கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றை வாசித்தல் ‍ 04

Thursday, October 08, 2020

சிங்களத்தீவினுக்கிடையில் யாரோ போட்டுவிட்ட பாலத்தை உடைப்போம்; நாமாய் நடந்துபோய் கைகுலுக்குவோம்!

.......................

புதிதாய்த் தொடங்கப்படும் எந்த விடயமாயினும் முடிவுக்கு வரத்தான் செய்யும். அந்த முடிவு எப்படிப்பட்டது என்று தெரியாது இருப்பதில்தான் ஒரு சுவாரசியம் இருக்கும். ஆனால் இது நன்றாக இருக்கிறதே இப்படியே நீடித்தால் நல்லமென ஒரு மனோநிலை வந்துவிட்டதால்தான் பிறகு முடியும்போது ஏமாற்றமாக இருக்கும். மேலும் நல்லதாய் இருக்கின்றதே என்பதற்காக தேவையில்லாது நீடித்துக்கொண்டிருப்பதில் ஏதும் பிரயோசனமில்லை.

இவ்வாறு ஏதும் புதிய விடயங்கள் தொடங்கும்போது வெளியாளாக நின்று வேடிக்கை பார்ப்பது இன்னும் சுவாரசியமானது. இன்றைக்கு உலகம் விரிந்துவிட்டாலும், நம்மை வீட்டுக்குள் சிறைக்காவல் வைத்திருக்கும் காலங்களில்கூட மெய்நிகர் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதில்லை. எழுதுபவர்கள் எல்லாம் பேச்சாளர்களாக மாறினால் எழுத்துக்கு பிறகு என்ன மதிப்பு. எழுத்து வாசிப்பதினால் நிகழ்வதே தவிர எழுத்தாளர்களின் உரைகளைக் கேட்பதால் நிகழ்வதில்லை அல்லது ஆகக்குறைந்தது நான் அந்த வகையைச் சேர்ந்தவனல்ல என்று சொல்லிக்கொள்ளலாம்.

பாடசாலை நண்பர்கள் சேர்ந்த ஒன்றிரண்டு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதைத் தவிர இலக்கியம் சார்ந்து சில அழைப்பிதழ்கள் வந்தபோதும் தவிர்த்திருக்கின்றேன். இலக்கியம் என்பது அந்தரங்கமானது. ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடியது. அதை ஒரு பொது அனுபவமாகப் பார்ப்பது கூட அவசியமற்றது. மற்றும்படி கொஞ்ச நண்பர்களாக சேர்ந்து இலக்கியம் சார்ந்து பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சிக்கலிப்பதிருப்பதில்லை. ஒருவர் மட்டும் பேசக் கேட்பதைவிட எல்லோரும் மாறி மாறி தங்கள் அனுபவங்களைப் பகிர்வது அழகானதுதான் அல்லவா?


ண்மையில் வரலாற்றுக்கு தொன்மங்கள் ஒரு பொருட்டே இல்லையென இராமாயணம், பாரதம் என்பவற்றை முன்வைத்து ஒரு பதிவை வாசித்தபோது 'வரலாற்றுக்கு வந்த சோதனை' என நினைத்துக்கொண்டேன். தொன்மங்களை விலத்திவிட்டால் வரலாற்றையே வாசிக்கவே முடியாது என்பது அறியாது எப்படி இப்படிப் பொதுவெளியில் எழுதித்தள்ளுகின்றனர் என நினைத்துக்கொண்டேன். பாரதம் போன்ற இதிகாசங்களுக்கு போன்றவற்றுக்கு எல்லாம் போகத்தேவையில்லை. நமது சிறுதெய்வங்களுக்கு போவோம். முக்கியமாய் குலதெய்வங்கள், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் தொன்மங்கள். இன்றைக்கு நம் கண்முன்னே இந்தச் சிறுதெய்வங்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டு வரும்போது, இன்னும் கொஞ்சக்காலத்தில் அவர்கள் பெருங்கடவுளர்கள் ஆகிவிடுவர்,

கற்பனைகள் என்று பின்னொருகாலத்தில் இவற்றை முன்வைத்து ஒருவர் வரலாற்றை வாசித்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும். தொன்மங்களில் கற்பனை, அதிபுனைவு, அதிகாரம் என்பவை அழுத்தமாய்ப் படிந்திருந்தாலும், எதுவும் நடக்காமல் தொன்மங்களாக்கப்படுவது அவ்வளவு சாத்தியமல்ல. இப்படியே தொன்மங்களை விலத்தி வரலாற்றை வாசித்தால், ஒருவகையில் இன்றைய மானுடவியல் கற்கைகளே இல்லையென்றே சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் விரித்துப் பார்த்தால் அவ்வளவு வளமையான வாழ்விருந்த ஆபிரிக்க்காக் கண்டத்து மக்களுக்கு வரலாறே இல்லையென எளிதாக நிரூபித்துவிடலாம்.

இலக்கியத்தைப் போல வரலாற்றைக் கற்றுக்கொள்வதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை என்பதால் எனக்கு வரலாற்றறிவு குறைவு என்றாலும் இப்படி யாரேனும் தங்களை செயற்பாட்டாளர்களாக முன்னிறுத்தி சமூகமே கேள் என்று எழுதும்போது அலுப்பாக இருக்கிறது. சரி அதை இத்தோடு விடுவோம்.


ன்று காலை தற்செயலாக ஒரு சிங்கள நண்பரோடு கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது. அவர்கள் 'Aney' என்று கதைக்கத் தொடங்கும்போதே மனசு எவ்வளவு மலர்ந்துவிடுகிறது.அவரொரு எழுத்தாளர் என்பதால் வந்த நெருக்கம் அது. எனக்கு நிறைய தமிழ்ச்சொற்கள் தெரியுமே, உனக்குத் தெரிந்த சிங்களச் சொற்கள் சொல் என்றார். எனக்கு 'மம ஒயட்ட ஆதரே'யைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டேன். இப்படியே போன பேச்சில் மகாவம்சம் ஒரு இனத்துவேசப் பிரதி என்று அவரே பேசத்தொடங்கியதால் அவரோடு இன்னும் நெருக்கம் வந்தது. அதன் நீட்சியில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேசத்தொடங்கினோம். அது பிறகு சிலப்பதிகாரம்/கண்ணகி என்று போனது.

சிங்களவர்களுக்கு கண்ணகி ஒரு முக்கிய பத்தினித் தெய்வம் என்பதை நாமனைவரும் அறிந்ததே. நான் கண்ணகியின் தமிழ் வடிவத்தைச் சொல்லும்போது, அவர் கண்ணகியின் ஒரு சிங்கள வடிவத்தைச் சொல்லத் தொடங்கியபோது வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் இருக்கும் ஒரு கண்ணகிக் கதையின் வடிவத்தில், மதுராபுரிக்குப் போகும் கண்ணகி, இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் வாழ்கின்றவர் எனச் சொல்லப்படுகின்றது. இலங்கையில் இருந்து மதுராபுரிக்குப் போகின்ற கண்ணகி, நமது சிலப்பதிகாரத்தைப் போல இறுதியில் சொர்க்கபுரியை அடைவதில்லை.

அவர் திரும்ப இலங்கையின் வடக்குக்கு வந்து தியானம் செய்து புத்தமதத்துக்கு மாறுகின்றார். அப்படியே அவர் தியானம் செய்யும்போதுதான் மணிமேகலை வந்து கண்ணகியைச் சந்திக்கின்றார் என்றொரு கதை தங்களிடையே இருக்கின்றதும் என்றார் நண்பர். அதாவது இலங்கையின் வடக்கைச் சேர்ந்த இந்துவான கண்ணகி பின்னர் இன்னொரு புத்தராக மாற விரும்பி தியானம் செய்கின்றார் என்பது ஒருவடிவம்.

இன்னொரு வடிவத்தில் கண்ணகி ஒரு கடவுள். அவர் கடவுளர்களின் விருப்பின் பூமியில் நிகழும் கலவரங்களை அடக்கப் பிறந்து தனக்கான கடமையைச் செய்துவிட்டு, மன்னனின் தோட்டத்தில் மாங்கனியாக மீண்டும் பிறந்து தனது பிறப்பைப் பூர்த்தி செய்வதாகவும் ஒரு கதை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, ஆனால் இது சற்று மிகைப்படுத்திய கதை என்றார். வரலாற்றைத் தெளிவாக வாசிக்கத் தெரிந்திருக்கின்றார். கொழும்புப் பகுதியில் இருக்கும் நவகமுவா என்ற கண்ணகி கோயில் பிரபல்யம் வாய்ந்தது என்றவர், எப்படி கொச்சிக்கடை தேவாலயம் பிள்ளை இல்லாதவர்க்கு குழந்தை வரம் கொடுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறதோ அதுபோல இந்தக் கண்ணகி கோயிலும் என்றார்.

எவ்வாறாயினும் கண்ணகி ஒரு இந்துவாக இருந்திருக்கின்றார் என்பதை சிங்களவர்களும் ஒப்புக்கொள்கின்றார். பின்னர் அவர் ஒரு பெளத்தராக மாறியிருக்கின்றார் என்பதையும் சொல்கின்றனர். இது ஏதோ ஒருவகையில் தங்களைப் போன்ற மூத்தகுடிகளாக இந்துக்களின் (அல்லது தமிழர்களின்) இருப்பை ஏதோ ஒருவகையில் சிங்களவர்கள் ஒப்புக்கொள்ளும் கட்டுடைப்புக்களை நாம் அவர்கள் வைத்திருக்கும் இந்தப் பிரதிகளைக் கொண்டே செய்யமுடியும். ஆனால் நாம் செய்வது என்ன ஒன்று அரசியல் சகதிக்குள் தொடர்ந்து புரண்டுகொண்டிருப்பது. அப்படிச் சகதிக்குள் புரண்டு அழகான ஒரு தாமரையைக் கொண்டுவந்தால் (இது இந்தியத் தாமரை அல்ல) கூட பரவாயில்லை. ஆனால் மேலும் மேலும் சகதியை அல்லவா கொண்டுவந்து சேர்ந்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறத்தில் கொஞ்சம் வாசித்தவர்கள்/செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்க்குக் கூட எப்படி வரலாற்றை வாசிப்பது என்று சரியாகத் தெரியாது திணறுகின்றனர்.

இறுதியில் அந்தத் தோழி நமது தமிழ்க் கதைகள்/கவிதைகள் சிங்களத்தில் நிறைய மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று சொன்னார். உனது படைப்புக்களைச் சிங்களத்தில் மொழிபெயரேன் என்று ஒருவரின் தொடர்பையும் தந்தார். நானும் அவரின் தொகுப்பு அடுத்த வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபின் ஆகக்குறைந்த சில படைப்புக்களையாவது தமிழாக்கி உங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்றேன். கலைதான் வேறெதையும் விட நமது இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளை விலத்தி நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் என்பதைத் தீவிரமாக நம்பும் என்னைப் போன்ற இன்னொருவரைச் சந்ததித்து மகிழ்ச்சியாக இருந்தது.

வளங்கள் குறைவாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாது, இருப்பதைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் நம்மைப் பிறர் மதிப்பார்கள். என்னதான் நான் தமிழ் என்ற அடையாளத்தைக் கைவிடக்கூடாது என்ற பெருவிருப்பில் அவருக்கு 'மம ஓயட்ட ஆதாரே' எனச் சொல்லி கையசைத்தேன். ஏன் அவர் அவ்வளவு வெட்கத்துடன் விடைபெற்றார் என்பதுதான் இன்னும் புரியவில்லை.

......................
(Aug 22, 2020)

0 comments: