கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

செவ்வ‌ர‌த்த‌ம்பூ குறிப்புக‌ள்

Monday, June 06, 2011

1. வானம்
அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் 'வான‌ம்' க‌வ‌னிக்க‌த்த‌தொரு ப‌ட‌ம். ஐந்து வெவ்வேறான‌வ‌ர்க‌ளின் க‌தைக‌ள் அந்த‌ந்த‌ கதாபாத்திர‌ங்க‌ளின் பின்புல‌ங்க‌ளில் வைத்து மிக‌ இய‌ல்பாக‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அட‌க்க‌முடியாக் குதிரையாய் த‌ன் ப‌ட‌ங்க‌ளில் திமிறிக்கொண்டிருக்கும் சிம்புவை இப்ப‌டி ஒரு பாத்திர‌த்திற்குள் பார்ப்ப‌து கூட‌ சில‌வேளைக‌ளில் க‌ன‌வுபோல‌த்தான் இருக்கிற‌து. இவ்வ‌ள‌வு சிர‌த்தையாக‌ திரைக்க‌தைய‌மைத்த‌வ‌ர்க‌ள், இப்ப‌ட‌த்தின் முடிவை வேறுவித‌மாக‌ எடுத்திருந்தால் இன்னும் பாராட்டியிருக்க‌த் தோன்றியிருக்கும். இதையேன் கூறுகின்றேன் என்றால் முஸ்லிம்க‌ள் மீதான் பொதுவான பிம்ப‌ம் எப்ப‌டியிருக்குமோ அத‌ன் வ‌ழியே ப‌ட‌த்தின் முடிவில் காட்டுகின்றார்க‌ள். ஆர்.எஸ்.எஸ்சின் அடாவ‌டித்த‌ன‌ங்க‌ளையுந்தானே இப்ப‌ட‌த்தில் காட்டுகின்றார்க‌ள் என‌ ஒருவ‌ர் எதிர் விவாத‌ம் இவ்விட‌த்தில் செய்ய‌க்கூடும். ஒடுக்க‌ப்ப‌டும் சிறுபான்மையின‌ர்/விளிம்புநிலையின‌ரை நாம் பொதுவெளிக்கு எடுத்துவ‌ரும்போது அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ளை நாம் மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ முன்வைக்க‌வேண்டும் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

முஸ்லிம்க‌ளின் ஒருப‌குதியின‌ர் தீவிர‌ அடிப்ப‌டைவாத‌த்திற்கு செல்கின்றார்க‌ள் என்ப‌து உண்மையே. ஆனால் அந்த‌ அடிப்ப‌டைவாத‌ம் நோக்கிப் ப‌ய‌ணிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் சிக்க‌லான‌தும், ஆழ‌மான‌தும் என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. இப்ப‌ட‌த்தில் பிர‌காஷ்ராஜின் த‌ம்பி ஒரு 'தீவிர‌வாதி'யாக‌ மாறுவ‌த‌ற்குக் கார‌ண‌ம் ஆர்.எஸ்.எஸின் விநாய‌க‌ர் ச‌துர்த்தியும்(?) பொலிஸ் அராஜ‌க‌மும்தான் என‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அவ்வாறு வ‌ன்ம‌ம் கொள்ளும் ஒருவ‌ர் பொலிஸையும், ஆர்.எஸ்.எஸ்சையும் தாக்க‌/கொல்ல‌ முய‌ற்சிப்ப‌ரே த‌விர‌ எல்லா ம‌த‌ ம‌க்க‌ளும் கூடும், ஒரு வைத்திய‌சாலைக்குப் போய் எல்லோரையும் போட்டுத்த‌ள்ள‌ விரும்பியிருக்க‌மாட்டார் என‌ அவ‌ர்க‌ளின் எளிய‌ வாத‌த்தை நாமும் எளிய‌ ஒரு கேள்வி மூல‌ம் இல்லாம‌ற் செய்துவிட‌லாம்.  பொதும‌க்க‌ள் கூடும் இட‌ங்க‌ளின் குண்டுவெடிப்புக‌ள்/தாக்குத‌ல்க‌ள் என்ப‌தை அதை யார் செய்தாலும் எத‌ன் பொருட்டும் நாம் நியாய‌ப்ப‌டுத்த‌முடியாதுதான். ஆனால் 9/11 தாக்குத‌லின் பின்னும் கூட‌, அமெரிக்கா/க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் நாம் ஒரு 'தீவிர‌வாத‌'த் தாக்குத‌லினால் கொல்ல‌ப்ப‌டுவ‌தை விட‌, மோட்டார் வாக‌ன‌ விப‌த்தால் கொல்ல‌ப்ப‌டும் ச‌ந்த‌ர்ப்ப‌மே அதிக‌ம் இருப்ப‌தாக‌ த‌ர‌வுக‌ளின்ப‌டி நிரூபிக்க‌முடியும். இதை இங்கே ந‌கைச்சுவையாக‌ 'நாம் ஒரு தீவிர‌வாதியை எண்ணிக் க‌ல‌க்க‌முறுவ‌தைவிட‌ தெருவில் போகும் காரை நினைத்தே அதிக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும்' என்பார்க‌ள்.

இந்த‌த் 'தீவிர‌வாதிக‌ள்' என்ப‌வ‌ர்க‌ள் கூட்ட‌மாய் ஒரே நேர‌த்தில் தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌த்தும்போது அவை மிக‌ப்பெரும் நிக‌ழ்வாக‌ ஊடக‌ங்க‌ளால் காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஆனால் அதேச‌ம‌ய‌ம் இந்திய‌ இராணுவ‌மோ/ அமெரிக்க இராணுவ‌மோ நாளாந்த‌ம் காஸ்மீர், ஈழ‌ம், ஈராக், ஆப்கானிஸ்தானில் செய்த‌/செய்யும் கொலைக‌ள்/தாக்குத‌ல்க‌ள்/பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக‌ளை ஒரு வ‌ருட‌த்திற்கு,,, என்ற‌ எல்லையில் வைத்துப் பார்த்தால் நாம் 'தீவிர‌வாதிக‌ள்' என‌ அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை விட‌ இவ்வாறான‌ இராணுவ‌ங்க‌ளின் அட்டூழிய‌த்தால் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளே எண்ணிக்கையில் அதிக‌மாய் இருப்பார்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌முடியும்.

இதைத்தான் 'வான‌ம்' பட‌மும் முஸ்லிம்க‌ள் என்கின்ற‌ சிறுபான்மையின‌ரை பொதுவெளிக்குள் வைக்கும்போது த‌வ‌றவிட்ட‌ விட‌ய‌ம் என‌ நினைக்கின்றேன். இது முஸ்லிம்க‌ள் என்ற‌ விட‌ய‌த்தில் ம‌ட்டுமில்லை, இந்தியா இராணுவ‌ம் ஈழ‌த்தில் செய்த அட்டூழிய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் பேசும்போது இராஜீவ்காந்தியின் கொலையை அத‌ற்கு நிக‌ராய்ச் ச‌ம‌ன‌ப்ப‌டுத்தி எல்லா அழிவுக‌ளையும் ம‌றைக்க‌ முய‌ல்வ‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ விரும்புகின்றேன். ஆக‌வேதான் ஆர்.எஸ்.எஸ்/பொலிஸ் என்ப‌வை முஸ்லிம்க‌ளை எப்ப‌டி ஒடுக்குவ‌தை ஒரு உள்ளூர‌ள‌வில் காட்ட‌ப்ப‌ட்ட‌தோ அத‌ற்கு நிக‌ரான‌ த‌ள‌த்தில் வைத்தே முஸ்லிம் பிர‌ச்சினையும் இப்ப‌ட‌த்தில் பேச‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டுமே த‌விர‌, அவ‌ர்க‌ளை ஒரு ச‌ர்வ‌தேச‌ 'தீவிர‌வாத‌' அளவில் வைத்துப் பேசுவ‌து (நிறைய‌ ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ளோடு வைத்திய‌சாலையைத் தாக்குவ‌து) அப‌த்த‌மான‌து என‌க் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இப்ப‌ட‌த்தைப் பார்க்கும் ஒரு முஸ்லிம், இப்ப‌டி எங்க‌ளின் ஒருப‌குதியின‌ரை மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ தீவிர‌வாதிக‌ளாய்ச் சித்த‌ரிக்கின்றீர்க‌ளே, அப்ப‌டியெனில் ஏன் உங்க‌ளால் இப்ப‌ட‌த்தில் ஒரு இட‌த்தில் கூட‌ குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ கொடூரமான‌ ப‌டுகொலைக‌ளைக் காட்ட‌வில்லை எனக் கேள்வி எழுப்பினால் 'வான‌ம்'  ப‌ட‌த்தோடு ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ப‌திலேதுமின்றி ம‌ண்ணுக்குள் தீக்கோழிபோல‌த் த‌லையைப் புதைக்க‌த்தான் வேண்டி வ‌ரும். மேலும் முஸ்லிம் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ம் எங்காவ‌து வைத்திய‌சாலையில் தாக்குத‌லைச் செய்ததா என்பதை நான் அறியேன். ஆனால் உல‌கின் மிக‌ப்பெரும் ஜ‌ன‌நாய‌க‌ நாடென‌ப் பெருமித‌ப்ப‌டும் இந்தியாவின் இராணுவ‌ம் யாழ் வைத்திய‌சாலைக்குள் உள்நுழைந்து வைத்திய‌ர்/தாதிக‌ள்/நோயாளிக‌ள் என‌ எந்தப் பிரிப்புமில்லாது சுட்டுக்கொன்றிருக்கின்ற‌து. 2009ல் ஈழ‌த்தில் இறுதியுத்த‌த்தில் இல‌ங்கை இராணுவ‌ம் துல்லிய‌மாக‌க் குறிபார்த்து த‌ன் ப‌ல்குழ‌ல் ஆட்லறித்த்தாக்குத‌ல்க‌ளை வ‌ன்னியிலிருந்த‌ வைத்தியசாலைக‌ளை நோக்கி ந‌ட‌த்தியிருக்கிற‌து. ஆனால் இவ‌ர்க‌ள் எவ‌ருமே தீவிர‌வாதிக‌ள் இல்லைத்தானில்லையா?

2.ஆடைக‌ள் அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம்
ஒவ்வொரு அர‌சும் காவ‌ல்துறை, இராணுவ‌ம் என‌ த‌ன் நாட்டு ம‌க்க‌ளைப் பாதுகாக்க‌வும், ச‌ட்ட‌ஒழுங்கை நிலை நிறுத்தவும் வைத்திருக்கின்ற‌து. காவ‌ல்துறை/இராணுவ‌ம் இல்லாவிட்டால் ச‌மூக‌த்தில் ந‌ம்மால் நிம்ம‌தியான‌ ம‌னித‌ர்க‌ளான‌ வாழ‌முடியாது என‌ க‌ற்பிக்க‌ப‌ட்டு, இதையே முற்றுமுழுதாக‌ ந‌ம்புகின்ற‌ நிலைக்குள் நாம் த‌ள்ள‌ப்ப‌ட்டும் விட்டோம். உண்மையில் இவ்வாறான‌ அதிகார‌ ம‌ற்றும் க‌ண்காணிப்பு நிறுவ‌ன‌ங்க‌ள் இல்லாது ந‌ம்மால் வாழ‌ முடியாதா என்கின்ற‌ கேள்வியை ஜோஸ் ச‌ர‌மாகோவின் 'Blindness'  ம‌ற்றும் 'Seeing' ஆகிய‌ இரு நாவ‌ல்க‌ளும் முன்வைக்கின்ற‌ன‌. எந்த‌ ஒரு அர‌சையும் தேர்ந்தெடுக்க‌ விரும்பாது த‌ம்பாட்டில் வாழ‌ விரும்பும் ம‌க்க‌ளை எப்ப‌டி அர‌சும்,இராணுவ‌மும் த‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ர‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ என்ப‌தை இந்நாவ‌ல்க‌ள் பேசுகின்ற‌ன‌. த‌மிழில் இந்நாவ‌ல்க‌ளுக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய‌ அறிமுக‌த்தை ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் நிச்சய‌ம் வாசிக்க‌வேண்டும்.

இவ்வாறு க‌ண்காணிப்பாள‌ர்க‌ளாக‌வும், க‌ட்டுப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளாக‌வும் நிறுவ‌ன‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ மைய‌ங்க‌ள் ம‌ட்டுமில்லாது, த‌னிப்ப‌ட்ட‌ ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ளுமே நாள‌டைவில் ச‌மூக‌த்தில் காவ‌ல‌ர்க‌ளாகி விடுகின்றார்க‌ள். அதுவும் ஆண்க‌ளாகிய‌ எம‌க்கு 'க‌லாசார‌ காவ‌ல‌ர்க‌ளாகி' விடுவ‌தென்ப‌து ந‌ம் 'ம‌ர‌ப‌ணுக்க‌ளிலே'யே புகுத்த‌ப்ப‌ட்டுவிடுகின்ற‌து போலும்.  ந‌ம் வீட்டுக்குள் இருக்கும் பிர‌ச்சினைக‌ளைத் தீர்ப்ப‌திலும் பார்க்க‌, ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ர் வீட்டுப்பிர‌ச்சினைக‌ளுக்குள் நுழைவ‌திலும், ஆலோச‌னை கூறுவ‌திலும், கிசுகிசுப்ப‌திலும் ந‌ம‌க்கு நாமே முன்னோடிக‌ள்தான்.

அண்மையில் யோர்க் வ‌ளாக‌த்தில் பாதுகாவ‌ல‌ர்க‌ள் ப‌ற்றிய‌ வ‌குப்பில் உரையாற்றிய‌ ஒரு பொலிஸ் 'பெண்க‌ள் தாம் பாதிக்க‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌விர்க்க‌வேண்டுமென்றால் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்க‌ளைப் போல் ஆடைக‌ள் அணிவ‌தைத் த‌விர்க்க‌வேண்டும்' ("women should avoid dressing like sluts in order not to be victimized") என்றிருக்கின்றார்.

இந்த‌க் க‌ருத்து மிகுந்த‌ ச‌ர்ச்சைக்குள்ளாகி, ரொற‌ண்டோ பொலிஸ் தலைமை அதிகாரியே த‌லையிட‌வேண்டிய‌ நிலை வ‌ந்த‌தும், குறிப்பிட்ட‌ பொலிஸ்கார‌ர் த‌ன‌து க‌ருத்துக்காய் பிற‌கு ம‌ன்னிப்புக் கேட்ட‌தும் ப‌ல‌ரும் அறிந்திருக்கூடிய‌தே. எனினும் இவ்வாற‌ க‌ருத்துக்க‌ள் த‌னிந‌ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌; பொலிஸ் துறையிலே இவ்வாறான‌ க‌ருத்துக்க‌ளே ஆழ‌மாய் வேரூன்றியிருக்கின்ற‌தென‌, இத‌ற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ பெண்க‌ள் ஏப்ர‌ல் மாத‌த்தில் ரொறொண்டோவில் ஆர்ப்பாட்ட‌ம் செய்திருந்த‌ன‌ர். அத‌ற்கு அவ‌ர்க‌ள் வைத்த‌ பெய‌ரே 'Slut Walk' என்ப‌தாகும்.

முத‌லில் நாம் இந்த‌ப் பொலிஸ்கார‌ர் கூறிய‌ க‌ருத்தை ச‌ற்று ஆழ‌மாய்ப் பார்க்க‌வேண்டும். பெண்க‌ள் உட‌ல்/ம‌ன‌ ரீதியாக வ‌ன்முறைக்குள்ளாக்க‌ப்ப‌டுவ‌தில் இவ்வாறு பெண்க‌ள் 'அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌' ஆடைக‌ள் அணிவ‌துதான் முக்கிய‌ கார‌ணிக‌ளில் ஒன்றாக‌ இருக்கின்ற‌தாக‌ இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அதாவ‌து பெண்க‌ள் ஒரு 'இர‌க‌சிய‌மான‌' ச‌மிக்ஞையை இவ்வாறு வ‌ன்முறை செய்யும் ஆண்க‌ளுக்கு த‌ம‌து ஆடைக‌ள் மூல‌ம் தெரிவிக்கின்றார்க‌ள் என்ப‌து இத‌ன் உட்கிடை. அதைவிட‌ இன்னொரு முக்கிய‌மான‌ விட‌ய‌த்தைத்தான் நாம் இன்னும் அதிக‌ம் க‌வனிக்க‌வேண்டும். அதாவ‌து எந்த‌ப் பெண்ணும் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஒரு பெண்ணை'ப் போல‌ ஆடை அணிந்தால் அவ‌ரைச் சிதைக்க‌ எந்த‌ ஆணுக்கும் உரிமை இருக்கின்ற‌து என்கின்ற‌ தொனி பொலிஸின் க‌ருத்தில் ஆழ‌ உட்பொதிந்து இருக்கின்ற‌து. இந்த‌க்க‌ருத்தை நாம் எப்ப‌டி க‌ட்டவிழ்ப்புச் செய்ய‌வேண்டும் என்றால், முத‌லில் 'யார் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்?' எனக் கேட்க‌ வேண்டும். ஒழுக்க‌மான‌/ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண் என்று பிரிக்க‌ உங்க‌ளுக்கு யார் அந்த் அதிகார‌த்தைத் த‌ந்த‌து என்ற‌ புள்ளியில் உரையாட‌த் தொட‌ங்கினாலே அத‌ற்கு பின்னால் வ‌ரும் எந்த‌க்க‌ருத்தும் அப‌த்த‌ம் என‌த் தெரிய‌வ‌ரும்.

அவ‌ர்க‌ள் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்'ணிற்கு ஒரு வ‌ரைவில‌க்க‌ண‌த்தைத் த‌ந்து இன்னும் அடம்பிடிப்பார்க‌ளாயின் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆணை' வ‌ரைய‌றுக்க‌ச் சொல்லி நாம் கேட்க‌லாம். அவ்வாறு வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆண்' அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ ஆடை அணிவ‌தில்லையா?' என‌க் கேட்க‌லாம். அப்ப‌டி ஆடைய‌ணிந்து ச‌மிக்ஞை கொடுத்தும் எந்த‌ ஆணுக்கும் உட‌ல்/உள‌ரீதியில் ஏன் எந்த‌ப் பெண்ணுமே பாதிப்பை ஏற்ப‌டுத்துவ‌தில்லை என‌க் கேட்க‌லாம். இறுதியில் ச‌மூக‌த்தின் உய‌ர்நிலையில் (hierarchy) ஆண்க‌ளே இருந்து எல்லாவ‌ற்றையும் தீர்மானிக்கவும் க‌ட்டுப்ப‌டுத்த‌வும் செய்கின்றார்க‌ள் என்ற‌ புரித‌லுக்கு எளிதில் வ‌ந்துவிட‌லாம்.

ரொற‌ண்டோவில் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌ Slut Walk ப‌ல்வேறு நாடுக‌ளிலும் எதிரொலித்திருக்கின்ற‌ன‌. உல‌கில் ஆண்க‌ளாகிய‌ நாம் எங்கு வாழ்ந்தாலென்ன‌, எல்லோரும் ஒரேமாதிரியாக‌த்தானே இருக்கின்றோம். என‌வே எல்லா இட‌ங்க‌ளிலும் பெண்க‌ள் த‌ம் எதிர்ப்பைக் காட்ட‌த்தான் விரும்புவார்க‌ள். விரைவில் இதே பெய‌ரில் நியூயோர்க்கிலும் இல‌ண‌ட‌னிலும் பெண்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ப் போகின்றார்க‌ள் என்ற‌ செய்தியையும் வாசித்தேன். ரொறொண்டோவில் 'Slut Walk' ந‌ட‌ந்த‌போது எத்த‌னையோ எரியும் விட‌ய‌ங்க‌ள் இருக்கும்போது ஏன் இதை பெரிதுப‌டுத்துகின்றார்க‌ள் என‌ ப‌ல‌ர் க‌ருத்துத் தெரிவித்திருந்த‌ன‌ர். ஒருவ‌கையில் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ க‌ருத்துத்தான். ஆனால் பின் ந‌வீன‌த்துவ‌ச் சூழ்நிலையில் வாழ்கின்ற‌ நாம் எங்கிருந்தும் ஒரு எதிர்ப்பைத் தொட‌ங்கலாம். அத‌ற்கு ஒரு தெளிவான‌ தொட‌க்க‌மோ அல்ல‌து முடிவோ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை. மேலும் ஒரு எதிர்ப்பை உறுதியாக‌க் காட்டுகின்றோம் என்றால் இனி இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் எழுந்த‌மான‌மாய்க் க‌ருத்துச் சொல்ல‌ விழைப‌வ‌ர்க‌ளை ச‌ற்று யோசிக்க‌வைக்கும், நிதான‌மாய்ப் ப‌தில‌ளிக்க‌ வைக்கும். இவ்வாறான‌ எதிர்ப்புக்க‌ள் எம் த‌மிழ்ச்சூழ‌லில் சாதி/பெண்/த‌ற்பாலின‌ர்/மூன்றாம்பால் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் தொட‌ர்ச்சியாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்தால் நாம் எத்த‌னையோ அப‌த்த‌மான‌ க‌ருத்துக்க‌ளை இன்று வாசிக்க‌வோ/கேட்க‌வோ வேண்டியிருக்காது அல்ல‌வா?

இந்தச் செய்தியோடு தொட‌ர்பில்லாதுவிட்டாலும், 'சுட‌ருள் இருள்' நிக‌ழ்வில் வ‌.கீதா கூறிய‌ ஒரு க‌ருத்துதான் நினைவுக்கு வ‌ந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் த‌னித்து பெண்ணிய‌ம் சார்ந்து பேசுவ‌து என்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து. அத‌ற்கான‌ வெளியை ஒருபோதும் த‌மிழ்ச்சூழ‌ல் த‌ந்த‌தில்லை என்றார். என‌வே வேறு எத‌னோடு இணைத்துத்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌வேண்டியிருக்கின்ற‌து. த‌ன‌க்குப் பெரியாரைக் க‌வ‌ச‌மாக்கித்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌து எனக் கூறியிருந்தார். த‌னித்துப் பெரியாரிய‌த்தைப் பேசுவ‌தைப் போல‌ த‌னித்துப் பெண்ணிய‌த்தைப் பேசினால் கேட‌க்க‌க்கூடிய‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌வ‌ர்க‌ளே இருப்பார்க‌ள் என‌ த‌மிழ்ச்சூழ‌லின் அவ‌ல‌த்தைத் த‌ன்பேச்சில் க‌வ‌ன‌ப்ப‌டுத்தியிருந்தார். தான் கூட‌ பொதுச்சூழ‌லில் ஒரு பெண்ணிய‌லாராக‌ அன்றி, பெரியாரிய‌ வாசிப்பாள‌ராக‌வே அதிக‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌தாக‌ த‌ன‌து பேச்சில் வ‌.கீதா வெளிப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழ்ச்சூழ‌லில் அறிய‌ப்ப‌ட்ட‌ பெண்ணிய‌லாள‌ரான‌ கீதாவே இவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌த்தையும், த‌டைக‌ளையும் கொண்டிருக்கின்றார் என்றால் சாதார‌ண‌ ஒரு பெண் தான் விரும்பிய‌தைப் பேசுவ‌த‌ற்கு இருக்கும் வெளி குறித்து நாம் யோசித்துப்பார்க்க‌லாம்.

ப‌ல்வேறு ‌புள்ளிக‌ளில் வைத்து விவாதிக்க‌வேண்டிய‌ இன்னொரு செய்தி இருக்கின்ற‌து. க‌ன‌டாவிலேயே பொறியிய‌ல் ப‌டிப்புக்குப் பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌மாக‌ வோட்ட‌லூ வ‌ளாக‌ம் இருக்கின்ற‌து. ஒவ்வொரு வ‌ருட‌மும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் மாண‌வ‌ர்க‌ளுக்கிடையில் ந‌ட‌க்கும் ப‌ந்த‌ய‌க் கார் போட்டியில் வோட்ட‌லூ பொறியிய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் ப‌ங்குப‌ற்றுவார்க‌ள்.மிக‌க்குறைந்த‌ செல‌வில், புதிய‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளுட‌ன் விலையுய‌ர்ந்த‌ உய‌ர்த‌ர‌ ப‌ந்த‌ய‌க்காரைப் போன்று ஒரு வ‌டிவ‌த்தை உள்ளூர் அள‌வில் வ‌டிவ‌மைப்ப‌தே இப்போட்டியின் நோக்க‌ம். மாண‌வ‌ர்க‌ளும் ப‌ல‌மாத‌ங்க‌ளாய் இத‌ற்காய் ஆய்வுகூட‌த்தில் உழைப்பார்க‌ள். இவ்வாறு கடுமையாக‌ உழைத்து போட்டியில் ப‌ங்குபெற‌ சில‌ மாத‌ங்க‌ளே இருக்கும்போது இந்த‌ வ‌டிவமைப்புக் குழு, வோட்ட‌லூ ப‌ல்க‌லைக்க‌ழ‌க நிர்வாக‌த்தால் போட்டில் ப‌ங்குபெறுவ‌திலிருந்து நிறுத்திவைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இத‌ற்கான‌ கார‌ண‌ம் இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழுவிலிருந்த‌ ஒரு பெண் ப‌ந்த‌ய‌க்காருக்கு முன் பிகினியுட‌ன் நின்று காட்சிய‌ளித்த‌ ஒரு புகைப்ப‌ட‌ம். இந்த‌ப் பெண்ணும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் புற்றுநோயுக்கான‌ நிதி திர‌ட்டும் ஒரு நிக‌ழ்வுக்காய் இந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை எடுத்திருக்கின்றார்க‌ள். அதைப் புகைப்ப‌ட‌த்தை எடுத்த‌ ந‌ண்ப‌ர் த‌ன் இணைய‌த‌ள‌த்தில் இதைப் பிர‌சுரிக்க‌ விட‌ய‌ம் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர் வ‌ரை சென்று இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழு ஆய்வுகூட‌த்திற்குள் (அதாவ‌து போட்டி முடியும்வரை) நுழைவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இப்பெண் மீது ஒழுக்காற்று விசார‌ணை ந‌ட‌க்கிற‌து என‌ நினைக்கின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்தை ப‌ல்வேறு நிலைக‌ளில் வைத்து விவாதிக்க‌லாம் எனினும் இவ்விட‌ய‌ம் குறித்து பெண்க‌ள் என்ன‌ கூறுகின்றார்க‌ள் என்ப‌தே என‌க்கு முக்கியமாக‌ப்ப‌ட்ட‌து. அவ்வாறான‌ ஒரு தேடுத‌லில் இந்த‌ச் சுவார‌சிய‌மான‌ க‌ட்டுரையை வாசிக்க‌ நேர்ந்த‌து. மேற்ப‌டி க‌ட்டுரையை எழுதிய‌வ‌ர் ஒரு பெண் ம‌ட்டுமில்லாது ஒரு வ‌ரைப‌ட நிபுண‌ருமாவார். அவ‌ர் குறிப்பிடும் ஒரு முக்கிய‌ ஒரு புள்ளி சுவார‌சிய‌மான‌து. பொதுப்புத்தியில் பொறியிய‌ல் ப‌டிக்கும் பெண்க‌ள் எல்லாம் Tom Boy வ‌கையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் புகுத்த‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ஆண்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்தும் பொறிய‌ல்துறையில் பெண்க‌ள் அறிவாளிகளாக‌வும், த‌ம் உட‌லை ஆராதிப்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை ஆண்க‌ள் ம‌ட்டுமில்லை பிற‌ பெண்க‌ளும் கூட‌ பொறாமையாக‌த்தான் பார்க்கின்ற‌ன‌ர்; இந்த‌ப் பொதுப்புத்தி சார்ந்த‌ சிந்த‌னையே எவ்வித‌ முறையான‌ விசார‌ணைக‌ளுமின்றி உட‌னேயே இப்பெண்மீதும் அவ‌ர் சார்ந்திருந்த‌ வ‌டிவ‌மைப்புக்குழு மீதும் வ‌ளாக‌ நிர்வாக‌ம் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌து என்கின்றார். இது கூட‌ ஒரு பெண் தான் விரும்பிய‌ ஆடையை அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என்ற‌வகையில் நீண்ட‌ விவாத‌திற்குரிய‌ ஒரு ச‌ம்ப‌வ‌ந்தான்.

3.பூச‌ல்
எழுத‌ப்ப‌டும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஏதோ ஒரு பாதிப்பிலிருந்து எழுகின்ற‌து என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். அது நிச்ச‌ய‌ம் நேர்ம‌றையாக‌ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை; எதிர்ம‌றையாக‌க் கூட‌விருக்கலாம். அந்த‌வ‌கையில் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ இந்த‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு முத‌லில் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ‌ர் அதில் என‌க்காய்க் கூறிய‌வ‌ற்றை க‌வ‌ன‌மாக‌ உள்வாங்கிக்கொள்கின்றேன். எந்த‌க் க‌ருத்தோ/சிந்த‌னை நிலையோ எப்போதும் நிர‌ந்த‌ன‌மான‌த‌ல்ல‌; மாறிக்கொண்டேயிருப்ப‌ன‌. என‌வே இப்போது ந‌ம்மிருவ‌ருக்குமான‌ அலைவ‌ரிசை ஒத்திய‌ங்காவிட்டாலும், என்றேனும் ஒருகால‌த்தில் இடைவெட்ட‌க்கூடிய‌ புள்ளி இருந்தால் அத்த‌ருண‌த்தில் அவ‌ரின் ப‌திவை ந‌ன்றியுட‌ன் மீண்டும் நினைவுகூர்வேன் என‌ ம‌ட்டும் இப்போதைக்கு கூறிக்கொள்ள‌ விழைகின்றேன்.

இந்த‌க்க‌ட்டுரை குறித்த‌ இர‌ண்டு புள்ளிக‌ளை ம‌ட்டும்....! 
(i) "டி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது." என‌ ஜெய‌மோக‌ன் எழுதியிருக்கின்றார்.

இவ்விட‌த்தில் நான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு எழுதிய‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு எஸ்.ரா எழுதிய‌ பின்னூட்ட‌த்தை நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

"எனது நாவல் யாமம் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனகட்டுரையை வாசித்தேன். மிக நுட்பமாகவும் கூர்ந்த விமர்சனப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் விடுபடல்கள் மற்றும் இடைவெளிகள் குறித்து உங்கள் சுட்டிகாட்டுதல் கவனத்திற்குரியவை.

ஆனால் ஒருநாவலாசிரியனாக இதை திருத்திக் கொள்கிறேன் என்று ஒரு போதும் கூறமாட்டேன். மாறாக நாவல் எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை. அதை ஒரு கவிஞராக நீங்கள் உணர்வீர்கள். நாவலை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்கள் என்பது குறித்து எந்த விமர்சன முடிவுகளும் நாவலின் வாசிப்பை தடை செய்யப்போவதில்லை. அது தான் எப்போதும் நடைபெற்று வருகின்றது.

தங்கள் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தில் வாசித்து வருகிறேன். சமீபமாக நான் படித்த கவிதைகளில் வெகு தனித்துவமானவை உங்கள் கவிதைகள். குறிப்பாக நீங்கள் கையாளும் மொழி மற்றும் கவிதையின் வழி பீறிடும் உள்ளார்ந்த கோபம் கவிதையை மிக நெருக்கமானதாக்குகிறது."

என இதில் "எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை" என‌ எஸ்.ரா குறிப்பிடுவ‌தையே ஜெய‌மோக‌னும் த‌ன் க‌ட்டுரையில் எழுதியிருக்கின்றார் என‌ நினைக்கின்றேன்.  அதேபோன்றே என்னாலும் எஸ்.ராவிற்கு என் க‌விதைக‌ள் பிடிக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்காய் அதேபாணியில் வ‌லிந்து எழுதுத‌ல் எவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லையோ அவ்வாறே ஜெய‌மோகனிற்குப் பிடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய்  நான் எழுதுப‌வ‌ற்றை மாற்றிய‌மைக்க‌ வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை என்றே -அவ்வ‌ப்போது- எழுதுகின்ற‌வ‌ன் என்ற‌வ‌கையில்  புரிந்துகொள்கின்றேன்.

இர‌ண்டாவ‌து, ஜெய‌மோக‌ன் ஓரிட‌த்தில் 'வளரும் எழுத்தாளனுக்கு பூசல் போல தீங்களிப்பது எதுவுமே இல்லை. அவன் உளச்சக்தி முற்றாகவே வீணாகும்.' என்கின்றார். பூச‌ல் என்ப‌தை எந்த‌ அர்த்த‌த்தில் ஜெய‌மோக‌ன் கூறுகின்றாரே தெரியாது. நான் அதை விவாத‌ம் என‌ எடுத்துக்கொள்கின்றேன். ஆனால் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தொட‌ர்ந்து வாசிக்கும் ஒருவ‌ர், அவ‌ர் இள‌ம்ப‌டைப்பாளிக‌ள் பிற‌ப‌டைப்பாளிக‌ளுட‌ன் உரையாட‌லைச் செய்ய‌வேண்டும் என்று வ‌லியுறுத்துப‌வ‌ராக‌வே இருக்கின்றார் என‌வே நினைப்பார். ஜெய‌மோக‌ன் கூட‌ த‌ன் ஆளுமை, தான் சுந்த‌ர‌ ராம‌சாமியோடும், நித்யாவோடும் விவாதித்த‌வைக‌ளின் அடிப்ப‌டையில் உருவாகிய‌வை என்று ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். ஆக‌,  இது ஒன்றுக்குப் பின் முர‌ணாக‌ இருக்கிற‌தே? இத‌ற்கும் ஜெய‌மோக‌ன் ஏதேனும் விள‌க்க‌ம் வைத்திருக்க‌க்கூடும். அதைத் தெளிவுப‌டுத்தினால் ந‌ன்று.  ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்தால் க‌ன‌டாவிற்கு வ‌ரும் ஜெய‌மோக‌னிட‌ம் இதை நேரில் கேட்டுப்பார்க்க‌ முய‌ற்சிக்கின்றேன்.

கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு

Wednesday, May 18, 2011

-பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The Guilt about the Past' ஐ முன்வைத்து-
(ஈழ‌ம்: 2009ன் நிக‌ழ்வுக‌ளுக்கு...)
1.
'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' (The Guilt about the Past) என்கின்ற‌ இந்நூல் ஆறு ப‌குதிக‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டு எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ச‌ட்ட‌ப் பேராசிரிய‌ரான‌ பெர்ன்ஹார்ட் ஸீலீங் (Bernhard Schlink), ஒக்ஸ்போர்ட் க‌ல்லூரியில் பேசிய‌வ‌ற்றின் தொகுப்பே இக்க‌ட்டுரைக‌ளாகும். இத்தொகுப்பிலிருக்கும் 'கூட்டுக் குற்ற‌வுண‌ர்வு', 'க‌ட‌ந்த‌கால‌த்தை ச‌ட்ட‌த்தினூடாக‌ தேர்ச்சிபெறுத‌ல்', 'ம‌ன்னிப்பும் மீளிண‌க்க‌மும்' ம‌ற்றும் 'க‌ட‌ந்த‌ கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள்' ஆகிய‌வற்றைக் கீழே ச‌ற்று ஊன்றிப் பார்போம். பெர்ன்ஹார்ட் 'தி ரீட‌ர்' (The Reader) என்கின்ற‌ பிர‌பல‌மான‌ நாவலை எழுதியவ‌ருமாவ‌ர். 'தி ரீட‌ர்' நாவ‌லும் நாஸிப்ப‌டையில் ப‌ணியாற்றிய‌ ஒரு பெண்ணின் 'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌த்தை' முத‌ன்மைப்ப‌டுத்துவ‌தை நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம். ப‌தின்ம‌த்திலிருக்கும் ஒருவ‌னுக்கு ம‌த்திய‌வ‌ய‌திலிருக்கும் இப்பெண்ணோடு காத‌ல் முகிழ்வ‌தையும், பிற்கால‌த்தில் தான் காத‌லித்த‌ இப்பெண்ணே, யூத‌ர்க‌ளை அடைத்துவைத்த‌ முகாமிற்குக் காவ‌லாளியாக‌ இருந்த‌தையும் அறிந்துகொள்கின்றான். வ‌தைமுகாமில் அடைத்துவைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் தீ விப‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்ட‌த‌ற்கு இப்பெண்ணும் ஒரு முக்கிய‌ காரணியென‌ குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டும்போது இந்த‌ இளைஞ‌னுக்கு ஏற்ப‌டும் குற்ற‌வுண‌ர்வே இக்க‌தையின் முக்கிய‌ தொனியாக‌ இருக்கிற‌து.

'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' நூலில் நுழைவ‌த‌ற்கு முன்ன‌ர் நாம் சில‌ விட‌ய‌ங்க‌ளை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. இதை எழுதிய‌ பெர்ன்ஹார்ட் ஒரு ச‌ட்ட‌ப்பேராசிரிய‌ராக‌ இருந்த‌போதிலும், அவ‌ர் ஜேர்ம‌னியில் நாஸிக‌ளால் யூத‌ர்க‌ளுக்கு நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக்கு ஒரு சாட்சியாக‌ இருந்த‌வருமல்ல‌; பாதிக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளின் த‌லைமுறையைச் சார்ந்த‌வ‌ரும‌ல்ல‌. ஜேர்ம‌னிய‌த் த‌ந்தைக்கும், ஸ்விடிஷ் தாயிற்கும் பிற‌ந்த‌ பெர்ன்ஹார்ட் ஒரு ஜேர்ம‌னிய‌ராவார். மேலும் பெர்ன்ஹார்ட் 1944ல் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌தால் அவ‌ர் நாஸிக‌ளின் ப‌டுகொலைக்குப் பின்பாக‌த் தோன்றிய‌ ஜேர்ம‌னிய‌ முத‌ல்த‌லைமுறையைப் பிர‌திப‌லிப்ப‌வ‌ராவ‌ர். அறுப‌துக‌ளின் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர் என‌க் கூறிக்கொள்ளும் பெர்ன்ஹார்ட் எப்ப‌டித் த‌ம‌து த‌ந்தைய‌ர்க‌ளும், பேர‌ர்க‌ளும் செய்த‌ அழிவுக‌ளைத் த‌ன‌து த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு முக்கிய‌ பேசுபொருளாக‌ இந்நூலில் எடுத்துக் கொள்கின்றார். தானும் த‌ன்னைச் சார்ந்த‌ த‌லைமுறையும் ச‌ந்தித்த‌ அவ‌மான‌ங்க‌ளையும், எதிர்கொண்ட‌ கேள்விக‌ளையும், த‌டுமாற்ற‌ங்க‌ளையும் போல‌ அன்றி, வேறுவித‌மாக‌வே இந்த‌ அழிவுக‌ளை த‌ம‌க்குப் பின் வ‌ரும் ஜேர்ம‌னிய‌த் த‌லைமுறை எதிர்கொள்ளும் என‌வும் குறிப்பிடுகிறார்.

இந்நூலின் முத‌லாம் அத்தியாய‌த்தில், க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளுக்குரிய‌தா அல்ல‌து கூட்டு ம‌ன‌ங்க‌ளுக்குரிய‌தா என்கின்ற‌ கேள்விக‌ளை பெர்ன்ஹார்ட் முன்வைக்கின்றார். அதாவது ஒரு இனத்தில் குறிப்பிட்ட சிலர் குற்றங்களை இழைத்தமைக்காய், முழு இனமுமே அதற்கான குற்றவுணர்வைக் கொண்டிருக்க வேண்டுமா என்பதை வாசிப்பவர்களிடம் முன்வைக்கிறார். அத‌ற்கு முன், ஆதிகால‌த்திலிருந்து எப்ப‌டி ஒரு குற்ற‌த்திற்குத் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறை மாறிக்கொண்டிருக்கிற‌து என்ப‌தைக் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். ஒரு கால‌த்தில் ஒரு இன‌க்குழும‌த்தைச் சேர்ந்த‌ ஒருவ‌ர் குற்ற‌ஞ்செய்தால் அவ‌ர் சார்ந்திருக்கும் முழு இன‌க்குழும‌முமே அத‌ற்கான‌ த‌ண்ட‌னையை ஏற்றுக்கொள்ளும் ந‌டைமுறை இருந்த‌தைக் குறிப்பிடுகின்றார். பின்ன‌ர் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் முறை, குற்ற‌த்தைச் செய்த‌வ‌ரை ம‌ற்ற‌ இன‌க்குழும‌த்திற்கு கையளிக்கின்ற வழக்கம் இருந்த‌தைச் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு கைய‌ளிக்க‌ப்ப‌டும் குற்ற‌ம் செய்த‌ ந‌ப‌ரை விரும்பினால் கொல்ல‌வோ அல்ல‌து த‌ங்க‌ளுக்கு அடிமையாக‌ வைத்திருக்க‌வோ ம‌ற்ற‌ இன‌க்குழும‌த்திற்கு உரிமை இருந்த‌தைக் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். ந‌ம‌து கால‌த்தில் குற்ற‌ங்க‌ளுக்கு விசார‌ணை செய்வ‌தையும்,த‌ண்ட‌னை வ‌ழ‌ங்குவ‌தையும் அர‌சும், காவ‌ல்துறையும் எடுத்துக்கொண்ட‌ன‌ என்கிறார் பெர்ன்ஹார்ட்.

ட‌ர்பாரிலோ,கொசோவாவிலோ ந‌ட‌க்கும் ப‌டுகொலைக‌ளைப் ப‌ற்றித் த‌ன்னால் விரிவாக‌க் க‌தைக்க‌முடியாது. ஆனால் தான் வாழும் ஜேர்ம‌னியில் நிக‌ழ்ந்த‌ இன‌ப்ப‌டுகொலை ப‌ற்றி ஒரு ஜேர்ம‌னிய‌னாக‌த் த‌ன்னால் பேச‌முடியும் என்கிறார். தீர்ப்பு வ‌ழ‌ங்கும் முறைக‌ள் எவ்வாறு கால‌த்திற்குக்கால‌ம் மாறிக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌தையும், அத‌ற்கு உதார‌ண‌மாக‌ 1945ற்குப் பின்பான‌ ஜேர்ம‌னியும், 1989ற்குப் பின்பான‌ இணைந்த‌ (கிழ‌க்கு/மேற்கு)ஜேர்ம‌னியும் நாஸிப்படையிலிருந்து குற்றஞ்செய்தவர்களுக்கு வ‌ழ‌ங்கிய‌ தண்டனைகளையும் எடுத்துக் காட்டுகின்றார். பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு இணைந்த‌ ஜேர்ம‌னியின் பின், ச‌ட்ட‌த்தில் ப‌ல‌ திருத்த‌ங்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌ என‌வும், எந்த‌ ஜேர்ம‌னியின் (கிழ‌க்கின‌தாஅல்ல‌து மேற்கின‌தா) ச‌ட்ட‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுவ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ள் எழுந்த‌தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இத‌ன் நீட்சியிலே, நாஸியில் இருந்த‌ ஒருவ‌ர் அக்காலத்தில் குற்ற‌ம் புரிந்தார் என்ப‌து நிரூபிக்கப்பட்டால் த‌ண்டிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌ம் என‌ வ‌லியுறுத்தும் பெர்ன்ஹார்ட், ஆனால் ஒருவ‌ர் நாஸிப்ப‌டையில் இருந்திருக்கிறார் என்ற‌ ஒரேயொரு கார‌ண‌த்தை ம‌ட்டும் வைத்து த‌ண்டிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மா என்ற‌ கேள்வியை எழுப்புகின்றார். நாஸிக‌ள் யூத‌ர்க‌ளைக் கொன்ற‌போது, ஜேர்ம‌னிய‌ராக‌(அல்ல‌து நாஸிப்ப‌டையில் இருந்த‌) ஒருவ‌ர் அதை எதிர்க்காததை நாம் த‌வ‌றென்று சுட்டிக்காட்ட‌லாம். ஆனால் அத‌ற்காக‌ அவ‌ரைக் குற்ற‌வாளியாக்க‌ முடியுமா என்கிறார் பெர்ன்ஹார்ட். அதாவ‌து ஒருவ‌ர் குற்ற‌ம் செய்யும்போது அவ‌ருக்கு த‌ண்ட‌னை கிடைக்க‌ நாம் போராடியிருக்க‌வேண்டும். ஆனால் அதேச‌ம‌ய‌ம் அவ்வாறு குற்ற‌ஞ்செய்த‌வ‌ர் த‌ண்ட‌னை பெற‌ நாம் போராடியிருக்காவிட்டால், நாம் அந்த‌க் குற்ற‌த்தைச் செய்த‌வ‌ருக்கு நிக‌ரான‌ த‌ண்ட‌னையைப் பெற‌வேண்டுமா என‌க் கேட்கிறார் பெர்ன்ஹார்ட்.

2.
இந்நூலை வாசிக்கும்போது, பெர்ன்ஹர்ட் நாஸிக‌ளின் அட்டூழிய‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌, முத‌லாம் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌தை நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும். என‌வே அவ‌ர‌து இள‌மைக்கால்ம் யூத‌ப்ப‌டுகொலைக‌ளைச் செய்த‌ நாஸிக‌ள் நீதிம‌ன்ற‌த்தின் முன் நிறுத்த‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ கால‌மாக‌வே இருந்திருக்கிற‌து. பெர்ன்ஹாட் போன்ற‌வ‌ர்க‌ள் மீது அன்பான‌ த‌ந்தைய‌ர்க‌ளாக‌வும், பேர‌ர்க‌ளாக‌வும் இருந்த‌ ப‌ல‌ர் மிக‌ மிலேச்ச‌ன‌த்த‌ன‌மாய் யூத‌ர்க‌ளைக் கொன்ற‌ கொலையாளிக‌ள் என்ப‌தை அறிகின்ற‌போது 'ந‌ம‌து த‌ந்தைய‌ரை கொல்வ‌து எப்ப‌டி'? என்கின்ற‌ கேள்விக‌ள் இய‌ல்பாய் பெர்ன்ஹார்ட்டின் த‌லைமுறைக்கு எழுந்திருக்கும் என்ப‌தும் புரிந்துகொள்ள‌க்கூடிய‌தே. என‌வே இந்த‌க் குற்ற‌வுண‌ர்விலிருந்தும், யூத‌ர்க‌ளைக் கொன்ற‌ வ‌ர‌லாற்றுப் பெரும்ப‌ழியிலிருந்தும் பெர்ன்ஹார்ட்டின் த‌லைமுறை வெளிவ‌ர‌வேண்டியுமிருந்த‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும். மேலும் இந்நூலிலிருக்கும் க‌ட்டுரைக‌ள் மிக‌வும் பொதுவான‌ த‌ள‌த்திலும், பெர்ன்ஹார்ட்டின் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌ங்களிலிருந்தும் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தையும் நாம் நினைவில் இருந்த‌வேண்டும்.

இர‌ண்டாவ‌து ப‌குதி 'க‌ண்டித்த‌லும் ம‌ன்னித்த‌லும்' ம‌ற்றும் 'ம‌ற‌த்த‌லும் மீளிண‌க்க‌ம் செய்வ‌தும்' ப‌ற்றிப் பேசுகிற‌து. இத‌ற்கு த‌ன் வாழ்விலிருந்து பெர்ன்ஹார்ட் ஒரு சொந்த‌ அனுப‌வ‌த்தைத் த‌ருகின்றார். தான் சிறுவனாக‌ இருக்கும்போது அன்றன்றைய‌ நாளில் செய்த‌ ந‌ல்ல‌வைக‌ளுக்கு ந‌ன்றி சொல்லியும், பிழைக‌ளுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌வும்ப‌டியும் க‌ட‌வுளிட‌ம் பிரார்த்திக்கும்ப‌டி கிறிஸ்துவில் ந‌ம்பிக்கை வைத்திருந்த அம்மாவால் தான் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட்.  ஒரு‌முறை தான் த‌ன் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்குத் த‌வறிழைத்து விட்டேன், அத‌னால் ம‌ன்னிக்கும்ப‌டி க‌ட‌வுளிட‌ம் பிரார்த்தித்தேன் என‌த் த‌ன் தாயிட‌ம் கூறிய‌போது, க‌ட‌வுளிட‌ம் அல்ல‌, நீ த‌வ‌றிழைத்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளிட‌மே நேரில் ம‌ன்னிப்புக் கேட்க‌வேண்டுமென‌ அம்மாவினால் அறிவுறுத்த‌ப்ப‌ட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட். ஆக‌ க‌ட‌வுளிட‌ம் முழு ந‌ம்பிக்கையுள்ள‌ அம்மா கூட‌ முத‌லில் த‌வறிழைத்த‌ ம‌னித‌ர்க‌ளிட‌ந்தான் ம‌ன்னிப்புக் கேட்க‌ச் சொல்கிறார் என்கிறார்.  அப்ப‌டி எனில் நம‌க்கேன் ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கும் க‌ட‌வுள் வேண்டியிருக்கிற‌தென‌ கேள்வி எழுப்பும் பெர்ன்ஹார்ட் அத‌ற்கும் ஒரு ப‌திலையும் த‌ருகின்றார். குற்ற‌முள்ள நெஞ்சோடு ஒருவ‌ர் வாழ்வ‌தென்ப‌து மிக‌வும் க‌டின‌ம், நாம் த‌வ‌றிழைத்த‌ ம‌னித‌ர்க‌ள் உயிருட‌ன் இருக்கும்போது அவ‌ர்க‌ளிட‌மே நாம் ந‌ம‌து ம‌ன்னிப்புக்க‌ளை நேரடியாகக் கோர‌லாம். ஆனால் இன்று உயிரோடு இல்லாத‌ ம‌னித‌ர்க‌ளுக்கு நாம் இழைத்த‌ த‌வ‌றுக‌ளின் நிமித்த‌ம் பெருகும் குற்ற‌வுண‌ர்வுகளை எப்ப‌டிக் க‌ரைக்க‌ முடியும்? ஆக‌வேதான் ந‌ம‌க்கு ம‌ன்னிப்பு அளிக்கும் ஒரு க‌ட‌வுள் வேண்டியிருக்கிறார் என்கிறார். ஆனால் இப்ப‌டித் தான் கூறுவ‌தை நாத்திகவாதிக‌ள் ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள் என்ப‌தையும் அவ‌ர் குறிப்பிடுகிறார் .

பெர்ன்ஹார்ட், ச‌ட்ட‌த்தை ஒரு க‌ருவியாக்கி நினைவூட்ட‌லையும், ம‌ற‌த்த‌லையும் எளிதாக்க‌ முடியுமா என‌ த‌ன் மூன்று க‌ருத்தாங்க‌ங்க‌ளை த‌ன‌து க‌ட்டுரையொன்றில் முன்வைக்கிறார். முத‌லாவ‌து க‌ருத்தாக‌, 'நினைவூட்ட‌ல், மீட்சிக்கான‌ இர‌க‌சிய‌ம்' (Remembering is the secret of redemption) என்கிறார். யூத‌ம‌க்க‌ள் தொட‌ர்ந்தும் த‌ங்க‌ளுக்குள்ளும், தொட‌ர்ந்து வ‌ரும் த‌ம் த‌லைமுறைக‌ளுக்கும் நாஸிக‌ளின் ப‌டுகொலைக‌ளை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கின்றார்க‌ள் எனும் பெர்ன்ஹார்ட், இத‌ன் மூல‌ம் தங்க‌ள் மீது எதிர்கால‌த்தில் எப்போதாவ‌து நிக‌ழ்த்த‌ப்ப‌டும் அட‌க்குமுறைக‌ளை எதிர்க்க‌ த‌ங்க‌ளை த‌யார்ப்ப‌டுத்தி விழிப்புநிலையில் வைத்திருக்கின்ற‌ன‌ர் என்கின்றார். இந்த‌ க‌ருத்தாக்கமான‌து பெர்ன்ஹார்ட் முன்வைக்கும் மூன்றாவ‌து க‌ருத்தாக்க‌மான‌ 'க‌ட‌ந்த‌கால‌த்தில் ந‌ட‌ந்த‌ (அநீதியான‌) நிக‌ழ்வுக‌ள் எதிர்கால‌த்தில் நிக‌ழாது த‌டுக்க‌, நினைவூட்ட‌ல் என்ப‌து மிக‌ அத்தியாவ‌சிய‌மான‌து' என்ப‌த‌ற்கு மேலும் வ‌லுச்சேர்ப்ப‌தாக‌வும் இருக்கிற‌து.

இர‌ண்டாவ‌து க‌ருத்தாக்க‌மாய் 'ஒருவ‌ரின் குடும்ப‌த்திலும் ச‌மூக‌த்திலும் அவ‌ரின் த‌னித்துவ‌ அடையாள‌ம், ந‌ம்பிக்கை, உறுதிப்பாடு என்ப‌வ‌ற்றை உறுதிப்ப‌டுத்துவ‌து' என்ப‌து நினைவூட்ட‌லும், (ந‌ட‌ந்த‌த‌ற்கான‌)குற்ற‌வுண‌ர்வும். க‌வ‌லையுண‌ர்வும் கொள்வ‌தற்கான‌ முன்நிப‌ந்த‌னைக‌ளாகும் என்கிறார். இத‌ற்கு பெர்ன்ஹார்ட் நாஸிக‌ள் செய்த‌ ப‌டுகொலைக‌ளுக்குப் பின்பான‌ ஜேர்ம‌னியை எடுத்துக்கொள்கின்றார். நாம் உண்மையில் யூத‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌வைக‌ளிற்கு குற்ற‌வுண‌ர்வும்,க‌வ‌லையும் கொள்கின்றோம் என்றால் ஒவ்வொரு யூத‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ள‌து த‌னி அடையாள‌ம், அவ‌ர்க‌ளை நாம்  வெறுக்கமாட்டோம் என்கின்ற‌ ந‌ம்பிக்கை, இனி இவ்வாறு நிக‌ழாதெனும் உறுதிப்பாடு ஆகிய‌வ‌ற்றை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவ‌தே இத‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னைக‌ளாகும் என்கின்றார். இந்த‌ இட‌த்திலேயே பெர்ன்ஹார்ட், குற்ற‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ நாஸிக‌ளுக்குத் த‌ண்ட‌னை வ‌ழங்கப்ப‌ட‌வேண்டுமென்ப‌தை வ‌லியுறுத்துகிறார். அதேபோன்று ப‌ழைய‌ (ஹிட‌ல‌ரின்)அர‌ச‌ அமைப்பில் ப‌ங்க‌ளித்த‌வ‌ர்க‌ள் குற்றங்களைச் செய்யாவிட்டால் கூட, புதிய‌ ஜேர்ம‌னிய‌ அர‌சின் ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ஒத்தியங்காவிட்டால், அவ‌ர்க‌ளும் கூட்டுக் குற்றவுணர்விற்கு(collective guilt) பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். எனெனில் இவ‌ர்க‌ள் இன்ன‌மும் புதிய‌ சன‌நாய‌க‌ நெறிக‌ளுக்கு இசையாவிட்டால் இவ‌ர்க‌ளிட‌ம் இன்ன‌மும் ப‌ழைய‌ சிந்த‌னைப்போக்கே (யூத‌ வெறுப்பே) இருக்கிற‌து என்ப‌தைப் பெர்ன்ஹார்ட் சுட்டிக்காட்டுகிறார்.

3.
'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌மும்' அத்தியாய‌த்தில், மீளிண‌க்க‌த்திற்கான‌ முக்கிய‌ நிப‌ந்த‌னையாக‌ அனைத்து உண்மைக‌ளும் ஒடுக்கிய‌வ‌ர்க‌ளின் த‌ர‌ப்பில் இருந்து பேச‌ப்ப‌ட‌வேண்டும் என்கிறார். தாமும் த‌ம‌து ச‌ந்த‌தியின‌ரும் செய்த‌ ஒடுக்குமுறைக‌ள்/ப‌டுகொலைக‌ளை ப‌ர‌ந்த‌ம‌ன‌தோடு ஒத்துக்கொண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்போடு திற‌ந்த‌ உரையாட‌ல்க‌ளை செய்ய‌வேண்டும் என‌ பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார்.. அதேபோன்று இந்த‌ மீளிண‌க்க‌த்தின்போது, பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் ஒடுக்கிய‌வ‌ரை ம‌ன்னித்துவிட்டால் கூட‌, அத்த‌ர‌ப்பு ந‌ட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ளை முற்றாக‌ விள‌ங்கி, அவ‌ற்றை ம‌ற‌ந்துதான் ம‌ன்னிக்க‌வேண்டும் என்கின்ற‌ எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை என‌கிறார். மேலும் மீளிண‌க்க‌ச் சூழ‌ல் என்ப‌து, பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்பும் த‌ன்னைப் போன்ற‌ ச‌மமான‌ ம‌னித‌ர்க‌ளே என்கின்ற‌ புரிந்துண‌ர்வோடும், அவ‌ர்க‌ள் அவ்வாறு வாழ‌ உறுதிசெய்துகொண்டுமே நிக‌ழ்த்த‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையும் பெர்ன்ஹார்ட் வ‌லியுறுத்துகிறார். மீளிண‌க்க‌ம் என்ப‌து நோப‌ல் ப‌ரிசுக‌ளை இர‌ண்டுத‌ர‌ப்புக்க‌ளின் முக்கிய‌த‌ஸ்த‌ர்க‌ளுக்கும் கொடுத்துவிட்ட‌வுட‌னேயே எளிதாக‌ நிக‌ழ்ந்துவிட‌க்கூடிய‌ ஒரு விட‌ய‌ம‌‌ல்ல‌ என்ப‌தைக் குறிப்பிடுகிறார். ஜேர்ம‌னிய‌ர்க‌ள் யூத‌ர்க‌ளுக்கு நிக‌ழ்த்திய‌ ப‌டுகொலைக‌ளுக்கு பின் மீளிண‌க்க‌ம் ஒர‌ள‌வு வெற்றிய‌டைந்திருந்தாலும் அது முழுமையான‌தில்லை எனும் பெர்ன்ஹார்ட், இன்ன‌மும் ஜேர்ம‌னி க‌ட‌ந்த‌கால‌த்தில் பிரான்ஸ், போல‌ந்து உள்ளிட்ட‌ நாடுக‌ளோடு மீளிண‌க்க‌ம் செய்ய‌த் த‌யாராக‌வில்லை என்ப‌தையும் சுட்டிக்காட்டுகிறார்.

தென்னாபிரிக்காவில் அமைக்க‌ப்ப‌ட்ட‌ 'உண்மை ம‌ற்றும் மீளிண‌க்க‌க் குழு' ந‌ல்ல‌விட‌ய‌மே என்றாலும் நினைத்த‌ அள‌வுக்கு அது முன்னேற்ற‌த்தைக் காண‌வில்லை என்ப‌தையும் க‌வ‌னப்ப‌டுத்துகின்றார். இத‌ற்கான‌ முக்கிய‌ கார‌ண‌மாக‌ ஒடுக்குமுறைக‌ளைச் செய்த‌ த‌ர‌ப்பு ம‌ன‌ந்திற‌ந்து த‌ன‌து ஒடுக்குமுறைக‌ளையும், குற்ற‌ங்க‌ளையும் பொதுவெளியில் பேச‌ முன்வ‌ராமையைக் குறிப்பிடுகின்றார். எனினும் இன்றைய‌ சூழ‌லில் ஒர‌ள‌வு முன்னேற்ற‌முடைய‌ செய‌ற்பாடாக‌ 'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌ம் செய்த‌லுமே' இருக்கின்ற‌து என்ப‌தையும் பெர்ன்ஹார்ட் ஒப்புக்கொள்கின்றார்.

இந்நூலின் இறுதி அத்தியாய‌த்திற்கு, 'க‌டந்த‌கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள்'(Stories about the Past ) என‌ த‌லைப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. நாம் க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌வ‌ற்றை புனைவுக‌ளாக்கும்போது அது க‌ட‌ந்த‌ கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ப்ப‌ட்ட‌ அழிவுக‌ளின் வீரிய‌த்தை இல்லாம‌ற் செய்துவிடுமா? என்ற‌ கேள்வியை பெர்ன்ஹார்டு இங்கே எழுப்புகின்றார். மேலும் யூத‌ர்க‌ள் மீது ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளை புனைவாக்கும்போது அங்கே ந‌கைச்சுவை, அழ‌கிய‌ல் போன்ற‌வ‌ற்றை புகுத்துவ‌தும் ச‌ரியா என‌வும் கேட்கிறார். இத‌ற்கு மாற்றாய் ந‌ம‌க்கு இருக்கும் சிற‌ந்தொரு வ‌ழி, ந‌ட‌ந்த‌வ‌ற்றை இய‌ன்ற‌ள‌வு வீரிய‌ம் குறையாது ஆவ‌ண‌ப்ப‌ட‌மாக்க‌லே எனும் பெர்ன்ஹார்ட், க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌வ‌ற்றை சில‌ ப‌குதிக‌ளாய்க்கொண்டு க‌தைக‌ளாக‌வோ, திரைப்ப‌ட‌ங்க‌ளாக‌வோ ஆக்குவ‌தும் த‌வ‌றில்லை என‌க் குறிப்பிடுகிறார். 'ஆஷ்சுவிட்ஷ் ப‌டுகொலைகளின் பின் க‌விதை என்ப‌தே இல்லை' (After Auschwitz , there is no poetry) என‌ தியோட‌ர் கூறிய‌தை பெர்ன்ஹார்ட் நினைவூட்டுகிறார் . திரைப்ப‌ட‌ங்க‌ளிலோ, க‌தைக‌ளிலோ யூத‌ப்ப‌டுகொலைக‌ளின் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை சித்த‌ரிப்ப‌தில் த‌வ‌றில்லை எனும் பெர்ன்ஹார்ட் ஆனால் க‌தாபாத்திர‌ங்க‌ள் அன்றைய‌ கால‌த்தின் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளைக் க‌ட்டாய‌ம் பிர‌திப‌லிக்க‌ வேண்டும் என்கிறார். எவ்வாறு ஒரு எஸ்.எஸ்.காவ‌லாளி பொதுவாக‌ அன்றைய‌ நாஸி வ‌தைமுகாமில் இருந்திருப்பாரோ அவ்வாறே அவ‌ரின் பாத்திர‌ம் ப‌டைக்க‌வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்துகிறார். அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஒரு ஜேர்ம‌னிய‌ர் யூத‌ருக்கு உத‌வுகின்றார் என்றால் அது ஒரு விதிவில‌க்கான‌ நிக‌ழ்வாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மென்கிறார்.

எனினும் ஒரு க‌தையோ திரைப்ப‌ட‌மோ எப்போதும் ஒருசாராரின் உண‌ர்வுக‌ளை காய‌ப்ப‌டுத்த‌க்கூடும் என்ப‌தையும், மேலும் அத‌னால் அப்ப‌டைப்புக்கான‌ எதிர்ப்பும் எழுமென்ப‌தையும் பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகிறார். இத‌ற்கான ஒரு உதார‌ண‌மாய் , ஜேர்ம‌னிய‌ப் ப‌ட‌மான‌ 'ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை' (The Lives of Others)  எடுத்துக்கொள்கிறார். கிழ‌க்கு ஜேர்ம‌னியில், ஒரு நாட‌க‌க்குழு அர‌சுக்கு எதிராக‌ நாட‌க‌ம் போடுவ‌தை உள‌வ‌றிய‌ அர‌சின் உள‌வுத்துறையான‌ ஸ்ரேசியால் ஒருவ‌ர் இந்நாட‌க‌க் குழுவை க‌ண்காணிக்க‌ வேலைக்கு அம‌ர்த்த‌ப்ப‌டுகின்றார். அந்நாட‌க‌க்குழு அர‌சுக்கு எதிராக‌ இய‌ங்குவ‌து தெரிந்தும் அந்த‌ உள‌வுத்துறை ந‌ப‌ர், அவ‌ர்க‌ளை அர‌சுக்குக் காட்டிக் கொடுக்காது இறுதியில் த‌ப்ப‌விட‌ச் செய்கிறார் என்ப‌தை இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். இப்ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌போது ஸ்ரேசியினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் த‌ம‌து எதிர்ப்பைக் தீவிர‌மாக‌க் காட்டிய‌தாக‌ பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார். ஸ்ரேசியின் உண்மையான‌ அட‌க்குமுறைக‌ளை இது அதிக‌ம் அழ‌கிய‌ல்ப‌டுத்தி அத‌ன் வீரிய‌த்தைக் குறைக்கிற‌து என்ப‌து அவ‌ர்க‌ளின் வாத‌மாய் இருந்த‌தாக‌க் குறிப்பிடும் பெர்ன்ஹார்ட், அதேச‌ம‌ய‌ம் இப்ப‌ட‌ம் உல‌க‌ம் முழுதும் மிக‌வும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌தையும்,ஜேர்ம‌னியின் ஒருப‌குதியின‌ர் ஆத‌ரித்த‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். என‌வே இவ்வாறான‌ முர‌ண்க‌ளுட‌னேயே க‌ட‌ந்த‌கால‌த்தைப் ப‌ற்றிப் பேசும் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ரும் என‌க்கூறும் பெர்ன்ஹ‌ர்ட், நாம் இவ்வாறான‌ சித்த‌ரிப்புக்க‌ளை விதிவில‌க்காக‌ விள‌ங்கிக்கொள்ளும் போதிய‌ அறிவைப் பெற்றிருக்க‌வேண்டும் என்கிறார்.

'The Lives of others' திரைப்ப‌ட‌த்தை பெர்ன்ஹார்ட் விவ‌ரிக்கும்போதுதான், நாங்க‌ள் 'ஏதிலிக‌ளினூடாக‌' திரையிட்ட 'The Boy in the Striped Pyjamas' திரையிட்ட‌பின் நிக‌ழ்ந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நினைவுக்கு வ‌ந்த‌து. இக்க‌தையில் வ‌தைமுகாமில் இருக்கும் யூத‌ச் சிறுவ‌னோடு நாஸிப்படையில் உய‌ர்பொறுப்பிலிருக்கும் அதிகாரியொருவரின் ம‌க‌னுக்கு ந‌ட்பு முகிழ்கின்ற‌து. இறுதியில் ஒரு த‌வ‌றால் அந்த‌ அதிகாரியின் ம்க‌னும், யூத‌ச் சிறுவ‌னோடு சேர்ந்து விஷவாயு செலுத்த‌ப்ப‌டும் அறைக்குள் அக‌ப்ப‌ட்டு இற‌ப்ப‌தாய்ப் ப‌ட‌ம் முடியும். இத்திரையிட‌லின் க‌ல‌ந்துரையாட‌லில், இப்ப‌ட‌த்தின் முடிவு 'ஒரு நாஸிச்சிறுவ‌னும் சேர்ந்து இற‌ப்ப‌தாலேயே ந‌ம‌க்கு அதிக‌ம் துக்க‌ம் வ‌ருகின்ற‌மாதிரியான‌ எண்ண‌த்தை விளைவிக்கின்ற‌து' என்றொரு புள்ளியைச் சுட்டிக்காட்டியிருந்தேன். எத்த‌னையோ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான் யூத‌ச்சிறுவ‌ர்க‌ள் அநியாய‌மாய்க் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை, இங்கே பாருங்க‌ள் நாசிச் சிறுவ‌ன் ஒருவனும் செத்திருக்கின்றான் என‌ச் சித்த‌ரிப்ப‌த‌ன் மூல‌ம், 'க‌ட‌ந்த‌ககால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வீரிய‌மிழ‌க்க‌ச் செய்யும் ஒரு செய‌ல்' என்கின்ற‌ விம‌ர்ச‌ன‌த்தை நாம் இப்ப‌ட‌த்தின் மீதும் முன்வைக்க‌லாம். ஆக‌வே இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போதோ, புனைவுக‌ளையோ வாசிக்கும்போதோ நாம் இவ்வாறான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ மிக‌ச் சொற்ப‌மான‌ விதிவில‌க்கான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌த்தான் வேண்டியிருக்கிற‌து.

பெர்ன்ஹார்ட்டின் 'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' மிக‌ முக்கிய‌மான‌ ஒரு நூலென‌ நாம் எடுத்து அதை எழுத்தெண்ணி ஊன்றி வாசிக்க‌த்தேவையில்லை. மேலும் இந்நூல் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரின் ச‌ந்த‌தியைச் சார்ந்த‌வ‌ரால் அல்ல‌, ஒடுக்கிய இனத்தின் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ரால் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற்கொள்ள‌ வேண்டும். எனினும் க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ கொடூர‌ங்க‌ளைத் தாண்டி ஒடுக்கிய‌/ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌ங்க‌ளைச் சேர்ந்த‌ அடுத்த‌ த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நிக‌ழ்கால‌த்தில் நிம்ம‌தியாக‌ வாழ்வ‌த‌ற்கான‌ சில‌ முக்கிய‌ புள்ளிக‌ளை இந்நூல் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து என்ப‌தைக் கூற‌த்தான் வேண்டும். முக்கிய‌மாய் ஆயுத‌ப்போராட்ட‌ம் முடிந்தும், ஒரு குழ‌ப்பமான‌ சூழ்நிலை க‌விழ்ந்திருக்கும் இல‌ங்கையில் இன்று ப‌கைம‌ற‌ப்பையும் மீளிண‌க்க‌த்தையும் முன்வைக்கும் எல்லாத் த‌ர‌ப்பின‌ரும் இந்நூலை அவ‌சிய‌ம் வாசிக்க‌வேண்டும். குறிப்பாய் 'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌மும்' என்ற‌ அத்தியாய‌த்தில் ஒடுக்கிய‌த‌ர‌ப்பு, ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்பை த‌ன்னைப் போன்ற‌ ச‌க‌ம‌னித‌ராய் ம‌திக்கவும், அமைதிச் சூழ்நிலைக‌ளை உருவாக்க‌வும் பாடுப‌ட்டால்தான்... அத‌ன்பின்ன‌ரே மீளிண‌க்க‌ம் சாத்திய‌ம் என்கின்ற‌ பெர்ன்ஹாட்டின் க‌ருத்துக்க‌ளை ஊன்றிப் ப‌டிக்க‌வேண்டும். மேலும் மீளிண‌க்க‌ம் என்ப‌த‌ற்கு க‌டுமையான‌ உழைப்பும், இவ்வாறு மீளிண‌க்க‌ம் தொட‌ங்கிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் அவை நினைத்த‌வ‌ள‌வில் சாத்திய‌மாக‌வில்லை என்கின்ற‌ பெர்ன்ஹார்ட்டின் அவ‌தான‌ங்க‌ளையும் நினைவில் இருத்த‌ வேண்டும். இல்லாதுவிட்டால் போர் முடிந்த‌ உட‌னேயே 'ப‌கைமற‌ப்பு', 'மீளிண‌க்க‌ம்' என்று உரையாடுவ‌து இன்னொரு 'ஆட‌றுக்க‌ முன் ச‌ட்டி வைத்த‌ க‌தையாக‌' எவ‌ருக்கும் உப‌யோக‌மின்றி புஸ்வாண‌மாக‌ப் போய்விடுமென்ப‌தையும் மெல்லிய‌ குர‌லில் கூற‌ வேண்டியிருக்கிற‌து.

மேலதிகமாய் உதவியவை:
(1) 'Guilty as charged' by Thomas Hurka (The Globe and Mail)
(2) 'Look Back in horror' by Joanna Bourke (The Sunday Times)

ந‌ன்றி: 'கால‌ம்'- 2011

ப‌ற‌ந்துபோன‌ இரும‌ர‌ங்க‌ளும் ப‌ச்சைய‌ம் இழ‌ந்த‌ காடுக‌ளும் - 03

Friday, May 13, 2011

டிசே த‌மிழ‌ன் - க‌லீஸ்தினோ

-ப‌குதி 03

III.
இவ்வளவு காலமும் என்னைப் புறக்கணித்துவிட்டு இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு மெயிலை இவன் அனுப்பியிருந்தான். எல்லாவற்றையும் மறந்து அல்லது கடந்தகாலத்தை நினைவூட்டாது இருவரும் மீண்டும் டேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தோம். ஒரு நாள் இர‌வு நாங்கள் 'கெல்சி'யிற்கு சாப்பிடப் போயிருந்தோம். இவன் கழிவறைக்குப் போயிருந்த‌ நேர‌ம் இவனது கைத்தொலைபேசியை சும்மா தோண்டியபோது துஷா@.... என்ற பெயரில் தொலைபேசி எண் ஒன்று பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். அட இது எனது தோழிக்கு பழக்கமான துஷாவல்லவா என்று இழையொன்றின் நுனியைப் பிடித்து, பிறகு துஷாவிற்கும் இவ‌னிற்கும் க‌ட‌ந்த‌கால‌த்தில் இருந்த‌ உற‌வின் முழுப் பரிமாணத்தையும் அறிந்துகொண்டேன்.

நான் மிகுந்த சிக்கலுக்குள் -இவன் திரும்பி வந்த காலகட்டத்தில்- இருந்தேன். அந்தக் காலகட்டத்தைப் போல நான் மனவுளைச்சலுக்கு உள்ளான ஒருபொழுது என்றுமே இருந்த‌தில்லை. எனது நிலைப்பாட்டை... எனது சுயத்தை.... எனது பெற்றோருக்காவது விளங்கப்படுத்த முடியுமென அவர்களோடு போராடிக்கொண்டிருந்தேன். அவர்கள் என் மீதான எல்லா கயிறுகளையும் இறுக்கத்தொடங்கியிருந்த‌ன‌ர். தற்கொலை செய்யலாமோ என்று கூட பலமுறை அந்த நேரங்களில் நினைத்துக்கொண்டதுண்டு. இவ்வளவு காலமும் என் வாழ்வின் ஒரு பகுதியாயிருந்த பெற்றோரைச் சட்டென வெட்டிவிட்டும் போக முடியவில்லை. என்னிடம் எதுவும் கேட்காமலே எனக்கான திருமண விடயத்தை அவ‌ர்க‌ள் தீவிரமாகத்தொடங்கினர்.

இந்த விடயத்திலிருந்து உடனடியாகத் தப்பவேண்டும், இல்லாவிட்டால் காலமுழுக்க கண்ணீரோடு கழிக்கவேண்டியிருக்கும் என்ற யோசனையிலிருந்தபோதே இவன் மீளவும் எமது உறவை தூசி தட்டி புதுப்பிக்க விருப்பி எனக்கொரு மெயிலை அனுப்பியிருந்தான். இப்போதைக்கு தெரியாத பேயிற்குக் கழுத்தை நீட்டுவதை விட தெரிந்த பிசாசுக்கு சம்மதம் தெரிவிப்பது நல்லதென நினைத்து. இவனைத் திருமணம் செய்வதற்குச் தெரிவித்து இருந்தேன்.

4
இவளுடைய நச்சரிப்பதுத் தாங்க முடியாமல் தான், இப்போது ஐயப்பன் கோயிலில் எண்ணெய் சாத்துவதற்காய் கால்கடுக்க நிற்கவேண்டியிருக்கிறது. குளிர்த்திச் சோற்றுக்காய் நிற்கும் மற்ற கியூவில் போய் நிற்க எனக்கு விருப்பமிருந்தாலும், 'கோயிலுக்குப் போவது கும்பிடத்தான்' என்பதில் உறுதியாய் நிற்பவளின் விழிகள், நான் மற்றக் கியூவில் போய் நின்றால் சிவந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்றும் பெண்கள் எல்லாம் ஐயப்பன் கோயிலுக்குள் போகக்கூடாது என்றும் அல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்படி நீங்கள் பெண்களை விடுகிறது நியாயமா என்று இந்த அறங்காவல் சபையிடம் யாராவது கேள்வி கேட்டு பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடை செய்தால், நான் நிம்மதியாய் எனக்குப் பிடித்த குளிர்த்திச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு என்பாட்டில் போய்விடலாம். சா...என்ன உலகமிது. புலம்பெயரப் பெயர த‌மிழ்ப்பெண்க‌ள் ம‌ட்டுமில்லை, சாத்திர சம்பிரதாயங்களும் மாறிவிடுகின்றன.

ம்...இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வியப்பாய்தானிருக்கிறது; இடையில் நான் பல திருகுதாளங்களைச் செய்தபின்னும் எந்தக் கேள்வியும் கேட்காது என்னை அதேமாதிரி இவள் ஏற்றுக்கொண்டிருக்கின்றாள். எவ்வளவுதான் நாங்கள் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதில் சிலையாக நிற்கும் சாமிகளைவிட உறுதியாகத்தான் இவளைப் போன்ற பெண்கள் நிற்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இவ‌ளைப் போன்ற‌ பெண்களை நடமாடுந் தெய்வங்கள் என்று அழைப்பதில் எவ்விதத் தப்பும் இல்லைத்தான். இப்போது சுடிதாரில் வந்திருக்கிற இவளுக்கு, நான் அணிந்து வரக்கட்டாயப்படுத்திய தாலி இன்னும் அழகைக் கொடுக்கிறது. ஆனால் வளாக காலத்தில் எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அந்நியோன்னியம், எல்லாவற்றையும் பகிரும் ஆவல் எல்லாம் எங்கையோ இந்தத் திருமணத்தின்பின் வடிந்துபோனதுபோலத்தான் தோன்றுகின்றது. ஏன் இரவுகளில் கூட அவ்வளவு உற்சாகமில்லை; ஒவ்வொருமுறையும் ஏதோவொரு சாட்டுச்சொல்லி கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருப்பது ஏனென்றும் விளங்கவில்லை.

IV.
இவனோடான திருமணத்தின்பின் நான் யாரென்பது மிகத் தெளிவாக எனக்கு விளங்கியது. என்னைச் சிலவேளைகளில் இவன் ஒரு விளையாட்டுப் பொருளாய்ப் பாவித்தது குறித்த கோபமிருந்தாலும் என் மீது இவன் இப்போது வைத்திருக்கும் அன்பில் எவ்விதச் சந்தேகமுமில்லை. எனது நிலையை எப்படி இவனுக்கு எடுத்துச் சொல்வது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இப்படியே இருக்கமுடியாது. எனக்குரியதற்ற இந்தவெளியில் நான் எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் இருப்பது எனக்குப் விளங்கத்தான் செய்கின்றது. எனக்கான முடிவை விரைவில் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

V
(ஏழு மாதங்களுக்குப் பின்...)
கலீஸ்தினோ, தயவு செய்து இதற்கு மேல் என்னை எதுவும் வற்புறுத்தாதே. நான் சொல்லும் உண்மையை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகமோ அல்லது இதை வாசிக்கப்போகின்றவர்களோ இன்னும் தயாரில்லை. ஆனால் உண்மை எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதாகவும் இருப்பதில்லை. அது ஒரு அழியாச்சுடர் போலத் தன்விருப்பில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. சிலவேளை இன்றைய சூரிய நாட்களில் சுடரின் ஒளி மறைக்கப்பட்டாலும், மின்மினிகள் உலகிறகு அவசியமான நாட்களில் சுடரின் மகிமையை இந்த உலகம் விளங்கிக்கொள்ள முயலுமென நினைக்கின்றேன். அதுவரை காலம் காத்திருக்கலாம்; ஆனால் எனது வாழ்நாட்களுக்கு அவ்வாறான பொறுமை இருக்கப்போவதில்லை.

இப்போது எனக்கான தெரிவுகளை நானே எடுத்துக்கொள்ளும் வலிய ஒருவளாக மாறிவிட்டேன். எனெனில் என் தெரிவுகளில் மட்டுமே நான் நானாக இருக்கமுடியும். பிறருக்காய் எனது வாழ்வை நான் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.இவ்வாறு நான் கூறுவது சிலருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கக்கூடும்; ஆனால் இதுவே நான். இங்கே எனக்கு முன் எத்தனையோ பேர் என்னைப் போல எங்கள் சமூகத்தில் வாழ விரும்பியிருக்கலாம். ஏன் சிலவேளை வாழ்ந்துமிருக்கலாம்.

பிரிய கலீஸ்தினோ நீ என் மீது வைத்திருகும் அக்கறையால்தான் இவ்வளவற்றையும் உனக்குப் பொறுமையுடன் கூறுகின்றேன். எல்லா உண்மைகளும் இச்சமூகத்திற்குத் தெரியவரும்போது என்னை மிதித்துப்போடவே இச்சமூகம் விரும்பும் என்பதை நீயறியாததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு, நான் கூறிய எதையும் உட‌னே பதிவு செய்துவிடாதே. நாங்கள் ஏற்கனவே திட்டமிருந்தபடி வன்கூவரின் ஒதுக்குப்புறமான நகருக்குப் போய் எங்கள் அடையாளங்களைக் களைந்து வாழத்தொடங்கும் பொழுதுகளில் வேண்டுமானால் மட்டும் பொதுவில் எழுது.

உன்னிடமிருக்கும் நம்பிக்கையைப் போல எனக்கு டீஜேவிடம் இல்லை. அவன் எங்களை விட மூன்று வயது சிறியவனாக இருக்கலாம். ஆனால் இந்த வயதிலும் பல விடயங்களின் சீரியஸ்தன்மையை விளங்காது விளையாட்டுப் பிள்ளை போலவே இருக்கின்றான். நாங்கள் படித்த மானிடவியலின் முக்கிய கூறுகள் பற்றி கொஞ்சம் அவனுக்கு விளங்கப்படுத்து. முக்கியமாய் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து மிகுந்த தெளிவற்றவனாகவே அவன் இருப்பது போலத்தோன்றுகின்றது.

நீ என்னிடம் இப்போது கதை கேட்டுக்கொண்டிருப்பதைப்போல எனது முன்னால் துணையான அவனிடம், டீஜே சிலவிடயங்களை கேட்டறிந்துகொள்வதை -நீ சொல்லி- நானறிவேன். எனது கதை, எனது முன்னாள் துணையின் குரலில்லாது முழுமை பெறாது என்பதை நீங்கள் இருவரும் கூறியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் என்றோ ஒருநாள் நீங்கள் இருவரும் சேர்ந்து எழுதப்போகும் எனது கதையை 'ஆண்களுக்கான மொழியில்' மட்டும் பதிந்து எனது குரலை ஒடுக்கிவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது.

அதுபோலவே எங்களின் உண்மையான வலிகளும், நெருக்கடிகளும், அகச்சிக்கல்களும் சித்தரிக்கப்படாது எங்களின் கதை ஒருவகையான கேலியுடன் எழுதப்படவும் வாசிக்கப்படவும் கூடும் என்றே நம்புகின்றேன். ஆனால் இவற்றையெல்லாம் விட என் கதை பகிரப்படவேண்டுமென ம‌ன‌ம் அவாவி நிற்கிறேன். எல்லா அவமதிப்புக்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் நான் எனது தெரிவுகளுடன் வாழவிரும்புகின்றேன் என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். எனெனில் எங்கள் சமூகத்தில் என்னைப் போன்ற பலர் தமக்கு விருப்பமான துணைகளுடன் வாழ்வதற்கு இவ்வாறான அகச்சிக்கல்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

என்றேனும் ஒருநாள் நீயோ டீஜேயோ, அவனை மீண்டும் சந்தித்தால், சூழலின் கைதியினால் மட்டுமே நான் அவனைத் திருமணஞ்செய்துகொள்ளும் முடிவை எடுக்கவேண்டியதாயிற்று எனச் சொல். அதற்காக நான் உண்மையில் இன்று மிக மனம் வருந்துகின்றேன் என்பதையும் அவனுக்கான எதிர்கால வாழ்வுக்காய் என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும் என்பதையும் அவனுக்கு என் சார்பில் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பு-1: (கலீஸ்தினோவுடையது) என் தோழியின் கதையைக் கேட்டு எழுதியபின் இதைப் பிரசுரிக்கமுன்னர் அவரைத் தொலைபேசியில் தொட‌ர்புகொள்ள‌ முய‌ன்ற‌போது, இல‌க்க‌ம் பாவ‌னையில் இல்லை என‌க்கூறிய‌து. இக்க‌தையை அவ‌ர் கூறத்தொடங்கியபோதே தான் இன்னும் சில மாதங்களில் எவரது தொடர்புமில்லாது தனது பெண் துணையுடன் வேறொரு நகரின் புறநகருக்குப் போய்விடுவேன கூறியிருந்தார். இப்போது முழுதாக எங்கள் எவரின் தொடர்பு எதுவுமின்றி இருக்கவே விரும்புகின்றார் எனது தோழியென நினைக்கின்றேன். அவர் கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச் சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளேயிருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகின்றேன்.

குறிப்பு-2: (டிசேயினுடையது) நான் அவனின் கதையைக் கேட்டதால் அவனைப் பற்றியே கூறமுடியும். அவனுக்கு எல்லா உண்மைகளையும் அறிந்தபோது திகைப்பாக இருந்தது. இப்படி அரைகுறையான நிலையில் இருவரும் இருப்பதைவிட அவள் அப்படிப் போனது சரியான முடிவே என்றான். பிறகு இடைப்பட்ட வருடங்களில் இலங்கைக்கு போய் ஒரு பெண்ணை மணம் முடித்து வ‌ந்திருக்கின்றான். சிலவேளைகளில் நீங்க‌ள் க‌ன‌டாவில் கோயில் எங்கையும் போகும்போது சேலையும் தாலியும் கட்டிய தன் துணையை இரசிக்கின்றவர்களின் ஒருவனாய் அவனை நீங்கள் பார்க்கலாம். ஒருமுறை, நான் துஷாவின் தொலைபேசி எண்ணை எனக்குத் தந்து உதவமுடியுமா எனக் கேட்டதன் பிறகு, தன்னை இனிச் சந்திக்கவோ தொலைபேசியில் அழைக்கவோ வேண்டாமென கடுமையான கோபத்தில் கூறிவிட்டான். அந்த நாள் 2007 கார்த்திகை 09.

குறிப்புக்களாய் எழுதியது 2006, திருத்தி ஒழுங்கமைத்தது 2008 இலையுதிர்க்காலம்)
நன்றி: கூர் 2011

அல‌மெண்டாக் குறிப்புக‌ள்

Friday, May 06, 2011

~'கான‌ல் வ‌ரி', 'க‌ன‌டாத் தேர்த‌ல்',  'Gomorrah', 'Eat Pray Love'~

1.
த‌மிழ்ந‌தியின் 'கான‌ல் வ‌ரி'யை அண்மையில்தான் வாசிக்க‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து. ஒரு (குறு)நாவ‌ல் என்றாலும் ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தியாக‌வே தெரிந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் எது எத‌ற்கோ எல்லாம் விரிவான‌ வாசிப்புக்க‌ள் வ‌ரும்போது இந்நூல் அமைதியாக‌ உற‌ங்கிக்கொண்டிருப்ப‌து ச‌ற்று விய‌ப்பாய்த்தானிருக்கின்ற‌து. திரும‌ண‌மான‌ ஒரு பெண்ணுக்கும், திருமண‌மான‌ ஒரு ஆணுக்க்கும், அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தின் பின் முகிழ்கின்ற‌ உற‌வைப்ப‌ற்றி இந்நாவ‌ல் சிலாகிக்கின்ற‌து. வ‌ழ‌மையான‌ பொதுச‌ன‌ வாசிப்பைக் க‌வ‌ன‌த்திற்கொண்டு த‌ணிக்கை செய்யாது ஆண்-பெண் உட‌ல்சார்ந்த‌ உற‌வுக‌ள் விரிவாக‌ இதிலே பேச‌ப்ப‌டுவ‌து என‌க்கு முக்கிய‌மாக‌ப்ப‌ட்ட‌து. இன்னொரு நாட்டில்(?) வாழும் க‌ண‌வ‌னுக்காய் த‌ன் உட‌லைத் திற‌க்காத‌ பெண் பாத்திர‌ம், தான் விரும்புகின்ற‌வ‌னுக்க்காய் உட‌லை விரித்து வைக்கின்ற‌ இட‌த்தில், பெண்க‌ள் தேவ‌தைக‌ள்Xதெய்வ‌ங்கள் என்கின்ற‌ துவித‌நிலைப் பார்வையை அழித்து இய‌ல்பான‌ பாத்திர‌மாக ஆக்க‌ப்ப‌டுவ‌து முக்கிய‌மான‌து.

இவ்வாறான‌ முக்கிய‌புள்ளிக‌ள் சில‌ இப்பிர‌தியில் இருந்தாலும், இது த‌ன்னை மீறி ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்டதாக‌ அமைந்துவிடுவ‌துதான் இத‌ன் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம் போல‌ என‌க்குத் தோன்றிய‌து. இப்பிர‌திக்கான‌ ஒரு முக்கிய‌ உந்துச‌க்தியாக‌வும், பிர‌திக்குள்ளும் வ‌ரும் யூமாவாசுகியின் 'ம‌ஞ்ச‌ள் வெயில்' ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌தைப் போன்றே இதுவும் இருப்பதைக் க‌வ‌னிக்க‌வேண்டும். இத‌ன் அர்த்த‌ம் ம‌ஞ்ச‌ள் வெயிலைப் போன்ற‌துதான் கான‌ல்வ‌ரி என்ப‌த‌ல்ல‌.

திரும‌ண‌மான‌ த‌ன‌க்கும் ஏற்க‌ன‌வே திரும‌ண‌மான‌ இன்னொரு ஆணுக்குமிடையிலான‌ நீடிக்கும் உற‌வு, என்றேனும் ஒருநாள் திரும‌ண‌மான‌ அந்த‌ ஆணின் ம‌னைவிக்குத் தெரிய வருமாயின், த‌ங்களின் உற‌வைத் துண்டிக்க‌த் த‌யாரென‌ச் சொல்கின்ற‌து பெண் க‌தாபாத்திர‌ம். ஆனால் அதே பாத்திர‌ம், பின்னாளில் அந்த‌ ஆண் த‌ன் குழ‌ந்தைக‌ளின் ந‌ல‌னின்பொருட்டு இப்பெண்ணோடான‌ உற‌வைத்துண்டித்து வில‌கிப்போகும்போது காழ்ப்பைக் காட்டுகின்றது; ஆணுடனான‌ தன் உற‌வைக் காறித்துப்புகின்ற‌து; மேலும் அள‌வுக்கு மீறி வ‌ன்ம‌மும் கொள்கின்ற‌து. உண்மையில் இறுதியில் இந்நாவ‌ல் விட்டுச்செல்வ‌து ஒரு ஆணின் வ‌ருகைக்கான‌ காத்திருப்பை. இதுதானே சங்க மருவிய காலத்திலிருந்து க‌ண்ணகிக்கும் பிற பெண்களுக்கும் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. அக்காத்திருப்பு நிக‌ழாத‌போது த‌ன் க‌டந்த‌கால‌ உற‌வை மீள‌ நினைத்து 'என்னை அவ‌ன் பாவித்திருக்கின்றான்' என‌க் கடுங்கோபத்துடன் இப்பிரதியின் பெண் பாத்திரம் மீள‌மீள‌ப் பேசுகிற‌து.

பிடிக்காத‌ க‌ண‌வ‌னுக்காய் உட‌லை நீண்ட‌கால‌மாய் திற‌க்காது, ஆனால் த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னுக்காய் எல்லாமுமாய் விரிந்திருந்ததாய் சொல்கின்ற‌ இப்பெண் பாத்திர‌ம், அவ‌னின் உற‌வு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌பின் 'தாங்க‌ள் ச‌ந்திக்கும் எல்லாப் பொழுதுக‌ளிலும் அவ‌ன் த‌ன் உட‌லைப் ப‌ற்றிய‌ சிந்த‌னையோடு இருந்து த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌ன்' என‌க் குற்றஞ் சாட்டுகின்றது. மேலும் த‌ன‌க்கு அப்ப‌டியில்லை,அவனைக் காணும் ஒவ்வொருபொழுதிலும், இவ்வ‌ளவுகால‌மும் பிரிந்திருந்த‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌வ‌ற்றை அவனுடன் ஆறுத‌லாக‌ முத‌லில் பேசுவ‌தே த‌ன‌க்குப் பிடித்த‌து என்கின்ற‌து. அதைவிட‌ இன்னும் மோசமாக‌, 'தான் வேண்டாம் வேண்டாம் என்கின்ற‌போதும், த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌னாக‌ அவ‌ன் இருந்திருக்கின்றான்' என‌ப் பிற்பகுதியில் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌து.

அவ்வாறு ஒரு பெண் த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லை என்கின்ற‌போது உட‌லை எடுத்துக்கொள்வ‌து என்ப‌து 'பாலிய‌ல் ப‌லாத்கார‌ம்' அல்ல‌வா? 'ச‌ட்ட‌முறை'ப்ப‌டியில் திரும‌ண‌ம் செய்திருந்தால் கூட‌, க‌ண‌வ‌னோ/கூட‌ வாழ்பவ‌னோ யாராய் இருந்தால் கூட‌ ஒரு பெண் விரும்பாத‌போது பாலிய‌ல் உற‌வில் ஈடுப‌ட்டால் அதைக் குற்ற‌மாக‌த்தான் ச‌ட்ட‌ம் பார்க்கும். என்கின்ற‌போது த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னிட‌ம்/தான் விரும்பியதைப் ப‌கிர‌க்கூடிய‌ ஒருவ‌னிட‌ம் ஏன் அது த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லையென‌ச் சொல்லாது இப்பெண் பாத்திர‌ம் ஒரு submissive நிலையை அடைந்தது என்ப‌து ஒரு முக்கிய கேள்வி. இக்கேள்வியும், இப்பெண்பாத்திர‌ம் கூறும் பிற குற்ற‌ச்சாட்டுக‌ளுமே இந்நாவ‌லின் பிற்ப‌குதியைப் ப‌ல‌வீன‌ங்க‌ள் ஆக்குகின்ற‌து.

இய‌ல்பாய் இருவ‌ருக்கிடையே வ‌ந்திருக்க‌க்கூடிய‌ உட‌ல் ம‌ற்றும் ம‌ன‌ம் சார்ந்த‌ உற‌வை அது பின்னாலில் நீடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய் திட்டித்தீர்க்க‌த் தேவையில்லை. இதை ஒரு ப‌தின்ம‌ர் த‌ன் காத‌ல் நீடிக்க‌வில்லை என்று ம‌ன‌மெரிந்து எழுதியிருந்தால் ந‌ம‌க்குக் க‌வ‌லையில்லை. ஆனால் திரும‌ண‌மாகி அது ச‌லித்து, 'இது க‌ள்ள‌ உறவே இல்லை' என‌த் தெளிவாக‌ ந‌ம்பும் ஒரு பெண் பாத்திர‌ம் பின்னாளில் இப்ப‌டிப் பேசுவ‌துதான் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌து.
திரும‌ண‌மான‌ ஆணோடு ஏற்படும் உற‌வு எங்கோ ஒருபுள்ளியில் முடியும் என்ப‌து ஏற்க‌ன‌வே தெரிந்துதானே உற‌வே தொட‌ங்கியிருக்கும் என்கிற‌போது அந்த‌ ஆண் வில‌கிப்போவ‌தை பெரும் 'துரோக‌மாய்'ச் சித்த‌ரிப்ப‌து நாவ‌லின் இய‌ல்பை மீறி இருக்கின்ற‌து.  உண்மையில் தொட‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும் பிர‌தியில், ஒரு ஆணின் வில‌கிய‌ 'துரோக‌ம்' அதிக‌ம் பேச‌ப்ப‌டாம‌ல், காத‌லிக்கும் கால‌ங்க‌ளில் எத்த‌னையோ உற‌வுக‌ள் முகிழ்வ‌தும் அழிவ‌துமாய் இருப்ப‌தைப் போன்று திரும‌ண‌த்தின்பின்னும் ஏன் உற‌வுக‌ள் முகிழ‌க்கூடாது? முகிழ்ந்தால் அது த‌வ‌றில்லை என்கின்ற‌ புள்ளிக‌ளில் இக்குறுநாவல் தன் க‌வ‌ன‌த்தைக் குவித்திருந்தால் சிற‌ந்த‌தொரு பிர‌தியாக‌ வ‌ந்திருக்கும்.

ஆனால் ஒரு ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌விட‌த்து கட‌ந்த‌கால‌த்தின் ஒவ்வொரு இய‌ல்பான‌ த‌ருண‌ங்க‌ளையும் பூத‌க்க‌ண்ணாடி கொண்டு பிழைபிடிப்ப‌துமாய் இருப்ப‌துவும் அலுப்பூட்ட‌க்கூடிய‌து,. த‌ன்னை வாச‌க‌ர்க‌ளின் முன் இப்பெண் பாத்திரம் நியாய‌ப்ப‌டுத்திக்கொள்வ‌து போன்றே ஆகிவிடும். ஆனால் இங்கேயும் என்ன‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், த‌மிழில் இருக்கும் அதிக‌மான‌ வாச‌க‌ர்க‌ள், திரும‌ண‌த்திற்குப் பின்பான‌ உற‌வு என்ப‌தையே ஏற்றுக்கொள்ளாத‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் என்ன‌ கூறுவார்க‌ள் என்றால், 'இப்ப‌டித்தான் திரும‌ண‌த்தின் பின் வேறு ஒரு உற‌வில் ஈடுப‌ட்டால் இதுதான் நிக‌ழும்; இப்ப‌டித்தான் ம‌ன‌ஞ்சித‌றி வ‌ருந்த‌வேண்டியிருக்கும்' என்று எளிதாகக் கூறிவிட்டு நகர்ந்து விடுவார்க‌ள். அதன் பின்னணியில் இருக்கும் காரணங்களைத் தேடவோ ஆழ‌மாக‌ அலசவோ போவதில்லை.

த‌னக்குப் பிடித்த‌வ‌ன் எப்ப‌டி த‌ன்னோடு சேர்ந்துகொண்டானோ அவ்வாறே அவ‌ன் வில‌கிச்செல்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் இருக்கின்ற‌து என்ப‌துதானே உண்மையான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பாக‌ இருக்க‌முடியும்? அதைவிடுத்து இய‌ல்பாய் இருந்திருக்கக்கூடிய‌ க‌ட‌ந்த‌கால‌ங்க‌ள் அனைத்தையும் ஆண் பிரிந்துபோன‌பின் ச‌ந்தேக‌க்க‌ண்ணோடு பார்ப்ப‌தென்ப‌து க‌ட‌ந்த‌கால‌த்து உற‌வு முழுதையும் நிராக‌ரிப்ப‌து போன்று ஆகிவிடும‌ல்ல‌வா? இத‌னால்தான் கூறுகின்றேன் 'கான‌ல்வ‌ரி' ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தி என்று. இதை வாசித்த‌பின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறிய‌தும் இவ்விட‌த்தில் நினைவுக்கு வ‌ருகின்ற‌து. 80/90க‌ளில் ஈழ‌த்துப்பெண்க‌ள் முன்ன‌க‌ர்த்திய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை பின்னே இழுத்துக்கொண்டு போவ‌தான‌ தொனி இந்நாவ‌லில் தெரிகின்ற‌து என்றார்.  ஆழியாள், 'எல்லாவ‌ற்றையும் திரும்பித் த‌ருகின்றாய் நான் உன‌க்குக் கொடுத்த‌ முத்த‌ங்க‌ளையும், என‌க்குள் செலுத்திய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ விந்துக‌ளையும் எப்ப‌டித் திரும்பித் த‌ருவாய்?' என்று கேட்பது ஒரு வ‌லுவான பெண்ண‌ர‌சிய‌ல் அறைகூவ‌ல் (இதுவும் ந‌ண்ப‌ரே கூறிய‌து). இந்நாவ‌லில் இத‌ற்கு எதிர்த்திசையில் 'ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌போது காறித்துப்ப‌லும்'தான் நிக‌ழ்கிற‌து.

ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌ பிர‌தி என‌க்குறிப்பிட்டுச் சொல்ல‌ ப‌ல‌ புள்ளிக‌ள் இக்குறுநாவ‌லில் இருந்தாலும் சில‌வ‌ற்றையாவ‌து குறிப்பிட்டாக‌ வேண்டும். ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் தெளிவாக‌ இருக்கும் இப்பெண் பாத்திர‌ம், 'ஆண்க‌ள் நீங்க‌ள் எல்லாம் யோக்கிய‌ர்க‌ளா? க‌ட‌ந்து போகும் பெண்க‌ளின் பின்புற‌ங்க‌ளைப் பார்த்து இர‌சிப்ப‌வ‌ர்கள் அல்லவா? நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்கின்ற‌மாதிரி ஓரிட‌த்தில் குறிப்பிட்டிருக்கும். பெண்ணுட‌லை வெறித்துப் பார்க்கும் ஆண்க‌ளை விம‌ர்சிக்க‌லாம்; த‌வ‌றேயில்லை. ஆனால் 'நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்ப‌துதான் இடிக்கிற‌து. இராம‌ரே ஒரு அயோக்கிய‌ப்பாத்திர‌ம்.'க‌ற்பை'க் கார‌ண‌ங்காட்டி சீதையைத் தீக்குளிக்க‌ச் சொன்ன‌ 'உத்த‌ம‌ர்'. இறுதியில் இந்த‌க் க‌னவான் தான் இங்கேயும் ஒரு உதார‌ண‌ புருஷ‌ராக‌க் காட்ட‌ப்ப‌டுகின்றார். இன்னும் ஒரு நெருடிய‌ இட‌ம். த‌ன் ஆணைப் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள். நூல் த‌ற்ச‌ம‌ய‌ம் என்வ‌ச‌ம் இல்லாத‌தால், திர‌ண்ட தோள்க‌ள், புலியின் வ‌யிறு போன்ற‌ வ‌யிறு என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ ர‌ம‌ணிச்ச‌ந்திர‌ன் போன்ற‌ வ‌ர்ண‌ணைக‌ள் சில‌ இட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ன‌. நான‌றிந்த‌வ‌ரை/கேட்ட‌வ‌ரை பெண்க‌ள் ஆணுட‌லை -ஆண்க‌ள் பெண்ணுட‌லைப் பார்ப்ப‌து போன்று- பார்ப்ப‌தில்லை என்ப‌து வேறுவிட‌ய‌ம். ச‌ரி, ஆண்க‌ள்தான் பெண்க‌ளைப் ப‌ற்றி 'ம‌த‌ர்த்த‌ முலைக‌ள்,குறுகிய‌ இடை, வாழைத்த‌ண்டு தொடைக‌ள், ... அல்குல்' என‌ போதும் போதுமென்ற‌ள‌வுக்கு ச‌லிக்கும்வ‌ரை எழுதும்போது ஒரு பெண் ஆணைப் பார்த்து விய‌க்கக்கூடாதா என்று ஒருவ‌ர் கேட்க‌லாம். அந்த‌க் கேள்வியில் பிழையில்லைத்தான். ஆனால் ஆணுட‌ல் ப‌ற்றி எத்த‌கைய‌ சித்த‌ரிப்புக்க‌ள் இருந்தாலும், பிர‌தி முழுதும் தேடிப்பார்த்த‌போதும் ஆண்குறி ப‌ற்றிய‌ எந்த‌க் குறிப்புக்க‌ளையும் கான‌ல்வ‌ரியில் காண‌வில்லை. இந்த‌ இட‌த்தில்தான் அம்பையின் க‌தைக‌ளின் வ‌ரும் ஆணுட‌ல் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. அம்பையின் அள‌வுக்கு ஆண்குறிக‌ளை ப‌ற்றிய‌ வித‌வித‌மான‌ சித்த‌ரிப்புக்க‌ளை (அநேக‌மான‌வை ந‌க்க‌ல‌டிப்ப‌வை) த‌மிழ்ச்சூழ‌லில் வேறெங்கும் காண‌வில்லை, ஏன் மைதிலி கூட‌ ஒருக‌விதையில் 'கோப‌ம்/ உன் குறியைச் /சூம்ப‌வைத்துவிடுகின்ற‌து' என்று எழுதியிருக்கின்றார் என‌ நினைவு. இவ‌ற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், கான‌ல் வ‌ரியில் பிரிந்துபோகும் ஆணை வைத்து எழுதிய‌ இட‌ங்க‌ளில் பொதுவாக‌ ஒரு க‌ழிவிர‌க்க‌மும் காத்திருப்புமே தெரிகின்ற‌தே த‌விர‌, அம்பையோ, ஆழியாளோ, மைதிலியோ பிரிந்துபோன‌ உற‌வின் இழ‌ப்பைப் ப‌ற்றிப் பேசும்போதுகூட‌ அவ‌ர்க‌ள் அதை ஒரு வ‌லுவான‌ பெண்மொழியில் எழுதிய‌துபோன்று இல்லாது இருக்கின்ற‌து என‌ச் சுட்ட‌வே. இதுவே கான‌ல்வ‌ரியின் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம். இவ்வாறான‌ ப‌ல‌வீன‌ங்க‌ள் இருப்ப‌தால் 'கான‌ல்வ‌ரி' ஒதுக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு குறுநாவ‌ல‌ல்ல‌. இன்னுமின்னும் ஆழ‌மாய் விவாதிக்க‌வேண்டிய‌  ஒரு குறுநாவ‌லே என்ப‌தில் என‌க்கு எவ்வித‌ மாற்றுக்க‌ருத்துமில்லை.

2.
க‌ட‌ந்த‌ சில‌ கால‌ங்க‌ளாக‌ சுவார‌சிய‌ம‌ற்று முடியும் க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல் இம்முறை ப‌ல‌ அதிர்ச்சிக‌ளையும், ஆச்ச‌ரிய‌ங்க‌ளையும் கொடுத்திருக்கின்ற‌து. வ‌ல‌துசாரிகளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழமைவாத‌க் க‌ட்சி இம்முறை 167 இருக்கைக‌ளைப் பெற்று பெரும்பான்மை அர‌சை அமைக்கின்ற‌து. மாகாண‌ங்க‌ளுக்கான‌ அதிக‌ உரிமைக‌ளை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவா படுதோல்வியை அடைந்திருக்கின்ற‌து. லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் என்றுமே காணாத‌ மிக‌ப்பெரும் வீழ்ச்சியைச் ச‌ந்தித்திருக்கின்ற‌ன‌ர். கிறீன் க‌ட்சி முத‌ன்முறையாக‌ ஒரு இருக்கையை இத்தேர்த‌லில் பெற்றிருக்கின்ற‌து; இதையெல்லாவ‌ற்றையும் விட‌ என்டிபி என‌ப்ப‌டும் புதிய‌ ஜன‌நாய‌க் க‌ட்சியின‌ர் முத‌ன்முத‌லாக‌ எதிர்க்க‌ட்சியாக‌ ஆகியிருக்கின்ற‌ன‌ர். மேலும் இத்தேர்த‌ல் த‌மிழ‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌தாய் ஆகியிருக்கின்ற‌து. முத‌ன்முத‌லாக‌ த‌மிழ‌ப் பின்புல‌த்தைச் சேர்ந்த‌ ராதிகா சிற்ச‌பேச‌ன் என்டிபி க‌ட்சி சார்பில் பாராளும‌ன்ற‌த்திற்கு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். இதுவ‌ரை கால‌மும் த‌மிழ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌, மாகாண‌, உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டிருந்தாலும், உள்ளூராட்சித் தேர்த‌லில் ம‌ட்டுமே ஒரு க‌வுன்சில‌ரையும், சில‌ Trusteeக‌ளையும் தேர்ந்தெடுக்க‌ முடிந்திருந்த‌து. அந்த‌வ‌கையில் பார்க்கும்போது, ராதிகா சிற்ச‌பேச‌னின் வெற்றி என்ப‌து த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை மிக‌ப்பெரும் பாய்ச்ச‌ல் என‌வே கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து.

தேர்த‌ல் முடிவுக‌ள் 2011
ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி (CON) - 167  *(143)   
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி(NDP) - 102  (37)
லிப‌ர‌ல் க‌ட்சி(LIB) - 34  (77)
ப்ளொக் குயூபெக்குவா (BQ) - 04  (49)
கிறீண் க‌ட்சி(GRE) - 01  (00)
*(..)  அடைப்புக்குள் இருப்ப‌வை 2008ல் க‌ட்சிக‌ள் பெற்ற‌ இருக்கைக‌ள்

இத்தேர்த‌ல், லிப‌ர‌ல், ப்ளொக் குயூபெக்குவா க‌ட்சிக‌ளுக்கு ப‌டுதோல்வியைக் கொடுத்த‌தோடு அல்லாம‌ல், இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் போட்டியிட்ட‌ தொகுதிக‌ளிலும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்ப‌து இவ்விரு க‌ட்சிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு க‌வ‌லையை அளிக்க‌க்கூடிய‌து. அடுத்த‌டுத்து இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் த‌ம் ப‌த‌விக‌ளில் இருந்து ராஜினாமாச் செய்து வில‌க‌ இவ்விரு க‌ட்சிக‌ளும் த‌லைவ‌ர்க‌ளில்லாது இப்போது திகைத்து நிற்கின்ற‌ன‌. க‌ட‌ந்த‌ இரு தேர்த‌ல்க‌ளிலும் சிறுபான்மை அர‌சை அமைத்த‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு இம்முறை ம‌க்க‌ள் பெரும்பான்மை அர‌சைக் கொடுத்திருக்கின்றார்க‌ள். ஏல‌வே குறிப்பிட்ட‌மாதிரி மூன்றிலொரு ப‌ங்கு இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மை இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினாலே, பெரும்பான்மை அர‌சை எந்த‌க் க‌ட்சியும் அமைக்க‌ முடியும் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, இம்முறை 106 இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 73 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ராட்சியில் இதுவ‌ரை எந்த‌ இருக்கைக‌ளையும் கைப்ப‌ற்றாத‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி 9 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது அதிக‌ அழுத்த‌ங்க‌ளைப் பிர‌யோகிக்கும் ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சியை குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ர் ஏன் தேர்ந்தெடுக்கின்ற‌து என்ப‌து சுவார‌சிய‌மூட்ட‌க்கூடிய‌ கேள்வி ம‌ட்டுமின்றி, எப்போதும் லிப‌ர‌ல்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌ ம‌க்க‌ள் ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரை அதிக‌ம் தேர்ந்தெடுக்காது, வ‌ல‌துசாரிக‌ளை தேர்ந்தெடுத்தார்க‌ள் என்ப‌தும் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌தே.

குயூபெக்கில் மாற்ற‌த்திற்கான‌ மிக‌ப்பெரும் அலை அடித்திருக்கின்ற‌து என்றுதான் கூற‌வேண்டும். சென்ற‌ தேர்த‌லில் ஒரேயொரு இருக்கையைப் பெற்ற‌, என்டிபி இம்முறை 75 இருக்கைக‌ளில் 58 இருக்கைக‌ளைப் பெற்றிருக்கின்ற‌து. இப்பெரும் அலை தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌த‌ற்கு ஒரேயொரு வார‌த்திற்கு முன் தான் தொட‌ங்கிய‌து என்றால் ந‌ம்புவ‌து க‌டின‌ம்; ஆனால் அதுதான் உண்மை. மாகாண‌த்திற்கான‌ சுயாட்சியையும், விரும்பினால் த‌னிநாடாக‌ப்பிரிந்துபோகும் உரிமையையும் வ‌லியுறுத்திய‌ க‌ட்சியை த‌ம‌க்குரிய‌ முக்கிய‌ தேர்வாக‌ வைத்திருந்த‌ குயூபெக் ம‌க்க‌ள் இம்முறை ஏன் அத‌ற்குப் ப‌டுதோல்வியைக் கைய‌ளித்தார்க‌ள் என்ப‌து ஆழ‌மாக‌ யோசிப்ப‌து ப்ளொக் குயூபெக்குவா த‌ன் ச‌ரிவிலிருந்து மீளெழ‌ உத‌வும். ஆனால் மாற்ற‌த்தை விரும்பிய‌ குயூபெக் ம‌க்க‌ள், ஒன்ராறியோ மாகாண‌த்த‌வ‌ர்க‌ளைப் போல‌வ‌ன்றி, வல‌துசாரிக‌ளைத் தேர்ந்தெடுக்காது ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரைத் தேர்ந்தெடுக்கின்றார்க‌ள் என்ப‌தும் முக்கிய‌மான‌து.

3.
'Gomorrah' இத்தாலி நேபிளிலில் இருக்கும் மாஃபியா குழுக்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தை. ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ளைப் ப‌ற்றிச் சிறுகுறிப்புக‌ளாய் காட்சிக‌ள் நீண்டாலும் அனைவ‌ரும் ஏதோ ஒருவ‌கையில் மாஃபியாக் கும்ப‌லோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஒரு குழு, பிற‌கு அத‌ற்குள் உட்குழு, சிறைக்குப்போன‌ குழுவின‌ரின் குடும்ப‌த்துக்குப் ப‌ண‌த்தைப் ப‌கிர்ந்த‌ளிப்ப‌வ‌ர், பெருங்குழுவுக்குத் த‌லையிடிகொடுக்கும் இரு ப‌தின்ம‌ர், சிற‌ந்த‌ உடை வ‌டிவமைப்பாள‌ர், இர‌சாய‌ன‌க்க‌ழிவுக‌ளை இர‌க‌சிய‌மாக‌ நேபிளில் கொட்டி அதிக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌வ‌ர் என‌ ப‌ல்வேறுப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குறுக்குவெட்டான‌ வாழ்வு காட்சியாக்க‌ப்ப‌டுகின்ற‌து. இத்தாலி ப‌ற்றிய‌ விம்ப‌ங்க‌ளை இவ்வ‌கைப்ப‌ட்ட‌ திரைப்ப‌டங்க‌ள் பல‌வேளைக‌ளில் வெறும் குமிழியாக்கி விட்டுப் போகின்ற‌ன‌.

ஒருமுறை நாங்க‌ள் பிற‌ந்த‌ வ‌ள‌ர்ந்த‌ ம‌ண்ணுக்கு மீண்டும் திரும்பும் க‌ன‌வுக‌ள் ப‌ற்றிப் பேசிக்கொண்டிருந்த‌போது, இத்தாலியைச் சேர்ந்த‌ பெண், தான் ஒருபோதும் பிற‌ந்த‌நாட்டுக்கு திரும்ப‌ப்போவ‌தில்லை; அங்கே (முக்கிய‌மாய் தெற்கு இத்தாலியில்) அநேக‌பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு சேவ‌க‌ம் செய்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டுமே வாழ்கின்ற‌ன‌ர் என‌க் கூறிய‌போது என‌க்கு முத‌லில் அதிர்ச்சியாக‌ இருந்த‌து. எனெனில் ப‌ழ‌ம் பேர‌ர‌சுக‌ள் செழித்து வ‌ள‌ர்ந்த‌ பிர‌தேச‌த்தைப் ப‌ற்றிய‌ என் க‌ன‌வுக‌ள் வேறுவித‌மாக‌ இருந்த‌ன‌. இப்போதும், இத்தாலிய‌ப் பிர‌த‌ம‌ரின் பெண் லீலைக‌ளுக்கு எதிராக‌ மிக‌ப்பெரும் போராட்ட‌ங்க‌ள் பெண்க‌ளால் இத்தாலியில் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌தை அறிவீர்க‌ள். இது ப‌ற்றிய‌ நியூஸ்வீக‌ க‌ட்டுரையொன்றில் இத்தாலிய‌ ந‌டிகை மொனிக்கா பெத்த‌லூசி க‌ருத்துக்கூறும்போது, 'ஆண்க‌ள் ம‌ட்டுமே அறிவான‌வ‌ர்க‌ள் என்ற‌ க‌ருத்தாக்க‌ம் முசோலினியின் கால‌த்தில் ஆழ‌மாக‌ விதைக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றும் அது தொட‌ர்கிற‌து, இப்போது கூட‌ இத்தாலியில் 90% ஆண்க‌ள் வோஷிங்மெஷினைப் பாவிக்க‌த் தெரியாத‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள்' என்றிருக்கின்றார். இப்ப‌ட‌த்திலும் உட்குழுக்க‌ளின் பிர‌ச்சினையில் ம‌க‌ன் வேறு குழுவில் இருக்கின்றார் என்ப‌த‌ற்காய் முத‌லில் ப‌ழிவாங்க‌ப்ப‌டுப‌வ‌ராக‌ ஒரு அப்பாவித்தாயே இருக்கின்றார். ப‌ட‌த்தின் முடிவில் ஓடுகின்ற‌ வ‌ரிக‌ளில், 'இவ்வாறான‌ மாஃபியாக்க‌ள் தம‌து ச‌ட்ட‌முறைய‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக்ளின் மூல‌ம் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை ச‌ட்ட‌முறையில் இய‌ங்கும் வியாபார‌ங்க‌ளில் முத‌லிடுகின்றார்க‌ள். அவ்வாறே இந்த‌க் குழுவும் இப்போது 9/11பின் மீள‌க்க‌ட்ட‌ப்ப‌டும் இர‌ட்டைக்கோபுர‌ நினைவிட‌த்திலும் ப‌ண‌த்தை முத‌லிட்டிருக்கின்ற‌து' என‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. சுவார‌சிய‌மான‌ செய்திதான் இல்லையா?

'Eat,Pray,Love' என்கின்ற‌ ஜூலியா ரொப‌ர்ட்ஸ் ந‌டித்த‌ ப‌ட‌த்தின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வாசித்த‌போது 'அலுப்புத்த‌ர‌க்கூடிய‌து' என்கின்ற‌ எண்ண‌மே இருந்த‌து. என‌வே அவ்வ‌ள‌வு எதிர்பார்ப்பில்லாது பார்க்க‌த்தொட‌ங்கிய‌போதும், அது ஒரு சுவார‌சிய‌மான‌ ப‌ட‌மாக‌வே என‌க்குத் தோன்றிய‌து. சில‌வேளைக‌ளில் 'காசே தான் க‌ட‌வுள‌டா' என்கின்ற‌ மேலைத்தேய‌ ம‌ன‌துக்கு இப்ப‌ட‌ம் சொல்ல‌வ‌ரும் செய்தி உவ‌ப்பில்லாது இருக்க‌க்கூடுந்தான். வேலை, க‌ண‌வ‌ன், ந‌ட்பு என‌ ஒரே ஒழுங்குகிற்குள் இருக்கின்ற‌ த‌ன் வாழ்க்கை இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து என்ப‌தை எலிச‌பெத்(ஜூலியா ரொபேர்ட்ஸ்) உணர்கின்றார். இத‌னால் எல்லாவ‌ற்றையும் உத‌றித்த‌ள்ளிவிட்டு த‌ன‌க்கு எப்போதும் விருப்ப‌மாயிருக்கும் நீண்ட‌தொரு ப‌ய‌ண‌த்தை மேற்கொள்கின்றார். முத‌லில் இத்தாலியாவுக்குப் போகும் அவ‌ருக்கு வித‌ம்வித‌மான‌ உண‌வுக‌ளைச் சாப்பிடும் ஆசை வ‌ருகின்ற‌து;வாழ்வின் மீதான‌ பிடிப்பு மீள‌ எழுகிற‌து. பிற‌கு இந்தியாவிற்குப் போய், த‌ன்னை உண‌ர்வுக‌ளின் கொந்த‌ளிப்பை நிதான‌மாக்கும் தியான‌த்தையும், பிரார்த்த‌னைக‌ளையும் க‌ற்கின்றார். இறுதியில் பாலிக்குப் போய் த‌ன் காத‌லைக் க‌ண்டுபிடிக்கின்றார். ஒவ்வொருநாடுக‌ளின் அற்புத‌மான‌ க‌லாசார‌மும், ம‌க்க‌ளும் ஒளிப்ப‌திவினூடாக‌ பார்ப்ப‌வ‌ருக்குக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌து. 'எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத‌' வெறுமை ப‌ர‌வுகின்ற‌ ம‌ன‌தை உடைய‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ப் ப‌ட‌ம் ப‌ர‌வ‌ச‌த்தைத் த‌ர‌க்கூடும்.உங்க‌ளை மாற்ற‌வும், உங்க‌ளுக்குப் பிடித்த‌தை வாழ‌வும் ஒருபோதும் கால‌ம் க‌ட‌ந்துவிட‌வில்லை என்ப‌தை நுட்ப‌மாக‌ உண‌ர்த்தும் ஒருப‌ட‌ம்.

க‌ட‌ந்த‌ ஒரு வார‌மாய் நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்துக்கொண்டிக்கின்றேன். சில‌வேளைக‌ளில் ஓரிர‌வுக்கு 2 திரைப்ப‌ட‌ங்க‌ள் என்கின்ற‌ அள‌வுக்கு. கிளிண்ட் ஈஸ்ட்வூட்(Clint Eastwood), வூடி அல‌ன் (Woody Allen) போன்றவ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளுக்காக‌ அன்றி, அவ‌ர்க‌ள் இன்றைய‌கால‌ங்க‌ளில் இய‌க்கிக்கொண்டிருக்கும் ப‌ட‌ங்க‌ளுக்காய் அவ‌ர்க‌ளை மிக‌வும் பிடிக்கும். அத‌னால் மிகுந்த‌ ஆர்வ‌த்தோடு கிளின்ட் ஈஸ்ட்வூட்டின் 'Gran Torino' ம‌ற்றும் 'Here After' பார்த்த‌போது அவை எதிர்பார்த்த‌ அள‌வுக்கு இருக்க‌வில்லை என்ப‌து என்ன‌ள‌வில் ஏமாற்ற‌மே. 'Here After' இன்னும் எத்த‌னையோ திசைக‌ளில் ஊட‌றுத்துச் செல்ல‌க்கூடிய‌ க‌தை, ஆனால் 'ச‌ப்'பென்று முடித்த‌மாதிரியான‌ உண‌ர்வே இறுதியில் மிஞ்சியிருந்த‌து.

மே தின‌ம் - 2011

Monday, May 02, 2011

தெருக்களில் 'வாக்கு' - No One Is Illegal

No One Is Illegalன் மேதின‌ அழைப்பு அறிக்கையை விரிவாக‌ வாசிக்க‌



எனெனில், இனி குடும்ப‌ ஸ்பொன்ச‌ர்ஷிப் செய்வ‌த‌ற்கு ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை எடுக்க‌லாம் ம‌ற்றும் அக‌திக‌ளை ஏற்றுக்கொள்வ‌து 56%த்தால் குறைக்க‌ப்ப‌டுகின்ற‌து



எனெனில், எல்லைக் காவ‌ல‌ர்க‌ளுக்கு பெண்க‌ளின் வ‌திவிட‌ங்க‌ளை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கான‌ அதிகார‌ம் இப்போது இருக்கிற‌து


எனெனில், த‌ற்காலிக‌ குடியேற்றத் தொழிலாள‌ர்க‌ள் 'திற‌ன் குறைந்தவ‌ர்க‌ள்' என‌க் க‌ருத்த‌ப்ப‌ட்டு, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு க‌ன‌டாவிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட‌லாம்



எனெனில், ரொர‌ண்டோவில் ஒவ்வொருநாளும், 70 ச‌மூக‌ உறுப்பின‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்



எனெனில், ஹார்ப்ப‌ருக்குத் தேவை 'மிக‌வும் இன‌த்துவ‌மான‌' வாக்கு, ஆனால் குடியேறிக‌ள் தேவையில்லை.



எனெனில், (ரொர‌ண்டோ மேய‌ர்) போர்ட் (அர‌சுக்குச் சொந்த‌மான‌) பொது வீடுக‌ளை விற்க‌வும்,ரிரிசி ப‌ஸ்க‌ளை குறைக்கவும், பொதுச்சேவைக‌ளுக்கு ப‌ண‌ம் அற‌விட‌வும் விரும்புகின்றார். இந்த ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பெண்க‌ள், குடியேறிக‌ள் ம‌ற்றும் வ‌றிய‌ ச‌மூக‌ங்க‌ளை இன்னும் மோச‌மாக‌ப் பாதிக்கும்.



எனெனில்,குடியேறிக‌ளின் நீதிக்கான‌ ஒழுங்க‌மைப்பாள‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டு, கைது செய்ய‌ப்ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் தொட‌ர்ச்சியாக‌ பொலிசால் தொந்த‌ர‌வுக்குள்ளாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.



எனெனில், க‌னேடிய‌ அர‌சு தொட‌ர்ச்சியாக‌ பூர்வீக‌ ம‌க்க‌ளின் இறையாண்மையையும் விடுத‌லையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிற‌து.



எனெனில், எங்க‌ளின் க‌ன‌வுக‌ள் வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளில் முடிய‌க்கூடிய‌து அல்ல‌


ஆவ‌ண‌மில்லாத‌ ம‌ற்றும் குடியேறி தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ நீதி: எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து! ப‌ய‌மில்லாது (எல்லாவ‌ற்றையும்) அணுகிப் பெறுத‌ல்!







எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கான‌ நீதி: ச‌ம்ப‌ள‌த்தை, வாழும் காசை, தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை, இல‌வ‌சமான‌தும் எளிதில் பெற‌க்கூடிய‌துமான‌ பொதுச் சேவைக‌ளை அனைவருக்க‌மாய் அதிக‌ரித்த‌ல், வ‌ன்முறையான‌ பொலிசை அய‌லிட‌ங்க‌ளிலிருந்து அக‌ற்றுத‌ல்



கால‌னித்துவ‌ம், இராணுவ‌ ம‌ற்றும் பொருளாதார‌ போர்க‌ள் ம‌ற்றும் சூழ‌லிய‌ல் த‌ர‌ங்குறைத‌ல் என்ப‌வ‌ற்றிலிருந்து விடுத‌லை



சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம், சுத‌ந்திர‌மான‌ திரும்ப‌ல் ம‌ற்றும் சுத‌ந்திர‌மான‌ த‌ங்க‌ல்

தேர்தல் 2011- மேதினம்: தெருக்களில் 'வாக்கு'

Tuesday, April 26, 2011

-6th Annual May Day of Action for Status for All-

தமிழில்: டிசே தமிழன்

அவ‌ர்க‌ளுக்குத் தேவை 'மிக‌ இன‌த்துவ‌ வாக்கு', ஆனால் அவ‌ர்க‌ளுக்கு குடியேறிக‌ள் தேவையில்லை.
வ‌ரும் பாராளும‌ன்ற‌த் தேர்த‌லில், இன‌வெறி பிர‌ச்சார‌ நிக‌ழ்ச்சி நிர‌லை எதிர்த்து நில்லுங்க‌ள்: தெருக்க‌ளில் 'வாக்கு'.

மே முத‌லாந்திக‌தி‍ ச‌ர்வ‌தேச‌ தொழிலாள‌ர் தின‌த்தில், வ‌ட‌ அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடும், உலகின் மில்லிய‌ன்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடும் இணைந்து நிற்போம். தொழிலாள‌ர் ச‌ம்ப‌ள‌ம் ம‌ற்றும் ச‌ம்ப‌ள‌மின்மை, குடியேறிக‌ளுக்கான அந்த‌ஸ்து (status) ம‌ற்றும் அந்த‌ஸ்தின்மை: இவ‌ற்றை மேலும் ஆழ‌மாய் இறுக்குத‌ல், வேலை இழ‌த்த‌ல்க‌ள், சூழ‌லிய‌ல் அழிவுக‌ள், ஏகாதிப‌த்திய‌ போர்க‌ள் ம‌ற்றும் பெருநிறுவ‌ன‌ங்க‌ளின் பேராசைக‌ள் போன்ற‌வ‌ற்றைப் பார்த்துக்கொண்டு  மவுனமாக‌ இருப்ப‌தை நாம் ம‌றுக்கின்றோம்.

நீதிக்கும், க‌வுர‌வ‌த்திற்குமான‌ த‌ம் க‌ன‌வுக‌ளையும், பார்வைக‌ளையும், ந‌ம்பிக்கைக‌ளையும் ம‌க்க‌ள் இப்பேர‌ணியில் ப‌தாதைகள், ஆடைக‌ள் ம‌ற்றும் துண்டுப் பிர‌சுர‌ங்க‌ளினூடாக எடுத்துவ‌ருவ‌தை நாங்க‌ள் உற்சாக‌ப்ப‌டுத்துகின்றோம். எங்க‌ளுட‌ன் பேரணியில் துணையாக‌ வாத்திய‌ங்க‌ள் இசைக்கும் குழுக்கள், பொம்மலாட்ட‌க்கார‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ர் வ‌ருவார்க‌ள்.

எனெனில், இனி குடும்ப‌ ஸ்பொன்ச‌ர்ஷிப் செய்வ‌த‌ற்கு ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை எடுக்க‌லாம் ம‌ற்றும் அக‌திக‌ளை ஏற்றுக்கொள்வ‌து 56%த்தால் குறைக்க‌ப்ப‌டுகின்ற‌து
எனெனில், எல்லைக் காவ‌ல‌ர்க‌ளுக்கு பெண்க‌ளின் வ‌திவிட‌ங்க‌ளை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கான‌ அதிகார‌ம் இப்போது இருக்கிற‌து
எனெனில், த‌ற்காலிக‌ குடியேற்றத் தொழிலாள‌ர்க‌ள் 'திற‌ன் குறைந்தவ‌ர்க‌ள்' என‌க் க‌ருத்த‌ப்ப‌ட்டு, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு க‌ன‌டாவிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட‌லாம்.
எனெனில், ரொர‌ண்டோவில் ஒவ்வொருநாளும், 70 ச‌மூக‌ உறுப்பின‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்
எனெனில், ஹார்ப்ப‌ருக்குத் தேவை 'மிக‌வும் இன‌த்துவ‌மான‌' வாக்கு, ஆனால் குடியேறிக‌ள் தேவையில்லை.
எனெனில், (ரொர‌ண்டோ மேய‌ர்) போர்ட் (அர‌சுக்குச் சொந்த‌மான‌) பொது வீடுக‌ளை விற்க‌வும்,ரிரிசி ப‌ஸ்க‌ளை குறைக்கவும், பொதுச்சேவைக‌ளுக்கு ப‌ண‌ம் அற‌விட‌வும் விரும்புகின்றார். இந்த ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பெண்க‌ள், குடியேறிக‌ள் ம‌ற்றும் வ‌றிய‌ ச‌மூக‌ங்க‌ளை இன்னும் மோச‌மாக‌ப் பாதிக்கும்.
எனெனில்,குடியேறிக‌ளின் நீதிக்கான‌ ஒழுங்க‌மைப்பாள‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டு, கைது செய்ய‌ப்ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் தொட‌ர்ச்சியாக‌ பொலிசால் தொந்த‌ர‌வுக்குள்ளாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.
எனெனில், க‌னேடிய‌ அர‌சு தொட‌ர்ச்சியாக‌ பூர்வீக‌ ம‌க்க‌ளின் இறையாண்மையையும் விடுத‌லையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிற‌து.
எனெனில், எங்க‌ளின் க‌ன‌வுக‌ள் வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளில் முடிய‌க்கூடிய‌து அல்ல‌,

.....ஆகிய‌ இக்கார‌ண‌ங்க‌ளையும் இன்னும் இருக்கும் காரண‌ங்க‌ளையும், நாங்க‌ள் தெருக்க‌ளுக்கு எடுத்து வ‌ருகின்றோம். ச‌ன‌நாய‌க‌ம், வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளுட‌ன் தொட‌ங்குவ‌தோ முடிவ‌தோ அல்ல‌. மாற்ற‌ம் வ‌ருவ‌தைப் பார்க்க‌ காத்திருக்க‌ விரும்பாம‌ல் நாங்க‌ள் (அந்த‌) மாற்றதை உருவாக்குகின்றோம். அடிநிலையிலிருந்து மேலாக‌... ம‌க்க‌ளின் ச‌க்தியைக் கொண்டு.

ஏன் No One Is Illegal மேதின‌ ந‌ட‌வ‌டிக்கை?
ஏப்ர‌ல் 2006ல், ஹார்ப்ப‌ர் அதிகார‌த்திற்கு வ‌ந்த‌ சில நாட்க‌ளில், அவ‌ர் டப்ரின் அங்காடிப் ப‌குதியில் ப‌ல‌வேறு சுற்றிவ‌ளைப்புக்க‌ளைச் செய்யத் தொட‌ங்கினார். இன‌ப்பாகுபாட்டு விவ‌ர‌ங்க‌ளுடன் ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ முழு அந்த‌ஸ்து (full status) இல்லாத‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு த‌டுப்புக்காவ‌லில் வைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ற்கு எதிர்வினையாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் 'எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து' (status for all) என்ற‌ கோரிக்கையுட‌ன் முத‌லாவ‌து வ‌ருட‌ மேதின‌த்தில் ரொர‌ண்டோத் தெருக்க‌ளில் இற‌ங்கினார்க‌ள். இதை நாங்க‌ள் ஜ‌க்கிய‌ அமெரிக்காவில் குடியேறிக‌ளின் உரிமைக‌ளுக்காய் ந‌ட‌ந்த‌ மாபெரும் பேர‌ணிக‌ளோடு இணைத்தும், அதிக‌ம் விளிம்புநிலைக்குள்ளாக்க‌ப்ப‌ட்ட‌ வேலைசெய்யும் வ‌ர்க்க‌த்தை முன்னிறுத்தியும் ச‌ர்வ‌தேச‌ தொழிலாள‌ர்க‌ள் தின‌த்தில் செய்தோம். க‌ட‌ந்த‌ ஆறு வ‌ருடங்க‌ளில், ம‌த்தியிலுள்ள‌ வ‌ல‌துசாரிக‌ளின் நாடுக‌ட‌த்தும் செயலை நிறுத்துவ‌த‌ற்காய், குடியேறிக‌ளின் உரிமைக‌ளை அவ‌ர்க‌ள் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக...‌ ம‌ற்றும் எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌த‌ற்காய்... என‌ ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கும் நாங்க‌ள் போராடினோம்...

நாங்க‌ள் பாட‌சாலைக‌ளுக்கு, உண‌வுக்கு.., ம‌ருத்துவ‌ வ‌ச‌திக்கு.., பெண்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ளுக்கு எதிரான‌ சேவைக‌ள்... போன்ற‌ சில‌ அணுகுமுறைக‌ளில் வென்றிருக்கின்றோம், அதே ச‌ம‌ய‌ம், நாங்க‌ள் த‌டுப்புக்காவ‌ல் ம‌ற்றும் நாடுக‌ட‌த்த‌ல்க‌ளுக்கு எதிராக‌ மிக‌ வ‌லுவாக‌ குர‌லெழுப்பிய‌போதும் தோற்றிருக்கின்றோம், மிக‌ அண்மையாக‌ டானிய‌ல் கார்சியா பார்க்டேலில் இருந்து ஜ‌ன‌வ‌ரி முதலாந்திக‌தி நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்டிருக்கின்றார். இந்த‌ மே தின‌த்தில், நாங்க‌ள் பார்க்டேலிருந்து ‍‍-இங்கேதான் டானிய‌ல் கார்சியா கைதுசெய்ய‌ப்ப‌ட்டார் என்ப‌தும் அமெரிக்க‌ப்பாணி குடியேறிக‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌டும் முறை அமுலாக்க‌ப்ப‌ட்டு ஐந்து வ‌ருட‌ங்க‌ளும் ஆகின்ற‌ன‌- என்ப‌தையும் நினைவுகூர்ந்து பேர‌ணியைத் தொட‌ங்குகின்றோம்.
.
எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து என்ப‌து என்ன‌?
ம‌த்திய‌, மாகாண‌ ம‌ற்றும் உள்ளூராட்சி அர‌சுக்க‌ள், குடிவ‌ர‌வாள‌ர் அந்த‌ஸ்து இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு, ந‌ல்ல‌ உண‌வு, ம‌ருத்துவ‌ வ‌ச‌தி, வாழ்க்கை, குழ‌ந்தைப் ப‌ராம‌ரிப்பு, க‌ல்வி, வ‌திவிட‌ம், நீதி ம‌ற்றும் க‌வுர‌மான‌ வாழ்க்கை என்ப‌வை கிடைப்ப‌தைத் த‌டுக்கின்ற‌ன‌. எல்லா ம‌க்க‌ளும் (அவ‌ர்க‌ளுக்கு அந்த‌ஸ்து இருக்கிற‌தோ இல்லையோ) சுத‌ந்திரமாக‌வும், ம‌திப்புட‌னும், ப‌ய‌ம‌ற்றும் வாழ‌த்தான் வேண்டும். பூர்வீக‌க் குடிக‌ள்,வ‌றிய‌ ம‌க்க‌ள், நிற‌முள்ள‌ குடியேறிக‌ள், ப‌ல‌ பெண்க‌ள், Queer ம‌க்க‌ள் ம‌ற்றும் மாற்றுத்திற‌ன் உள்ளோருக்கு இந்த‌ (க‌னேடிய‌) பிர‌ஜா உரிமையான‌து அவ‌ர்க‌ளுக்கான‌ சுத‌ந்திர‌த்தை பூர்த்தி செய்ய‌வில்லை என்ப‌து எங்க‌ளுக்கு மேலும் தெரியும். அந்த‌ஸ்துக்கான‌ போராட்ட‌ம் என்ப‌து அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ ஒரு போராட்ட‌மாகும்; குடியுரிமை, பால், பாலின‌ம், மாற்றுத்திற‌ன் அல்ல‌து இன‌ப்பாகு போன்ற‌வ‌ற்றைப் பொருட்ப‌டுத்தாம‌ல் எல்லோரும் எல்லாவ‌ற்றையும் -எப்ப‌டி ஒரு குடியேறி அந்த‌ஸ்து உள்ள‌வ‌ர் பெற‌வேண்டுமோ- அவ்வாறு அவ‌ற்றைச் சுத‌ந்திர‌மாக‌ப் பெற‌வேண்டும்.

இத்த‌கைய‌ ஒருமைப்பாட்டின் எழுச்சியில், ஒரு அசைவிய‌க்க‌த்தை இந்ந‌க‌ரில் பார்ப்ப‌த‌ற்காய், 'எவ‌ருமே ச‌ட்ட‌விரோத‌மான‌வ‌ர்க‌ள் அல்ல‌' அமைப்பைத் சேர்ந்த‌வ‌ர்க‌ளாகிய‌ நாம் 'எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து' என்ற‌ கோச‌த்தின் அடிப்ப‌டையில் ட‌ப்றின் குரூவ் பூங்காவிலிருந்து அணிவ‌குக்க‌ உள்ளோம்.

மே தின‌ நாளில் இவ‌ற்றை கேட்க‌, உறுதிப்ப‌டுத்த‌, செய‌லாக்க‌ நாங்க‌ள் தெருக்க‌ளுக்கு எடுத்து வ‌ருகின்றோம்:

ஆவ‌ண‌மில்லாத‌ ம‌ற்றும் குடியேறி தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ நீதி: எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து! ப‌ய‌மில்லாது (எல்லாவ‌ற்றையும்) அணுகிப் பெறுத‌ல்!

எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கான‌ நீதி: ச‌ம்ப‌ள‌த்தை, வாழும் காசை, தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை, இல‌வ‌சமான‌தும் எளிதில் பெற‌க்கூடிய‌துமான‌ பொதுச் சேவைக‌ளை அனைவருக்க‌மாய் அதிக‌ரித்த‌ல், வ‌ன்முறையான‌ பொலிசை அய‌லிட‌ங்க‌ளிலிருந்து அக‌ற்றுத‌ல்

சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம், சுத‌ந்திர‌மான‌ திரும்ப‌ல் ம‌ற்றும் சுத‌ந்திர‌மான‌ த‌ங்க‌ல்

கால‌னித்துவ‌ம், இராணுவ‌ ம‌ற்றும் பொருளாதார‌ போர்க‌ள் ம‌ற்றும் சூழ‌லிய‌ல் த‌ர‌ங்குறைத‌ல் என்ப‌வ‌ற்றிலிருந்து விடுத‌லை

(நன்றி: http://toronto.nooneisillegal.org)

கனடாத் தேர்தல் - மேலும் சில குறிப்புகள்

Sunday, April 24, 2011

1.
இம்முறை தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து -அடிக்க‌டி ந‌டைபெறும் தேர்த‌ல் க‌ணிப்பில்- வ‌ல‌துசாரிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி கிட்ட‌த்த‌ட்ட‌ 40% முன்ன‌ணியிலும், லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் 30%, ம‌ற்றும் என்டிபிக் க‌ட்சியின‌ர் 20% என் ச‌ற்றுக் கூடியும் குறைந்தும் இருந்தார்க‌ள். க‌ன‌டாவின் மொத்த‌ பாராளும‌ன்ற‌ இருக்கைக‌ளான‌ 308ல் மூன்றில் ஒருப‌ங்கு ஒன்ராறியோ மாகாண‌த்திலேயே (106) இருக்கின்ற‌து. அத‌ற்கு அடுத்து குயூபெக் மாகாண‌த்தில் 75 இருக்கைக‌ளும், பிரிடடிஷ் கொல‌ம்பியா மாகாண‌த்தில் 36 இருக்கைக‌ளும் இருக்கின்ற‌ன‌. இருக்கைக‌ளின் அடிப்ப‌டையில் வைத்துப் பார்க்கும்போது ஒன்ராறியோ மாகாண‌த்தில் எந்த‌க் க‌ட்சி, கூட‌ இருக்கைக‌ளைப் பெறுகின்ற‌தோ அதுவே எளிதாக‌ ஆட்சிய‌மைக்கும் என்ப‌தை நாம் புரிந்துகொள்ள‌லாம். மேலும் க‌ன‌டாவில் ஒரு க‌ட்சி பெரும்பான்மை ஆட்சிய‌மைக்கின்ற‌தென்றால் ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மையான‌ இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினால் ம‌ட்டுமே சாத்தியமாகக் கூடிய‌து.

சென்ற‌ தேர்தலில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 143 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றிய‌து. 155 இருக்கைக‌ளுக்கு மேல் எடுத்தாலே பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளால் அமைக்க‌முடியும் என்றாலும், அவ‌ர்க‌ள் கட‌ந்த‌ 2004ல் 99 இருக்கைக‌ளுட‌ன் தொட‌ங்கி 124(2006), 143(2008) என‌ ஏறுமுக‌த்திலேயே இருக்கின்றார்க‌ள். ஆக‌ இப்போது தேர்த‌லை அறிவித்த‌தும் அந்த‌ ஏறுமுக‌த்தை த‌க்க‌வைத்து ஒரு பெரும்பான்மை அர‌சை அமைப்ப‌தே என்ப‌து எவ‌ரும் அறிந்திருக்க‌க்கூடிய‌ 'இர‌க‌சிய‌மே'. ஆனால் நிலைமை இப்போது அவ்வ‌ள‌வு சொல்லிக்கொள்ளும்ப‌டியாக‌ வ‌ல‌துசாரிக‌ளுக்கு இல்லை என்ப‌துதான் யதார்த்த‌ நிலைமை.

சென்ற‌ தேர்த‌லில் லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் ந‌ல்ல‌ வ‌ழிகாட்டியுள்ள‌ த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுக்காத‌தாலும், ம‌க்க‌ள் மாற்ற‌ங்க‌ளை வேண்டிய‌தாலும் -க‌ட‌ந்த‌ 20 வ‌ருட‌ங்க‌ளின் பின்- ஒரு மோச‌மான‌ தோல்வியை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்த‌லில் ச‌ந்தித்தது. அதனால் 77 இருக்கைக‌ளை ம‌ட்டுமே எடுக்க‌ முடிந்திருந்தது. அதேசமயம் லிப‌ர‌லைப் ப‌டுகுழியில் த‌ள்ளினாலும் ம‌க்க‌ள் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு ஒரு பெரும்பான்மையைக் கொடுக்க‌த் த‌யாராக‌வில்லை. குயூபெக்கில் ப்ளொக் குயூபெக்குவா 49 இருக்கைக‌ளையும், என்டிபி க‌ன‌டா முழுவ‌தும் 37 இருக்கைக‌ளையும் பெற்று வ‌ல‌துசாரிக‌ளின் த‌னிப்பெரும்பான்மை அர‌சுக் க‌ன‌வைக் க‌லைத்த‌ன‌ர்.

இம்முறை க‌ட‌ந்த‌ தேர்த‌லைப் போல‌வ‌ன்றி சிக்க‌ல‌ற்ற‌ ஒரு த‌லைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்ந்தெடுத்திருக்கின்ற‌து. அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ யாரை விரும்புகின்றீர்க‌ள் என்ற‌ க‌ருத்துக்க‌ணிப்பின்போது லிப‌ர‌ல் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும், ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும் அண்ண‌ள‌வாக‌ ஒரே விருப்பையே (30%)தெரிவித்திருக்கின்றார்க‌ள். ஆனால் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் விட‌ அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ என்டிபி த‌லைவ‌ருக்கு (68%) மிகக் கூடிய‌ விருப்பைத் தெரிவித்திருக்கின்றார்க‌ள் என்ப‌து சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம்.

என்டிபி க‌ட்சியின் மக்கள் செல்வாக்கைக் க‌ன‌டா முழுவ‌த‌ற்குமாய்ப் பார்க்கும்போது, ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி ம‌ற்றும் லிப‌ர‌ல் க‌ட்சிக்கு அடுத்த‌தாக‌ மூன்றாவ‌து நிலையிலே இருக்கின்ற‌து என்ப‌தை நாம‌றிவோம். ஆனால் இப்போது இன்னொரு சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் க‌ள‌ம் திற‌க்க‌‌ப்பட்டிருக்கின்ற‌து.

குயூபெக் மாகாண‌த்தில் க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ ப்ளொக் குயூபெக்குவாவே அதிக‌ இருக்கைக‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌து. சென்ற‌ தேர்த‌லில் 75 இருக்கைக‌ள் உள்ள‌ குயூபெக் மாகாண‌த்தில் 49 இருக்கைக‌ளை ப்ளொக் குயூபெக்குவாவும், மிகுதி 25 இருக்கைக‌ளில் லிப‌ர‌ல் (14), ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி (10), என்டிபி (1) ம‌ற்றும் சுயாதீன‌க்க‌ட்சி(1) என‌க் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. சென்ற‌வார‌ம் வ‌ரை க‌ருத்துக்க‌ணிப்பில் ப்ளொக் குயூபெக்குவாவிற்கு அடுத்து இர‌ண்டாவ‌தாக‌ நின்ற‌ என்டிபி, இப்போது குயூபெக் மாகாண‌த்தில் ப்ளொக் குயூபெக்குவாவை விட‌ முன்ன‌ணியில் நிற்கின்ற‌து என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. என்டிபி முன்ன‌ணியில் நிற்கும்போது அதிக‌மாய் லிப‌ர‌ல்க‌ட்சியின‌ர‌தும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குக‌ள் பிரிந்துபோகும் என்ப‌தால் இத‌னால் என்டிபியை விட‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சியே இன்னும் சந்தோசப்படும்.

மேலும் பிரிவினையை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவாவை எப்போதும் வெறுக்கும் வ‌ல‌துசாரிக‌ளுக்கு, இந்த‌ச் செய்தி பழம் நழுவி பாலில் விழுந்த‌மாதிரி இனிக்க‌வும் கூடும். ஆனால் இந்த‌ச் செய்தி சிறுபான்மையின‌ரின் குர‌ல்க‌ள் பொதுவெளியில் உர‌த்து ஒலிக்க‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க்கு அவ்வ‌ளவு உவ‌ப்ப‌தைத் த‌ராது என்பது உண்மையே. ஒர‌ள‌வு இட‌துசாரிக‌ளாய் இருக்க‌க்கூடிய‌ என்டிபியின‌ர் குயூபெக்கில் மிக‌ப்பெரும் எழுச்சி பெறுவ‌து ம‌கிழ்வாய் இருந்தாலும், அந்த‌ எழுச்சி இன்னொரு சிறுபான்மையின‌ருக்குத் பாதகம் விளைவித்து விடும் என்கின்றபோது யோசிக்க‌வேண்டியிருக்கும்.

2.
இந்தத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் ரொரண்டோ பெரும்பாகத் தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். ஒருவர் பழமைவாதக்கட்சியின் சார்பிலும், இன்னொருவர் என்டிபியினர் சார்பிலும் போட்டியிடுகின்றார். நீண்டகாலமாய் ஒன்ராறியோ மாகாணம் லிபரல் கட்சியாகவே இருந்துவந்திருக்கின்றது. பழமைவாதக்கட்சியினர் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்ராறியோவில் செல்வாக்குப் பெற்று வருகின்ற இக்காலத்திலும் இன்னமும் அவர்கள் ரொரண்டோ ந‌க‌ராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் லிபரலை அசைக்கவே முடியாதிருக்கின்றது. ரொரண்டோ ந‌க‌ரில் லிபரலைத் தவிர என்டிபியினர் இரு தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். அதில் ஒருவர் என்டிபியின் கட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, லிபரல் கட்சியினர் வெல்லும் சாத்தியம் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் இரு தமிழ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களை கடந்த காலத்த்தேர்தலை முன்வைத்து ஆராய்வோம்.

ஸ்காபரோ Rouge Valleyல் தமிழரான ராதிகா சிற்சபேசன் புதிய ஜனநாயக் கட்சி (என்டிபி) சார்பாகப் போட்டியிடுகின்றார். இத்தொகுதியிலும் தமிழர்கள் உள்ளிட்ட ஆசியா இனத்தவர்களே நிறைய இருக்கின்றார்கள்.1988ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து லிபரல் கட்சி வேட்பாளர்களே வென்றுவருகின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் இம்முறை நீண்டகாலமாக லிபரல் கட்சி சார்பில் வென்ற டெரிக் லீ என்பவர் போட்டியிடாததால் புதிய ஒரு வேட்பாளரை லிபரல் கட்சி நிறுத்தியிருக்கின்றது. அவரும் ஒரு ஆசியா இனத்தவரைச் சேர்ந்தவராக இருப்பதால் அவரே வெல்வதற்கான சந்தர்ப்பம் நிறைய உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் ராதிகா சிற்சபேசன் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை விட அதிக வாக்குக்குப் பெற்று இரண்டாம் இடத்தை பெறக் கூடும். எனெனில் தமிழர்களும், தொடர்ச்சியாக என்டிபியினருக்கு வாக்களிப்பவர்களும் ராதிகாவிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் நிறைய இருப்பதால் கணிசமான வாக்குகளை அவ‌ர் பெறலாம். அதே சமயம்,  இந்தியாப் பின்னணியில்  லிபரல் கட்சி வேட்பாளரும், பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் இருப்பதால் அவர்களின் வாக்குகள் இருகட்சிக்கும் பிரிந்து போனால், ராதிகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. பழமைவாதக் கட்சியில் போட்டியிடும் மார்லின் ஒரு க‌வுன்சில‌ருக்கு உத‌வியாள‌ராக‌ இருப்பதால் அவருக்கும் கணிசமான வாக்குகள் விழக்கூடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

Scarborough - Rouge River
2008 Results
Party            Candidate               Votes               Vote Share (%)
LIB               Derek Lee               23,716            58.23
CON            Jerry Bance              9,160              22.49
NDP             Ryan Sloan              5,954              14.62
GRN            Attila Nagy              1,567               3.85
LTN            Alan Mercer             331                 0.81

2006 Results
Candidate             Party           Vote Count      Vote Share
Derek Lee             LIB              30285               65.62% 
Jerry Bance           CON            9432                 20.44%
Andrew Brett        NDP             4972                10.77%
Serge Abbat         GRN             754                   1.63%
Yaqoob Khan      IND               467                   1.01%
Alan Mercer         LTN              243                   0.53%

 3.
பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற இராகவன் என்ற பெயரை அண்மையில் தேர்தலுக்காய் மாற்றிய கவன் பரஞ்சோதியின் தொகுதியான ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியைப் பார்ப்போம். 2006ல் பழமைவாதக்கட்சி நீண்டகாலத்தின் பின் லிபரலைத் தோற்கடித்து பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்தபோது....ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில்...

2006 Results
DISTRICT: Scarborough Southwest

Candidate                     Party               Vote Count       Vote Share
Tom Wappel                 LIB                 19930              47.83%
Vincent Veera               CON               10017              24.04%
Dan Harris                    NDP                9626                23.1%
Valery Philip                 GRN                1827                4.38%
Trevor Sutton                IND                 147                  0.35%
Elizabeth Rowle            COM                120                  0.29%

2006ல் இத்தொகுதியில் வின்சன்ட் வீரசுந்தரம் என்ற தமிழரே பழமைவாதக் கட்சி சார்பில் பேட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் இத்தொகுதியில் நீண்டகாலமாய் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த ரொம் மீண்டுமொருமுறை எளிதாகத் தேர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அதேசமயம், என்டிபி கட்சி சார்பில் போட்டியிட்ட டானும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். அவருக்கும் வின்சனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 வாக்குகளே ஆகும். ஆகவே பழமைவாதக்கட்சியினரும் என்டிபியினரும் கிட்டத்தட்ட சமமான செல்வாக்கையே இத்தொகுதியில் பெற்றிருக்கின்றார்கள் என்பதை அறியமுடியும். இத்தொகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர்களும், பிலிப்பைன்காரரர்களும் வாழ்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இனி 2008ல் நடந்த தேர்தலைப் பார்போம்:
Scarborough Southwest
Party       Candidate                      Votes               Vote Share (%) 
LIB          Michelle Simson             15,480             41.77
CON       Greg Crompton              10,900             29.41
NDP        Alamgir Hussain             7,024               18.95
GRN        Stefan Dixon                  3,507               9.46
IND         Fatique Kabir                 150                  0.40

                                           க‌ட‌ந்த‌ 2008 தேர்தலில் லிபரல் புதிய வேட்பாளரைக் களத்தில் இற‌க்கிய‌து. அதேபோன்றே பழமைவாதக்கட்சியினரும், என்டிபியினரும் புதிய வேட்பாளரையே தேர்தலில் நிறுத்திய‌து. இம்முறையும் லிபரல் கட்சி வேட்பாளரான மிசேலே வென்றாலும், என்டிபினருக்கு கிடைத்த வாக்குகள் வீதமும் லிபரல் கட்சியினரின் வாக்கு வீதமும் குறைந்திருப்பதைக் காணலாம். மேலும் பழமைவாதக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒரு சிறுபான்மையினரைச் சேர்ந்தவரோ அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.  இப்போது 2011ல் நடக்குந் தேர்தலில் லிபரல் கட்சி, சென்றமுறை வெற்றி பெற்ற மிஷைலையே களத்தில் இறக்குகின்றது. பழமைவாதக் கட்சி சார்பில் கவன் பரஞ்சோதி வாக்குக் கேட்கின்றார். இதைவிட சுவாரசியமான விடயமாக என்டிபி 2006 தேர்தலில் கணிசமான வாக்குகள் (9626) பெற்ற‌ டானையே இந்தத் தேர்தலில் மீண்டும் களமிறக்குகின்றது.

எனவே இத்தேர்தல் தொகுதி ஒரு மும்முனைப் போட்டியுள்ள தேர்தலாக மாறக்கூடிய சாத்தியங்களே அதிகமுள்ளது என நினைக்கின்றேன். இம்முறை பழமைவாதக்கட்சிக்கு தமிழர்கள் நிறையப்பேர்கள் வாக்களிக்கும் சாத்தியம் உண்டெனினும், பழமைவாதத்தை பேணும் வெள்ளையினத்தவர் ஒரு நிறமுள்ள (coloured person) முகத்திற்கு வாக்களிப்பார்களா என்ற சுவாரசியான கேள்வியும் இருக்கின்றது.

பழமைவாதக்கட்சியினருக்குத்தான் குழப்பமே தவிர, என்டிபியினருக்குக் குழப்பம் இருக்கப்போவதில்லை. எனெனில் என்டிபியினருக்கு வாக்களிக்கும் அநேகருக்கு அடுத்த தெரிவாக இருப்பது லிபரல் கட்சியோ கிறீன் கட்சியோ தவிர ஒருபோதும் பழமைவாதக் கட்சியாக இருக்கப்போவதில்லை. எனவே பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டிடும் கவன் பரஞ்சோதி தொடர்ந்து பழமைவாதக்கட்சியினருக்கு வாக்களிப்பவரிடமும், தமிழர்களிடமுமே தனது வெற்றி வாய்ப்புக்காய்க் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

4.
தமிழர்கள் கனடிய அரசியல் களத்திற்கு இன்றைய காலங்களில் வருவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் நாம் அவ்வாறு வாக்காளர்களாய் வரும் வேட்பாளர்கள் தமது கல்வி,செல்வாக்கு என்பவற்றால் தேர்தல் களத்திற்கு வருகின்றார்களா அல்லது உண்மையாகவே சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவும், அரசியலில் ஆர்வம் இருப்பதாலும் வருகின்றார்களோ என்று கவனிக்கவேண்டும். நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன். மேலும் தொடக்கத்தில் கிடைக்கும் தோல்விகளை எண்ணிச் சோர்வடையாது, தொடர்ந்து இவர்கள் ஆர்வத்துடன் அரசியலில் இருப்பார்களாயின்  கனேடிய அரசியல் ஒரு இடம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாது.

இறுதியாக ஏப்ரல் 22 நடந்த தேர்தல் கணிப்பின்படி, பழமைவாதக் கட்சி - 37.8%, லிபரல் கட்சி - 26.1% என்டிபி - 23.7%, ப்ளொக் குயூபெக்குவா - 7.4% மற்றும் கிறீன் கட்சி - 3.5% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கின்றன.

என்டிபியினரின் செல்வாக்கு அண்மைக்காலமாய் அதிகரித்தாலும், அது லிபரல் கட்சியினரும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குகளைப் பிளவு செய்தே பெறுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இன்னமும் பழமைவாதக்கட்சி வலுவான 10% ற்கு அதிகமான முன்னணியில் இருப்பதை கவனித்தாகவேண்டும். இந்த 10% இடைவெளி வலதுசாரிகளுக்கு ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க வழிகொடுக்குமா என்பதைக் கண்டறிய நாம் மே 02 வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது.

 ராதிகா சிற்சபேசனின் வேட்பாளர் அறிமுகம்:




(நன்றி: CBC.Ca -கருத்துக்கணிப்புக்களுக்கும், கடந்த தேர்தல் வாக்குகளின் தரவுகளுக்கும்...)