கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Grand Budapest Hotel

Monday, March 31, 2014

சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால் எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள் இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும். The Grand Budapest Hotel படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம் காட்சிப்படுத்துகிறது.

ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த ஹொட்டல் தன் வீழ்ச்சியை அடைகின்ற காலத்தில் ஒரு எழுத்தாளர் அங்கே செல்கின்றார். தற்செயலாய் இந்த எழுத்தாளர் அந்த ஹொட்டலின் சொந்தக்காரரான முஸ்தபாவை அங்கே சந்திக்கின்றார். அவரிடம் தன் இளமைக்காலத்தில் கேட்ட கதையை, இந்த எழுத்தாளர் தன் முதுமையில் எமக்குச் சொல்லத் தொடங்குகின்றார். சிலவேளை இந்தக் கதை நடந்ததா எனச் சந்தேகம் கேட்பவர்க்கு வந்தாலும், இவ்வாறே நிகழ்ந்ததெனவே சொல்லப்பட்டதாக எமக்குச் சிறு எச்சரிக்கை தரப்படுகிறது.

 இந்த ஹொட்டல் பிரபல்யமாயிருந்த காலத்தில் குஸ்தவேயே ஹொட்டலை நிர்வகிப்பவராக இருக்கின்றார். அவரின் கவனிப்பாலேயே ஈர்க்கப்பட்டே நிறையப் பேர் -முக்கியமாய் வயது முதிர்ந்த பெண்கள்- அவருக்காகவே வருகின்றனர். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி இருக்கும் குஸ்தவேயிடம், பதின்மூன்று வயதுச் சிறுவனான முஸ்தபா 'லொபி பையனாக' வந்து சேருகின்றார். பிறகு இவர்கள் இருவருக்குமிடையில் உருவாகும் நட்பும், அவர்கள் செய்யும் வீரதீரச் செயல்களுமே இந்தப் படம்.

குஸ்தவேயின் கவனிப்பில் களிப்புற்ற மூதாட்டியொருவர் அவரின் வீட்டில் வைத்துக் கொலை செய்யப்படுகின்றார். குஸ்தவேயின் மீது நேசத்திலிருக்கும் அந்த மூதாட்டி ஒரு விலையுயர்ந்த ஓவியத்தை உயிலாக குஸ்தவாவிற்கு எழுதி வைத்திருப்பதைக் கண்டு அந்த மூதாட்டியின் முழுக் குடும்பமே கோபப்படுகிறது. இதனால் குஸதவாவே இந்தக் கொலையைச் செய்தவரென சாட்சிகளை உருவாக்கி, அவரைச் சிறையில் தள்ளிவிடவும் செய்கின்றனர்.

அந்த ஜெயிலில் இருந்து குஸ்தவே எப்படித் தப்பிக்கின்றார் என்பதையும், ஹொட்டல்களை நிர்வகிப்பவர்களிடையே இரகசியமாக இயங்கும் குழுவின் உதவியினூடு எப்படித் தன்னை நிரபராதியென நிரூபிக்கின்றார் என்பதுவும் விறுவிறுப்பானது, இறுதியில் குஸ்தவேயுற்கு என்ன நிகழ்ந்தது என்பதையும், எவ்வாறு லொபி பையனாக இருந்த முஸ்தபா அந்த ஹொட்டலை நிர்வாகிக்கும் ஒருவராக மாறுகின்றார் என்பதையும் சற்று நகைச்சுவையும் கலந்து இத்திரைப்படத்தில் அன்டர்சன் காட்டுகின்றார்.

யுத்தங்களுக்கிடையில் (1ம்/2ம் உலகமகாயுத்தம்) வெவ்வேறு இராணுவங்களால் எல்லைகள் கைப்பற்றப்படுவதை, அவ்வப்போது இரெயினில் பயணிக்கும் குஸ்தவேயும் முஸ்தபாவும் -எந்த நாட்டு இராணுவம் எல்லையைக் கைப்பற்றியிருக்கிறதென அறியாது -அவ்வப்போது மாட்டுப்பட்டு முழிப்பதும் அடிவாங்குவது எள்ளலாகக் காட்டப்பட்டாலும், இன்னமும் 'எல்லை கடத்தல்களில்' இருக்கும் வேதனைகளின் துயரங்கள் அவ்வளவாய் மாறிவிடவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அதேபோன்று லொபி பையனாக இருக்கும் முஸ்தபா, தன் பெற்றோரைப் போருக்குப் பலிகொடுத்து எவருமில்லாது எவ்வித ஆவணங்களில்லாது இந்த ஹொட்டலில் அடைக்கலமாகும் கதை கூறப்படும்போது நகைச்சுவையாக நீளும் காட்சிகளில் சடுதியாய் மெளனம் கவிழ்ந்து மெல்லிய சோகம் இழையோடத் தொடங்குகின்றது. அத்துடன் பான் கேக் செய்யும் பெண்ணோடு, முஸ்தபாவிற்கு முகிழும் காதல் ஒருவகை அழகென்றால், ஜெயிலில் இருந்து தப்பிவரும்போது குஸ்தவேயும், முஸ்தபாவும் -அந்தப் பதற்றம் உணராது- நீண்டநேரம் தங்களை மறந்து உரையாடி இறுதியில் கவிதை சொல்வது மெல்லிய புன்முறுவலைத் தூண்டச் செய்கிறது.

ஒவ்வொரு சிறுசிறு காட்சிகளிலும் அன்டர்சன் என்கின்ற இயக்குநரைத் தாண்டி அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளர் மிளிர்ந்துகொண்டேயிருக்கிறார். ஹொட்டலை பிங் நிற திருமணக்கேக் போல வடிவமைத்ததிலிருந்து, ஹொட்டல் செய்யும் கேக் வடிவத்திலேயே ஜெயிலிருந்து தப்புவதற்கான உபகரணங்களை காவலர்க்குத் தெரியாமல் அனுப்புவதெனத் தொடர்ந்து, இரகசியமாக undergroundயாய் இயங்கும் ஹொட்டலை நிர்வகிப்பவர்களின் குழு, தமது உறுப்பினர் ஒருவருக்காய் சட்டென்று உயிர்பெற்று அவர்களுக்கிடையில் தகவல்கள் பரிமாறப்படுவதை ஒரு சிறுகவிதைக்கு நிகராய்க் காட்சிப்படுத்துவரை அன்டர்சன் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

கதையொன்றால் குறிப்பிட பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமெனில் ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதைகளையே பகுதிகளாகப் பிரிதது தனக்குரிய முறையில், வித்தியாசமான சட்டகங்களுடான (Robert Yeoman )ஒளிப்பதிவோடு அன்டர்சன் திரைப்படமாக்கியிருக்கின்றார் எனச் சொல்லலாம்.. ஏற்கனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்லப்பட்ட கதைகளை இன்னொருமுறை எப்படி புதிய முறையில் சொல்வது என்பது இன்றைய காலத்தின் முன்னாலுள்ள சவால் எனக் கூறுவோரும் உண்டு. அந்த வகைக்கேற்ப இந்தப்படம் இருக்கிறது.

எதையும் நிறைய எதிர்பார்க்காது, திரைப்படம் செல்லும் திசையெங்கும் நாமும் அலைந்தால், இத்திரைப்படம் நம்மை வசீகரிக்கக் கூடும்.

'நிழல்முற்றத்து நினைவுகள்'

Thursday, March 27, 2014

(நன்றி: காட்சிப்பிழை - மார்ச், 2014)

'நிழல் முற்றம்' என்ற தியேட்டரைப் பின்புலமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவலை நம்மில் பலர் வாசித்திருப்போம். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி அல்லது அதிலே சொல்லப்படாது விடப்பட்ட பகுதிகள் குறித்து பெருமாள் முருகன் இதில் விரிவாக நனவிடை தோய்தல் வடிவில் பதிவு செய்கின்றார். திருச்செங்கோட்டில் எப்படியொரு புதிய தியேட்டர் தொடங்கபடுகிறது என்பதிலிருந்து அதன் வீழ்ச்சி வரை அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள்/மனிதர்களோடு அழகாய் பெருமாள் முருகன் எழுதிச் செல்கிறார்.

இத்தியேட்டரின் உள்ளே தகப்பன்/தமையனோடு சோடா தயாரித்து விற்றவராக பெருமாள் முருகன் ஒருகாலத்தில் வேலை செய்திருந்திருக்கின்றார். அந்த அனுபவங்களை மட்டும் கூறாது தனக்கு இந்தத் தியேட்டர் என்ன கற்பித்தது, தான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என நீட்சித்து எழுதியிருப்பது இதைக் கவனிக்கத்தக்கதொரு நினைவுக்குறிப்பாய் ஆக்கியிருக்கின்றது.

'டாக்கீஸி'ல் இருந்து 'தியேட்டராக' மாறும்போது நவீன வசதிகளை கிராமத்து மக்கள் எவ்வாறு பழகிக்கொள்ளக் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலிருந்து, அருகிலிருக்கும் தியேட்டர்களுடன் ஏற்படும் முரண்களிலிருந்து, எந்தந்தப் படங்கள் அன்றைய காலத்து மக்களை வசீகரித்து நிறைய நாட்கள் ஓடியது என நாம் மறந்துபோன ஒரு காலத்தை நம் கண்முன்னே பெருமாள் முருகன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தியேட்டரினுள்ளே பார்வையாளர்கள்/முதலாளிகள் மட்டுமின்றி அதற்குள்ளே சிறுகடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களையும், அங்கே வேலை செய்யும் மனிதர்களையும் (முக்கியமாய் சிறுவயது பையன்கள்) பற்றியதொரு இன்னொரு உலகமும் இதற்குள் விரிகின்றது.

கெட்ட வார்த்தைகள் சாதாரணமாய்ப் புழங்கும், பிறர்க்குப் பட்டம் வைத்துக் கேலி செய்யும் பையன்களிடையே எப்படி 'எச்சி இலை பொறுக்கிறவன்' எனத் திட்டும்போது மட்டும் எவ்வளவு 'கெட்ட வார்த்தை'யாகவும், மிக மூர்க்கமாய் அவர்களைக் கோபம் செய்கின்றதாகவும அது அமைந்தது என்பதற்கான காரணங்களை அவ்வளவு எளிதில் கடந்து போகமுடியாது. அனேகமாய் இவ்வாறான சிறுகடைகளில் வேலைக்குச் சேரும் பையன்கள், ஒன்று பெற்றோரை இழந்தவர்களாகவோ அல்லது வீட்டை விட்டு ஓடி வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே அப்படி வரும்போது, அவர்கள் தொடக்க காலங்களில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் எச்சில் இலைகளிலிருக்கும் உணவையே உண்டு உயிர் பிழைத்திருப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான பையன்களுக்கு வேலை செய்யும்போது 'நீ எச்சியிலை பொறுக்கியவநதானே' என்கின்றபோது கடந்தகாலம் நினைவூட்டப்பட்டு அதை அவர்களால் தாங்கமுடியாது இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒரு வாத்தையால் திட்டப்பட்டதாலேயே வேலையௌ உதறித்தள்ளிவிட்டுப் போன பையன்களும் இதில் பதிவு செய்யப்படுகின்றார்கள்.

இதே தியேட்டரில் ஓரிரவு எவருமே இல்லாத அநாதையென வரும் பெண்ணை, அங்கே ஆபரேட்டராய் வேலை செய்யும் ஒருவர் அந்தக்கணத்திலே தீர்மானித்து திருமணஞ்செய்வதையும், சாதி தீவிரமாய்ப் பார்க்கும் அதே ஊரில் என்ன சாதியென அறியாமலே அவர்கள் -அவ்வாறு திருமணம் செய்து- மிக நன்றாக வாழ்ந்தார்களென வருகின்ற குறிப்புகள் நெகிழ்ச்சி தரக்கூடியவை.

புதுப்படங்களுக்கு விளம்பரம் பகலில் ஒட்டப் போகும்போது ஏற்படும் சுவாரசியம் ஒருபுறமென்றால், தியேட்டரின் -எந்தப் படத்தையும் பார்க்காத- முதலாளிக்குத் தெரியாமல் காலைக்காட்சிகளில் 'சாமிப்படம்' போடுவதுவரை பல விடயங்களை தியேட்டர் சூழல் சார்ந்து பெருமாள் முருகன் பதிவுசெய்கின்றார். காலவோட்டத்தில் எப்படி ஒருகாலத்தில் நவீன வசதிகளுடன் பிற தியேட்டர்களுக்கு சவால் விட்ட இநதத் தியேட்டர் எல்லாக் காட்சிகளுக்கும் 'பிட்டு'ப்படம் போட்டு ஓடவேண்டியிருந்த நிர்ப்பந்தத்தையும், பிறிதொருகாலத்தில் தியேட்டரினுள் இயங்கிய கடைகளெல்லாம் முற்றுமுழுதாக இல்லாமற்போகும் சோகத்தையும் இந்நினைவுக்குறிப்புக்களில் காணலாம்.

எட்டாண்டுகள் இந்தத் தியேட்டரோடு பின்னிப்பிணைந்திருந்த பெருமாள் முருகன், அவரின் தந்தையார் மற்றும் தியேட்டர் முதலாளியின் மரணங்களோடு அதன் அனுபவங்களில் இருந்து விலகிவிட்டவரெனினும், தியேட்ட்ரிற்குள் இயங்கிய உலகினுள் இருந்த மனிதர்களை தன் பயணங்கள் ஒவ்வொன்றின்போது -அவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா- என்கின்ற ஆசையோடு தேடிக்கொண்டிருக்கின்றார். வாழ்வு சிதறிப்போன ஒரு சிலரைப் பின்னர் சந்திக்கவும் செய்கின்றார். அந்த நினைவுகளையும் பதற்றங்களுடன் பதிவும் செய்கின்றார்.

தங்கள் தலைமுறையில் எவருமே படிக்காதபோது, படிக்க விரும்பிய தன்னை தன் தந்தை -அங்கே பகுதி நேரமாய் வேலைக்கு வந்த ஒரு ஆசிரியருக்கு இருந்த மதிப்பின் காரணமாக- தொடர்ந்து படிக்க வைத்தாரென பெருமாள் முருகன் எழுதுகின்றபோது தியேட்டர் எதையோ சிலருக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. தொடர் குடிகாரனாய்த் தன் தந்தை இருந்தாலும், தியேட்டரினுள் இருந்த கடையாலும், அங்கே சந்திக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களாலும் தன்னை ஏதோ ஒன்றுக்கு ஒப்புக்கொடுத்த தந்தையால், தியேட்டர் மூடப்பட்டதை தாங்கமுடியாது ஒருவருடத்திற்குள்ளேயே ஏதேதோ நினைவுகளாலும், குடியாலும் அலைக்கழிக்கப்பட்டு மரணமடைகின்றார் என்பதையும் துயரத்துடன் பதிவு செய்கின்றார்.

சாதி இறுக்கமாய் எல்லா விடயங்களில் இருக்கின்ற கிராமத்தில் பிறந்த தன்னால், அதை மீறி வரச்செய்வதற்கு இந்தத் தியேட்டரும், அங்கே பல்வேறு பையன்களோடு பழகிய அனுபவங்களும் மட்டுமே காரணமென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். இத்தோடு என்னை இன்னும் வசீகரித்த ஒரு விடயம் என்னவெனில், படிப்பறிவேயற்ற ஒரு தலைமுறையிலிருந்து முதன்முதலாக வெளியே வருகின்ற பெருமாள் முருகன் தனக்கான கல்வியைக் கற்று, எழுத்தில் தனக்கொரு இடத்தையும் இன்றையகாலத்தில் அடைந்திருக்கின்றார் என்பதல்லவா பெரும் பாய்ச்சல். இதைத்தான் இதை வாசித்தபின்னும் தொடர்ந்தும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். முன்னே மூர்க்கமாய் வளர்ந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்து எடுத்து வைக்கின்ற முதலடி என்பதே பெரும் நிகழ்வுதானன்றோ.

'நிழல் முற்றத்தை' பல வருடங்களுக்கு முன்னர் வாசித்திருத்தேன். அந்நாவல் பிடித்திருந்ததால், பின்னர் வ.கீதா அதை ஆங்கிலத்தில் 'Current Show' என மொழிபெயர்த்திருந்ததையும் வாங்கியிருந்தேன். எனவே 'நிழல் முற்றத்து நினைவுகளை' வாசித்தபோது அந்தப் புதினத்தை மீறி இதிலென்ன கூறப்பட்டிருக்குமென அசுவாராசியத்துடனேயே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் பக்கங்கள் விரிய விரிய எனக்குத் தெரியாத காலத்திற்குள் சென்று அங்கே அந்தப் பொழுதில் வாழ்ந்த மனிதர்களோடு பழகியது போன்ற வாசிப்பனுபவம் வாய்த்திருந்தது. 'நிழல் முற்றம்' நாவலை வாசிக்காதவர்கள், வாசித்தவர்களென எவரும் தயக்கமின்றி இதை வாசித்துப் பார்க்கலாம்; புதிய விடயங்களுள்ள சுவாரசியமான நினைவுக்குறிப்பு.

சொற்கள் (The Words)

Tuesday, March 25, 2014

ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை எழுதுவதை விட, அதைப் பிரசுரிக்க இன்னும் எவ்வளவோ கஷ்டப்படவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சூழலில் பதிப்பாளர்களைத் தேடுவது ஒருவிதமானதென்றால், ஆங்கிலச் சூழலில் அது வேறு வகையானது. பதிப்பாளர்களை மட்டுமில்லை, அந்தப் படைப்பிற்கான எடிட்டர், இடையிலான ஊடாடட்டங்களுக்கு ஏஜண்ட் என நிறையப் பேரைக் கொண்ட சிக்கலான உலகுதான் இது. ஆக, ஒருவர் நல்லதொரு படைப்பை எழுதிவிட்டால் கூட, உரிய பதிப்பகம் கிடைக்காதுவிடின் அப்படியே தன் படைப்பைக் கிடப்பில் போட்டு விடவேண்டியதுதான்.
'சொற்கள்' என்ற இந்தப் படம் எழுதுவதையே தன் விருப்பாகவும் தொழிலாகவும் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பின் தொடர்ந்து செல்கின்றது. நல்லதொரு நாவலை எழுதியிருந்தாலும், வித்தியாசமான எழுத்து நடையில் இருக்கிறது எனச் சில பதிப்பாளர்கள் கூறினாலும் அந்நாவலை வெளியிடத் தயக்கங் காட்டுகின்றார்கள். நாவலைப் பதிப்பிக்காமல் உரிய வருமானம் கிடைக்காது என்பதால் இந்த எழுத்தாளன் தன் தந்தையிடம் உதவி பெறுகிறார். அதேசமயம் இப்படியே நீ எழுத்தை நம்பி இனியுமிருக்கமுடியாது ஏதாவது வேலையைத் தேடு, இனி தன் உதவி கிடைக்காதென இறுதி எச்சரிக்கையும் தகப்பனால் கொடுக்கப்படுகின்றது.

துணை மட்டும் இந்த எழுத்தாளரைப் புரிந்துகொள்கின்றார். நாவலைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஒவ்வொருமுறையும் தோல்வியடையும்போது அவரை அரவணைத்து நம்பிக்கை கொடுக்கின்றார். இவ்வாறான ஒரு காலகட்டத்தில் பாரிஸில் ஒருகாலத்தில் antique கடையில் வாங்கிய பிரீவ்கேஸில் யாராலோ எழுதப்பட்ட ஒரு நாவலில் கையெழுத்துப் பிரதியை இந்த எழுத்தாளர் கண்டுபிடிக்கிறார். அது 2ம் உலகமகாயுத்தத்தில் சிக்குப்பட்ட ஒரு காதல் சோடியின் கதை. அதை வாசித்துவிட்டு அதன் பாதிப்பில் தனது புதிய நாவலைத் தட்டச்சு செய்ய முற்ப்படுகின்ற இந்த எழுத்தாளர், அந்த நாவல் கதைக்களனின் ஈர்ப்பில் அதை அப்படியே வரிக்கு வரிக்கு தட்டச்சு செய்கின்றார்.

தற்செயலாய் தட்டெழுத்துச் செய்யப்பட்ட இந்த நாவலை அவரது துணை வாசித்து, இந்த நாவலை இந்த எழுத்தாளரே எழுதினார் என நம்பி, அதைப் பதிப்பகத்திற்குக் கொடுக்க  உற்சாகப்படுத்துகின்றார். நடந்த உண்மையைச் சொல்ல, எழுத்தாளர் தன் துணைக்கு முயன்றாலும் -தான் எழுதிய முதல் நாவல் வெளிவராத சோர்வில் இந்த நாவலை எழுதவில்லை என்பதை எல்லோரிடமிருந்து மறைத்து-ஒருகட்டத்தில் இந்நாவலைப் பதிப்பாளரிடம் எடுத்துச் சென்று பதிப்பிகின்றார். இதன் பின் என்ன நிகழ்கின்றது என்பதே இத்திரைப்படம். ஒருவகையில் பெரும் புகழ் கொடுக்கும் இந்நாவலை, எப்படி தான் எழுதாத நாவல் என்ற குற்றவுணர்ச்சியுடன் எதிர்கொள்வதென்ற சிக்கலை இப்படம் அழகாய் முன்வைக்கின்றது. இதைவிட அந்த கையெழுத்துப் பிரதி எழுதியவரே உயிருடன் இருந்து இந்தப் படைப்பாளியைச் சந்தித்தால் எப்படியிருக்கும்?

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த நாவலுக்குள் இன்னொரு நாவலென மூன்று தளங்களில் இத்திரைப்படம் மிகுந்த சுவாரசியத்துடன் விரிகிறது. 'சொற்கள்' என்பது உண்மையிலே புகழ்ச்சியிற்குரியதா அல்லது சாபமா என ஒவ்வொரு பொழுதுகளிலும் நினைவுபடுத்தியபடி இருக்கிறது. இதுவரை அவ்வளவு ஈர்க்காத Bradley Cooper கூட இவ்வளவு அருமையாக நடிக்க முடியுமா என நினைக்க வைத்த ஒரு திரைப்படம். இறுதியில் இது fictionனா அல்லது auto-fictionனா என ஓர் இளம் பெண் வந்து உடைத்துப் போடுகின்ற இடத்தில் படம் முடிவது கூட சுவாரசியமானதுதான்.

எல்லாவற்றுக்கும் அப்பால் எதுவும் இருக்கலாம்...

Friday, March 21, 2014

மூன்று திரைப்படங்கள்-

It's a Diaster

நான்கு இணைகள் அடிக்கடி வாரவிறுதிகளில் சந்தித்துக்கொள்கின்றார்கள். அவ்வாறு சந்திக்கும் வாரவிறுதியில் ஒரு நண்பர் தனது புதிய இணையை அறிமுகப்படுத்த அழைத்துவருகின்றார்.  சாதாரணமாய் உரையாடல்களில் தொடங்கி, விருந்துடன் முடியும் சந்திப்புக்களில், இமமுறை திருமணமான ஒரு இணை தாங்கள் பிரிவதற்கான செய்தியை விருந்திற்குப் பிறகு கூறுவதற்குக் காத்திருக்கின்றனர். இடையில் அந்த வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியும், இணையமும் ஒழுங்காய் இயங்காது போகின்றது.

பிரியவிருக்கும் இணையின் ஆண், தன் துணைவிதான -வேண்டுமென்று- பில் கட்டாமல் இருக்கின்றார் எனக் குற்றஞ்சாட்டுகின்றார். இதனால் துரதிஷ்டவசமாய் விருந்திற்குப் பிறகு கூற விரும்பிய 'பிரியும் செய்தி' முன்னரே மற்ற நண்பர்களுக்குள் பரவிவிடுகின்றது.  மகிழ்ச்சியாய் ஒரு விருந்தை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு பிரிய நினைத்த திட்டம் இப்படி ஆயிற்றே எனக் கோபத்தில் அந்தப் பெண் துணை வீட்டை விட்டு வெளியேறுகின்றார். அதேசமயம், அயல்வீட்டுக்காரர் உடம்பு முழுக்க பாதுகாப்பான ஆடைகளால் மூடி, அமெரிக்காவின் ப்ல்வேறு நகர்களில் இரசாயனத்தாக்குதல் நடக்கின்றது. ஒருவரும் வீட்டை விட்டு வெளியே போகவேண்டாம் என்று எச்சரிக்கின்றார்.

இப்போது சூழ்நிலை மாறுகின்றது. நான்கு இணைகளும், வீட்டின் கதவுகளை விஷக்காற்று புகமுடியாதவாறு டேப்பால் ஒட்டிவிட்டு உள்ளே இருந்துகொண்டு அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றனர். தங்களால் இந்த இரசாயனத்தாக்குதலில் இருந்து தப்பமுடியுமா என்ற அச்சத்திடையே தமக்கிடையிருக்கும் உறவுகள் பற்றி இதுதான் கடைசித்தருணம் போல உரையாடத் தொடங்குகின்றனர். பிரிய நினைத்த இணை பழைய நினைவுகளில் தம்மைத் தோய்த்து மீண்டும் ஒன்றாகச் சேவதற்கான சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்குகின்றனர். பிரிவதற்கான எந்த த்டயததையும் கொண்டிராத -விரைவில் திருமணம் செய்யவிருக்கும்- இன்னொரு இணை எதிர்பார்க்காமல் பிரிந்துபோகின்றனர். தமது துணைகளை நேசித்துக்கொண்டு, பிற நண்பர்களோடும் உறவு கொண்ட சில இணைகளின் புதையுண்ட உண்மைகளும் வெளியில் மிதக்கத் தொடங்குகின்றன. இவ்வாறாக நினைத்துப் பார்க்காத காட்சிகளும்,பதற்றங்களும் இந்த இணைகளுக்கிடையில் மாறி மாறி வரத்தொடங்குகின்றன.

இறுதியில் எப்படியோ வெளியே நடக்கும் இரசாயனத்தாக்குதலில் இறக்கத்தான் போகின்றோம் என்று இந்த இணைகள் முடிவெடுத்துக் கொள்கின்றனர். இப்போது அவர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று இரசாயனத்தாக்குதல் தங்கள் வீட்டை நெருங்கும்வரை காத்திருந்து, இறப்பது. ஆனால் அது மிகவும் கொடூரமாய் இருக்கும். எனெனில் இரசாயனம் உடலோடு கலந்து உடலுறுப்புக்களை ஒவ்வொன்றாக செயலிழக்கச்செய்துதான் இறுதியில் இறப்பு நிகழுமென அந்த இணைகளில் இரசாயனம் கற்பிக்கும் ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். இன்னொரு தெரிவு, வீட்டில் இருக்கும் பல்வேறு வகையான  மாத்திரைகளை வைனோடு கலந்து உடனேயே வலியின்றி இறந்துபோவது. இதில் இரண்டாவது தெரிவை கிறிஸ்தவத்தோடு நெருங்கிய தொடர்புடையவர் முன்வைக்கிறார். இதில் எந்தத் தெரிவை இந்த இணைகள் எடுக்கின்றார்கள் என்பதுதான் சுவாரசியமானது.

இப்படத்தில் வீட்டுக்கு  வெளியில் நடக்கும் ஒன்றையும் காட்டாது -இரசாயனத்தாக்குதலைக் கூட- அந்தப் பதற்றத்தையும், அவ்வாறு நடந்திருக்கக்கூடிய சாத்தியங்களையும் சில காட்சிகளால் மட்டும் காட்சிப்படுத்தியபடி, முற்றுமுழுதாக வீட்டுக்குள் நடப்பவற்றையே திரைப்படமாக்கியிருப்பார்கள். சாதாரணமாய்ப் பார்த்தால், கதையென்று ஒன்றுமில்லாத, இப்படி நிகழவே சாத்தியமில்லாத ஒரு திரைப்படம் போலிருக்கும், ஆனால் வலுவான திரைக்கதையால் அலுப்பின்றி நகர்த்திக்கொண்டே சென்றிருப்பார்கள். உலகின் கடைசிக்கணம் இப்படித்தான் இருக்கப்போகின்றது என்றால் நாமெல்லோரும் என்ன செய்வோம்  என்று ஒருகணமாவது பார்ப்பவரை ஆழ யோசிக்க வைக்கின்றார்கள். ஆனால் வாழ்க்கை திட்டமிட்ட பாதையில் செல்வதோ அல்லது விரும்பியபடி விடயங்கள் நிகழ்வதில்லை என்பதைத்தான்  ஏற்கன்னவே திட்டமிட்டு பிரிய நினைத்த தம்பதிகள் மீண்டும் இணைவதையும், திருமணஞ்செய்யக் காத்திருக்கும் இன்னொரு இணை திடீரென்று பிரிவதையும் காட்சிப்படுத்தினார்களோ தெரியவில்லை. இப்படம் நெருக்கமானதற்கு -எவ்வித எதிர்பார்ப்புமில்லாது- கதை எதுவென்று தற்செயலாய் பார்க்கத் தொடங்கியதும் ஒரு காரணமோ இருந்திருக்குமோ தெரியாது.

As luck would have it

 வேலையில்லாவிட்டாலும் கணவனை/தகப்பனை நேசிக்கும் குடும்பம். மனைவியுடனான காதலை மீளக்கண்டுபிடிக்கச் செல்லும் இடத்தில் விபத்து. 18 வருடமாய் ஒழுங்காய் வீட்டுக்கடனைக் கட்டினாலும் வேலை இல்லாததால் 2 மாதம் கட்டத்தவறியவுடனேயே கள்ளனைப் போல நடத்தும் வங்கி. அனைவரின் மீதான கோபத்தில் விபத்தை வைத்து விளம்பரம் செய்ய முயல்தல். ஊடகங்கள் -சிலியில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளிகளைப் போல- இங்கேயும் நடந்த விபத்தைச் சுரண்ட அவசரப்படுதல். ஆனால் இங்கே விபத்து நடந்தவர் இறந்தால்தான் 200 மில்லியன் யூரோ என்கின்றது ஊடகம்.

 இறுதியில் என்ன நடக்கிறது... பின் தலையில் குத்திய இரும்புக்கோலுடன் படுத்திருக்கும் மனிதரோடோ முழுப்படம் நகர்ந்தாலும், மனித உறவுக்களுக்கிடையிலான அழகான மெல்லிய தருணங்களையும்,  பணத்தை மீறிய மனிதாபிமானத்தை நோக்கியும் கவனத்தைக் குவிப்பதால் பார்க்கலாம்.  இவ்வளவு நீளத்துக்குப் படத்தை இழுத்திருக்கத் தேவையில்லை. எனினும் எப்போதும் கவர்ந்திழுக்கும் Salma Hayekற்காகவும், தற்செயலாய்க் கண்டுபிடித்த Carolina Bangற்காகவும் படத்தின் நீளத்தைக் கூட சற்று மன்னித்துவிடலாம்.

Eat Pray Love

உறவுகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கதகதப்பானவையோ அந்தளவுக்கு சிக்கலானவையும் கூட. மேலும் ஒவ்வொருவரும் தத்தம் துணைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே விசித்திரமான பாதையைப் போன்றதுதான். தந்தையையோ, தாயையோ தேர்ந்தெடுக்கும் தெரிவுகள் நமக்கிருப்பதில்லை. ஆனால் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது நமதே நமக்கான தெரிவாக இருக்கின்றது. அந்த ஒரு தெரிவுக்கே வாழ்வில் எத்தனை கஷ்டப்படவேண்டியிருக்கின்றது. சிலவேளைகளில் த்ம் வாழ்க்கைக் காலம் முழுதையுமே சிலர் தொலைத்துமிருக்கின்றார்கள்.

இவ்வாறாகத் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தத் துணையோடு தொடர்ந்து வாழமுடியாத ஒரு வெறுமை ஏற்படுகின்றது. திருமண உறவை முறித்துவிட்டு இன்னொரு ஆடவனோடு ஒரே வீட்டில் வாழத்தொடங்கினாலும் அங்கும் வாழ்வில் எதுவோ ஒன்று இல்லாதது போலத் தோன்றுகின்றது. ஆகவே அவரையும் கைவிட்டு ஒரு நெடும்பயணத்தை இத்தாலி - இந்தியா- பாலி என ஆரம்பிக்கின்றார்.  இத்ற்கு சில வருடங்களுக்கு முன் பாலிக்குச் சென்றபோது அங்கேயிருக்கும் முதியவர் ஒருவர் இப்பெண்ணின் கையைப் பார்த்து, நீ உன் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சக்காலத்தில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மீண்டும் பாலிக்கு வருவாய் என்பதும் இவருக்கு நினைவுக்கு வருகின்றது.

 பல்வேறு வகையான உணவுகளுக்கு பிரபல்யம் வாய்ந்த ரோமின் வீதிகளில் மீண்டும் தனக்கான ருசியைக் கண்டுபிடிக்கின்றார். இதுவரை அமெரிக்காவில் எல்லாவற்றையும் - உடல் எடை கூடிவிடும்- எனறு கவனமான டயட்டில் இருந்ததையெல்லாம் துறந்துவிட்டு தனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகின்றார். ஒரு இத்தாலியர் 'அமெரிக்கரான உங்களுக்கு வாழ்வில் என்ன எல்லாம் வேண்டும் என நன்கு தெரியும், ஆனால் அவற்றை அனுபவிக்கத்தான் தெரியாது. நாங்கள் அவ்வாறானவர்கள் அல்ல, வாழ்வை அனுபவித்து இரசிப்பவர்கள்' என்கிறார். இறுதியில் புதிதாய் இத்தாலியில் கிடைத்த நண்பர்களுக்கு அமெரிக்க வகையில் Thanks Giving Dinner Turkey செய்துகொடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்று இந்தியாவிற்குப் பயணமாகின்றார்.

இந்தியாவில் ஒரு சுவாமிஜியின் ஆச்சிரமத்திற்குச் செல்வதே இவரது இலக்கு. இந்தச் சாமியாரை, அமெரிக்காவிலிருக்கும் அவரின் ஆண் நண்பரே அறிமுகஞ்செய்து வைத்திருக்கின்றார். மனதுக்கு நிம்மதி நிச்சயம் கிடைக்கும் என ஆச்சிரமத்திற்குப் போகின்றவர் அங்கே சாமியார் அமெரிக்காவிற்குப் போய்விட்டார் என்ற முதல செய்திலேயே ஏமாற்றத்தை அடைகிறார். மேலும் அவரால் அந்த ஆச்சிரமத்தின் சூழலுக்கு எளிதாய்த் த்கவ்மைக்கவும் முடியாதிருக்கிறது, அமெரிக்காவில் அவருக்கு நெருக்கமான இரு ஆடவரின் நினைவுகளும் அடிக்கடி வந்து குறுக்கிடுகின்றன. இறுதியில் இன்னொரு நண்பரின் உதவியுடன் மனதிலிருக்கும் துயரங்களையும், பாவங்களையும் இறக்குகின்றார். இப்போது எல்லாப் பழைய நினைவுகளையும் உதிர்ந்துவிட்ட தெளிவுடன் பாலிக்குச் செல்லும் அவர், ஏற்கனவே இவரின் எதிர்காலத்தைக் கணித்த முதியவரைச் சந்திக்கின்றார். அவர் இந்தியாவில் கற்ற தியானத்தை தினமும் காலையில் செய்யச் சொல்கிறார். வாழ்க்கையின் வெற்றிடம் மெல்ல மெல்லமாய் நிரப்பப்படுகிறது. எதிர்காலம் எதை தன் கரங்களில் வைத்திருக்கின்றது என்று தெரியாவிட்டாலும் இப்பெண் தனக்குரிய கணங்களில் வாழத்தொடங்குகின்றார். வெளியில் மட்டுமில்லை மனதிற்குள்ளும் அழகிய வர்ணங்கள் பரவததொடங்குவதுடன் படம் நிறைவுறுகிறது.

இந்தப் படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்தபோது, ஓஷோ முன்வைத்த Loneliness மற்றும் Aloneness குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.  Alonenessஐ நேர்மறையாகவும், Alonenesஐ எதிர்மறையான சக்தியாகவும்  ஓஷோ பார்ப்பது நினைவில் வந்தது. இன்று உலகில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தனிமையில் உழன்று தம்மைத் தொலைத்துக்கொண்டிருகின்றார்கள். ஒரே வீட்டில் ஒரே வெளியைப் பகிர்ந்துகொள்ளும் இணைகளில் கூட இந்த loneliness ஒரு துயரைப் போல படிந்திருக்கிறதென ஓஷோ குறிப்பிடுகின்றார். அதேவேளை alonenessஐ தன்னையொருவர் அறிவதற்கான, புதிய செயல்களை நிகழ்த்திக்காட்டுவதற்கான நேர்மறையான விடயமாய்ப் பார்க்கின்றார். அதுவும் முக்கிய்யமாய் காதலர்க்கிடையில் இருக்கும் -தனித்து இருத்தல்- என்பது அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை இன்னும் ஆழமாக்குவதாகவும், அவ்வாறு தனித்திருந்துவிட்டு சந்திக்கையில் அந்த உறவு இன்னொரு பரிமாணத்தை அடையவும் கூடுமெனக் கூறும் ஓஷோ, அவ்வாறு  நீண்டகாலம் தனித்து இருந்தவர்களே புத்தர் உள்ளிட்ட பல போதிசத்துவர்கள் என்கிறார்.

இந்த இடத்திலேயே ஓஷோ, சார்த்தரின் மிகவும் சர்ச்சிக்கப்பட்ட  'Other is hell' என்ற விளக்கத்தை எடுத்துக்கொள்கிறார்.  ஒருவர் தன்னை, த்ன் அகமனதை நேசிக்காமல்/கண்டுபிடிக்காமல்,  மற்றவரை/மற்றதை நேசித்தல் சாத்தியமில்லை. ஆகவே 'மற்றது' என்பது அப்படி தன்னை நேசிக்காத் ஒருவருக்கு நரகமாகவே இருக்குமென ஓஷோ தான் இதில் கண்டுபிடித்த விளக்கத்தை அளிக்கிறார். அதேவேளை சார்த்தரில் விளக்கம் வேறுமாதிரியாக இருந்ததாலேயே அவர் பிற்காலத்தில் இவ்வாறு கூறியதற்காய் வருத்தப்பட்டு அதை மாற்றவும் விரும்பினார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

Eat, Pray, Love என்கின்ற இப்படம் முதலில் நாவலாக எழுதப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஒருவர் தன் அகமனதை மெல்ல மெல்லமாகப் பார்க்கத் தொடங்குகின்றபோது தனக்கான ஆனந்த்தை அடைந்துகொள்ளத் தொடங்குகின்றார். ஆனால் நாளாந்த வாழ்க்கையில் எல்லாமே எங்களை துரிதப்படுத்திக்கொண்டு இயந்திரமாக்கும் சூழலிலும், நாம் கடந்தகாலததின் சுவடுகளை காவிக்கொண்டும் வருகின்றபோதும் இவ்வாறு எமக்கான வெளியைக் கண்டடைதல் என்பது அவ்வளவு எளிதானதுமல்ல. நம்மை நாமே அறிதல் என்பதோ, நம் சுயத்தில் நம்பிக்கை வைப்பது என்பதோ சுயநலமாய் இருப்பது என்ற அர்த்தமல்ல. நம்மை நாமே அறியத்தொடங்குகையில் பிறரையும் நேசிக்கத்தொடங்கும் இன்னொரு உயிர்ப்பான விடயமும் நிகழத்தொடங்குகிறது. அதுவேதான் அனைவருக்கும் அவசியமானதும், முக்கியமானதுமான விடயமாகும். இன்றைய உலகில் எல்லாமே பண்டமாகவும், நுகர்வாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் Eat Pray Love  நம்மை நாமே அறிவதற்கு வயதோ, சூழலோ, வசதியோ அவ்வளவு முக்கியமில்லை என்பதை முன்வைப்பதே என்னளவில் முக்கியமானதாயிருக்கிறது.

(September 12, 2013 at 11:54am)

நெடுஞ்சாலை (Highway)

Wednesday, March 12, 2014

யணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.

இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு காரில் புறப்படுகின்றார். அந்தச் சிறு பயணம் எப்படி -தற்செயலான பல்வேறு நிகழ்வுகளால்- நெடும் பயணமாக மாறுகின்றதென்பதே இத் திரைப்படம்.

பயணிப்பது என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை. பயணிப்பவர்கள் எல்லோரும், புதிய தேடல்களுக்காய்த்தான் தம் பயணங்களைத் தொடங்குகின்றார்கள் என்பதுமில்லை. மேலும் ஊரடங்குச் சட்டங்களும், கொலைகளும் நிகழ்ந்த போர் நிகழ்ந்த தேசத்தில் வாழ்ந்து பழகிய என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு நாளின் இரவில் பயமின்றித் திரிவது என்பதே எத்தகைய வீரதீரப் 'பயணம்' என்பதை அறிவோம். பிற்காலத்தில் அடையாள அட்டைகளை உடலின் ஓர் அங்கமாய் திணிக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு நினைத்த இடத்திற்கு விரும்பிய நேரத்தில் பயணிப்பதென்பது பெருங்கனவாகவே ஒருகாலத்தில் இருந்துமிருக்கின்றது.

ஆண்களுக்கே இப்படியென்றால், பெண்கள் பயணிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. போர்ச் சூழலில் இருந்த பெண்களுக்கு மட்டுமில்லை, சனநாயக நாடுகள் எனக் கூறப்படுகின்ற நாடுகளில் வாழ்கின்ற பெண்களுக்கும் பயணிப்பதென்பதே பெரும் சவாலான விடயம். ஒருநாளின் இரவில் கூட நிம்மதியாக நடமாட முடியாததையல்லவா நேற்றைய உமாமகேஸ்வரியிலிருந்து இன்னும் பலர் நமக்கு மிகுந்த துயரத்துடன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

'ஹவே'யில் மிகுந்த வசதிகளுடன் வளர்ந்த வீரா, அதற்கு எதிர்முனையில் வாழ்பவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் பயணிக்கின்றார். ஒரு கடத்தல் எப்படி நெகிழ்வான சம்பவங்களால் மறக்கமுடியாத பயணமாக மாறுகின்றது என்பதையும், துவித முனைகளில் இருந்தவர்கள் எவ்வாறு மற்றவர்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் -அதீத சென்டிமென்டல்கள்- இல்லாது 'ஹவே' நமக்குள் பதிவு செய்துவிட்டுச்செல்கின்றது.

இந்தப் பயணம் இறுக்கமான மனதுடைய ஒருவரை மனம் நிறைந்து சிரிக்க வைக்கிறது. உள்ளே அடக்கி வைத்து துயரை வெளியே பகிரச் செய்கிறது. இறுதியில் எல்லாவற்றையும் மறந்து காதல் கொள்ளக் கூட வைக்கிறது. உயர்தரவர்க்கத்தில் இருப்பவர்களில் கூட மனம் நெகிழக்கூடியவர்களும், நேசிக்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதை அவருக்கு -ஒரு பெண்ணின் அருகாமை- உணர்த்தியும் விடுகிறது.

தே பயணம், இதுவரை பிறர் முன்னால் பணிவாக நடக்கவும், மென்மையாகக் கதைக்கவும் பழகிய இன்னொருவரை, எது குறித்தும் அச்சப்படாது பேச வைக்கிறது. குடும்பத்திற்குள் நடந்த ஒரு விடயத்தை -அந்நியர்கள் என்ற உணர்வேயில்லாது- அவர்கள் முன்னிலையில்- அது குறித்துப் பகிரவும் வைக்கிறது.

பயணங்களின் புதிய சூழல் நம்மை வேறொரு மனிதராக மாற்றிவிடுகின்றது. அவ்வணணமே நாம் இதுவரை பேசாத விடயங்களையெல்லாம் நீரூற்றுக்கள் போல தன்னியல்பில் பொங்கச் செய்தும்விடுகின்றன. அவ்வாறான பாத்திரங்களாய் இத்திரைப்படத்தில் வீராவும், மஹாவீரும் இருக்கின்றார்கள்.


இந்தியாவின் நிலப்பரப்பை - அதீத வர்ணக்கலப்புகளின்றி- இவ்வளவு இயல்பாய் வேறெந்த இந்திப்படங்களிலாவது காட்சிப்படுத்தியிருப்பார்களோ என்றளவிற்கு ஒளிப்பதிவு இருக்கின்றது. இயல்பென்பது அதன் இயற்கையை, வறுமையை, புழுதியெழும் வீதிகளை காட்சிப்படுத்துவதிலிருந்து, அந்தந்த நிலப்பரப்பு மக்களை எந்த சினிமா ஜிகினாத்தனமுமில்லாது- காட்டுவதுவரை... எனக் குறிப்பிட விழைகிறேன். ரஹ்மான் தான் இசைதான் என்றாலும், அநேக இடங்களில் 'மெளனத்தின் இடைவெளி' விடப்பட்டிருப்பதும், இயற்கையோடு பின்னணி இசை வருவதும் பிடித்தமாயிருக்கிறது. ரஹ்மானின் இசையில் வரும் தாலாட்டுப் பாடடு ஒருபக்கம் மனதை நெகிழ வைக்கிறதென்றால், இன்னொரு ஹிப்-ஹாப் பாடலிற்கு வீராவும், அவர் ஆடுவதைப் பார்த்து இன்னொருவரும் போடும் ஆட்டம் நம்மை உற்சாகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சொல்பவை.

வளவளவெனக் கதைப்பதிலிருந்து, முரட்டுத்தனமாய் இருப்பவரையே பேசி பேசி ஓட விரட்டுவதிலிருந்து, இறுதியில் தன் குடும்பத்தினர்/உறவினர் முன் இதுவரை மனதில் ஒளித்து வைத்த் உண்மைகளைப் போட்டு உடைப்பதிலிருந்து அற்புதமான நடிகையாக வீராவாக நடித்த அலியா பட் பரிணாமிக்கிறார்.

துயரமான நினைவாய் இப்படத்தின் முடிவு பார்ப்பவரிடையே தங்கிவிடக்கூடாது என்பதற்காய், இறுதியில் வரும் சிறு காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் நம்பிக்கைகளிலிருந்து முகிழ்வதும்தானே வாழ்க்கை.

மேலும், ஒரு பயணம் ஒரு புதிய அத்தியாயத்தை ஒரு பெண்ணின் வாழ்வில் தொடக்கி வைத்திருக்கிறது என்பதற்காகவும், எவரின் துணையுமின்றி தனித்து எதையும் அப்பெண்ணால் செய்ய முடியுமென்பதற்காகவும் -அந்த முடிவையும்- நாம் வரவேற்போம்.

கெளரி

Saturday, February 15, 2014

 -இளங்கோ


'ரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது.

அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது.  திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான  Half Saree அணிந்த பெண்,   'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது.

ன்று பாடசாலை வலயமட்டத்தில் நடக்கும் தமிழ்த்தினப் போட்டிகள் இவனது பாடசாலையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. பல்வேறு பாடசாலையைச் சார்ந்தவர்கள் அங்கு வந்து குழுமியிருந்தார்கள். இது தாங்கள் படிக்கும் பாடசாலை என்ற இறுமாப்போடு,  மற்றப் பாடசாலை மாணவிகளின் பின்னால்,  இவனும் இவனது நண்பர்களும் சுழற்றிக் கொண்டு திரிந்தார்கள். என்னதான் ஹீரோத்தனம் காட்டினாலும், நாளை இவர்கள் தங்களிடம் வந்துதானே சேரவேண்டும் என்கின்ற எகத்தாளப் பார்வையோடு இவனது பாடசாலை மாணவிகள் இவர்களின் அலட்டல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கெளரி நன்றாக நடனம் ஆடக்கூடியவள்.  கெளரிக்கு இவன் மீது ஈர்ப்பிருந்ததோ தெரியாது, ஆனால் இவனுக்குக் கெளரி மீது விருப்பிருந்தது. அன்று நடந்த நிகழ்வில் எல்லாப் பாடசாலைகளையும் விஞ்சி நடனத்தில் முதலாவதாய் வந்திருந்தாள். இவனது நண்பர்கள் இதற்கு ட்ரீட் தரச்சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இது போதாதென்று இன்னும் கொஞ்சப் பொம்பிளைப் பிள்ளைகள், 'என்ன உம்மடை ஆள் வென்றிருக்கு, எங்களுக்கு ஒன்றுமே இல்லையா?' என்று கேட்டும் உசுப்பினார்கள்.  தன் காதலை இவ்வுலகிற்கு தெரிவிக்க இதைவிட அரிய தருணம் வராது என்று அறிந்திருந்தாலும், இவனின் கையில் இருந்த காசு நான்கைந்து பேருக்கே கன்ரீனில் தேநீரும் வடையும் வாங்கிக்கொடுக்கத்தான் போதுமாயிருந்தது. ஆகக்குறைந்தது இருபது பேருக்கு வாங்கிக் கொடுத்தால்தான் ஒரு காதல் மகத்தான் காதலாக மாறும். அப்போதுதான் இவனோடு படிக்கும் நண்பனொருவன் நினைவுக்கு வந்தான். அவனது தாயும் தகப்பனும் ஆசிரியர்கள். தகப்பன் இவர்கள் படித்துக்கொண்டிருந்த பாடசாலையிலேயே கணிதம் படிப்பித்துக்கொண்டிருந்தார்.

அவனிடம் போய், 'நாளைக்கு என்னுடையதும் கெளரியினதும் காதல் வெற்றிபெற்று எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தால் உன்னுடைய பெயரையே வைக்கின்றேன். ஆனால் நீ இப்ப நான் ட்ரீட் கொடுக்க கொஞ்சக் காசை உன் அப்பாவிடம் வாங்கித்தா' எனக் கெஞ்சினான்.  'ஏற்கனவே உன்னோடு திரிந்தே என் பெயர் நாறடிச்சுப் போச்சுது, இதற்குள் உன்ரை பிள்ளைக்கும் என் பெயரை வைச்சு ஏன்டா என்னை சித்திரவதை செய்யப்போகிறாய். நான் காசு அப்பரிட்டை வாங்கித் தாறன், ஆனால் உந்த பெயர் வைக்கின்ற விசர் வேலையை மட்டும் செய்திடாதே' என அவன் எச்சரித்தான்.

எல்லா நண்பர்களையும் கன்ரீனுக்கு அழைத்துச் சென்று கெளரியின் பெயரால் ஒரு விருந்து வைத்தான். கெளரியும் வந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இவனுக்கு வரவில்லை. இப்படி இவன் செய்து கொண்டிருப்பது அவளுக்குப் பிடிக்காவிட்டால் பிறகு தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதால் அவளை ஏறெடுத்துப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டான். அந்த நேரத்தில் அங்கே வந்த உயர்தரம் படிப்பவர்கள், எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று கேட்க,  'யாரால், யாருக்கு, எந்தச் சந்தர்ப்பத்தில்...' என தமிழ் இலக்கிய வகுப்பில் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் சொல்வதுமாதிரி யாரோ காரணத்தைச் சொல்லியிருக்கின்றார்கள். 'பாரடா நாங்கள் இந்த வயதில் கூட ஒரு பெட்டையைப் பிடிக்க முடியவில்லை. இவங்களுக்கு பதினாறு வயதிலே காதல் வேண்டிக் கிடக்கிறது' எனச் சலித்துக்கொண்டு அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கியிருந்தார்கள்.

விருந்து முடிந்து எல்லோரும் விடைபெற்ற போது 'உன்னோடு கொஞ்சம் கதைக்க வேணும், கொத்தனாவத்தைக் கிணற்றடி ஒழுங்கையில் வந்து சந்தி' எனக் கெளரி யாருக்கும் தெரியாமல் சொல்லிவிட்டு நகர்ந்தாள். எத்தனையோ இடங்களிருக்க இவளேன் ஒரு கிணற்றடியில் வந்து தன்னைச் சந்திக்கச் சொல்கிறாள என இவனுக்குக் கொஞ்சம் பதற்றம் வரத் தொடங்கியது. கிணற்றடியில் வைத்து எல்லாவற்றுக்கும் சமாதி கட்டப்போகிறாளாக்குமென நினைத்தபடி 'ஹீரோ' சைக்கிளை உழக்கத் தொடங்கினான்

கெளரி தன் லுமாலா லேடீஸ் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அருகிலிருந்த் பலாமரத்தின் இலைகள் காற்றில் அசைந்து அசைந்து கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  நடனம் ஆடியதாலோ அல்லது சைக்கிள் உழக்கியதாலோ தெரியவில்லை, அவளது underskirt ஐ மீறி முதுகு வேர்த்திருப்பது நன்கு தெரிந்தது. விரல்களில் பூசியிருந்த வர்ணப்பூச்சும், கால்களில் நடனத்திற்காய் அணிந்திருந்த கொலுசும், இன்னமும் முழுமையாய் அகற்றப்படாத முகத்து ஒப்பனையும் இவன் இதுவரை பார்த்திராத புதிய கெளரியைக் காட்டிக்கொண்டிருந்தது.

இவன் வந்ததைக் கண்டதுமே  'நீ இப்படியெல்லாம் செய்வது சரியா?' எனக் கேட்டாள்.

சைக்கிளில் இருந்தபடி நிலத்தில் ஊன்றிய தன் காலைப் பார்ப்பதுபோல இவன் தலையைக் குனிந்தான்.

'எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டினால் காதல் வந்துவிடும் என்று நினைக்கிறியா?' மேலும் அவள் தொடர்ந்தாள்

இந்த ஒழுங்கைக்குள் இவள் வரச்சொன்னது தன்னை உருட்டிப் பிரட்டி எடுப்பதற்குத்தான் என்று இப்போது இவனுக்கு நன்கு விளங்கியிருந்தது.

'எங்கள் அப்பாவிற்குத் தெரிந்தால் என்ன செய்வார் என்று தெரியுமா?'

நாசமாய்ப் போச்சு, இவளென்னை உண்மையாகவே இரண்டு தட்டுத்தட்டாமல் விடமாட்டாள் போலிருக்கிறது என கொஞ்சம் கலக்கம் இவனுக்குள் எட்டிப் பார்த்தது.  யாராவது வாத்திமார் வந்தால் அவர்களுக்காய் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை கொடுப்பதுபோல, இப்போது இவன் சைக்கிளை விட்டிறங்கி அடக்கமாய் நின்றான். வாத்திமார் ஏதாவது வெளியில் குழப்படி செய்தால் கூட, வகுப்பறைக்குள் நான்கு சுவருக்குள் வைத்து எவருக்குந் தெரியாமல்தான் இரண்டு சாத்து சாத்துவார்கள். இவள் கதைக்கும் தொனியைப் பார்த்தால் இனி வெளியில் கூட நிம்மதியாய்த் திரியமுடியாது போலிருக்கிறதே என்ற கலக்கந்தான் இவனுக்கு வந்தது.

இப்படிக் கேள்விகள் மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அருகில் வந்தவள், இவன் கரத்தைப் பற்றியபடி, 'எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறதுதான், ஆனால் இப்படி எல்லோருக்கும் பறைசாற்றிக்கொண்டிருப்பதுதான் காதல் என்று நீ நினைத்துக்கொண்டிருந்தால் என்னிடம் வராதே'  எனச் சொல்லிவிட்டு லுமாலாவை எடுத்து உழக்கத் தொடங்கினாள்

இவனுக்கு எதையுமே நம்பமுடியாதிருந்தது. கொஞ்சநேரத்துக்கு முதல் 'உதை கொடுக்காமல் விடமாட்டேன் என அதட்டிக்கொண்டிருந்தவள், இப்போது உன்னைப் பிடித்திருக்கிறது' எனச் சொல்கிறாளே எனப் பித்தம் தலைக்கேறியது.  மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் சைக்கிள் தரித்து நின்ற இடத்தின் மண்ணை, பழுத்து விழுந்திருந்த பலாவிலையில் எடுத்துச் சுருட்டி காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கோயில் விபூதி போல பத்திரமாய் வைத்துக்கொண்டான். இந்த மண் எங்களின் சொந்த மண் என்றுதானே இயக்கம் எல்லாம் துவக்குத் தூக்கிப் போராடுகிறது. அதுபோலத்தான் 'இந்த மண் என் காதலி மிதித்த மண்' என நினைத்து சற்று சிலிர்த்தும் கொண்டான்.

கெளரியின் அப்பா ஊரில் மரக்காலையை வைத்திருந்து பலரை அவருக்குத் தெரிந்திருந்தாலும், பன்னாலை வீதிச் சரிவுகளும், பூத்தோட்டம் வெள்ளவாய்க்காலும், விராங்கொடை கல்லொழுங்கைகளும் இவர்களின் காதலை அரவணைத்துப் பாதுகாப்பளித்தது. ஒருநாள் பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிச்சென்று இவனுக்கும் தனக்கும் சேர்த்து கெளரி பூசை செய்வித்தாள். கோயிலின் முன்னே பரந்து விரிந்திருந்த வயல் மனோரதியமாய் இருந்ததென்றால் அவள் அணிந்திருந்த சிவப்பும் வெள்ளையுமான பாவாடையும் தாவணியும்  வேறொரு கிறக்கத்தைத் தந்துகொண்டிருந்தது. அவ்வளவு சனமில்லாத மத்தியான வேளையில், கேணிப் படிக்கட்டில் அமர்ந்திருந்த கெளரி இவன் நெற்றியிலிருந்த திருநீற்றைத் திருத்துவதைப் போல தலையை விரல்களால் அளையத் தொடங்கினாள். இவனும் அவள் தாவணி காற்றில் பறக்காது தடுப்பதைப் போன்ற பாவனையில் அவள் இடுப்பை மெல்ல அணைத்தான். 'தீயெனினும் அது நீ தருவாயின் உண்ணத் தயார்' என்ற கிறக்க நிலையிலிருந்த அவள் இவன் தோள் மீது சாயத்தொடங்கினாள்.  இன்னோர் ஆன்மீகதரிசனததை இருவரும் மெல்ல மெல்லமாய்த் தரிசிக்கத் தொடங்கினர். 

இயக்கங்களின் தலைமறைவுச் செயற்பாட்டை, இவன் தன் காதல் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காய்ப் பரிட்சித்தும் பார்த்தான். இரகசியமாய் சந்திக்கும் இடங்களை அடிக்கடி சுழற்சிமுறையில் மாற்றிக்கொண்டிருந்தான். ஒரு சின்னத் தடயங்கூட ஒரு கெரில்லாப் போராளியைக் காட்டிக்கொடுத்து முழு இயக்கததையும் அழித்துவிடும் சாத்தியமிருப்பதைப் போல, தம் காதலின் தடயங்களை எவரும் கண்டுபிடிக்காதிருப்பதில் கவனமாயிருந்தான். ஒழுங்கைகளில் சந்தித்துக்கொண்டிருந்தாலும் அருகருகில் இவனும் கெளரியும் சைக்கிள்களை நிறுத்துவதில்லை. சந்திக்கும் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டபின், இவன் தன் சைக்கிளை எங்கோ தொலைவில் விட்டு விட்டு வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

ஊடலில்லாது  ஒரு காதல் எப்படி வளரும்?   ஊடலின் முடிவில் என்னவோ இன்பங் கிடைக்குமென நீதி நூலில் படித்திருந்தாலும், சந்திப்பதே ஒரு கெரில்லாத்தாக்குதல் போலிருக்கும்போது அதெல்லாம் இப்போது சாத்தியமில்லை என இவன் தன்னைத் தேற்றிக்கொண்டான்.. அன்றொருநாள் ஏதோ ஊடல் வந்து அவளைத் தேற்றவேண்டியிருந்ததால் முதல்நாள் சந்தித்த இடத்திலேயே சந்திக்கவேண்டியதாயிற்று.  முதல் நாள் இவர்கள் ஒழுங்கைக்குள் நின்றதை யாரோ றெக்கியெடுத்து கெளரியின் தகப்பனிற்குச் சொல்லியிருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஒன்று ஒழுங்கைக்குள் இறங்கிற்று எனச் சுதாகரித்து, விலகி நடப்பதற்கு கெளரியின் கலங்கிய கண்கள் இடமளிக்கவில்லை.  மோட்டார் சைக்கிளில் வந்தது, கெளரியின் தகப்பன்.. இறுகிய முகத்தோடு, ஆனால் இவர்களைப் பார்த்து எதுவும் சொல்லாது, சைக்கிளின் வேகத்தில் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டிக்கொண்டு போனார்.

அடுத்த நாள் பாடசாலைக்கு வந்த கெளரி இவனிடம், 'பின்னேரம் அப்பா உன்னை ஒருக்காய் மரக்காலைப்பக்கமாய் வரட்டாம்' என்றாள். இவனுக்கு ஏதோ பிணச்சாலைக்குப் போவது போன்று நடுக்கம் வந்தது. கெளரியின் தகப்பனைச் சந்திக்கமுன்னர், இவன் தன் நண்பனிடம், 'எனக்கு எதுவும் நடக்கலாம், எது நடந்தாலும் அதற்குப் பொறுப்பு கெளரியின் தகப்பன் தான் என்று இயக்கத்திடம் சொல்லி வை' என்றான். நண்பனோ, 'பதினெட்டு வயதாக முன்னர் என்ன இழவுக்கு உனக்குக் காதல் என்று இயக்கம் கேட்கும், அது பரவாயில்லையா' எனக் குதர்க்கமாய்க் கேட்டான்.  'இந்த வயதிலேயே நான் காதலிக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் எரிச்சலடா' என இவன் சலித்துக்கொண்டான்.

மரக்காலைக்கு இவன் போனபோது கெளரியின் தகப்பன் பெரிய அரம் வைத்து மரத்தை அரிந்துகொண்டிருந்தார். மரத்திற்குப் பதில் தன் தலை அரியப்படுவதாய் ஒருகணம் நினைத்துப் பார்க்க உடம்பு சில்லிட்டுத் திரும்பியது.

'தம்பி, இந்த வயதில் காதல்தான் முக்கியம் போல இருக்கும். அதிலில்லாது வாழ்வே இல்லாதது போலவும் தெரியும். இதே காதல் இருபத்தாறு வயதிலும் இருந்தால் திரும்பி வாரும். அப்போது யோசிக்கிறேன்' என்று கெளரியின் தகப்பன் உடனேயே விசயத்துக்கு வந்தார்.

இவன், தன்னைப் போலத்தான் கெளரியின் தகப்பனும் நிறையத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார் போல என நினைத்துக்கொண்ட்டான். எனென்றால் இந்த டயலாக்கைத்தான் தமிழ்ப்படங்களில் வரும் கதாநாயகிகளின் தகப்பன்மார் சர்வ சாதாரணமாய்ப் பாவித்துக்கொண்டிருப்பார்கள். . வேண்டுமென்றால் ஒரு பாட்டுக்குத் தன்னையும் கெளரியையும் ஆடவிட்டால், தாங்கள் அடுத்த ஐந்து நிமிடத்திலேயே பத்து வருடங்களுக்கு வளர்ந்துவிட முடியுமே, பிறகு ஒரு பிரச்சினையில்லாது காதலுக்கு சுபம் போட்டுவிடலாமேயென நினைத்தான். அவருக்கு இவன் என்ன யோசிக்கிறான் எனபது விளங்கியதோ என்னவோ....

 'இனி இந்த ஒழுங்கைகளுக்குள் ஒளிந்துகொண்டு சந்திக்கிற பழக்கத்தையெல்லாம் விட்டுவிடவேண்டும். சனம் இதையெல்லாம் பார்த்தால் சும்மா கண்டபடிக்கு கதைக்கும். அதெல்லாம் வேண்டாம். இன்னொன்று நாங்களும் நீங்களும் வேற வேற சாதியாக்கள். உங்கடையாக்கள் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்க மாட்டினம்' என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

'இயக்கம் இருக்கிறதுதானே. என்ன பிரச்சினை வந்தாலும் அது பார்த்துக்கொள்ளும்' என முதன்முதலாய் இவன் வாயைத் திறந்தான்.

'இயக்கம் இன்னும் பத்து வருசத்திற்கு இருக்கவேண்டுமே' என்றார் கெளரியின் தகப்பன் சற்றுக் கோபத்தோடு.

இயக்கம் பிறகும் இருந்தது. ஆனால் கெளரியின் தகப்பன்தான் உயிரோடு இருக்கவில்லை.


கெளரியின் தகப்பனிடம் அரிந்த மரங்களை ஏற்றியிறக்குவதற்கென ஒரு பெரிய வாகனம் சொந்தமாய் இருந்தது. இயக்கம் ஒருநாள் வாகனத்தைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவதற்குத் தரச் சொல்லியிருக்கின்றார்கள். கெளரியின் தகப்பன் இயக்கம் அழித்த இன்னொரு இயக்கத்தின் ஆதரவாளராய் இருந்தபடியால் 'அப்பாவிச் சனங்களைச் சாக்கொல்லுறவங்களுக்கு எல்லாம் வாகனத்தைத் தரமுடியாது' என்று கோபத்தோடு திட்டி அனுப்பியிருக்கின்றார். மூன்று நாள் கழித்து விடிகாலையில் இயக்கம் வந்து கெளரியின் தகப்பனைப் பாயோடு சுருட்டியெடுத்துக்கொண்டு போனது. சண்டிலிப்பாயில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு முகாமிற்குள் வைத்து விசாரணை செய்து முடிவு தெரியவந்தபோது கெளரியின் தகப்பன் உயிரற்ற உடலமாய் திரும்பி கொண்டுவரப்பட்டிருந்தார். செத்தவீட்டிற்கும் சனம், இயக்கம் யார் யாரெல்லாம் வருகிறார்கள் என கண்காணிக்கும் என்ற பயத்தில் அவ்வளவாய் வரவில்லை. இவன் கெளரியிற்காய்ப் போனான், ஆனால் நிறைய நேரம் அங்கே நிற்காது மெதுவாய் நழுவிவந்திருந்தான்.

இனியும்  இப்படி இயக்கம் இருக்கின்ற இடத்தில் வாழமுடியாது எனக் கெளரியின் குடும்பத்தினர் இந்தியாவிற்குப் படகில் போவதற்கு ஆயத்தங்களை இரகசியமாய்ச் செய்யத் தொடங்கினர். இதை கெளரி ஒருநாள் ஒழுங்கைக்குள் வைத்துச் சொன்னபோது, இவனால் இங்கே நீ என்னோடு இரு என்றும் சொல்லமுடியவில்லை, அங்கே போயாவது நிம்மதியாக வாழ் என்றும் கூறமுடியவில்லை. மெளனமாய் இருந்தான். காலம் தங்கள் இருவரின் காதலையும் உதறித்தள்ளிவிட்டு வேகவேகமாய் முன்னே சென்றுகொண்டிருப்பது மட்டும் தெரிந்தது.      

காந்தனுக்கு பிறகு சில காதல்கள் தோன்றி மறைந்தன. ஆனால் அவை, கெளரியுடன் ஏற்பட்டதைப் போல எவ்வித ஆன்மீக தரிசனத்தையும் தரவில்லை. இலங்கையில் இனியும் இருக்கமுடியாது என வெளிநாட்டுக்கு வந்தபோது, கொஞ்சக்காலம் எவரும் துணைக்கில்லாதது கஷ்டமாய்த்தானிருந்தது. எல்லாம் போகப்போக பழகிவிடுவது போல, காலம் செல்லச் செல்ல இப்படியே எவரையும் திருமணஞ்செய்யாது தனியே இருக்கலாம் என முடிவெடுத்துக்கொண்டான்..

லங்கையை விட்டு வந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட தன் பாடசாலை நண்பர்கள் அனைவரினதும் தொடர்புகளை இழந்திருந்தான். இணையம் நண்பர்களை மீளப்பெற உதவும் என்று சிலர் கூறத்தான் முகநூல் கணக்கைத் தொடங்கி. ஒரு நண்பரைத் தேட, இன்னொரு நண்பர் மேலும் மேலுமென சிலந்திவலையைப் போல முகநூல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என நிறையப் பேரை நண்பர்களாகச் சேர்க்கச் சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது. இந்தப் பத்து வருடங்களில் நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் சிலரைத் தவிர பலரை மறந்தே விட்டிருந்தான். உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்திருந்த நண்பர்களைப் பார்க்க அதிசயமாயிருந்தது.  ஒரு சிறு தீவுநாட்டில் பிறந்து அதிலும் ஒரு சிறு கிராமத்துப் பாடசாலையில் படித்த தாங்கள் ஒவ்வொருவரும் இப்படி சிதறி வாழ்ந்துகொண்டிருப்பதை நினைக்க, காலத்தைப் போல ஒரு சிறப்பான ஆசிரியர் உலகில் இல்லை போலத்தோன்றியது.  இன்னுஞ் சிலர் இவன் வாழும் நகரத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது தெரிந்தபோது, தான் எவ்வளவு உள்ளொடுங்கிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பதும் காந்தனுக்கு விளங்கியது.

முகநூலில் கண்டுபிடித்த,  உள்ளூர் நண்பரொருவன் தன் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான். 'என்ன இவ்வளவு காலமும் திருமணஞ்செய்யாமலா இருந்தாய்' என இவன் கேட்க, மூன்று தங்கச்சிமாருக்கும் கலியாணஞ்செய்வதில் இவ்வளவு காலமும் கழிந்துவிட்டதென்றான். 'என்னடா தமிழ்ப்பட டயலாக் போல நீயும் கதைக்கிறாய்' எனச் சொல்ல மனம் விரும்பினாலும் முன்னொருகாலத்தில் இப்படித்தான் கெளரியின் தகப்பனுக்கு தான் சொல்ல விரும்பியதும், அவர் பின்னர் கொல்லப்பட்டதும் நினைவில் எழ, சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு, 'நான் உன் திருமணத்திற்கு வருவேன், அழைப்புக்கு நன்றி' என உரையாடலை முடித்துக்கொண்டான்.

நண்பனின் திருமணத்திற்கு இவன் போனபோது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. இவனுக்குப் பிடித்த ஓர் அரசியல் செயற்பாட்டாளரும் அங்கே வந்திருந்தார். நண்பன் திருமணஞ்செய்யும் பெண்ணின் உறவுக்காரர் போலும். அவரிடம் போய் நீங்கள் எனக்குப் பிடித்த செயற்பாட்டாளர், இப்படி நமக்கு நடந்த மனிதவுரிமை மீறல்களுக்காய் முன்னிற்பது மிகவும் பிடித்தமானது. என்னைப் போன்றவர்க்கெல்லாம் நீங்கள் ஒருவகையில் வழிகாட்டி என இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் சொல்லிக்கொண்டிருந்தான். அவரும் 'அப்படியா அப்படியா' என மிகுந்த அடக்கத்தோடும், புன்னகையோடும் கேட்டுக்கொண்ட்டிருந்தார். 'அவரது எழுத்தையும் பேச்சையும் போலவே நேரிலும் இவ்வளவு நிதானமாக இருக்கின்றாரே, நிறைகுடங்கள் ஒருபோதும் தளும்புவதில்லை' என இவன் நினைத்துக்கொண்டான்

தனக்குப் பிடித்த ஒருவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் மண்டபத்தில் தரப்பட்ட மாம்பழ ஜூஸை உறிஞ்சிக்கொண்டிருந்தவனை நோக்கி, ஒரு பெண் நெருங்கி வந்து 'நீங்கள் காந்தன் தானே?' எனக் கேட்டாள். இவனுக்கு உடனே யாரென்று மட்டுக்கட்ட முடியாதிருந்தது. 'நான் கெளரி, அவ்வளவு கெதியாய் என்னை மறந்துவிட்டீர்களா?' என்றாள். இவனுக்கு ஒருகணம் அதிர்ச்சியாகி, கடந்தகாலம் எல்லாம் சடசடவென்று உள்ளே கடுகதி போல ஓடத்தொடங்கியது. காலம் நல்லாசிரியர் மட்டுமில்லை, சிலவேளைகளில் கோரமான ஒப்பனைக்காரரும் கூட என்று நினைத்துக்கொண்டான். இல்லாவிட்டால் ஒருகாலத்தில் இளமை ததும்பி நின்ற ஒருவரை இப்படியா உருமாற்றியிருக்கும்? இதுதான் ஒருகாலத்தில்,  தான் மிகவும் நேசித்த கெளரியா என்பதை நம்பக் கடினமாக இவனுக்கு இருந்தது.

இன்னொரு மேசையிலிருந்து 'அம்மா' எனச் சொல்லி ஓடி வந்த இரண்டு பிள்ளைகளை 'இவர்கள் என் குழந்தைகள்' என்றாள்.  என்ன பெயர்கள் என வினாவியபோது 'மூத்தவளுக்கு பாமினி, இளையவனுக்கு காந்தன்' என்றாள். 'காந்தன்' என்ற தன் பெயரைக் கேட்டதும் மனம் திடுக்குற்று இவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. 'ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் கூட தம் முதற்காதலை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை' என எங்கோ வாசித்தது இவனின் நினைவில் எழுந்து மறைந்தது

காந்தனும் கெளரியும் நிறைய பழைய விடயங்களை கதைத்துக்கொண்டிருந்தார்கள். இடைநடுவில் வந்த கணவனுக்கு 'இவர் எங்கள் ஊர்க்காரர்' என மட்டும் சொல்லி காந்தனை அறிமுகப்படுத்தி வைத்தாள். எல்லாவற்றையும் பேசியபோதும் இவர்களின் கடந்தகாலக் காதலையோ அல்லது கெளரியின் தகப்பன் கொல்லப்பட்டதையோ பற்றிக் கதைப்பதை இருவரும் கவனமாகத் தவிர்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கெளரி ' முன்பு எல்லாம் கவிதை எழுதிக்கொண்டிருப்பாயே? இப்போதும் எழுதுகிறாயா?' எனக் கேட்டாள். 'இல்லை அப்படி எழுதி எவரையும் இப்போதும் கஸ்டப்படுத்துவதில்லை' எனச் சிரித்தபடி சொன்னான். 'ம்....நீ முன்பு எந்தப் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தாய் என்பதையாவது இப்போது நினைவு வைத்திருக்கின்றாயா...  என்னால் அதை ஒருபோதும் மறக்கமுடியாது' என்றாள். எதைக் கடந்துவிட்டு போகவேண்டும் என நினைத்து அது குறித்து உரையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்களோ அது தன்னியல்பில் வெளி வந்துவிட்டது. இவன் தன் கவிதைகளை 'கெளரி காந்தன்' என்று அவள் பெயரையும் இணைத்து வைத்துத்தான் ஒருகாலத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.

சட்டென்று தங்களுக்குள் விழுந்த திரையை விலத்துவதற்கும், அதே விடயத்தைத் தொடர்ந்து கதைப்பதைப் தவிர்ப்பதையும் பொருட்டு, 'இங்கே எனக்குப் பிடித்த ஒருவர் இருக்கிறார். கிட்டத்தட்ட அவர் எனக்கு வாழ்க்கையில் பல விடயங்களில் மானசீகக் குரு போன்றவர். அவரது பேச்சைப் போலவே அவ்வளவு அமைதியானவர், நீயும் சந்திக்கவேண்டும்' என்றான். அப்போதுதான் இதுவரை கெளரியுடன் நீங்கள் எனப் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து 'நீ'யிற்கு வந்திருந்தது தெரிந்தது. சட்டென்று தான் தன் பதினாறாவது வயதுக்குப் பறந்துபோய்விட்டேன் போலுமென நினைத்துக் கொண்டான்..

கடந்தகாலத்திற்கு மீண்டும் போய் உறைவதைத் தடுக்க அவசரம் அவசரமாக செயற்பாட்டாளர் இருந்த மேசைக்கு கெளரியை இழுத்துச் சென்று அறிமுகப்படுத்தினான். அவர் அதே அமைதியான குரலில் 'ஹலோ' என கெளரிக்குச் சொன்னார். திரும்பி வணக்கம் சொல்வாள் என எதிர்பார்த்த கெளரி ஒன்றையும் சொல்லாது விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டுப் போயிருந்தாள். ஏன் கெளரி இப்படிச் செய்கிறாள் என்ற வியப்புடன், செயற்பாட்டாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, கெளரியைப் பின் தொடர்ந்தான். திருமண மணடபத்துக்கு வெளியே வந்து நின்ற கெளரி, 'இந்த ஆளால்தான் எங்கடை காதலே அழிந்து போனது. இந்தச் சனியன் பிடித்தவனை ஏன் எனக்கு அறிமுகப்படுத்தினாய்' என்றாள். ஏன் அவர் எங்களின் காதலைக் சிதைத்தவர் எனக் கெளரி சொல்கிறாள் என இவனுக்கு எல்லாமே குழப்பமாயிருந்தது.

'எங்கடை அப்பாவை இயக்கம் படுத்த பாயோடு சுருட்டிக்கொண்டு போனபோது, நான்கு பேர் வந்திருவையென்டு சொன்னனான் அல்லவா? அதற்குப் பொறுப்பாய் இருந்தவர் இந்தாள்தான். நான் இவரின் காலைப் பிடித்து எங்கடை அப்பாவை ஒன்றும் செய்யவேண்டாம் என்று கெஞ்சியபோது இவர் என்ன சொன்னவர் தெரியுமோ?'

இவன் கெளரியின் கண்ணீர் வரத்துடிக்கும் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்.

'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம் என்றவர்.'

இவனால் எதையுமே நம்பமுடியாதிருந்தது.  அவரின் எழுத்திலோ பேச்சிலோ அவர் ஒருபோதும் வன்முறையை ஆதரித்து எழுதியதற்கான தடயங்களையே காணமுடியாது. அப்படியான ஒருவர் கடந்தகாலத்தில் ஒரு கொலைகாரனாய் இருந்திருப்பார் என்பது சாத்தியமற்றதெனவே இவன் நம்பினான். காந்தியிற்கு ஊன்றுகோலிற்குப் பதிலாய் அவரின் கையில் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒருவராக அல்லவா கெளரி இவரை உருமாற்ற முயல்கிறாள். ஆனால் சும்மா ஒருவரை எழுந்தமானமாய் கொலைகாரன் எனக் கெளரி குற்றஞ்சாட்டவில்லை என்பதையும் அவளது விழிகள் தெளிவாய்ச் சொல்லியிருந்தது.

தனது சுயத்தை  வனைந்துகொண்டிருக்கும் ஒருவரை கொலைகாரன் என ஏற்றுக்கொள்வது தன்னிருப்பையே இல்லாது ஒழித்துவிடும் என அஞ்சினான். அதற்குப் பிறகு கெளரியை மீண்டும் சந்திப்பதை இவன் விரும்பவேயில்லை.


(ஜூலை 2013)
(நன்றி: தீராநதி - பெப்ரவரி, 2014)

கலைஞர்களின் தளம்பல்கள்

Wednesday, December 18, 2013

('அரங்காடல்' இறுதியில் வரும்)
1
கலைஞர்கள் எப்போதும் தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே நிலையில் என்றுமே  இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும் அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும். ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் வித்தியாசமாக இருப்பதனால் அவர்கள் சாதாரணர்களை விட மேலோரானவர்களாய் இருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. சிலவேளைகளில் அவர்களின் படைப்புக்களினூடாக வசீகரிக்கப்பட்டு அவர்களின் தனிவாழ்வை அறிய நேரும்போது நமக்கு அவர்கள் எதிர்மறையான விம்பத்தையோ, ஏமாற்றத்தையோ  தரவும் கூடும். 'நானொரு கலைஞன் என்னை நீங்கள் மதிக்கவேண்டும்' என்று சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுபவர்களை விட, 'இந்தச் சமூகம் எப்படி என்னை நடத்தினாலும், நானொரு கலைஞன்' என மெளனத்தின் மூலம் சலனங்களை ஏற்படுத்துபவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்புண்டு.

உண்மையில் பெரும்பான்மையான கலைஞர்களின் வாழ்வு இருளின் வர்ணத்தைப் பூசியது. சிலவேளைகளில் இத்தகைய நெருக்கடிக்குள்ளும், துயரத்திலிருந்தும் எப்படி அவர்களால் இவ்வளவு அருமையான படைப்புக்களைத் தரமுடிந்ததென வியந்துமிருப்போம். எதற்காய் பாரதி உணவு சமைப்பதற்காய் இரவல் வாங்கிய தானியத்தைச் சிட்டுக்குருவிகளுக்குப் போட்டார்? ஏன் சி.செல்லப்பா தன் சொத்துக்களை இழந்து  தெருத்தெருவாக 'எழுத்தை' விற்றுத் திரிந்தார்? ஏன் நகுலன் எப்போதும் தன்னோடு பேசுவதில் அளவற்ற ஆர்வத்துடன் இருந்தார்? எதற்காய் வான்கோ காகினோடு சண்டைபிடித்து தன் காதின் நுனியை வெட்டிக்கொண்டார்? ஏன் காப்ஃகா கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அதிகாரங்களுடன் தளராது சமர் செய்துகொண்டிருந்தார்? ஏன் எங்களின் ஏ.ஜே தன்னைப் புகழ்ந்தெழுதிய பத்தியை premature obituary என்றும், அவரைப் பற்றி வெளியிட்ட சிறப்பிதழை தீண்டியும் பார்க்காமல் இருந்தார்?

நமக்கு இந்த 'ஏன்'களுக்குத் தெளிவான பதில் தெரியாது. வேண்டுமெனில் எங்களை நாங்கள் சமாதானப்படுத்திக்கொள்வதற்காய் 'இதெல்லாம் பைத்தியக்காரத்தனங்கள்' எனச் சொல்லி நம்மை நாமே ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த மனிதர்களுக்கெல்லாம் சாதாரணமானவர்களைப் போல வாழும் ஆசை இருந்திருக்காதா என் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படி அவர்களால் இருக்கமுடியாது, அவர்களைக் கலை    - கோயிலுக்கு நேர்ந்துவிட்ட தேவதாசிகளைப் போல- தேர்ந்தெடுத்துக்கொண்டது என நாம் அவர்களை இனியாவது கனிவுடன் பார்க்கக்கூடாதா? அவர்கள் தம் பெரு விருப்பங்களையும், மீளமுடியா வலிகளையும் முன்வைத்திருப்பதால்தான், நாம் அவர்களை வாசிப்பதன் மூலம் எங்களின் துயரங்களையும், சரிவுகளையும் தேற்றிக்கொண்டு மீள எழுந்து வாழமுடிகிறது என எப்போதாவது நினைத்திருக்கின்றோமா?

அன்னா கரினீனா என்கின்ற மாபெரும் காவியப்பெண்ணை உருவாக்கிய டாஸ்டாயினால் ஏன் அவரின் துணைவியான ஸோபியாவை புரிந்துகொள்ள முடியாமல் போனது? அதிகாரத்தின் நுண்தளங்களில் பயணித்துப் பார்த்த காப்ஃகா ஏன் இரண்டு முறையும் பெலிசியுடனான தன் திருமணத்தை இடைநிறுத்தினார்? இரண்டு தடவையும் திருமணஞ்செயய சம்மதித்த பெலிசி காப்ஃகா மீது எவ்வளவு காதலுடன் இருந்திருப்பார். ஏன் அவரை அந்தளவிற்குத்  துயருற வைத்தார்? காப்ஃகா பெலிசியிற்கு எழுதிய கடிதங்களில் எத்தகைய மோசமானவராக காப்ஃகா இருந்திருக்கின்றார் என் இன்றும் சாட்சியம் சொல்கின்றனவே? கலைஞர்களையும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையையும் எப்படிப் புரிந்துகொள்வதென்கின்ற குழப்பம் இப்போது நமக்கு வருகிறதல்லவா?

ஸோபியாவைப் புரிந்துகொள்ளாத டாஸ்டாயின் அன்னா கரீனீனாவை நம்மால ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. பெலிசியின் உணர்வுகளை உதறித்தள்ளிய காப்ஃகாவின் 'விசாரணை'யை நாம் கொண்டாடத்தான் செய்கின்றோம். ஏனெனில் கலைஞர்கள் வானத்திலிருந்து தோன்றிய சுயம்புகள் அல்ல என எமக்குத் தெரிகிறது. அவர்களும் நம்மைப் போலவே பலவீனங்களும், தடுமாற்றங்களும் கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். சிலவேளைகளில் இப்படித் தளம்பல்களைக் கொண்டவர்களாய் இருப்பதனால்தான் அவர்கள் இன்னுமின்னும் எங்களை வசீகரிக்கின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே பயணிக்காத பாதைகளில் கலைஞர்கள் தம் தேடல்களை நிகழ்த்தவே விரும்புவர். தீ சுடும் என்று நமக்குச் சொல்லித்தராத வரை தீயைத் தீண்டியல்லவா பார்த்திருப்போம். அப்படித்தான் இந்தக் கலைஞர்களும் நாமறியாத பாதைகளில் பயணித்து கலைகளினூடு தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்துவமான பயணங்கள் இருப்பதை நாம் நன்கறிவோம் நமகான பாதைகளில் நாம் பயணிக்கும்போது ஏற்கனவே அறிந்ததை உணரும்போது சிலிர்க்கின்றோம். அந்த அறிதலை இந்தக் கலைப்படைப்புக்கள் நமக்குத் தருகின்றன. ஆனால் இவை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இதற்காய்ச் சிலவேளைகளில் பல கலைஞர்கள் தமது முழுவாழ்க்கையையும் தொலைத்திருக்கின்றனர் என்றறியும்போது நமக்கு இன்னும் இந்தக் கலைஞர்கள் மீது நேசம் வருகின்றதல்லவா?  தன்னையே அழித்தழித்து 'மூலதனம்'  போன்றவற்றைத் தந்த மார்க்ஸை விட நாமின்னொரு உதாரணத்தைத் தந்துவிடமுடியுமா என்ன?

2.
மீள்வாசிப்பை நாம் எப்படியும் எதிலும் நிகழ்த்த முடியும். ஆனால் சில இடங்களில் நாம் கையே வைக்கமுடியாது. அவ்வாறு செய்யும்போது அது வேறொரு பிரதியாக  மாறிவிடுகின்றது. இராவணன் எவ்வளவு நல்லவராக, சிவபக்தனாக இருந்தாலும், இராவணன் இராமனைக் கொன்றார் என மாற்றிவிடமுடியாது. எவ்வளவுதான் மறுவாசிப்பைச் செய்தாலும் இறுதியில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்றாகத்தான் வேண்டும். அவ்வாறுதான் நாம் அன்னா கரினீனாவை எவ்வளவு மறுவாசிப்பை நிகழ்த்தினாலும் கரினீனா ரெயினின் முன் விழுந்து தற்கொலை செய்வதை மாற்றிவிடமுடியாது. டாஸ்டாய், ஸோபியாவை தன் மரணத்தருவாயிலும் இரெயின் நிலையத்தில் வைத்துச் சந்திக்க விரும்பவில்லை என்பதையும் மாற்றிவிடவே முடியாது. ஆகவே  நாம் மாற்றவே முடியாச் சில சம்பவங்கள் எல்லாப் பிரதிகளிலும் இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கரினீனா தனக்கு விருப்பமான வாழ்வை வாழ்ந்ததுபோலவே, தனக்குப் பிடித்தமான முறையிலே தனது தற்கொலையைத் தேர்ந்தெடுத்தாரென நாம் கூறிக்கொள்ளலாம். ஆனால் அதேயே இன்னொருவர் இல்லை, கரினீனா இப்படி தற்கொலையைச் செய்தவர் என்பதால் அவருக்குள் பகிரமுடியாத பெரும் துயரம் இருக்கிறதெனக் கூறினாலும் -நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ- அது இன்னொருவரின்  வாசிப்புச் சுதந்திரம் என விளங்கிக்கொண்டாக வேண்டும். வாழ்வை சாகசங்கள் மூலம் கொண்டாடிய எர்னாஸ்ட் ஹெமிங்வே கூட தற்கொலையே செய்துகொண்டார், அப்படியெனில் அவரது  வாழ்வுதான் தோற்றுவிட்டதா என்ன? இல்லைத்தானே. ஆகவே கரினீனாவை நாம் எமக்கு விரும்பியமாதிரி எப்படியும் வாசித்துக்கொள்ளலாம். ஆனால் எமது வாசிப்புக்கள் மட்டுமே சரியென்று கூறினால், நாம் மகாபாரதம்/இராமாயணம் போன்ற காவியங்கள் பற்றி எழுதப்பட்ட பன்முகப்பிரதிகளை மறுத்துவிடுகின்ற ஆபத்தான நிலைக்குப் போய்விடுவோம்.

ஆகவே நான் செழியனிடம் நீங்கள் இப்படி கரினீனாவின் பாத்திரத்தைப் படைத்தது நியாயமா எனக் கேட்கப் போவதில்லை. ஆனால் அன்னா கரினீனா போன்ற பல்வேறு உள்ளடக்குகள் கொண்ட பாத்திரத்தைப் படைத்த டாஸ்டாயை இன்னொரு பாத்திரமாகப் பிரதியில் படைத்திருக்கலாம். அங்கே டாஸ்டாய் 'அன்னா கரினீனாவைச் சிருஷ்டித்த என்னால் அருகிலிருந்த சோபியாவைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே. இறுதியில் என்னைப் பார்க்க ஆவலோடு ஓடோடிவந்த ஸோபியாவை இரெயின் நிலையத்தில் வைத்துக்கூட சந்திக்க மறுத்தேனே, அந்தத் துயரத்தைக் காவியபடி இன்றும் தூங்காது அலைந்து கொண்டிருக்கின்றேனே' என டாஸ்டாய் தோன்றி நம்மிடம் கூறியிருந்தால், செழியன் என்கின்ற கலைஞனை இன்னும் நெருக்கமாய் உணர்ந்திருப்பேன். செழியன் தவறவிட்டது இந்தப்புள்ளியைத்தான்.

எனெனில் ஏற்கனவே பயணிக்காத திசைகளில் பயணிக்கின்றபோதுதான் ஒருவர் உன்னதக் கலைஞர் ஆகின்றார்.
................

(Oct 18, 2013)

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்

Saturday, December 07, 2013

வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம் இருக்கிறது என்று தெரிந்து பயணித்தாலும், நம் பயணங்கள் எல்லாம் அந்தக் கரையைப் போய்ச் சேரும் என்பதும் அவ்வளவு உறுதியானதில்லை. இடையிலும் எதுவும் நடக்கலாம், சுவடுகளற்று நாம் போகலாம். மிக எளிய கனவுகளோடு வாழத்துடிக்கின்ற ஆனந்தியும், பிரபாகரும் இடைநடுவில் அணைந்துபோகின்ற இரண்டு மெழுகுதிரிகளாய் ஆவதை 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் பார்க்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் முதன்முதலாகத் தாம் பார்த்த திரைப்படங்கள் பற்றிய அனுபவம் மறக்கமுடியாது இருக்கும். நான் ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் தியேட்டர்கள் ஒரு வரலாற்றுச்சின்னம் போல எவ்விதத் திரைப்படங்களும் திரையிடப்படாது தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. போர் எதைத்தான் விட்டுவைக்கின்றது. மின்சாரம் மட்டுமின்றி, விளக்குகளுக்கு வேண்டிய மண்ணெண்ணெயே தட்டுப்பாடாக இருந்த காலமே என்னுடைய சிறுவயதுப் பருவம். அப்படி இருக்கும்போது தியேட்டர்களில் எல்லாம் படம் ஓடுமா என்று எதிர்ப்பார்ப்பதே சற்று அதிகப்படியானதுதான். 

அப்படியிருந்தும் 'மழை நின்றபோதும் தூவானம் நிற்கவில்லை' போல அவ்வபோது சமாதானக் காலங்கள் வரும்போது மின்சாரம் வரும். அத்தகைய காலப்பகுதியில், ஊரே திருவிழாக்கோலம் பூண்டதுபோல -தொலைக்காட்சி, விசிஆர்- வாடகைக்கு எடுத்து இரவிரவாய் யாருடைய வீட்டிலாவது நான்கைந்து படங்கள் இடைவெளியில்லாது 'திரை'யிடப்பட்டிருக்கின்றன.  அதில் எப்போதும், முதற்படமாய் ஒரு ஆங்கில வீரதீரப்படம் இருக்கும். இரண்டாவதாய் நிறைய சண்டைகள் இருக்கும் தமிழ்ப் படம் கட்டாயம் இருக்கும். இந்த இரண்டு படங்களைப் பார்ப்பதற்குள்ளேயே என்னை நித்திராதேவி ஆரத்தழுவி அரவணைத்திருப்பார். இப்படிப் படங்களைத் திரையிடும்போது இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. ரீவி,விசிஆர் போன்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்கு அன்றைக்கு யார் உபயக்காரர்களாய்  இருக்கின்றார்களோ அவர்களின் செல்வாக்கு தெரிவுசெய்யப்படும் படங்களில் அதிகமிருக்கும். சிலவேளைகளில் அவர்களுக்கு வெளிநாட்டில் யாரேனும் உறவுக்காரர் இருந்தால், முதற்காட்சியாய் வெளிநாட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தையோ, பூப்புனித நீராட்டுவிழாவையோ பார்க்கும் சித்திரவதையும் கிடைக்கும். எனவே திரைப்படம் பார்ப்பது எப்போதும் எனக்கு ஓர் இனிய நிகழ்வாக இருக்கிறதென நீங்கள் நினைக்கக்கூடாது.  சில திரைப்படங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களைத் துண்டு துண்டாக அறுத்து வதைப்பார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது. எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனக்கூறப்படுவதைப் போல, எல்லாம் கூடியதுதான் திரைப்படங்களுமென நம்மை நாமே ஆறுதற்படுத்தவேண்டியதுதான்.

இவ்வாறாக நிறையச் சண்டைகாட்சிகளும், நகைச்சுவைக்காட்சிகளும் அமைந்த படங்களே மிகச்சிறந்தவை என நினைத்துக்கொண்டிருந்த என் கலைப்பார்வையை 'உழைப்பாளி'தான் மாற்றியது என்று கூறினால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். எப்போது மண்ணெண்ணெயில் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் நிற்கப்போகின்றதோ என்கின்ற பதற்றத்துடன் 'உழைப்பாளி' பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்திருந்த நண்பன், 'இப்போது இந்தப்பாட்டில் பார், ரஜனியை ரோஜா தன் முன்பக்கத்தால் முட்டுவா' என்றான். அதன்பிறகு எனக்குச் சண்டைக்காட்சிகள் பிடிக்காமல் பாடல் காட்சிகள் நன்கு பிடிக்கத் தொடங்க பதின்மத்திற்குள் நான் நுழைந்திருந்தேன்.இவ்வாறாக என் 'கலைப்பார்வை' காலத்துக் காலம் மாறிக்கொண்டிருக்கையில், நான் எப்படி  இப்படியிருப்பதுதான் சிறந்த திரைப்படம் என அறுதியும் இறுதியுமாய்க் கூறமுடியும்? 

திரைப்படம் சார்ந்த கோட்பாட்டு விளக்கங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன் எனினும் அவை கூட ஒரு சிறந்தபடம் இதுதான்  எனக்கூறுவதில்லை. வேண்டுமெனில் இக்கோட்பாடுகள் நமக்குப் பிடித்த திரைப்படங்களில் நாம் தவறவிட்ட பக்கங்களைக் கண்டுகொள்ளவும், ஆழமாய் விளங்கிக்கொள்ளவும் உதவுகிறதென  கூறிக்கொள்ளலாம். மேலும் வெகுசனச் சினிமா, கலைப்படம் என்ற பிரிப்புக்களில் கூட நான் அவ்வளவு அக்கறைகொண்டதில்லை. எனக்குப் பிடித்த சினிமா, பிடிக்காத சினிமா என்று ஒரு எளிய புரிதலிற்காய் வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.

த்தனையோ தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்த நான் ஏன் 'கற்றது தமிழ்'ஐ பிடித்த ஒரு திரைப்படமாகத் தேர்ந்தெடுத்தேன் என யோசித்துப் பார்க்கின்றேன். முதலாவது இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' பிடித்திருக்கின்றது. சிலவேளை இதை எழுதிமுடிக்கும்போது எனக்கு வேறொரு திரைப்படம் பிடித்திருக்கவும் கூடும். நாம் கடந்து வந்த பாதையில் தீர்க்கமாய் நம்பிய எத்தனை விடயங்களை காலப்போக்கில்  உதறிவிட்டு வரும்போது, எது பிடித்த திரைப்படம் என்பதில் குழப்பங்கள் வருவதென்பது இயல்பானதுதான் அல்லவா? 'கற்றது தமிழ்' ஏன் தவிர்க்கமுடியாத ஒரு திரைப்படமாய் எனக்குள் வந்தமர்ந்திருக்கிறது என்றால், இத்திரைப்படம் ஒவ்வொருகாட்சியிலும் நாம் ஒரு ஆனந்தியாகவோ, பிரபாகரராகவோ எந்தக்கணத்திலும் ஆகிவிடலாம் என்கின்ற பதற்றத்தைக் கொண்டுவருவதாலேயே எனக்கு நெருக்கமான உணர்வைத் தந்திருக்கின்றது என நினைக்கின்றேன். 

படம் தொடங்கும்போதே எந்த வம்புக்கும் போகாத ஓர் அப்பாவியான- பிள்ளைகளுக்கு 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்' எனச் சொல்லிக்கொடுக்கின்ற ஆசிரியர், யாரோ இருவரின் காதல் ஆட்டத்திற்கு பலியாகின்றவராகக் காண்பிக்கப்படுகின்றார். அதனால் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்குள்ளாகும் பிரபாகர், நீதிமன்றம் செல்லும் வழியில் தப்பிச்செல்லும் ஓட்டம், இறுதியில் அவரும் ஆனந்தியும் இரெயினொன்றை இருட்குகையில் சந்திக்கும்வரை முடிவதேயில்லை.  முக்கியமாய் அநேக மனிதர்களுக்கு வாழ்க்கையில் தாம் ஏதும் தவறு செய்யாமல், எவரையும் ஏமாற்றாமல் இருந்தால் அமைதியான வாழ்வொன்று கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. அதை இப்படம், நல்லவர்களாய் இருப்பதால் நல்லதொரு வாழ்க்கை அமைந்துவிடுமா என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. இன்னும் நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கொண்டாடுகின்ற 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே ஒருவகையில் ஆட்டங்காணச் செய்கிறது.  நாம் தனியர்களாய் இருக்கவிரும்பினாலும் நமது வாழ்வு நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, பிறராலும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் பிரபாகரின் வாழ்வு திசைமாறிப்போகும்போது நமக்குப் புரிகிறது.

எல்லார் முன்னும் அவமானப்பட்டும், மயிர் நீங்கின் உயிர் வாழாக் கவரிமானாய் ஆக விரும்பி தற்கொலை செய்ய முயற்சித்தும் கூட பிரபாகரனுக்கு வாழ்வு நெடியது என்கின்றது விதி. ஆனால் தற்கொலை முயற்சியில் தப்பித்த பிரபாகர் முன்னைய பிரபாகர் அல்ல. 'நான் சிவனாகிறேன்' என தனக்குத்தானே சமாதானம் சொல்லி யார் யாரையெல்லாம் கொல்ல விரும்புகின்றாரோ அவர்களைக் கொன்று தன்னையொரு உருத்திரனாகப் பாவனையும் செய்துகொள்கிறார். இவ்வாறு பிரபாகர் ரிக்கெட் விற்பவரையும், ரெயினுக்குள் ரிக்கெட் பரிசோதிப்பவரையும் எழுந்தமானமாய் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கொல்லும்போது, இப்படத்தைப் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒரு காரணமிருக்கும் என்கின்றதை இப்படத்தில் நடைபெறும் கொலைகள் உடைத்து நொறுக்குகின்றன. இப்படிக் கூட நாம் யோசித்துப் பார்க்கலாம், எத்தனை பேர் வாழவேண்டிய இளவயதில் எல்லாம் சட்டென்று மறைந்துபோகின்றார்கள். அவை ஏன் அவ்வாறு நிகழ்கின்றதென்பதும் நமக்குத் தெரிவதில்லை. அதை விளங்கிக்கொள்ளும் அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் நாம்,  தான் சிவனாகியதாய் எண்ணிக்கொள்ளும் பிரபாகர்  எழுந்தமானமாய்ச் செய்யும் கொலைகளையும் ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள நிர்ப்பந்திக்கபடுகின்றோம். 

பிரபாகர் இளவயதில் நேசிக்கும் ஓவ்வொருவரும் இடைநடுவில் இறந்துகொண்டிருப்பதால் அவருக்கு ஏற்படக்கூடிய மனப்பிறழ்வு விளங்கிக்கொள்ளக்கூடியதென்றாலும், இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய பகுதியும் இருக்கிறது. அது எவ்வாறு இன்றைய உலகமயமாதலில், பிளவுகள் ஏற்பட்டு நமது மனிதாபிமானம் எப்படிச் சுருங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது என்பது பற்றியது. 'கற்றது தமிழ்' - பிரபாகர் என்னும் அன்புக்கு ஏங்கும், சற்று மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள ஒருவரைப் படைத்திருந்தாலும், பிரபாகரைப் போல நாம் எவருமே - மனச்சிதைவுக்கு ஆளாகாமல் விட்டால்கூட-  இவ்வாறு கொலைகளைச்  செய்யும் ஒருவராய் மாறிவிடும் அபாயத்தைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதையும் கவனித்தாகவேண்டும். பணம் தேடும் வாழ்வில் மிகப்பெரும் இடைவெளிகள் மனிதர்களுக்கிடையில் எப்படி  உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும், நாம் எப்படி பிறமனிதர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் இழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் ஒவ்வொரு காட்சியிலும் 'கற்றது தமிழ்' சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பிரபாகர் மட்டுமில்லை, இப்படத்தில் வரும் அநேக கதாபாத்திரங்கள் பலமும் பலவீனமும் உள்ளவர்களாய்த்தான் படைக்கப்ப்ட்டிருக்கின்றனர். எந்த இடத்திலும் பிரபாகருக்கு 'நாயக விம்பம்' வழங்கப்படவேயில்லை. அவருக்கு ஆனந்தி மட்டுமே பரிசுத்தமான ஒர் உயிர். ஆகவே ஆனந்தியை அவரால் மனம் நிறைந்து நேசிக்கவும் முடியும்; அவள் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டு செய்த தவறுகளைக்கூட பிரபாகரால் மன்னிக்கவும் முடிகிறது. ஆனால் அதே பிரபாகருக்கு, 'உனக்கு துணிச்சலிருந்தால் என்னைத் தொட்டுப்பார்' என்ற ரீ-சேர்ட்டை அணிந்த பெண் எரிச்சலூட்டுகிறாள். எனக்குத் தைரியமிருக்கிறது என அவளின் மார்புகளைத் தொடவும் செய்கிறான்.

இங்கேதான் நமக்கு பிரபாகரை எப்படிப் பார்ப்பது என்னும் குழப்பம் வருகிறது. நமது காதலிகளைத் தேவதைகளாக்கியபடி, பிற பெண்களைப் பாலியல் சுரண்டல் செய்ய விரும்பும் நம் உள்மன ஆசைகள் பெருகத்தொடங்குகின்றன. நாம் தான் அந்தப் பிரபாகரோ என நினைக்கும் புள்ளி நம்மையின்னும் பதற்றமடையச் செய்கிறது. அது மட்டுமில்லை, பிரபாகர் ஆனந்தியோடு பஸ்சில் பயணிக்கும்போது, ஆனந்தி ஒரு விலைமாது எனத் தெரிந்து சேட்டை செய்கின்ற மனிதரை பிரபாகர் அடித்து உதைப்பதேயில்லை. மென்மையாக 'அவள் எனக்குரியவள்' என்பதைச் சொல்லிவிட்டு அந்த நபரை விட்டுவிடுகின்றார். ஒரு பெண்  'உனக்குத் தைரியமிருந்தால் என்னைத் தொட்டுப் பார்' என்றோ அல்லது 'என் பட்டன்களை கழற்று' என்கின்ற வாசகங்களையுடைய ஆடையை அணிந்திருப்பதோ உறுத்தச் செய்யவும், அதனால் பதற்றடையும் பிரபாகர் ஏன் பாலியல் சேட்டை செய்யும் ஆணோடு மூர்க்கமே கொள்வதில்லை? இதைவிட ஆண் மனதின் பெண்களில் அதிகாரம் செலுததும் வேட்கையை தெளிவாகச் சொல்லிவிடமுடியுமா? இன்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கு, அவர்கள் அணியும் ஆடைகளே என தம் வக்கிரகங்களை மறைக்கக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா இல்லையா?  

தமிழைக் கற்பதால் எவ்வளவு அவமானப்பட வேண்டியிருக்கிறது என்பது பற்றி வரும் காட்சிகளும் கவனத்தில் கொள்ளவேண்டியது. வெளியிடங்களில் மட்டுமில்லை, தமிழ்த்துறையிலேயே ஒருவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் -தமிழைக் கற்கவிரும்புகின்றான் என்பதற்காய்- எவ்வளவு அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் பிரபாகர் தனக்குப் பிடித்த தமிழைக்கற்று ஓரு ஆசிரியராகவும் ஆகி விடுன்றான். அவன் ஓரிடத்தில் தமிழ் சாந்தத்தைக் கற்றுத்தரும், அதேவேளை தேவையெனில் ரெளத்திரமாய் இருக்கவும் முடியுமெனச் சொல்கின்ற இடம் அற்புதமான தருணம்.

இதைத் தவிர்த்து இந்தப் படத்தில் ஒலிக்கமுனையும் பன்மைக்குரல்களையும் நாம் அவதானிக்கலாம். பிரபாகர் தனது சாட்சியத்தைப் பதிவுசெய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பான பின், ஏதோ வாசகம் எழுதிய ரீசேர்ட் அணிந்த ஒரு பெண்  கருத்துக் கூறுவார் 'நாங்கள் இப்படி எதுவும் எழுதாத ஆடைகள் அணிந்து வந்தால் கூட,   இவங்கள் ஏதோ அங்கே பார்க்காமலா இருக்கபோகிறாங்கள்' என்பதெல்லாம் பிரபாகரின் சாட்சியத்தை குலைக்கமுயல்பவை. அதேசமயம் இன்னொருகுரல், வளர்ச்சி என்பது இயல்பான நிலையில் நடக்கவேண்டும். உடலில் கால்மட்டும் வீங்கினால் அது வளர்ச்சியல்ல வியாதி எனக்கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. அந்நியமோகத்தையும், ஐடி தொழிலையும் விமர்சிக்கும் பிரபாகருக்கு, அவர்கள் இறுதிக்கச்சாய்ப் பொருளே தவிர, இதற்கு முதன்மைக்காரணங்கள் அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் என்பதை எவ்வளவு எளிதாகக் கடந்துபோகமுடிகிறது? தமிழை இன்னும் தாழ்த்தியதும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதும்  இந்த ஜ.டிக்காரகளா? தமிழ் தமிழ் என்று தமிழுக்காய்த் தீக்குளிப்போம் என் அப்பாவி இளைஞர்களை பலியாக்கவும் தயங்காத அரசியல் கட்சிகள் அல்லவா இவற்றுக்கு முக்கிய காரணம்? அவர்களை நோக்கியல்லவா பிரபாகர் பேசியிருக்கவேண்டும்?  இதையொரு பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இதையெல்லாவற்றையும் விட பிரபாகர் இறுதியில் கூறுவதைத்தான் நாம் இன்னும் கவனத்துடன் கேட்கவேண்டும். இப்போது ஏழைகள் பணக்காரர் என்று இருபெரும் பிரிவுகள் வந்துவிட்டன. இனி சின்ன விசயத்திற்குக்கூட மனிதர்களை மாறி மாறி கொல்லவும் துணியத் தயங்கமாட்டார்கள் என்னும் குரல்.

னந்தியின் பாத்திரம் அவ்வளவு இயல்பாய் 'கற்றது தமிழில்' இருக்கிறது. காதலிக்க விரும்பும் மனதையும், அதை வெளிப்படையாகக் காட்ட முடியாத அவதியோடு அவரது வாழ்வு நூலறுந்து பட்டம் போல அலைகிறது. ஆனந்தியாக நடிக்கும் அஞ்சலி ஒவ்வொருமுறையும் 'நிஜமாய்த்தான் சொல்கிறியா' எனக் கேட்கும் ஒவ்வொரு தருணங்களும் கவிதைக்கு நிகர்த்தது.காலத்தின் நிர்ப்பந்தத்தால் ஆனந்தி பாலியல் தொழிலாளியாக மாறியபோது - தான் எழுந்தமானமாய் கடற்கரையில் சுட்டுக்கொன்ற காதலர்களில்- ஆனந்தியும் ஒருத்தியாக இருந்திருந்தால் என்னவாயிருக்குமென பிரபாகர் எண்ணிப்பார்த்திருப்பாரா? அப்படி அவர் தன் ஆனந்தியைப் போலத்தான் பிறரும்... என நினைத்திருந்தால் எந்தப் பெண்ணையும் வெறுத்திருக்கமாட்டார் அல்லவா?  ஆகவேதான் சொல்கிறேன் பிரபாகரை எப்படிப் புரிந்துகொள்வதென்ற சிக்கலே இன்னுமின்னும் என்னை இப்படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. 

பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர,  பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க்  இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன. 

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி  ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம்.  எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்.


(நன்றி: 'காட்சிப்பிழை' - ஒக்ரோபர் 2013)

கோபிகா செய்தது என்ன? -ஜெயமோகன்

Monday, November 11, 2013


’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.சே.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை.

ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. இயக்கம் இருந்த நாட்களை, இயக்கம் அழிந்தபின் மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை பல்வேறு சில்லறை நிகழ்ச்சிகளின் வழியாக மென்மையாகத் தொட்டுச் செல்கிறது கதை.

மாம்பழமும் புட்டும் மீன்கறியுமாக யாழ்ப்பாணச்சாப்பாடு சாப்பிட்டு பழைய நினைவுகளை அலசியபடி போடும் மதியத்தூக்கம். இயக்கத்திற்குச்சென்ற கனவுநிறைந்த மனிதர்களின் துளித்துளி நினைவுகள். இயக்கத்தில் இருந்து அடிபட்டு மீண்டு வந்திருப்பவர்கள் இயக்கத்தில் இருந்து ஓடிப்போய் என்னென்னவோ ஆகி இப்போது முக்கால்வாசி பீலாவுடன் வாழ்பவர்கள் என நுட்பமாக முடையப்பட்ட சித்திரங்கள். அதன் வழியாக ஒரு விடுதலை – வன்முறை இயக்கத்துடன் எளிய லௌகீகர்களுக்கு இருக்கும் விருப்பும் வெறுப்பும் கலந்த உறவின் அந்தரங்கமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்காலகட்டத்தை முதிரா இளமையின் காதலின் மனக்கிளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது இக்கதை. ஆணின் முரட்டுவிளையாட்டுத்தனத்தை காதலிக்கும் எளிய நடுத்தவர்க்க பெண்ணின் மனநிலையை ஈழமக்களின் மனநிலையுடன் ஒப்பிடுகிறது. அந்த மனநிலையை கடைசிவரை நீட்டி அவனுடைய வன்முறையையும் கூட மன்னித்துவிடும் ‘புரிந்துகொள்ள முடியாத’ தன்மையை யாழ்ப்பாண மக்களின் இயல்புக்கு சமானமாகச் சுட்டிக்காட்டுகிறது. யோசிக்க யோசிக்க விரியும் ஒரு கற்பனை. விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு.

போருக்குப்பிந்தைய ஈழ இலக்கியத்தில் சயந்தன் [ஆறாவடு], அகிலன், யோ.கர்ணன் போன்ற சிலர் முக்கியமாக கவனம் ஈர்க்கிறார்கள். இளங்கோவையும் அவ்வரிசையில் வைக்கமுடியும்.

நன்றி: http://www.jeyamohan.in/?p=41049 (Oct 25, 2013)

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்...

Saturday, September 14, 2013


Before sunrise (1995)

இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புத்தபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச் சந்திப்பதைத் தவிர்க்கும் துயரத்துடன் ஜரோப்பிய நாடுகளுக்குள் அலைகின்றார். ரெயினில் சந்திக்கும் பெண்ணோ பாரிஸில் படித்துக்கொண்டிருப்பவர். ஹங்கேரியில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து பாரிஸிற்குத் திரும்பும் வழியிலேயே இந்த அமெரிக்க இளைஞரைச் சந்திக்கின்றார்.

இயல்பான உரையாடலில் தொடங்கும் அறிமுகம், அவர்களின் விருப்புகள், எதிர்காலக் கனவுகள், நிகழ்காலத் தடுமாற்றங்கள் என பகிர்ந்து கொள்வதென நீள்கிறது. பாரிஸிற்கு ரெயினில் போகும் பெண்ணை, தன்னிடம் இரவு அறை எடுத்துத் தங்கக் காசில்லை, விமானம் ஏறும்வரை தெருக்களிலேயே அலையப்போகின்றேன், என்னோடு கூடவே கொஞ்ச நேரம் கழிப்பாயா எனக் கேட்க, வியன்னாவில் தெருக்களில் இருவரும் அலைந்து திரிவதுடன் படம் முடிகிறது.

 மெல்லிய காதல் அந்த சில மணித்தியாலங்களில் முகிழ்ந்தாலும் அமெரிக்க இளைஞன், 'நாங்கள் திருமணம் செய்தால் கூட இன்னும் 10,20 வருடங்களில் எமக்கு அந்தத் திருமண வாழ்க்கை கசந்து போய்விடும் என  அரும்பத் துடிக்கும் எதிர்காலக் கனவுகளைக் கலைக்கிறான். எனினும் அவர்களுக்குள் ஊற்றெடுத்துக் கிளம்பும் காதலை மறுதலிக்க முடியாமல், இன்னும் 6 மாதங்களில் இதேயிடத்தில் இன்னதிகதியில் சந்திப்போம் எனக்கூறி, அதைத் தவிர எவ்விதத் தொடர்புகளையும் பகிராமல் பிரிகின்றனர்.

முற்றுமுழுதாக சில மணித்தியாலங்களுக்குள் நிகழும் கதை மட்டுமின்றி, இரண்டே இரண்டு முக்கிய பாத்திரங்களைக் கொண்டு நகர்த்தப்பட்ட இப்படத்தை முன்னொருபொழுது தற்செயலாகப் பார்த்தபோது மிகவும் வசீகரித்திருந்தது. அதுவும் உரையாடல்களால் மட்டும் இப்படியொரு சுவாரசியமான படத்தை எடுக்கமுடியுமா என்ற வியப்பும் கூடவே வந்திருந்தது. இதில் இரு பாத்திரங்களும் மிக நேர்த்தியாகவும், ஒன்றுக்கொன்று தங்களை விட்டுக்கொடுக்காதும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உலகில் அனைத்தையும் ஒரு பெரும் புரட்சியினால் மாற்றிவிடமுடியும் என்கின்ற பெரும்பான்மையான ஆண்களின் பிரதிநிதியாக ஜெசி படைக்கப்பட்டதையும், பெரும் புரட்சிகள் எப்போதும் நிகழுமென்று தெரியாது, அதற்கு முன்னர் செய்யவேண்டிய சிறுசிறுவிடயங்கள் இருக்கின்றன, பெரும் புரட்சிக்காய் காத்திருப்பதை விட இவைதான் இன்னும் முக்கியமானவை எனத் துணிந்து கூறும் பெண்ணான செலினையும் கண்டு -என்றென்றைக்குமாய் நினைவில் கொள்ளும் ஒரு படமாக- எனக்குள் இதைச் சேகரம் செய்திருந்தேன்.


Before Sunset (2004)

Before sunrise கொடுத்த உற்சாகத்தின் மிகுதியில் அதன் தொடர்ச்சியாக வந்த Before Sunset ஐ  தேடத்தொடங்கினேன். அந்தப் படமும் எனக்கு அவ்வளவு ஏமாற்றத்தைத் தராது மிகவும் கவர்ந்திருந்தது. இப்போது ஜெசி அவரின் முப்பதுகளில் இருக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் அவர் ஒரு நாவலாசியருமாகிவிட்டார். அவர், தான் செலினை வியன்னாவில் சந்தித்த நிகழ்வை மையமாகக் கொண்டு நாவலொன்றும் எழுதியிருக்கின்றார். அத்துடன் ஜெசி அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்து அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது. தன் நாவலை அறிமுகப்படுத்த ஜெசி பாரிசுக்கு வந்த பொழுதில், புத்தகக் கூட்டத்தில் இந்த நாவலில் வருகின்ற பெண்ணை அந்த ஆண் பாத்திரம் மீண்டும் சந்திக்கின்றதா ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்கு பதிலளிக்க முற்படும் ஜெஸி, ஓரு ஓரத்தில் புன்ன்கையோடு காத்திருக்கின்ற செலினை –கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் -கண்டுகொள்கிறார். ஜெசிக்கு அன்றிரவு அமெரிக்காவிற்குச் செல்வதற்கான விமானம் இருக்கின்றது.

வியன்னாவின் தெருக்களில் அலைந்தமாதிரி ஜெசியும் செலினும் பாரிஸ் தெருக்களில் நிறையக் கதைத்தபடி அலையத் தொடங்குகின்றனர். ஜெசிக்கு திருமணம் ஆகியதுபோல, செலினுக்கும் ஒரு புகைப்படக்கலைஞர் காதலராக இருக்கின்றார். செலின் அவருக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும் சூழலியல் துறையில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் ஜெசி, தன் திருமண வாழ்வில் சந்தோசம் எதுவுமில்லை, மகனுக்காய் மட்டுமே திருமண வாழ்க்கை தொடர்கிறது என்கிறார். செலினும் தன் காதலர் அடிக்கடி வெவ்வேறு நாடுகளுக்கிடையில் அலைவதால் தங்களுக்குள்ளும் இடைவெளி விழுந்துவிட்டதென்கிறார். இடையில் ஜெசி, வியன்னாவிற்கு தாங்கள் சந்தித்த ஆறு மாதங்களுக்குப் பின் அதேயிடத்திற்கு வந்தபோது செலின் ஏன் வரவில்லை எனக் கேட்கிறார். அதே நேரத்தில் செலினின் பாட்டியார் இறந்துவிட்டதால்  தன்னால் வரமுடியவில்லையென இயலாமையுடன் கூறுகின்றார். ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திப்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்புகளும் அவர்களுக்கிடையில் இல்லை என்பதும் ஏற்கனவே நாம் அறிந்ததே.

செலினின் அபார்ட்மென்டிற்கு ஜெசி போகின்றார். கிற்றாரில் தேர்ச்சி பெற்ற செலினை தனக்காக கிற்றாரை இசைக்கச் சொல்கிறார் ஜெசி. செலின் இசைக்கிறார். பிறகு ஜெசி ஸ்ரிரீயோவில் போடும் பாடலுக்கு செலின் நடனமாடுகின்றார். பாடலின் நடுவில் செலின், 'உனக்கான விமானத்திற்கு நேரமாகிவிட்டது' என்கின்றார். 'எனக்குத் தெரியும்' என தன் திருமண மோதிரத்தை ஒருவித அந்தரத்துடன் ஜெசி பார்ப்பதுடன் படம் முடிகிறது.


Before Midnight (2013)

ஜெசிக்கும் செலினுக்கும் இப்போது திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளும் இருக்கின்றன.  செலினும் ஜெசியும் முதன்முதலாக வியன்னாவில் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டன என்பது நமது ஞாபகத்திற்காய்.

ஒரளவு பிரபல்யமான எழுத்தாளராகிவிட்ட ஜெசியை, கிறீக்கிலிருக்கும் ஒரு எழுத்தாளர் தனது இருப்பிடத்திற்கு கோடையைக் கழிக்க அழைப்பு விடுகின்றார். ஜெசி, செலினோடு, ஜெசியின் முதல் திருமணத்தில் பிறந்த மகனுடனும் சேர்ந்து விடுமுறையைக் கிறீக்கில் கழிக்கிறார். மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிடும் ஜெசிக்கு தனது மகன் பதினமத்தில் இருக்கும் பருவத்தில் தான் தன் மகனுக்கு அருகில் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது.

மகனை விமானம் ஏற்றிவிட்டு திரும்பும்வழியில் தன் ஏக்கத்தை செலினுக்குச் சொல்கிறார். அதிலொரு திட்டமாய் அமெரிக்காவில் போய் இருக்கலாமா என செலினிடம் ஜெசி கேட்க, ஜெசி தனது வேலை/கனவு அமெரிக்காவிற்குப் போனால் கலைந்துவிடுமெனச் சொல்கிறார். உரையாடல் தீவிரமாய் ஒருகட்டத்தில் நீள, இது நாம் இருவரும் பிரிந்துபோகின்றதற்கான புள்ளி போலும் என செலின் கூறுகின்றார் (குண்டு வெடிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது).

இப்படியே உரையாடி உரையாடி எழுத்தாளரின் வீட்டை அவர்கள் அடைகின்றார்கள். அங்கே பல்வேறு எழுத்தாளர்களுடன் வைனும் மதிய உணவுமாய் உற்சாகமான பேச்சு நடக்கின்றது. சிலர் தமது இழந்துபோன துணைகளின் துயரங்களைப் பகிர்கின்றார்கள். அங்கேயிருக்கும் எழுத்தாளரின் பேரனும் அவரது காதலியும் -செலின்/ஜெசி- போன்றவர்களின் பார்வையைப் போன்று அல்லாத வேறு ஒரு வாழ்க்கையின் திசையைப் பற்றி உரையாடுகின்றார்கள்.

 இதன் தொடர்ச்சியில், கிறீக் நண்பர்கள், ஜெசியும், செலினும் ஓர் இரவைக் குழந்தைகளின் தொல்லையில்லாது தனிமையைக் கழிக்க ஒரு உயர்ந்த ஹொட்டலை பதிவு செய்து கொடுக்கின்றார்கள். ஏற்கனவே உறவு உடைகின்ற நிலையில் இருப்பதாய் நினைக்கின்ற செலின் தாங்கள் இரவு  அங்கே போய்த் தங்கப்போவதில்லை என முதலில் மறுக்கின்றார். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் இருவரும் ஹொட்டலுக்குச் செல்கின்றார்கள்

அங்கே அழகாய்த் தொடங்கும் இரவு, ஜெசியின் மகன் தொலைபேசியில் பேசும்போது, செலின் ஜெசியிடம் பேசக்கொடுக்காது விடுவதுடன் வேறு நிறத்தைப் பூசிக்கொள்ளத் தொடங்குகின்றது. ஒரு எழுத்தாளனாய் இருக்கும் ஜெசி, புத்தகம் எழுதுவதிலும், அதைப் பிரபல்யமாக்க வெவ்வேறு நகரங்களுக்கு அலைவதிலும் மட்டுமே கவனமாய் இருக்கிறானே தவிர, தன்னையோ தன் பிள்ளைகளையோ கவனிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார் செலின். மேலும் ஜெசியினால் தன் career முற்றாக அழிந்துவிட்டது எனவும் அவர் பட்டியலிடுகின்றார். இப்போது கூட தனக்குக் கிறீக்கிற்கு கோடை விடுமுறைக்கு வர விருப்பமிருக்கவில்லை. நீங்கள் எழுத்தாள ஆண்கள் உங்கள் நாவல்களைப் பற்றி உரையாடுவதிலும் அடுத்து என்ன எழுதுவது எனக் கதைத்துக்கொண்டும் உலாத்திக்கொண்டும் இருக்கின்றீர்கள், என்னைப் போன்ற பெண்கள் சமையலறையில் இருந்துகொண்டு சாலாட் செய்தும், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு காலத்தை வீணாக்க வேண்டுமென தொடர்ந்து செலின் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.

ஜெசி இடைமறித்து, செலின் வேலைக்குப் போகும் நேரத்தில் எல்லாம் தானே வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றும், உங்கள் மீதிருக்கும் காதலால்தான் அமெரிக்கா கூட போகாமல் பாரிஸில் இருக்கின்றேன் எனவும் கூறுகின்றார். இடையில் செலின் யாரோ ஒரு புத்தக விற்பனையாளப் பெண்ணோடு ஜெசி உறவு கொண்டவரா எனக் கேட்கிறார். அதை ஓமென ஒப்புக்கொள்ளும் ஜெசி, நீ கூட உன் பழைய காதலனைச் சந்தித்தபோது உறவுகொண்டாய் என்பதை அறிவேன், ஆனால் இவற்றை எல்லாம் மீறி எனக்கு உன் மீதும் நம் இரட்டைக் குழந்தைகள் மீதும் நேசம் இருக்கின்றது' என்கிறார்.

மேலும் செலின் - ஜெசி உறவு சிக்கலாகின்றது.  தான் சொல்லும் எதையும் செவிமடுக்காதவன் ஜெசி என மேலும் மேலும் செலின் குற்றஞ்சாட்டுகின்றார். உரையாடல் ஓரிடத்தில் தீவிரமாகி, 'இனி என்னிடம் உனக்கான காதல் எதுவும் இல்லை' என அந்தக் ஹொட்டலை விட்டு செலின் வெளியே போய்விடுகின்றார்.

செலினும் ஜெசியும் சேர்ந்தார்களா? திரைப்படம் முடியும்போது அவர்களின் பாத்திரங்கள் எந்தப் புள்ளியில் விடப்படுகின்றன என்பதை இன்னும் இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காய் விட்டுவிடுவோம். இரண்டு மணித்தியாலயம் நீளும் இப்படத்தில் தொடக்கத்தில் உள்ளே நுழைய சற்று அலுப்பாயிருந்தாலும், ஜெசியும் செலினும் தங்களுக்கிடையில் உரையாடத் தொடங்க நேரம் போனதே தெரியாமல் படம் முடிந்திருந்தது. அவ்வளவு ஆழமாய் உரையாடலை மட்டும்  முன்வைத்தே படத்தை நகர்த்தியிருப்பார்கள். இப்படத்தில் தெரிந்த ஒரு குறைபாடு என்னவென்றால், முதல் 2 படங்களிலும் ஆண் பாத்திரத்திற்கு நிகராய் படைக்கப்பட்ட பெண் பாத்திரம -சற்று விலத்திவைக்கப்பட்டு- எப்போதும் குறைகளை மட்டும் ஒப்புவிக்கும் பெண்ணாய் செலின் ஆக்கப்பட்டுவிட்டாரோ போலத் தோன்றியது.

எங்கோ ஓரிடத்தில் இருவரும் சமரசமாக வேண்டும் என்பதே குடும்ப அமைப்பு முன்வைக்கும் நிபந்தனை. படத்தைப் பார்க்கும்போது பாத்திரங்கள் குடும்ப அமைப்புக் குறித்து நிறையக் கேள்விக்குட்படுத்தும் என நினைத்துக்கொண்டிருந்தேன். விரும்பிச் செய்யும் சமரசங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. ஆனால் பிடிக்காமல் செய்யும் சமரசங்கள் பிறகு குற்றச்சாட்டுக்களாய் அலையத் தொடங்கும்போது, அது எல்லோரையும் காயப்படுத்தச் செய்வதுடன் கடந்த காலத்து இனிமையான நாட்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

இப்படம் முடிந்துவரும்போது, நண்பர் கூறினார், 'இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது மனது எங்கும் வெற்றிடமே உருவாகிறது' என்று. எனக்கென்னவோ இவ்வாறான படங்கள் இந்த வாழ்க்கை - முக்கியமாய் குடும்ப அமைப்பு- எவ்வளவு சிக்கலானது என்பதையும், அங்கே பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் இன்றி எதுவுமே சாத்தியப்படாது' என்பதை மீளவும் நினைவுபடுத்துகிறது போலவும் தோன்றியது.

0000000000000000000000000000000