அருகிலிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடியில் நடக்கும் உயர்தர மாணவர்களின் காதற்கதைகளையாவது தன் கிளைகளால் பார்த்து இரசித்து என்னைப் போன்றவர்களுக்கு பிற்கொருபொழுதில் கூறியிருக்க புளியமரம் விரும்பியிருக்கவும் கூடும். ஆனால் போர் அந்தச் சந்தர்ப்பதை என்னைப் போன்றவர்களுக்கு வழங்கிவிட விரும்பவில்லைப் போலும்.

நாவலின் முடிவில் வரும் பட்டுப்போன புளியமரத்தைப்போல, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004ல்), -ஊருக்குத் தொலைவில், மாடியொன்றில் நின்று பார்த்தபோது- எங்களூர்ப் புளியமரமும் பட்டுப் பாழாகியிருந்தது தெரிந்தது. என் ஊர்ச்சனம் இல்லா ஊரில் நானும் உயிர்த்திருக்க மாட்டேன் என்ற வைராக்கியமோ அல்லது குண்டு ஏதேனும் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டதோ தெரியவில்லை. ஒரு பெரும் விருட்சமாய் நினைவில் தங்கியிருந்த புளியமரம், அகண்ட அடிப்பாகம் மட்டும் உயிர்ப்பிழந்து எஞ்சியிருததை நிஜத்தில் கண்டபோது மனது அந்தப்பொழுதில் கனக்கவும் செய்திருந்தது.

(3)
இந்நாவல் மிக மெதுவாகவே நகர்கின்றது (எழுதப்பட்ட ஆண்டு 1966 என்று கணக்கிலெடுத்து வாசித்தால் வேறுவிதமாய்த் தோன்றவும் கூடும்). ஜே ஜே சில குறிப்புக்கள் வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வின் எந்தத்துளியையும் இந்த நாவல் தராதது என்னளவில் மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அப்படியான ஒரு நிலைக்கு வருவதற்கு, ஜேஜே சிலகுறிப்புக்கள் வாசித்தபோது, சு.ரா குறித்து எந்த விம்பமும் இல்லாததும், எனது வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததும் ஒரு காரணமாகவும் கூடும். ஒரு புளியமரத்தின் கதை ஒருமுறை வாசிக்கக்கூடிய நாவல் என்று மட்டுமே கூறமுடியும். இந்நாவலை நோபல் பரிசு பெறத்தகுதியான தமிழ் நாவல் என்று யாரோ ஒரு விமர்சகர் கூறியதாய் பின்னட்டையில் எழுதியிருப்பது சற்று அதிகப்படியானதாகும். சு.ராவின் சிறந்த நாவல் என்று நான் நினைப்பது ஜேஜே சில குறிப்புக்களே தவிர இந்த நாவல் அல்ல.

'திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்' (ப 76), 'தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) , 'ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம்....இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கைளும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு'(..) போன்ற வாக்கிய அமைப்புக்களில் (உற்றுவாசித்தால் நிறையக் கிடைக்கலாம்) சு.ரா இன்னும் சற்றுக் கவனமாய் இருந்திருக்கலாம் போலத்தோன்றுகின்றது; ஆகக்குறைந்தது நான் வாசித்த ஜந்தாவது பதிப்பிலாவது.

Tuesday, January 03, 2006

தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை

எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்

மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்

வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது
எனது செடி

வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியெங்கும்

வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றாய் தவழ்ந்து வந்து
மனதை நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.

விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.

தை 03, 2006