கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Sadness of Geography: My Life as a Tamil Exile

Tuesday, October 20, 2020

கடந்த சில நாட்களாக ஒரு தன் வரலாற்று புதினமொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழத்தில் 1980களில் நடக்கின்ற சம்பவங்களின் தொகுப்பெனச் சொல்லலாம். சற்று குழப்பமான வாசிப்பை அதனூடாகக் கண்டடைந்துகொண்டாலும், அன்று நடந்தவைகளை ஒரு தனிமனிதனின் பார்வையினூடாகப் பதிவு செய்பவை என்பதால் முக்கியமானது.

இந்தப் புதினத்தை எழுதியவர், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் இதை எழுதத் தொடங்கி 5 பக்கங்களுக்கு மேலே தொடர்ந்து எழுத முடியாது நிறுத்தியிருக்கின்றார். பின்னர் அண்மையில் எழுதியபோது தனது எழுத்தில் இருந்த பிழைகளை, இலக்கண வழுக்களைத் திருத்த தனக்கொரு நல்லதொரு எடிட்டர் கிடைத்ததாலே இது சாத்தியமாகியிருக்கின்றதெனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழ்ச்சூழலில் இன்னும் எடிட்டர்களுக்கு அவசியம் உணரப்படவே இல்லை. பள்ளத்தாக்குகளில் எவருமே கேட்காது மறைந்துபோகும் குரலாக இருந்தாலும் இதைத் திருப்பத் திருப்பச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒரு கருத்தரங்கில் ஷியாம் செல்வதுரையின் funny boy பற்றி விதந்து கட்டுரை வாசித்த நண்பருக்கு, நிகழ்வின் முடிவில் ஒருவர் வந்து ஷியாமுக்கு அல்ல இந்த நாவல் நன்றாக வந்ததற்காக எடிட்டருக்குத்தான் நன்றி சொல்லவேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவ்வாறு பெரும்பாலான நல்ல ஆங்கில நாவல்களில் எடிட்டர்களின் பங்கு இருக்கின்றது. அது ஹெமிங்வே காலத்தில் இருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

எடிட்டர்களின் அவசியம் பற்றி அறிய சி.மோகன் எழுத்தாளர்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிய பத்திகளினூடாக இன்னும் விரிவாக அறிந்துகொள்ளலாம். எடிட்டர்களின் முக்கியத்துவம் பற்றிய உரையாடலை கிரியாவை முன்வைத்துத் தொடங்கிய ஜெயமோகன் அதை எதிர்த்திசைக்குக் கொண்டு சென்றுபோனதும் அவலமானது. எடிட்டர்கள் பிரதிகளைத் திருத்தினாலும் இறுதி முடிவு எழுதியவர்க்கே இருக்கின்றது. ஜெமோ முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டே கிரியாவின் எடிட்டர்கள் தமக்கான மொழியில் அதை மாற்றி எல்லாவற்றையும் 'பொதுவான மொழியில்' கொண்டுவந்துவிடுகின்றார்கள் என்பதாகும். அவ்வாறு ஒருபோதும் எளிதாக மாற்றமுடியாது என்பதற்கு நாம் சம்பத்தின் 'இடைவெளி'யையும், இமையத்தின் நாவல்களையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். சம்பத்தின் மொழிநடையும், இமையத்தின் வட்டாரமொழி வழக்கும் எவ்வளவு எடிட்டர்கள் முயற்சித்து மாற்றினாலும் மாறப்போவதில்லை. எடிட்டர்கள் என்ன செய்வார்கள்/என்ன செய்யமுடியும் என்பதை ஒழுங்காக விளங்காததால் வரும் அச்சமே தமிழ்ச்சூழலில் எடிட்டர்கள் பற்றிய எந்த உரையாடலையும் சரியான திசையில் இழுத்துச் செல்வதில்லை.

இன்று உலகம் சுருங்கிவிட்ட சூழ்நிலையில், தமிழ்ப் படைப்புக்கள் உலகச்சூழலுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கும், கவனிக்கப்படவும் உள்ள சூழலில் தமிழ்ச்சூழலில் நல்ல எடிட்டர்கள்/எடிட்டர்கள் குழு இருந்தால் இந்த காலம் இன்னும் எளிதாகக் கனியமுடியும். எழுதுவதெல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் என்ற நினைப்பில் இருப்பவர்க்கு எடிட்டர்கள் அவசியமில்லை. ஆனால் எழுத்துக்கள் நூலாகிவந்தபின்னர் இன்னும் இதை செம்மையாக்கியிருக்கலாமே, இன்னொரு வடிவத்தில் முயற்சித்திருக்கலாமே, இந்த அத்தியாயங்களை வேறொரு ஒழுங்கில் வடிவமைத்திருக்கலாமே என்று யோசிப்பவர்க்கு எடிட்டர்கள் அவசியப்படுவார்கள். முக்கியமான ஒரு விடயம், ஏற்கனவே இவ்வாறு அல்லது இவ்வாறான ஒத்த சாயலில் படைப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றனவா என ஆலோசனை சொல்வதற்கும் எடிட்டர்கள் உதவக்கூடும்.

நான் வாசித்து முடித்த தன் வரலாற்று நூல் 'The Sadness of Geography: My Life as a Tamil Exile'. அதை இந்த நோயச்ச காலத்தில் வாசிக்கத் தபாலில் அனுப்பி வைத்த மைக்கேலுக்கும் நன்றி.
...................

(Aug 28, 2020)

0 comments: