எனக்கொரு நண்பர் இருக்கின்றார். அவரோடு புத்தரைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு பொழுதும் 'யசோதரையை நள்ளிரவில் கைவிட்டுப்போன புத்தர் பற்றிப் பேசாதே' என்று என் வாயை அடைத்துவிடுவார். நானும் சும்மா இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புத்தரைப் பேச்சின் சுவாரசியத்தில் புகுத்தி விடுவேன். புத்தரும் கள்ளர், உன்னைப் போன்ற எழுதுகின்றவர்களும் கள்ளங்கள் என்று கொதிப்பின் எல்லையில் நின்று பேசத்தொடங்குவார். என்னைப் போன்ற எழுதுகின்றவர்களில் பலர் ஏமாற்றுக்காரர்கள் என்பதில் மறுப்பேதுமில்லை, புத்தரை அப்படி எளிதில் முத்திரை குத்திவிடமுடியாது என்று மீண்டும் குறுக்கிடுவேன்.
புத்தரைப் பற்றியும் புத்தர் போதித்தவை பற்றியும் நிறைய நூல்கள் இருக்கின்றன. ஆனால் யசோதரையின் நோக்கில் நின்று ஏதேனும் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றனவா எனத் தேடியபோதுதான் 'யசோதரை' என்ற இந்தப் புதினத்தை வந்தடைந்தேன். இது வோல்கா என்பவரால் சுந்தரத் தெலுங்கில் எழுதப்பட்டிருக்கின்றது. யசோதரையின் பார்வையில் புத்தர் விமர்சிக்கப்படுவார் என்ற என் எண்ணத்தை மாற்றி. இது யசோதரை எவ்வாறு புத்தர் நிர்வாணமடைவதற்கு உதவினார் என்பதைச் சொல்வதால் சற்று சுவாரசியமாக இருந்தது. தனக்கானதும், உலகிற்கானதுமான தேடலில் இருந்த புத்தர் திருமணத்தையே விரும்பாதவராக இருக்கும்போது, யசோதரையை ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது யசோதரையின் மீது புத்தருக்கு மையல் வருகின்றது. ஆனால் என்றோ ஒருநாள் எல்லாவற்றையும் துறந்துபோகும் மனோநிலையில் யசோதரையின் வாழ்வில் விளையாடக்கூடாது என்ற அக்கறையுடனும் புத்தர் இருப்பதை இந்தப் புதினம் கவனப்படுத்துகின்றது.
இதில் வரும் யசோதரை புத்தரின் தேடலை விளங்கிய ஒரு பெண்ணாக இருக்கின்றார். புத்தரும் யசோதரையும் நிறைய விவாதங்களைச் செய்பவர்களாக, புத்தர் பெண்கள் மீது மரபின் நீட்சியில் அவருக்குள் வைத்திருக்கும் எண்ணங்களை யசோதரை மாற்றுகின்றவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். புத்தரைத் துறவுக்குப் போக ஆயத்தப்படுகின்ற/அனுப்பிவைக்கின்ற துணிச்சலானராகவும் யசோதரை இங்கே இருக்கின்றார்.
ஒரு நாளைக் குறித்து, இந்த நள்ளிரவில் என்னை விட்டு விலகிப் போ, நீங்கும்போது எனக்குச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை எனச் சொல்கின்ற யசோதரை பின்னர் தனது சித்தாத்தன் புத்தரான பிறகு இந்த நாவலில் சந்திப்பதில்லை. பரிநிரவணமடைந்த புத்தர் கபிலவஸ்துக்கு வரும்போது அவரைப் பார்க்க எல்லோரும் ஆவலுடன் இருக்கும் யசோதரை ஒருபோதும் புத்தரைப் போய்ச் சந்திக்காதவராகவே இருக்கின்றார் (சித்தார்த்தரைப் பற்றி எழுதப்பட்ட பிற நூல்களில் புத்தரான பிறகு யசோதரை அவரைச் சந்திப்பதான குறிப்புகள் இருப்பது வேறுவிடயம்).
அதேசமயம் புத்தரின் வளர்ப்புத் தாயான கெளதமி, அவரின் வளர்ப்பு மகனான சித்தார்த்தனின் வழித்தடத்தைப் பின் தொடர்ந்து அவரின் மகனான ஆனந்தனும் சென்றுவிட, அவரின் கணவரான சுத்தோதனரும் இறந்துவிட, முதுமையில் எவருமில்லாத் தனிமையில் வாழ்வின் அர்த்தம் தேடித் துயருகின்றார். அப்போது யசோதரை கெளதமியை புத்தரின் சங்கத்தில் போய்ச் சேரச் சொல்கின்றார். அவர் அதில் சேர்வதன் மூலம் புத்தரின் சங்கம் பெண்களையும் முதன்முதலாக உள்ளெடுக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றார். இவ்வாறு புத்தரையும், அவரின் சங்கத்தையும் விளங்கிக்கொள்கின்ற யசோதரை வாழ்நாளில் ஒருபோதும் பின் புத்தரைச் சந்திப்பதேயில்லை. ஆனால் யசோதரை அவரின் நாட்டிலுள்ள ஒரு புத்தசங்கத்தில் சேர்ந்து நோயுற்ற மக்களுக்கு உதவி செய்யும் ஒரு பிக்குணியாக மாறி, அவரின் 78ஆம் வயதில் மரணமடைவதாக இந்தப் புதினம் முடிகின்றது. அந்த மரணம் ஒரு பரிநிர்வாணமடைந்த உயிரின் மரணம் என அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுவாரசியமாகச் சில மறுவாசிப்புக்கள் நிகழ்ந்தாலும், நாவல் மிகப் பலவீனமாக இருக்கின்றது. புத்தருக்கும், யசோதரைக்கும் இடையிலான உரையாடல்களைத் தவிர்த்து மிகுதி அனைத்துப் பகுதிகளும் சோர்வூட்டுகின்ற வேகத்தில் நகர்கின்றன. அன்றைய காலத்தில் பெண்களுக்கான வெளி சுருக்கப்பட்டிருப்பது புரிந்திருப்பினும், யசோதரையை இன்னும் சிறப்பான ஆளுமையாக நாவலிற்குள் கொண்டுவந்திருக்கலாம். சடங்குகள் சம்பிரதாயங்களை மறுக்கும்/வெறுக்கும் புத்தருக்கு யசோதரையைத் திருமணஞ்செய்யும்போது ஒரு சிக்கல் வருகின்றது. பிராமணர்களை கொண்டுசெய்யும் சடங்குக்கு புத்தர் எதிராக இருக்கின்றார். ஆனால் யசோதரையின் தகப்பன் ஒரு மரபுவாதி. இப்படிச் சடங்கில்லாது திருமணமே இல்லை எனச் சொல்லக்கூடியவர். அப்பிடிப் பிராமணர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களினால் முகத்தை இறுக்கமாக வைத்திருக்கும் புத்தரை, இதற்கும் நமக்கும் தொடர்பில்லை என இதை நகைச்சுவையாக எடுத்தால் நாம் எளிதாகக் கடக்கமுடியுமெனச் சொல்ல புத்தரும் யசோதரையும் அவற்றை நகைச்சுவையாக்கின்றனர். அப்போது நமக்குப் பிடிக்காதவை/வெறுப்பவை நிகழும்போது நாம் கடுமையாக எதிர்வினையாற்றத் தேவையில்லை, நாம் அதை எள்ளல் செய்து நகர்ந்தாலே போதும் நமது மனோநிலை காப்பாற்றப்படும் என்கின்ற உண்மையைப் புத்தர் அதன் மூலம் கண்டடைந்துகொள்கின்றார்.
இது தெலுங்கில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதாகத்தான் முன்னட்டை சொல்கின்றது. வாசித்து முடித்தபின், ஆங்கிலத்தில் வந்ததா வரவில்லையா எனத் தேடியபோது ஆங்கிலத்திலும் இந்த நாவல் இருப்பதை இணையம் சொல்கின்றது. இதைத் தமிழாக்கிய நாகலட்சுமி சண்முகத்திற்கு தெலுங்கு தெரிந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தாரா அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தாரா தெரியவில்லை. ஆனால் புத்தரின் தேடல் என்பதற்கெல்லாம் ஆய்வு ஆய்வு என்று வரும்போது இன்னும் வார்த்தைகளைச் சரியாகப் பாவித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆங்கிலத்தில் (அல்லது தெலுங்கில்) researchஆ searchஆ quest ஆ பாவிக்கப்பட்டது தெரியவில்லை. புத்தர்- என்னைப்பற்றி இந்த, உலகைப் பற்றி ஆய்வுசெய்யப்போகின்றேன் என வரும்போதெல்லாம் புதினத்தோடு ஒட்டமுடியாத ஒரு நிலை வரச்செய்கின்றது. மற்றும்படி தமிழாக்கத்தில் பெரிய குறைகளில்லை. மூலநூலில் இருக்கும் சோர்வுதான் யசோதரையை, ஹெர்மன் ஹெஸேயின் 'சித்தார்த்தா'வுக்கு அண்மையாகக் கூட வைத்துப் பார்க்க முடியாத நிலையைத் தருகிறதுபோலத் தோன்றுகின்றது.
'யசோதரை'யை வாசிக்கத் தொடங்கியபோது புத்தருக்கு நிகராக யசோதரையும் கம்பீரமாக எழுந்து புத்தரினால் யசோதரை பாதிக்கப்படவில்லை என்று சொல்லி இந்த நூலை நண்பருக்கும் வாசிக்கக் கொடுக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் இதை வாசித்துவிட்டு ஏற்கனவே யசோதராவின் வாழ்வை சீர்குலைத்தவர் புத்தர் என்றால், இப்போது வோல்கா என்ற பெண்ணின் மனவோட்டத்தையும் திசைமாற்றிய எழுத்தாளக் கூட்டமே என அவர் குரலை உயர்த்தினால் என்ன செய்வது என்று எண்ணவும் அச்சமாக இருக்கிறது. 'யசோதரை' என்ற நூலே வெளிவரவில்லை, நான் அதை வாசிக்கவே இல்லை என அவரிடம் மறைப்பதுதான் நல்லது!
............................
('யசோதரை' - வோல்கா (தெலுங்கு), தமிழில்: நாகலட்சுமி சண்முகம்)
-Aug 29, 2020-
1 comments:
nice wright up
10/09/2020 10:01:00 AMPost a Comment